search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political Parties"

    பாரபட்சமின்றி புயல் நிவாரணம் வழங்க வலியுறுத்தி திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு அரசியல் கட்சியினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் கஜா புயலின் தாக்கத்தால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கக்கோரி பொதுமக்கள் பல்வேறு இடங்களில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் பல்வேறு அரசியல் கட்சியின் சார்பில் திருத்துறைப்பூண்டி நகராட்சி அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. போராட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட வக்கீல் அணி தலைவர் தர்மராஜன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் சந்திரராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், ம.தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, பா.ம.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    அரசு ஓட்டு வீடு, கூரை வீடு, மாடி வீடு என பாரபட்சமின்றி அனைவருக்கும் நிவாரணத்தொகை வழங்க வேண்டும். அனைவருக்கும் அரசு வழங்கும் 27 நிவாரண பொருட்கள் வழங்க வேண்டும். நெற்பயிரை இழந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும். உயிரிழந்த மாடுகளுக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். ஆடுகளுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். ஒரு தென்னை மரத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
    திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்றக் கூறிய டிராபிக் ராமசாமியை அரசியல் கட்சியினர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #trafficRamasamy

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிக்கு நேற்று மாலை டிராபிக் ராமசாமி காரில் வந்தார். திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் பேனர்களை கண்டவுடன் டிராபிக் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அங்கிருந்த பேனர்களை தனது செல்போன் மூலம் படம் எடுத்துக்கொண்டு இருந்தார்.

    இதுகுறித்த தகவல் அங்கு பரவியதால் திருவையாறு கடைவீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி கேள்விப்பட்டதும் திருவையாறு போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அங்கு பேனருக்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகளையும், கம்புகளையும் அகற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்தார். இதனால் பேரூராட்சி பணியாளர்கள் அந்த கட்டைகளை அப்புறப்படுத்த முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டிராபிக் ராமசாமியை தாக்க முயன்றனர். உடனே அவருடன் வந்த பாதுகாப்பு போலீசார், டிராபிக் ராமசாமியை பத்திரமாக அவரது காருக்கு அழைத்து சென்றார்.

    அப்போது டிராபிக் ராமசாமி ஆவேசமாக, என்னை தாக்க முற்பட்டவர்கள் மீதும், கொலை செய்வதாக கூறியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டை செல்வேன் என்று கூறினார்.

    இந்த சம்பவத்தால் திருவையாறு கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து டிராபிக் ராமசாமி பாபநாசம் பகுதிக்கு சென்றார். ஆனால் அவர் வருவதை தகவல் அறிந்து பாபநாசம் கடை வீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை போலீசாரே இரவோடு இரவாக அகற்றினர். #trafficRamasamy

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #18MLAsCaseVerdict
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.

    நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள ஆட்சி, நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டமாகும்.

    நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக தப்பிப் பிழைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சி, மக்களால் மிக விரைவில் தண்டிக்கப்பட்டே தீரும் என இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி உறுதியாக நம்புகிறது.

    மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்றபடி, எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலகி, மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியும் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியதன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தீர்ப்பின் முழுமையான விவரங்கள் தெரிந்த பிறகுதான் மேற்கொண்டு எந்த கருத்தையும் தெரிவிக்க முடியும். இதில் 18 எம்.எல்.ஏ.க் களும் மேல்முறையீடு செய்வார்களா? இல்லையா? என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க முடியும்.

    ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடத்த வேண்டிய இடைத்தேர்தலை தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

    ஒருவேளை இந்த தீர்ப்புக்கும், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கும் ஏதோ ஒரு உள்ளார்ந்த உளவு இருப்பது மாதிரிதான் எண்ணத் தோன்றுகிறது.

    18 தொகுதியில் உள்ள மக்களுக்கு கிட்டதட்ட 2 ஆண்டாக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை.

    எனவே இனியும் காலம் கடத்தாமல் திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

    தமிழகத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். பிறகு இந்த வழக்கு 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டது.

