search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Protest"

    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.

    போராட்டக்காரர்கள் கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம், திரேஸ்புரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இதுதவிர அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது, மில்லர்புரத்தில் வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பாகவும் வழக்கு பதியப்பட்டது.

    தூத்துக்குடி கலவரம் தொடர்பாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில் மேலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் முன்பு கலவரத்தில் ஈடுபட்டதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் 4 ஆயிரம் பேர், வாகனங்களுக்கு தீவைத்தது தொடர்பாக சிவில் சப்ளை அதிகாரி கோபால் கொடுத்த புகாரின் பேரில் 1000 பேர் என மொத்தம் 5 ஆயிரம் பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக ரஜினிகாந்த் கூறிய கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சை காயப்படுத்தி விட்டதாக வைகோ கூறியுள்ளார்.#sterliteProtest #Rajinikanth #Vaiko
    மேட்டுப்பாளையம்:

    ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ மேட்டுப்பாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது-

    அ.தி.மு.க. அரசு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் மீது தேச துரோக குற்றச்சாட்டின் கீழ் காவல்துறையின் மூலம் அடக்குமுறை வழக்கை ஏவியுள்ளது.

    மத்தியில் ஆளும் மோடி அரசின் கைப்பாவையாகச் செயல்படும் அ.தி.மு.க. அரசின் பாசிச போக்கை எதிர்த்து, தமிழக உரிமைகளுக்காக அறவழியில் போராடி வந்த வேல்முருகன் மீது இந்த அடக்குமுறையை ஏவிய தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

    என் மீதும் தேச துரோகக் குற்றச்சாட்டில் 2 வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளையும் அஞ்சாமல் எதிர்கொள்வோம்; வேல்முருகன் மீது போடப்பட்ட வழக்கையும் எதிர் கொண்டு முறியடிப்போம்.

    இந்தநடவடிக்கையால் வேல்முருகன் மேலும் வீறுகொண்டு களத்துக்கு வருவார். கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே என்ற நிலைமைக்கு அ.தி.மு.க. அரசு ஆளாகும் என எச்சரிக்கிறேன்.

    தமிழ் நாட்டிற்கு எது நன்மையோ, எது தேவையோ அதை செய்ய பாடுபட்டு கொண்டு இருக்கிறோம். முறையான வளர்ச்சிக்கு நாங்கள் எதிரிகள் அல்ல.

    சுற்றுச் சூழல் எங்கு மாசுப்பட்டாலும், தமிழர் உரிமை பறிக்கப்பட்டாலும் அதற்காக போராடுவோம். வரும் காலங்களில் தமிழகத்தில் குழந்தைகள் நன்கு வளர வேண்டும்.

    தமிழர்களின் நலனுக்காக குரல் கொடுத்தால் ராஜ துரோகம் என்பதா? தமிழர்களுக்காக குரல் கொடுத்தால் இந்தியாவின் ஒற்றுமை சிதறும் என்பது ராஜதுரோகமா?

    தேச துரோக வழக்கை உடைத்து கொண்டு வேல்முருகன் வருவார். இது அடக்கு முறையை பிரயோகிக்கிற முறை.

    இதில் மத்திய அரசின் அழுத்தம் இருக்கிறது. இவர்கள் மீது வழக்கு போடு. உள்ளே போடு என்று அழுத்தம் கொடுக்கிறது.

    இதற்கு கைப்பாவையாக செயல்பட்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க. அரசு காவல் துறையை ஏவி உயிர்களை பலி கொண்டது மட்டும் அல்ல. காட்டு மிராண்டித் தனமாக தாக்குதல் நடத்தி உள்ளது.

    தொழிற்சாலை குடியிருப்புக்கு ஒரு சேதமும் கிடையாது. யார் தீ வைத்தது,? போலீசாரே வாகனங்களுக்கு தீ வைத்து கொண்டனர்.

