search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரகுபதி"

    • ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
    • காலியிடங்களை நிரப்ப ஒப்புதல் தர வேண்டும் என கோரியுள்ளோம்.

    கவர்னர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணியளவில் சந்தித்தார். முதலமைச்சர் ஸ்டாலினை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசலில் வந்து வரவேற்று அழைத்து சென்றார்.

    ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, ராஜகண்ணப்பன் ஆகியோரும் சந்தித்துள்ளனர்.

    பிறகு, ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரை மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த நிலையில் நிறைவு பெற்றது.

    சந்திப்பின்போது, கிடப்பில் உள்ள மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்குமாறு ஆளுநரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதுதொடர்பாக சட்ட அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தார்.

    அதில் அவர் கூறியதாவது:-

    ஆளுநரின் அழைப்பை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 4 அமைச்சர்களுடன் ஆளுநரை சந்தித்தார்.

    10 சட்ட முன்வடிவு இரண்டாவது முறையாகவும் நிறைவேற்றி அனுப்பப்பட்டது. ஆனால், அதை ஆளுநர் குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பினார்.

    முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, விஜயபாஸ்கர் மீதான வழக்குகள் தொடர்பாக கோப்புகளுக்கு அனுமதி கோரியுள்ளோம்.

    அண்ணாவின் பிறந்தநாளன்று கைதிகள் விடுதலை தொடர்பாக 68 கோப்புகளுக்கு மட்டுமே ஆளுநர் அனுமதி அளித்திருந்தார். எஞ்சிய கோப்புகளுக்கு ஆளுநர் அனுமதி தரவில்லை. நிலுவையில் உள்ள 49 கோப்புகளுக்கு அனுமதி வழங்குமாறு ஆளுநரிடம் கோரியுள்ளோம்.

    டிஎன்பிஎஸ்சியில் 4 பேர் தான் உள்ளனர். காலியிடங்களை நிரப்ப ஒப்புதல் தர வேண்டும் என கோரியுள்ளோம்.

    கோரிக்கைகளை மனுக்களாக ஆளுநரிடம் வழங்கியுள்ளோம்.

    20 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு, ஆளுநர் அனுப்பியுள்ளார். உச்ச நீதிமன்ற அறிவுரைபடி மசோதாக்களை ஆளுநர் பரிசீலிக்க வேண்டும். மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டியதில்லை என்பதே எங்களின் கருத்து.

    மசோதாக்களுக்கு நீங்களே அனுமதி தரலாம் என ஆளுநரிடம் தெரிவித்தோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது.
    • பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை.

    புதுக்கோட்டை:

    ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமசோதா நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், திறமை சார்ந்த ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதேநேரம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லும். மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆன்லைன் தடைச்சட்டத்திற்கு அரசாங்கம் சட்டம் ஏற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாக சொல்லி உள்ளது. ஆனால் தமிழ்நாடு கவர்னர் அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.

    நாங்கள் அவரிடம் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை எடுத்துக் கூறியிருந்தோம். இந்நிலையில் இன்று நீதிமன்றம் நாங்கள் கூறியதைப் போல் அரசு சட்டம் ஏற்றுவதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

    இணைய வழி சூதாட்டம் ஒழுங்குமுறை படுத்துதல் தடை செய்தல் என்பதுதான் அந்த சட்டத்திற்கு பெயர். ஒழுங்குமுறைபடுத்துவது என்பது எந்தெந்த விளையாட்டுகளை எப்படி ஒழுங்குமுறைபடுத்த வேண்டும் அதற்கான குழுக்கள் அமைக்க வேண்டும் அந்த குழுக்களுக்கு மனுக்கள் போட்டு பரிசீலினை செய்து ஒழுங்குமுறைப்படுத்தி அந்த இணைய வழி விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம்.

    இரண்டாவது கட்டம் ரம்மி மற்றும் போகர். இந்த 2 விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும். ஏனென்றால் அதில் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்து தற்கொலைக்கு ஆளாகிறார்கள். அதனால் போகர், ரம்மி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக தனி பட்டியலில் அதை தந்துள்ளோம்.

    எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. ரம்மி என்பது திறமைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ரம்மியில் திறமைக்கு வாய்ப்பில்லை. அது ஒரு ப்ரோக்ராம். விளையாட்டை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கலாம் அது திறமை அடிப்படையில் வராது. அதனால் அதனை தடை செய்ய வேண்டும் என்பது எங்களின் கருத்து.

