search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thaipusam"

    • முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி திருவீதிஉலா.
    • முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    விராலிமலை:

    விராலிமலையில் பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது. இங்கு மலைமேல் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இங்கு வருடம் தோறும் பல்வேறு திருவிழாக்கள் வெகு விமர்சியாக நடத்தப்படுவது வழக்கம்.

    அதன்படி இந்த வருடம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு கடந்த 16-ந்தேதியன்று சுப்ரமணிய சுவாமி கோவிலில் கொடியேற்றப்பட்டது.

    அதனை தொடர்ந்து தினமும் காலை மற்றும் இரவு என இரு வேலைகளிலும் மஞ்சம், பத்மமயில், கேடயம், மயில், பூதம், நாகம், சிம்மம், வெள்ளிகுதிரை உள்ளிட்ட வாகனங்களில் முருகப்பெருமான் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி சுவாமியின் திருவீதி உலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். அதனை தொடர்ந்து 25-ந் தேதி இரவு தெப்ப உற்சவம் நடக்கிறது. 26-ந்தேதி விடையாற்றியுடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது.

    • திருச்செந்தூரில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும்.
    • பாதயாத்திரையாக பக்தர்கள் அலகு குத்தியும், காவடி எடுத்தும் தரிசனம்.

    திருச்செந்தூர்:

    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுகிறது.

    அந்த வகையில் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்வார்கள். இ்ந்த ஆண்டு கோவிலில் தைப்பூச திருவிழா நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதற்கிடையே, சுவாமி சண்முகரை கடலில் கண்டெடுத்த 369-ம் ஆண்டு தினமான இன்று (புதன்கிழமை) அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது.

    காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம், சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரமாகி, தீபாராதனை நடைபெற்றது. மாலையில் 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையாகி, 4.30 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் கோவிலில் இருந்து புறப்பட்டு வீதி உலா வந்து சேர்கிறார்.

    தைப்பூசத்தை முன்னிட்டு நாளை கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 7.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், உச்சிகால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு கோவில் சேர்கிறார்.

     தைப்பூச திருவிழாவிற்கு தமிழகத்தின் தென்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் தரிசனம் செய்து செல்கின்றனர்.

    நாளை நடக்கும் தைப்பூசம் திருவிழாவிற்கு இன்று காலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவில் வளாகம், கடற்கரை பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

    • கையில் வில், அம்புடன் இருக்கும் முருகனை 'தனுக சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர்.
    • குக்கே சுப்பிரமணியர் கோவிலில், முருகர் பாம்பு வடிவில் அருள்பாலிக்கிறார்.

    * மயிலாடுதுறை மாவட்டம் திருவிடைக்கழியில், முருகப்பெருமான் ஒரு கையில் வில்லுடனும், மறு கையில் வேலுடனும் காட்சி தருகிறார்.

    * சனி பகவானுக்குரிய பரிகாரத் தலமாக விளங்கும் திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோவிலில், முருகப்பெருமான் கையில் மாம்பழத்துடன் காட்சி தருகிறார்.

    * ஈரோடு மாட்டம் சென்னிமலையில் இரண்டு திருமுகங்கள், எட்டு திருக்கரங்களுடன் கந்தன் காட்சி தருகிறார். இந்த கோவிலுக்கு மேல் காகங்கள் பறப்பதில்லை என்பது அதிசயமான ஒன்றாகும்.

    * வழக்கமாக அம்மனுக்குதான் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முருகன் தலைக்கு மேல் ஐந்து தலை நாகம் குடைபிடித்திருக்கும் காட்சியை தரிசிக்கலாம்.

    * கும்பகோணம் வியாழ சோமேஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் தன்னுடைய காலில் பாதரட்சை அணிந்தபடி காட்சி தருகிறார்.

    * திருவையாறு ஐயாறப்பர் சன்னிதி பிரகாரத்தில் கையில் வில், அம்புடன் இருக்கும் முருகப்பெருமானை 'தனுக சுப்பிரமணியர் என்று அழைக்கின்றனர்.

    * திருப்போரூரில் முத்துக்குமார சுவாமியாய் காட்சி தரும் முருகப்பெருமான், இடது காலை தரையில் ஊன்றி, வலது காலை மயில் மீது வைத்த கோலத்தில் காட்சி தருகிறார். இவர் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் ஏந்தியிருக்கிறார்.

    * நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சி என்ற இடத்தில் முருகப்பெருமான், வேடன் வடிவில் காட்சி தருவது தனிச்சிறப்பாகும். சிக்கல் சிங்காரவேலவர் கோவிலைப்போலவே இந்த கோவிலில் உள்ள முருகன் சிலையிலும் வியர்வை துளிர்ப்பது அதிசய நிகழ்வாகும்.

    * மகாபலிபுரம் அருகே வளவன்தாங்கல் தலத்தில் உள்ள முருகன், கையில் தண்டம் ஏந்திய கோலத்தில் தண்டாயுதபாணியாக காட்சி தருகிறார். அவர் கண்களில் நீர் வரும் காட்சி வியப்பான ஒன்றாகும்.

    * மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் உள்ளது. நெய்குப்பை என்ற ஊர். இங்குள்ள அம்மன் கையில் குழந்தையாக அமர்ந்தபடி முருகப்பெருமான் காட்சி தருகிறார்.

    * திருநனிப்பள்ளி, திருக்குறுங்குடி ஆகிய தலங்களில் முருகப்பெருமான் மூன்று கண்களுடனும், எட்டு திருக்கரங்களுடனும் காணப்படுகிறார்.

    * புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள ஒற்றைக் கண்ணனூர் திருத்தலத்தில் குருவின் தோற்றத்தில் முருகப்பெருமான அருள்கிறார். அவர் தனது ஒரு கையில் ஜெப மாலையும், மறு கையில் சின் முத்திரையும் தாங்கியிருக்கிறார்.

    * கர்நாடக மாநிலம் குக்கே சுப்பிரமணியர் கோவிலில், முருகப்பெருமான் பாம்பு வடிவில் அருள்பாலிக்கிறார்.

    * கனககிரி தலத்தில் முருகப்பெருமான் கையில் கிளியை ஏந்தி காட்சி தருகிறார்.

    * செம்பனார் கோவில் திருத்தலத்தில் அருளும் முருகப்பெருமான், தலையில் ஜடா மகுடம் தரித்து, இரண்டு கரங்களிலும் அக்கமாலை ஏந்தியபடி இருக்கிறார்.

    * கும்பகோணம் அருகில் உள்ள அழகாபுத்தூர் என்ற ஊரில் அருளும் முருகப்பெருமான், மகாவிஷ்ணுவைப் போல தன்னுடைய கையில் சங்கும், சக்கரமும் ஏந்தி காட்சி தருகிறார்.

    * பூம்புகார் அருகே உள்ள திருச்சாய்க்காடு சாயாவ னேஸ்வரர் கோவிலில் பஞ்சலோகத்தால் ஆன முருகப்பெருமான் அருள்கிறார். இவர் தனது கையில் வில் மற்றும் அம்பு ஏந்தியுள்ளார்.

    * திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் ஜலகம் பாறை என்ற இடம் உள்ளது. இங்குள்ள முருகன் ஆலயத்தில், விக்கிரகம் கிடையாது. 7 அடி உயர வேல் வடிவத்தில் வேலவன் காட்சி தரும் வித்தியாசமான ஆலயம் இது.

    * பெரம்பலூர் அருகில் உள்ள செட்டிகுளம் தண்டாயுதபாணி கோவிலில் முருகன், மன்மதனைப் போல கரும்போடு காட்சி தருகிறார்.

    * நாகப்பட்டினம் மாவட்டம் விளத்தொட்டி என்ற இடத்தில் பிரம்மபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு பாலமுருகனாக தொட்டிலில் தவழ்ந்து உறங்கும் கோலத்தில் முருகப்பெருமான் அருள்கிறார்.

    * திருவண்ணாமலையில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் வில்வாரணி என்ற ஊரில் நட்சத்திரகிரி மலை இருக்கிறது. இங்கே சுயம்பு லிங்க வடிவில் நாகாபரணத்துடன் முருகப்பெருமான் காட்சி தருகிறார். சிவபெருமானும், முருகப்பெருமானும் ஒரே வடிவமாக அமர்ந்திருக்கும் கோலத்தை இங்கு மட்டுமே தரிசிக்க முடியும்.

