search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kayathar"

    • சந்தன கருப்பசாமி தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார்.
    • மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது.

    கயத்தாறு:

    விருதுநகர் மாவட்டம் ரெட்டி இனாம்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் சந்தன கருப்பசாமி (வயது 17). இவர் பிளஸ்-2 தேர்வு எழுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

    இந்நிலையில் சந்தன கருப்பசாமி கயத்தாறு அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்திற்கு தனது நண்பரை சந்திக்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். தளவாய்புரம் நாற்கர சாலையில் வந்தபோது மதுரையில் இருந்து நெல்லைக்கு வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் சந்தன கருப்பசாமி படுகாயம் அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரை மீட்டு நெல்லைஅரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கயத்தாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் கொடை விழா தொடங்கியது.
    • விழாவில் பால்குட ஊர்வலம், அக்னிசட்டி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தில் விஜயலட்சுமி, கசமாடசாமி, வைரவன், கருப்பசாமி, கழுமூர்த்தி கோவில் கொடை விழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினமும் முளைப்பாரி பாடல்கள், சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. கொடை விழா கடந்த இந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. இதில் பால்குட ஊர்வலம், அக்னிசட்டி, மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. மேலும் விழாவில் 100-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். கொடைவிழாவில் ஆடல், பாடல், வில்லிசை உள்பட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விரதம் இருந்த பக்தர்கள் கோவிலில் பொங்கலிட்டும், கிடா வெட்டியும் நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் நாட்டாண்மை உடையார் பாண்டியன் மற்றும் விழாக்கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
    • ஏற்பாடுகளை வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    கயத்தாறு:

    பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள வீரசக்க தேவி ஆலய 67-வது ஆண்டு திருவிழாவை முன்னிட்டு வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி சார்பாக கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட மணி மண்டபத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சிக்கு 39-ம் ஆண்டு ஜீவஜோதி தொடர் ஓட்டம் தொடங்கியது.

    முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தொடர் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஜெய லலிதா பேரவை செயலாளர் செல்வகுமார், கயத்தாறு நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளிபாண்டியன் மற்றும் ம.தி.மு.க. சார்பில் மாநில திருமண குழு உறுப்பினர் கருப்பசாமி பாண்டியன், கயத்தாறு கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவ பாண்டியன், ஒன்றிய துணை செயலாளர் முத்துப் பாண்டியன், நகர செயலாளர் வேலுச்சாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் சக்கையா, புதுப்பட்டி கிளை செயலாளர் ஹரிராம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வீர பாண்டிய கட்டபொம்மன் இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார், செயலாளர் முத்தமிழ் செல்வம், இளைஞர் அணி பொருளாளர் செல்வ கட்டபொம்மு, துணைத்தலைவர் சந்தன மேகலிங்க ராஜ் மற்றும் பாஞ்சாலங்குறிச்சி இளைஞர் அணி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • கயத்தாறில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா தலைமை தாங்கினார்.

    கயத்தாறு:

    கயத்தாறில் பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய அணி தலைவர் மருதையா தலைமை தாங்கினார். கயத்தாறு கிழக்கு ஒன்றிய தலைவர் முருகன், மாநிலதிட்டப்பொறுப்பாளர் ராம் ஆச்சாரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு மாவட்ட விவசாய அணி செயலாளர் முனியசாமி வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் ஜெயக்குமார், கன்னியாகுமரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், கயத்தாறு மேற்கு ஒன்றிய தலைவர் கருப்பசாமி, விவசாய அணி ஒன்றிய தலைவர் அரிச்சந்திரன், மாவட்ட நிர்வாகி கனகராஜ், பொதுச் செயலாளர்கள் பெருமாள்சாமி, வீரையாபாண்டி, ஒன்றிய பொருளாளர்கள் கதிர்வேல், மகேஷ் மற்றும் கயத்தாறு, கோவில்பட்டி, எட்டயபுரம், தூத்துக்குடி, கருங்குளம், ஓட்டப்பிடாரம் உள்பட பல்வேறு ஒன்றியங்களில் இருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விவசாய அணி பொதுச் செயலாளர் காசிமாரியப்பன் நன்றி கூறினார்.

