என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முக ஸ்டாலின்"
- மக்களுடைய அங்கீகாரத்தால் உழைத்து முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.
- மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம் மட்டுமே.
திருப்பூர்:
திருப்பூர் கொடுவாயில் தி.மு.க., இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-
இளைஞரணி மாநாட்டு நிதியாக திருப்பூர் வடக்கு மாவட்டம் ரூ.1 கோடி, தெற்கு மாவட்டம் ரூ.1 கோடி, வடக்கு மாவட்ட இளைஞரணி ரூ. 14 லட்சம், தெற்கு மாவட்ட இளைஞரணி ரூ.12 லட்சம், முன்னாள் மாவட்ட செயலாளர் சார்பாக 2 லட்சம் என ரூ. 2 கோடியே 28 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
சேலம் மாநாட்டிற்காக 4 லட்சம் டீ- சர்ட்டுகள் திருப்பூரில் தயாரிக்கப்பட்டு வருகிறது. மற்ற ஊர்களுக்கெல்லாம் சட்டையில் செல்லும் நான் இங்கு மட்டும்தான் டீ-சர்ட்டில் வந்திருக்கிறேன். மக்களுடைய அங்கீகாரத்தால் உழைத்து முதல்வரானார் மு.க.ஸ்டாலின்.
காலில் விழுந்து முதல்வரானவர் அல்ல. மு.பெ.சாமிநாதன் வகித்த பொறுப்பை நான் வகிப்பது தான் எனக்கு பெருமை. இளைஞரணியில் கிளை அமைப்பாளராக பணியை தொடங்கியவர் மு.பெ. சாமிநாதன். சேலம் மாநாட்டை எழுச்சி மாநாடாக கொள்கை மாநாடாக நடத்தி காட்ட வேண்டும். இழந்த உரிமைகளை மீட்டெடுக்கவே சேலம் மாநாடு நடைபெற உள்ளது. மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று முதல் தமிழக அரசால் அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. பா.ஜ.க., 9 ஆண்டுகளில் என்ன செய்தது. மோடியால் வாழ்ந்தது அதானி குடும்பம் மட்டுமே.
இவ்வாறு அவர் பேசினார்.
- வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.
- உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும்.
சென்னை:
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைஷாலி இந்தியாவின் 84-வது செஸ் கிராண்ட்மாஸ்டராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் இவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறும் முதல் தமிழக வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார். வைஷாலி பிரபல தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி ஆவார்.
இந்நிலையில், வைஷாலிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியாவின் 3-வது பெண் கிராண்ட் மாஸ்டரும், தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டருமான வைஷாலிக்கு எனது பாராட்டுகள். நீங்கள் தான் இப்போது முதல் கிராண்ட் மாஸ்டர் உடன்பிறப்புகள்.
உங்கள் சாதனைகளால் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உங்களின் பயணம் செஸ் ஆர்வலர்களுக்கு மிகவும் உத்வேகம் அளிக்கும். இது தமிழ்நாட்டில் பெண்கள் அதிகாரம் பெற்றதற்கான சான்றாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
- பெரிய அளவில் மழைநீர் பாதிப்பு இல்லை.
- பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது.
சென்னை:
சென்னையில் பெய்த மழை பாதிப்பு குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-
நேற்று காலை முதல் இன்று வரை சென்னையின் பல்வேறு பகுதிகளில் 10 செ.மீ. முதல் 25 செ.மீ. அளவுக்கு கனத்த மழை பெய்துள்ளது. ஆனாலும் பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் இல்லை. பெரிய மழை பெய்தது என்ற சுவடே தெரியாத அளவுக்கு மழைநீர் வடியும் வகையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் 800-க்கும் மேற்பட்ட கிலோமீட்டர் தூரத்துக்கான புதிய மழை நீர் வடிகால் கால்வாய்களை அமைத்ததால் மழை பெய்தாலும் முக்கிய சாலைகளில் சில மணிநேரத்தில் வடிந்து விடுகிறது. பெரிய அளவில் மழைநீர் பாதிப்பு இல்லை.
ஏற்கனவே இருந்த கால்வாய்களை தூர்வாரிய காரணத்தால் தண்ணீர் விரைவாக வடிந்து விடுகிறது.
சைதாப்பேட்டையை பொறுத்தவரை 5 செ.மீ. மழை பெய்தால்கூட திருவள்ளூர் தெரு, திவான் பாஷ்யம் தோட்டம், சுப்பிரமணிய சாலை போன்ற பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் நாள் கணக்கில் தேங்கி நிற்கும்.