    * சிவகங்கை மாவட்டம் திருமலையில் அமைந்துள்ள மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயத்தில், முருகப்பெருமான் சற்று சாய்ந்த நிலையில் காட்சி தருகிறார். இவருக்கு எதிர் திசையில் இடப்புறம் ஆடும், வலப்புறம் மயிலும் உள்ளன.

    * ஈரோடு மாவட்டம் காங்கேயம்பாளையம் தலத்தில் உள்ள நட்டாற்றீஸ்வரர் ஆலயத்தில், பக்தர்களை நோக்கி அடியெடுத்து வைக்கும் கோலத்தில் முருகப் பெருமான் காட்சி தருகிறார்.

    • அகத்திய முனிவரின் சீடனாக இருந்தவன் இடும்பன்.
    • எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கிவிடுவான்.

    ஒரு சமயம் அகத்திய முனிவரின் சீடனாக இருந்தவன் இடும்பன். அவன் மிகப்பெரிய பலசாலி, எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கிவிடுவான். அகத்திய முனிவரின் வழிபாட்டிற்காக அவன் கயிலை மலைக்குச் சென்று, அங்குள்ள கந்தமலையில் சிவ-சக்தி சொரூபமாக இருக்கும் சிவகிரி, சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளையும், ஒரு நீண்ட மூங்கிலில் இரு பக்கமும் துலாபாரம் போல கட்டி தன்னுடைய தோளில் வைத்து தூக்கி வந்தான்.

    அப்போது அவனுக்குள், 'நம்மை விட மிகுந்த மிகுந்த பலசாலி யாரும் இல்லை' என்ற கர்வம் உண்டானது. அப்படி வரும் வழியில் முருகப்பெருமானின் திருவிளையாடலால். பாதை தெரியாமல் திகைத்து தடுமாறினான். அப்பொழுது முருகப்பெருமான், மிக அழகிய சிறுவனின் தோற்றத்தில் வந்து இடும்பனுக்கு வழிகாட்டினார்.

    திருவாவினன்குடி அருகே வந்தபோது, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "இடும்பா.. இங்கு நீ சற்று ஓய்வு எடுத்து விட்டுச்செல்" என்றார். இடும்பனும் அங்கு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று காவடி போல் சுமந்து வந்த மலைகளை கீழே இறக்கி வைத்தான். ஒய்வு எடுத்த பிறகு அந்த காவ டியை தூக்கியபோது, அவனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

    என்ன காரணம் என்று பார்க்கையில், சிவகிரியின் உச்சியில் ஒரு அழகிய சிறுவன் கோவனத்துடன், கையில் ஒரு கம்பை ஊன்றியபடி நிற்பதைக் கண்டான். உடனே கோபம் கொண்ட இடும்பன், சிறுவனைப் பார்த்து "மலையில் இருந்து இறங்கு" எனக் கூற, அந்த சிறுவனோ ``இந்த மலை எனக்கே சொந்தம்" என்றான்.

    இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இடும்பன். சிறுவனை தாக்க முயன்றான். அப்போது சிறுவன் உருவத்தில் இருந்த முருகப்பெருமான். இடும்பனை சாதாரணமாக தள்ள, அவன் கீழே விழுந்து மயக்கமுற்றான். அப்போது அகத்தியரும். இடும்பனின் மனைவியும் முருகப்பெருமானிடம் வந்து இடும்பனுக்கு ஆசி கூறுமாறு வேண்டினர்.

    இதையடுத்து முருகப்பெருமான். இடும்பனை தன்னுடைய காவல் தெய்வமாக நியமித்தார். இடும்பன் இரு மலைகளைத் தூக்கி வந்த நிகழ்வை நினைவுகூரும் ஒன்றாகத்தான் முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கும் வழக்கம் வந்தது.

     தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு பால் காவடி, பழக்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமான காவடிகளைச் சுமந்தபடி முருகபக்தர்கள், முருகனை தரிசிக்கச் செல்கிறார்கள். இவ்வாறு காவடி எடுக்கும் பக்தர்களுக்கு. இடும்பனுக்கு அருள்செய்தது போல முருகப்பெருமான் அருள்செய்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    • அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடு பழனி.
    • இன்று முத்துக்குமார சுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்.

