search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic ramasamy"

    கொடநாடு வீடியோ விவகாரத்தில் சிபிஐ விசாரணை கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. #SC #KodanadEstate #CBI
    புதுடெல்லி:

    சுப்ரீம் கோர்ட்டில், டிராபிக் ராமசாமி தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில் கூறியிருப்பதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். பின்னர் 10-க்கும் மேற்பட்ட கொள்ளையர்கள் எஸ்டேட்டில் புகுந்து பல முக்கிய ஆவணங்களை திருடிச் சென்றனர்.

    இச்சம்பவத்தை தொடர்ந்து, ஜெயலலிதாவின் கார் டிரைவராக இருந்த கனகராஜ் உள்பட 5 பேர் அடுத்தடுத்து இறந்தனர்.

    இவர்கள் விபத்தில் இறந்ததாக சொன்னாலும், அது சந்தேகத்துக்கு இடமான ஒன்றாகவே இருந்தது. மேலும் சம்பவம் குறித்த விசாரணை நீதிமன்றத்தில் தற்போது வரை நிலுவையில் இருந்து வருகிறது.

    இந்நிலையில், கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக கடந்த வாரம் தெகல்கா இணைய தள முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் ஆவணப்படம் ஒன்றை வெளியிட்டார்.


    அதில் மேற்கண்ட சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நேரடி தொடர்பு இருப்பதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார். இதே போல் வழக்கில் 2-வது குற்றவாளியான சயான் மற்றும் மனோஜ் ஆகியோரும் கொலை, கொள்ளை சம்பவங்கள் அனைத்திலும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் நடந்தது என தெரிவித்துள்ளனர்.

    எனவே, இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் ஜி.எஸ்.மணி ஆஜராகி வாதிட்டார்.

    இதையடுத்து நீதிபதிகள், ‘மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுக்கு ஆரம்பக்கட்ட முகாந்திரம் எதுவும் இல்லை. அவர் பத்திரிகை மற்றும் டி.வி.சேனல்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் வழக்கு தொடர்ந்துள்ளார். எனவே, இந்த சூழ்நிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது இல்லை என்று முடிவு செய்கிறோம். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறோம்’ என்று உத்தரவிட்டனர். #SC #KodanadEstate #CBI
    திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை அகற்றக் கூறிய டிராபிக் ராமசாமியை அரசியல் கட்சியினர் தாக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #trafficRamasamy

    திருவையாறு:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு பகுதிக்கு நேற்று மாலை டிராபிக் ராமசாமி காரில் வந்தார். திருவையாறு கடைவீதியில் வைக்கப்பட்டு இருந்த அரசியல் கட்சிகளின் பேனர்களை கண்டவுடன் டிராபிக் ராமசாமி அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் அங்கிருந்த பேனர்களை தனது செல்போன் மூலம் படம் எடுத்துக்கொண்டு இருந்தார்.

    இதுகுறித்த தகவல் அங்கு பரவியதால் திருவையாறு கடைவீதி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுபற்றி கேள்விப்பட்டதும் திருவையாறு போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு வந்து பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுத்தனர்.

    அப்போது அங்கு பேனருக்காக வைக்கப்பட்டிருந்த கட்டைகளையும், கம்புகளையும் அகற்ற வேண்டும் என்று டிராபிக் ராமசாமி தெரிவித்தார். இதனால் பேரூராட்சி பணியாளர்கள் அந்த கட்டைகளை அப்புறப்படுத்த முயன்றனர்.

    அப்போது அங்கு வந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், டிராபிக் ராமசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் முற்றியது. ஒரு கட்டத்தில் டிராபிக் ராமசாமியை தாக்க முயன்றனர். உடனே அவருடன் வந்த பாதுகாப்பு போலீசார், டிராபிக் ராமசாமியை பத்திரமாக அவரது காருக்கு அழைத்து சென்றார்.

    அப்போது டிராபிக் ராமசாமி ஆவேசமாக, என்னை தாக்க முற்பட்டவர்கள் மீதும், கொலை செய்வதாக கூறியவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க ஐகோர்ட்டை செல்வேன் என்று கூறினார்.

