search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor RN Ravi"

    • ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
    • 2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது.

    இந்தியாவில் 2024 புத்தாண்டு இன்னும் சற்று நேரத்தில் பிறக்க இருக்கிறது. இதை முன்னிட்டு, நாட்டின் முக்கிய தலைவர்கள் பொது மக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    2024 புத்தாண்டை முன்னிட்டு, அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    2023ஆம் ஆண்டு விண்வெளி ஆராய்ச்சியில் சாதனைகளை நிகழ்த்தியது. ஜி20 தலைமையில் நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. விளையாட்டுத் துறையில் நமது வீரர், வீராங்கனைகள் சிறப்பாக பரிணமித்தது என சுயசார்புபாரதத்தின் வலுவான அடித்தளத்தை அமைப்பதற்கான நமது தேசிய உறுதிப்பாட்டின் சான்றாக விளங்கியது.

    சட்டசீர்திருத்தங்கள் காலனித்துவ பாரம்பரியத்தை நிராகரித்ததுடன், நமது தேசத்தின் ஜனநாயக நெறிமுறைகளை மேலும் ஆழப்படுத்தியுள்ளன.

    உச்சநீதிமன்றம், ஜம்மு & காஷ்மீரின் முழுமையான ஒருங்கிணைப்பு தொடர்பாக வழங்கிய தனது வரலாற்றுபூர்வ தீர்ப்பின் மூலம் "ஒரேபாரதம் உன்னதபாரதம்" என்ற உணர்வை மேலும் வலுப்படுத்தியது.

    நமது இளையசக்தி அனைத்து துறைகளிலும் தங்கள் திறமை மற்றும் தொழில்முனைவு மேதைத்துவத்தை நிரூபித்து வருகிறது. நமது புராதன சனாதன தரிசனத்தில் ஆழமாக வேரூன்றிய நமது தெளிவான கலாசாரஆன்மிகம், உலகை ஒரே குடும்பம் ஆக ஒருங்கிணைத்துள்ளது. நாம் நமது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தி, 'ஒரேதேசம்' ஆக கடுமையான சவால்களை முறியடித்து முன்னேறினோம்.

    அதே நம்பிக்கை, அர்ப்பணிப்பு, கூட்டுறுதி மற்றும் ஆற்றலுடனும் நாம் 2024-ல் நுழைகிறோம். நமது முயற்சிகளில் சிறந்து விளங்கவும், நமது தேசத்தின் வளர்ச்சிப் பயணத்திற்கு வேகம் சேர்ப்பதற்காகவும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் இணைந்து செயல்படுவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவோம்.

    'புத்தாண்டு 2024' நம் அனைவருக்கும் மேலும் மகிழ்ச்சி, நல்லிணக்கம், நல்ல ஆரோக்கியம் மற்றும் வெற்றியைக் கொடுக்கட்டும்- ஆளுநர் ரவி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.

    • ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
    • காலியிடங்களை நிரப்ப ஒப்புதல் தர வேண்டும் என கோரியுள்ளோம்.

    கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் ஆகியோரும் சந்தித்துள்ளனர்.

    பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில் நிறைவு பெற்றது.

    சந்திப்பின்போது, கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்தித்தார்.

    10 சட்ட முன்வடிவு இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆனால், அதை ஆளுநர் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினார்.

    முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பாக கோப்புகளுக்கு அனுமதி கோரியுள்ளோம்.

    அண்ணாவின் பிறந்தநாளன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புகளுக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி அளித்திருந்தார். எஞ்சிய கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை. நிலுவையில் உள்ள 49 கோப்புகளுக்கு அனுமதி வழங்குமாறு ஆளுநரிடம் கோரியுள்ளோம்.

    டிஎன்பிஎஸ்சியில் 4 பேர் தான் உள்ளனர். காலியிடங்களை நிரப்ப ஒப்புதல் தர வேண்டும் என கோரியுள்ளோம்.

    கோரிக்கைகளை மனுக்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்.

    20 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு, ஆளுநர் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுரைபடி மசோதாக்களை ஆளுநர் பரிசீலிக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதே எங்களின் கருத்து.

