search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers"

    • பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக சபரி என்பவர் கடந்த சுமார் 1½ ஆண்டாக இருந்து வருகிறார்.
    • தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கடத்தூர்:

    தருமபுரி மாவட்டம் கடத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கேத்துரெட்டிப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 173-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் பெற்றோர்- ஆசிரியர் கழகத் தலைவராக சபரி என்பவர் கடந்த சுமார் 1½ ஆண்டாக இருந்து வருகிறார்.

    அவரின் குழந்தைகள் இந்த அரசு பள்ளியில் படிக்காத நிலையில் அவர் அரசியல் கட்சியில் உள்ளதால் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது தெரிய வந்தது.

    எனவே அவரை மாற்றி பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்களில் யாரேனும் ஒருவரை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி முன்பு இன்று காலை திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் மாணவர்களும் இன்று காலை 8 மணி முதல் 10 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்த் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்கள் மற்றும் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    அப்போது பெற்றோர், ஆசிரியர் கழக தலைவரை மாற்ற வேண்டும் என பெற்றோர்கள் தலைமை ஆசிரியர் ஸ்ரீகாந்திடம் மனு அளித்தனர். அதன்பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பள்ளி விடுமுறை என பெற்றோர்கள் தெரிவித்த நிலையில் நேற்று சுமார் 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

    • 6,7,8 வகுப்புகளுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.
    • முகாமிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

    தஞ்சாவூர்:

    திருவையாறு வட்டார ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை மற்றும் ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் திருவையாறு ஒன்றியத்துக்கு உட்பட்ட 6,7,8 வகுப்புகள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் மற்றும் மதிப்பீடு சார்ந்த பயிற்சி முகாம் காமராஜர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    இதில் கற்றல் நோக்கங்கள், கற்றல் அடைவு மற்றும் கற்றல் விளைவுகள் குறித்து ஆசிரியர்களுக்கு விரிவாக விளக்கப்பட்டது.

    பயிற்சியை ஆடுதுறை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் முதுநிலை விரிவுரையாளர் ஜெயராஜ் தொடங்கி வைத்தார்.

    இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.

    வட்டார வளமைய மேற்பார்வை யாளர் சரவணன் பயிற்சியை ஒருங்கிணைத்து நடத்தினார்.

    • நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
    • தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    சென்னை:

    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுப் பள்ளி ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில், ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக் கல்வித்துறை முதல்கட்ட பேச்சு வார்த்தையை நேற்று முன்தினம் நடத்தியதைத் தொடர்ந்து, 2-ம் கட்டக் கூட்டம் பள்ளிக் கல்வி இயக்குனர் க.அறிவொளி, தொடக்க கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர் தலைமையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு (டி.என்.எஸ்.ஜாக்டோ) சார்பில் பல்வேறு சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களின் கோரிக்கைகளை தமிழக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர்.

    அதே நேரம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முடியாது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப் பட்டது. இதனால் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து டி.என்.எஸ்.இ ஜாக்டோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அ.மாயவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தி.மு.க. எதிர்க் கட்சியாக இருந்தபோது எங்களுக்கு செய்து தருவதாக அளித்த தேர்தல் வாக்குறுதிகளைத் தான் நிறைவேற்றி தர வேண்டுமென வலியுறுத்துகிறோம். இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் நேரடி கவனம் செலுத்த வேண்டும். அரசின் கவனத்தை ஈர்க்கவே போராட்டம் அறிவிக்கப்பட்டது.

    பள்ளிக் கல்வித் துறையுடன் தற்போது நடத்தப் பட்ட பேச்சுவார்த்தையில் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. அதனால் ஏற்கனவே திட்டமிட்டபடி சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் (டி.பி.ஐ) வளாகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை)ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.
    • முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிரபல அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி இளம் பெண்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களின் தகுதிக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளத்தை இந்த தொண்டு நிறுவனமே வழங்கி வந்துள்ளது. ஆனால் இவ்வாறு பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும் இப்படி வாங்கப்பட்ட தொகை, பணம் கொடுத்தவர்களின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான பட்டதாரி பெண்கள் பணம் செலுத்தி குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்களாகி தற்காலிக ஆசிரியைப் பணியை பெற்றுள்ளதாக தெரிகிறது.

