search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madhya Pradesh"

    • 4 மாநிலங்களில் கடந்த மாதம் பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற்றது.

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 4 மாநிலங்களில் கடந்த மாதம் 7ம் தேதி முதல் 30ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

    இதன் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற்றது. இதில், தெலுங்கானாவில் காங்கிரஸ், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பாஜகவும் வெற்றி பெற்றது.

    தெலுங்கானாவில் முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி பதவி ஏற்றார். சத்தீஸ்கரில் முதலமைச்சராக விஷ்ணு தியோ சாய் தேர்வானார்.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ் தேர்வாகியுள்ளார்.

    தெற்கு உஜ்ஜைன் தொகுதி எம்எல்ஏவாக தேர்வான மோகன் யாதவ் அம்மாநிலத்தின் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். கடந்த சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான பாஜக அரசில் மோகன் யாதவ், கல்வித்துறை அமைச்சராக இருந்தார்.

    • காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார்.
    • வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    திண்டுக்கல்:

    பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கி ஒரு கார் இன்று காலை வந்து கொண்டு இருந்தது. மத்தியபிரதேச பதிவெண் கொண்ட இந்த காரில் நெடுஞ்சாலைத்துறை பணிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்படி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை எஸ்.பி. சரவணன் தலைமையில் டி.எஸ்.பி. நாகராஜன், இன்ஸ்பெக்டர் ரூபா கீதா ராணி ஆகியோர் அந்த காரை மடக்கினர். பின்னர் அந்த காரை செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள மின் வாரிய அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். காரின் உள்ளே சோதனையிட்ட போது ரூ.20 லட்சம் பணம் இருந்தது.

    காரில் வந்த நபர் முன்னுக்கு பின் முரணான தகவல் தெரிவித்தார். தமிழகத்தில் நடக்கும் நெடுஞ்சாலை பணிக்கு லஞ்சம் கொடுப்பதற்காக இந்த பணத்தை எடுத்து வந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர். அதன் பேரில் அந்த வாலிபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மேலும் அவர் வைத்திருந்த செல்போனை வாங்கி அதில் வந்த அழைப்புகளை கொண்டும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
    • பலத்த பாதுகாப்பை மீறி தபால் வாக்கு பெட்டியை திறந்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, வாக்கு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

    அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி போலீசார், பாதுகாப்புப்படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எந்திரம் இருக்கும் மையத்தை யாரும் எளிதாக நெருங்கி விட முடியாது. உயர் அதிகாரிகள் இல்லாமல் திறக்க முடியாது.

    மத்திய பிரதேசத்தில் 17-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற போதிலும், வருகிற 3-ந்தேதிதான் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது. இதனால் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாக கருதி காங்கிரஸ் மற்றும் பா.ஜனதாவினரும் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.

    இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாட்டுகளையும் மீறி, பாலகாட் மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் தபால் வாக்கு பெட்டி வைத்திருக்கும் அறையில் பலர் தபால் வாக்குகளை கட்டு கட்டுகளாக பிரித்து வைப்பது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பானது.

    இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காங்கிரஸ், "இது மிகவும் முக்கியமான விசயம். குற்றவாளிகளுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேணடும். இதுபோன்ற நிகழ்வுகள் நடக்க விடக்கூடாது என்று கேட்டுக்கொள்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளது.

    இதுகுறித்து தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. அதில் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.

    மத்திய பிரதேச மாநிலத்தில் கடந்த சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது அதன்பின் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு, ஜோதிராதித்யா சந்தியா 20 எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். இதனால் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் வாய்ப்பை இழந்தது. இதனால் பா.ஜனதா ஆட்சியை பிடித்தது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாம்பு பைப்லைனுக்குள் புகுந்து கொண்டதால் மக்கள், அதனுள் நீரை செலுத்தினர்
    • பாம்பின் வாய் மீது தன் வாயை வைத்து அதுல் பலமாக ஊதினார்

    மத்திய பிரதேச மாநிலத்தின் நர்மதா நதிக்கரையை அடுத்து உள்ள நகரம் நர்மதாபுரம்.

