search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sterlite Protest"

    தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டத்தில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள் என்றார். #Prakashraj
    சி.ஐ.டி நகரில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் ’மறக்க முடியுமா தூத்துக்குடியை’ என்ற தலைப்பில் தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த மக்களின் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசியதாவது:-

    ‘‘ரியல் எஸ்டேட் போல தமிழகம் மாறி வருகிறது. அனைத்து கட்சிகளும் ஒரே மாதிரியாகத்தான் செயல்படுகின்றன. மக்கள் அவர்களை வேண்டாம் என்று முடிவு எடுத்து பல காலங்கள் ஆகிவிட்டது. காது இல்லாதவர்களிடம் பேசுவது வீண். என்னை யார் என்ன வேண்டுமானாலும் பேசலாம். அதைப்பற்றி நான் கவலைபட மாட்டேன்.

    தூத்துக்குடியில் நடந்தவற்றையும், நடப்பவற்றையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். நாட்டு மக்களை அச்சத்தில் வைத்து இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அப்படி பயமுறுத்தி ஆள்பவர்களின் முடிவு மோசமானதாக இருக்கும்.



    நான் ஏன் நேரடி அரசியலுக்கு வர மறுக்கிறேன் என்றால் தேர்தல் அரசியலில் பங்கெடுத்தால் மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. நான் அரசியலில் தான் இருக்கிறேன். ஆனால் அரசியல்வாதியாக இல்லை. சுயநலமில்லாமல் மக்களுக்கான உரிமையை பேச நினைக்கிறேன். என்னை போன்றோரின் குரல் மக்களுக்கு தேவை. கேள்வி கேட்பது நமது உரிமை. கேள்வி கேட்காவிட்டால் நம் கையை எடுத்து நம் கண்ணிலேயே குத்துவார்கள்’’.

    இவ்வாறு அவர் பேசினார். #Prakashraj #TuticorinShootOut #BanSterlite

    தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் இருந்த 277 அரசு ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே ராஜேந்திரன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். #ThoothukudiShooting
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தமிழக டிஜிபி டி.கே ராஜேந்திரன்பதில் இன்று பதில் தாக்கல் செய்தார். 

    அதில், துப்பாக்கிச்சூடு நடந்த அன்று தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடினர். அவர்களை கலைக்க எடுக்க முயன்ற அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிந்தன. அலுவலகத்தில் இருந்த 277 ஊழியர்களை காப்பாற்றவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், ஸ்டெர்லைட் வளாக குடியிருப்பில் இருந்த 150 குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணை நியாயமான முறையில் நடக்கிறது; அதனால் சிபிஐ விசாரணை தேவையில்லை எனவும் அந்த பதில் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
    போலீஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து வீடியோ கருத்து வெளியிட்டு தலைமறைவாக இருந்த டி.வி. நடிகை நிலானியை குன்னூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் நிலானி. டி.வி. நடிகையான இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். ஒரு தொலைக்காட்சி தொடருக்காக போலீஸ் சீருடையில் படப்பிடிப்பில் இருந்த இவர், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர், “நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு வருத்தம் அளிக்கிறது. அமைதியான வழியில் போராடியவர்களை சுட்டுக்கொன்று உள்ளனர். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன். இல்லாவிட்டால் நானும் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன். இந்த போலீஸ் உடை அணிந்து இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். இந்த சீருடை அணிய உடம்பு கூசுகிறது” என பேசி இருந்தார்.

    இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. நிலானி அதிகம் பிரபலம் இல்லாததால் நிஜ போலீஸ் அதிகாரிதான் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகுதான் போலீஸ் உடையில் கருத்து தெரிவித்தவர் டி.வி. நடிகை என்பது பலருக்கும் தெரியவந்தது.

    இது குறித்து வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும் தனக்கு முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு கொடுத்து இருந்தார். வளசரவாக்கத்தில் தங்கி இருந்த நிலானி, போலீசார் தேடுவதால் கரூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு கோயம்புத்தூர், குன்னூரில் உள்ள நண்பர்கள் வீட்டில் இருந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது நண்பர்களுடன் செல்போனில் பேசினார்.

