search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite Protest"

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குறித்து வாட்ஸ்அப்பில் இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.#ThoothukudiShooting #SterliteProtest
    அரியலூர்:

    அரியலூர் ஆயுதப்படை போலீஸ் பிரிவில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருபவர் பால்பாண்டி. இவர் சமீபத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த பொதுமக்கள் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேர் குறித்து இழிவான தகவல்களை பரப்பியுள்ளார்.

    மேலும் துப்பாக்கி சூடு நடத்திய போலீசாரின் செயல்பாட்டை நியாயப்படுத்தியும் கருத்து வெளியிட்டு உள்ளார். வாட்ஸ்அப் மூலம் பரப்பிய இந்த தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்துள்ளது.

    இதுகுறித்து அறிந்த அரியலூர் நகர வக்கீல் சங்க தலைவர் மாரிமுத்து, துப்பாக்கி சூடு குறித்து இழிவான தகவல் பரப்பிய போலீஸ்காரர் பால்பாண்டி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி அரியலூர் போலீசில் புகார் மனு அளித்தார்.

    ஆனால் இதில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அரியலூர் ஜூடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு அளிக்கப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதி மகாலெட்சுமி, வாட்ஸ் அப்பில் தவறான தகவல் பரப்பிய ஆயுதப்படை போலீஸ்காரர் பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    அதன்பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், சப்-இன்ஸ் பெக்டர் சுபா ஆகியோர், பால்பாண்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விரைவில் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #ThoothukudiShooting #SterliteProtest
    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார். #ThoothukudiShooting #Kanimozhi
    புதுடெல்லி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு தமிழக உளவுத்துறையின் தோல்விக்கு உதாரணம் என்றும், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக டி.ஜி.பி., உளவுத்துறை ஐ.ஜி. ஆகியோரிடம் விசாரணை நடத்த வேண்டும் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகார் மனு கொடுத்துள்ளார்.

    டெல்லியில் உள்ள தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவருக்கு, தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக அமைதியான முறையில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் 100-வது நாளான கடந்த மே 22-ந்தேதி ஊர்வலம் சென்ற பொதுமக்கள் மீது, போலீசார் நடத்திய கண் மூடித்தனமாக துப்பாக்கி சூட்டில் 13 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    தூத்துக்குடி போராட்டம் குறித்து தகவலை சேகரிக்க முடியாததாலும், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததாலும், 13 அப்பாவிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தியிடம் விசாரணை நடத்தவேண்டும்.

    மே 22-ந்தேதி மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற போவதை தெரிந்து இருந்தும், மாவட்ட நிர்வாகம் 144 தடை உத்தரவை ஏனோ தானோ என்று போக்கில் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவை தீவிரமாக செயல்படுத்தவில்லை. இதுகுறித்தும் விசாரிக்கவேண்டும்.

    போலீசாரை போராட்டக்காரர்கள் கொடூரமாக தாக்கி, கொலை செய்ய முயன்றதால், போலீஸ்காரர்களின் உயிரை காப்பாற்ற வேறு வழியின்றி துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று ஐகோர்ட்டில் தமிழக டி.ஜி.பி. பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

    ஆனால், இந்த கலவரத்தில் ஒரே ஒரு போலீஸ்காரர்தான் காயம் அடைந்து, தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வேறு எந்த ஒரு போலீசாரும் கொடூர காயம் அடையவில்லை. போலீசாரின் சட்டவிரோத செயலை நியாயப்படுத்தும் விதமாக டி.ஜி.பி. இவ்வாறு கூறியுள்ளார். இதுகுறித்தும் விசாரிக்க வேண்டும்.



    தூத்துக்குடியில் போராட்டத்தின்போது, 9 சிறப்பு தாசில்தாரர்கள், துணை தாசில்தாரர்கள் ஆகியோருக்கு பணி ஒதுக்கீடு செய்து, சப்-கலெக்டர் கடந்த மே 21-ந்தேதி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், எந்த தாசில்தார் எந்த இடத்தில் பணி செய்யவேண்டும் என்று தெளிவாக கூறியுள்ளார்.

    துணைதாசில்தார் சேகர், திரேஸ்புரம், பனிமய மாதா தேவாலயம் உள்ளிட்ட இடங்களில் பணி செய்தார். சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதால், அவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்டதாக அவர் புகாரில் கூறியுள்ளார்.

