search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamilnadu Government"

    தடுப்பணை கட்ட ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். #TNCM #EdappadiPalaniswami
    சேலம்:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கோனேரிப்பட்டியில் கட்டப்பட்டுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

    அம்மாவின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் நம்முடைய சேலம் மாவட்டத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றன. கொங்கணாபுரம், சித்தூர், பனமரத்துப்பட்டி, மல்லியகரை போன்ற 12 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களை மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டு போதிய அளவிற்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். புதியதாக 11 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உருவாக்கப்பட்டு, கட்டப்பட்டு இருக்கின்றன.

    நீர் எவ்வளவு வீணாகி கடலில் கலக்கின்றது என்பதை கணக்கீட்டு, எந்தந்த இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். எந்தந்த நதியின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். எந்த பகுதியில் இருந்து நீர் எடுக்கப்பட்டு, எந்தந்த பகுதிக்கு நீர் விநியோகம் செய்ய முடியும். எந்த ஏரியில் நீர் நிரப்ப முடியும் என்ற ஓர் ஆய்வு பணியை மேற்கொண்டு, அந்த பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

    பருவ மழை காலத்தில் பெய்கின்ற மழைநீர் வீணாக கடலில் போய் கலக்கின்றது. அப்படி பெய்கின்ற மழை நீர் அந்தந்த பகுதிகளில் இருக்கின்ற ஏரிகள், குளங்கள், ஓடைகள் வழியாக நாம் சேமித்து வைக்கின்ற நீர் மூலமாக நிலத்தடி நீர் உயரும்.

    ஆகவே, அப்படிப்பட்ட பணிகளை செய்வதற்காக முதற்கட்டமாக அம்மாவுடைய அரசு நிதி ஒதுக்கி 1519 ஏரிகளை எடுத்து அந்த பணிகள் தொடங்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு 1511 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு அதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகள் தொடங்கப்பட்டு இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கின்றன. அம்மாவுடைய அரசு குடிமாரமத்து என்ற அற்புதமான திட்டத்தை கொடுத்து இன்றைக்கு அந்த திட்டத்தின் வாயிலாக ஏரிகள், குளங்கள், தடுப்பணைகள் மூலமாக நதிகள், ஓடைகள் மூலமாக தண்ணீரை தேக்கி நீரை சேமித்து மக்களுக்கு வழங்குகிற ஆட்சி அம்மாவுடைய ஆட்சி என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

    அதுபோல தடுப்பணைக்காக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 3 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும்.

    ஏரியில், குளங்களில் இருக்கின்ற வண்டல் மண் பல ஆண்டுகளாக அள்ளப்படாமல் இருந்தது. வண்டல் மண் படித்த காரணத்தினாலே நீரின் கொள்ளளவு குறைந்து விட்டது. அந்த நீரின் அளவை அதிகரிக்கவும், அதே நேரத்தில் வண்டல் மண்ணை அள்ளுவதன் மூலமாக விவசாயிகள் தங்களுடைய நிலத்திற்கு உரம் இடுவதற்கு பதிலாக இந்த வண்டல் மண் பயன்படுத்தப்படுகிறது.

    வண்டல் மண் அள்ளுவதால் ஏரிகள் ஆழமாகிறது. இந்த வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்துவதன் மூலமாக இயற்கை உரமாக இது பயன்படுகிறது.


    மேட்டூர் அணை கட்டப்பட்டு 83 ஆண்டு காலமாகிறது. 83 ஆண்டு காலமாக அந்த அணையில் இருந்து தூர்வாரப்படவில்லை. ஆகவே அம்மாவுடைய அரசு மேட்டூர் அணையில் தூர்வாருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தினந்தோறும் 3 ஆயிரம் லாரிகள் மூலமாக நம்முடைய விவசாய பெருமக்கள் வண்டல் மண்ணை எடுத்து தங்களுடைய நிலத்திற்கு பயன்படுத்தினர்.