    அத்துடன் அவர்கள் வழங்கிய நன்கொடை தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையில் மாத சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இப்படியான மாத சம்பளத்தொகை கடந்த 7 மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனிடையே தற்காலிக ஆசிரியை பணிக்கு சில மாவட்ட கல்வி அதிகாரிகள் திடீர் தடை விதித்து விட்டதாகவும் தெரிகிறது. சம்பள பிரச்சனை, பணி நீக்கம் ஆகிய இந்த காரணங்களால் பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலோற்பவம், வேல்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை.

    இதனிடையே முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது. இதன்படி பாதிக்கப்பட்ட அனைவரும் தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் சென்று அமர்ந்தனர்.

    இது பற்றிய தகவல்கள் பரவியதை தொடர்ந்து மேலும் பல்வேறு இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட 100-க்கும் அதிகமான பெண்கள் இன்று காலையில் வந்து சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு துறை அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    • திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்றதற்கு ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அருகே ராஜன்கட்டளை அரசு உயர்நிலைப்பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவிற்கு பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார்.

    முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அகோரமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.

    பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் தனபால் முன்னிலை வகித்தார்.

    கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றதற்கு பள்ளி ஆசிரியர்கள் அனைவரையும் கவுரவித்தனர்.

    திறனாய்வு தேர்வில் மாவட்ட அளவில் வெற்றிபெற்ற 6 மாணவர்களை பரிசு வழங்கி கவுரவித்தனர்.

    மேலும், கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் மாணவ- மாணவிகள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சர்வதேச மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
    • மாணவர்களின் சிறந்த எதிர் காலத்திற்கு பலமான ஆசிரியர்கள் திகழ வேண்டும்

    நெல்லை:

    நெல்லை வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் ஸ்காட் கல்வி குழும நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்களுக்கு ஊக்கப்படுத்துதல் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்வி குழும நிறுவனர் கிளிட்டஸ் பாபு தலைமை தாங்கினார்.

    தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் மோட்டிவேஷன் அகாடமி சி.இ.ஓ. மற்றும் சர்வதேச மோட்டிவேஷன் பேச்சாளர் ஜெகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'ஆசிரியர் பணியே சிறந்தது' என்ற தலைப்பில் ஊக்கப்படுத்தும் விதமாக பேசினார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மாணவ செல்வங்களை சிற்பிகளாக உருவாக்குவதில் ஆசிரியர்களின் சிறப்பான பங்கை, சாதனை படைத்த ஆசிரியர்களின் வரலாற்றை குறும்படம் மூலம் ஆசிரியர்களுக்கு காட்டினார். சமூகத்தில் மாணவர்களின் சிறந்த எதிர் காலத்திற்கு பலமான அஸ்தி வாரமாக ஆசிரியர்கள் திகழ வேண்டும் என்று தன்னம்பிக்கையூட்டும் கருத்துக்களை வலியுறுத்தினார்.

    நிகழ்ச்சியில் கல்லூரி பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், இயக்குநர்கள் ஜான் கென்னடி, முகமது சாதிக், லூர்தஸ் பூபால்ராயன், பாலாஜி, கல்லூரி முதல்வர்கள் ஜஸ்டின், ஜாஸ்பர் ஞானச்சந்திரன் மற்றும்

    எப்.எக்ஸ்.ஸ்காட் பாலி டெக்னிக், பி.எட். ஐ.டி.ஐ. நிறுவனம் மற்றும் எப்.எக்ஸ். சி.பி.எஸ்.இ. பள்ளி, குட் ஷெப்பர்ட் பள்ளி முதல்வர்கள் பேராசிரி யர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை வளாக மேலாளர் சகாரியா கேப்ரியல் செய்திருந்தார்.

    • ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.
    • கலைத்திருவிழா நடத்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் வட்டார அளவிலான 6 முதல் 10-ம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பணித்திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியினை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் ரவிசங்கர் தொடங்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட அலுவலர் சாந்தி முன்னிலை வகித்தார்.

