search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவடி ரகசியம்"

    • அகத்திய முனிவரின் சீடனாக இருந்தவன் இடும்பன்.
    • எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கிவிடுவான்.

    ஒரு சமயம் அகத்திய முனிவரின் சீடனாக இருந்தவன் இடும்பன். அவன் மிகப்பெரிய பலசாலி, எவ்வளவு பெரிய பளுவையும் சர்வ சாதாரணமாக தூக்கிவிடுவான். அகத்திய முனிவரின் வழிபாட்டிற்காக அவன் கயிலை மலைக்குச் சென்று, அங்குள்ள கந்தமலையில் சிவ-சக்தி சொரூபமாக இருக்கும் சிவகிரி, சக்திகிரி ஆகிய இரண்டு மலைகளையும், ஒரு நீண்ட மூங்கிலில் இரு பக்கமும் துலாபாரம் போல கட்டி தன்னுடைய தோளில் வைத்து தூக்கி வந்தான்.

    அப்போது அவனுக்குள், 'நம்மை விட மிகுந்த மிகுந்த பலசாலி யாரும் இல்லை' என்ற கர்வம் உண்டானது. அப்படி வரும் வழியில் முருகப்பெருமானின் திருவிளையாடலால். பாதை தெரியாமல் திகைத்து தடுமாறினான். அப்பொழுது முருகப்பெருமான், மிக அழகிய சிறுவனின் தோற்றத்தில் வந்து இடும்பனுக்கு வழிகாட்டினார்.

    திருவாவினன்குடி அருகே வந்தபோது, சிறுவனாக இருந்த முருகப்பெருமான், "இடும்பா.. இங்கு நீ சற்று ஓய்வு எடுத்து விட்டுச்செல்" என்றார். இடும்பனும் அங்கு சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு செல்லலாம் என்று காவடி போல் சுமந்து வந்த மலைகளை கீழே இறக்கி வைத்தான். ஒய்வு எடுத்த பிறகு அந்த காவ டியை தூக்கியபோது, அவனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

    என்ன காரணம் என்று பார்க்கையில், சிவகிரியின் உச்சியில் ஒரு அழகிய சிறுவன் கோவனத்துடன், கையில் ஒரு கம்பை ஊன்றியபடி நிற்பதைக் கண்டான். உடனே கோபம் கொண்ட இடும்பன், சிறுவனைப் பார்த்து "மலையில் இருந்து இறங்கு" எனக் கூற, அந்த சிறுவனோ ``இந்த மலை எனக்கே சொந்தம்" என்றான்.

    இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற இடும்பன். சிறுவனை தாக்க முயன்றான். அப்போது சிறுவன் உருவத்தில் இருந்த முருகப்பெருமான். இடும்பனை சாதாரணமாக தள்ள, அவன் கீழே விழுந்து மயக்கமுற்றான். அப்போது அகத்தியரும். இடும்பனின் மனைவியும் முருகப்பெருமானிடம் வந்து இடும்பனுக்கு ஆசி கூறுமாறு வேண்டினர்.

    இதையடுத்து முருகப்பெருமான். இடும்பனை தன்னுடைய காவல் தெய்வமாக நியமித்தார். இடும்பன் இரு மலைகளைத் தூக்கி வந்த நிகழ்வை நினைவுகூரும் ஒன்றாகத்தான் முருகப்பெருமானுக்கு காவடி எடுக்கும் வழக்கம் வந்தது.

     தைப்பூசம் அன்று முருகப்பெருமானுக்கு பால் காவடி, பழக்காவடி, புஷ்பக்காவடி, சந்தனக்காவடி, சர்ப்பக்காவடி என பலவிதமான காவடிகளைச் சுமந்தபடி முருகபக்தர்கள், முருகனை தரிசிக்கச் செல்கிறார்கள். இவ்வாறு காவடி எடுக்கும் பக்தர்களுக்கு. இடும்பனுக்கு அருள்செய்தது போல முருகப்பெருமான் அருள்செய்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது.

    ×