search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery"

    • தொண்டி அருகே மீனவர் வீட்டில் 8 பவுன் நகை, மோட்டார் சைக்கிள் திருட்டு போனது.
    • இது தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே கடலோர கிராமமான சோழியக்குடி எம்.வி பட்டிணத்தை சேர்ந்த சுப்பிரமணி (வயது 50).

    சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவரது வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் அங்கிருந்த 8 பவுன் நகை, செல்போன் ஆகியவற்றை திருடினர். தொடர்ந்து வீட்டில் இருந்த சாவியை எடுத்து வாசலில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் மர்ம நபர்கள் திருடிக் கொண்டு தப்பினர்.

    இதுகுறித்து தொண்டி போலீசில் சுப்ரமணி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து கொள்ளையர்களின் கைரேகைகள் தடயவியல் நிபுணர்களால் சேகரிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • வாலிபரிடம் செல்போன், நகை பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • தனியாக நின்று கொண்டு செல்போன் பேசிக் கொண்டிருந்த வாலிபரை மர்ம நபர்கள் 5 பேர் சேர்ந்து தாக்கி நகையை பறித்து சென்றனர்.

        தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள கருக்கல்வாடி கிராமம் பச்சகாட்டூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (வயது 29).

    இவர் அழகு சமுத்திரம் சினிமா தியேட்டர் முன்பு தனது மோட்டார் சைக்கிளில் அமர்ந்தவாறு செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 5 வாலிபர்கள் கார்த்தியை தாக்கி அவரிடம் இருந்த செல்போன் மற்றும் கழுத்தில் இருந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினர். இதுபற்றி கார்த்தி கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டதாக இளம்பிள்ளை மற்றும் கோட்டைமேடு ஆகிய பகுதிகளை சேர்ந்த சதீஷ்குமார் (19) உள்பட 2 பேரை கைது செய்தனர் .மேலும் தலைமறைவாக உள்ள சுரேஷ், குமார், ரஞ்சித் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • புஞ்சை புளியம்பட்டியில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடி சென்ற கொள்ளையர்கள்.
    • சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புஞ்சை புளியம்பட்டி:

    புஞ்சை புளியம்பட்டி தில்லை நகரை சேர்ந்தவர் அந்தோணிசாமி. நேற்று மதியம் அந்தோணிசாமி வெளியே சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார்.

    அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு அதில் இருந்த 15 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது.

    இதனையடுத்து அந்தோணிசாமி புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயபாலன், இன்ஸ்பெக்டர் அன்பரசு மற்றும் போலீசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்டு திருட்டு நடந்தது தெரிய வந்துள்ளது.

    பின்னர் மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். மோப்பநாய் திருட்டு நடந்த வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி சென்று நின்றது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    மேலும் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேவகோட்டையில் சாலையில் கிடந்த நகைகளை போலீசில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
    • 16 பவுன் நகைகளை பையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை-திருப்பத்தூர் சாலையில் உள்ள நகைக்கடையில் பணியாற்றி வருபவர் போரிவயல் கிராமத்தை சேர்ந்த பிரபு மனைவி பிரியங்கா (வயது28). இவர் உறவினரின் புதுமனை புகுவிழாவிற்கு சென்றுவிட்டு தான் பணிபுரியும் கடைவாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தினார்.

    அந்த வாகனத்தில் 16 பவுன் நகைகளை பையில் வைத்து விட்டு வேலைக்கு சென்றார். வீட்டுக்கு செல்வதற்கு முன்பு இரு சக்கர வானத்தில் இருந்த நகைகள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து பிரியங்கா தேவகோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்போது பிரியங்கா பணிபுரிந்த நகைக்கடையின் மேலே காந்தி ரோட்டை சேர்ந்த நைனா முகம்மது மகன் முகமது இப்ராகிம் (35) கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.

    அவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு செல்லும்போது கடைவாசலில் கிடந்த பையை பார்த்தார். அதில் தங்க நகைகள் இருந்ததை கண்டு காவல்நிலையத்திற்கு சென்று 16.5 பவுன் நகையை இன்ஸ்பெக்டரிடம் ஒப்ப டைத்தார். அதில் தாலி செயின், வளையல்கள், செயின், மோதிரம் இருந்தது.