    இதன் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனைதொடர்ந்து வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று குன்னூர் சென்றனர். பின்னர் அவர்கள் நிலானியை கைது செய்து குன்னூர் வெலிங்டன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவரை குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    அதன்பிறகு சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக நிலானியை போலீசார் சென்னைக்கு அழைத்துவந்தனர். 
    தூத்துக்குடி சம்பவத்தை கண்டித்து சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்ட நடிகை நிலானி குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest
    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடியில் நடத்தப்பட்ட பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தொலைக்காட்சி நடிகை நிலானி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    போலீஸ் உடை அணிந்து நிலானி அந்த வீடியோவில் பேசும் போது, இது தற்செயலாக நடந்தது இல்லை. திட்டமிட்ட படுகொலை. இறந்தவர்களில் 8 பேர் போராட்டத்திற்காக முன்நின்றவர்கள். அவர்களை திட்டமிட்டே கொன்றுள்ளனர். என்று அந்த வீடியோவில் பேசியிருந்தார். இதையடுத்து நடிகை நிலானி மீது 4 பிரிவுகளில் தியாகராய நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். 



    இந்த நிலையில், நிலானி இன்று குன்னூரில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். #SterliteProtest #Nilani

    துப்பாக்கி சூடு நடந்த 30-வது நாளையொட்டி தூத்துக்குடியில் இன்று மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானதால் போலீஸ் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகமும் சூறையாடப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் பதட்டம் உண்டானது. பதட்டத்தை தணிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்பியது.

    இதனிடையே துப்பாக்கி சூடு நடந்த 30-வது நாளையொட்டி தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சங்க அலுவலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே வேளையில் போராட்டம் நடைபெற்ற பல்வேறு பகுதியில் இன்று மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களை அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தகவல் பரவியது.

    இதனால் அசம்பாவிதம் நிகழக்கூடாது என்று கருதி தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், டி.ஐ.ஜி.கள் பிரதீப்குமார், கபில்குமார் சரத்கார் ஆகியோர் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அருண்சக்திகுமார் (நெல்லை), முரளிரம்பா (தூத்துக்குடி) மற்றும் 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ளனர்.

    தூத்துக்குடி நகர் பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் நகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் ரோந்துபணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளார்கள். இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது என்று சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் கூறினார். #sterliteprotest #ThoothukudiFiring #MedhaPatkar
    தூத்துக்குடி:

    சுற்றுபுறச்சூழல் ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டில் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் பார்த்து ஆறுதல் கூறினார். மேலும் பலியானவர்களின் குடும்பத்தினரையும் அவர் சந்தித்து பேசினார். அவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டறிந்தார்.

    முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் மனிதாபிமானமற்றது. அரசியல் விதிகளுக்கு எதிரானது. 1998-ம் ஆண்டு முதல் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்ந்துகொண்டிருந்தது.



    எத்தனை தீர்ப்புகள் வழங்கினாலும் கார்ப்பரேட் ஆலைகளுக்கு ஆதரவாக மத்திய அரசு சுற்றுச் சூழல் விதிகளை குறைத்து கொண்டே வந்தனர். ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதியாவது கிடைத்தது.

    தற்போது நடக்கும் ஆட்சிக்கு மக்கள் பிரச்சனை கூட தெரியவில்லை. இந்த போராட்டத்தில் நடந்த வன்முறை வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்திய நிறுவனம் இல்லாத வேதாந்தா குழுமம் நம்பிக்கை தன்மையை இழந்துவிட்டது.

    நர்மதா அணை கட்டும் பணியின் போது மக்களின் பிரச்சனையை புரியாமல் மோடி நடந்தது போல் இங்கு இப்போது நடந்துள்ளது. நடந்த வன்முறையை காரணம் காட்டி நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது நடவடிக்கையை நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #sterliteprotest #ThoothukudiFiring #MedhaPatkar

    துப்பாக்கி சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூற சமூக ஆர்வலர் மேதாபட்கர், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் இன்று தூத்துக்குடி வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலியானவர்கள் குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தவர்களை அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சந்தித்து ஆறுதல் கூறினார்கள்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து மனித உரிமை ஆணையம், அரசால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அருணாஜெகதீசன் ஆகியோரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. விசாரணையும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் துப்பாக்கி சூடு நடந்த இடங்களை பார்வையிடவும், பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறவும் சமூக ஆர்வலர் மேதாபட்கர் இன்று தூத்துக்குடி வருகிறார்.