    இதில் மாணவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் மேம்பாட்டிற்கு பயிற்சி அளித்தல், பள்ளிகளில் நடைபெறும் மன்ற செயல்பாடுகள், அதன் மூலம் அனைத்து வகையான, மாணவர்களின் தனித்திறமையை மேம்படுத்த உதவுதல், கலையரங்கம் என்னும் தலைப்பில் கலைத் திருவிழா நடத்துவதற்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

    60-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சியில் லோகநாதன், நரேஷ் குமார், கீதா, ரத்தினமலர் ஆகியோர் கருத்தாளர்களாக செயல்பட்டனர்.

    • ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான நடத்தை பயிற்சி நடந்தது.
    • 118 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின்அகத்தர மதிப்பீட்டு மையத்தின் சார்பில் கற்பித்தலுக்கான நடத்தை பயிற்சி எனும் பொருண்மையில் ஆசிரியர்களுக்கான தொழில்முறை மேம்பாட்டு பயிற்சித்திட்டம் 5 நாட்கள் நடைபெற்றது. கல்லூரியின் அகத்தர மதிப்பீட்டு மையத் தின் ஒருங்கி ணைப்பாளர் பிரியா வரவேற்புரையாற்றி னார். கல்லூரி செயலர் செல்வராசன் தலைமையுரை ஆற்றினார்.

    இந்த நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பாலமுருகன், துணை முதல்வர் முத்து லட்சுமி ஆகியோர் வாழ்த்தி பேசினர். இந்நிகழ்வின் முதல் நாள் முதல் அமர்வில் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் இணை பேராசிரியர் ஜான்சேகர் கலந்துகொண்டு '21-ம் நூற்றாண்டு ஆசிரியர்' எனும் தலைப்பில் சிறப்பு ரையாற்றினார்.

    இரண்டாம் நாள் அமர்வில் 'வாசித்தாலும் எழுதுதலும்' என்னும் தலைப்பில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் ஓய்வு பெற்ற ஆங்கிலத் துறை பேராசிரியர் சந்திரபோஸ் உரையாற்றி னார். மூன்றாம் நாள் அமர்வில் 'கற்பித்தலின் விளைவு அடிப்படையி லான வினாத்தாள் வடி வமைக்கும் முறை' எனும் தலைப்பில் ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மைத்துறை பேராசிரியர் சோமசுந்தரம் சிறப்புரையாற்றினார்.

    நான்காம் நாள் அமர்வில் மதுரை பாத்திமா கல்லூரியின் ஆங்கி லத்துறை இணைப்பேராசி ரியர் சைராபானு 'மாற் றத்தை கற்றுக்கொடுத்தல்' எனும் தலைப்பில் உரை யாற்றினார். ஐந்தாம் நாள் அமர்வில் 'தன்நிலை உணர்தல்' எனும் தலைப் பில் நெல்லை கள்ளிடைக் குறிச்சி குண்டலினி யோகா பேராசிரியர் கற்பக விநா யகம் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் தமிழ்த்துறை தலைவர் அமுதா நன்றி கூறினார். இந்நிகழ்வில் 118 ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

    • முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை இரவு 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ரங்கசாமியை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் புதுவையை சேர்ந்த 120-க்கும் மேற்பட்ட ஆசிரியர்-ஆசிரியைகள் பணியாற்றி வருகிறார்கள்.

    கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வந்த நிலையில் காரைக்காலில் இருந்து தங்களை புதுவையில் உள்ள அரசு பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இவர்களுக்கு பணியிட மாற்றம் அளிக்கும் வகையில் கடந்த ஆண்டு இறுதியில் புதுவையில் பணியாற்றி வந்த ஆசிரியர்கள் காரைக்காலுக்கு மாற்றப்பட்டனர். ஆனால் அவர்கள் யாரும் அங்கு பணிக்கு செல்லவில்லை. இதனால் காரைக்காலில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆசிரியர்களே கோடை விடுமுறைக்குப் பிறகும் பணியை தொடர வேண்டியது ஏற்பட்டது.

    இந்நிலையில் காரைக்காலில் பணியாற்றி வரும் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாலை பணியை முடித்துக் கொண்டு 2 பஸ்களில் புதுவைக்கு வந்தனர்.