    இந்த சம்பவத்தால் திருவையாறு கடை வீதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து டிராபிக் ராமசாமி பாபநாசம் பகுதிக்கு சென்றார். ஆனால் அவர் வருவதை தகவல் அறிந்து பாபநாசம் கடை வீதியில் வைக்கப்பட்டு இருந்த பேனர்களை போலீசாரே இரவோடு இரவாக அகற்றினர். #trafficRamasamy

    பரங்கிமலையில் சோனியா காந்தி பேனரை அகற்றகோரி டிராபிக் ராமசாமி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. #TrafficRamasamy #soniagandhi #karunanidhi

    ஆலந்தூர்:

    கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர்.

    அவர்களை வரவேற்று விமானநிலையத்தில் இருந்து கத்திபாரா பாலம் வரை காங்கிரஸ் கட்சியினர் பேனர்கள் வைத்து உள்ளனர். அனுமதி பெறாமல் பேனர்களை வைத்ததாக கூறியும் அதை அகற்ற கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று போராட்டம் நடத்தினார்.

    ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பரங்கிமலை தாபால் நிலையம் அருகே ரோட்டில் பிளாட்பாரத்தில் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், ஆலந்தூர் பகுதி செயலாளர் சீதாபதி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    அங்கு பரங்கிமலை போலீஸ் உதவி கமி‌ஷனர் கோவிந்த ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்தனர். போலீசாரிடம் அனுமதி பெற்று பேனர்கள் வைத்ததாக காங்கிரசார் தெரிவித்தனர். அதையடுத்து டிராபிக் ராமசாமியுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். #TrafficRamasamy  #soniagandhi #karunanidhi

    ஜெயலலிதா வீட்டை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது என்றும் இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். #Jayalalithahome #PoesGarden #TrafficRamasamy
    சென்னை:

    சென்னை ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கை தாக்கல் செய்தார். அதில், கூறியிருப்பதாவது:-

    ‘சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேரை குற்றவாளிகள் என்று பெங்களூரு சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை பெங்களூரு ஐகோர்ட்டு ரத்து செய்தாலும், அதை எதிர்த்து செய்யப்பட்ட அப்பீல் வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு தனிக்கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை உறுதி செய்துள்ளது. ஜெயலலிதா இறந்து விட்டதால், அவரை வழக்கில் இருந்து விடுவித்தாலும், வருமானத்துக்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்துக்களை பறிமுதல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்றுவது தவறானது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பாக, தமிழக அரசு கடந்த ஆண்டு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’.



    இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு பிளீடர் ஜெயபிரகாஷ் நாராயணன் ஆஜராகி, ‘இந்த வழக்கிற்கு பதில் அளிக்க கால அவகாசம் வேண்டும்’ என்றார்.

    மனுதாரர் டிராபிக் ராமசாமி சார்பில் ஆஜரான வக்கீல் அரவிந்தன் கூறியிருப்பதாவது:-

    ‘இந்த வழக்கு தொடர்ந்த பின்னர், சில முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவது குறித்து போயஸ் கார்டன் பகுதி மக்களில் கருத்தை தமிழக அரசு கேட்டுள்ளது.

    இதற்காக நடந்த கூட்டத்தில், அப்பகுதி மக்கள், வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக மாற்ற கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டை இதுபோல நினைவிடமாக மாற்றினால், அதனால் அப்பகுதியில் வசிப்பவருக்கு மிகப் பெரிய சிரமம் ஏற்படும் என்றும் பொதுமக்கள் வந்து சென்றால், எதிர்காலத்தில் போயஸ் கார்டன் குப்பை கூளங்களாக காட்சி அளிக்கும் என்று கூறியுள்ளனர். எனவே, இதுகுறித்து கூடுதல் மனு தாக்கல் செய்ய உள்ளோம்’.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை வருகிற 20ந் தேதிக்கு தள்ளிவைத்தனர். அதற்குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் கூடுதல் மனு தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். #Jayalalithahome #PoesGarden #TrafficRamasamy
    மெரினா கடற்கரையில் உள்ள சமாதிகளை மாற்றக் கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது தொடர்பாக டிராபிக் ராமசாமி இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டுள்ளார். #HighCourt #TrafficRamasamy
    சென்னை:

    ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி தஹிலரமானி, நீதிபதி துரைசாமி ஆகியோர் இன்று வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள்.