    அதேபோல, மாத்தூரில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பணியில் இருந்த மண்டல துணை தாசில்தார் கண்ணன், 11 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திரேஸ்புரம் சந்திப்பில் துப்பாக்கி சூடு நடத்தவும், எஸ்.ஏ.வி. மைதானத்தில் பணியில் இருந்த மண்டல வரித்துறை அதிகாரி சந்திரன், அண்ணாநகர் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்ட விரோதமாக நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்த அதிகாரிகள் முயற்சிப்பது தெளிவாக தெரிகிறது.

    மே 22-ந்தேதி நடந்த கலவரத்தின்போது, நெல்லை சரக டி.ஐ.ஜி. கபில்குமார் மட்டுமே சம்பவ இடத்தில் இருந்துள்ளார். டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரனிடம் வாய்மொழியாக பெற்ற உத்தரவின் அடிப்படையில், துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளார். ஆனால், இந்த விவரத்தை எந்த ஒரு இடத்திலும் அதிகாரிகள் பதிவு செய்யவில்லை. எனவே, மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை குழு விசாரிக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கனிமொழி கூறியுள்ளார். #ThoothukudiShooting #Kanimozhi
    மக்கள் போராட்டத்துக்கு தமிழக அரசு தீர்வு காண்பதில்லை, சொத்து சேர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள் என்று கனிமொழி எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். #kanimozhi #tngovernment #sterliteprotest

    ஆலந்தூர்:

    தி.மு.க. எம்.பி. கனிமொழி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு அரசாங்கத்தில் முதல்- அமைச்சர், அமைச்சர்கள் எல்லோருக்குமே கூட்டுப் பொறுப்பு உண்டு. ஜாக்டோ- ஜியோ அமைப்பின் போராட்டம் தொடர்பாக செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பியதற்கு முதல்-அமைச்சர் பதில் சொல்வார் என்று அவர் கூறி தனது பொறுப்பை தட்டிக் கழித்து இருக்கிறார்.

    இந்த அரசு என்ன நினைக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. போராட்டம் நடத்துபவர்களை அழைத்து இந்த அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்துவதே கிடையாது. இதுவரை நடந்த போராட்டங்களுக்கு எந்த தீர்வும் கண்டதில்லை.


    போக்குவரத்துகழக ஊழியர்கள் பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினை எதற்கும் சரியான தீர்வு கண்டதில்லை. இந்த அரசின் செயல் கேலி கூத்தாக இருக்கிறது. இந்த அரசு நல்லது செய்யும் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு.

    எத்தனை நாளைக்கு டெல்லிக்கு காவடி தூக்கி இந்த அரசாங்கத்தை தொடர முடியும். மக்களை சுரண்டி பணம், சொத்து சேர்ப்பதில் தான் கவனமாக இருக்கிறார்கள். நிர்வாகத்தில் இந்த அரசுக்கு அக்கறை கிடையாது.

    முதல்வர் உள்பட அரசில் உள்ள அனைவர் மீதும் குற்றச்சாட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கூறினார். #kanimozhi #tngovernment #sterliteprotest

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை விரிவாக்கம் செய்வதற்காக கடந்த 2016-ம் ஆண்டு வழங்கப்பட்ட அனுமதியை தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று திரும்பப் பெற்றுள்ளது. #SterliteProtest #Thoothukudi
    சென்னை:

    தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி போராடியவர்கள் மீது கடந்த மாதம் 22-ம் தேதி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர். தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்தது.

    இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு வழங்கிய அனுமதியை திரும்பப் பெறுவதாக தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே, ஆலை விரிவாக்கத்துக்கு ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22-ந் தேதி நடந்த போராட்டத்தில் கலவரம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் 243 வழக்குகள் பதிவு செய்து 197 பேரை கைது செய்தனர். இதில் 173 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. தூத்துக்குடியில் அமைதியான சூழல் திரும்பி உள்ளது. இதைத்தொடர்ந்து வழக்குகளில் தொடர்புடையவர்களை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இதற்காக 5 தனிப்படைகள் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ளன.

    கடந்த 22, 23-ந் தேதிகளில் நடந்த கலவர காட்சிகள் தொடர்பான வீடியோ பதிவுகள், புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. சுமார் 500 புகைப்படங்கள், தூத்துக்குடி ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகைப்படங்களில் உள்ளவர்களை அடையாளம் காண்பதற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே தனிப்பிரிவு போலீசாக பணிபுரிந்து அனுபவம் மிக்கவர்களை அழைத்து வந்து புகைப்படங்களை காண்பித்து வருகின்றனர்.