    மசோதாக்களுக்கு நீங்களே அனுமதி தரலாம் என ஆளுநரிடம் தெரிவித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பு.
    • கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

    தமிழக முதலமைச்சர், கவர்னரிடையே பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டி உள்ளது. எனவே முதலமைச்சரை கவர்னர் அழைத்து பேசி இந்த முட்டுக்கட்டைகளுக்கு தீர்வு காண வேண்டும். அப்படி செய்தால் இந்த நீதிமன்றம் வெகுவாக பாராட்டும் என்று நீதிபதிகள் கருத்து வெளியிட்டனர்.

    அதன்பிறகு தமிழக அரசு வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஜனவரி மாதம் 23-ந் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டனர். 

    இதையடுத்து கவர்னர் ஆர்.என்.ரவி தரப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார்.

    இந்தநிலையில் கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) மாலை 5மணியளவில் சந்தித்து பேசினார்.

    அப்போது தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பி நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் பற்றி கவர்னர் மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினர்.

    குறிப்பிட்ட சில மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதால் மக்கள் நல பணிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கும் தகவல்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கி கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவத்திற்கு மிகுந்த கவலை தெரிவித்தார்.
    • பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார்.

    சென்னை :

    கவர்னர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கவர்னர் ஆர்.என்.ரவி, வடசென்னை எண்ணூரில் உள்ள தொழிற்சாலையில் ஏற்பட்ட துரதிருஷ்டவசமான வாயு கசிவு சம்பவம் குறித்து மிகுந்த கவலை தெரிவித்ததோடு, அதில் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்தினார் என கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுரைகளை தயவுசெய்து கடைபிடிக்கவும்.
    • மத்திய, மாநில துறைகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பதிவில்,

    தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நமது சகோதர, சகோதரிகள் கனமழை மற்றும் வெள்ளத்தால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    இந்த இக்கட்டான நேரத்தில் தயவு செய்து வீட்டிலேயே இருங்கள். மிகவும் அவசியமில்லாவிட்டால் வெளியே வர வேண்டாம்

    அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுரைகளை தயவுசெய்து கடைபிடிக்கவும். மத்திய, மாநில துறைகள் இயல்பு நிலையை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

    விரைவில் நிலைமை சீரடைய எனது பிரார்த்தனைகள் என கூறியுள்ளார்.

    • புயலுக்கு முன்பும்-புயலுக்கு பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது.
    • பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

    கேள்வி:-நிவாரணப் பணிகள் உங்களுக்குத் திருப்தியை அளிக்கின்றனவா? இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியும் என்று நினைக்கிறீர்களா?

    தமிழ்நாடு அரசின் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை ஒன்றிய அரசின் குழு முழுமையாக வரவேற்றுப் பாராட்டி இருக்கிறது. 'சரியான நேரத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இல்லையென்றால் பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும்' என்றும், 'உரிய நேரத்தில் நீர் திறந்து விடப்பட்டதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டிருக்கிறது' என்றும், 'அதற்காக இந்த அரசை நாங்கள் பாராட்டுகிறோம்' என்றும் ஒன்றியக் குழு பாராட்டி இருக்கிறது.

    இதே கருத்தை, ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் என்னைச் சந்தித்தபோது தெரிவித்தார்.

    அரசியல் ரீதியாக ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கும் எங்களுக்குமான கொள்கை முரண்பாடுகள் அனைவரும் அறிந்ததே. அதனையும் தாண்டி இந்தளவுக்குப் பாராட்டுகிறார்கள் என்றால், தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம்.

    கடுமையான மழை இரண்டு நாட்கள் இடைவிடாது பெய்கிறது. மழை நின்றதும் நிவாரணப் பணிகளை நாங்கள் தொடங்கி விட்டோம். மறுநாளே போக்குவரத்து சீர்செய்யப்பட்டது. பெரும்பாலான பகுதிகளுக்கு மின் இணைப்பானது மூன்று நாட்களுக்குள் கிடைத்து விட்டது. புறநகரில் ஒரு சில பகுதிகள் நீங்கலாக நான்கைந்து நாட்களுக்குள் மற்ற அனைத்துப் பகுதிகளும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி விட்டன.