    வேன் மீது இருந்து துப்பாக்கியால் சுட்டு உள்ளனர். அங்கிருந்த 50 ஆயிரம் மக்கள் வன்முறையில் ஈடுபட்டு இருந்தால் எத்தனை போலீசார் உயிர் இழந்திருப்பார்கள். அற வழியில் போராட்டம் நடத்திய மக்களை போலீசார் சுட்டு வீழ்த்தினால் ஸ்டெர்லைட் ஆலை முன் முற்றுகை போராட்டத்தை நடத்த மாட்டார்கள் என்று ஆலை நிர்வாகத்திற்கு ஆதரவாக அரசு காவல் துறையை ஏவி உள்ளது.

    இப்போது தென் மாவட்டங்கள், தூத்துக்குடி ஆகியவை எரிமலை ஆகிவிட்டது. ஆலை நிர்வாகத்தினர் ஆலையை நடத்த உத்தரவை பெறுவோம் என்று கூறுகின்றனர். என்ன தைரியத்தில் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.

    ஆலையை இயக்கலாம் என்று அனுமதி வந்தால் கூட ஆலையை நடத்த முடியாது. தமிழக மக்கள் அறவழியில் தான் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நாங்கள் சமூக விரோதிகள் அல்ல.

    ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் இயக்க நினைத்தால் நாங்கள் லட்சம் பேரை அழைத்து வந்து போராட்டம் நடத்துவோம். அதனை தடுத்து நிறுத்தினால் எரிமலை வெடிக்கும்.

    ரஜினிகாந்த் புதிதாக அரசியலுக்கு வந்துள்ளார். சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அரிச்சுவடி கூட அவருக்கு தெரியாது. போராட்டம் பற்றி அரிச்சுவடியும் அவருக்கு தெரியாது.

    தமிழ்நாடு சுடுகாடு ஆகும் என்று நண்பர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடக்கூடாது என்பதற்காக நியூட்ரினோ, மீத்தேன் , ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக பல போராட்டங்களை நடத்தி வருகிறோம்.

    தமிழகத்தின் உரிமையை காப்பாற்றவும் சுடுகாடாகவும், பாலைவனமாகாமலும் இருக்க போராட்டம் நடத்தி இருக்கிறோம்.

    ரஜினிகாந்த் சில அறிவுரைகளைசொல்லி இருக்கிறார். அவர் கூறிய வார்த்தைக்கு பதில் கூற விரும்பவில்லை. மக்கள் கவனித்து கொண்டுதான் உள்ளார்கள். அவரது கருத்து கோடிக்கணக்கான மக்களின் நெஞ்சை காயப்படுத்தி விட்டது என்பதை என்றைக்காவது ஒருநாள் அவர் உணர்வார்.

    இவ்வாறு அவர் கூறினார்.#sterliteProtest #Rajinikanth #Vaiko
    தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 2 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து தூத்துக்குடி வடபாகம், தென்பாகம், சிப்காட் ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த வழக்குகள் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

    இதன் விசாரணை அதிகாரியாக நெல்லை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமார் நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் குமார் மற்றும் வெளிமாவட்டங்களை சேர்ந்த 20 சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியமர்த்தப்பட்டனர். நேற்று முன்தினம் ஒரு சில போலீசாரே தூத்துக்குடிக்கு வந்தனர்.

    நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் தூத்துக்குடிக்கு இன்னும் வரவில்லை என்றும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை மாவட்ட போலீஸ் அதிகாரிகள் இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் ஒப்படைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இருந்தபோதிலும் போலீசார் சம்பவம் நடந்த இடங்களுக்கு சென்று தடயங்களை சேகரிக்கும் பணியில் நேற்று ஈடுபட்டனர். இன்று (வியாழக்கிழமை) சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை முழுவீச்சில் தொடங்க உள்ளனர்.

    இந்த நிலையில் தூத்துக்குடியில் நடந்த கலவரத்தில் அரசு ஆஸ்பத்திரி முன்பு பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான வழக்கும், மில்லர்புரத்தில் 2 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்ட வழக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளதாக உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறியது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
    சென்னை:

    தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினிகாந்த் கூறியது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

    வைகைச்செல்வன் (அ.தி.மு.க.):-

    போராட்டத்தினுடைய வடிவம் சமீப காலமாக வன்முறையை நோக்கி நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் வேறு திசையை நோக்கி சென்றது. காவிரி போராட்டமும் வேறு விதமாக நகர்ந்தது.

