search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காவிரியில் கழிவுகள் கலப்பது தொடர்பான தமிழக அரசின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
    X

    காவிரியில் கழிவுகள் கலப்பது தொடர்பான தமிழக அரசின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

    காவிரியில் கழிவுகள் கலப்பதை தடை செய்யக்கோரும் தமிழக அரசின் வழக்கில், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத் துக்கு ஒத்திவைத்தது. #TNGovernment #SupremeCourt #Cauverywater
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரிக்கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூரு மாநகரத்தின் 80 சதவீத கழிவுகளும், கழிவுநீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகத்தில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. இதனால் காவிரி கரையோரங்களில் வாழ்கிற மக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாசு கலந்த ஆற்றுநீரில் வாழ்கிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரிக்கரையில் அமைந்து உள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல், சுத்திகரித்து மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்; காவிரியில் கழிவுகளை விடுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஒரு வழக்கு தாக்கல் செய்து உள்ளது.

    இந்த வழக்கை ஏற்கனவே ஏப்ரல் 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு கர்நாடக பகுதியின் நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் தரத்தை மே மாதம் வரை முறையாக ஆய்வு செய்து ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

    அதன்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு ஆய்வு செய்து, அந்த அறிக்கை கடந்த 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.



    அதில், “காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் எதுவும் கலப்பது இல்லை; கர்நாடக பகுதியில் ஓடும் நதியில் எங்கும் கழிவுநீர் கலக்கப்படவில்லை; காவிரி நீர் செல்லும் வழியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது; தென் பெண்ணையாறு, அக்ராவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் மாசு அடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் நுழைகின்றன” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கையின் மீது தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதையடுத்து கடந்த 27-ந்தேதியன்று தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையின் மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய ஒருவாரம் அவகாசம் கோரி கர்நாடக அரசு ஒரு மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவை ஏற்று, வழக்கின் மீதான விசாரணையை ஒருவாரம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TNGovernment #SupremeCourt #Cauverywater
    Next Story
    ×