    இதன்மூலம் ஏராளமானவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டு உள்ளனர். இதில் அடையாளம் கண்டறியப்பட்டவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு தனிப்படையினர் நேற்று அதிகாலை முதல் கைது நடவடிக்கைகளில் இறங்கினர்.

    அதன்படி போராட்டங்களை முன்னின்று நடத்திய 9 பேரை பிடித்து போலீஸ் அதிகாரிகள் நேரடி விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோன்று மதுரையை சேர்ந்த மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 3 பேரையும் போலீசார் பிடித்து வந்துள்ளனர்.

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாலும், மேலும் சிலரை கைது செய்ய தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருவதாலும் தூத்துக்குடியில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். #Thoothukudi $SterliteProtest #Arrest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி கடந்த மாதம் 22ம் தேதி போராட்டக்காரர்கள் நடத்திய பேரணியில் மோதல் ஏற்பட்டது. கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவங்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டதால் அவர்களை ஒடுக்க போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர்.

    இதில் 13 பேர் பலியானார்கள். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். துப்பாக்கி சூடு மற்றும் கலவர சம்பவங்கள் தொடர்பாக இதுவரை 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை அனைத்தும் சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டன. ஒவ்வொரு வழக்கிற்கும் தனித்தனியாக அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், தூத்துக்குடி போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த விவகாரம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த 6 பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.

    பாளையங்கோட்டை சிறையில் உள்ள மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த கலீல் ரகுமான், முகமது யூனுஸ், முகமது இஷ்ரப், வேல்முருகன், சரவணன் மற்றும் சோட்டையன் ஆகிய 6 பேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் போலீசார் இன்று கைது செய்தனர். #Thoothukudi $SterliteProtest #Arrest
    தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதை விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். #Rajinikanth #Vijay
    ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட பேரணியாக புறப்பட்டு சென்றனர். அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

    இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை கொண்ட ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது. இதையடுத்து நீதிபதி அருணா ஜெகதீசன் நேற்று தூத்துக்குடிக்கு வந்து விசாரணையை தொடங்கினார்.

    இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்கள் குடும்பத்துக்கு நடிகர் விஜய் நேற்று நள்ளிரவில் நேரில் சென்று ஆறுதல் கூறினார். அப்போது அவர் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆறுதல் கூறியதுடன், நிதியுதவியும் அளித்தார்.



    விஜய்யின் தூத்துக்குடி சந்திப்புக்கு பிறகு இன்று செய்தியாளர்களை சந்தித்த அமீர் கூறும்போது, 

    காலா படத்தின் புரமோஷனுக்காக தான் ரஜினிகாந்த் தூத்துக்குடி சென்றார் என்றும், நடிகர் விஜய்யும், தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட  மக்களை சந்தித்திருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு சந்தித்து ஆறுதல் கூற வேண்டும் என்பதை நடிகர் விஜய்யிடம் இருந்து ரஜினி கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். #Rajinikanth #Vijay 

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நீதிமன்றத்தில் பல முறை நாடிய வைகோவுக்கு, நாஞ்சில் சம்பத் ஸ்டெர்லைட் நாயகன் என புகழாரம் சூட்டியுள்ளார்.
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தொடக்க காலம் முதலே போராடி வருபவர் வைகோ. பல முறை நீதிமன்றத்தை நாடி ஸ்டெர்லைட் ஆலை விதிமுறைகளை மீறி இயங்கி வருவதாக வாதிட்டுள்ளார். கடந்த மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.

    இதனை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இந்நிலையில், மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்தவர் வைகோ என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் நாயகன் வைகோவிற்கு தூத்துக்குடி மக்களே விழா எடுப்பார்கள் என அவர் கூறியுள்ளார்.

    மதிமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த நாஞ்சில் சம்பத், ஜெயலலிதா மறைக்கு பின்னர் சசிகலாவை எதிர்த்து பின்னர் சசிகலா அணிக்கு ஆதரவாளராகி பின்னர் தினகரனுடன் இணைந்து செயல்பட்டு பின்னர் அவருடன் முரண்பட்டு அரசியலில் இருந்தே ஒதுங்குவதாக சமீபத்தில் அறிவித்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்னர் வைகோவை நிகழ்ச்சி ஒன்றில் நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசியிருந்தார். அவர் மீண்டும் மதிமுகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் சடலங்கள் ஏற்கனவே உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரின் உடலை ஆய்வு செய்ய சென்னை ஐகோர்ட் இன்று அனுமதி அளித்துள்ளது. #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலியான 13 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்தாலும் பதப்படுத்தி வைக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஏற்கனவே, 7 பேரின் உடல்கள் பரிசோதனை செய்யப்பட்டிருந்தது. இதனை, அடுத்து மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய அரசு அனுமதி கோரியிருந்தது.