    இதேபோலத்தான் ஸ்டெர்லைட் போராட்டமும். போராட்டம் வேறு திசை நோக்கி சென்றதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்திருக்கிறது என்பதை ரஜினிகாந்த் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

    டி.கே.எஸ்.இளங்கோவன் (தி.மு.க.):-

    போலீஸ் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டவர்கள் யார்? என்ற கேள்வியைத்தான் நாங்கள் முன்வைக்கிறோம். அப்பாவி மக்களை கொன்றது ஏன்? இறந்துபோன 13 பேரில் சமூக விரோதிகள் யார்? ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சமூக விரோதிகள் யார்? சமூக விரோதிகளை விட்டுவிட்டு போலீசார் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்றது ஏன்? என்பதற்கு ரஜினிகாந்த் பதில் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

    திருநாவுக்கரசர் (காங்கிரஸ்):-

    சமூக விரோதிகள் என்று போராட்டக்காரர்களை ரஜினிகாந்த் கூறுவது சரியல்ல. தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நான் மற்றும் மற்ற தலைவர்கள் எல்லோரும் கலவரம் நடந்த மறுநாள் அங்கு சென்று பார்த்தோம். அங்கு சமூகவிரோதிகளையும், பயங்கரவாதிகளையும் நாங்கள் பார்க்கவில்லை. ரஜினிகாந்துக்கு வந்த தகவல்படி அவர் கூறியிருக்கலாம். ஆனால் அதில் முழுவதும் உண்மை இல்லை.

    டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் (பா.ஜ.க.):-

    இந்த போராட்டம் பயங்கரமாக மாறியது பயங்கரவாதிகளால் தான். பஸ்களுக்கு தீ வைப்பது, கல் எறிவது போன்றவை பொதுமக்களின் எண்ணம் கிடையாது. ஆகவே போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள். போராட்டம் எந்த திசையை நோக்கி திரும்பியது என்று பார்த்தாலே அங்கு சமூக விரோதிகள் ஊடுருவியிருக்கிறார்கள் என்று தெரிகிறது. எனவே ரஜினிகாந்த் கூறிய கருத்தை தான் நாங்களும் சொல்லிக்கொண்டு இருந்தோம்.

    பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்):-

    தூத்துக்குடி விவகாரத்தில் ரஜினிகாந்தின் பிரவேசமும், அவருடைய கருத்துகளும் மர்மமாக இருக்கின்றன. எந்த கருத்துகளை பரப்புவதற்கு அவர் தூத்துக்குடிக்கு அனுப்பப்பட்டார்? என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. 100 நாட்கள் நடந்த போராட்டத்தில் ஒரு நாள் கூட அங்கு சென்று போராட்டக்காரர்களை சந்தித்து, அதன் பின்னணியில் உள்ள நியாயத்தை புரிந்துகொள்ள ரஜினிகாந்த் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் புரட்சிக்காக போராடுபவர்களை கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

    ஜி.கே.வாசன் (த.மா.கா.):-

    மக்கள் வாழ்வாதாரங்களுக்கு பாதகமாக இருக்கிற திட்டங்களை அரசு அவர்கள் மீது திணிக்க நினைத்தால் அநீதி. அந்த அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால் போராட்டம் அவசியம். போராடுபவர்கள் வன் முறைக்கு காரணமானவர்கள் கிடையாது. அந்த போராட்டத்தில் வன்முறை ஏற்படுகிறது என்றால், யார் காரணம்? ஏன் நடக்கிறது? எப்படி நடக்கிறது? என்பதற்கு அரசு தான் பொறுப்பு. அப்பாவி மக்கள் அல்ல.

