search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi Gunfire"

    போலீஸ் சீருடையில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவம் குறித்து வீடியோ கருத்து வெளியிட்டு தலைமறைவாக இருந்த டி.வி. நடிகை நிலானியை குன்னூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
    பூந்தமல்லி:

    சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்தவர் நிலானி. டி.வி. நடிகையான இவர், பல்வேறு தொலைக்காட்சி தொடர்களில் நடித்து உள்ளார். ஒரு தொலைக்காட்சி தொடருக்காக போலீஸ் சீருடையில் படப்பிடிப்பில் இருந்த இவர், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார்.

    அதில் அவர், “நம் நாட்டில் நடக்கும் சம்பவங்கள் எனக்கு வருத்தம் அளிக்கிறது. அமைதியான வழியில் போராடியவர்களை சுட்டுக்கொன்று உள்ளனர். நான் படப்பிடிப்பில் இருக்கிறேன். இல்லாவிட்டால் நானும் போராட்டத்தில் கலந்து கொண்டிருப்பேன். இந்த போலீஸ் உடை அணிந்து இருப்பதற்காக வெட்கப்படுகிறேன். இந்த சீருடை அணிய உடம்பு கூசுகிறது” என பேசி இருந்தார்.

    இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. நிலானி அதிகம் பிரபலம் இல்லாததால் நிஜ போலீஸ் அதிகாரிதான் இவ்வாறு கருத்து வெளியிட்டு இருப்பதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகுதான் போலீஸ் உடையில் கருத்து தெரிவித்தவர் டி.வி. நடிகை என்பது பலருக்கும் தெரியவந்தது.

    இது குறித்து வடபழனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் நிலானி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

    மேலும் தனக்கு முன் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு கொடுத்து இருந்தார். வளசரவாக்கத்தில் தங்கி இருந்த நிலானி, போலீசார் தேடுவதால் கரூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்கு சென்றார். அதன்பிறகு கோயம்புத்தூர், குன்னூரில் உள்ள நண்பர்கள் வீட்டில் இருந்துள்ளார். அவர் அங்கிருந்து தனது நண்பர்களுடன் செல்போனில் பேசினார்.

    இதன் மூலம் அவர் இருக்கும் இடத்தை போலீசார் கண்டுபிடித்தனர்.

    இதனைதொடர்ந்து வடபழனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று குன்னூர் சென்றனர். பின்னர் அவர்கள் நிலானியை கைது செய்து குன்னூர் வெலிங்டன் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதன்பின்னர் அவரை குன்னூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி சுந்தரராஜன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

    அதன்பிறகு சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர் படுத்துவதற்காக நிலானியை போலீசார் சென்னைக்கு அழைத்துவந்தனர். 
    தூத்துக்குடியில் நடந்த கலவரத்தையொட்டி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். #thoothukudigunfire #sterliteprotest
    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடம் அருகே உள்ள திரவியபுரத்தை சேர்ந்தவர் பரத்ராஜா (வயது 36). தூத்துக்குடியில் நடந்த ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில் பரத்ராஜாவின் தம்பி தனசேகரனுக்கு கடந்த 23-ந் தேதி தூத்துக்குடியில் திருமணம் நடந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பரத்ராஜா 17-ந்தேதி முதல் 23ம் தேதி வரை 7 நாள் பரோலில் ஊருக்கு வந்தார்.

    இதனிடையே 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த கலவரத்தையொட்டி 23-ந் தேதி போலீசார் வீடு வீடாக சென்று பலரை கைது செய்தனர். அப்போது பரத்ராஜாவையும் போலீசார் பிடித்துச்சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் காயமடைந்த பரத்ராஜா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பாளை சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் கடந்த 30ந்தேதி பரத்ராஜா, சிறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை தொடர்ந்து பரத்ராஜாவின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்யப்பட்டது. பரத்ராஜாவை விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார் அவரை தாக்கியதாகவும், அப்போது அவர் காயம் அடைந்து சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட போது மாஜிஸ்திரேட்டிடம் அவர் வாக்குமூலம் அளித்ததில் போலீசார் தன்னை அடித்து உதைத்ததாக தெரிவித்துள்ளார்.

    போலீசார் தாக்கியதால் தான் பரத்ராஜா இறந்ததாக கூறி, அதுபற்றி உரிய விசாரணை நடத்த வேண்டும். பரத்ராஜா குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கவேண்டும், அதுவரை பரத்ராஜாவின் உடலை வாங்கப்போவதில்லை என்று பரத்ராஜாவின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் பரத்ராஜாவின் உடலை வாங்க மறுத்து நேற்று 2-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

    பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாததால் பரத்ராஜாவின் உடல் தொடர்ந்து நெல்லை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டு உள்ளது. இன்றும் 3-வது நாளாக பரத்ராஜாவின் உடலை உறவினர்கள் பெற மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.#thoothukudigunfire #sterliteprotest
    செய்துங்கநல்லூர் அருகே பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் பலியான‌ பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #sterliteprotest
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ந்தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் புதுபாலம் அருகே நெல்லை நோக்கி வந்த அரசு பஸ்சுக்கு சிலர் தீவைத்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து சேதமானது. பஸ்சில் இருந்த பயணிகள் பலரும் பதறியடித்து இறங்கி உயிர் தப்பினர்.

    அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்ற மெஞ்ஞானபுரம் நவலடிபுதூரை சேர்ந்த சுடலை கோனார் (வயது 78), அவருடைய மனைவி வள்ளியம்மாள் (63) தீயில் சிக்கினர். அவர்களை அதே பஸ்சில் வந்த காரைக்குடியை சேர்ந்த ஜெபகுமார் (23) மீட்க முயன்றார்.

    இந்த சம்பவத்தில் அவர்கள் 3 பேரும் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பலத்த தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வள்ளியம்மாள் (வயது 63) சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இறந்த வள்ளியம்மாளின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உறவினர்களிடம் போலீசார் உடலை ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியான வள்ளியம்மாள் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    நேற்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. அப்போது அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து இன்று 3-வது நாளாக வள்ளியம்மாள் உடல் வாங்கப்படவில்லை. அவரது உறவினர்களிடம் தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்கப்போவதில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். #sterliteprotest
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 4 பேருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #sterliteprotest
    மதுரை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த 22-ந் தேதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜலிங்கம் (வயது 38), வீரபாபு (17), காளிமுத்து (32), சக்திவேல் (34) ஆகிய 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தனிப்பிரிவில் சிறப்பு மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். #sterliteprotest
    ரத்ததானம் செய்யும் குத்துச்சண்டை வீரர் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குண்டு காயம் பட்டு ரத்த வெள்ளத்தில் பலியானதாக அவரது உறவினர் உருக்கமான தகவலை வெளியிட்டுள்ளார்.#SterliteProtest #ThoothukudiShooting #SterliteKillings
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தில் பலியானவர்கள் குறித்து உருக்கமான தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அது பற்றிய விவரம் வருமாறு:-

    தூத்துக்குடி புஷ்பாநகர் 1-வது தெருவைச் சேர்ந்த ரஞ்சித்குமார் (வயது 22) துப்பாக்கி சூட்டில் பலியானார். ரஞ்சித்குமார் பற்றி இவருடைய சித்தப்பா ஆறுமுகம் கூறியதாவது:-

    ரஞ்சித்குமார் என்ஜினீயரிங் படித்து உள்ளார். இவர் குத்துச்சண்டை வீரரும் ஆவார். மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு உள்ளார்.

    மேலும் ரத்ததானம் செய்வதில் ஆர்வமாக உள்ளவர். பலமுறை ரத்ததானம் செய்துள்ளார். இதற்காக தனியார் அமைப்பு ஒன்று அடுத்த மாதம் (ஜூன்) ரஞ்சித்குமாருக்கு விருது வழங்குவதற்காக அழைப்பு விடுத்து இருந்தனர். இந்த நிலையில் அவர் துப்பாக்கி சூட்டில் துரதிஷ்டவசமாக ரத்த வெள்ளத்தில் இறந்துவிட்டார். ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணையை வெளியிட வேண்டும்.

    துப்பாக்கி சூட்டிற்கு காரணமான அதிகாரிகள், போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே ரஞ்சித்குமார் உடலை பெற்றுக் கொள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துப்பாக்கி சூட்டில் பலியான தூத்துக்குடி சிலோன் காலனியை சேர்ந்த கந்தையா (55) என்பவரின் மனைவி செல்வமணி கூறியதாவது:-

    எனது கணவர் கட்டிட தொழிலாளி. அவருக்கு கிடைக்கும் குறைந்த அளவிலான வருமானத்தில் தான் குடும்பம் நடத்தி வந்தேன். ஆனால் அவர் இந்த சம்பவத்தில் பலியாகி விட்டார். எனது கணவரோட ஆசை ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது தான்.

    இந்த மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனது உயிரை கொடுத்து உள்ளார்.

    எனவே ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தமாக மூட வேண்டும். எனது கணவரை சுட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு மாற்றுத்திறனாளி மகன் உள்ளான். அவனை எப்படி காப்பாற்றப்போகிறேன் என்று தெரியவில்லை.

    இவ்வாறு அவர் கண்ணீர் மல்க கூறினார்.

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுபவர்களின் உறவினர்கள் சிலர் கூறுகையில், “துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களை தடியடியில் காயம் அடைந்ததாக சொல்லும்படி போலீசார் வற்புறுத்துகின்றனர்.