    இப்படிப்பட்ட சரித்திர சாதனைகளை படைத்துக் கொண்டிருக்கிறோம். இது மக்களுடைய அரசு, விவசாயிகளுடைய அரசு, விவசாயிகளுக்கு தேவையான அத்தனை நண்மைகளையும் செய்யக் கூடிய அரசு. விவசாயிகள், தொழிலாளர்கள் வளம் பெறுவதற்கான அரசு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இந்த பகுதியில் மருத்துவமனை அமைந்திருக்கின்றது. மருத்துவமனை அமைந்த காரணத்தினாலே இங்கு சந்தை அமையாமல் போய் விடும் என்ற தவறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். ஏற்கனவே, இந்த பகுதியில் எப்படி சந்தை கூடியதோ, அதே போல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை கூடுவதற்கான இடத்தை அவர்களுக்கு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். #TNCM #EdappadiPalaniswami
    யானைகள் வழித்தட விவகாரம் தொடர்பாக தனியார் விடுதி உரிமையாளர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. #ElephantCorridor
    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது. இதை எதிர்த்து தனியார் விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

    இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது. அங்கு யானைகள் வழித்தடத்தில் 39 வணிக நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாக மாவட்ட கலெக்டர் கோர்ட்டுக்கு தெரிவித்தார். இதில் 27 விடுதிகள் சார்பில் யாரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

    எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது எனக்கூறிய நீதிபதிகள், அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும் என கடந்த 9-ந்தேதி உத்தரவிட்டனர். மீதமுள்ள 12 விடுதிகளும் அனுமதி பெற்று கட்டப்பட்டதா? என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறினார்கள்.

    இதைத்தொடர்ந்து ‘சீல்’ வைக்க உத்தரவிடப்பட்ட ஒரு விடுதியின் உரிமையாளர் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘தமிழக அரசு குறிப்பிட்டுள்ள யானை வழித்தடத்தில் எங்கள் விடுதி வரவில்லை. வரையறுக்கப்பட்ட எல்லை பகுதிக்கு உள்ளேயும் எங்கள் விடுதி இல்லை. எங்கள் விடுதியின் பெயர் சுப்ரீம் கோர்ட்டில் தவறாக கொடுக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டு உள்ளது.


    சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவில் இருந்து தங்கள் விடுதியின் பெயரை நீக்கம் செய்து வெளியிட வேண்டும் எனவும், தங்கள் விடுதிக்கு ‘சீல்’ வைக்கும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டது.

    இந்த மனு மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வந்தது. இதில் விசாரணை தொடங்கியதும், இந்த மனு மீது தமிழக அரசு 2 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர். #ElephantCorridor
    ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் இரு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால், மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ThoothukudiSterlite #SupremeCourt
    புதுடெல்லி:

    ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினை தொடர்பாக ராமசுப்பு என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு ஒன்றை முன்பு தாக்கல் செய்தார். அந்த மனுவில் ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால் அதை நிரந்தரமாக மூட வேண்டும் என்று கோரி வழக்கு தொடரப்பட்டதாகவும், ஆனால் வழக்கை முறையாக விசாரிக்காமல், ஆலை இயங்க அனுமதி அளித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதி தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் தீர்ப்பு வழங்கியதாகவும், அந்த தீர்ப்பை தள்ளுபடி செய்து ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது.



    மேலும் ஸ்டெர்லைட் ஆலை மூலம் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்காக சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு கடந்த மே மாதம் 15-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய, மாநில அரசுகள் மற்றும் ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தனர்.

    இந்தநிலையில், இந்த மனு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் பதிவாளர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இரு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியதால், மேலும் 4 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.  #ThoothukudiSterlite #SupremeCourt #Tamilnews 
    தலித் கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    தலித் கிறிஸ்தவர் தேசிய பேரவை, தமிழக ஆயர் பேரவை பணிக்குழு, இந்திய திருச்சபைகளின் தேசிய பேரவை, தலித் தரிசன வாரியம் இணைந்து தலித் கிறிஸ்தவர் அரசியல் எழுச்சி மாநாட்டை நடத்தின.