    துப்பாக்கி சூட்டில் பலியானவர்கள் குடும்பத்தினரை அவர் சந்தித்து ஆறுதல் கூறுகிறார். தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டை கண்டித்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பாக பேரணி, பொதுக்கூட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு போலீஸ் அனுமதி மறுத்தது.

    இதையடுத்து தூத்துக்குடியில் பேரணி, பொதுக்கூட்டம் நட‌த்த அனுமதி அளிக்கவேண்டும் என்று அந்த கட்சி சார்பாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடத்த கோர்ட்டு அனுமதியளித்தது. மேலும் கூட்டத்தை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

    இதை தொடர்ந்து இன்று நடைபெறும் பொதுகூட்டத்தில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தாகாரத் மற்றும் தலைவர்கள் கலந்துகொண்டு பேசுகிறார்கள். இதற்காக பிருந்தாகாரத் இன்று தூத்துக்குடி வருகிறார். துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள் மற்றும் பலியானவர்கள் குடும்பத்தினரை அவர் சந்தித்து பேசுகிறார்.

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிப்பதே முறையாக இருக்கும் என்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். #ThoothukudiFiring #CBIProbe #MadrasHighCourt
    சென்னை:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இது தொடர்பாக தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் கமிஷனும் விசாரித்து வருகிறது. இது தவிர இவ்வழக்கை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கக் கோரி நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மக்கள் அரசு கட்சியின் தலைவர் ரஜினிகாந்த் ஒரு மனுவை தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், தூத்துக்குடியில் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு என்பது, திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார்.



    துப்பாக்கி சூடு சம்பவத்தில் அரசாங்கம் உண்மை நிலவரங்களை தெரிவிக்க மறுத்து வருவதால் தடயவியல் நிபுணர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக்குழுவை அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

    தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் மற்றும் அரசுத் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரிப்பதே முறையாக இருக்கும் என தெரிவித்தார். எனவே, இந்த விஷயம் தொடர்பாக மனுதாரர் சி.பி.ஐ.-ஐ அணுகலாம் என்றும் கூறினார்.

    அதேசமயம் மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி நோட்டீஸ் அனுப்பவும் தலைமை நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார். #ThoothukudiFiring #CBIProbe #MadrasHighCourt
    தூத்துக்குடி மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓசூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூசை அடுத்த சென்னத்தூர் வ.உ.சி. நகரை சேர்ந்தவர் சிலம்பரசன். இவர் நடிகர் ரஜினிகாந்த் மீது ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்து உள்ளார். அந்த புகார் மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    தூத்துக்குடிக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அகிம்சை வழியில் போராடி உயிர் தியாகம் செய்து போலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு பலியான 13 பேர் பற்றி எதிர்மறையான கருத்தை தெரிவித்து உள்ளார்.

    போராட்டக்காரர்களுடன் சமூக விரோதிகள் ஊடுருவியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரும் சமூக விரோதிகள் என்பதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டு உள்ளார். பொய்யான கருத்தை அவர் மக்களிடம் பரப்பி உள்ளார்.

    போராடினால் உயிர் பலி ஆகிவிடும் என்பது போன்ற கருத்தை அவர் மக்களிடம் உருவாக்கி உள்ளார். ஒட்டுமொத்த தமிழக மக்களின் உணர்வுகளையும், உரிமைகளையும், தியாகங்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவர் பேசி இருக்கிறார்.

    தொடர்ந்து போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றும் அவர் கூறி இருக்கிறார். மக்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசிய அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகார் மனுவில் அவர் கூறி உள்ளார்.

    அவர் கொடுத்த மனுவை பெற்றுக்கொண்ட ஓசூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஹேமாவதி சி.எஸ்.ஆர். ரசீது கொடுத்து உள்ளார்.

    இந்த புகார் மனு குறித்து அரசு வக்கீலுடன் ஆலோசனை நடத்தி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய தந்தை-2 மகன்கள் உள்ளிட்ட 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். #Thoothukudifiring #sterliteprotest

    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22-ந்தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது.

    இதனால் தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் தாக்கப்பட்டது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் படுகாயம் அடைந்தனர்.

    தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது.

