search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gandashashti"

    • வேல்வாங்குதல் நிகழ்ச்சி நாளை நவம்பர் 17- ம் தேதி நடைபெறுகிறது.
    • டிசம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் சிங்காரவேலவர் கோவிலில் சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் சம்காரம் செய்தார் முருகன் என கந்தபுராணம் கூறுகிறது.

    அதன்படி வரலாற்று சிறப்புமிக்க இவ்வாலயத்தின் கந்த சஷ்டி விழா 13-ம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் மற்றும் வேல்வாங்குதல் நிகழ்ச்சி நாளை நவம்பர் 17- ம் தேதி நடைபெறுகிறது.

    இதனையொட்டி, நாகப்பட்டினம் மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (நவ.17) விடுமுறை அளிக்கப்படுகிறது.

    இதை ஈடு செய்யும் வகையில், டிசம்பர் 2-ஆம் தேதி (சனிக்கிழமை) நாகை மற்றும் திருமருகல் ஒன்றியங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.

    • சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம்.
    • சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை.

    திருச்செந்தூர்:

    முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி யாகசாலை பூஜையுன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 3-ம் திருநாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது.

    காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனையை தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானை அம்பாள்களுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    மாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமி-அம்பாள்களுக்கு மஞ்சள், பால், இளநீர், தேன், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சுவாமி-அம்பாள்களுக்கு அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    கந்தசஷ்டி திருவிழாவையொட்டி கோவில் வளாகத்தில் உள்ள தற்காலிக கொட்டகைகளில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கியிருந்து விரதம் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் திருநாளான நாளை மறுநாள் (சனிக்கிழமை) மாலையில் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள் முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் மாவட்ட நிர்வாகம், கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.

    • முருகப்பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
    • பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது.

    முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக போற்றப்படும் பழமுதிர்ச்சோலைக்கு, "சோலைமலை " என்ற பெயரும் உண்டு. இங்குள்ள முருகப்பெருமான் வெற்றிவேல் முருகன் என்று அழைக்கப்படுகிறார். பழமுதிர்ச்சோலை என்பதற்கு "பழங்கள் உதிர்க்கப் பெற்ற சோலை " என்று பொருள் எடுத்துக்கொள்ளலாம்.

    எந்த முருகன் கோவில்களுக்கும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோவிலுக்கு உண்டு. அதாவது, இந்த தலம் அமைந்துள்ள மலையின் அடிவாரத்தில் கள்ளழகர் கோவிலும், மலை உச்சியில் முருகப்பெருமானின் ஆறாவது படைவீடும் அமைந்துள்ளது. இது சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது-.

    கோவில் அமைவிடம்:

    மதுரை மாநகரில் இருந்து வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அழகர்மலை உச்சியில் இந்த பழமுதிர்ச்சோலை அமைந்துள்ளது. மதுரை பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது.

    மலையின் அடிவாரத்தை சென்றடைந்ததும் அழகர்கோவில் கள்ளழகர் என்ற சுந்தரராஜப் பெருமாள் கோவில் கம்பீரமாக நம்மை வரவேற்கிறது. அழகர் கோவில் நுழைவுவாயில் முன்பு நாம் இறங்கியதும், வேறு யாரும் வரவேற்கிறார்களோ இல்லையோ, குரங்குகள் தவறாமல் கூட்டமாக வந்து வரவேற்கின்றன.

    ஆம்... இங்கு குரங்குகள் அதிகமாக காணப்படுகின்றன. கொஞ்சம் அசந்தால் நம் கையில் உள்ள பொருட்களை அலேக்காக லபக்கிவிடுகின்றன இவை. அதனால், கொஞ்சம் உஷாராகத்தான் செல்ல வேண்டியிருக்கிறது.

    அழகர்மலை அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு செல்ல கள்ளழகர் கோவில் நிர்வாகமே வாகனங்களை இயக்குகிறது. காரில் செல்பவர்கள் தனிக்கட்டணம் செலுத்தி மலை உச்சிக்கு பயணமாகலாம்.