    ஆனால் நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறு அந்த வாதத்தை முன்வைக்கவில்லையோ என்று நாங்கள் நினைக்கிறோமே தவிர தீர்ப்பை பற்றி எதுவும் சொல்ல முடியாது, எங்களது வழக்கறிஞர்கள் வாதத்தை சிறப்பாக முன் வைத்திருந்தாலும் கூட நீதிபதி அந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அவரை திருப்திபடுத்தும் வகையிலும் கருத்துக்களை எடுத்து வைக்கவில்லையோ என்ற எண்ணுவதைப் போல ஒரு தோற்றம்தான் வருகிறது தவிர வேறு எதுவும் கிடையாது. தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கு கிடையாது.

    இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை பரிசீலனை செய்யும். மேல்முறையீடு தேவை என்று சொன்னால் அதன்படி மேல்முறையீடு செய்வோம். சட்டத்துறை அரசு வழக்கறிஞர்களுடைய கருத்துக்களைப் பெற்று அடுத்த நடவடிக்கை தொடரும்.

    முறைப்படுத்துவது சட்டத்திலே உள்ளது கமிட்டி அமைக்கின்றோம் அந்த விளையாட்டுகளை ஒழுங்குமுறை படுத்துகின்றோம். சட்டப்படி ஒழுங்குமுறை படுத்துகின்ற விளையாட்டுகளை முறைப்படுத்தி நடத்தப்படும். ரம்மிக்கும் போகருக்கும் வயது வரம்பு கால வரம்பு எல்லாம் நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி எந்த அளவுக்கு பரிசீலனை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பரிசீலனை செய்து எந்த அடிப்படையில் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்.

    அரசியலில் பா.ஜ.க. கூறும் கருத்துக்களை எல்லாம் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை, இந்த சமய அறநிலையத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயிலுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அதை நிர்வகிக்க அறக்கட்டளை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பையே எடுத்து விடுவோம் என்று சொன்னார்கள் என்றால் எந்த அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

    எங்களை பொறுத்தவரை பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் இந்து சமய அறநிலையத் துறையை அவர்கள் எடுக்கப் போவதுமில்லை. அவர்கள் போற போக்கில் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு உரிமை உண்டு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் கூறலாம். சுதந்திர நாட்டில் கருத்து சொல்ல உரிமை உண்டு.

    அண்ணாமலை தன்னை பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக விமர்சனங்களை அவர் முன் வைக்கின்றார். தன்னை பிரபலப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவிர வேறு ஏதும் இல்லை.

    ஒருத்தர் மீது பழியை சொல்லிவிட்டு போனால் அவர்கள் அதற்கு பதில் கூறுவார்கள் அதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்கும் தன்னுடைய எஜமானர்களை திருப்திபடுத்த முடியும் என்று அண்ணாமலை எண்ணுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
    • ‘ரம்மி’ விளையாட்டை திறன் விளையாட்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி வருமாறு:-

    ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதிட்டுள்ளது. இதற்கு முன்பு இதே சட்டத்தை முந்தைய அ.தி.மு.க. அரசு இயற்றியபோதும் அதுபற்றி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அது ஒரு திருத்தச் சட்டம் என்று கூறி ஐகோர்ட்டு அந்த சட்டத்தை ரத்து செய்தது.

    ஐகோர்ட்டு கூறியுள்ள கருத்துகளையும் சேர்த்து சட்டம் இயற்றுவதில் ஆட்சேபனை இல்லை என்று அந்தத் தீர்ப்பில் ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது. ஆனால் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறி அந்த வழக்கில் மத்திய அரசு அப்போது முறையீடு செய்யவில்லை.

    ஆனால் இப்போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வக்கீல் வாதிட்டு, இதே விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு சில விதிகளைத்தான் கொண்டு வந்துள்ளதே தவிர இதற்கென்று தனி சட்டத்தை மத்திய அரசு இயற்றவில்லை.

    அந்த விதியும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு உரிமையாளர்களை பாதுகாக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது. அதோடு மத்திய அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும் வகையில் அது உள்ளது. அது மக்களுக்கு பாதுகாப்பான விதிகளாக இல்லை. சூதாட்டம் ஒரு கொடிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    இதனால் 40-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்த பின்னரும் அதை கருத்தில் கொள்ளாமல் ஆன்லைன் விளையாட்டு மூலம் வருவாய் ஏற்படும் வகையில் விதிகளை திருத்திவிட்டு, சட்டம் கொண்டு வந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. இதில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது. நோயை தடுக்காமல் அதை பரப்புகின்றனர்.

    அரசியல் அமைப்பு சாசனத்தில் பொதுப்பட்டியல், மத்திய அரசு பட்டியல் மற்றும் மாநில அரசுப் பட்டியல் இடம்பெற்றுள்ளன. மாநில அரசுப் பட்டியலில் சூதாட்ட விளையாட்டு இடம் பெற்றுள்ளதால்தான் மாநில அரசு தனது உரிமையுடன் அதில் சட்டம் இயற்றியுள்ளது.