    இந்த நிலையில் வன்முறையில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம், புரட்சிகர இளைஞர் முன்னணி உள்ளிட்ட சில அமைப்புகளை சேர்ந்த முக்கிய நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்த கலில்ரகுமான் (வயது47), அவரது மகன்கள் முகமது அனாஸ் (22), முகமது இர்ஷாத் (20), மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த கோட்டயன், கோவில்பட்டியை சேர்ந்த சரவணன், நெல்லை ஆலங்குளத்தைச் சேர்ந்த வேல்முருகன் ஆகிய 6 பேரை கைது செய்த நெல்லை போலீசார் அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


    கைதான முகமது அனாஸ் கன்னியாகுமரியில் ஓமியோபதி மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அவரது சகோதரர் முகமது இர்ஷாத் நெல்லை பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    கலில்ரகுமான், அவரது மகன்கள் முகமது அனாஸ், முகமது இர்ஷாத் ஆகிய 3 பேரும் மக்கள் அதிகாரம் அமைப்பில் செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    கடந்த 22-ந்தேதி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் மீதான தாக்குதலில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஒரே குடும்பத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதால் கலில் ரகுமானின் மனைவி நசீபா பானு, கைதான 3 பேரின் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், எனது கணவருக்கும், மகன்களுக்கும் இந்த சம்பவங்களில் எந்த தொடர்பும் கிடையாது. ஆனால் போலீசார் திட்டமிட்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைத்துள்ளனர். இதனால் எனது மகன்கள் 2 பேரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். நசீபா பானு சார்பில் மதுரையை சேர்ந்த வக்கீல் கணேஷ்பிரபு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரஉள்ளது.

    மேலும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியும், மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகியுமான காளியப்பன் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

    இந்த மனுவில் தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை நடைபெற்ற போராட்ட சம்பவம் தொடர்பான வீடியோ பதிவை தாக்கல் செய்ய தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி உள்ளார். இந்த மனுவும் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

    6 பேர் கைது தொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ஜனநாயகத்தின் அடையாளமாக திகழ்வது கலெக்டர் அலுவலகம். அப்படிப்பட்ட இடத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மக்கள் அதிகாரம் அமைப்பு உள்ளிட்ட சில இயக்கங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆதாரங்கள் இல்லாமல் யாரையும் கைது செய்யவில்லை என்றனர்.

    மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த மருது கூறுகையில், கலில்ரகுமான் மக்கள் அதிகாரம் அமைப்பில் இணைந்து செயல்பட்டு வருகிறார். ஆனால் போலீசார் 2 மகன்களுடன் அவரை கைது செய்து இருப்பது தவறான நடவடிக்கை ஆகும் என்றார். #Thoothukudifiring #SterliteProtest

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களிடம் விசாரணை நடத்த நீதிபதி அருணாஜெகதீசன் மீண்டும் தூத்துக்குடிக்கு வருகிறார். #Thoothukudifiring #Arunajagadeesan
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த 22ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் போலீசார் துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தினர். இதில் 13 பேர் உயிர் இழந்தனர். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மாநில மற்றும் தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தூத்துக்குடி வந்து பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி தேசிய மனித உரிமை ஆணைய குழுவினர் தங்களின் விசாரணை அறிக்கையை தயார் செய்து வருகின்றனர்.

    மேலும் இந்த சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு ஓய்வுபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இதைத்தொடர்ந்து நீதிபதி அருணாஜெகதீசன் தூத்துக்குடியில் முகாமிட்டு பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    சம்பவம் தொடர்பாக தைரியமாக வந்து ஆணையம் முன்பு விளக்கவும், பிரமாண பத்திரம் (அபிடவிட்) தாக்கல் செய்யவும் அறிவுறுத்தினார். இதற்காக தூத்துக்குடி தெற்கு பீச் ரோட்டில் உள்ள அரசின் பழைய சுற்றுலா மாளிகையில் ஒருநபர் ஆணைய முகாம் அலுவலகம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அங்கு ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி பாண்டு ரங்கன் தலைமையில் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

    அவர்களிடம் பொது மக்கள் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர். இதேபோல் சென்னையில் கிரீன்வேஸ் ரோட்டில் உள்ள விசாரணை ஆணைய அலுவலகத்திலும் பிரமாண பத்திரங்கள் பெறப்பட்டு வருகின்றன. வருகிற 30-ந் தேதி வரை மக்களிடம் இருந்து பிரமாண பத்திரம் பெறப்படுகிறது. நேரில் வர முடியாதவர்கள் தபாலிலும் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



    இதைத்தொடர்ந்து துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரும், காயமடைந்தவர்களும் தனித்தனியாக பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்து வருகிறார்கள். கலவரத்தின் சேதமான வாகன உரிமையாளர்களும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்து வருகின்றனர்.