    நர்மதாபுரத்தில் உள்ள குடியிருப்பு பகுதி ஒன்றில் ஒரு பாம்பு நுழைந்தது. அது அப்பகுதியில் உள்ள பைப்லைன் ஒன்றில் நுழைந்து விட்டதால், அதனை விரட்ட அங்குள்ள குடியிருப்புவாசிகள் முயன்றனர். ஆனால், உள்ளே சென்ற பாம்பு வெளியே வராததால், பூச்சிகொல்லி மருந்தை நீரில் கலந்து அந்த பைப்லைனில் உள்ளே செலுத்தினர்.

    இதில் மயங்கிய அந்த பாம்பு உள்ளேயே சுருண்டு கிடந்தது. இதை கண்டு செய்வதறியாது திகைத்த மக்கள் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதுல் சர்மா (Atul Sharma) எனும் கான்ஸ்டபிள் அங்கு விரைந்து வந்தார். அவர் அந்த பாம்பின் நிலையை சிறிது நேரம் கூர்ந்து கவனித்தார்.

    பிறகு மெதுவாக அதை கையில் பிடித்து அதன் வாயில் தன் வாயை வைத்து வேகமாக ஊதினார். அவ்வப்போது நீரையும் அதன் மேல் தெளித்தார். சுற்றி நின்று அவரது நடவடிக்கைகளை மக்கள் பார்த்து கொண்டிருக்கும் போதே அந்த பாம்பு மெதுவாக நகர ஆரம்பித்தது. விஷத்தன்மையற்றதாக கூறப்படும் அந்த பாம்பு, சிறிது நேரத்தில் அங்கிருந்து ஊர்ந்து சென்றது.

    இதை கண்ட அப்பகுதி மக்கள் அதுல் சர்மாவை மிகவும் பாராட்டினர்.

    இது குறித்து பேசும் போது, இந்த வித்தையை "டிஸ்கவரி" சேனலை பார்த்து கற்று கொண்டதாகவும், இது போல் எண்ணற்ற பாம்புகளை தாம் காப்பாற்றியுள்ளதாகவும், அதுல் தெரிவித்தார்.

    அதுல் இவ்வாறு கூறினாலும், கால்நடை மருத்துவர்கள் அவர் கடைபிடித்த "சிபிஆர்" (Cardiopulmonary Resucitation) எனப்படும் இந்த முறையில் பாம்பை உயிர் பெற செய்ய முடியாது என்றும் இச்சம்பவத்தில் அப்பாம்பிற்கு தானாகவே நினைவு திரும்பியிருக்கலாம் என்றும் தெரிவித்தனர்.

    தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து 2007ல் வெளிவந்த "சிவாஜி" திரைப்படத்தில் இந்த சிகிச்சை முறையை கையாண்டு நடிகர் ரகுவரன் உயிர் மீட்கும் காட்சிகள் பிரபலமாக பேசப்பட்டது. சில நாட்களுக்கு முன் ஒரு குரங்கு இதே முறையில் காப்பாற்றப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின.

    தற்போது அதுலின் இந்த நடவடிக்கை அங்குள்ளவர்களால் படமாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ம.பி. சட்டசபையில் உள்ள 230 இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு
    • ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

    இந்தியாவில் மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது.

    மத்திய பிரதேச மாநிலத்தின் 230 சட்டசபை இடங்களுக்கு நவம்பர் 17 அன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. டிசம்பர் 3 அன்று தேர்தல் முடிவுகள் வெளியாகும்.

    ம.பி.யில் காங்கிரஸ் கட்சியும், பா.ஜ.க.வும் நேரிடையாக மோதுகின்றன.

    இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ததியா (Datia) நகரில், பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவராஜ் சிங் சவுகன் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். அதில் முந்தைய காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், முந்தைய ம.பி. முதல்வருமான கமல்நாத்தை கடுமையாக விமர்சித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:

    நான் பதவியேற்ற போது ம.பி. எப்படி இருந்தது என உங்களுக்கு தெரியும். துப்பாக்கிகள், துப்பாக்கி குண்டுகள், கும்பலாக அப்பாவி மக்கள் கடத்தப்படுவது, கும்பல் கும்பலாக மக்கள் கொல்லப்படுவது, கொள்ளையர்கள் அப்பாவி மக்களை அடித்து நொறுக்குவது போன்றவைதான் ம.பி.யின் அடையாளமாக இருந்து வந்தது. நான் முதல்வரானதும் குவாலியருக்கு வந்தேன். காவல் அதிகாரிகளை சந்தித்து, 'ம.பி.யில் ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது கொள்ளையர்கள் இருக்க வேண்டும்' என கூறி உறுதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டேன். காங்கிரஸ் ம.பி.யை ஆளும் போதெல்லாம் மக்களுக்கு நாசமும் இழப்புமே மிஞ்சுகிறது. காங்கிரஸ் கட்சியின் கமல்நாத் முதல்வராக இருந்த போது எந்த நல்ல திட்டத்தை நிறைவேற்றவும் 'பணம் இல்லை, பணம் இல்லை' என புலம்புவதையே வழக்கமாக கொண்டிருந்தார். எதற்கெடுத்தாலும் அழுகின்ற இவரை போன்ற மனிதர் மீண்டும் முதல்வரானால் நன்றாக இருக்குமா?

    இவ்வாறு சவுகன் பேசினார்.

    • சிறுமி உதவி கேட்கும் வீடியோ காட்சிகள் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது
    • குற்றவாளி சார்பில் வாதாட வேண்டாம் என பார் கவுன்சில் வேண்டுகோள் வைத்துள்ளது

    சில தினங்களுக்கு முன் மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன் ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை பரிதாபமாக தட்டியும் அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

    அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அந்நகர மக்கள் அவளுக்கு உதவ மறுப்பதும் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இறுதியாக, அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார்.

    காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    "நூற்றுக்கணக்கான பேரை விசாரணை செய்து, 700க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து பரத் சோனி எனும் ஆட்டோ ஓட்டுனர் இந்த குற்றத்தை செய்திருப்பதை கண்டு பிடித்தோம். சுமார் 35 அதிகாரிகள் இந்த சைபர் விசாரணையில் ஈடுபட்டனர். 3 நாட்களாக தூக்கம் இல்லாமல் தேடுதல் வேட்டை நடைபெற்றது. குற்றவாளியை நெருங்கும் போது அவன் தப்பி ஓட முயன்றான். காவல்துறையினர் அவனை துரத்தி பிடித்தனர். அச்சிறுமிக்கு உதவ மறுத்தவர்கள் மீதும் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்" என காவல்துறை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், தனது மகனின் இந்த குற்றச்செயல் குறித்து, "என் மகன் தண்டிக்கப்பட வேண்டியவன். அவனுக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். இது ஒரு வெட்கக்கேடான செயல். அவனை காணவோ, அவனை காப்பாற்றவோ நான் காவல் நிலையத்திற்கோ அல்லது நீதிமன்றத்திற்கோ செல்ல போவதில்லை" என பரத் சோனியின் தந்தை ராஜு சோனி கூறினார்.

    "கோவில் நகரமான உஜ்ஜைன் நகரின் பெயரையே இச்சம்பவம் நாசப்படுத்தி விட்டது. நீதிமன்ற பார் கவுன்சிலை சேர்ந்த எந்த வழக்கறிஞரும் குற்றவாளி சார்பாக வாதாட வேண்டாம் என கேட்டு கொள்கிறேன்," என உஜ்ஜைன் பார் கவுன்சில் தலைவர் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.

    • இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு.
    • ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது.

    இந்தியாவில் ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க இடங்கள் மற்றும் கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவில்களும் ஒரு தனித்துவமான வரலாற்றையும் புராண கதைகளையும் கொண்டிருக்கும்.