    சுமார் 15 நிமிடங்கள் வளைந்து நெளிந்து செல்லும் மலையில் மெதுவாக பயணித்தால் மலை உச்சியை அடையலாம். அங்கு பழமுதிர்ச்சோலை என்கிற சோலைமலை அமைந்துள்ளது.

    வரலாற்று ஆதாரங்கள்:

    திருமுருகாற்றுப்படையில் வரும் பழமுதிர்ச்சோலை என்பதற்கு பழம் முற்றிய சோலை என்று நச்சினார்க்கினியர் உரை எழுதியிருக்கிறார்.

    கந்தபுராணத் துதிப்பாடலில், வள்ளியம்மையைத் திருமணம் செய்ய விநாயகரை யானையாக வந்து உதவும்படி முருகப்பெருமான் அழைத்த தலம் பழமுதிர்ச்சோலை என்று கூறுகிறார் கச்சியப்ப சிவாச்சாரியார். எனவே ஆறாவது படை வீடாகிய பழமுதிர்ச்சோலை, வள்ளி மலையைக் குறிக்கும் என்று ஒருசாரார் தெரிவிக்கின்றனர்.

    ஆனால் அருணகிரிநாதர், திருப்புகழில் வள்ளி மலையையும், பழமுதிர்ச்சோலையையும் தனித்தனியே பாடியிருக்கிறார். மேலும் பழமுதிர்ச்சோலையில் இன்றும் காணப்படுகின்ற "நூபுர கங்கை" என்னும் சிலம்பாற்றை பழமுதிர்ச்சோலைத் திருப்புகழில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அதனால், பழமுதிர்ச்சோலையே முருகப்பெருமானின் ஆறாவது படைவீடாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.

    பழமுதிர்ச்சோலை முருகப்பெருமானுக்கு உகந்த நாளாக வெள்ளிக்கிழமை கருதப்படுகிறது. அன்றையதினம் முருகப் பெருமானுக்கு தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. கோவில் மூலஸ்தானத்தில் வெற்றிவேலனாக முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார்.

    அறுபடை வீடுகள் ஒவ்வொன்றிலும் திருவிளையாடல் புரிந்த அழகன் முருகன், இந்த தலத்தில், மதுரை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவ்வையாரிடம் திருவிளையாடல் புரிந்ததாக சொல்கிறார்கள்.

    தனது புலமையால் புகழின் உச்சிக்கு சென்ற அவ்வையாருக்கு தான் என்ற அகங்காரம் ஏற்பட்டது. அந்த அகங்காரத்தில் இருந்து அவ்வையை விடுவிக்க எண்ணிய முருகப்பெருமான், அவ்வை மதுரைக்கு காட்டு வழியாக நடந்து செல்லும் வழியில் ஆடு மேய்க்கும் சிறுவனாக தோன்றி வந்தார்.

    அங்கிருந்த ஒரு நாவல் மரத்தின் கிளை ஒன்றில் ஏறி அமர்ந்து கொண்டார். நடந்து வந்த களைப்பால் அந்த மரத்தின் அடியில் வந்து அமர்ந்தார் அவ்வை. நீண்ட தொலைவு பயணம் அவருக்கு களைப்பையும் தந்திருந்தது. வயிறு பசிக்கவும் செய்தது.

    அப்போது, தற்செயலாக அந்த மரக்கிளையில் ஆடுமேய்க்கும் சிறுவன் ஒருவன் அமர்ந்திருப்பதைக் கண்டார். அந்த மரத்தில் நிறைய நாவல் பழங்கள் இருப்பதையும் பார்த்தார்.

    உடனே அந்த சிறுவனிடம், "குழந்தாய்... எனக்கு பசிக்கிறது. சிறிது நாவல் பழங்களை பறித்து தர முடியுமா? " என்று கேட்டார். அதற்கு, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "சுட்டப் பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? " என்று கேட்டார்.

    சிறுவனின் கேள்வி அவ்வைக்கு புரியவில்லை. பழத்தில் கூட சுட்டப்பழம், சுடாத பழம் என்று இருக்கிறதா? என்று எண்ணிக் கொண்டவர், விளையாட்டாக "சுட்டப்பழத்தையே கொடுப்பா... " என்று கேட்டுக்கொண்டார்.