    • கயத்தாறு பேரூராட்சி பகுதியில் வளமீட்பு மற்றும் திடக்கழிவு வளாகத்தில் உலர் களம் கட்டிடப்பணிகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
    • இதனை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு பேரூராட்சி பகுதியில் வளமீட்பு மற்றும் திடக்கழிவு வளாகத்தில் உலர் களம் அமைக்க ரூ. 20 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டிடப் பணிகள் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. இதனை பேரூராட்சி தலைவர் சுப்புலட்சுமி ராஜதுரை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத்தலைவர் சபுரா சலீமா, கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னபாண்டியன், தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ராஜதுரை மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் நயினார்பாண்டியன், செல்வகுமார், ஆதிலட்சுமிஅந்தோணி, முன்னாள் நகரச் செயலாளர் இஸ்மாயில், தி.மு.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் வக்கீல் மாரியப்பன் மற்றும் முன்னாள் பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் ஷேக் தாவுது, பூலையா, சந்தானம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கயத்தாறு அருகே உள்ள புளியம்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.
    • அதனை மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள புளியம்பட்டியில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அதனை மணியாச்சி டி.எஸ்.பி. லோகேஸ்வரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். புளியம்பட்டி சோதனை சாவடியில் இருந்து அக்கநாயக்கன்பட்டி வரை நடைபெற்ற போட்டியில் 12 வயது முதல் 14 வயது வரை, 15 வயது முதல் 18 வயது வரை அதற்கு மேல் மற்றும் காவலர்கள் ஆண், பெண் இருபாலர்களும் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சிக்கு இன்ஸ்பெக்டர்கள் சோமசுந்தரம், சுதேசன், மாரியம்மாள், கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் பசுவந்தனை, கடம்பூர், மணியாச்சி, புளியம்பட்டி ஆகிய போலீஸ் நிலையங்களில் உள்ள அனைத்து போலீசாரும் கலந்து கொண்டனர். இதில் வெற்றி பெற்ற அனைவருக்கும் டி.எஸ்.பி. லோகேஸ்வரன் பரிசு மற்றும் கேடயம் வழங்கினார்.

    • கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது
    • தொடர்ந்து அம்மாளுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே சன்னதுபுதுக்குடி கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் 108 குடங்களில் புனித நீர் எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து கோவிலில் பல்வேறு யாகங்கள், ஹோமங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மாளுக்கு ஊர்வலமாக எடுத்து வந்த புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் நெல்லை சுந்தரேசர் சர்மா தலைமையில் விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம், அங்கு ராபாசனம், சேம கும்ப பூஜை உட்பட 21 பூஜைகள், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. இதனை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள்,அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை வடக்கு சன்னதுபுதுக்குடி கிராம மக்கள் மற்றும் விழா கமிட்டியார் செய்திருந்தனர்.

    • ராகுல் காந்தி எம்.பி.க்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.
    • கயத்தாறு - மதுரை மெயின் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கயத்தாறு:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனையடுத்து அவரின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனை கண்டித்து, கயத்தாறில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் துணை தலைவர் வக்கீல் அய்யலுச்சாமி தலைமையில் கயத்தாறு - மதுரை மெயின் ரோட்டில் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட துணை செயலாளரும், பன்னீர்குளம் பஞ்சாயத்து தலைவருமான பொன்னுச்சாமிபாண்டியன், கயத்தாறு ஒன்றிய தலைவர் செல்லத்துரை, எஸ்.சி. எஸ்.டி. பிரிவு நகர செயலாளர் ஏசுதாஸ் மற்றும் நிர்வாகிகள் பொன்னையா, சங்கரன், முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட வக்கீல் அய்யலுச்சாமி உள்ளிட்ட 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • இலந்தைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மானங்காத்தான் கிராம சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
    • தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார் முகாமை தொடங்கி வைத்தார்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட மானங்காத்தான் கிராம சமுதாய நலக்கூடத்தில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. முன்னாள் பஞ்சாயத்து தலைவர் செல்லையா தலைமை தாங்கினார். தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து தலைவர் செல்வி ரவிக்குமார் முகாமை தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் லட்சுமி, பண்டாரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை கண் ஒளி பரிசோதனையாளர் இசக்கி ராஜா மற்றும் மருத்துவ உதவியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு கிட்டப் பார்வை, தூரப்பார்வை மற்றும் கண்புரை போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் ஆத்திகுளம், ராமலிங்கபுரம், மானங்காத்தான், கம்மாபட்டி பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு பயன் அடைந்தனர்.