    இந்த வழக்கு கடந்த மாதம் 30-ம் தேதி விசாரணைக்கு வந்த நிலையில், தங்களது தரப்பு மருத்துவர் இல்லாமல் பிரேத பரிசோதனை செய்ய கூடாது என வழக்கறிஞர் சங்கரச்சுப்பு வாதிட்டார். இதனை அடுத்து, மீதமுள்ள 6 பேரின் உடல்களை பிரேத பரிசோதனை செய்ய நீதிபதிகள் தடை விதித்தனர். 

    பிரேத பரிசோதனை செய்யப்பட்ட 7 பேரின் உடல்களை மறு பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கலாம் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, 7 பேரது உடல்கள் மறு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    இந்நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள 6 பேரின் உடலை உடற்கூறு செய்ய நீதிபதிகள் அனுமதி அளித்தனர். 7 பேரின் உடலை மறுபரிசோதனை செய்தபோது பின்பற்றிய நடைமுறைகளை பின்பற்றி எவ்வளவு சீக்கிரம் உடற்கூறு பரிசோதனை செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
    ஸ்டெர்லைட் போராட்டத்தில் கைது செய்தவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று திருச்செந்தூரில் எர்ணாவூர் நாராயணன் தெரிவித்தார். #Thoothukudifiring
    திருச்செந்தூர்:

    சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் திருச்செந்தூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் கடந்த 22-ந் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினேன்.ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க கூடாது. ஆலை நிர்வாகம் கோர்ட்டுக்கு சென்றால் மீண்டும் திறக்க வாய்ப்பு ஏற்படும். எனவே அரசு சட்டசபையில் ஆலைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வந்து நிரந்தரமாக மூடவேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்காக அப்பாவி பொதுமக்களை சமூக விரோத கும்பல் என கூறி போலீசார் கைது செய்வதை நிறுத்த வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும்

    இந்த ஆலை குறித்து நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து கண்டிக்கத்தக்கது. இந்த சம்பவம் குறித்து தமிழக அரசு நியமித்துள்ள ஒரு நபர் விசாரணை கமி‌ஷன் அதிகாரி விசாரணை நடத்தி வருகிறார். இது வெறும் கண்துடைப்பு ஆகும். இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வரை சந்திக்க 2 முறை அனுமதி கடிதம் கொடுத்தும் இதுவரை எனக்கு அனுமதி இல்லை.

    பெட்ரோல், டீசல் விலையில் ஜி.எஸ்.டி.யில் சேர்க்க வேண்டும். அப்போது தான் விலை குறையும். மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும். இல்லாவிட்டால் சமத்துவ மக்கள் கழகம் சார்பில் மாநில அளவில் போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Thoothukudifiring
    ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக திரும்பி இருப்பதை கமலும் கையில் எடுத்து சாட்டையை சுழற்றி இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசியல் களத்தில் ரஜினியும் கமலும் போட்டி போட்டுக் கொண்டு களம் இறங்கி விட்டனர்.

    கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்பார்க்க வைத்து அரசியலில் குதித்த ரஜினியும், என் பணி நடிப்பது மட்டுமே என்று தொடர்ந்து கூறி வந்து திடீரென அரசியல் களம் கண்ட கமலும் தனித்தனி பாதையில் பயணித்து வருகிறார்கள்.

    ஜெயலலிதாவின் மரணம், கருணாநிதியின் செயல்பட முடியாத நிலையால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை குறி வைத்தே வெற்றிக் கோட்டையை பிடிக்க இருவரும் காய் நகர்த்தி வருகிறார்கள். இதற்காக தங்களது ரசிகர் பலத்துடன் மக்கள் நம்பிக்கையை பெறுவதற்கு இருவரும் வரிந்து கட்டிக் கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.