    தொடர்ந்து, நாவல் மரத்தின் கிளை ஒன்றை சிறுவனாகிய முருகப்பெருமான் உலுப்ப, நாவல் பழங்கள் அதில் இருந்து கீழே உதிர்ந்து விழுந்தன. அந்த பழங்களை பொறுக்கிய அவ்வை, அந்த பழத்தில் மணல் ஒட்டி இருந்ததால், அவற்றை நீக்கும் பொருட்டு வாயால் ஊதினார்.

    இதைப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவனாகிய முருகப்பெருமான், "என்ன பாட்டி... பழம் சுடுகிறதா? " என்று கேட்டார்.

    சிறுவனின் அந்த ஒரு கேள்வியிலேயே அவ்வையின் அகங்காரம் பறந்துபோனது. தன்னையே சிந்திக்க வைத்த அந்த சிறுவன் நிச்சயம் மானுடனாக இருக்க முடியாது என்று கணித்த அவ்வை, "குழந்தாய்... நீ யாரப்பா? " என்று கேட்டார்.

    மரக்கிளையில் இருந்து கீழே குதித்த சிறுவன் முருகப்பெருமான், தனது சுயஉருவத்தை காண்பித்து அவ்வைக்கு அருளினார்.

    இந்த திருவிளையாடல் நடந்த நாவல் மரத்தின் கிளை மரம் இன்றும் சோலைமலை உச்சியில் காணப்படுகிறது. சோலைமலை முருகன் கோவிலுக்கு சற்று முன்னதாக இந்த மரத்தை இன்றும் நாம் பார்க்கலாம்.

    அதிசய நூபுர கங்கை:

    பழமுதிர்ச்சோலைக்கு சற்று உயரத்தில் நூபுர கங்கை என்ற புனித தீர்த்தம் அமைந்துள்ளது. இதற்கு சிலம்பாறு என்ற பெயரும் உண்டு. இந்த தீர்த்தம் எங்கு உற்பத்தியாகிறது என்பதே புரியாத புதிராக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இந்த தீர்த்த தண்ணீர் வந்து கொண்டிருப்பதாக கூறுகிறார்கள். முருகப்பெருமானின் திருப்பாதத்தில் இருந்து இது உருவாகியது என்ற கர்ண பரம்பரைக் கதையும் வழக்கில் சொல்லப்பட்டு வருகிறது.

    மலை உச்சியில் ஓரிடத்தில் இந்த தீர்த்த தண்ணீர் ஓரிடத்தில் விழும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். இந்த இடத்தில் ராக்காயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த அம்மனை வழிபடச் செல்பவர்கள், நூபுர கங்கை விழும் இடத்தில் புனித நீராடிச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த தீர்த்த தண்ணீர் இரும்புச்சத்து, தாமிரச்சத்து காரணமாக ஆரோக்கியம் மிகுந்த சுவை கொண்டதாக காணப்படுவதோடு, அதில் அபூர்வ மூலிகைகள் பல கலந்து இருப்பதால் நோய் தீர்க்கும் அருமருந்தாகவும் இருக்கிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால் எப்பேற்பட்ட நோயும் பறந்தோடிவிடும் என்பதால், இங்கு தினமும் அதிக அளவில் பக்தர்கள் வந்து நீராடிச் செல்கிறார்கள்.

    இந்த தீர்த்த தண்ணீரில்தான் புகழ்பெற்ற அழகர்கோவில் பிரசாதமான சம்பா தோவை தயார் செய்யப்படுகிறது.

    மேலும், இந்த அழகர்மலையில் பல்வேறு மூலிகைத் தாவரங்கள், மரங்கள் காணப்படுகின்றன. பழமுதிர்ச்சோலை முருகனை தரிசிக்கச் சென்றால், இந்த மூலிகைகள் மற்றும் மூலிகை சம்பந்தப்பட்ட பொருட்களையும் கையோடு வாங்கி வரலாம்.

    சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு, அந்த நோய் சட்டென்று கட்டுப்பட விசேஷ மூலிகை மரம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது. அந்த மரத்தின் விதையில் ஒன்றை சாப்பிட்டாலே சர்க்கரை நோய் கட்டுப்பட்டு விடும் என்கிறார்கள்.

    திருமண பரிகார தலம்:

    முருகப்பெருமானுக்கு ஆரம்ப காலத்தில் இங்கு ஆலயம் கிடையாது என்றும், இடைப்பட்ட காலத்திலேயே பக்தர்களால் மலைக்கு இடையே கோவில் எழுப்பப்பட்டு, வழிபாடு நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதவர்கள், இந்த வெற்றிவேல் முருகனை வழிபட்டால் சட்டென்று திருமணம் முடிவாகி, வெற்றிக்கரமான வாழ்க்கை அமையும் என்று கூறுகிறார்கள்.

    விழாக்கள் விவரம்:

    கந்த சஷ்டி விழா முக்கிய விழாவாக கொண்டாடப்படுகிறது. மேலும் முருகனுக்குரிய தைப்பூசம், வைகாசி விசாகம், கிருத்திகை ஆகிய நாட்களிலும் சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

    • முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம்.
    • முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

    சஷ்டி விரதம் ஐப்பசி மாத தீபாவளி அமாவாசையின் பின் அதாவது வளர்பிறை பிரதமை முதல் ஆரம்பித்து, ஆறாம்/ஐந்தாம் நாளான சஷ்டி திதி வரையான ஆறு தினங்களும் நோற்கப்படும் முருகப்பெருமானுடைய சிறப்பான நோன்பாகும். இலங்கையில் இவ்விரதம் இந்த வருடம் 04.11.2013 திங்கட்கிழமை ஆரம்பமாகி ஐந்தாவது தினமான 08.11.2013 வெள்ளிக்கிழமை அன்று சூரசங்கார நிகழ்வுடன் நிறைவு பெறுகின்றது. ஆனால் கனடா, அமெரிக்கா போன்ற வட-அமெரிக்க நாடுகளில் 03.11.2013 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகி ஆறாவது தினமான 08.11.2013 அன்று சூரன்போருடன் நிறைவு பெறுவதாக ஜோதிடம் கணிக்கின்றது.

    அறியாமை என்னும் அஞ்ஞான இருளை அகற்றி, மெய்ஞானமாகி மிளிர்கின்ற பரம்பொருளின் முக்திப் பேரருளை அடைவதற்காகச் சைவப் பெருமக்களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்களுள் தலையாயது கந்தசஷ்டி விரதம். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று. அவையாவன வெள்ளிக்கிழமை (வாரம்) விரதம், கார்த்திகை (நட்சத்திரம்) விரதம், கந்த சஷ்டி (திதி) விரதம் என்பனவாம். வல்வினை நீக்கி, வரும் வினை போக்கி, செல்வமும் செல்வாக்கும் தந்து; அழகும், அறிவும் தந்திடும் வள்ளி மணாளனை, வடிவேலனை வழிபடும் விரதங்களில் மிகவும் சிறந்தது இந்தக் கந்தசஷ்டி விரதமாகும்.

    அனாதியாகவே "செம்பில் களிம்பு போன்று" ஆன்மாக்கள் ஆணவமலத்தால் பீடிக்கப்பட்டுள்ளன. ஆனால் ஆன்மாக்கள் இப்பூவுலகில் பிறந்ததன் நோக்கம் சகல இன்பங்களையும் அறவழியில் அனுபவித்து, இறுதியில் பிறப்பு, இறப்பு அற்ற மோட்ச நிலையில் இறைவனுடன் இரண்டறக் கலந்தற்கேயாகும். எனவே முருகப் பெருமானை வழிபடுவதன் மூலம் தமது கன்ம வினைகளை மிக விரைவில் அறுத்து ஆன்மாக்களின் இறுதி இலட்சியமாகிய மோட்சத்தினை இலகுவில் அடையலாம் என்பது ஐதீகம்.

    ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும் மூலங்களை மட்டுமன்றி ஆறுவகை எதிரிகளான காமம், கோபம், பேராசை, செருக்கு, மயக்கம், தற்பெருமை ஆகிய வகைகளை அழித்து முற்றுணர்வு, வரம்பிலாற்றல், தன் வயமுடைமை, வரம்பின்மை, இயற்கையுணர்வு, பேரருள் ஆகிய தேவ குணங்களை நிலை நாட்டுவதால் "ஒப்பரும் விரதம்" என ஸ்கந்தஷஷ்டி விரத மகிமை பற்றிக் கந்தபுராணம் சிறப்பாகப் புகழ்ந்து பேசுகின்றது.

    கந்தசஷ்டி விரதம்; சுழிபுரம் பறாளை-முருகன் ஆலயம், காலையடி ஞானவேலாயுதர் ஆலயம் உட்பட எல்லா முருகன் ஆலயங்களிலும் அதிவிஷேச அபிஷேக ஆராதனைகள், பூசைகள் நிறைந்த பக்தியான விரதமாக அனுஸ்டிக்கப் பெறுவதுடன் சூரன்போர் காட்சியும் வெகுசிறப்பாக நிகழ்த்தப்பெறுகின்றன.

    முருகன் ஆலயத்தில் பக்தர்கள் உண்ணா நோன்பிருந்து; பக்திசிரத்தையுடன் முருகனை நினைந்துருகி வழிபட்டு, தியானத்திலும், பஜனை செய்வதிலும், கந்தரனுபூதி, கந்தசஷ்டிகவசம், கந்தரலங்காரம் ஓதுவதிலும், கந்தபுராணம்-பயன் கேட்பதிலும் தம்மை ஈடுபடுத்தி முருகனருள் வேண்டி நிற்பர்.

    அத்துடன்; விரத முடிவு தினமான சஷ்டிதினம் (சூரன்போரில்) முருகன் வீசும் வேல் குறிதவறாது சூரனின் சகோதரர்களான; யானை முகம் கொண்ட தாரகன், சிங்க முகம் கொண்ட சிங்கன் கழுத்தில் வீழ்ந்து தலைகள் சாய்வதும்; பல மாயைகள் செய்து போர்புரிந்து கடைசியாக, நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரன்-பதுமனை சங்காரம் "சங்கரன் மகன் சட்டியில் மாவறுப்பதை" (சங்கரன் புதல்வராகிய முருகப் பெருமான் சஷ்டித் திதியிலே மாமரமாக தோன்றிய சூரனை, இரண்டாக பிளந்து சாங்காரம் செய்யும் காட்சியை கண்டு) தரிசித்து தம் வினை போக்க பக்தர்கள் காதலாகி கசிந்துருகி நிற்கும் காட்சியும், கண்கொள்ளாக் காட்சிகளாகும்.

    கொடுங்கோலாட்சி செலுத்திய ஆணவத்தின் வடிவமாகிய சூரனையும், கன்மத்தின் வடிவமாகிய சிங்கனையும், மாயா மூலத்தின் வடிவமாகிய தாரகனையும், (ஆணவம், கன்மம், மாயை என்ற) அசுர சக்திகளையெல்லாம் அழித்து, நீங்காத சக்தியை கலியுக வரதனான முருகப் பெருமான் நிலை நாட்டிய உன்னத நாளே கந்த சஷ்டியாகும்.

    கந்தசஷ்டி விரத நாட்களில், ஆன்மா மும்மூலங்களையும் நீக்குவதற்குரிய பக்குவமான மனதுடன் தனித்து, விழித்து, பசித்து இருக்க வேண்டும். உணவையும் உறக்கத்தையும் தவிர்த்து, தனித்திருந்து செய்யும் தவமே கந்தசஷ்டி விரதமாகும். உணர்வுகளை அடக்கி உள்ளத்தை ஒருநிலைப்படுத்தி கந்தப் பெருமானின் பெருமை பேசி இம்மைக்கும் மறுமைக்கும் சிறந்த வழியமைப்பதே இந்த விரதத்தின் பெறும்பேறாக அமைகிறது.

    கந்தசஷ்டி விரதத்தை முறையாக அனுஷ்டிப் போர்க்கு இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி ஆகிய மூன்று சக்திகளுக்கும் தலைவனான முருகப்பெருமானது பேரருள் கிட்டும். சஷ்டியன்று கந்தனுக்கு அபிஷேகம் செய்த பாலைப் பருகுவோர்க்கு புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்!.