    இன்றைக்கு வெளிவந்திருக்கும் 3-வது நீதிபதியின் தீர்ப்பின் மூலம் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்ட மன்ற உறுப்பினர்களும் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து தான் இறுதி முடிவு கிடைக்கும்.

    தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இறுதியான தீர்ப்பினால் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    இந்த பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்றாலும், சுமார் 400 நாட்களுக்கு மேலாக வழக்கில் ஈடுபட்டுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்குட்பட்ட மக்கள், தங்கள் தொகுதி பிரச்சனையை கூற பிரதிநிதியின்றி, தொகுதி வளர்ச்சி குறித்து சட்டமன்றத்தில் தங்களது தேவைகளை கூறும் உறுப்பினரின்றி குழம்பிய நிலையில் இருந்துள்ளனர். இனி வருங்காலங்களில், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு நிர்வாகம் சார்ந்த வழக்குகளையும் அவசர வழக்காக விசாரித்து காலதாமதமின்றி தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன்:-

    இந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதன் மூலமாகதான் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் இருக்கின்ற எல்லா தலைவர்களும் பெரும்பான்மையான மக்கள் தங்களோடுதான் இருக்கிறார்கள் என்று சுயதம்பட்டம் அடித்து கொண்டிருக்கின்ற வேளையில் உண்மை தெரிய வேண்டும். பல அரசியல் பிரச்சனைகளுக்கும், ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களுக்கும் அதுதான் தீர்வாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #18MLAsCaseVerdict
    பிற அரசியல் கட்சிகள் செய்த தவறுகளை மக்கள் நீதி மய்யம் செய்யாது என்று கமல்ஹாசன் உறுதிபட தெரிவித்துள்ளார். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    சென்னை:

    சென்னையிலுள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ- மாணவிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தனர்.

    ஒரு சிலர் தங்கள் ஓட்டுக்களை விற்பதனால் ஊழலின் பாரம் நம் அனைவரின் மேலும் விழுகிறது. ஓட்டுகளை விற்பதனால் ஏற்படும் தீமை குறித்து மாணவர்களாகிய நீங்கள் தான் மற்றவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

    அரசியல்வாதிகள் என்னிடம் என் அரசியல் அனுபவம் குறித்து கேட்கிறார்கள். இவர்கள் 40 வருடங்களாக என்ன செய்யக் கூடாது என்பதை கோட்டையில் இருந்தே எனக்கு கற்றுக் கொடுத்தவர்கள். எனவே அவர்களுக்கு எனது நன்றி.

    பிற அரசியல் கட்சிகள் செய்த தவறுகளை மக்கள் நீதி மய்யம் செய்யாது. மய்யம் விசில் செயலி மக்கள் நீதி மய்யம் கட்சி உறுப்பினர்களுக்கான பெருமை வாய்ந்த ஆயுதம். அது சர்வதேச அளவில் விருதுகளை வென்றுள்ளது.

    மய்யம் விசில் செயலியை கொண்டு வளமான இந்தியாவை உருவாக்க முடியும். மய்யம் விசில் செயலியை இன்று பலர் பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் அதிகமானோர் அதைப் பயன்படுத்துவதற்கு உதவியாக பயிலரங்கம் ஒன்றை நடத்த உள்ளோம்.

    உடற்பயிற்சி செய்து உடலை பாதுகாப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நமது நாட்டைக் கட்டமைப்பதும் முக்கியம் என்பதை மாணவ- மாணவிகளாகிய நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    இன்றைய அரசியல் சூழலை புரிந்துகொண்டு உங்களுக்கு எது தவறாக தோன்றுகிறதோ அதை மாற்றுவதற்கான வலிமை கொள்ள வேண்டும். எனது முன் அமர்ந்திருக்கும் நீங்கள் தான் நாட்டின் தலைவர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    பின்னர் மாணவ- மாணவிகள் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சி தேர்தலில் வேறு எந்தக் கட்சியுடனும் கூட்டணி சேராமல் தனித்து போட்டியிட வேண்டும் என்று கல்லூரி மாணவ- மாணவிகள் கமல்ஹாசனிடம் கேட்டுக்கொண்டனர்.