    பல புராதன கோவில்களும் கோட்டைகளும் அடங்கிய இந்திய நாட்டில் சில மர்மம் நிறைந்த பழங்கால இடங்களும் உண்டு. அதில் ஒன்று தான் இந்த கக்கன்மாத் சிவன் கோவில். இந்த கோவில் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்று வரலாற்று கதைகள் கூறுகிறது. அதுவும் சிவ பெருமானே இந்த கோவில் பேய்களால் கட்டப்பட வேண்டும் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது.

    மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரத்தில் இருந்து கிட்டத்தட்ட 65 கிமீ தொலைவில் உள்ள சிஹோனியாவில் அமைந்துள்ளது இந்த கக்கன்மாத் கோவில். சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவில்களில் இதுவும் ஒன்றாகும். இது பேய்களால் கட்டப்பட்ட கோவில் என்று பலர் கூறுகின்றனர். அதுவும் ஒரே இரவில் பேய்களால் கட்டப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

    தரையில் இருந்து சுமார் 115 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த கோவில் புனிதம் என்பதை விட, மர்மமான கோவில் என்று தான் உள்ளூர்வாசிகளால் கூறப்படுகிறது.

    பொதுவாக கோவில் என்றால் கற்களை ஒன்றோடு ஒன்று அடுக்கி சிமெண்ட் பூசி கட்டப்பட்டு இருக்கும். ஆனால் இந்த கோவில் சுண்ணாம்பு, சிமெண்ட் மற்றும் கலவை எதுவும் இல்லாமல், வெறும் கற்களை கொண்டே கட்டப்பட்டுள்ளது. இதுவும் பலருக்கு மர்மமாக தோன்றுகிறது.

    புராண கதைகளின்படி, இக்கோவில் கட்டுவதற்கு சிவபெருமான் பேய்களுக்கு ஆணையிட்டாராம். அதுவும் அடுத்த நாள் காலை விடிவதற்குள் தனக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்று கூறினாராம். பேய்களால் கற்களை கொண்டு அடுக்கி இந்த கோவில் கட்டப்பட்டது என்றும், கோவில் கட்டுமானம் முடிவதற்குள் விடிந்ததால் அப்படியே விட்டுவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.

    இன்னும் சிலர் கக்கன்மாத் கோவில் 11-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்றும், அந்த சமயத்தில் கச்வாஹா வம்சத்தின் கிர்த்தி மன்னன் தனது மனைவிக்காக கட்டப்பட்டதாகவும் நம்புகிறார்கள். மேலும் அவர் ஒரு சிவபெருமானின் பக்தர் என்றும் சுற்றி ஒரு சிவன் கோவில் கூட இல்லாததால், அவர் அதைக் கட்டினார் என்றும் பலரால் நம்பப்படுகிறது.

    இந்த கோவிலை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததாகவும், அது எப்படி கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை என்றும் பலர் நம்புகிறார்கள். இங்குள்ள பல சிலைகள் உடைந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கோயில் மத்திய பிரதேசத்தின் அற்புதமான கோவிலாக கருதப்படுகிறது.

    இந்த கோவிலின் மையத்தில் ஒரு பிரமாண்டமான சிவலிங்கம் நிறுவப்பட்டுள்ளது. 120 அடி உயரமுள்ள இந்த கோவிலின் மேல் பகுதியும், கருவறையும் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகும் பாதுகாப்பாக உள்ளது. இதில் மற்றொரு அம்சம் என்னவென்றால், இந்த கோவிலை சுற்றியுள்ள அனைத்து கோவில்களும் உடைந்திருந்தாலும், கக்கன்மாத் கோவில் இன்றும் பாதுகாப்பாக உள்ளது.

    • ராகுல் சர்மா எனும் பண்டிட் இச்சிறுமியை காப்பாற்றி உதவி செய்தார்
    • வெற்று கோஷங்களில் அலறல்களை அடக்கி விடுகின்றனர் என்றார் ராகுல்

    மத்திய பிரதேசத்தின் உஜ்ஜைன் நகரில் ஒரு 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டாள். தாக்குதலுக்கு உள்ளான அச்சிறுமி, உடல் முழுவதும் காயங்களுடன், ரத்த போக்குடனும், அறைகுறை ஆடைகளுடனும் பரிதாபமாக உதவி கேட்டு பல வீட்டு கதவுகளை தட்டியும், அவளுக்கு உதவி மறுக்கப்பட்டது.