    தொல்.திருமாவளவன் (விடுதலை சிறுத்தைகள்):-

    பொதுமக்களின் போராட்டத்தை ரஜினிகாந்த் வலதுசாரி பார்வையில் இருந்து பார்த்திருக்கிறார். அவர் ஆட்சியாளர்களை பாதுகாக்கவேண்டும். போலீசாரை பாதுகாக்கவேண்டும். அதிகார வர்க்கத்தினர் எடுத்த முடிவு சரிதான் என்ற நிலைபாட்டில் முன்கூட்டியே அவர் எடுத்த முடிவின்படி இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். மக்களோடு நின்று போராடியவர்களை சமூகவிரோதிகள் என்று கூறுவது வேதனை அளிக்கிறது.

    ரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்டு):-

    போராட்டம் நடத்தவேண்டிய நிர்பந்தம் ஏன் ஏற்படுகிறது? என்பதை ரஜினிகாந்த் முதலில் பார்க்கவேண்டும். வேண்டும் என்றே யாரும் போராடவில்லை. மக்கள் நடத்திய போராட்டத்தை திசை திருப்புகிற வகையில் தவறான முறையில் போலீசாரை வழிநடத்திய அரசை காப்பாற்றவேண்டும் என்ற நோக்கத்தோடு ரஜினிகாந்த் கூறியிருக்கிறார். ரஜினிகாந்தின் கருத்து ஏற்புடைய கருத்து இல்லை.

    கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு):-

    தூத்துக்குடியில் மக்கள் கிளர்ந்தெழுந்து நடத்திய நியாயமான போராட்டத்தை சமூக விரோதிகளின் போராட்டம் என்று ரஜினிகாந்த் அடையாளப்படுத்துவது கண்டனத்துக்குரியது. போலீசார் துப்பாக்கிச்சூட்டை கண்டிக்காமல் அதை நியாயப்படுத்துகிறவராக ரஜினிகாந்த் மாறி இருக்கிறார். போராடினால் தமிழகம் சுடுகாடாகி விடும் என்று அவர் சொல்லி இருப்பது, போராடுகிற மக்களை கொச்சைப்படுத்தி இருக்கிறார். இந்த பேச்சுக்கு ரஜினிகாந்த் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

    கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்):-

    போராட்டம் ஏன் உருவாகுகிறது என்ற அடிப்படை கூட அறியாதவராக இருப்பது, ரஜினிகாந்த் அரசியலில் தான் உடனடியாக பதவி மாடத்தில் ஏறி அமர வேண்டும் என்ற ஆசையை மட்டும் தேக்கி வைத்திருக்கிறார். தூத்துக்குடி போராட்டகாரர்கள் விஷ கிருமிகள் தான் காரணம் என்றோ, சமூக விரோதிகள் தான் என்றோ பேசுவது அறியாமையின் உச்சம். மவுனமாக இருக்கும் போது மிகப்பெரிய அறிவாளியாக தோன்றுகிறார். ஆனால் பேச ஆரம்பிக்கும்போது, அவருடைய உண்மை அடையாளம் வெளிப்படுகிறது. அவர் நிறைய பேசட்டும். மக்கள் புரிந்துகொள்ளட்டும்.

    ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி):-

    மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிரான போராட்டங்களை கொச்சைப்படுத்தி வரும் பா.ஜ.க.வின் குரலை ரஜினிகாந்த் எதிரொலித்து வருகிறார். பா.ஜ.க. அனுப்பிய தூதராகவே ரஜினிகாந்த் தூத்துக்குடிக்கு சென்றுள்ளார். தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் பாசிச சக்திகளின் முகவர் ரஜினிகாந்தை தமிழக மக்கள் முழுவதுமாக புறக்கணிக்கவேண்டும்.

    தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. (மனிதநேய ஜனநாயக கட்சி):-

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று ரஜினிகாந்த் குற்றம் சாட்டி இருப்பதை கண்டிக்கிறேன். ரஜினிகாந்த் அரசியல் பேசுவதை நிறுத்திக்கொள்வது நல்லது. தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வை கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்கவேண்டும்.