    முன்னதாக தென் சென்னை வாரிய கோட்டூர் நறிக்குறவர் என்கிற குருவிக்காரர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசனை அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.

    அப்போது அவர்கள் தயாரித்த மாலைகளை கமல்ஹாசன், கட்சி நிர்வாகிகள் ஸ்ரீபிரியா, கமீலா நாசர் ஆகியோருக்கு அணிவித்தனர். #MakkalNeedhiMaiam #KamalHaasan
    பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். #ManekaGandhi #metoo
    புதுடெல்லி:

    மீடூ பிரசாரம் மூலம் பெண்கள் பணியிடங்களில் சந்தித்த பாலியல் தொல்லைகள் வெளியாகி வருகிறது. இதற்கு ஆதரவு தெரிவிக்கும் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். 

    இப்போது பாலியல் புகார்களை விசாரிக்க விசாரணை குழுவை அமைக்க வலியுறுத்தி அரசியல் கட்சிகளுக்கு மேனகா காந்தி கடிதம் எழுதியுள்ளார். 

    “அரசியல் கட்சிகள் உள் விசாரணை குழுவை அமைக்க கோரி அரசியல் கட்சியின் தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளேன். இங்கு 6 தேசிய கட்சிகள், 90 சிறிய கட்சிகள் உள்ளது. அரசியல் கட்சிகளின் அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான பெண்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்,” என கூறியுள்ளார்.  #ManekaGandhi #metoo
    கூட்டுறவு வங்கியில் வேட்புமனு வாங்க அதிகாரிகள் வராததால் அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    விக்கிரமங்கலம்:

    அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு கூட்டுறவு சங்க தேர்தல் பிரச்சினைகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி நேற்று மதியம் 12 மணி வரை வேட்பு மனு வாங்குவதற்கு தேர்தல் அதிகாரிகள் யாரும் வரவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க., அ.ம.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி முறையாக வேட்புமனு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என அறிவித்ததை அடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்தினர்.இதையடுத்து அம்பாபூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அறிவிப்பு பலகையில் தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக நோட்டீஸ் ஒட்டப்பட்டது. 
    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
    புதுடெல்லி:

    இந்தியாவில் கடந்த சில தேர்தல்களில் மின்னணு வாக்குப்பதிவு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால் காகித பயன்பாடு குறைவதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் மிச்சப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இதற்கிடையே, கடந்த பாராளுமன்ற தேர்தல் உள்பட சமீபத்தில் நடைபெற்ற தேர்தல்கள் வரை நடைபெற்ற மின்னணு வாக்குப்பதிவு முறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக காங்கிரஸ், திரிணாமுல், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன.



    இந்நிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தை அணுக 17 கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. #ParlimentElection2019 #BallotPaper
    பாராளுமன்றத் தேர்தலுடன் அனைத்து மாநில சட்டமன்றத் தேர்தலையும் ஒரே சமயத்தில் நடத்துவது சாத்தியமா? என்பது குறித்து அரசியல் கட்சிகளிடம் சட்ட ஆணையம் இன்று கருத்துக்களை கேட்க உள்ளது. #OneNationOneElection #LawCommission
    புதுடெல்லி :

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக மத்திய அரசு காய்நகர்த்தி வருகிறது.
    மத்திய சட்ட ஆணையமும் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

    இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.



    இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் முடிவு செய்தது. அதன்படி டெல்லியில், இன்றும் நாளையும் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    இக்கூட்டம் டெல்லி கான்மார்க்கெட்டில் உள்ள லோக்நாயக் பவனில் நடைபெற உள்ளது. முதல் நாள் கூட்டத்தில் முக்கிய அரசியல் கட்சித்தலைவர்களின் தலைவர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்க உள்ளனர்.  அதிமுக சார்பில், மக்களவை துணை சபாநாயகர் மு. தம்பிதுரை, அக்கட்சியின் நாடாளுமன்றக்குழு தலைவர் பி.வேணுகோபால், தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அதிமுகவின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளனர்.  #OneNationOneElection #LawCommission
    நாடாளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளுடன் 7, 8-ந் தேதிகளில் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்துகிறது. #LawCommission #SimultaneousElections
    புதுடெல்லி:

    நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.வருடத்தின் பல மாதங்களில் அடுத்தடுத்து சட்டசபை தேர்தல்கள் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிப்பதாலும், மக்கள் பணம் செலவழிவதாலும் அதை தவிர்க்க ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது நல்லது என்று அவர் கருதுகிறார்.

    அவரது யோசனைக்கு சட்ட ஆணையமும் ஒப்புதல் அளித்துள்ளது. 2019-ம் ஆண்டு மற்றும் 2024-ம் ஆண்டு என இரண்டு கட்டங்களாக ‘ஒரே நேரத்தில் தேர்தல்’ திட்டத்தை நடைமுறைப்படுத்தலாம் என்று சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    அதாவது, 2021-ம் ஆண்டுக்குள் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும், மற்ற மாநிலங்களில் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தல் நடத்தலாம் என்றும் சிபாரிசு செய்துள்ளது.

    இதை நடைமுறைப்படுத்த சில மாநில சட்டசபைகளின் பதவிக்காலத்தை குறைக்க வேண்டி இருக்கும். வேறு சில மாநிலங்களின் பதவிக்காலத்தை நீட்டிக்க வேண்டி இருக்கும். இதற்காக அரசியல் சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் திருத்தம் செய்ய சட்ட ஆணையம் சிபாரிசு செய்துள்ளது.

    இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது. டெல்லியில், 7 மற்றும் 8-ந் தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளது.

    பா.ஜனதா, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் ஆகும். இதுபோல், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு முன்பு ஒருமுறை சட்ட ஆணையம் கடிதம் எழுதியது. ஆனால், எந்த அரசியல் கட்சியும் அதற்கு பதில் அளிக்கவில்லை.

    இந்த சூழ்நிலையில், ஆலோசனை கூட்டத்துக்கு சட்ட ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.  #LawCommission #SimultaneousElections #Tamilnews
    தேர்தல் ஆதாயத்துக்காக அரசியல் கட்சிகள் மதத்தை பயன்படுத்துவதை தடுக்க உத்தர விடகோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. #SupremCourt #Religion
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டு வக்கீலும், பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவருமான அஸ்வினி உபாத்யாய் சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்து உள்ளார்.

    அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-

    தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் தங்கள் ஆதாயத்துக்காக மதத்தை தவறாக பயன்படுத்துகின்றன. இதேபோல் வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள். இந்த போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் மதசார்பின்மை, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு பாதிக்கப்படுகிறது. மேலும் தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாக நடைபெறுவதையும் இது பாதிக்கிறது.

    இது தொடர்பான திருத்த மசோதா கடந்த 1994-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் 1996-ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் அந்த மசோதா காலாவதியாகி விட்டது. ஆனால் அதன்பிறகு அந்த மசோதாவை கொண்டு வர தேர்தல் கமிஷன் யோசனை தெரிவித்த போதிலும், அரசாங்கத்தின் தரப்பில் அதுதொடர்பான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை.