    திருச்சியில் நடைபெற்ற இந்த மாநாட்டில் தலித் கிறிஸ்தவர் தேசிய பேரவை தமிழக தலைவரும், மாநாட்டுத் தலைவருமான மேரிஜான், தேசிய ஆலோசகர் சார்லஸ், தமிழக ஆயர் பேரவை எஸ்.சி., எஸ்.டி. பணிக் குழுத்தலைவர் தாமஸ் பால்சாமி, செயலாளர் குழந்தைநாதன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

    நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணைய பரிந்துரைப்படி தலித் கிறிஸ்தவர்களையும், தலித் இஸ்லாமியர்களையும் மத்திய அரசு தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.

    ஆதி திராவிட கிறிஸ்தவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்.

    தலித் கிறிஸ்தவர்களுக்கு உரிமைகளை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்காத அரசியல் கட்சிகளை தேர்தலில் புறக்கணிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. #tamilnews
    டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகள் விவரம் குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். #Mutharasan
    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் காவிரி நீர் வராத கடைமடை பகுதிகளான பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி ஆகியவற்றை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பார்வையிட்டார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் 2016-17-ம் ஆண்டில் ரூ.100 கோடிக்கும், 2017-18-ம் ஆண்டில் ரூ.300 கோடிக்கும் குடிமராமத்து பணிகள் மேற்கொண்டதாகவும், இதன்மூலம் 3 ஆயிரத்து 854 குளங்கள், ஏரிகள் தூர்வாரப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

    இதேபோல் நீர்வள, நிலவள திட்டத்தின் கீழ் உலக வங்கியில் கடனுதவி ரூ.3 ஆயிரத்து 8 கோடி, பருவ நிலை மாற்ற திட்டத்தின் கீழ் ரூ.215 கோடி, அணைகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் 360 கோடி செலவில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரச தெரிவித்துள்ளது.

    ஆனால் டெல்டா மாவட்டங்களில் எந்த ஆற்றிலும், வாய்க்கால்களிலும் தூர்வாரும் பணிகள் நடக்கவில்லை. அதனால் தான் கடைமடை வரை எந்த ஒரு வாய்க்காலிலும் தண்ணீர் வந்து சேரவில்லை.

    மேட்டூர் அணை திறக்கப்பட்டு ஒரு மாதத்துக்கு மேலாகியும் தண்ணீர் வந்து சேராததால் 24-ந் தேதி (நாளை) பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ. அலுவலகம் முன்பு காத்திருப்பு பேராட்டமும், 28-ந் தேதி பேராவூரணியில் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டமும் நடத்தப்பட உள்ளது. தூர்வார ஒதுக்கப்பட்ட நிதியில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளது. அந்த நிதி அனைத்தும் சூறையாடப்பட்டுள்ளது.

    இந்த முறைகேடுகள் குறித்து பொது விசாரணை நடத்தப்பட வேண்டும். தமிழக அரசு இதுபற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

    இனியாவது போர்க்கால அடிப்படையில் கரைகளை பலப்படுத்தி, தூர்வாரி டெல்டா மாவட்டங்களில் கடைமடை வரை தண்ணீர் சென்றடைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் முதல்- அமைச்சர், துணை முதல்- அமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று விட்டதாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

    இவ்வாறு அவர் கூறினார். #Mutharasan #DeltaDistrict
    காவிரி கால்வாய்களை தமிழக அரசு தூர்வாராததால் காரைக்காலுக்கு தண்ணீர் வரவில்லை என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். #PuducherryCM #Narayanasamy #TamilNadu
    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலம் காரைக்கால் பிராந்தியத்தில் திருமலைராஜன் ஆறு, நூலாறு, அரசலாறு, நாட்டாறு, முல்லையாறு, பிரவிடையான் ஆறு, வாஞ்சி ஆறு ஆகிய காவிரி கிளை ஆறுகள் பாய்கின்றன.

    இவற்றில் திருமாலை ராஜன், அரசலாறு ஆகியவற்றில் மட்டுமே தண்ணீர் வருகிறது. மற்ற ஆறுகளில் தண்ணீர் வரவில்லை.