    கோரிமேட்டில் உள்ள முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை இரவு 11 மணியளவில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்தவுடன் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாராசைதன்யா, போலீஸ் சூப்பிரண்டுகள் பக்தவச்சலம், சுவாதி சிங், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த முதலமைச்சர் ரங்கசாமியை ஆசிரியர்கள் நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் குறித்து தெரிவித்தனர். அப்போது அவர், இன்று (சனிக்கிழமை) சட்டசபைக்கு வந்து தன்னை நேரில் சந்திக்க வருமாறும், அதிகாரிகளை வரவழைத்து இந்த பிரச்சினை குறித்து தீர்வு காணலாம் என்றும் ஆசிரியர்களிடம் தெரிவித்தார்.

    இதை ஏற்றுக்கொண்ட ஆசிாியர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். நள்ளிரவில் பணியிட மாறுதல் கோரி ஆசிரியர்கள் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டை முற்றுகையிட்டதன் காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    முன்னதாக புதுவை அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள உதவியாளர் பணி யிடங்களை தேர்வு நடத்தி நிரப்பக்கோரி 100-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு வந்து முதலமைச்சர் ரங்கசாமியை சந்தித்து மனு கொடுத்தனர். 

    • 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
    • ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் அன்றைய தினமே படித்து எழுதி பார்க்க வேண்டும்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு புத்தகப்பை, பாடக் குறிப்பேடு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பு பாலமுருகன் தலைமை தாங்கினார்.

    திருத்துறைப்பூண்டி டவுன் லயன்ஸ் சங்க தலைவர் வேதமணி, ஆசிரியர் சங்க செயலாளர் முகமது ரபீக், ஆசிரியர்கள் பாஸ்கரன், தெய்வ சகாயம், தமிழ்ச்செல்வி, சிவராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக கலையாசிரியர் அன்புமணி அனைவரையும் வரவேற்றார்.

    திருத்துறைப்பூண்டி நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் கலந்துகொண்டு புதிதாக சேர்க்கப்பட்ட 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தகப்பை மற்றும் குறிப்பேடுகள் வழங்கினார்.

    பின்னர் அவர் பேசுகையில்:-

    ஆசிரியர்கள் நடத்தும் பாடங்களை மாணவர்கள் அன்றைய தினமே படித்து எழுதி பார்க்க வேண்டும்.

    அவ்வாறு செய்தால் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட அனைத்து படிப்பிற்கும் கட்டணம் இல்லாமல் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பை உருவாக்கி கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து, 12-ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு ரூ.1000 கல்வி உதவி தொகையும், அன்றைய தினம் பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு சீருடைக்காக ரூ.1000 மற்றும் புத்தகப்பை, பாட குறிப்பேடுகள், எழுது பொருட்கள், புத்தகங்களை வழங்கினார்.

    முடிவில் ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் நன்றி கூறினார்.

    இதில் ஆசிரியர்கள் நடராஜன், விஜயகுமார், பாலசுப்பிரமணியன், ஆடின் மெடோனா பிரபாகரன், உமா மகேஸ்வரி, வெற்றிச்செல்வி, ராஜ்குமார், அறிவழகன், அஜிதா கனி, சுந்தர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சக்கரபாணி செய்திருந்தார்.

    • பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வந்தனர்.
    • திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள்ளது.

    திருப்பூர் :