    சகல செல்வங்களையும், சுகபோகங்களையும் தரவல்ல இந்த விரதம் புத்திரலாபத்துக்குரிய சிறப்பான விரதமுமாகும். "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பதற்கேற்ப; ஸ்கந்தஷஷ்டியில் விரதமிருந்தால் "அகப் பையாகிய "கருப்பையில்" கரு உண்டாகும் என்பதும்; கந்தர் சஷ்டி விரதத்தை முறையாகக் கைக்கொள்வதால் அகப்"பை" எனும் "உள்ளத்தில்" நல்ல எண்ணங்களும் பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியும் அமையும் என்பதும் மறை பொருள்களாகும்.

    அறிவு வளர்ச்சிக்கு விஞ்ஞானம் உதவுவதைப் போன்று மன வளர்ச்சிக்கு சமயம் அடிகோலுகின்றது. இறைவன் ஒருவன், அவன் மக்களின் தந்தை என்றெல்லாம் போதிப்பதன் மூலம் அன்பு, சகோதரத்துவம் போன்ற ஜீவ ஊற்றுகளை அருளி மக்களின் வாழ்வு நலம் பெறச் சமயம் உதவுகின்றது. நல்லவர்களைப் பாதுகாக்கவும் தீயவர்களை அடக்கவும் தர்மத்தை நிலை நாட்டவும் யுகந்தோறும் இறைவன் அவதாரம் செய்தருளுகின்றான்.

    தனு, கரண, புவன, போகங்கள் அனைத்தையும் படைத்தலும், காத்தலும், அழித்தலும் இறைவனது இடையறாத திருவிளையாடல்கள். இறைவனை உணர்ந்து அவனைச் சரணடைந்தால் அழிவில்லாத பேரின்பம் அடையலாம் என்பது சமயங்கள் காட்டும் பேருண்மை. இறைவனது திவ்ய அவதாரத்தையும் செயலையும் யாரொருவர் உள்ளபடி அறிகின்றார்களோ அவர்கள் மீண்டும் பிறவாமல் இறைவனையே அடைந்து விடுகிறார்கள் என்று கீதையில் கிருஷ்ணபகவான் கூறியுள்ளார்.

    தெய்வ அவதாரங்களில் தீய சக்திகளை அடக்கி நல்லவர்களைக் காத்தார்கள் என்றால் இச்செயல்கள் தீமைகளை நீக்கி நன்மைகளையே செய்து மக்கள் உய்ய வேண்டும் என்று போதிப்பதற்கே நிகழ்ந்தன என உணர்ந்து பக்தியுடன் வாழ்ந்து இகபர நலன்களை அடைய முயலவேண்டும். இத்தகைய அவதார இரகசியத்தை விளக்கி மக்கள் உய்வதற்கு உகந்த பெருவழிகளை விளக்கிக் காட்டுவதே ஆறுமுகப்பெருமானின் அவதாரம்.

    வசிட்ட மாமுனிவர் முசுகுந்தச் சக்கரவர்த்திக்கு சஷ்டி விரத மகிமையையும் வரலாற்றையும் விதிமுறைகளையும் உபதேசித்த பெருமையையுடையது. அரசர்கள், தேவர்கள், முனிவர்கள் பலரும் இந்த விரதம் அனுஷ்டித்து வேண்டிய வரங்களைப் பெற்றதோடு, இம்மை இன்பம், மறுமை இன்பம் ஆகியவற்றை பெற்றனர். இவ்விரதம் தொடர்பான "புராணக் கதை"யை பார்ப்போம்.