ஆனால் இப்போது அப்படி இல்லை. ஒரு இடத்தில் கூட தண்ணீர் தேங்குவது கிடையாது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே மேலாண்மை செய்த காரணத்தால் மிகப்பெரிய பாதிப்பு இல்லாமல் தவிர்க்கப்பட்டுள்ளது.
பெரிய மழை வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கு சென்னை மாநகராட்சி நிர்வாகம் தயாராக உள்ளது. 162 இடங்களில் நிவாரண மையங்களும் தயாராக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சனிக்கிழமை டெல்லி சென்றிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று உலக மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி சென்றுவிட்டார்.
- சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களிலும் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததால் தமிழக அரசு அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த நிலையில் அந்த 10 மசோதாக்களையும் காரணம் இன்றி அவர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.
இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ந்தேதி சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அந்த 10 மசோதாவையும் எவ்வித திருத்தமும் செய்யாமல் அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த 10 சட்ட மசோதாக்கள் மீது கவர்னர் இன்னும் முடிவெடுக்காத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி கவர்னர் தரப்பில் வழங்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதன் மீது நடைபெற்ற விவாதத்தில் தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி கவர்னர் அரசியல் சட்டத்தை மீறி வருவதாக குற்றம் சாட்டினர்.
தமிழக அரசின் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் அரசின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி மாநில பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் இதில் ஆழ்ந்து பரிசீலித்து முடிவெடுக்க கவர்னருக்கு அவகாசம் தேவை என வாதிட்டார்.
இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் கவர்னர் முடிவு எடுக்க அவகாசம் அளிக்கும் வகையில் வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
இந்த நிலையில் சனிக்கிழமை டெல்லி சென்றிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று உலக மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி சென்றுவிட்டார். இன்று மாலையில்தான் சென்னை திரும்புகிறார்.
தமிழக சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள 10 மசோதாக்களில் கவர்னர் கையெழுத்து போடுவாரா? இல்லையா? என்பது பற்றி கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல் உள்ளது.
இதுகுறித்து விசாரித்ததில் 10 சட்டமசோதாக்களிலும் கவர்னர் ஒப்புதல் வழங்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி சட்ட நிபுணர்களின் கருத்தை கவர்னர் கேட்டு உள்ளதாகவும் அதன் அடிப்படையில்தான் அவர் செயல்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒவ்வொரு மாநிலத்திலும் இது தொடர்பான மசோதாக்களுக்கு கவர்னர்கள் என்னென்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்ற விவரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இது தொடர்பாக என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளலாம் என்றும் கவர்னர் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளதால் 2 நாளில் இது தொடர்பான முடிவு என்ன என்பது தெரிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி இந்த 10 மசோதாக்களிலும் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
- மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா? அல்லது ஏற்க மறுப்பாரா? என்று அரசியல் நிபுணர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.
- சட்ட சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானமாக கொண்டு வந்து இவற்றை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சென்னை:
தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி 10 சட்ட மசோதாக்களை காரணம் ஏதும் குறிப்பிடாமல் ஒப்புதல் அளிப்பதை நிறுத்தி வைத்து அதை அரசுக்கு திருப்பி அனுப்பி இருக்கும் நிலையில் மறுபடியும் அதே மசோதாக்கள் சட்டசபையில் இன்று நிறைவேறி உள்ளது.
இந்த மசோதாக்களை கவர்னருக்கு மீண்டும் அனுப்பும் பட்சத்தில் கவர்னர் அதை ஏற்று கையெழுத்திடுவாரா? அல்லது ஏற்க மறுப்பாரா? என்று அரசியல் நிபுணர்கள் வினா எழுப்பி வருகின்றனர்.
ஏனென்றால் இந்த மசோதாக்களை அவர் திருப்பி அனுப்பிய போது காரணம் எதுவும் தெரிவிக்காமல்தான் அனுப்பி உள்ளார். இதுகுறித்து சட்டத்துறை அதிகாரிகளிடம் கேட்டதற்கு, இவ்வாறு சட்ட சிக்கல் வந்து விடக்கூடாது என்பதால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அரசினர் தனித் தீர்மானமாக கொண்டு வந்து இவற்றை நிறைவேற்றி தருமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
சபையில் ஒருமனதான முடிவுடன் இந்த 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்படுவதால் இதில் சட்ட சிக்கல் வர வாய்ப்பில்லை என்றே கருதுகிறோம் என்று விளக்கம் தெரிவித்தனர்.
- சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.
- ‘வித்ஹோல்டு’ (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார்.
சென்னை:
சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் மீது நடந்த விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வருவதற்குள் இந்த அவசர கூட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் என்ன?
கவர்னர் மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதாக தானே அர்த்தம் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அவை முன்னவர் துரைமுருகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் பதிலளித்து பேசினார்கள். அவர்கள் கூறும்போது, சட்டசபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை கவர்னர்களோ, குடியரசு தலைவரோ நிராகரிக்கும் போது திருப்பி அனுப்புகிறோம் என்ற வார்த்தையை குறிப்பிடுவதில்லை.
'வித்ஹோல்டு' (நிறுத்தி வைப்பு) என்றே குறிப்பிடுவார்கள். தமிழக கவர்னரும் அது போன்ற வார்த்தையையே குறிப்பிட்டுள்ளார். எனவே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றனர்.
இதையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த 10 மசோதாக்கள் தொடர்பாக மட்டும்தான் வழக்கு போடப்பட்டுள்ளதா? கவர்னரிடம் நிலுவையில் உள்ள மற்ற கோப்புகளுக்கு எதிராகவும் வழக்கு போடப்பட்டு உள்ளதா? என்றார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, இந்த மசோதாக்கள் மற்றும் முன் விடுதலை தொடர்பாக நிலுவையில் உள்ள 50 கோரிக்கை தொடர்பாகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.
எடப்பாடி பழனிசாமி:-பல்கலைக்கழகங்களில் வேந்தராக முதலமைச்சர் இருக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நாங்கள் ஏற்கனவே கொண்டு வந்தோம். அப்போது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தார். ஆனால் அப்போது தி.மு.க. சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இல்லை என்றால் அப்போதே தீர்வு கிடைத்து இருக்கும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்:-பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் போது அரசிடம் கலந்து விவாதிக்கும் பழக்கம் அப்போது இருந்தது. தற்போது அது இல்லை என்பதே பிரச்சனை.
இவ்வாறு விவாதம் நடந்தது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா பெயரில் அமைக்கப்பட்டிருந்த மீன்வள பல்கலைக்கழகம் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.
ஆனால் அதன் பிறகு அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ஜெயலலிதா பெயரை நீக்கியதாக உண்மைக்கு மாறான தகவலை கூறி வெளிநடப்பு செய்துள்ளார்கள். மீன்வள பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படவில்லை. நிலுவையில் உள்ளது" என்றார்.
- தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன.
- பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்ட சட்ட முன்வடிவுகளை மீண்டும் சட்டசபையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிடும் அரசின் தனித்தீர்மானத்தை முன்மொழிந்து பேசியதாவது:-
"மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று விடுவதாக இல்லை" என்றார் புரட்சியாளர் மா சே துங். காய்ச்சல், தொண்டை வலி காரணமாக சில நாட்கள் வீட்டில் நான் ஓய்வெடுத்து வந்தாலும், எனது உடல்நலனைவிட இந்த மாநிலத்து மக்கள் நலன்-தாய்த்தமிழ் நாட்டின் நலன், நூற்றாண்டு கண்ட இந்த சட்டப் பேரவை நலன் தான் அதைவிட முக்கியம் என்ற மன உறுதியோடு உங்கள் முன்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன்.
கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் நம்மை, இந்திய அரசியல் சட்டம் வழங்கிய அதிகாரத்தின் மையமாக இருந்து சட்டமியற்றும் இந்த சட்டமன்றத்தை தடுக்கும் சக்தி ஒன்று முளைக்குமானால், இந்தச் சூழ்நிலை என்பது இந்திய ஜனநாயகத்தை மிக மோசமான வகையில் கொண்டு செலுத்திவிடும் என்ற அச்சத்துடன் தான் உங்கள் முன்னால் நிற்கிறேன்.
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி வருகிறோம்.
சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் காத்தல் ஆகிய கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு, எண்ணற்ற மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை இதே சட்டமன்றத்தில் அறிவித்துச் செயல்படுத்தி வருவதை இன்றைய தினம் அனைத்துத் தரப்பினரும் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் தமிழ்நாட்டை வளப்படுத்தும் திட்டங்களாக மட்டுமல்ல, இந்தியாவுக்கான வழிகாட்டும் திட்டங்களாக அமைந்து வருகின்றன.