    எனவே தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், வேட்பாளர்களும் மதத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசுக்கும், தேர்தல் கமிஷனுக்கும் உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

    இந்த மனு அடுத்த மாதம் (ஜூலை) 4-ந் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.  #SupremCourt #Religion #Tamilnews
    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதை வைத்து அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முயற்சிப்பதாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் குற்றச்சாட்டி உள்ளது. #Thoothukudishooting
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    1994-ம் ஆண்டு முதல் மத்திய அரசின் ஆட்சிப் பொறுப்புகளில் இருந்த காங்கிரஸ் கட்சியும், பா.ஜனதா கட்சியும் வேதாந்தா நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்தன. ஸ்டெர்லைட்டுக்கு ஏற்பட்ட நெருக்கடியின் போது, வேதாந்தா நிறுவனத்தை பாதுகாத்தவர்களும் இக்கட்சியின் தலைவர்களே.

    இக்கட்சிகளின் முன்னாள்- இந்நாள் தலைவர்களும், உள்ளூர் தலைவர்களும், 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் இயங்குவதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்பது மட்டுமல்ல இந்த ஆலையால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் சீரழிவுகளுக்கும், புற்றுநோய்க்கு ஆளாகி மக்கள் கொல்லப்படுவதற்கும், 2018 மே 22 அன்று 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டிய முதற் குற்றவாளிகள் ஆவார்கள்.

    1994-ம் ஆண்டு முதல் 2018 வரை வேதாந்தா நிறுவனத்திற்கு உறுதுணையாக இருந்த தி.மு.க, அ.தி.மு.க தலைவர்கள் இன்று “ஸ்டெர்லைட்டை மூடு” என்றும், “ஸ்டெர்லைட்டை மூடிவிட்டோம்” என்றும் நாக்கு கூசாமல் பேசுகின்றனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தாரிடம் நிதியுதவி அளித்து தங்களுடைய குற்றச் செயல்களில் இருந்து தப்பிக்க வழி தேடுகின்றனர்.

    தி.மு.க.வுடனும், காங்கிரசுடனும் கூட்டணி அமைத்துள்ள ம.தி.மு.க உள்ளிட்ட கட்சிகளும் இக்குற்றவாளிகளோடு கூடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு நாடகமாடுகின்றன. வரப்போகும் தேர்தலில் மக்கள் சாவுகளை முன் வைத்து அரசியல் ஆதாயம் தேடவும் முயல்கின்றன.



    தூத்துக்குடி மக்கள் கடந்த 22 ஆண்டுகளாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடி வந்ததால் 28-ந்தேதி இந்த ஆலைக்கு நிரந்தரமாக பூட்டுப் போடுகிறோம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த ஆலை தூத்துக்குடியில் இருந்து அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மக்கள் முனைப்பாக இருக்கின்றனர். சட்டமன்றத்தின் மூலம் அதற்கான சிறப்பு சட்ட வடிவத்தை நிறைவேற்றாமல், அரசாணை என்ற மழுப்பல் அறிக்கை என்பது வேதாந்தா நிறுவனத்தை பாதுகாக்கவே வழி வகுக்கும்.

    நிலம், நீர், காற்று, கடல் என தூத்துக்குடியின் சுற்றுச்சூழலையும் இயற்கை வளங்களையும் சீரழித்த பெருங்குற்றத்திற்காக வேதாந்தா தலைவர் அனில் சந்தீப் அகர்வாலும், ஸ்டெர்லைட் உயரதிகாரிகளும் கடுமையான குற்ற வழக்குகளின் கீழ் கைது செய்யப்பட வேண்டும். வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு அரசுகள் அனுமதியளித்ததால் பல்லாண்டுகளாக சீரழிக்கப்பட்ட இயற்கை வளங்களை சீரமைக்க வேண்டியதும், துப்புரவுப்படுத்த வேண்டியதும் அரசுகளின் கடமையாகும்.

    எனவே சீரமைப்பு பணிகளுக்கு தேவைப்படும் பெருஞ்செலவுகளுக்காக வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட வேண்டும். ஸ்டெர்லைட்டால் சீரழிக்கப்பட்ட தூத்துக்குடி வட்டாரத்தில் சீர்கேடுகளை ஆய்வு செய்ய உண்மை அறியும் குழுவை நியமிக்கவும், அதில் எதிர்ப்பு இயக்கம் சார்பாக அறிவியலாளர்கள் (விஞ்ஞானிகள்) பங்கேற்கவும் அரசு வழி செய்ய வேண்டும். தூத்துக்குடி வட்டாரத்தில் வாழும் மக்களின் உடல்நிலையை கண்டறிய உயர் மருத்துவக் குழுவை நியமித்து அரசின் முழுப்பொறுப்பிலான சிறப்பு மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்.