    ஏற்பாடுகளை பஞ்சாயத்து அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • ராஜாபுதுக்குடி கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.
    • குளக்கரைகளில் சுற்றி திரிந்த காட்டு பன்றிகள் இரவில் கூட்டம், கூட்டமாக வயல்களில் புகுந்து நெற்பயிற்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளது.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் சுமார் 550 ஏக்கர் பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டு தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது.

    இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காடுகள், குளக்கரைகளில் சுற்றி திரிந்த காட்டு பன்றிகள் இரவில் கூட்டம், கூட்டமாக வயல்களில் புகுந்து நெற்பயிற்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளது.

    காலையில் வயலுக்கு சென்ற விவசாயிகள் அதனை கண்டு கண்ணீர் விட்டனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளான ஆறுமுகசாமி, மாடசாமி, அண்ணாவி, சவுந்தரராஜன் ஆகிேயார் கூறும்போது பல மாதமாக நாங்கள் உழைத்த உழைப்பு அனைத்தும் தற்போது இந்த காட்டுப்பன்றிகளால் வீணாகி போனது. சேதமான பயிற்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க மாவட்ட நிர்வாகம், வேளாண்மை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

    மேலும் விவசாய நிலங்களை சேதமாக்கிய காட்டுப்பன்றிகளை இங்கிருந்து விரட்ட வனத்துறையினர் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நல்லசாமி சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

    கயத்தாறு:

    கயத்தாறை அடுத்த கடம்பூர் அருகே உள்ள சிதம்பரபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் நல்லசாமி (வயது 38). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் கடந்த சில மாதங்க ளாக அவர் விரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்தநிலையில் இன்று காலை கடம்பூர் ரெயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற அவர் சென்னையில் இருந்து கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தகவல் அறிந்து ெரயில்வே போலீசார் அங்கு வந்து நல்லசாமி உடலை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.
    • கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று 2-வது நாளாக கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    கயத்தாறு:

    தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி அப்பகுதி வியாபாரிகள் நேற்று கடையடைப்பு போராட்டம் நடத்தினர்.

    கடம்பூர் ரெயில் நிலையம்

    தொடர்ந்து வியா பாரிகள், பொதுமக்கள் நேற்று ஒரு நாள் உண்ணாவிரத்திலும் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, கொரோனா காலத்திற்கு முன்னர் இயக்கப்பட்ட ரெயில்கள் அனைத்தும் கடம்பூர் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

    ஆனால் தற்போது கோவில்பட்டியில் நிறுத்தப்படும் ரெயில்கள் அதன் பின்னர் கடம்பூரில் நிற்காமல் நெல்லையில் நின்று செல்கிறது. இதனால் தங்கள் பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படு வதாக தெரிவித்தனர்.

    2-வது நாளாக போராட்டம்

    இந்நிலையில் கோரிக்கை களை வலியுறுத்தி இன்று 2-வது நாளாக வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தினர். இதனால் கடம்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்ேபாது, வழக்கம் போல கடம்பூர் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் எங்களது ஆதார் அட்டை, ரேஷன்கார்டு உள்ளிட்டவைகளை கலெக்டர் அலுவலகத்தில் திரும்ப ஒப்படைப்போம் என்றனர்.

    ×