    அப்போது டிராபிக் ராமசாமி ஆஜராகி கூறியதாவது:-

    ‘மெரினா கடற்கரையில், கடலோர ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்ட பகுதியில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடலை அடக்கம் செய்ததை எதிர்த்தும், அங்குள்ள மறைந்த முதல்- அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் சமாதிகளை கிண்டிக்கு மாற்ற வேண்டும். 3 பேரது உடலை தோண்டி எடுக்க வேண்டும் என்றும் பொதுநல வழக்கு தொடர்ந்தேன்.


    இந்த நிலையில் கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்வது தொடர்பான வழக்கை விசாரித்த இந்த ஐகோர்ட்டு, என்னுடைய வழக்கை என் வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தும் தள்ளுபடி செய்துள்ளது. அந்த வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தார்.

    அதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி, ‘இதுகுறித்து ஐகோர்ட்டு பதிவுத்துறை அதிகாரிகளிடம் முறையிடுங்கள்’ என்று அறிவித்தார். #HighCourt #TrafficRamasamy
    மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும் என்று டிராபிக் ராமசாமி கூறினார்.
    கோவை :

    கோவை வந்த டிராபிக் ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னையில் உள்ள மெரினா கடற்கரையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. அது பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் இடம். அங்கு சமாதிகளை வைத்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து உள்ளனர். எனவே அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தேன்.

    இந்நிலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி மறைந்ததும், அவரை மெரினாவில் உள்ள அண்ணா சமாதியில் அடக்கம் செய்ய இடம் கேட்டு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்து மறுநாளே தீர்ப்பும் வழங்கப்பட்டது.

    நான் ஏற்கனவே தொடர்ந்த வழக்கை வாபஸ் பெறக்கோரி தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என்னையும், எனது வக்கீலையும் மிரட்டினார்கள். ஆனாலும் நாங்கள் வழக்கை வாபஸ் பெறவில்லை. இருந்தபோதிலும் கோர்ட்டு நான் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துவிட்டது.

    அதற்கான நகல் எனக்கு கிடைத்ததும், தற்போது மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகியோரின் சமாதிகளை அகற்றக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்படும். இதற்காக எனக்கு எத்தனை மிரட்டல்கள் வந்தாலும் பயப்படமாட்டேன். அங்கு இருக்கும் சமாதிகளை அகற்றும்வரை நான் ஓயமாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கந்தன்சாவடியில் தனியார் மருத்துவமனை கட்டுமான பணியின்போது சாரம் சரிந்ததில் 2 பேர் பலியான நிலையில் டிராபிக் ராமசாமி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த முறையீடு மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
    சென்னை:

    கந்தன்சாவடி கட்டிட விபத்து குறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை ஐகோர்ட்டில் தனியாக முறையீட்டு வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

    ‘‘300 ஏக்கர் உள்ள இந்த நிலம் அரசின் புறம்போக்கு நிலம் என்றும், இந்த நிலத்தை முறைகேடாக அரசு அதிகாரிகள் தனியாருக்கு வழங்கி உள்ளனர்.

    இவ்வாறு அரசு நிலத்தில் தனியாருக்கு கட்டிடம் கட்ட அனுமதி வழங்கியதில் விதிமீறல் நடந்துள்ளது. இவ்விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தனது மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மூறையீட்டு மனுவை அனுமதித்த நீதிபதிகள் கிருபாகரன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோரை கொண்ட அமர்வு,  இம்மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிவித்தார்.
    விக்கி இயக்கத்தில் எஸ்.ஏ.சந்திரசேகர் - ரோகிணி நடிப்பில் வெளியாகி இருக்கும் `டிராபிக் ராமசாமி' படத்தின் விமர்சனம். #TrafficRamasamy #SAChandrasekar
    டிராபிக் ராமசாமியின் வாழ்க்கை பற்றிய புத்தகத்தை விஜய் சேதுபதி படிக்க, அது திரையில் படமாக நகர்கிறது. கதையில் டிராபிக் ராமசாமியாக வரும் எஸ்.ஏ.சந்திரசேகர், தனது மனைவி ரோகிணி மற்றும் தனது குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். சமூகத்தில் நடக்கும் குற்றச் செயல்கள், மக்களுக்கு தொல்லை கொடுக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார் டிராபிக் ராமசாமி. 

    தனது கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கும் டிராபிக் ராமசாமி முதலில் இதுகுறித்து போலீசில் புகார் தெரிவிக்கிறார். ஆனால், அவர் அளிக்கும் புகார்களுக்கு காவல் நிலையத்தில் மதிப்பில்லாமல் போக, தனது அடுத்த கட்ட நடவடிக்கையாக நீதிமன்றத்தை நாடுகிறார். 