    தமிழக எல்லைப் பகுதியான காவிரி கடைமடைப் பகுதியில் அந்த மாநில அரசால் கால்வாய்கள் தூர்வாரப்படாமல் இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம்.


    எனவே காவிரி கடைமடைப்பகுதியில் உள்ள கருவேல மரங்களை வெட்டி ஆறுகளை தூர்வார வலியுறுத்தி தமிழக முதல்- அமைச்சருக்கு கடிதம் எழுத முடிவு செய்துள்ளேன்.

    காரைக்கால் பகுதி ஆறுகளில் ரூ.60 லட்சத்தில் தூர் வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும். காரைக்கால் பகுதியில் சம்பா சாகுபடிப் பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.

    புதுவை அரசு வசம் 100 டன் விதைகள் தயார் நிலையில் உள்ளது. அதுபோல 150 டன் உரங்களும், பாட்கோ, பஜன்கோ நிறுவனங்களில் தயார் நிலையில் உள்ளன.

    எனவே, புதுவை விவசாயிகள் விதைகள், உரங்களுக்காக தமிழகத்துக்குச் செல்ல வேண்டிய நிலை இந்த ஆண்டு இருக்காது. உரத்தை மானிய விலையில் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    அது போல வேளாண் சாகுபடிக்குத் தேவையான பூச்சி மருந்துகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படும்.

    இவ்வாறு நாராயணசாமி கூறினார். #PuducherryCM #Narayanasamy #TamilNadu
    கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்காக தெற்கு ரெயில்வே மூலம் குடிநீர் வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. #KeralaRain
    சென்னை:

    கேரளாவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளனர். குடிக்க தண்ணீர் கூட கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள்.

    கேரள மக்களுக்கு உதவ தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தெற்கு ரெயில்வே மூலம் குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    இதற்காக பல்வேறு டிவிசன்களில் தண்டவாளங்களை ஏற்றிச் செல்லக்கூடிய காலி வேகன்களை தயார் செய்து சிண்டக்ஸ் தொட்டி மூலம் குடிநீர் அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    நேற்று ஈரோட்டில் இருந்து 7 வேகன்களில் 38 குடிநீர் தொட்டிகளில் திருவனந்தபுரத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. செங்கல்பட்டு, தண்டையார்பேட்டை ஆகிய பகுதிகளில் இருந்தும் குடிநீர் கொண்டு செல்லப்பட்டன.

    இது தவிர 15 ஆயிரம் பெட்டிகளில் குடிநீர் பாட்டில்களும் அனுப்பப்பட்டுள்ளது. 3 ரெயில்களில் குடிநீர் கொண்டு சென்றால் தொடர்ச்சியாக இந்த பணி நடைபெறும் என்று அதிகாரிகள் கருதுவதால் ரெயில்வே பொருட்களை எடுத்து செல்லக்கூடிய வேகன்களை ஒன்று சேர்த்து இன்னும் அதிகளவு குடிநீரை கொண்டு செல்ல தெற்கு ரெயில்வே அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

    15 ரேக்குகளில் 80-க்கும் மேலான குடிநீர் தொட்டிகளை எடுத்து செல்வதன் மூலம் கேரள மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க முடியும். இன்று அல்லது நாளை மீண்டும் குடிநீர் ஏற்றிக் கொண்டு திருவனந்தபுரத்திற்கு ரெயில் செல்ல தயாராகிக் கொண்டிருக்கிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறுகையில், கேரளாவில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் கஷ்டப்படுகிறார்கள். ஆதலால் தமிழகத்தில் இருந்து ரெயில் மூலம் அதிகபட்சமாக எவ்வளவு தண்ணீர் கொண்டு செல்ல முடியுமோ அந்த அளவிற்கு எடுத்து செல்ல வேகன்கள் சேகரிக்கப்படுகிறது.