    பழனி:

    அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் பிரசித்தி பெற்ற தைப்பூசத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு தேவையான சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

    தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி கோவிலில் தினந்தோறும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி புறப்பாடு நடந்து வருகிறது.

    6-ம் நாளான இன்று இரவு 7 மணிக்கு வள்ளி தெய்வானை சமேத முத்துக்குமார சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு வெள்ளி ரதத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்று காலை முதல் பல்வேறு ஊர்களில் இருந்து வந்த பக்தர்கள் பழனியை நோக்கி குவிந்த வண்ணம் உள்ளனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும், மேளதாளம் முழங்க பக்தர்கள் ஊர்வலமாக வருவதால் பழனி நகரின் அனைத்து சாலைகளும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

    • பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது ;-

    வருகிற 25-ந் தேதி பழனி தைப்பூசம், திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம், 26-ந் தேதி குடியரசு தினம் மற்றும் 27, 28 ஆகிய தேதிகள் ( சனி, ஞாயிறு) வார விடுமுறை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருகிறது.

    எனவே பயணிகள் தேவைக்கு ஏற்ப கும்பகோணம் கோட்டம் சார்பில் கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    அதன்படி தைபூசம், மற்றும் பவுர்ணமி கிரிவலம் முன்னிட்டு பழனி, திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு நாளை (புதன்கிழமை) முதல் 28-ந் தேதி வரை 5 நாட்கள் கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு, கரூர், திருச்சி, அரியலூர், செந்துறை, ஜெயங்கொண்டம், புதுக்கோட்டை அறந்தாங்கி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகுளத்தூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் ஆகிய ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது .


    மேலும் 25, 26 ஆகிய தேதிகளில் பொதுமக்கள் பயணம் செய்ய கூடுதலாக சிறப்பு பஸ்கள் உட்பட நாளொன்றுக்கு சுமார் 300 பஸ்கள் சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை இயக்கப்படுகின்றன.

    இதேப்போல் திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும் இயக்கப்பட உள்ளது.

    மேலும், விழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்கள் முடிந்து பயணிகள் அவரவர் ஊர்களுக்கு திரும்பி செல்ல 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் சிறப்பு பஸ்கள் திருச்சியிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 1 மணி வரையிலும், பெரம்பலூர், ஜெயகொண்டம், அரியலூரிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம் , திருவாரூர், மயிலாடுதுறை, வேளாங்கண்ணி, கும்பகோணம் , தஞ்சாவூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு நள்ளிரவு 12 மணி வரையிலும், காரைக்குடி, சிவகங்கை ஆகிய இடங்களிலிருந்து சென்னைக்கு இரவு 10 மணி வரையிலும், ராமநாதபுரத்திலிருந்து சென்னைக்கு இரவு 9.30 மணி வரையிலும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    எனவே பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் எந்த சிரமமும் இன்றி பயணிப்பதோடு பயணிப்பவர்களின் தேவையை போக்குவரத்துக் கழகங்கள் கணித்து அதற்கேற்ப பஸ் சேவையை அளிக்க ஏதுவாகும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம் மங்களம்
    • அஷ்ட தேதரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்

    மங்களம் தேவதேவாய ராஜராஜாய மங்களம் மங்களம்

    நாதநாதாய கால காலாய மங்களம்!!

    மங்களம் கார்த்திகேயாய கங்காபுத்ராய மங்களம் மங்களம்

    ஜிஷ்ணுஜேசாய வல்லீ நாதாய மங்களம்!!

    மங்களம் சம்பு புத்ராய ஜயந்தீசாய மங்களம் மங்களம்

    சுகுமாராய ஸுப்ரமண்யாய மங்களம்!!

    மங்களம் தாரகஜிதே கணநாதாய மங்களம் மங்களம்

    சக்தி ஹஸ்தாய வன்ஹிஜாதாய மங்களம்!!

    மங்களம் பாஹுலேயாய மஹாஸேனாய மங்களம் மங்களம்

    ஸ்வாமிநாதாய மங்களம் சரஜன்மனே!!