    தடியடியில் காயம் அடைந்தவர்களை கலவரத்தின்போது கீழே விழுந்து காயம் அடைந்ததாக கூறுமாறும் சொல்கிறார்கள். அப்படி சொல்லவில்லை என்றால் உங்கள் மீது வேறு வகையில் நடவடிக்கை எடுப்போம் என்று கூறி மிரட்டுகின்றனர்” என்றனர். #SterliteProtest #ThoothukudiShooting #SterliteKillings
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து சென்னையில் சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.#SterliteProtest #Samathuva Makkal Katchi
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருக்கும் அக்கட்சியின் தலைவர்ஆர்.சரத்குமார் அறிவித்தார். அதன்படி தமிழகம் முழுவதும் சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னையில் வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநில பொருளாளர் ஏ.என்.சுந்தரேசன் தலைமை தாங்கினார். மாநில துணை பொது செயலாளர் எம்.ஏ.சேவியர் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது ஏ.என்.சுந்தரேசன் பேசியதாவது:-

    தூத்துக்குடி மக்கள் 100 நாள் அறவழியில் போராட்டம் நடத்தினர். இதுவரை தமிழகத்தில் நடந்த போராட்டம் அமைதியான முறையில் தான் நடந்துள்ளது. ஆனால் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு - தடியடியில் 13 பேர் உயிரிழந்துள்ளனர், 20 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த துப்பாக்கி சூடு திட்டமிட்ட செயல், இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் வர்த்தக அணி துணை செயலாளர் என்.ஆர்.பி.ஆதித்தன், மாவட்ட செயலாளர்கள் முருகேசபாண்டியன், தக்காளி எம்.முருகேசன் மற்றும் மாவட்ட அவைத் தலைவர் டிக்சன் ஆகியோர் கலந்து கொண்டனர். #SterliteProtest
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு கன்னியாகுமரியில் மெழுகுவர்த்தி ஏந்தி பெண்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    நாகர்கோவில்:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதை கண்டித்து குமரி மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். கடற்கரை கிராமங்களிலும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

    ராஜாக்கமங்கலம்துறை தூய ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் இன்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. தொடர்ந்து தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பேனர் ஆலய வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த படத்தின் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தியும், மலர் தூவியும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அந்த பகுதியைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து இதில் பங்கேற்றனர்.

    நிகழ்ச்சியில் பங்குத்தந்தை ராஜ் மற்றும் ஆல்பின், ஜான்மில்டன், சேவியர், சிலுவை தாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். துப்பாக்கிச் சூட்டை கண்டித்து ராஜாக்கமங்கலம்துறை பகுதியைச் சேர்ந்த நாட்டு படகு மீனவர்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதேபோல துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து கன்னியாகுமரி பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலைநிறுத்தம் செய்தனர். கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கன்னியாகுமரி, வாவத்துறை, புதுக்கிராமம், சிலுவை நகர், மணக்குடி பகுதி மீனவர்கள் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர்.#SterliteProtest
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து கோவையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.#SterliteProtest
    கோவை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள்.

    இதில் 13 பேர் பலியானார்கள். இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. மற்றும் அனைத்து கட்சிகள் சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

    பல்வேறு இடங்களில் மறியலும் நடைபெற்றது.கோவை காந்திபுரம் டவுன் பஸ் நிலையம் முன் முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி தலைமையில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த பஸ்சை மறித்தனர். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்தும், இதற்கு பொறுப்பு ஏற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை உடனே மூட வேண்டும் என அவர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

    அவர்களை அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பொங்கலூர் பழனிசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி, மாவட்ட பொருளாளர் நாச்சி முத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியம், கார்த்திக் செல்வராஜ், வக்கீல் மகுடபதி, மயில் வாகனம், முருகவேல், ராஜேந்திர பிரசாத் மற்றும் 4 பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    கோவை வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் முத்துசாமி தலைமையில் வடகோவை மேம்பாலம் கிராஸ்கட் ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதில் வீரகோபால், இளைஞரணி அமைப்பாளர் கோட்டை அப்பாஸ், பகுதி செயலாளர்கள் உதயகுமார், புதூர் மணி மற்றும் மூ.ரா. செல்வராஜ், கோவை லோகு மீனா லோகு, சண்முக சுந்தரம், சரஸ்வதி, கண்ணப்பன், கிருஷ்ண மூர்த்தி, உசேன், மனோகர், கேபிள் மணி, தினேஷ், காளிமுத்து, கருப்பசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.#SterliteProtest
    தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த 8 போலீசாருக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#SterliteProtest #BanSterlite
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஏற்பட்ட கலவரம் காரணமாக 13 பேர் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் பொது மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால், கலவரத்தில் காயம் அடைந்த போலீஸ்காரர்களை சிகிச்சைக்கு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.