    அந்நகரத்தில் பட்நகர் சாலையில் ஒரு ஆசிரமத்தை சேர்ந்த ராகுல் சர்மா எனும் பண்டிட் இவளை கண்டு, உடனடியாக இவளுக்கு ஆடைகள் கொடுத்து உதவி, காவல்துறையினரை வரவழைத்து, மருத்துவமனையில் சேர்த்தார். காவல்துறையினர் குற்றவாளிகளை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், அச்சிறுமி சாலைகளில் உதவி கேட்டு வருவதும், அது மறுக்கப்படுவதும் கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த அதிர்ச்சி தரும் சம்பவம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது கருத்துக்களை தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

    மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமிக்கு எதிரான கொடூரமான குற்றம், அன்னை இந்தியாவின் இதயத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல். நாட்டிலேயே மத்திய பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும், சிறு பெண்களுக்கு எதிரான கற்பழிப்புகளும் அதிக எண்ணிக்கையில் நடைபெறுகின்றன. இந்த குற்றங்களில் நேரடியாக ஈடுபட்டவர்கள் மட்டுமே குற்றவாளிகள் அல்ல; மாநில பா.ஜ.க. அரசாங்கமும் குற்றவாளிதான். நாட்டின் மகள்களை பாதுகாக்க இயலாத அரசாங்கம் நடைபெறுகிறது. மாநிலத்தில் நீதி இல்லை, சட்டம் ஒழுங்கு இல்லை, உரிமைகள் இல்லை. இன்று மத்திய பிரதேசத்தின் மகள்களின் நிலை குறித்து முழு நாடும் வெட்கப்படுகிறது. ஆனால், மாநில தலைவருக்கும் நாட்டின் பிரதமருக்கும் இவை அவமானமாகவே தெரியவில்லை. அவர்கள் தேர்தல் உரைகள், வெற்று வாக்குறுதிகள் மற்றும் தவறான கோஷங்களுக்கிடையே நாட்டின் மகள்களின் அலறல்களை பா.ஜ.க.வினர் அடக்கிவிடுவார்கள்.

    இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.

    • அறைகுறை ஆடையுடன் வீடு வீடாக உதவி கேட்டும் யாரும் உதவ முன்வரவில்லை
    • பேச்சிலிருந்து அச்சிறுமி உ.பி.யை சேர்ந்தவளாக இருக்கலாம் என காவல் அதிகாரி தெரிவித்தார்

    இந்தியாவின் மத்திய பகுதியில் உள்ள பெரிய மாநிலம், மத்திய பிரதேசம். இதன் தலைநகரம் போபால்.

    அம்மாநிலத்தின் ஷிப்ரா நதிக்கரையோரம் அமைந்துள்ள பண்டைய கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் நகரம் உஜ்ஜைன். இந்நகரில் உள்ளது புகழ் பெற்ற தண்டி ஆசிரமம்.

    அந்த ஆசிரமத்தை அடுத்துள்ள பகுதியில் ஒரு 12 வயது சிறுமியை சிலர் கற்பழித்தனர். பின்பு அவளை அப்படியே போட்டு விட்டு ஓடி விட்டனர். இதில் அச்சிறுமிக்கு உடலில் பலத்த காயங்கள் ஏற்பட்டு ரத்த போக்கு ஏற்பட்டது. குறைந்த அளவே ஆடைகள் உள்ள நிலையில் அவள் நிராதரவாக விடப்பட்டு, தானாக எழுந்து நகருக்குள் வீடுகள் உள்ள பகுதியில் வீடு வீடாக உதவி கேட்டாள். ஆனால் யாருமே குறைந்த ஆடைகளுடனும் ரத்த போக்குடன் அவளை கண்டாலும் உதவி செய்ய முன் வரவில்லை; மாறாக அவளை விரட்டி விட்டனர்.