    அந்த நகை பிரியங்கா விடம் ஒப்படைக்கப்பட்டது. கீழே கிடந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான 16.5 பவுன் நகைகளை காவல் நிலை யத்தில் ஒப்படைத்த முகமது இப்ராகிமின் நேர்மையை அனைவரும் பாராட்டினர்.

    • நகை கடையில் 10 பவுன் திருடிய கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார்.
    • 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பினார்.

    மதுரை

    மதுரை கீழவாசல், லட்சுமிபுரம் தெருவைச் சேர்ந்தவர் கோபி (38). இவர் தெற்கு ஆவணி மூல வீதியில் நகைக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று காலை கோபி கடையில் இருந்தார். அங்கு வந்த ஒரு பெண் நகை வாங்குவது ேபால் பாசாங்கு செய்தார். ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பிய அந்த பெண், அங்கிருந்த 10 பவுன் தங்க சங்கிலிகளை அபேஸ் செய்து தப்பினார்.

    இரவில் நகைகளின் இருப்பை சோதனை செய்த போது 10 பவுன் நகை மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து கோபி விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். மீனாட்சி அம்மன் கோவில் போலீஸ் உதவி கமிஷனர் முத்துராஜ் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் ஜக்குபாய் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது நகைக்கடையில் 10 பவுன் நகையை திருடிய பெண்ணின் உருவம் தெரிந்தது. போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி அனுப்பானடியைச் சேர்ந்த கல்லூரி மாணவி முத்துமீனா (23)என்பவரை கைது செய்தனர். விளக்குத்தூண் போலீசார் முத்து மீனாவிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வணிக வரித்துறை உதவி கமிஷனர் வீட்டில் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டுபட்டுள்ளது.
    • வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளி பூஜை பொருட்கள், காமிரா ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    மதுரை

    மதுரை கே.கே.நகர், லேக் வியூ கார்டன் தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம் (வயது 64). வணிகவரித் துறையில் உதவி கமிஷனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று இரவு இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் வசிக்கும் மகள் வீட்டுக்கு சென்றார். மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்து பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, வெள்ளி பூஜை பொருட்கள், காமிரா ஆகியவற்றை திருடிச்சென்று விட்டனர்.

    மகாலிங்கம் கடந்த 3-ந் தேதி இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பொருட்கள் திருடுபோய் இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர் அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் அனுராதா வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
    சென்னை:

    முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வீட்டில் நகை-பணம் திருட்டு போய்விட்டது. இதுதொடர்பாக வீட்டில் வேலை பார்த்த 2 பெண்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். ஆனால் போலீசில் கொடுத்த புகாரை திடீர் என வாபஸ் பெற்றுவிட்டனர்.

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தின் வீடு சென்னை நுங்கம்பாக்கம் பைகிராப்ட்ஸ் கார்டன் சாலை பகுதியில் உள்ளது. இங்கு ப.சிதம்பரம், அவரது மனைவி நளினி சிதம்பரம், மகன் கார்த்தி சிதம்பரம், மருமகள் ஸ்ரீநிதி ஆகியோர் வசிக்கின்றனர். ப.சிதம்பரம் வீட்டில் திருட்டு போய்விட்டதாக, அவரது மேலாளர் முரளி நேற்று முன்தினம் ஆயிரம்விளக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

    புகாரில், ப.சிதம்பரம் வீட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த சில தங்க நகைகள், ஒரு தங்கக்காசு, 6 பட்டு புடவைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்கப்பணம் திருட்டு போய்விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை துணியால் மூடி மறைத்துள்ளதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த புகார் தொடர்பாக நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி மேற்பார்வையில் ஆயிரம்விளக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