    பிரம்மாவிற்கு தக்கன், காசிபன் என்னும் இரு புதல்வர்கள் இருந்தனர். இவர்களுள் தக்கன் சிவனை நோக்கித் கடுந்தவம் புரிந்து பல வரங்களைப் பெற்றிருந்த போதிலும் இறுதியில் சிவனால் தோற்றுவிக்கப் பெற்ற வீரபத்திரக் கடவுளால் கொல்லப்பட்டார். காசிபனும் கடுந்தவம் புரிந்து சிவனிடம் இருந்து மேலான சக்தியைப் பெற்றான். ஒருநாள் அசுரர்களின் குருவாகிய சுக்கிரனால் (நவக்கிரகங்களுள் வெள்ளியாக கணிக்கப்படுபவர்) ஏவப்பட்ட மாயை என்னும் பெண்ணின் அழகில் மயங்கி தான் பெற்ற தவ வலிமை எல்லாவற்றையும் இழந்தான்.

    இதனைத் தொடர்ந்து காசிபனும் மாயை என்னும் அசுரப் பெண்ணும் முதலாம் சாமத்தில் மனித உருவத்தில் இணைந்து மனித தலையுடன் கூடிய சூரனும், இரண்டாம் சாமத்தில் சிங்க உருவில் இருவரும் இணைந்து சிங்க முகத்துடன் கூடிய சிங்கனும், மூன்றாம் சாமத்தில் யானை உருவில் இணைந்து யானை முகத்துடன் கூடிய தாரகனும், நான்காம் சாமத்தில் ஆட்டின் உருவத்தில் இருவரும் இணைந்து ஆட்டுத் தலையுடன் கூடிய அசமுகி என்னும் அசுரப் பெண்ணும் பிறந்தனர்.

    மாயை காரணமாக தோன்றிய இந்நால்வரும் ஆணவ மிகுதியால் அகங்கார மமகாரம் (செருக்கு) கொண்டு காணப்பட்டனர். இவர்களுள் சூரபதுமன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்து; 108 யுகம் உயிர்வாழவும் 1008 அண்டம் அரசாளும் வரத்தையும், இந்திரஞாலம் எனும் தேரையும், சிவன் சக்தி அன்றி வேறு ஒரு சக்தியாலும் அழிக்க முடியாது எனும் வரத்தையும் பெற்றிருந்தான். இவ்வரத்தினைப் பெற்ற சூரன் முதலானோர் தம்மைப் போல் பலரை உருவாக்கி அண்ட சராசரங்கள் எல்லாவற்றையும் ஆண்டு இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்களையும் சிறையிலிட்டு சொல்லொணா துன்பங்களைக் கொடுத்து அதர்ம வழியில் ஆட்சி செய்தனர்.

    அசுரர்களின் இக்கொடுமையைத் தாங்க முடியாத தேவர்கள் கைலாயம் சென்று சிவனிடம் முறையிட்டனர். இறைவனும் அவர்கள்மேல் திருவுளம் கொண்டு அவர்களை அந்த துன்பத்தில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் தனது (6) நெற்றிக் கண்களையும் திறக்க (சிவபெருமானுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்து முகங்கள் உண்டு. இவை தவிர ஞானிகளுக்கு மட்டுமே தெரியக்கூடிய "அதோமுகம்" (மனம்) என்ற ஆறாவது முகமும் உண்டு) அவைகளிலிருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளையும் வாயுபகவான் ஏந்திச் சென்று; வண்ண மீனினம் துள்ளி விளையாடும் தண்மலர் நிரம்பிய சரவணப்பொய்கையில் தாமரை மலர்களின் மீது சேர்க்கப்பெற்றன.

    அந்த தீப்பொறிகள் ஆறும்; உலகின் பொன்னெல்லாம் உருக்கி வார்த்ததென ஆறு குழந்தைகள் தோன்றின. அந்த ஆறு குழந்தைகளையும் ஆறு கார்த்திகைப் பெண்கள் சீராட்டி பாலூட்டி வளர்த்து வரும் வேளை; அகிலலோக நாயகி பார்வதி தன் மைந்தர்களை அன்புடன் கட்டியணைத்திட அவையாவும் ஒரு திருமேனியாக வடிவங்கொண்டு ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய ஒரு திரு முருகனாக தோன்றினன் உலகமுய்ய. ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கரங்களும் உடைய திருவுருவை பெற்றமையால் "ஆறுமுக சுவாமி" எனப் பெயர் பெற்றார்.