இத்தகைய சூழ்நிலையைக் கெடுக்கும் வகையில் என்றுகூடச் சொல்ல மாட்டேன்; தடுக்கும் வகையில் சில இடையூறுகள் இருக்கின்றன என்பதையும் இந்த மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள்.
* ஒன்றிய அரசின் சில இடையூறுகள்
இவை மட்டும் இல்லாமல் இருந்தால் இன்னும் பல திட்டங்களை எங்களால் செய்து காட்ட முடியும் என்று இதே மாமன்றத்தில் ஓராண்டுக்கு முன்னதாக நான் குறிப்பிட்டதையும் நினைவூட்டக் கடமைப்பட்டு உள்ளேன்.
இடையூறுகள் என்று நான் சொன்னதன் விளைவாகத்தான் இந்தச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டியதாக உள்ளது.
பொதுவாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சிறப்புக் கூட்டங்கள், முக்கிய நிகழ்வுகளுக்காகவும், முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்படுவது வழக்கம்.
அதேபோல் நாம் இன்றைக்கு கூட்டியிருக்கும் சிறப்புக் கூட்டம், அவசர, அவசியம் கருதி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதியும், ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டிய அவசியத்தின் அடிப்படையிலும், அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியும் கூட்டப்பட்டுள்ளது.
மக்களாட்சித் தத்துவத்தின் கலங்கரை விளக்கமாகத் திகழும் இந்தச் சட்டமன்றப் பேரவையில் நாம் நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல் இருந்தார் ஆளுநர்.
"i withhold assent" அதாவது, தான் அனுமதியை நிறுத்திவைத்துள்ளதாகக் குறிப்பிட்டு, நாம் இங்கு நிறைவேற்றி அனுப்பிய சட்டமுன்வடிவுகளை கடந்த 13.11.2023 அன்று திருப்பி அனுப்பி வைத்திருக்கின்றார். கவர்னரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ள சட்டமுன்வடிவுகளை நாம் இங்கே மீண்டும் நிறைவேற்றி, அவரது ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்பி வைக்க இருக்கிறோம். அதற்காகத்தான் இன்றைக்கு இந்தச் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
மக்களாட்சித் தத்துவத்தின் படி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மைமிக்க ஒரு அரசால், மாநில நலன் கருதி சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டமுன்வடிவுகளுக்கு ஒப்புதல் தர வேண்டியது கவர்னரின் கடமை. அவருக்கு அதில் சட்டரீதியாக அல்லது நிர்வாக ரீதியாக ஏதேனும் தெளிவுரை தேவைப்பட்டால், அதனை அவர் அரசிடம் கோரலாம். அதனை அரசு வழங்க வேண்டும். அந்த வகையில் இதற்கு முந்தைய சில நிகழ்வுகளில் அவர் எழுப்பிய சில வினாக்களுக்கு முறையாக எழுத்து மூலமாகவும், சம்மந்தப்பட்ட அரசு செயலர்கள், தலைமைச் செயலாளர் ஆகியோர் நேரிலும் விளக்கம் அளித்து உள்ளனர்.
எந்த ஒரு நிகழ்விலும் அவர் கோரிய விளக்கங்கள் அவருக்கு வழங்கப்படாமல் இருந்ததில்லை. இந்தச் சூழ்நிலையில் அவர் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில், சட்டமன்றப் பேரவையினால் நிறைவேற்றி அனுப்பப்பட்ட சில சட்டமுன்வடிவுகளுக்கு அனுமதி வழங்காமல் திருப்பி அனுப்பி வைத்திருப்பது என்பது தமிழ்நாட்டு மக்களையும், இந்தச் சட்டமன்றத்தையும் கவர்னர் அவமதிக்கின்றார் என்றுதான் பொருளாகும்.
10 சட்டமுன்வடிவுகள் உள்ளிட்ட 12 சட்டமுன்வடிவுகள் மற்றும் வேறு சில கோப்புகளுக்கும் இவர் ஒப்புதல் வழங்காமல் இருப்பது சட்டவிரோதம் ஆகும்! ஜனநாயக விரோதம் ஆகும்! மக்கள் விரோதம் ஆகும்! மனச்சாட்சி விரோதம் ஆகும்! அனைத்திற்கும் மேலாக இந்த சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானதாகும்!