    முற்றுகை போராட்டத்தில் கொல்லப்பட்ட 13 பேரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் அரசு உதவித்தொகை வழங்குவது மட்டும் தீர்வல்ல. சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் தோல் நோய், மூச்சிளைப்பு நோய், புற்றுநோய் என இதுவரை பாதிக்கப்பட்டவர்களையும் கண்டறிந்து அவர்களுக்குரிய இழப்பீட்டுத் தொகையும் அரசு வழங்க வேண்டும்.

    துப்பாக்கிச் சூட்டில் மக்களை குறிபார்த்து சுடும் அதிநவீன துப்பாக்கிகளை பயன்படுத்த திட்டமிட்டவர்கள் யார்? அதற்கான நடவடிக்கையில் அமைச்சரவையின் பங்களிப்பு என்ன? என்பது பற்றி அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

    மேலும் அதற்கான ஆணிவேராக, மூளையாக செயல்பட்ட தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் பொறுப்பில் இருந்த வெங்கடேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த மகேந்திரன், டி.எஸ்.பி செல்வ நாகரத்தினம், சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் ஹரிஹரன் ஆகிய உயரதிகாரிகளின் மீது கொலைக் குற்றத்திற்கான வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Thoothukudishooting

    விவசாயிகள் பிரச்சனைக்கு எந்த ஒரு அரசியல் கட்சியும் துணை நிற்பதில்லை என அய்யாக்கண்ணு குற்றம்சாட்டியுள்ளார்.
    காஞ்சீபுரம்:

    தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாகண்ணு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை விவசாயத்திற்கு பயன்படுத்துவதை தடைசெய்யக்கோரி மார்ச் 1-ந் தேதி முதல் 100 நாட்கள் குமரிமுதல் கோட்டை வரை 32 மாவட்டங்கள் வழியாக விவசாயிகள் விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

    காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் எண்ணத்தூர், உத்திரமேரூர், வேடந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்ட அவர் காஞ்சீபுரம் வந்தார்.

    பின்னர் அய்யாக்கண்ணு மாவட்ட கலெக்டர் பொன்னையாவை சந்தித்து பாலாற்றில் 3 கிலோ மீட்டருக்கு ஒன்று என தடுப்பணை கள் கட்ட வேண்டும், மாவட் டத்தில் உள்ள அனைத்து சீமைகருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்.

    அப்போது அய்யாக்கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    விவசாயிகளின் உற்பத்தி பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க யாரும் முயற்சி மேற்கொள்ளவில்லை. காலம்காலமாக அரசியல் வாதிகள் விவசாயிகளை அடிமை போல் வைத்துள்ளனர்.

    அ.தி.மு.க, தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சி என எந்த ஒரு அரசியல் கட்சியும் விவசாயிகளுக்காக துணை நிற்கவில்லை.

    மத்திய மாநில அரசுகளின் எந்தவொரு திட்டத்திற்காகவும், விவசாய நிலங்களை கையகப்படுத்த விட மாட்டோம். மீறி கையகப்படுத்தினால் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் சென்று நீதியை பெறுவோம்.

    நடிகர் ரஜினிகாந்த் நதிகள் இணைப்பிற்காக தருவேன் என்று சொன்ன 1 கோடி ரூபாயை என்னிடமோ அல்லது மத்திய அரசிடமோ இதுவரை தரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக அய்யாக்கண்ணு கலெக்டர் அலுவலக வளாகத்தில் பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அவருடன் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில துணைபொதுச் செயலாளர் தீனன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். #Tamilnews
    ×