search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் பலியான‌ பெண்ணின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்
    X

    பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் பலியான‌ பெண்ணின் உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்

    செய்துங்கநல்லூர் அருகே பஸ்சுக்கு தீவைத்த சம்பவத்தில் பலியான‌ பெண்ணின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 3-வது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். #sterliteprotest
    நெல்லை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22ந்தேதி நடந்த போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினார்கள். பல்வேறு இடங்களில் பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.

    இந்த நிலையில் கடந்த 25-ந்தேதி செய்துங்கநல்லூர் அருகே உள்ள கருங்குளம் புதுபாலம் அருகே நெல்லை நோக்கி வந்த அரசு பஸ்சுக்கு சிலர் தீவைத்தனர். இதில் பஸ் முழுவதும் எரிந்து சேதமானது. பஸ்சில் இருந்த பயணிகள் பலரும் பதறியடித்து இறங்கி உயிர் தப்பினர்.

    அப்போது பஸ்சில் இருந்து கீழே இறங்க முயன்ற மெஞ்ஞானபுரம் நவலடிபுதூரை சேர்ந்த சுடலை கோனார் (வயது 78), அவருடைய மனைவி வள்ளியம்மாள் (63) தீயில் சிக்கினர். அவர்களை அதே பஸ்சில் வந்த காரைக்குடியை சேர்ந்த ஜெபகுமார் (23) மீட்க முயன்றார்.

    இந்த சம்பவத்தில் அவர்கள் 3 பேரும் தீக்காயம் அடைந்தனர். அவர்கள் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் பலத்த தீக்காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த வள்ளியம்மாள் (வயது 63) சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் இறந்த வள்ளியம்மாளின் உடல் நேற்று முன்தினம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவரது உறவினர்களிடம் போலீசார் உடலை ஒப்படைக்க முயன்றனர். ஆனால் அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பலியான வள்ளியம்மாள் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நஷ்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    நேற்று 2-வது நாளாக அவர்களது போராட்டம் நீடித்தது. அப்போது அவர்கள் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட முயன்றனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தாசில்தார் கந்தசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து இன்று 3-வது நாளாக வள்ளியம்மாள் உடல் வாங்கப்படவில்லை. அவரது உறவினர்களிடம் தொடர்ந்து போலீசார் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கோரிக்கை நிறைவேறும் வரை உடலை வாங்கப்போவதில்லை என்று உறவினர்கள் தெரிவித்துள்ளனர். #sterliteprotest
    Next Story
    ×