    சிலர் வக்கீல்கள் உதவியுடன் பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்கின்றனர். பிரமாண பத்திரங்கள் தாக்கல் முடிவடைந்ததும் அவை ஆய்வு செய்யப்படுகின்றன. இதைதொடர்ந்து அடுத்த மாதம் முதல் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. இதற்காக முகாம் அலுவலகத்தில் கோர்ட்டு அறையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

    சம்பந்தப்பட்டவர்கள் நின்று சாட்சியும் அளிப்பதற்காக பிரத்யேகமாக விசாரணை கூண்டு அமைக்கப்ப‌ட்டு உள்ளது. பிரமாண பத்திரங்கள் தாக்கல் செய்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளதால் விசாரணையும் ரகசியமாகவே நடைபெறும் என தெரிகிறது. இதற்காக நீதிபதி அருணாஜெகதீசன் மீண்டும் தூத்துக்குடிக்கு வருகிறார்.

    அவர் தொடர்ச்சியாக தூத்துக்குடியில் தங்கியிருந்து விசாரணை மேற்கொள்வார் என தெரிகிறது. 2 மாதம்வரை விசாரணை நடைபெறும் எனவும், அதன்பிறகு விசாரணை அறிக்கை அரசுக்கு அளிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. #Thoothukudifiring #Arunajagadeesan


    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையில் தெரிவ வந்துள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் கடந்த மாதம் 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் கொல்லப்பட்டார்கள். 100-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.

    இந்த சம்பவங்கள் குறித்து தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட்  போலீஸ் நிலையங்களில் பதியப்பட்ட 5 வழக்குகள் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டன. இதையடுத்து ஒவ்வொரு வழக்கிற்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு என 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது.

    அந்த குழுவினர் துப்பாக்கி சூடு தொடர்பான பல்வேறு ஆவணங்களை சேகரித்து வருகின்றனர். இந்த நிலையில் விசாரணையை துரிதப்படுத்துவதற்காக சி.பி.சி.ஐ.டி போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபிநவ் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூத்துக்குடிக்கு வந்தார்.

    சி.பி.சி.ஐ.டி போலீசாரால் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள் மற்றும் பெறப்பட்டுள்ள வாக்குமூலங்கள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார். சம்பவம் நடந்த இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். கடந்த 2 நாட்களாக விசாரணை அதிகாரிகளான டி.எஸ்.பி.,க்களிடம் பல்வேறு கட்ட கலந்தாய்வில் ஈடுபட்டார்.



    விசாரணையின்போது துப்பாக்கி சூட்டில் இறந்தவர்கள் குறித்த முழு விவ‌ரப் பட்டியல், காயமடைந்தவர் பட்டியல், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் வன்முறையில் சேதமடைந்த சொத்துக்களின் பட்டியல், தீ வைத்து எரிக்கப்பட்ட மற்றும் கல்வீசி சேதத்திற்குள்ளான வாகனங்கள் எத்தனை, அவற்றின் உரிமையாளர் யார்? என்பது தொடர்பான விவரங்களையும் அவர் கேட்டறிந்தார்.

    அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் நேற்று மாலை போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபிநவ் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அங்கு அரசு தரப்பு வக்கீலிடம் வழக்கு விசாரணை குறித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் தூத்துக்குடிக்கு திரும்பி வந்து விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

    துப்பாக்கி சூடு சம்பவத்தின்போது சுமார் 130 தோட்டாக்கள் வரை பயன்படுத்தப்பட்டுள்ளதாக‌ கூறப்படுகிறது.  சம்பவ இடத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆய்வு செய்து சில தோட்டாக்களை கைப்பற்றியுள்ளனர். துப்பாக்கி சூட்டுக்கு பயன்படுத்திய துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை இன்னும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் மாவட்ட போலீசார் ஒப்படைக்கவில்லை.  

    அவற்றை பெறுவதற்கான முயற்சியில் சி.பி.சி.ஐ.டி போலீசார் ஈடுபட்டுள்ளனர். அவற்றை பெற்ற பின்னர் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பி உண்மை கண்டறியும் சோதனை நடத்துகின்றனர். அதில் தான் போலீசார் விதிமுறை மீறலில் ஈடுபட்டுள்ளனரா? என்பது தெளிவாகும் என்று சி.பி.சி.ஐ.டி போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    ×