search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு நடந்த 30வது நாள் -  பேரணி, மவுன அஞ்சலி நடத்த திட்டமா?
    X

    துப்பாக்கி சூடு நடந்த 30வது நாள் - பேரணி, மவுன அஞ்சலி நடத்த திட்டமா?

    துப்பாக்கி சூடு நடந்த 30-வது நாளையொட்டி தூத்துக்குடியில் இன்று மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியானதால் போலீஸ் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த மே மாதம் 22-ந்தேதி பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

    அரசு மற்றும் தனியார் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. கலெக்டர் அலுவலகமும் சூறையாடப்பட்டது. இதனால் தூத்துக்குடியில் பதட்டம் உண்டானது. பதட்டத்தை தணிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தார்கள். துப்பாக்கி சூட்டில் பலியானவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து தூத்துக்குடியில் சகஜ நிலை திரும்பியது.

    இதனிடையே துப்பாக்கி சூடு நடந்த 30-வது நாளையொட்டி தூத்துக்குடியில் இன்று வியாபாரிகள் அஞ்சலி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளனர். சங்க அலுவலகத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் பங்கேற்க அனுமதியில்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    அதே வேளையில் போராட்டம் நடைபெற்ற பல்வேறு பகுதியில் இன்று மவுன ஊர்வலம் மற்றும் அஞ்சலி நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மற்றும் பலியானவர்களின் குடும்பத்தினர் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டில் பலியானவர்களை அஞ்சலி செலுத்த உள்ளதாகவும் தகவல் பரவியது.

    இதனால் அசம்பாவிதம் நிகழக்கூடாது என்று கருதி தூத்துக்குடியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. போலீஸ் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முகராஜேசுவரன், டி.ஐ.ஜி.கள் பிரதீப்குமார், கபில்குமார் சரத்கார் ஆகியோர் தலைமையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் அருண்சக்திகுமார் (நெல்லை), முரளிரம்பா (தூத்துக்குடி) மற்றும் 10 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் தூத்துக்குடியில் முகாமிட்டு உள்ளனர்.

    தூத்துக்குடி நகர் பகுதிகளில் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். போலீசார் நகரின் முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளனர். மேலும் ரோந்துபணியிலும் போலீசார் ஈடுபட்டு உள்ளார்கள். இதனால் தூத்துக்குடியில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×