    தண்ணீரில் மூழ்கியிருந்த பகுதி மக்களுக்குத் தேவையான பொருட்களைக் கொடுத்தோம். அவர்களையும் பாதுகாப்பான பகுதிக்கு அழைத்து வந்து அமர்த்தினோம். நானே பல்வேறு பகுதிக்குச் சென்றேன். 20 அமைச்சர்கள், 50 ஐ.ஏ.எஸ். -ஐ.பி.எஸ் அதிகாரிகள், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் களத்தில் இருந்தார்கள். வெளிமாவட்டங்கள் அனைத்தில் இருந்தும் ஆதரவுக் கரம் நீண்டது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இந்த நொடி வரையிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

    புயலுக்கு முன்பும்-புயலுக்கு பிறகும் அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாகத்தான் பாதிப்பு குறைந்தது. பொதுவாக மக்கள் பணியாற்றும் நாங்கள் மேலும் மேலும் மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்றுதான் நினைப்போம். இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்று கேட்கிறீர்கள். இன்னும் அதிகமாக மக்களுக்கு உதவவே நான் ஆசைப்படுகிறேன்.

    கேள்வி:-பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. நீர் வடிந்து தேங்காமல் இருப்பதற்கு இயற்கையால் உருவான அந்த நிலத்தை முழுவதுமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்குமா? அது போல வேளச்சேரியிலும் பல இடங்கள் சதுப்பு நிலமாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது?

    பதில்:- பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும். தென்சென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாடு குறித்து நிச்சயமாக மறு ஆய்வு செய்யப்படும். இந்த சதுப்பு நிலத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், வனத்துறை ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேபோல், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முழுமைத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும். இந்த மூன்றாவது முழுமைத் திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம் பெறும். சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்பு நிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்க திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது முழுமைத் திட்டம் நிச்சயம் வழிவகுக்கும்.

    கேள்வி:- சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளும் தண்ணீர் வடியும் பாதைகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி இருக்கின்றன. கனமழை பெய்யும்போது எல்லா ஊர்களிலுமே இது போன்ற நிலைமை ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளைச் சுணக்கம் காட்டாமல் அகற்ற அரசு முன் வருமா?

    பதில்:- ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் அரசு எப்போதும் முனைப்புடன் உள்ளது. எவ்வித ஆக்கிரமிப்பாக இருந்தாலும் அவை அகற்றப்பட வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு ஆகும். நீர்நிலைகளையும், வெள்ளச் சமவெளிகளையும் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளில் இருந்து காக்க வேண்டும். அத்தகைய நீர்நிலைகளைச் சுத்தம் செய்து அகலப்படுத்த வேண்டும்.

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நவம்பர் 2021 முதல் நவம்பர் 2023 வரை நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள 350 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 475.85 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அதேபோன்று, நீர்வள ஆதாரத் துறைக்குச் சொந்தமான ஏரிகள், குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட பகுதிகளில் 19,876 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு, 220.45 ஹெக்டேர் பரப்பளவிலான ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளன.

    கேள்வி:-முதலமைச்சராகிய நீங்களும் கவர்னரும் கலந்து பேசி, நிர்வாகத்தில் இருக்கும் முட்டுக்கட்டைகளைப் போக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்திருக்கிறது. கவர்னர் உங்களை அழைத்திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா?


    பதில்:-கவர்னர் தமிழ்நாட்டிற்கு வந்தபிறகு பல முறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார் பேசினார். எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்சனை. கவர்னர் மனம் மாறித் தமிழ்நாட்டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்களுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல்படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது தான் எனது வேண்டுகோள்.

    கேள்வி:-மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாக் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இச்சூழலில் இந்தியா கூட்டணியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?

    பதில்:-மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தான். இது பாராளுமன்றத் தேர்தல் முடிவைப் பாதிக்காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்சனைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்தகைய முடிவுக்குக் காரணம் ஆகும்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் பா.ஜ.க வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் பேர்தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பா.ஜ.க அதிகம் பெற்றுள்ளது. மத்தியப் பிரதேசத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பா.ஜ.க. பெற்றுள்ளது.

    பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப்பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பா.ஜ.க. பெற்றிருக்க முடியாது என்பதே உண்மை. நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை 'இந்தியா' கூட்டணி செய்யும். அதன் மூலமாக பாராளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநிலத் தேர்தல் முடிவைப் படிப்பினையாகவே நாங்கள் பார்க்கிறோம்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

    • கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது கவர்னருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
    • மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக கவர்னரும், முதலமைச்சரும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் உடனே ஒப்புதல் வழங்குவது கிடையாது. பல்கலைக் கழகங்களுக்கு வேந்தர் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை கவர்னரிடம் இருந்து முதலமைச்சருக்கு மாற்றும் சட்ட மசோதா உள்பட 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தமிழக அரசு கவர்னர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்து வரும் வேளையில் 10 சட்ட மசோதாக்களை கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துவிட்டார்.

    இதுதொடர்பாக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தபோது கவர்னருக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    மசோதாக்களுக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தை கவர்னர்தான் தீர்க்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தலையிட்டுதான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று கவர்னர் எதிர்பார்க்கிறாரா? எம்.பி., எம்.எல்.ஏ.க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஜனாதிபதி. அவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அத்தகைய அதிகாரம் கவர்னருக்கு கிடையாது.

    எனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக கவர்னரும், முதலமைச்சரும் கலந்து பேசி தீர்வு காண வேண்டும் என்று நீதிபதிகள் யோசனை தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்திருந்தனர்.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் இதுதொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் வர உள்ளது. இதற்கிடையே சட்ட மசோதா சம்பந்தமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கவர்னர் ஆர்.என்.ரவி பேசுவதற்கு அழைப்பு விடுத்துள்ளதாக டெல்லி வட்டாரத்தில் தகவல்கள் பரவியது. புயல் வெள்ளத்துக்கு முந்தைய நாள் முதலமைச்சருக்கு கவர்னர் அழைப்பு விடுத்ததாகவும், புயல் வெள்ள நிவாரண பணிகள் மற்றும் மத்திய குழு ஆய்வுக்கு பிறகு பேச வருவதாக முதலமைச்சர் வட்டாரத்தில் பதில் அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • மசோதாக்களை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை கூட கவர்னர் கூறவில்லை.
    • தன்னிடம் இருக்கும் அதிகாரம் பறிபோய் விடக்கூடாது என கவர்னர் நினைக்கிறார்.

    சென்னை:

    சென்னை லயோலா கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கேள்வி:- சட்டமன்றத்தில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்ட 10 சட்ட மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்து விட்டாரா? இன்று சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு வருகிறதே?

    அமைச்சர் ரகுபதி பதில்:- அந்த 10 சட்ட மசோதாக்களை நாங்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பினோம். அதை திருப்பி அனுப்புவதற்கு முன்பு கவர்னர் இன்னென்ன காரணங்களுக்காக நான் திருப்பி அனுப்புகிறேன் என்று குறிப்பிட்டு இருப்பாரேயானால், அதற்கான தகுந்த விளக்கங்களை நாங்கள் தந்து, அந்த மசோதாக்களை நிறைவேற்றி திருப்பி அனுப்பி இருப்போம்.

    ஆனால் அப்போது காரணம் தெரிவிக்காமல் 'சும்மா' அனுப்பி விட்டு இப்போது நாங்கள் மீண்டும் சட்டமன்றத்தில் 10 மசோதாக்களை நிறைவேற்றி அனுப்பிய உடன், தான் ஒப்புதல் தர வேண்டும் என்கின்ற கட்டாயத்திற்கு ஆளாகி இருக்கின்ற நிலையிலே, அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடிப்பதற்காக இன்றைக்கு உள்துறை அமைச்சகத்தின் மூலமாக ஜனாதிபதிக்கு அனுப்பி இருப்பதாக ஒரு செய்தியை சொல்லி இருக்கிறார்.