    ஈரோட்டில் இருந்து தண்ணீர் எடுத்து செல்ல தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. திருவனந்தபுரம் வரை குடிநீர் கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து தேவைப்படும் பகுதிகளுக்கு வாகனங்கள் மூலம் எடுத்து செல்லப்படும் என்றனர். #KeralaRain
    ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசு அனுமதி வழங்க மறுத்துவிட்டதாக, தமிழக அரசு தரப்பில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. #RajivGandhiKillers
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்த 3 பேரின் கருணை மனுக்கள் மீது முடிவு எடுக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி கடந்த 2014-ம் ஆண்டு தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் இந்த 3 பேரையும் விடுதலை செய்வது குறித்து உரிய அரசு முடிவு எடுக்கலாம் என்றும் கூறியது.

    இதைத்தொடர்ந்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மட்டுமின்றி இந்த வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்போவதாக தமிழக அரசு அறிவித்தது.

    தமிழக அரசின் இந்த முடிவை எதிர்த்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசு சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சுப்ரீம் கோர்ட்டு 7 பேரையும் விடுதலை செய்ய இடைக்காலதடை விதித்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே, தாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளதால் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் தமிழக அரசுக்கு மனு அளித்தனர்.

    இதனையடுத்து, அவர்களது கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு, அவர்கள் அனைவரும் 24 ஆண்டுகளாக சிறையில் உள்ள காரணத்தால், அவர்களை விடுதலை செய்ய முடிவு செய்திருப்பதாகவும், எனவே இதற்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்றும் கோரி மத்திய அரசுக்கு கடந்த 2016-ம் ஆண்டு கடிதம் எழுதியது.

    இந்த நிலையில் தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மறுஆய்வு மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் 23-ந் தேதி விசாரணைக்கு வந்த போது, 7 பேரையும் விடுவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்தை 3 மாதங்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் 16-ந் தேதி இவர்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்து ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை மத்திய அரசு வெளியிட்டது. அந்த உத்தரவில், ராஜீவ் காந்தி கொலையில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட சில வெளிநாட்டு அமைப்புக்களுக்கும் தொடர்பு உள்ளதாக தெரியவந்துள்ளதால் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு விடுத்துள்ள கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்காது என்று கூறப்பட்டு இருந்தது.


    இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், நவீன் சின்கா, கே.என்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் ராகேஷ் திவிவேதி ஆஜராகி, இந்த வழக்கில் தொடர்புடையவர்களை விடுதலை செய்ய அனுமதி கோரி அனுப்பப்பட்ட மனுவை மத்திய அரசு கடந்த ஏப்ரல் 16-ந் தேதி பரிசீலிக்க மறுத்து அரசாணை வெளியிட்டிருப்பதாக கூறி, அந்த ஆணையின் நகலை கோர்ட்டில் தாக்கல் செய்தார். அத்துடன் மத்திய அரசு மறுப்பு தெரிவித்து உள்ளதால் இந்த வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

    மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், மத்திய அரசு ஏற்கனவே தமிழக அரசின் கோரிக்கையை ஏற்க மறுத்து அரசாணை வெளியிட்டு இருப்பதால் இந்த வழக்கை முடித்து வைக்கலாம் என்று கூறினார்.

    முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் கோபால் சங்கரநாராயணன், பிரபு ராமசுப்பிரமணியன் ஆகியோரும் தங்கள் வாதத்தின் போது, மத்திய அரசு 7 பேர் விடுதலைக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்து அரசாணை வெளியிட்டுள்ளதால் தற்போது நிலுவையில் உள்ள வழக்கை முடித்து வைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.

    இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர். #RajivGandhiKillers
    செய்யாறு ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க சூரியசக்தி மூலம் இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா? என்று தமிழக அரசிடம் ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #ChennaiHighCourt #TNGovernment
    சென்னை:

    ஐகோர்ட்டில் ஏ.சவுந்தரராஜன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘திருவண்ணாமலை மாவட்டம் விண்ணமங்கலம், கங்காபுரம் உள்ளிட்ட கிராமங்களில் செய்யாறு ஆற்றில் சட்டவிரோதமாக பலர் மணல் அள்ளுகின்றனர். எனவே, மணல் கொள்ளையை தடுக்க இங்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் அதிகாரிகளை ஈடுபடுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்படும் இடத்தில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த கிராமங்களில் ஜூலை 22-ந்தேதி சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டபோது எடுத்த புகைப்படங்களையும் ஐகோர்ட்டில் சமர்பித்தார்.