    தொடக்கத்தில் சிறிய சிறிய பிரச்சனைகளை கையில் எடுக்கும் டிராபிக் ராமசாமி அதில் வெற்றியும் காண்கிறார். இந்த நிலையில், நகர்ப் புறத்தில் மீன்பாடி வண்டிகளால் நிறைய உயிரிழப்பு ஏற்படுவதாக உணர்கிறார். மீன்பாடி வண்டிகளை ஓட்டக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டுள்ள நிலையில், அதை எப்படி ஓட்டலாம் என்று கோபப்படும் டிராபிக் ராமசாமி, இதுகுறித்து ஒரு கணக்கெடுப்பும் நடத்துகிறார். அதில் நிறைய பேர் உயிரிழந்துள்ளதும் தெரிய வருகிறது. 

    இந்த நிலையில், டிராபிக் ராமசாமிக்கும், ரவுடியான ஆர்.கே.சுரேஷுக்கும் பழக்கம் ஏற்படுகிறது. பொதுநலனுக்கா போராடும் டிராபிக் ராமசாமியையும் போலீசார் தாக்குவதால், அவர் மீது ஆர்.கே.சுரேஷுக்கு பரிதாபம் ஏற்படுகிறது. இதையடுத்து ராமசாமிக்கு அவர் சிறிய சிறய உதவிகளையும் செய்ய முன்வருகிறார். 

    இதில் மீன்பாடி வழக்கில் தொடர்புடையதாக சம்பந்தப்பட்ட அமைச்சர், மேயர் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக டிராபிக் ராமசாமி வழக்கு தொடர்கிறார். இதேபோல் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் டிராபிக் ராமசாமி வழக்கு போடுகிறார்.



    இந்த நிலையில், டிராபிக் ராமசாமியை கொல்ல பலரும் சதி செய்கின்றனர். அவர்களிடமிருந்து டிராபிக் ராமசாமியை ஆர்.கே.சுரேஷ் காப்பாற்றுகிறார். ஒரு கட்டத்தில் ஆர்கே.சுரேஷயும் கொல்ல சதி நடக்கிறது. 

    கடைசியில், டிராபிக் ராமசாமியின் வழக்குகளுக்கு நீதி கிடைத்ததா? கொலைகாரர்களிடம் இருந்து ஆர்.கே.சுரேஷ் தப்பித்தாரா? டிராபிக் ராமசாமியின் பயணம் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

    டிராபிக் ராமசாமியாக நடித்திருக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் திரையில், டிராபிக் ராமசாமியையே நினைவுபடுத்துகிறார். அவரது நடையிலும், உடையிலும், ஒவ்வொரு அசைவிலும் டிராபிக் ராமசாமி தெரிகிறார். குறிப்பாக இந்த வயதிலும் சந்திரசேகர் தன்னை வருத்திக் கொண்டே நடித்திருக்கிறார். 



    டிராபிக் ராமசாமியின் மனைவியாக நடித்துள்ள ரோகிணி, காவலராக பிரகாஷ்ராஜ், ரவுடி கதாபாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ், வழக்கறிஞராக லிவிங்ஸ்டன் என பலரும் அவர்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர். நீதிபதியாக அம்பிகா கலகலக்க வைத்திருக்கிறார். மற்றபடி இமான் அண்ணாச்சி, குஷ்பு, சீமான், மனோபாலா, மதன் பாப் என அனைத்து கதாபாத்திரங்களும் கதைக்கு வலுசேர்த்திருக்கின்றன. விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி சிறப்பு தோற்றத்தில் வருகின்றனர். டிராபிக் ராமசாமியின் பேத்தியாக நடித்திருக்கும் குழந்தையும் ரசிக்க வைத்திருக்கிறது.

    டிராபிக் ராமசாமியின் முழு வாழ்க்கையை அப்படியே படமாக எடுக்கவில்லை. மாறாக அவரது வாழ்க்கையில் நடந்த, அவர் சந்தித்த பிரச்சனைகளில் சிலவற்றை, குடும்பம், பாசம், போராட்டம், சமூக நலன் என மாசாலா கலந்து கொடுத்திருக்கிறார் இயக்குநர் விக்கி. அதுமட்டுமில்லாமல், இந்த காலத்து இளைஞர்கள், கண்முன் நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்டால் தான், நாடு திருந்தும், முன்னேறும் என்பதையும் படத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார். 