    இவ்வாறு அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்டம் உளவுத்துறையின் தோல்வி என தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.#ThoothukudiProtest #sterlite #tamilisaisoundararajan
    ஆலந்தூர்:

    தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி சென்று உள்ளார். அவரும், அமைச்சர்களும் முன்கூட்டியே சென்று இருக்க வேண்டும். அங்குள்ள மக்களுக்கு முழு பாதுகாப்பு மற்றும் அச்ச உணர்வை போக்குவது அரசின் கடமை.

    மக்களுக்கு அரசு பாதுகாப்பு தரும் என்ற எண்ணம் இல்லாததினால் தான் போராட்டங்கள் பிரிவினைவாதிகள் கையில் சென்று விடுகின்றன.

    துணை முதலமைச்சர், தூத்துக்குடி சென்று இருப்பது ஆரோக்கியமானது தான். அது கண்துடைப்பு என்று சொல்ல முடியாது.

    இயல்பாக நடப்பதை கூட எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி மக்கள் மனதில் பதியவைத்து தமிழ்நாட்டை போராட்ட களமாக்கி வருகின்றனர். நாளை சட்டமன்றம் கூட இருக்கிறது. வழக்கம்போல் தி.மு.க. வெளிநடப்பு செய்யும். சட்டமன்ற கூட்டமோ, அலுவல் கூட்டமோ எதுவாக இருந்தாலும் அதில் ஆக்கப்பூர்வமாக நடக்க வேண்டும் என்று ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறேன்.

    தூத்துக்குடி போராட்டம் உளவுத்துறையின் தோல்வி தான். திடீரென்று போராட்டம் நடத்த முடியாது. இதே போல் போராட்ட சம்பவங்கள் நடைபெறும் போது எதிர்க்கட்சிகள் உடனே அரசு பதவி விலக வேண்டும் என்று கூறுவது சரியானதல்ல.



    மு.க.ஸ்டாலின் எப்போது முதலமைச்சரை கீழே இறக்கலாம், தான் எப்போது முதலமைச்சர் ஆகலாம் என்று நினைத்து போராட்டத்தை நடத்த கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.#ThoothukudiProtest #sterlite #tamilisaisoundararajan
    தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் 6 பேரை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது.#SterliteProtest
    தூத்துக்குடி:

    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி கடந்த 22-ந்தேதி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கலவரம் தொடர்பாக 126 பேரை போலீசார் கைது செய்தார்கள்.

    பின்பு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதனிடையே தூத்துக்குடியில் நடந்த போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுடன் வெளியூர்களை சேர்ந்த பலர் சேர்ந்து போலீசாரை தாக்கியதால் தான் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. மேலும் தூத்துக்குடியில் சந்தேகப்படும்படி வெளியூர் நபர்கள் யாரேனும் இருந்தால் இதுபற்றி உடனடியாக அதுபற்றி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தினர்.

    மேலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தி சந்தேகப்படும்படி திரிந்தவர்களை மடக்கி பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றார்கள். தூத்துக்குடி அண்ணாநகர், பிரைண்ட்நகர் பகுதிகளில் வீடு வீடாக போலீசார் சோதனை நடத்தி ஏராளமான இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். அவர்களில் சிலர் விடுவிக்கப்பட்டார்கள்.

    மேலும் பலரை சட்ட விரோதமாக காவலில் வைத்ததாக வக்கீல் சந்திரசேகர் என்பவர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ததை தொடர்ந்து வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் போலீசாரால் சட்டவிரோதமாக காவலில் வைத்த 95 பேரை மீட்டார்கள். இது போல பல்வேறு பகுதியில் இருந்தும் இன்னும் பலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு விடுவிக்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    அவர்களில் மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேரும் உள்ளனராம். மேலும் பல அப்பாவி இளைஞர்களையும் போலீசார் விசாரணைக்கு என அழைத்து சென்றுள்ளார்கள். அவர்களை போலீசார் எங்கு வைத்துள்ளார்கள் என தெரியாமல் அவர்களது குடும்பத்தினர் தவிக்கின்றனர்.