    இந்த வழக்கை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மனுதாரர் புகைப்படத்தை எப்போது எடுத்தார் என்பது தெரியவில்லை. அவர் கூறும் இடங்களில் அதிகாரிகள் அடிக்கடி சோதனை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளனர். 2017-18-ம் ஆண்டுகளில் ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ள பயன்படுத்தப்பட்ட 783 லாரிகள், 1,426 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.2 கோடியே 15 லட்சத்து 44 ஆயிரத்து 405 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.



    மேலும் அவர், ‘2016-17-ம் ஆண்டுகளில் 120 லாரிகள், 60 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.56 லட்சத்து 84 ஆயிரத்து 330 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மணல் கொள்ளையர்கள் மீது 215 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆரணி, சேத்துப்பட்டு தாசில்தார்கள் இரவு-பகலாக அங்கு திடீர் சோதனையில் ஈடுபடுகின்றனர்’ என்றும் கூறினார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘அரசு தரப்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்த விளக்கத்தை பார்க்கும்போது, மனுதாரர் கூறும் இடங்களில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுகிறது என்று தெரிகிறது. எனவே, இந்த பகுதியில் சூரியசக்தியை கொண்டு இயங்கும் கண்காணிப்பு கேமரா பொருத்த முடியுமா? என்பது குறித்து அக்டோபர் 1-ந்தேதிக்குள் தமிழக அரசு விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #ChennaiHighCourt #TNGovernment
    ஜி.எஸ்.டி. குறைப்பை தொடர்ந்து பொட்டல பொருட்களை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது. #TNGovernment
    சென்னை:

    ஜி.எஸ்.டி. குறைப்பை தொடர்ந்து பொட்டல பொருட்களை விலை குறைத்து விற்பனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    21.7.2018 அன்று ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. அதில், முடிவு செய்யப்பட்டபடி, 27.7.2018 முதல் பெயிண்ட், வார்னிஷ், குளிர்சாதன பெட்டி, வாசிங்மிஷின், தொலைக்காட்சி பெட்டி, கிரைண்டர், மிக்ஸி, வாசனை திரவியங்கள் உள்ளிட்ட சில இனங்களுக்கு ஜி.எஸ்.டி விகிதத்தை 28, 18, 12, 5 சதவீதத்தில் இருந்து வரியைக் குறைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஜி.எஸ்.டி. குறைப்பு காரணமாக குறைக்கப்பட்ட வரி விகிதத்தின் பயனை நுகர்வோர் பெறும் வகையில், மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்பு துறை (சட்டமுறை எடையளவு பிரிவு) அறிவுரை வழங்கியது.

    அதன்படி, பொட்டல பொருட்களில் ஜி.எஸ்.டி குறைப்பு காரணமாக குறைக்கப்பட வேண்டிய தொகையை பொட்டல பொருட்களில் தனியாக ஸ்டிக்கர் ஒட்டியும், முத்திரை அல்லது ஆன்லைன் பிரிண்டிங் மூலமாக அறிவிப்பு செய்ய வேண்டும். மேலும், ஏற்கனவே உள்ள அதிகபட்ச சில்லரை விற்பனை விலை அருகிலேயே புதிய ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்ய வேண்டும் என்று உற்பத்தியாளர், பொட்டலமிடுபவர்கள், இறக்குமதி செய்து பொட்டலமிடுபவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



    ஜி.எஸ்.டி குறைப்பு காரணமாக குறைக்கப்பட்ட விலையில் ஸ்டிக்கர் ஒட்டி விற்பனை செய்யும் அனுமதி, இருப்பில் உள்ள விற்கப்படாத உற்பத்தி செய்யப்பட்ட அல்லது பொட்டலமிடப்பட்ட அல்லது இறக்குமதி செய்து பொட்டலமிடப்பட்ட இனங்களுக்கும் பொருந்தும். இந்த பொருட்களை 31.12.2018 வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