    அஷ்ட தேதரபுரீசாய ஷண்முகாயாஸ்து மங்களம்

    கமலாஸன வாகீச வரதாயாஸ்து மங்களம்!!

    ஸ்ரீ கௌரீ கர்ப்பஜாதாய ஸ்ரீ கண்ட தநயாய்ச்

    ஸ்ரீ காந்த பாகினேயாய் ஸ்ரீமத் ஸ்கந்தாய மங்களம்!!

    ஸ்ரீ வல்லீரமணாயாத ஸ்ரீகுமராய மங்களம்

    ஸ்ரீ தேவஸேநா காந்தாய ஸ்ரீ விசாகாய் மங்களம்!!

    மங்களம் புண்யரூபாய புண்யஸ்லோகாய மங்களம் மங்களம்

    புண்ய யசஸே மங்களம் புண்ய தேஜஸே!!

    இந்த மந்திரத்தை தைப்பூசத்தன்று செய்யும் பூஜையின் முடிவில் சொல்லி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

    • முருகப்பெருமான் ஆலயம் சென்றும் வழிபட்டு வரலாம்.
    • பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது.

    தைப்பூசம் அன்று காலையில் எழுந்து குளித்து தூய்மையான உடை உடுத்தி முருகப்பெருமானை வழிபட வேண்டும். முருகப்பெருமான் படத்திற்கு அல்லது விக்கிரகத்திற்கு முருகப்பெருமானின் நாமங்களைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் படைத்து, சுவாமிக்கு நைவேத்தியம் செய்வது நல்லது.

    சிலர் அன்று முழுவதும் எதையும் சாப்பிடாமல் உபவாசம் இருப்பார்கள். சிலர் பாலும் பழமும் மட்டும் எடுத்துக் கொண்டு ஒரு பொழுது சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். தைப்பூசம் அன்று முருகப்பெருமான் ஆலயம் சென்றும் வழிபட்டு வரலாம். அன்றைய தினம் தேவையற்ற வார்த்தைகளை பேசுவதோ, கோபப்படுவதோ, வீண் விவாதங்கள் செய்வதோ கூடாது. முருகப்பெருமான் நாமத்தை மட்டுமே சொல்லிக் கொண்டிருக்க வேண்டும்.

    முருகப்பெருமானை நினைத்து தைப்பூச விரதம் இருந்தால், பகை அழியும். நவக்கிரக தோஷம் நம்மை நெருங்காது. குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகள் சாதகமாக முடியும்.

    • தைப்பூசம் என்றதும் முருகப்பெருமானின் ஞாபகம்தான் வரும்.
    • தைப்பூசம் என்றதும் அடுத்து வள்ளலார் ஞாபகம் வரும்.

    தை மாதம் பூச நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமியை, `தைப்பூசம்' என்ற பெரும் விழாவாக கொண்டாடுகிறோம். இந்த நாளில் தான் முன்னொரு காலத்தில் உலகம் உண்டாக்கப்பட்டது என்று சொல்லப் படுகிறது. திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் தைப்பூசத்தை ஒட்டி விசேஷ பிரம்மோற்சவம் நடைபெறும். தைப்பூச நாளில் இங்கே `அஸ்வமேத பிரதட்சணம்' என்று கோவிலைச் சுற்றி வருவது விசேஷம். சோழ மன்னர்களில் ஒருவன் இவ்வாறு சுற்றி வந்து, தன்னுடைய பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதாக தல வரலாறு சொல்கிறது.

    தைப்பூசம் என்றதும் அடுத்து வள்ளலார் ஞாபகம் வரும். முருக பக்தர்களுக்கு தைப்பூசம் என்றதும் முருகப்பெருமானின் ஞாபகம்தான் வரும். `சுக்குக்கு மிஞ்சின மருந்தும் இல்லை. சுப்பிரமணியருக்கு மிஞ்சின தெய்வமும் இல்லை' என்பது பழமொழி.