    ரஜினியோடு பல்வேறு வி‌ஷயங்களில் மாறுபட்ட கருத்துக்களையே கமல் கொண்டுள்ளார். ரஜினியின் ஆன்மீக அரசியலில் தொடங்கி மாணவர்கள் அரசியலில் ஈடுபடலாமா? வேண்டாமா? என்பது வரையில் ரஜினியின் கருத்தோடு கமல் ஒத்துப்போகவே இல்லை. இருவரின் பார்வையும் வேறு மாதிரியே இருந்து வந்துள்ளது. மாணவர்கள் அரசியலில் கவனம் செலுத்தாமல் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரஜினி கூறிய கருத்துக்கு நேர்மாறாக கமலின் எண்ணம் இருந்தது. மாணவர்களும் அரசியலில் ஈடுபட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார். இதுபோன்று பல்வேறு வி‌ஷயங்களில் இருவரின் கருத்துக்களும் முரண்பாடாகவே இருந்து வந்துள்ளது.

    இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த ரஜினி, போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்து தாக்குதல் நடத்தியதே பிரச்சனைக்கு காரணம். போலீசாரை தாக்குவதை எதிர்ப்பேன். எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும் என்றும் தெரிவித்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ரஜினியின் இந்த கருத்து தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


    ரஜினியின் இந்த கருத்துக்கும் கமலும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    போராடுபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை நிறுத்தக் கூடாது என்று கூறிய கமல் தூத்துக்குடி போராட்டம் நல்ல பாதை என்றும், துப்பாக்கியே வந்தாலும் அதனை திறந்த மனதுடன் ஏற்கும் பக்குவத்தை தூத்துக்குடியில் பார்த்தோம்.

    தூத்துக்குடி சம்பவம் பற்றி ரஜினியின் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது. அவர் கூறியது அவரது கருத்து. நான் மக்கள் பிரதிநிதியாகவே அவர்களது கருத்துக்களை பிரதிபலிக்கிறேன். மக்களிடம் கேட்டுதான் ஒட்டு மொத்த மக்களிடம் கருத்தாக நான் எதிரொலித்தேன். நானாக எந்த கருத்தையும் கூறவில்லை.

    போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடாகும் என்பது ரஜினியின் கருத்து. எனது கருத்து வேறு. நான் காந்தியின் சீடன். அவரை பார்த்ததில்லை. அவர் இறந்த பிறகுதான் பிறந்தேன் போராட்டத்தின் தன்மை என்ன என்பதை காந்தியிடம்தான் கற்றுக் கொள்ள வேண்டும். கத்தி, வாள், துப்பாக்கி ஆகியவற்றை வைத்து போராடுவது போராட்டம் அல்ல.

    போராட்டத்தில் வன்முறை இருந்தால் அதனை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போராட்டங்களை நிறுத்தக் கூடாது என்றும் கமல் தெரிவித்தார்.

    இதன் மூலம் ரஜினிக்கு எதிரான அரசியல் பயணத்தை கமல் ஒருபடி மேலே சென்று எதிர்க்க திட்டமிட்டிருப்பது அம்பலமாகி உள்ளது. அரசியலில் எதிராளிகளை வீழ்த்த வேண்டும் என்றால் அவர்களுக்கு எதிரான பலவீனங்களை தங்களது பலமாக மாற்றிக்கொள்வதே வலு சேர்க்கும். அந்த வழியைத் தான் கமலும் பின்பற்றுகிறார்.

    ஸ்டெர்லைட் போராட்ட விவகாரத்தில் ரஜினி தெரிவித்த கருத்துக்கள் அவருக்கு எதிராக திரும்பி இருப்பதை கமலும் கையில் எடுத்து சாட்டையை சுழற்றி இருப்பதாகவே கணிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் களத்தில் ரஜினி, கமல் ஆகிய 2 குதிரைகளும் போட்டி போட்டு வேகம் காட்டி வருகின்றன. இதில் முந்தப் போகும் குதிரை எது? கால் இடறி விழப்போகும் குதிரை எது? என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும். #KamalHaasan #Rajinikanth
    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட பஸ்சில் பலியான பெண்ணின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் ரூபாய் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை மூடக் கோரி நடந்த முற்றுகைப் போராட்டத்தில் ஏற்பட்ட கலவரத்தைத் தொடர்ந்து, 25.5.2018 அன்று உடன்குடியிலிருந்து திருநெல்வேலி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து கருங்குளம் கிராமம் அருகே சில சமூக விரோதிகளால் தீ வைத்து எரிக்கப்பட்டதில், பேருந்தில் பயணம் செய்த, மெஞ்ஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுடலை மனைவி வள்ளியம்மாள் தீக்காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 31.5.2018 அன்று உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

    இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்த வள்ளியம்மாள் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
    ×