    மேலும், ஏற்கனவே எம்.ஆர்.பி. குறித்து ஒட்டப்பட்ட ஸ்டிக்கரில் திருத்தம் செய்யவோ, அடிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது என்ற விவரம் தெரிவிக்கப்பட வேண்டும். ஜி.எஸ்.டி குறைப்பு காரணமாக நுகர்வோர் பயனடையும் வகையில் பொட்டல பொருட்களில் குறைக்கப்பட்ட விலையை அறிவிப்பு செய்யாத தயாரிப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    ஜி.எஸ்.டி குறைப்பினால் பொட்டல பொருட்களின் மீது குறைக்கப்பட்ட எம்.ஆர்.பி. விலையில் விற்பனை செய்யாதது தொடர்பாக புகார்கள் ஏதுவும் இருந்தால் நுகர்வோர்கள் TN - LM-C-TS என்ற கைபேசி செயலியை (ஆப்) பதிவிறக்கம் செய்து அதன் மூலமாகவோ அல்லது செல்போன் எண் 9445398770 மூலமோ தங்கள் புகார்களைத் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNGovernment
    காவிரியில் கழிவுகள் கலப்பதை தடை செய்யக்கோரும் தமிழக அரசின் வழக்கில், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத் துக்கு ஒத்திவைத்தது. #TNGovernment #SupremeCourt #Cauverywater
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரிக்கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூரு மாநகரத்தின் 80 சதவீத கழிவுகளும், கழிவுநீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகத்தில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. இதனால் காவிரி கரையோரங்களில் வாழ்கிற மக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாசு கலந்த ஆற்றுநீரில் வாழ்கிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரிக்கரையில் அமைந்து உள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல், சுத்திகரித்து மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்; காவிரியில் கழிவுகளை விடுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஒரு வழக்கு தாக்கல் செய்து உள்ளது.

    இந்த வழக்கை ஏற்கனவே ஏப்ரல் 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு கர்நாடக பகுதியின் நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் தரத்தை மே மாதம் வரை முறையாக ஆய்வு செய்து ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

    அதன்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு ஆய்வு செய்து, அந்த அறிக்கை கடந்த 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.



    அதில், “காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் எதுவும் கலப்பது இல்லை; கர்நாடக பகுதியில் ஓடும் நதியில் எங்கும் கழிவுநீர் கலக்கப்படவில்லை; காவிரி நீர் செல்லும் வழியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது; தென் பெண்ணையாறு, அக்ராவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் மாசு அடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் நுழைகின்றன” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கையின் மீது தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதையடுத்து கடந்த 27-ந்தேதியன்று தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையின் மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய ஒருவாரம் அவகாசம் கோரி கர்நாடக அரசு ஒரு மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவை ஏற்று, வழக்கின் மீதான விசாரணையை ஒருவாரம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TNGovernment #SupremeCourt #Cauverywater
    தமிழக அரசின் கோரிக்கை படி ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு குறைத்து வருவதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். #TNMinister #OSManian #GST
    கோவை:

    தமிழக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் இன்று கோவை வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது-

    கே- கருணாநிதி உடல் நலம் குன்றி இருப்பதால் உள்ளாட்சி தேர்தலில் அனுதாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என கூறப்படுகிறதே?

    ப-கருணாநிதியை பொறுத்தவரை 100 ஆண்டுகள் வாழும் தலைவர். அவர் 50 ஆண்டு காலம் அரசியல் தலைவராக இருந்துள்ளார். பல முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளார்.

    அவர் உடல் நலம் குன்றி இருப்பதற்கும் அரசியலுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. அவரவர் கட்சிக்கும் அவரவர் கொள்கை உள்ளது. மக்கள் அதனை தான் பார்ப்பார்கள்.

    கே-கோவையில் விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார்களே?