    கேள்வி:- இந்த விசயத்தில் அவர் தொடர்ந்து காலதாமதப்படுத்தும் நடவடிக்கையாக பார்க்கிறீர்களா?

    பதில்:- தன்னிடம் இருக்கக் கூடிய அதிகாரம் பறி போகக்கூடாது என்ற எண்ணம் ஏன் அவருக்கு வருகிறது என்று தெரியவில்லை.

    ஒரு மாநில அரசுக்கு ஒரு துணை வேந்தரை நியமிக்க கூட அதிகாரம் கூடாது என்று நினைப்பது எந்த அடிப்படையில் நியாயமான ஒன்று என்று புரியவில்லை.

    மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் ஒரு குழுவை நியமிக்கிறோம். அந்த குழுவில் கவர்னரின் பிரதிநிதியும் இருக்கிறார். அரசின் பிரதிநிதியும் இருக்கிறார். சிண்டி கேட் பிரதிநிதியும் அதில் உள்ளார்.

    அந்த தேடுதல் குழுதான் மூன்று பேரையும் பரிந்துரை செய்கிறது. அதில் ஒருவரை துணைவேந்தராக தேர்ந்தெடுக்க வேண்டும்.

    கவர்னர் தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக மாநில அரசாங்கம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று சொல்வதிலே என்ன தவறு இருக்கிறது?

    மக்கள் உரிமை பறிக்கப்படாமல் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் இந்த மசோதாக்களை அவருக்கு 2-வது முறையாக அனுப்பி இருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் ஆர்.என். ரவி செல்லும் பாதை மற்றும்பெரியார் பல்கலைக்கழக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • நாளை இரவு கவர்னர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார்.

    சேலம்:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நாளை (23-ந்தேதி)சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். பின்னர் அங்கிருந்து சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு காரில் வருகிறார். அவரை மாவட்ட கலெக்டர் கார்மேகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்.

    டெல்லியில் ஏற்கனவே நடைபெற்ற ஜி 20 மாநாடு தொடர்பாக பெரியார் பல்கலைக்கழகத்தில் நாளை மாலை 4.30 மணியளவில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பின்னர் நாளை இரவு கவர்னர் ஆர்.என்.ரவி பெரியார் பல்கலைக்கழகத்தில் தங்குகிறார்.

    தொடர்ந்து நாளை மறுநாள் (24-ந்தேதி) பெரியார் பல்கலைக்கழகத்தின் 22-வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்துகிறார். இதையொட்டி கவர்னர் ஆர்.என். ரவி செல்லும் பாதை மற்றும்பெரியார் பல்கலைக்கழக பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    • சனிக்கிழமை டெல்லி சென்றிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று உலக மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி சென்றுவிட்டார்.
    • சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களிலும் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததால் தமிழக அரசு அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    இந்த நிலையில் அந்த 10 மசோதாக்களையும் காரணம் இன்றி அவர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.

    இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ந்தேதி சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அந்த 10 மசோதாவையும் எவ்வித திருத்தமும் செய்யாமல் அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த 10 சட்ட மசோதாக்கள் மீது கவர்னர் இன்னும் முடிவெடுக்காத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி கவர்னர் தரப்பில் வழங்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இதன் மீது நடைபெற்ற விவாதத்தில் தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி கவர்னர் அரசியல் சட்டத்தை மீறி வருவதாக குற்றம் சாட்டினர்.

    தமிழக அரசின் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் அரசின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி மாநில பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் இதில் ஆழ்ந்து பரிசீலித்து முடிவெடுக்க கவர்னருக்கு அவகாசம் தேவை என வாதிட்டார்.

    இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் கவர்னர் முடிவு எடுக்க அவகாசம் அளிக்கும் வகையில் வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

    இந்த நிலையில் சனிக்கிழமை டெல்லி சென்றிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று உலக மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி சென்றுவிட்டார். இன்று மாலையில்தான் சென்னை திரும்புகிறார்.

    தமிழக சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள 10 மசோதாக்களில் கவர்னர் கையெழுத்து போடுவாரா? இல்லையா? என்பது பற்றி கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல் உள்ளது.