    சூரபத்மன்-தரகாசுரன் பிறந்த கதை

    அசுர குல தலைவனாக அசுரேசன் இருந்து வந்தான். அவனுக்கு சுரசை என்னும் மகள் பிறந்தாள். அசுர குருவான சுக்ராச்சாரியார் மாய வித்தைகளை அவளுக்கு கற்றுக்கொடுத்தார். அதனால் அவளை `மாயை' என்றும் அழைத்தனர். அந்த அசுரப் பெண் காசியப முனிவரை விரும்பி திருமணம் செய்துகொண்டாள். அவர்களுக்கு சூரபத்மன், சிங்கமுகாசுரன், தாரகாசுரன் என்ற மகன்களும், அஜமுகி என்ற மகளும் பிறந்தனர். மாயை தன் குழந்தைகளை நோக்கி "நீங்கள் கடும் தவம் செய்யுங்கள். `நரமேத யாக'த்தை செய்யுங்கள்" என்றாள்.

    அவர்கள் ரத்தத்துடன் கலந்த பொருட்களை அக்னியில் சேர்த்து, ரத்தம், மாமிசம் முதலானவற்றால் யாகம் நடத்தி கடும் தவம் செய்தனர். முடிவில் நரமேத யாகத்திற்காக தங்கள் உடல்களையே இழக்கத் தயாராகினர். தாரகாசுரன் தனது பெரிய யானைத் தலையை அறுத்து, ஹோமத்தில் இட்டான். (இந்த தாரகாசுரன் காசியப முனிவரும், மாயையும் யானை உருவத்தில் இருந்தபோது பிறந்தவன்).

    சூரபத்மனுக்கு தம்பியாகிய தாரகாசுரன் இந்த கடும் தவத்தால் பல அரிய வரங்களைப் பெற்றான். பின்னர் அஷ்டதிக் பாலகர்களையும் வென்று, மேரு மலையின் தென்புறத்தில் மாயாபுரி என்னும் பெரிய நகரத்தை உருவாக்கினான்.

    மேலும் தன் அசுர சேனைகள் தங்கவும் பெரிய நகரங்களை உருவாக்கினான். சூரபத்மனுக்கு பானுகோபன் உள்பட பல குழந்தைகள் பிறந்தன. சிங்கமுகனுக்கு அதிசூரன் என்னும் புதல்வனும், 100 பிள்ளைகளும் பிறந்தனர். தாரகாசுரனுக்கு அசுரேசன் என்னும் மகன் பிறந்தான். இவர்களது சகோதரி அஜமுகி, துர்வாசரை மணந்துகொண்டதால், வாதாபி மற்றும் வில்வலன் என இரு குழந்தைகள் பிறந்தன.

    முருகப்பெருமான் அவதாரம்

    ஒரு சமயம் பரமேஸ்வரனை பிரிந்து பார்வதி தேவி பூலோகத்தில் பிறந்தாள். இமயவன் புத்திரியாக பிறந்து சிவபெருமானையே அடைய வேண்டும் என்று கடுந்தவம் இருந்தாள். அந்த சமயம் சிவபெருமான் தவத்தில் இருந்தார்.

    தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மன்மதன், சிவபெருமான் மீது காமக் கணைகளைத் தொடுத்து, அவருடைய தியானத்தைக் கலைத்தான். இதனால் மன்மதன் துன்பப்பட்டது ஒருபுறம் என்றாலும், தியானம் கலைந்த சிவபெருமான், பார்வதி தேவியின் தவத்தை அறிந்து அவரை திருமணம் செய்து கொண்டார்.

    அப்போது தேவர்கள், ``இணை இல்லாத இறைவா... எங்கள் துயர்தீர தங்கள் சக்திக்கு நிகரான ஒரு குமரன் பிறக்க வேண்டும். அப்பொழுதுதான் சூரபத்மன், தாரகாசுரன் போன்றவர்களின் ஆணவம் அழியும்" என்று வேண்டினர்.

    அப்பொழுது சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு, ஆறு பொறிகளாக பிரிந்தது. அந்த நெருப்பால் உலகம் முழுவதும் தகிக்க ஆரம்பித்தது. இதைக்கண்டு தேவர்களும் கூட அஞ்சினர். சத்தம் கேட்டு பார்வதி தேவி அங்கே விரைந்து வர, அவரது உடலில் இருந்து சிந்திய வியர்வையில் இருந்து ஒரு லட்சம் வீரர்கள் ஆயுதங்களுடன் தோன்றினர்.