    கோடை விடுமுறை முடிந்து இன்று1 முதல், 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப்பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், பல்லடம் , உடுமலை உள்பட அனைத்து இடங்களில் 1 முதல் 5-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. குழந்தைகள் அனைவரும் மிகவும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்தனர். குழந்தைகள் என்பதால் பெற்றோர்கள் அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்தனர். 1-ம்வகுப்பு சேர்ந்த சில குழந்தைகள் பள்ளிக்கு செல்ல மறுத்து அழுது அடம்பிடித்தனர். அவர்களை பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைகளுக்கு ஆசிரியர்கள் ரோஜா பூக்கள் கொடுத்து இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் மொத்தம் 447 உள் ளது. இவற்றில் 6முதல், பிளஸ் 2 வகுப்பு வரை ஒரு லட்சத்து, 26 ஆயிரத்து 673 பேர் கல்வி பயில்கின்றனர். பள்ளி திறந்த கடந்த 12ந்தேதி ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 545 பேர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். 6,128 பேர் (5 சதவீதம்) பள்ளிக்கு வரவில்லை. நடப்பு வாரத்துக்குள் இவர்கள் பள்ளிக்கு திரும்ப தேவையான நடவடிக்கைகளை பள்ளி கல்வித்துறை தொடங்கி உள்ளது. திருப்பூரில் அதிகபட்சமாக 1-ம்வகுப்பில் 2,645 மாணவர்கள் அரசு பள்ளியில் இணைந்துள்ளனர். 2-ம் வகுப்பில் 220, 3-ம் வகுப்பில் 238, 4-ம் வகுப்பில் 241, 5-ம் வகுப்பில் 240, 6-ம் வகுப்பில் 532 பேர் இணைந்துள்ளனர். 7 மற்றும் 8-ம் வகுப்பில் முறையே 65 மற்றும் 62 பேர் என மொத்தம், 4,243 பேர் அரசு பள்ளிகளில் இணைந்துள்ளனர்.

    தமிழை முதன்மை பாடமாக தேர்வு செய்து படிக்க 1,351 மாணவர், 1,290 மாணவிகள் என 2,641 பேர் இணைந்துள்ளனர். ஆங்கில மீடியம் படிப்பை 840 மாணவர், 762 மாணவிகள் என 1,602 பேர் தேர்வு செய்துள்ளனர்.

    மாவட்ட கல்வி அலுவலர் அமுதா கூறுகையில், இன்று பள்ளிக்கு வரும் அனைத்து மாணவருக்கும் நோட்டு வழங்கப்படும். ஒரு வாரத்துக்குள் விடு பட்டவர்களுக்கு வழங்க தேவையான புத்தகம் பள்ளிகளில் இருப்பில் உள்ளது. தலைமை ஆசிரியர்களுக்கு இது குறித்து தெரியப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் சீருடை, காலணி உள்ளிட்ட நலத்திட்டங்களும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் என்றார்.

    • 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.
    • பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    திருப்பூர் :

    கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 12-ந் தேதியும் (இன்றும்), 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு 14-ந் தேதியும் (நாளை மறுதினம்) பள்ள–கள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

    கல்வித்துறையின் அறிவிப்பின்படி தமிழகம் முழுவதும் இன்று 6 முதல் பிளஸ்-2 வகுப்புக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளிகளுக்கு மகிழ்ச்சியுடன் உற்சாகமாக வந்தனர். முதல் நாள் என்பதால் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆசீர்வதித்து அனுப்பி வைத்தனர்.

    மேலும் மாணவர்களுக்கு தேவையான புத்தக பை, வாட்டர் பாட்டில், டிபன் பாக்ஸ் உள்பட பள்ளிக்கு கொண்டு செல்வதற்கு தேவையான பொருட்களை பெற்றோர்கள் வாங்கி கொடுத்து அனுப்பி வைத்தனர். பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சில அரசு பள்ளிகளில் இன்றே இலவச பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    2 மாத விடுமுறைக்கு பின் இன்று பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பூங்கொத்து கொடுத்தும் கைகுலுக்கியும் வரவேற்றனர்.

    ஆசிரியர்கள் மாணவ மாணவிகளிடம் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் மனது புண்படும்படி நடந்து கொள்ளக் கூடாது. கல்வியின் அவசியத்தை மாணவ மாணவிகளுக்கு உணர்த்தி அவர்களின் கல்வியை மேம்படுத்த வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட ஆலோசனைகள் பள்ளியின் தலைமை ஆசிரியர் சார்பில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்டத்திற்குட்பட்ட தாராபுரம், உடுமலை, பல்லடம் ,காங்கயம் உள்பட பல்வேறு பகுதிகளிலும் பள்ளிகளுக்கு மாணவர்கள் உற்சாகமாக வந்தனர். விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள் மூட்டை முடிச்சுகளுடன் வந்தனர். அவர்களை பெற்றோர்கள் பள்ளியில் விட்டு விட்டு வீடுகளுக்கு சென்றனர்.

    ×