தமிழ்நாட்டுக்கு கவர்னராக இருப்பவர், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும்; தமிழ்நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். ஒன்றிய அரசிடம் அவருக்கு இருக்கும் நெருக்கத்தைப் பயன்படுத்தி, தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம்; ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையைப் பெற்றுத் தரலாம்; எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு உரிய நிதியை வாங்கித் தரலாம்; புதிய ரெயில்வே திட்டங்களைப் பெற்றுத் தரலாம்; மாநில ஆட்சிக்கும், ஒன்றிய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால், இதில் எதையும் செய்யாமல், மாநில அரசின் திட்டங்களுக்கு எவ்வாறு முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து யோசித்து செயல்பட்டு வருகிறார்.
தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் திராவிடக் கொள்கை, சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு மற்றும் சுயமரியாதை ஆகியவை மக்களின் மனங்களில் இருப்பது அவருக்கு ஏற்கவியலாத ஒன்றாக உள்ளது.
பொதுமேடைகளில் அவர் நமது தமிழ்ப்பண்பாடு, இலக்கியம் மற்றும் சமூக அமைப்பிற்கு எதிரான கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். தெரிவித்துக் கொண்டும் வருகிறார்.
அவர் தெரிவிக்கும் கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது, அவருக்கும் தமிழ்நாடு சட்ட மன்றத்துக்குமான பிரச்சனை என்பது நாம் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களில் மட்டுமல்ல; சமூகநீதியாகவும் இருக்கிறது. அதனால்தான் முடிந்தளவு அனைத்து வகையிலும் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
கவர்னரிடம் தேங்கிக் கிடக்கும் அனைத்துக் கோப்புகள், சட்ட முன்வடிவுகள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட்டு, உச்சநீதிமன்றத்தில், தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.
தமிழ்நாடு அரசு எடுத்துரைத்த வாதங்களைக் கவனித்துக் கேட்ட உச்சநீதிமன்றம், கவர்னரின் செயல்பாடுகள் குறித்து தெரிவித்த கருத்துகள், தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு கிடைத்த முதற்கட்ட வெற்றியாகும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் இத்தருணத்தில், கவர்னர் அவசர அவசரமாக 10 சட்டமுன்வடிவுகளுக்கு எவ்வித ஒப்புதலும் வழங்காமல், கடந்த 13-11-2023 அன்று கோப்புகளைத் திருப்பி அனுப்பியுள்ளார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்திற்குத்தான் முழு அதிகாரமும் முதன்மையும் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-இன்படி, இந்தச் சட்டமுன்வடிவுகளை மீண்டும் பரிசீலித்து, ஆளுநருக்கு திருப்பி அனுப்பி வைக்கும் அதிகாரம் இந்த மாமன்றத்திற்குத் தான் உள்ளது.
அந்த அடிப்படையில் தான், இந்த 10 சட்ட முன் வடிவுகளும் இன்றைக்கு உங்கள் முன் வைக்கப்பட்டு உள்ளது.
ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாட்டு மக்களின் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு, இந்திய நாடு இதுவரை கண்டிராத முன்னோடித் திட்டங்களை நிறைவேற்றி, மக்களின் எண்ணங்களில் இடம் பிடித்துள்ளது திராவிட முன்னேற்றக் கழக அரசு.
இதனை அரசியல் ரீதியாக சகித்து கொள்ள இயலாத சிலர், அரசு நிர்வாகத்தை முடக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலமாக அரசியல் செய்ய விரும்புகிறார்கள்.
கவர்னர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவியாக இருந்தாலும் அது இருக்கும் வரை மக்களாட்சித் தத்துவத்துக்கு அடங்கி இருக்க வேண்டியது தான் மரபு ஆகும். பா.ஜ.க. ஆளாத மாநிலங்களில், கவர்னர்களின் மூலமாக குடைச்சல் கொடுத்து வருகிறார்கள்.
தெரிந்ததை அவர் செய்கிறார். செய்துவிட்டுப் போகட்டும். ஆனால் நாம் எப்போதும் சட்டத்தின் வழி நடப்பவர்கள். எனவே, அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 200-ன்படி அவர் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் திருப்பி அனுப்பி வைத்துள்ள 10 சட்டமுன்வடிவுகளையும் நிறைவேற்றித் தருமாறு நூற்றாண்டு கண்ட இச்சிறப்புமிக்க சட்டமன்றப் பேரவையின் உறுப்பினர்களை தங்கள் வாயிலாகக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
- பொதுமக்கள் தரும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய பணிகள் வேகமாக நடைபெற வேண்டும்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 'கள ஆய்வில் முதலமைச்சர்' என்ற திட்டத்தை கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் நேரில் சென்று அந்தந்த மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள், சட்டம்-ஒழுங்கு தொடர்பான ஆய்வு கூட்டங்களை நடத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களின் ஒருங்கிணைந்த 2 நாள் கள ஆய்வுக்கூட்டம் நேற்று மறைமலைநகரில் நடந்தது.
இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை பற்றி ஆய்வு மேற்கொண்டார். இதில் 3 மாவட்ட கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சட்டம்-ஒழுங்கை பேணி காத்து, குற்றச் சம்பவங்கள் நடைபெறாத வகையில் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
இந்த கூட்டம் முடிந்ததும் மறைமலைநகரில் உள்ள வெல்கம் ஓட்டலில் இரவு தங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் மீண்டும் மறைமலைநகரில் கலெக்டர்கள், அதிகாரிகளுடன் கள ஆய்வு கூட்டம் நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தா.மோ. அன்பரசன், மா.சுப்பிரமணியன், காந்தி ஆகியோரும் பங்கேற்றனர். இவர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர்கள் ராகுல்நாத் (செங்கல்பட்டு), கலைச் செல்வி மோகன் (காஞ்சிபுரம்), பிரபு சங்கர் (திருவள்ளூர்), ரஷ்மி சித்தார்த் ஜகடே (சென்னை), சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை செயலாளர் டாரேஸ் அகமது, வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரிகள், ஆர்.டி.ஓ.க்கள், பி.டி.ஓ.க்கள், நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் என 4 மாவட்டங்களின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வரவேற்று பேசினார். இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்க உரை நிகழ்த்தினார். அதன் பிறகு ஒவ்வொரு மாவட்ட வாரியாக, பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியில் எவ்வளவு செலவழிக்கப்பட்டுள்ளது. என்னென்ன பணிகள் நிலுவையில் உள்ளது. அந்த பணிகள் எப்போது முடிவடையும் என்பதை விரிவாக ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை எடுத்துரைத்தனர்.
முடிவடையாத பணிகள் என்னென்ன காரணத்தால் நிலுவையில் உள்ளது என்ற காரணங்களையும் விளக்கினார்கள். மாதம் ரூ.1000 வழங்கப்படும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் எவ்வளவு பேர் பயன் அடைந்துள்ளனர்? இதில் நிராகரிக்கப்பட்டவர் எவ்வளவு பேர் மேல்முறையீடு செய்திருந்தனர்? அவர்களது மனு மீது கள ஆய்வு நடத்தப்பட்டு மீண்டும் எவ்வளவு பேருக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது ஆகிய விவரங்களையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அதற்கு ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் விளக்கம் அளித்தனர்.
வடகிழக்கு பருவமழை காலம் தொடங்க உள்ள நிலையில் மழை நீர் வடிகால் பணிகள் எவ்வளவு முடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்களையும் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
அரசு அறிவிக்கும் திட்டங்கள், வளர்ச்சி பணிகள் மக்களை சென்றடையும் வகையில் விரைந்து முடிக்க வேண்டும் என்றும் காலதாமதமின்றி பணிகள் முடிக்கப்பட வேண்டும் என்றும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.
பொதுமக்கள் தரும் மனுக்கள் மீதும் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய பணிகள் வேகமாக நடைபெற வேண்டும். அதை ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
- மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- ஊராட்சி மணி அழைப்பு மைய நிகழ்ச்சி விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை:
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக 'ஊராட்சி மணி' அழைப்பு மையம் புதிதாக அமைக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்கும் விதமாக 155340 என்ற மைய அழைப்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாவட்டங்களில் ஊராட்சி மணி அழைப்பு மையத்தின் தொடர்பு அலுவலராக மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஊராட்சி மணி மையத்தின் செயல்பாடுகள் தொடர்பாக அடிப்படை விவரங்களை தெரிவிக்கும் வகையில் கூடுதல் இயக்குனரால் சமீபத்தில் காணொலி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
'ஊராட்சி மணி' அழைப்பு மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி திறந்து வைப்பதாக இருந்தது. ஆனால் இப்போது வேறு தேதிக்கு நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனால் ஊராட்சி மணி அழைப்பு மைய நிகழ்ச்சி விரைவில் தொடங்க ஏற்பாடுகள் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.