    பாலமுரளி பாலு பின்னணி இசை படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. குகன் எஸ்.பழனியின் ஒளிப்பதிவில் காட்சிகளும் சிறப்பாக வந்துள்ளன. 

    மொத்தத்தில் `டிராபிக் ராமசாமி' உத்வேகம். #TrafficRamasamy #SAChandrasekar
    எஸ்.ஏ.சந்திரசேகரன் நடிப்பில் விக்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் முன்னோட்டத்தை பார்த்து கமல் பாராட்டி இருக்கிறார். #TrafficRamasamy
    சமூகப் போராளியான டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையின் அடிப்படையில் உருவாகியிருக்கும் படம் 'டிராஃபிக் ராமசாமி'. இப்படத்தில் டிராஃபிக் ராமசாமியாக எஸ்.ஏ. சந்திரசேகரன் நடித்துள்ளார். அவரிடம் உதவி இயக்குநராக இருந்த விக்கி படத்தை இயக்கியுள்ளார். பாலமுரளி பாலா இசையமைத்துள்ளார், குகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். க்ரீன் சிக்னல் நிறுவனம் தயாரித்துள்ளது, 

    'டிராஃபிக் ராமசாமி' படத்தின் முன்னோட்டம் பார்த்த கமல்ஹாசன் படத்தைப் பாராட்டிக் கூறியுள்ளார். அவர் பேசும் போது, ``அஹிம்சைதான் சிறந்த வீரம் என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு இந்தியா. மகாவீரர் காலத்தில் தொடங்கி இது வெவ்வேறு வடிவங்களில் தோன்றி மறைந்திருக்கிறது. சாதாரண மனிதர்கள் அவர்களின் வீரத்தால் அசாதாரண வீரர்களாக இருந்திருப்பது புதிதல்ல. காந்தியைப் பார்த்திருக்கிறோம். நேருவைப் பார்த்திருக்கிறோம். ராஜாஜி எவ்வளவு தைரியசாலி என்று தெரியும். அம்பேத்கார் பற்றியும் தெரியும். இப்படி சாமான்யர்கள் தங்கள் வீரத்தால் எவ்வளவு உயரம் சென்றவர்கள் என்பதை ஒவ்வொரு காலத்திலும், ஒவ்வொரு படியிலும் பார்த்திருக்கிறோம். இவர்களால் தான் இந்தியச் சக்கரம் சுழல்வதாக நம்புகிறேன். 

    மகாத்மா காந்தி மாதிரி ஆள் கிடைக்கும் என்று பாராளுமன்ற கிணற்றுக்குள் தேடினால் கிடைக்க மாட்டார்கள். மகாத்மா மாதிரியானவரை பாத சாரிகளுக்குள் தேடினால் கிடைப்பார்கள். அப்படித் தேடாமல் கிடைத்தவர் தான் டிராஃபிக் ராமசாமி. இவரை ஊடகங்கள் வெவ்வேறு விதமாய் சித்தரித்ததுண்டு. இவரை ஒரு எக்ஸென்ட்ரிக் என்பதைப் போல சித்தரித்ததுண்டு. ஆனால் டிராஃபிக் ராமசாமி எல்லாருடைய மனதிலும் மனசாட்சியாக உறுத்திக் கொண்டிருக்கிறார். அப்படி ஒரு தைரியத்தைச் செயல்படுத்திய வீரர் இவர். அப்படிப்பட்டவரை இருக்கும் போதே படமாக்கும் முயற்சி, அதுவும் அவரே பார்த்துப் பாராட்டி ரசிக்கும் படி படமாக எடுத்திருப்பது பாராட்டுக்குரியது. படக்குழுவுக்கு இதுவே முதல் வெற்றி. அடுத்து வணிக வெற்றியும் வந்து சேரும்.



    எஸ்.ஏ.சி. அரசியல் வாடையில் படம் எடுப்பவரல்ல. முழு அரசியல் படமாக இறங்கி எடுப்பவர். அதுவும் அந்தக் காலத்திலேயே அவ்வளவு துணிச்சலாக அரசியல் படங்கள் எடுத்தவர். அவர் ஆரம்பித்து வைத்த அந்த மாதிரியான பாணி இன்றும் தொடர்கிறது.

