search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தைப்பூசம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியபோது எடுத்த படம்.

    சமயபுரம் மாரியம்மன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம்.
    • 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக் குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

    மண்ணச்சநல்லூர்:

    திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு தைப்பூசத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி இன்று உற்சவம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் மரக்கேடயத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார். இதனையடுத்து காலை 7.28 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் இரவில் அம்மன் சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை,வெள்ளி சேஷ வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருகிறார். 8 ம் நாளன்று அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் காட்சி தருகிறார். 9ம் நாள் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

    10-ம் நாளான 25-ந் தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தைப்பூச விழாவிற்காக அம்மன் கண்ணாடி பல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயம் கண்டருளி நொச்சியம், மண்ணச்சநல்லூர் வழியாக வடக்காவேரிக்கு சென்று அடைகிறார். அன்று மாலை கொள்ளிடம் வடகாவிரியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது .

    இதனை தொடர்ந்து இரவு 10 மணிக்கு மேல் தனது அண்ணனான ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் சீர்வரிசை பெரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 26-ந் தேதி இரவு ஒரு மணி முதல் அதிகாலை 2 மணி வரை மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அன்று காலை முதல் இரவு வரை அம்மன் வழிநடை உபயம் கண்டருளுகிறார். பின்னர் இரவு பாஸான மண்டபத்திற்கு சென்றடைகிறார்.

    அங்கு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று பின்னர் கொடி மரம் முன்பு எழுந்தருளி கொடி இறக்கப்படுகிறது. தொடர்ந்து நள்ளிரவில் அம்மன் கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோயில் பணியாளர்கள், கோயில் குருக்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×