    பிறகு வேறு சிலர் அவளின் பரிதாப நிலையை கண்டு அவளை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக அம்மாநிலத்தின் இந்தோர் நகர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாள்.

    "அச்சிறுமியின் மருத்துவ பரிசோதனையில் அவள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றவாளிகளை கண்டு பிடிக்க ஒரு சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டுள்ளது. அச்சிறுமியின் பேச்சிலிருந்து உத்தர பிரதேசத்தை சேர்ந்தவள் போல் தெரிகிறது." என இது குறித்து காவல்துறை உயரதிகாரி சச்சின் ஷர்மா தெரிவித்தார்.

    அச்சிறுமி யார் என்பதும், என்ன நடந்தது என்பதும் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சிறார் உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இச்சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு ம.பி. காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதற்கிடையே அந்த சிறுமி தாக்குதலுக்கு உள்ளான பிறகு பரிதாபமாக வீடு வீடாக உதவி கேட்டு சென்றதும் அவளுக்கு உதவ மறுத்து குடியிருப்புவாசிகள் விரட்டுவதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

    • இந்து மதத்தில், ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஷண்மத மார்க்கங்களை நிறுவியவர்
    • ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஆரம்ப வேதக்கல்வி பயின்றார்

    இந்து மதத்தின் தற்போதைய கட்டமைப்பை உருவாக்கிய இந்து மத குருக்களில் முதன்மையானவர்களாக கருதப்படும் பலரில் ஸ்ரீராமானுஜர் மற்றும் ஸ்ரீமத்வாச்சாரியார் ஆகியோருடன் ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஒருவர். இந்துக்களுக்கு வைணவம், சைவம், ஸாக்தம், கவுமாரம், காணாதிபத்யம் மற்றும் சவுரபம் என 6 பிரதான வழிகளில் ஷண்மத வழிபாட்டு மார்க்கங்களை நிறுவியவர்.

    இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் காந்த்வா மாவட்டத்தில் காந்த்வா நகருக்கருகே மந்தாதா பகுதியில் உள்ளது ஓம்காரேஷ்வர் கோவில். இது ஒரு புகழ் பெற்ற இந்து மத சைவ கோயில். இக்கோவில் நர்மதை நதிக்கரை ஓரம் உள்ளது. ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஓம்காரேஷ்வர் நகரில்தான் ஆரம்ப வேதகல்வியை பயின்றார்.

    இப்பகுதியில் உலகெங்கும் உள்ள இந்துக்களால் மதிக்கப்படும் மத குருவான ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் அவர்களுக்கு 108 அடியில் மிக பெரிய சிலை ஒன்று நிறுவப்பட்டு ம.பி. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகன் அவர்களால் இன்று திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்த முதல்வர், இங்கு முறைப்படி பூஜைகள் செய்து வழிபாடு நடத்தினார்.

    அப்போது உரையாற்றிய அவர் கூறியதாவது:

    கலாச்சார ரீதியாக ஸ்ரீ ஆதி குரு சங்கராச்சார்ய மகராஜ் நாட்டை ஒருங்கிணைத்தார். வேதங்களின் சாரம் சாமானிய மக்களுக்கும் புரியும் வகையில் பரவ தீவிரமாக செயல்பட்டார். நமது நாட்டின் 4 மூலைகளிலும் 4 மடங்களை நிறுவினார். அவரது உயரிய, சிறந்த முயற்சியினால்தான் நாடு இத்தனை ஆண்டுக்காலம் ஒன்றாக, ஒற்றுமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இப்பகுதிக்கு செல்ல விரும்பும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ம.பி.யின் இந்தோர் நகரிலிருந்து 80 கிலோமீட்டர் பயணம் செய்து இந்த இடத்தை அடையலாம்.


