search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக ஆசிரியைகள் போராட்டம்
    X

    ஆறுமுகநேரியில் தொண்டு நிறுவன அலுவலகத்தை முற்றுகையிட்டு தற்காலிக ஆசிரியைகள் போராட்டம்

    • பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.
    • முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் பிரபல அறக்கட்டளை மற்றும் தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பட்டதாரி இளம் பெண்கள் தற்காலிக ஆசிரியர் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களின் தகுதிக்கேற்ப நிர்ணயிக்கப்பட்ட மாத சம்பளத்தை இந்த தொண்டு நிறுவனமே வழங்கி வந்துள்ளது. ஆனால் இவ்வாறு பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் இருந்து வளர்ச்சி நிதி என்ற பெயரில் நன்கொடை பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    மேலும் இப்படி வாங்கப்பட்ட தொகை, பணம் கொடுத்தவர்களின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு திரும்ப கிடைக்கும் என்று உறுதிமொழி பத்திரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டத்திலும் பிற மாவட்டங்களிலும் நூற்றுக்கணக்கான பட்டதாரி பெண்கள் பணம் செலுத்தி குறிப்பிட்ட தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர்களாகி தற்காலிக ஆசிரியைப் பணியை பெற்றுள்ளதாக தெரிகிறது.

    அத்துடன் அவர்கள் வழங்கிய நன்கொடை தொகையின் அடிப்படையில் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரையில் மாத சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் இப்படியான மாத சம்பளத்தொகை கடந்த 7 மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    இதனிடையே தற்காலிக ஆசிரியை பணிக்கு சில மாவட்ட கல்வி அதிகாரிகள் திடீர் தடை விதித்து விட்டதாகவும் தெரிகிறது. சம்பள பிரச்சனை, பணி நீக்கம் ஆகிய இந்த காரணங்களால் பாதிக்கப்பட்ட பலர் தொண்டு நிறுவனத்தை அணுகிய போது அவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கவில்லை என தெரிகிறது.

    இந்நிலையில் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட தற்காலிக ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆறுமுகநேரியில் உள்ள தொண்டு நிறுவன அலுவலகத்தை நேற்று காலையில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் செந்தில், சப்-இன்ஸ்பெக்டர்கள் அமலோற்பவம், வேல்பாண்டியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்களின் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை.

    இதனிடையே முற்றுகைப் போராட்டம் நேற்று இரவில் உள்ளிருப்பு போராட்டமாக மாறியது. இதன்படி பாதிக்கப்பட்ட அனைவரும் தொண்டு நிறுவனத்தின் அலுவலகத்திற்குள் சென்று அமர்ந்தனர்.

    இது பற்றிய தகவல்கள் பரவியதை தொடர்ந்து மேலும் பல்வேறு இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட 100-க்கும் அதிகமான பெண்கள் இன்று காலையில் வந்து சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு துறை அதிகாரிகள் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு உரிய தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×