    எனவே அவர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள்? அவர்கள் கதி என்ன என கண்டறிந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள். இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கும் புகார் அனுப்பப்பட்டுள்ளது.#SterliteProtest
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை இயங்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காகவே மின் இணைப்பை துண்டித்து, தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்தியுள்ளது என கடம்பூர் ராஜூ கூறினார். #sterliteprotest

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடைபெற்ற இடங்களை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று பார்வையிட்டார்.

    பின்னர் வன்முறையால் சேதப்படுத்தப்பட்ட தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் பிறகு அவர் தூத்துக்குடியில் அமைதி திரும்ப எடுத்த நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சென்று அங்கு காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஸ்டெர்லைட் ஆலை இயங்க கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இதற்காகவே மின் இணைப்பை துண்டித்து, தண்ணீர் வழங்குவதை அரசு நிறுத்தியுள்ளது. தொடர்ந்து நிரந்தரமாக மூட சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தூத்துக்குடியில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படவில்லை. போராட்டத்தை கட்டுப்படுத்த முதலில் வானத்தை நோக்கி சுடப்பட்டது. போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் வன்முறை ஏற்பட்டது.

    துப்பாக்கி சூடு தொடர்பாக விசாரணை கமி‌ஷன் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதுபற்றிய விபரங்களை இப்போது கூற இயலாது. அதன் அறிக்கை வந்த பின்னர் இதுபற்றி தெரிவிக்கப்படும்.

    94 நாட்களாக பொதுமக்களின் போராட்டத்திற்கு அரசு அனுமதி அளித்தது. இன்று இரவுக்கு மேல் இணையதள சேவை முடங்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #sterliteprotest #kadamburraju #tngovt

    ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தமிழக அரசுக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே கையெழுத்திடப்பட வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.#bansterlite #sterliteprotest #Ramadoss #EdappadiPalanisamy
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. 13 அப்பாவி மக்களின் உயிர்களை பலி கொண்ட பிறகு தான் இப்படி ஒரு முடிவுக்கு அரசு வந்திருக்கிறது. தமிழக அரசின் அறிவிப்பு மேலோட்டமாகப் பார்க்கும் போது திருப்தியளித்தாலும், நம்பிக்கையளிப்பதாக இல்லை. இது போராடும் மக்களை எந்த வகையிலும் சமாதானப்படுத்தாது.

    சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘‘தூத்துக்குடி மக்களின் உணர்வுகளை மதித்து ஸ்டெர்லைட் ஆலையை மூட பணிகளை மேற்கொண்டு வருகிறது’’ என்று கூறினார். அதைத் தொடர்ந்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி,‘‘ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு இனி எந்த காலத்திலும் அனுமதி அளிக்கப்படாது.

    இதை ஏற்று பொதுமக்கள் தங்களின் போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கூறியிருக்கிறார். தமிழக அரசின் கடந்த கால செயல்பாடுகளையும், ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது பினாமி ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிட்ட அடக்குமுறைகளையும் வைத்துப் பார்க்கும் போது ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்று தோன்றவில்லை. அதனால் தான் போராட்டத்தைக் கைவிடுவதாக பொதுமக்கள் அறிவிக்கவில்லை.



    ஒருபுறம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை மூடும் திட்டம் தங்களிடம் இல்லை என்று ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘‘ நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்கு 45 நாட்களுக்கு ஆலை மூடப்படும். இப்போது சற்று கூடுதலாக மூடப்பட்டுள்ளது. ஆலையை இயக்குவதற்கான உரிமத்தை தமிழக அரசு புதுப்பிக்கவில்லை.

    அதை எதிர்த்து தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடந்துள்ளோம். அந்த வழக்கு ஜூன் மாதம் 6-ந் தேதி விசாரணைக்கு வருகிறது. அதில் நல்ல தீர்ப்பை வாங்கி ஆலையை திறப்போம்’’ என்று ஸ்டெர்லைட் ஆலையின் முதன்மை செயல் அதிகாரி ராம்நாத் அறிவித்திருக்கிறார்.