    அங்கு முதல்நாள் 43 போலீசாரை சிகிச்சைக்காக சேர்த்தனர். ஜெய்சங்கர் என்ற ஒரு போலீஸ்காரர் மட்டும் பாளை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தார். இதில் மறுநாளே 20 போலீசார் சிகிச்சை முடிந்து பணிக்கு திரும்பினர். 10 பெண் போலீசார் உள்பட 23 போலீசாருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    இதிலும் நேற்று பெரும்பாலான போலீசார் சிகிச்சை முடிந்து திரும்பினர். இன்று நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் தூத்துக்குடியைச் சேர்ந்த 8 போலீசார் மட்டும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதுபோல புதுக்கோட்டை அருகே உள்ள கூட்டாம் புளியைச் சேர்ந்த சுகுமார் (21) என்பவர் வயிற்றில் குண்டு பாய்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.#SterliteProtest #BanSterlite
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
    கோவை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

    கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், சிவானந்தாகாலனி, 100 அடி ரோடு, உக்கடம் உள்ளிட்ட இடங்களில் மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டிருந்தன.

    பெரியநாயக்கன்பாளையம், பேரூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் அருகே ஓட்டல்கள், மருந்தகங்கள், தள்ளுவண்டி கடைகள் மட்டும் திறந்திருந்தன. எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், உக்கடம் மார்க்கெட்டுகளில் கடைகள் திறந்திருந்தன.

    முழுஅடைப்பு போராட்டத்துக்கு கோவை பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் ஊரக தொழில் முனைவோர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன.

    முழுஅடைப்பு போராட்டம் காரணமாக பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. காலை 8 மணி நிலவரப்பட்டி கோவை மாநகரில் 543 பஸ்களும், புறநகர் பகுதிகளில் 464 பஸ்களும் வழக்கம் போல ஓடின.

    கோவையில் இருந்து பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. கேரளாவில் இருந்தும் கோவைக்கு பஸ்கள் வந்தன. 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    போராட்டத்துக்கு அனைத்து ஆட்டோ சங்க கூட்டு கமிட்டி ஆதரவு தெரிவித்திருந்தன. கோவையில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    இதேபோல வேன்களும் இயக்கப்படவில்லை.#tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.
    சிவகங்கை:

    தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து சிவகங்கை மாவட்டத்தில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட கடைகள் இன்று அடைக்கப்பட்டன.

    சிவகங்கை நகரில் பஸ் நிலையம், மார்க்கெட் மற்றும் முக்கிய இடங்களில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    நகர் பகுதியில் அ.தி.மு.க. நகர பொருளாளர் முஸ்தபா தனக்கு சொந்தமான டீக்கடையை திறந்து வைத்து வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆனந்தன் உள்பட சிலர் கடையை அடைக்குமாறு வலியுறுத்தினர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்தப்பகுதியில் அ.தி.மு.க., தி.மு.க.வினர் திரண்டனர். இதனால் அங்கு மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சிவகங்கை நகரில் 90 சதவீத கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

    இதே போல் மாவட்டத்தின் பிற பகுதிகளான காளையார் கோவில், தேவகோட்டை, காரைக்குடி, கல்லல் ஆகிய பகுதிகளில் 50 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

    மானாமதுரையில் புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை, சுந்தரபுரம் கடை வீதி ஆகிய பகுதிகளில் கடைகள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்தன.#tamilnews
    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பலியான 7 பேரின் உடல்கள் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக போராட்டக்குழுவினர் அறிவித்ததையடுத்து கடந்த 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசாரிடையே மோதல் ஏற்பட்டதால் தூத்துக்குடியில் 21-ந் தேதி கலவரம் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கி சூடு மற்றும் தடியடி நடத்தப்பட்டது.

    இந்த சம்பவங்களில் 10 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கி சூட்டில் காயமடைந்து சிகிச்சை பெற்ற 3 பேர் பலியானதையடுத்து சாவு எண்ணிக்கை 13-ஆக உயர்ந்தது. இதனால் தூத்துக்குடியில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியது. தூத்துக்குடி நகரில் ஆங்காங்கே தீவைப்பு மற்றும் மோதல் நடந்தபடியே இருந்தன. இதனால் 144 தடை உத்தரவு 25-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இயல்புநிலை திரும்ப பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் நேற்று வரை வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. இதனால் 144 தடை உத்தரவை நாளை மறுநாள் (27-ந் தேதி) காலை 8 மணி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டிருந்தது.

    இதன்படி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் வாகனங்களில் பேரணியாக செல்வதற்கும், அரிவாள், கம்பு உள்பட அபாயகரமான பொருட்களை கொண்டு செல்வதற்கும், சாதி கொடிக்கம்புகள் கொண்டு செல்வதற்கும், வாடகை வாகனங்கள் மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை அழைத்து செல்வதற்கும் 144 பிரிவின் கீழ் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த தடை உத்தரவு பள்ளி-கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. #SterliteProtest
    ×