    ப- துறை சார்ந்த பூங்கா எதுவாக இருந்தாலும் அதனை அமைக்க யாரும் போராட வேண்டி அவசியம் இல்லை. மத்திய அரசும், மாநில அரசும் பூங்கா அமைக்க தயார். தேவைக்கு ஏற்ப பூங்கா அமைக்க தொழில் முனைவோர்கள் முன் வந்தால் விதிகளை பின்பற்றி பூங்கா அமைக்க நாங்கள் தயார்.

    மத்திய அரசு 40 சதவீதம் அல்லது 40 கோடி இதில் எது குறைவோ அதனை அளிக்க தயாராக உள்ளது. மாநில அரசு 9 சதவீதம் அல்லது 9 கோடி இதில் எது குறைவோ அதனை கொடுக்க தயாராக உள்ளது.

    தொழில் முனைவோர்கள் 50 சதவீதம் நிதி அல்லது வங்கியில் கடன் பெற்று தந்தால் எந்தவொரு பூங்காவையும் எந்த இடத்திலும் அமைத்து தர அரசு தயாராக உள்ளது.

    கே- விசைத்தறி உரிமையாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள் இடையே கூலி நிர்ணயம் தொடர்பாக பிரச்சனை உள்ளதே?

    ப- இது தொடர்பாக அந்தந்த மாவட்ட கலெக்டர்கள், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் அழைத்து பேசி சமாதான முடிவு ஏற்படுத்தி தருகிறார்கள். இது தான் நடைமுறையில் உள்ளது.

    இந்த பேச்சு வார்த்தையில் தாமதம் ஆனாலோ அல்லது கருத்தொற்றுமை ஏற்படாமல் போனாலோ அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

    விசைத்தறி நெசவாளர்களுக்கு எதிர்பாராத அளவு பல்வேறு உதவிகள், நன்மைகளை அரசு கொண்டு வந்துள்ளது.

    பல ஆண்டு பழமை மாறாமல் புதுமைகளை புகுத்தி இளைஞர்களிடம் வரவேற்பு பெரும் நிலையில் உற்பத்தியை இந்த அரசு செய்து வருகிறது.

    தமிழ்நாடு டெக்ஸ் 2019 என்ற வகையில் உலக வர்த்தக நெருக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ரூ. 2 கோடி நிதி ஒதுக்கி மிகப்பெரிய கண்காட்சி நடத்தப்பட உள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் நுகர்வோர்கள் அதிகம் உள்ளனர். ஜி.எஸ்.டி வரியை பொறுத்தவரை எந்தெந்த பொருட்களுக்கு குறைக்க வேண்டும். எந்தெந்த பொருட்களுக்கு நீக்க வேண்டும் என ஓங்கி குரல் கொடுக்கும் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது.

    தமிழகம் வைக்கும் கோரிக்கை படி மத்திய அரசு குறைத்து வருகிறது. கைத்தறி உற்பத்தியை பொறுத்தவரை 5 சதவீதம் வரி உள்ளது. அதனை நீக்க வேண்டும் என கோரிக்கை உள்ளது. இது நிறைவேறும் என நம்புகிறோம்.

    தமிழக முதல்-அமைச்சர் சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவித்த படி கோவை கொடிசியாவில் பன்னாட்டு ஜவுளி கண்காட்சி நடைபெற உள்ளது. இந்தியாவில் ஒரு மாநிலத்தில் உலக அளவிலான ஜவுளி கண்காட்சி நடத்துவது இதுவே முதல் முறையாகும். வருகிற பிப்ரவரி மாதம் கடைசி வாரத்தில் இந்த கண்காட்சி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஏற்றுமதியாளர்களின் கருத்துக்களை கேட்க கோவையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த கண்காட்சியில் நுகர்வோர் உள்பட பல்வேறு உலக நாட்டினர் பங்கேற்க உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எம்.எல்.ஏ.க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், ஓ.கே. சின்னராஜ் ஆகியோர் உடன் இருந்தனர். #TNMinister #OSManian #GST
    ×