search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு- தலைவர்கள் கருத்து
    X

    18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு- தலைவர்கள் கருத்து

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். #18MLAsCaseVerdict
    சென்னை:

    18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன்:-

    தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர்கள் 18 பேர்களை தகுதி நீக்கம் செய்தது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் உறுதி செய்துள்ளது.

    நீதிமன்றத் தீர்ப்பின் விளைவாக, மக்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டு, வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள ஆட்சி, நீடிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டமாகும்.

    நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தற்காலிகமாக தப்பிப் பிழைத்துள்ள அ.தி.மு.க. ஆட்சி, மக்களால் மிக விரைவில் தண்டிக்கப்பட்டே தீரும் என இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சி உறுதியாக நம்புகிறது.

    மக்களாட்சி மாண்புகளுக்கு ஏற்றபடி, எடப்பாடி அரசு உடனடியாக பதவி விலகி, மக்கள் தீர்ப்பைப் பெற வேண்டும்.

    மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்:-

    18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் 3-வது நீதிபதியும் சபாநாயகர் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு வழங்கியதன் மூலம் 18 எம்.எல்.ஏ.க்களின் பதவி நீக்கம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தீர்ப்பின் முழுமையான விவரங்கள் தெரிந்த பிறகுதான் மேற்கொண்டு எந்த கருத்தையும் தெரிவிக்க முடியும். இதில் 18 எம்.எல்.ஏ.க் களும் மேல்முறையீடு செய்வார்களா? இல்லையா? என்பதை அவர்கள்தான் தீர்மானிக்க முடியும்.

    ஏற்கனவே திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 தொகுதிகளுக்கு நடத்த வேண்டிய இடைத்தேர்தலை தமிழக அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க தேர்தல் ஆணையம் ஒத்தி வைத்துள்ளது.

    ஒருவேளை இந்த தீர்ப்புக்கும், தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கும் ஏதோ ஒரு உள்ளார்ந்த உளவு இருப்பது மாதிரிதான் எண்ணத் தோன்றுகிறது.

    18 தொகுதியில் உள்ள மக்களுக்கு கிட்டதட்ட 2 ஆண்டாக சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாததால் எந்த அடிப்படை வசதிகளும் கிடைக்கவில்லை.

    எனவே இனியும் காலம் கடத்தாமல் திருவாரூர், திருப்பரங்குன்றம் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முன்வர வேண்டும்.

    தமிழகத்தில் 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்கள். பிறகு இந்த வழக்கு 3-வது நீதிபதியின் தீர்ப்புக்கு உட்படுத்தப்பட்டது.

    இன்றைக்கு வெளிவந்திருக்கும் 3-வது நீதிபதியின் தீர்ப்பின் மூலம் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். இருப்பினும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 சட்ட மன்ற உறுப்பினர்களும் எடுக்கப்போகும் முடிவைப் பொறுத்து தான் இறுதி முடிவு கிடைக்கும்.

    தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்வதற்கு சட்டத்தில் இடம் உண்டு. இறுதியான தீர்ப்பினால் ஒரு தெளிவு கிடைக்கும் என நம்புகிறேன்.

    இந்த பிரச்சனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது தான் ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்றாலும், சுமார் 400 நாட்களுக்கு மேலாக வழக்கில் ஈடுபட்டுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதிக்குட்பட்ட மக்கள், தங்கள் தொகுதி பிரச்சனையை கூற பிரதிநிதியின்றி, தொகுதி வளர்ச்சி குறித்து சட்டமன்றத்தில் தங்களது தேவைகளை கூறும் உறுப்பினரின்றி குழம்பிய நிலையில் இருந்துள்ளனர். இனி வருங்காலங்களில், மக்கள் பிரச்சனைகளை எடுத்துரைக்கும் முக்கியத்துவம் வாய்ந்த எந்தவொரு நிர்வாகம் சார்ந்த வழக்குகளையும் அவசர வழக்காக விசாரித்து காலதாமதமின்றி தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

    கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன்:-

    இந்த 18 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்துவதன் மூலமாகதான் தமிழக மக்கள் யாருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடியும். தமிழகத்தில் இருக்கின்ற எல்லா தலைவர்களும் பெரும்பான்மையான மக்கள் தங்களோடுதான் இருக்கிறார்கள் என்று சுயதம்பட்டம் அடித்து கொண்டிருக்கின்ற வேளையில் உண்மை தெரிய வேண்டும். பல அரசியல் பிரச்சனைகளுக்கும், ஜனநாயகத்தில் ஏற்பட்டிருக்கின்ற குழப்பங்களுக்கும் அதுதான் தீர்வாக இருக்கும்.

    இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர். #18MLAsCaseVerdict
    Next Story
    ×