    கடந்த காலங்களிலும் ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. அப்போதெல்லாம் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் அதன் பண பலத்தை பயன்படுத்தி ஆலையை ஒரு சில வாரங்களில் திறந்திருக்கிறது. இத்தகைய கடந்தகால வரலாறுகளை அறிந்த எவரும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்ற முதலமைச்சர் பழனிச்சாமியின் வாய்வழி அறிவிப்பை நம்பமாட்டார்கள்.

    அதுமட்டுமின்றி, இந்தியாவில் அரசின் கொள்கைகளையும், செயல்பாடுகளையும் பெரு நிறுவனங்கள் தான் தீர்மானிக்கின்றன. அவ்வாறு இருக்கும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான எந்தவொரு கொள்கை முடிவையும் மத்திய அரசு அனுமதிக்காது. இந்தியாவின் நீதித்துறை கூட பெருநிறுவனங்கள் மீது பாசத்துடன் தான் நடந்து கொள்ளும். அதனால் தான் 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கும், மனித உயிர்களுக்கும் ஏராளமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை ஒப்புக்கொண்ட பிறகும், ஆலையை மூடாமல் ரூ.100 கோடி அபராதம் செலுத்தி விட்டு ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதி அளித்தது. அதனால் ஏற்பட்ட துணிச்சல் காரணமாகவே ஸ்டெர்லைட் ஆலையை மூட மாட்டோம் என்று ஆலை நிர்வாகம் கூறுகிறது. ஆலையை மூட வேண்டும் என்று மாநில அரசு நினைத்தால் கூட, அதை மத்திய அரசு விரும்பாது. அத்தகைய தருணங்களில் மத்திய அரசு அளிக்கும் அழுத்தத்தை தாங்கும் திறன் எடப்பாடி அரசுக்கு இல்லை. இப்போது ஆலையை மூடப்போவதாகக் கூறும் பினாமி அரசு, மத்திய அரசு கொடுக்கும் அழுத்தத்துக்கு பணிந்து ஆலைக்கு அனுமதி அளிக்கத் தயங்காது. மேற்கண்ட நிகழ்வுகள் எல்லாம் நடக்காது என எடப்பாடி பழனிச்சாமி அரசு உத்தரவாதம் அளிக்குமா?



    ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முடிவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருந்தால் அவர் முதலில் தூத்துக்குடி மாவட்ட மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதிலும் குறிப்பாக, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அவரது கருத்துக்கள் தூத்துக்குடி மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன. தூத்துக்குடியில் நிலவும் பதற்றத்தைப் போக்குவதற்காக அவர் தூத்துக்குடிக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்க வேண்டும். அதை அவர் செய்யவில்லை. இதைக்கூட செய்யாத எடப்பாடி பழனிச்சாமி, ஸ்டெர்லைட் ஆலையை மூட நடவடிக்கை எடுப்பேன் என்று கூறுவதை பொதுமக்கள் நயவஞ்சகமான ஒன்றாகவே பார்ப்பார்கள்.

    ஸ்டெர்லைட் ஆலையை மூடப்போவதாகக் கூறும் எடப்பாடி பழனிச்சாமி அரசு, அதற்கான எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை மக்களுக்கு அளித்தால் மட்டுமே அதை ஏற்றுக் கொள்ள முடியும்.

    பழனிச்சாமி உடனடியாக தூத்துக்குடி சென்று பாதிக்கப்பட்ட மக்களையும், போராட்டக் குழுவினரையும் சந்தித்து பேச வேண்டும். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான ஒப்பந்தம் முதலமைச்சர் பழனிச்சாமி முன்னிலையில் தமிழக அரசுக்கும், போராட்டக்குழுவினருக்கும் இடையே கையெழுத்திடப்பட வேண்டும். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இது ஒன்று தான் வழியாகும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.#bansterlite #sterliteprotest #Ramadoss #EdappadiPalanisamy
    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று த.வெள்ளையன் அறிவித்துள்ளார்.
    சென்னை :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நச்சு ஆலையான ஸ்டெர்லைட்டை எதிர்த்து நடைபெற்ற மக்கள் போராட்டத்தை நசுக்க போலீசார் நடத்தியிருக்கும் காட்டு தர்பாரை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை கடுமையாக கண்டிக்கிறது.

    முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான சாமானிய மக்களை கைது செய்திருக்கலாமே அன்றி அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது ஜனநாயகத்துக்கு எதிரான செயல். ஸ்டெர்லைட்டை எதிர்க்கும் மக்கள் போராட்டம் திடீரென்று ஏற்பட்டது அல்ல. பல ஆண்டுகளாகவே தொடர்ந்து நடக்கும் போராட்டம்.

    கண்மூடித்தனமான போலீசாரின் காட்டு தர்பார் 12 உயிர்களை காவு வாங்கி இருக்கிறது. மேலும் 65 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த காட்டு தர்பாருக்கு ஒட்டுமொத்த காவல்துறையோ, அரசோ காரணம் என்று சொல்லிவிட முடியாது.

    ஸ்டெர்லைட் ஆலையின் பணபலமே இதற்கு காரணமாக இருக்க வேண்டும். இதுகுறித்து விசாரணை செய்து பணத்துக்காக பணியாற்றிய கருப்பு ஆடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்த காட்டு தர்பாரை கண்டித்து 24-ந்தேதி(இன்று) தமிழகம் முழுவதும் வணிகர்கள் கடைகளை அடைத்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டுகிறோம்.

    தமிழக வரலாற்றில் இந்த காட்டுதர்பார் ஒரு கறைப்படிந்த அத்தியாயம், வணிகர்கள், விவசாயிகள், பொதுத்துறை ஊழியர்கள் என்று போராடும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக இதுபோன்ற காட்டு தர்பார் கட்டவீழ்த்து விடப்படலாம். இன்றே அதற்கு முடிவு கட்டுவதற்கு கடையடைப்பில் அனைத்து வணிகர்களும் பங்கேற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லை எனவும் அவர்களை அரசு பதவி நீக்கம் செய்யவேண்டும் என்றும் திவாகரன் வலியுறுத்தியுள்ளார். #SterliteProtest #Thoothukudi #Dhivakaran
    திருச்சி:

    பெரும்பிடுகு முத்தரையரின் 1343-வது சதய விழாவையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது சிலைக்கு அம்மா அணி சார்பில் திவாகரன் மாலை அணிவித்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மாமன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1343-வது சதய விழாவை முன்னிட்டு அவரை போற்றும் வகையில் மாலை அணிவித்து மரியாதை செய்தோம். முத்தரையரின் சாதனைகள் போற்றப்பட வேண்டியதாகும்.

    மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் மாவட்டந்தோறும் முத்தரையரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அந்த வகையில் அம்மா அணி சார்பில் நாங்கள் மரியாதை செய்கிறோம்.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று எப்போதோ மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அந்த ஆலையை மூடக்கோரி போராட்டம் நடத்திய பொது மக்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இதுவரை 11 பேர் வரை பலியானதாக கூறுகிறார்கள். இந்த சம்பவம் தமிழக அரசின் கையாலாகாத தனத்தை காட்டுகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நஷ்ட ஈடு தொகையை அதிகப்படுத்த வேண்டும். காயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிப்பதோடு, துப்பாக்கி சூடு சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.


    மேலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரின் செயல்பாடுகள் சரியில்லை. அவர்களை தமிழக அரசு பதவி நீக்கம் செய்யவேண்டும். இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் என்று கூறப்படுவதால் தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ள நீதி விசாரணை சரியான முறையில் நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியது பற்றி கேட்டதற்கு, அவர் எப்போதுமே அப்படித்தான் கருத்து தெரிவிப்பார் என்றார். #SterliteProtest #Thoothukudi  #Dhivakaran

    ×