    'ரம்மி' விளையாட்டை திறன் விளையாட்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் அது மக்கள் நேரடியாக உட்கார்ந்து ஆடும் ரம்மி விளையாட்டு ஆகும். தமிழக அரசு இயற்றிய சட்டம், ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றியது.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 2 பேர் ரம்மி விளையாடினால், 3-வதாக 'புரோகிராமர்' என்ற மற்றொருவர் புகுந்து அந்த விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிட முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் என்னதான் திறமையுடன் விளையாடினாலும், இறுதியில் புரோகிராமர் புகுத்தி வைத்துள்ள முடிவுதான் ஜெயிக்கும்.

    இதனால்தான் பலரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று பணத்தை இழக்கின்றனர். எனவே 2 வகை ரம்மி விளையாட்டிலும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதை உணர்ந்து மத்திய அரசு உரிய திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.

    ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு போடுகிறது. ஆனால் அப்படிப்பட்ட விளையாட்டே வேண்டாம், பாவப்பட்ட பணம் தேவையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. தெலுங்கானா உள்பட 2 மாநிலங்களில் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறுகிறார். ஆனால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் வாதிடுகிறார். மத்திய அரசு என்பது மாறுபட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவமாக உள்ளது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு சார்பில் தமிழக கவர்னருக்கு எழுதிய பதில் கடிதம் அப்படியே இருக்கிறது. அவரிடம் இருந்து பதில் இன்னும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்.
    • 2024 மக்களவை தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை அ.தி.மு.க. தொடங்கி விட்டது.

    தூத்துக்குடி:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் சென்னை செல்வதற்காக தூத்துக்குடி வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டி.ஐ.ஜி. விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டுள்ளது வேதனையும், வருத்தமும் அளிக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் இருந்த போது காவலர்களின் மன அழுத்தத்தை போக்கும் வகையில் காவலர் நலவாழ்வு திட்டம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மன அழுத்தம் உள்ள காவலர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனால் அவர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டனர். ஆனால் அந்த காவலர் நலவாழ்வு திட்டத்தை தற்போதைய தி.மு.க. அரசு நிறுத்தி விட்டதாக தெரிகிறது.

    அந்த திட்டம் இருந்திருந்தால் தற்போதைய டி.ஐ.ஜி. தற்கொலை ஏற்பட்டிருக்காது. டி.ஐ.ஜி. தற்கொலை பற்றி அரசு முழுமையான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை தேவை. காவலர் குடும்பத்திலும் மன அழுத்தம் இல்லை. அவருக்கும் மன அழுத்தம் இல்லை என தெரிகிறது. எனவே அவரது இறப்பு தற்கொலையா என விசாரிக்க வேண்டும்.

    தற்போதைய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஊழல் பற்றி பேச தகுதி இல்லை. அவர் மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. ஊழல் வழக்கு உள்ள அவர் ஊழல் தடுப்பு பிரிவை கண்காணித்து வருகிறார். இது எப்படி சரியாக இருக்கும்.

    தி.மு.க.வின் தற்போதைய அமைச்சர்கள் 15-க்கும் மேற்பட்டவர்கள் மீது முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்குகளில் தற்போதைய தி.மு.க. வக்கீல்கள் சரியான வாதங்களை எடுத்து வைக்காததால் அவர்கள் விடுதலையாகி வருகிறார்கள்.

    தி.மு.க. அமைச்சர்கள் பாதி பேர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு பயந்து போய் உள்ளனர். பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை, உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது.
    • அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையில் சிறைத் துறையின் மானிய கோரிக்கையின்போது சட்டம் நீதிமன்றங்கள் மற்றும் சிறை துறைகள் துறை அமைச்சர் ரகுபதி புதிய அறிவிப்பு வெளியிட்டார்.

    அதன்படி கைதிகளின் நலனுக்காக நிபுணர் குழு அறிக்கையின் அடிப்படையில் கைதிகளின் உணவு முறை மற்றும் உணவின் அளவை ஆண்டுக்கு ரூ.26 கோடி செலவில் மாற்றி அமைக்கப்படும் என அறிவித்தார்.

    இந்த அறிவிப்பை தொடர்ந்தும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டும் சென்னை புழல் சிறையில் கைதிகளுக்கு புதிய உணவு முறை மற்றும் உணவின் அளவை மாற்றி அமைக்கும் திட்ட தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

    விழாவில் அமைச்சர் ரகுபதி கலந்துகொண்டு கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை இயக்குனர் அமரேஷ் பூஜாரி, டி.ஐ.ஜி.க்கள் கனகராஜ், முருகேசன், சூப்பிரண்டுகள் கிருஷ்ணராஜ், நிகிலா நாகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×