    இதுகுறித்து விசாரித்ததில் 10 சட்டமசோதாக்களிலும் கவர்னர் ஒப்புதல் வழங்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி சட்ட நிபுணர்களின் கருத்தை கவர்னர் கேட்டு உள்ளதாகவும் அதன் அடிப்படையில்தான் அவர் செயல்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் இது தொடர்பான மசோதாக்களுக்கு கவர்னர்கள் என்னென்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்ற விவரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இது தொடர்பாக என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளலாம் என்றும் கவர்னர் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளதால் 2 நாளில் இது தொடர்பான முடிவு என்ன என்பது தெரிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி இந்த 10 மசோதாக்களிலும் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    • தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக ஒப்புதல் கொடுக்காமல், கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.
    • 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே இணக்கமான சூழல் இல்லாத காரணத்தால் மோதல் போக்கு நடந்து வருகிறது.

    தமிழக அரசு அனுப்பும் கோப்புகளுக்கு அவர் உடனே ஒப்புதல் வழங்குவதில்லை. பல்வேறு விளக்கங்கள் பெற்று அதன் அடிப்படையில்தான் ஒப்புதல் வழங்கி வருகிறார். அதே போல் சட்ட மசோதாக்களுக்கும் உடனே ஒப்புதல் வழங்குவது இல்லை.

    இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி நீண்ட காலமாக ஒப்புதல் கொடுக்காமல், கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

    இதையடுத்து தமிழக அரசு, கவர்னருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு நாளை (20-ந்தேதி) திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டிருந்தது.

    இந்த நிலையில் உடனடியாக கவர்னர் ஆர்.என்.ரவி அவசரமாக, நீண்ட காலமாக கிடப்பில் வைத்திருந்த, 10 மசோதாக்களையும் கடந்த 13-ந்தேதி அரசுக்கு திருப்பி அனுப்பினார்.

    இதையடுத்து தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று (சனிக்கிழமை) அவசரக் கூட்டமாக கூட்டப்பட்டது.

    இந்த கூட்டத்தில் கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட பல்கலைக்கழகங்களுக்கு வேந்தர்களை அரசே நியமிக்கும் சட்ட மசோதாக்கள் உள்பட 10 மசோதாக்களையும் மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னர் ஆர்.என்.ரவிக்கு நேற்று மாலையில் அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் வழங்கி மத்திய அரசுக்கு அனுப்பி வைப்பாரா? இல்லையா? என்பது இன்று தெரிந்துவிடும்.

    சுப்ரீம் கோர்ட்டில் நாளை இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வர இருப்பதால் இன்றே அவர் இதில் முடிவு எடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்.

    இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.15 மணிக்கு விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னையில் இருந்து திடீரென அவசரமாக டெல்லி புறப்பட்டு செல்கிறார். கவர்னருடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.

    டெல்லி செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் இது தொடர்பாக கலந்து ஆலோசனை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே கவர்னர் மீது, தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை (திங்கட்கிழமை) சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும் போது கவர்னர் தரப்பில் மசோதா மீது எடுக்கப்பட்ட முடிவு பற்றி கோர்ட்டில் தெரிவிக்கப்படும் என்று தெரிகிறது.

    இதற்காகவே உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இன்று அவர் டெல்லி செல்ல உள்ளார்.

    கவர்னரின் திடீர் டெல்லி பயணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் சென்னை வந்திருந்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் நேற்று கவர்னர் மாளிகைக்கு சென்று தங்கினார். அப்போது கவர்னருடன் அவர் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனையில் பல்வேறு தரப்பு விஷயங்கள் குறித்தும் பேசப்பட்டதாக தெரிகிறது.

    • ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.
    • உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணை.

    தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களை, நேற்று சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட நிலையில், ஆளுநர் ரவி தீடிரென டெல்லி புறப்படுகிறார்.

    அதன்படி, இன்று மாலை 5.15 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து டெல்லி செல்கிறார். ஆளுநர் ரவியுடன் அவருடைய செயலாளர், உதவியாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் செல்கின்றனர்.

    டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இதற்கிடையே, உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×