    இந்த ஆறு திருமுகங்களும் ஞானம், ஐஸ்வர்யம், அழகு, வீர்யம், வைராக்கியம், புகழ் என்னும் ஆறு குணங்களையும் குறிக்கின்றன. பிரணவ சொரூபியான முருகப் பெருமானிடம் காக்கும் கடவுளான முகுந்தன், அழிக்கும் கடவுளான ருத்ரன், படைக்கும் தெய்வமான கமலோற்பவன் ஆகிய மும்மூர்த்திகளும் அடக்கம். ஆறுமுகன் சிவாக்னியில் தோன்றியவன். அதனால் "ஆறு முகமே சிவம்; சிவமே ஆறுமுகம்" எனப்படுகிறது.

    முருகப்பெருமான் அசுரர்களான சூர பத்மாதியரை அழிக்கப் போர் புரிந்த திருவிளையாடலையே நாம் கந்தசஷ்டி விழாவாகக் கொண்டாடுகிறோம். சூரபத்மனின் ஒரு பாதி "நான்' என்கிற அகங்காரம்; மற்றொரு பாதி "எனது" என்கிற மமகாரம்.

    பன்னிரண்டு கைகளுடன் ஆறு திருமுகமும் கூடிய அழகின் அழகாய் தேவசேனாதிபதியாய், தேவரும் முனிவரும் வாழ்த்த சர்வ சத்தியாம் பார்வதி தந்த தனிப்பெரும் ஞான வேலை சக்தியாகக் கொண்டு சூரபன்மனைச் சம்ஹாரம் செய்யப் புறப்பட்டு சென்றார். அவர்களுடன் முருகப் பெருமான் மேற்கொண்ட போர் ஐப்பசித் திங்கள் வளர்பிறையில் பத்து நாட்கள் நடைபெற்றது. முதல் நான்கு நாட்களில் சூர பத்மனைச் சேர்ந்த வீரர்களை அழித்து அவனது பலத்தை துவம்சம் செய்தார்.

    தாரகனையும் அவனுக்குத் துணை நின்ற கிரௌஞ்சத்தையும் பிளந்து, சிங்கமுகனை அழித்து பின் சூரனின் சேனை அழிந்த போதும் சூரபதுமனின் ஆணவம் அழிய இல்லை. அதனால் முருகன் தன் திருப்பெரு வடிவம் (விஸ்வரூபம்) காட்டி, எல்லாம் வல்ல பரம்பொருள் தாமே என பரமேசுர வடிவம் காட்டி, சிவனும் அவன் மகனும் மணியும் ஒலியும் போல ஒருவரே என்றுணர்த்தியும், தன் தன்மை மாறாது மாயைகள் பல புரிந்து போர் செயலானான்.

    கடைசியாக; நடுக்கடலில் மாமரமாய் நின்ற சூரபத்மனைத் முருகன்; தன் வேலாயுதத்தால் இரு கூறாக்கினார். ஆணவம் அழியப் பெற்ற சூரன் தம் தவறை உணர்ந்து; தன்னை மன்னித்து, ஏற்றுக்கொள்ளும்படி மன்றாடி வேண்டி நிற்க; அவை இரண்டையும் முருகன் தன் அருளால் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி, மயிலை வாகனமாகவும் சேவலைக் கொடியிலும் தன்னுடன் பிணைத்துக் கொண்டார்.

    ஞானசக்தியான வேலின் தாக்கத்தால் ஆணவ மூலம் வலியிழந்து ஆன்ம பரம்பொருளின் திருவடி அடைந்ததெனும் மறைபொருளை உணர்த்த அனுஷ்டிக்கப்படும் விரதமே கந்தர் சஷ்டி விரதம். இந்த அருட்பெருங்கருணைச் செயலை வியந்து இப்போர் நிகழ்ந்த காலமாகிய ஐப்பசி மாத வளர்பிறை முதலாறு நாட்களையும் விரத நாட்களாகக் கொண்டு முனிவரும் தேவரும் நோற்று வந்தனர். இதுவே கந்தசஷ்டி என்ற நாமத்தோடு நாம் அநுஷ்டிக்கும் விரதமாகும்.

    ×