    பார்வதியின் கால் சிலம்பில் இருந்து உதிர்ந்த நவரத்தினங்கள் ஒன்பதில் இருந்து 9 சக்திகள் பிறக்க, அந்த நவக்கன்னியர்களிடம் இருந்து 9 வீரர்கள் தோன்றினர். அவர்கள் வீரவாகுதேவர், வீரகேசரி, வீரமாமகேந்திரர், வீரமா மகேஸ்வரர், வீரமா புரந்தரர், வீரராகர்த்தர், வீரமார்தாண்டவர், வீராந்தகர், வீரதீரர் என்ற பெயர்களைப் பெற்றனர். முருகப்பெருமான் அவதாரத்திற்குப் பின் அவர்கள் பூலோகம் வந்தனர்.

    சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய அந்த ஆறு தீப்பொறிகளையும், தகிக்கும் வெப்பத்தைத் தாங்கிக் கொண்டு வாயு பகவான், சரவணப் பொய்கையில் கொண்டு போய் சேர்த்தார். அந்த ஆறு தீப்பொறிகளும் ஆறு குழந்தைகளாக மாறின. அந்த ஆறு குழந்தைகளையும் திருமால் ஆணைக்கிணங்க கார்த்திகைப் பெண்கள் வளர்த்தனர்.

    கார்த்திகை பெண்கள் வளர்த்த அந்த ஆறு குழந்தைகளையும், பார்வதி தேவி பூமியில் வந்து கையில் எடுக்க, ஆறு குழந்தைகளும், ஆறுமுகம் 12 கைகளை உடைய ஒரு குழந்தையாக உருவெடுத்தது. இதையடுத்து அசுரர்களை அழிப்பதற்காக, முருகப்பெருமானுக்கு, 11 சக்திகள் ஒன்றிணைந்த வேல் ஒன்றை, ஆயுதமாக பார்வதிதேவி வழங்கினார். அந்த தினம் `தைப்பூசம்' என்று போற்றப்படுகிறது.

    • நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.
    • பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் சேவூர் அருகே முறியாண்டம்பாளையம் காமராஜ் நகர், சந்தையபாளையம் உள்ளிட்ட பல கிராமங்களில் தைப்பூசத்தை முன்னிட்டு 9 நாட்கள் நிலாவுக்கு சோறு படைத்து சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் கும்மியடித்து கொண்டாடும் நிகழ்ச்சி கொடியேற்ற நாளில் (கடந்த 19-ந்தேதி) இருந்து நடைபெற்று வருகிறது.

    அதன்படி நேற்றிரவு அவரவர் வீடுகளில் இருந்து பழம் மற்றும் சர்க்கரை கொண்டு வந்து ஊரின் நடுவே உள்ள பொது இடத்தில் வண்ண வண்ண கலர்களில் கோலமிட்டு கோலத்தின் நடுவே சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்ததுடன், பிள்ளையாரின் தலையில் அருகம்புல், வெள்ளை எருக்கலம் பூ வைத்து, அலங்கரித்து நவதானிய முளைப்பாரி வைக்கப்பட்டது.

    பின்னர் தாங்கள் கொண்டு வந்த உணவு பதார்த்தங்களை படைத்து வழிபட்டனர். அதைத்தொடர்ந்து பிள்ளையாரை பாவித்து, நிலாவை பூமிக்கு அழைக்கும் விதமாக பெண்கள் வட்டமாக நின்று தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி ஆடி, பாடி கும்மியடித்தனர்.

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.
    • 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி இன்று உற்சவம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதனையடுத்து காலை 7.28 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

    10-ம் நாளான 25-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவேரிக்கு சென்று அடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது .

    இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 26-ந் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு பாஸான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.

    அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர். 

    • முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
    • பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது.

    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை " என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை " என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

    எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது-.

    கோவில் அமைவிடம்:

    மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.

    ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

    அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.

    சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

    வரலாற்று ஆதாரங்கள்:

    திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

    கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

    தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

    அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

    அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.

    உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

    சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.

    இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.

    சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.

    மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

    அதிசய நூபுர கங்கை:

    பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

    மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

    இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

    திருமண பரிகார தலம்:

    முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

    விழாக்கள் விவரம்:

    கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

    ×