    • டாடியா மாநில உள்துறை அமைச்சரின் தொகுதிக்கு உட்பட்டது
    • பலியானவர்களில் 4 பேர் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்

    மத்திய பிரதேசத்தின் வட மத்திய பகுதியில் உள்ளது டாடியா மாவட்டம். இது அம்மாநில உள்துறை அமைச்சர் டாக்டர். நரோத்தம் மிஷ்ராவின் தொகுதிக்கு உட்பட்ட மாவட்டமாகும். இங்கு டாங்கி மற்றும் பால் எனப்படும் இரு பிரிவினர் வசிக்கின்றனர். இந்த இரு பிரிவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அடங்கும்.

    அங்குள்ள நிலங்களில் ஆடுகள் புல் மேய்வது தொடர்பான விஷயங்களில் இந்த இரு பிரிவினருக்குமிடையே அவ்வப்போது வாக்குவாதம் நடப்பதுண்டு.

    நேற்று இரு பிரிவை சேர்ந்தவர்களும் இது சம்பந்தமான ஒரு பிரச்சனையை தீர்த்து வைக்க ஒன்று கூடி பேசி வந்தனர். அப்போது அவர்களின் வாக்குவாதம் சண்டையாக மாறியது.

    இதனையடுத்து ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். அது வன்முறையாக மாறியதில் அவர்கள் இரு பிரிவினரிடையே துப்பாக்கிகளை மறைத்து வைத்திருந்தவர்கள், அதனை வெளியில் எடுத்து சுட்டனர்.

    இதில் 30 வயதுகளில் உள்ள 4 பேர்களும், 70 வயதுக்கு மேற்பட்ட ஒருவரும் கொல்லப்பட்டனர். மேலும் 2 பேர் தீவிர காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    பலியான 5 பேரில், 3 பேர் (பிரகாஷ், ராம்நரேஷ், சுரேந்திரா) டாங்கி வகுப்பையும், 2 பேர் (ராஜேந்திரா, ராகவேந்திரா) பால் வகுப்பையும் சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் துப்பாக்கி குண்டுக்கு பலியானவர்கள்.

    மேலும் வன்முறை வெடிக்காமல் இருக்க ஏராளமான காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, இதுவரை 6 பேரை காவலில் எடுத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மழை பெய்ய வேண்டி ஒவ்வொரு ஊரிலும் வினோத சடங்குகளை செய்யும் வழக்கம் இருந்து வருகிறது.
    • கழுதைக்கு கிராம மக்கள் குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ வைரல்.

    மழை பெய்ய வேண்டி ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்ஸர் மாவட்டத்தை சேர்ந்த கிராம மக்கள் தான் இந்த வினோத சடங்கை செய்துள்ளனர்.

    கிராம மக்கள் மழைக்காக வினோத சடங்கு செய்த சம்பவம், பலருக்கும் புதிதாக இருக்கலாம் ஆனால் அவர்களை பொருத்தவரையில், கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட சடங்கு "மிஷன்" அமோக வெற்றி தான். குலாப் ஜாமுன் ஊட்டிவிட்ட இரண்டே நாட்களில் அந்த மாவட்டத்தில் மழை பொழிந்து, கிராம மக்கள் வேண்டுதல் பலித்து விட்டது.

     

    மழை பெய்ததை அடுத்து ஊரில் உள்ள பூசாரி கழுதையை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று விவாசய பணிகளை துவங்கி வைத்தார். வினோத சடங்கின் அங்கமாக, கழுதை ஒரு பிளேட் முழுக்க குலாப் ஜாமுன் சாப்பிடும் காட்சிகள் அடங்கிய வீடியோ வைரல் ஆகி, பலதரப்பட்ட கமென்ட்களை குவித்து வருகிறது.

    வினோத சடங்கை தொடர்ந்து இரண்டு நாட்கள் கழித்து பெய்யத் துவங்கிய மழை, 24 மணி நேரத்திற்கு நீடித்தது. மழை பெய்ததால் ஊர் மக்கள் மகிழ்ச்சி அடைந்த நிலையில், அதனை கொண்டாடும் வகையில் மீண்டும் கழுதைக்கு குலாப் ஜாமுன் ஊட்டிவிட்டனர். 

    ×