    இந்த திருட்டு வழக்கில், ப.சிதம்பரம் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கி வீட்டு வேலை பார்க்கும் பெண்கள் வெண்ணிலா, விஜி ஆகியோருக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. வெண்ணிலா, விஜி ஆகியோர் உடன்பிறந்த சகோதரி ஆவார்கள். அவர்கள் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், நகைகள் மற்றும் பொருட்கள் திருடிய குற்றத்தை வெண்ணிலா, விஜி ஆகியோர் ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. திருட்டு போன நகை மற்றும் பொருட்களை தியாகராயநகரில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டது. அவற்றை மீட்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் நேற்று பிற்பகலில் ப.சிதம்பரத்தின் மேலாளர் முரளி தான் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக தெரிவித்தார். இதனால் இந்த வழக்கில் மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட மாட்டாது என்றும், வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர். 
    மதுரை அருகே வீட்டை உடைத்து ரூ.4½ லட்சம் நகை-பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
    மதுரை:

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே உள்ள அம்பலத்தடியை சேர்ந்தவர் மொக்கச்சாமி. இவர் மதுரை சிக்கந்தர்சாவடியில் தனது மகனுக்கு புதிய வீடு ஒன்றை கட்டி வருகிறார். இதற்காக நேற்று முன் தினம் வீட்டை பூட்டி விட்டு அங்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் நேற்று இரவு அவரது வீடு கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. இதைபார்த்த அவரது சகோதரர் தகவல் கொடுத்தார். இதையடுத்து அங்கு வந்து பார்த்த மொக்கச்சாமி வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தர்.

    பீரோவில் இருந்து 19 பவுன் நகை, ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன்மதிப்பு ரூ.4½ லட்சம் ஆகும்.

    இதுகுறித்து சமயநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகிறார். #tamilnews
    சென்னை வேளச்சேரியில் கட்டுமான தொழில் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 200 பவுன் தங்க நகைகள், ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    சென்னை:

    சென்னை வேளச்சேரி சீத்தாபதி நகர் ஜெயந்தி தெருவைச் சேர்ந்தவர் இளங்கேஸ்வரன்(வயது 47). இவருடைய தம்பி மகேஸ்வரன். தொழில் அதிபர்களான இவர்கள் இருவரும் கட்டுமான தொழில், தண்ணீர் வினியோகம் மற்றும் பல்பொருள் விற்பனையகம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    அண்ணன்-தம்பி இருவரும் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன், தங்களது சொந்த ஊரான சிவகங்கையில் நடைபெறும் ஒரு விழாவில் கலந்துகொள்ள சென்று விட்டனர்.

    இந்த நிலையில் நேற்று காலை இளங்கேஸ்வரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டினர், இதுபற்றி வேளச்சேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில், இளங்கேஸ்வரன் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருப்பதை அறிந்து கொண்ட மர்மநபர்கள், அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, 200 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிய வந்தது.

    சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவான கொள்ளையர்களின் கைரேகைகள் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதுபற்றி வேளச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    இதுபற்றி சிவகங்கை சென்று உள்ள இளங்கேஸ்வரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் சென்னை திரும்பி வந்து கொண்டு இருக்கிறார். அவர் இங்கு வந்த பிறகுதான் உண்மையில் அவரது வீட்டில் எவ்வளவு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளது என்ற முழுவிவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர். 
    புதுவை சத்யா நகரில் ஆட்டோ டிரைவரின் வீட்டில் புகுந்து ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.
    புதுச்சேரி:

    புதுவை சத்யா நகர் 3-வது குறுக்கு தெருவில் ஒரு வாடகை வீட்டில் 2-வது தளத்தில் சீனிவாசன் (வயது 41) என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ டிரைவரான இவர் நேற்று காலை ஆட்டோ தொழிலுக்கு சென்று விட்டார்.

    அவரது மனைவி தமிழரசி வீட்டின் கீழ் தளத்தில் படிக்கட்டில் அமர்ந்து அருகில் குடி யிருந்தவர்களிடம் பேசி விட்டு பின்னர் வீட்டுக்கு சென்றார்.

    அப்போது வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் வைத்திருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.30 ஆயிரம் ரொக்கப் பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.2 லட்சமாகும்.

    தமிழரசி பக்கத்து வீட்டுக் காரர்களிடம் பேசிக் கொண்டிருந்ததை யாரோ மர்ம நபர்கள் நோட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் உருளையன் பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×