    அவரே ஒரு இயக்குநராக இருந்தும் விக்கி என்கிற இன்னொரு இளம் இயக்குநருக்கு வாய்ப்பு கொடுத்து அவருக்கும் ஒரு தொடக்கம் அமைத்து இருப்பது பாராட்டுக்குரியது. நடந்து முடிந்த கதையை படமாக்கும் போது சிலவற்றை வளைக்கலாம். ஆனால் நடந்து கொண்டிருக்கும் கதையைப் படமாக எடுப்பது சிக்கலானது. நடந்த ஒரு கதையை `ஹேராம்` படமாக நான் எடுத்த போது எவ்வளவு சிக்கல்கள் வந்தன என்பதை நான் அனுபவித்திருக்கிறேன். 

    ஒரு படத்தில் முதலில் பாத்திரப் பொருத்தம் அமைவது கடினம். பெரிய நடிகர்களுக்கே சில நேரம் அமையாமல் போனதுண்டு. இந்தப் படத்தில் பாத்திரப் பொருத்தம் சிறப்பாக உள்ளது. எஸ்.ஏ.சியும் இந்த டிராஃபிக் ராமசாமியும் ஒன்றாக நடந்து போகும் போது சகோதர்கள் போல இருக்கிறார்கள். பிற்காலத்தில் அடுத்த தலைமுறை ஒரிஜினல் யார் என்று தெரியாமல் இவரையே டிராஃபிக் ராமசாமியாக ஞாபகம் வைத்திருக்கக் கூடும். அதில் தவறில்லை. அந்தப் பெயரும் உணர்வும் தான் ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டியவை. இப்படிப்பட்ட மனிதர்களின் வெற்றி தான் இந்தியாவின் வெற்றி. டிராஃபிக் ராமசாமி என்பவரை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவே அறிய வேண்டும். இந்தியாவின் வெற்றி இந்த மாதிரி சாமான்ய வீரர்களால் தான். 



    படத்தின் ட்ரெய்லர் பார்க்கும் போதே முழுப் படமும் பார்த்த மாதிரி உணர்ந்தேன். முழுப்படத்தையும் பார்க்க வேண்டும் என ஆவல் வந்தது. `போராளி` என்று ஒரு பாடல் `கோமாளி `என்று ஒரு பாடல் பார்த்தோம். இவரை கோமாளியாக்க எத்தனையோ பேர் குறிப்பாக அரசியல்வாதிகள் முயன்று தோற்றுவிட்டனர் என்பது தான் உண்மை. அந்தத் தோல்வியை மேலும் பிரஸ்தாபிக்கும் வகையிலும் அழுத்தமாக அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும் இந்தப் படம் இருக்கும். 

    எஸ்.ஏ.சி. தேர்ச்சி பெற்ற இயக்குநராக இருப்பவர் நடிகராகவும் இருந்து இயக்குநருக்கு உறுதுணையாகவும் இருந்திருக்கிறார், எல்லாம் நன்றாக அமைந்துள்ளன. இப்படத்தை ஓட்டிக் காட்ட வேண்டிய கடமை ரசிகர்களுக்கு உள்ளது.

    மீண்டும் சொல்கிறேன் வீரத்தின் உச்சகட்டம்தான் அஹிம்சை, அதற்கு உதாரணம் டிராஃபிக் ராமசாமி." இவ்வாறு கமல்ஹாசன் பாராட்டிக் கூறியுள்ளார்.
    எஸ்.ஏ.சந்திரசேகர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘டிராஃபிக் ராமசாமி’ படத்தின் டிரைலரில் எந்த பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது என்ற வசனம் ரசிகர்களை கவர்ந்துள்ளது. #TrafficRamasamy
    சமூக போராளி டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கையை மையப்படுத்தி `டிராஃபிக் ராமசாமி' என்ற பெயரில் திரைப்படம் தயாராகி உள்ளது. விக்கி இயக்கியிருக்கும் இந்த படத்தில் டிராபிக் ராமசாமியாக இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்திருக்கிறார். அவரது மனைவி கதாபாத்திரத்தில் ரோகினி நடித்துள்ளார். 

    சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருந்த நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில், என் சாவு கட்டிங் வாங்குற கபோதி கையில் இல்லை, என் சாவு சொம்பு தூக்குற ஜால்ராங்க கையிலும் இல்லை. கடவுள் என் கூட இருக்கும் வரை எந்த பரதேசியும் என் உயிரை டச் பண்ண முடியாது என்று எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் வசனம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

    எஸ்.ஏ.சந்திரசேகருடன் பிரகாஷ்ராஜ், ஆர்.கே.சுரேஷ், அம்பிகா, உபாசனா, கஸ்தூரி, மனோபாலா, மதன் பாப், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, மோகன்ராம், சேத்தன், தரணி, அம்மு ராமச்சந்திரன், பசி சத்யா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். விஜய் சேதுபதி, விஜய் ஆண்டனி, சீமான், குஷ்பூ உள்ளிட்டோர் சிறப்பு வேடத்தில் வருகின்றனர். 



    இப்படம் வருகிற ஜூன் 22-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்துள்ளனர். #TrafficRamasamy
    விக்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், இந்த கதையை ரஜினியை வைத்து இயக்க நினைத்தேன் என்று கூறினார். #TrafficRamasamy #SAChandrasekar
    கிரீன் சிக்னல் வழங்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். 

    விழாவில் இயக்குநர் ஷங்கர் பேசும் போது " டிராபிக் ராமசாமி என்னையும் பாதித்த ஒரு மனிதர். அவருக்குள் ஒரு ஹீரோயிசம் இருக்கும். அதைப் பார்த்து நான் மனசுக்குள் கை தட்டியதுண்டு. இவர் கதையைப் படமாக்க நானும் ஆசைப்பட்டேன். இவர் கத்தி எடுக்காத இந்தியன். வயசான அந்நியன் அம்பி. இவர் கதையில் ரஜினி சாரை வைத்து எடுக்கக் கூட நினைத்தேன்.



    எஸ்.ஏ.சி. சார் நடிக்கிறார் என்று அறிவிப்பு வந்ததும் வட போச்சே என்ற ஏமாற்றம். இருந்தாலும் மகிழ்ச்சி. இந்தப் படத்தைப் பார்க்க நான் காத்திருக்கிறேன்." என்றார். #TrafficRamasamy #SAChandrasekar

    விக்கி இயக்கத்தில் உருவாகி இருக்கும் டிராபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகரன் போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம் என்றார். #TrafficRamasamy #SAChandrasekar
    கிரீன் சிக்னல் வழங்கும் டிராஃபிக் ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. படத்தின் பாடல்களைக் கவிப்பேரரசு வைரமுத்து வெளியிட இயக்குநர் ஷங்கர் பெற்றுக் கொண்டார். 

    விழாவில் இயக்குநரும், கதை நாயகனுமான எஸ்.ஏ. சந்திரசேகரன் பேசும் போது,

    " படத்தின் இயக்குநர் விக்கி என்னுடன் 6 ஆண்டுகள் இருந்தார். அவர் சொன்ன கதைகள் பிடிக்கவில்லை என்று சொல்லி வந்தேன். ஒரு நாள் டிராஃபிக் ராமசாமியின் வாழ்க்கைக் கதையைப் படிக்கக் கொடுத்தார். இரவே படித்து விட்டேன். மறுநாளே படமாக எடுக்கலாம் என்றேன். முடிவு செய்ததும், ஐந்தாறு முறை டிராபிக் ராமசாமியைப் போய்ப் பார்த்தேன். அவரது நடை உடை பாவனைகளை உற்று நோக்கினேன். எனக்குள் பொருத்திக் கொண்டேன்.  



    இது வாழ்க்கை முழுக்க போராடி வரும் ஒருவரின் கதை. போராட வயது தேவையில்லை. போராடாமல் எதுவும் கிடைக்காது. தாயிடம் பால் குடிக்க வேண்டும் என்றால் கூட குழந்தை அழுதால் தான் கிடைக்கும், போராட வேண்டாம் என்றால் எப்படி? காந்தி போராடவில்லை என்றால் சுதந்திரம் கிடைத்து இருக்குமா? மெரினா போராட்டம் தானே நம் கலாச்சாரத்தை மீட்டு கொடுத்தது? தூத்துக்குடி போராட்டம் தானே ஒரு ஆலையை மூட வைத்தது? போராட வேண்டாம் என்று சொல்வது பைத்தியக்காரத்தனம். டிராபிக் ராமசாமியிடம் நானும் நிறைய கற்றுக் கொண்டேன். இப்படம் ஒரு யதார்த்தமான பதிவாக இருக்கும் " என்றார். 

    ×