search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Online Game Ban Bill"

    • எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது.
    • பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை.

    புதுக்கோட்டை:

    ஆன்லைனில் விளையாடப்படும் ரம்மி, போக்கர் விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு சட்டமசோதா நிறைவேற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன.

    இந்த வழக்கில் தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர். அதில் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை ஏற்க முடியாது. ஆனால், திறமை சார்ந்த ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு என்று கூறி தடை விதித்து தமிழக அரசு இயற்றிய சட்டப்பிரிவுகள் ரத்து செய்யப்படுகின்றன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    அதேநேரம், அதிர்ஷ்டத்துக்கான ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்து தமிழக அரசு பிறப்பித்த சட்டம் செல்லும். மேலும் ஆன்லைன் ரம்மி, போக்கர் ஆகியவற்றை விளையாடுவதற்கான வயது, நேரம் ஆகியவற்றை முறைப்படுத்தும் வகையில் அரசு புதிதாக விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆன்லைன் தடைச்சட்டத்திற்கு அரசாங்கம் சட்டம் ஏற்றுவதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதை நீதிமன்றம் தெளிவாக சொல்லி உள்ளது. ஆனால் தமிழ்நாடு கவர்னர் அரசாங்கத்திற்கு உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.

    நாங்கள் அவரிடம் எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை எடுத்துக் கூறியிருந்தோம். இந்நிலையில் இன்று நீதிமன்றம் நாங்கள் கூறியதைப் போல் அரசு சட்டம் ஏற்றுவதற்கு உரிமை உள்ளது என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

    இணைய வழி சூதாட்டம் ஒழுங்குமுறை படுத்துதல் தடை செய்தல் என்பதுதான் அந்த சட்டத்திற்கு பெயர். ஒழுங்குமுறைபடுத்துவது என்பது எந்தெந்த விளையாட்டுகளை எப்படி ஒழுங்குமுறைபடுத்த வேண்டும் அதற்கான குழுக்கள் அமைக்க வேண்டும் அந்த குழுக்களுக்கு மனுக்கள் போட்டு பரிசீலினை செய்து ஒழுங்குமுறைப்படுத்தி அந்த இணைய வழி விளையாட்டுகளை விளையாட அனுமதிக்க வேண்டும் என்பது முதலாவது கட்டம்.

    இரண்டாவது கட்டம் ரம்மி மற்றும் போகர். இந்த 2 விளையாட்டுகளையும் தடை செய்ய வேண்டும். ஏனென்றால் அதில் பெரும்பாலான மக்கள் பணத்தை இழந்து தற்கொலைக்கு ஆளாகிறார்கள். அதனால் போகர், ரம்மி இரண்டையும் தடை செய்ய வேண்டும் என்பதற்காக தனி பட்டியலில் அதை தந்துள்ளோம்.

    எங்களைப் பொறுத்தவரை ரம்மிக்கும் ஆன்லைன் ரம்மிக்கும் அடிப்படை வேறுபாடு உள்ளது. ரம்மி என்பது திறமைக்கு வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் ரம்மியில் திறமைக்கு வாய்ப்பில்லை. அது ஒரு ப்ரோக்ராம். விளையாட்டை எப்படி வேண்டுமென்றாலும் மாற்றி அமைக்கலாம் அது திறமை அடிப்படையில் வராது. அதனால் அதனை தடை செய்ய வேண்டும் என்பது எங்களின் கருத்து.

    ஆனால் நாங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஏற்றவாறு அந்த வாதத்தை முன்வைக்கவில்லையோ என்று நாங்கள் நினைக்கிறோமே தவிர தீர்ப்பை பற்றி எதுவும் சொல்ல முடியாது, எங்களது வழக்கறிஞர்கள் வாதத்தை சிறப்பாக முன் வைத்திருந்தாலும் கூட நீதிபதி அந்தக்கருத்தை ஏற்றுக்கொள்ளும் வகையிலும் அவரை திருப்திபடுத்தும் வகையிலும் கருத்துக்களை எடுத்து வைக்கவில்லையோ என்ற எண்ணுவதைப் போல ஒரு தோற்றம்தான் வருகிறது தவிர வேறு எதுவும் கிடையாது. தீர்ப்புகளைப் பற்றி விமர்சிக்கும் உரிமை எனக்கு கிடையாது.

    இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வது குறித்து சட்டத்துறை பரிசீலனை செய்யும். மேல்முறையீடு தேவை என்று சொன்னால் அதன்படி மேல்முறையீடு செய்வோம். சட்டத்துறை அரசு வழக்கறிஞர்களுடைய கருத்துக்களைப் பெற்று அடுத்த நடவடிக்கை தொடரும்.

    முறைப்படுத்துவது சட்டத்திலே உள்ளது கமிட்டி அமைக்கின்றோம் அந்த விளையாட்டுகளை ஒழுங்குமுறை படுத்துகின்றோம். சட்டப்படி ஒழுங்குமுறை படுத்துகின்ற விளையாட்டுகளை முறைப்படுத்தி நடத்தப்படும். ரம்மிக்கும் போகருக்கும் வயது வரம்பு கால வரம்பு எல்லாம் நிர்ணயிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது. அதன்படி எந்த அளவுக்கு பரிசீலனை செய்ய முடியுமோ அந்த அளவுக்கு பரிசீலனை செய்து எந்த அடிப்படையில் அவற்றையெல்லாம் நிறைவேற்ற முடியுமோ அதனை நாங்கள் செய்வோம்.

    அரசியலில் பா.ஜ.க. கூறும் கருத்துக்களை எல்லாம் தமிழ்நாடு மக்கள் ஏற்றுக்கொள்ள போவதில்லை, இந்த சமய அறநிலையத்துறை என்பது தமிழ்நாட்டில் உள்ள இந்து கோயிலுடைய சொத்துக்களை பாதுகாப்பதற்கும் அதை நிர்வகிக்க அறக்கட்டளை நியமிப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு. இந்த அமைப்பையே எடுத்து விடுவோம் என்று சொன்னார்கள் என்றால் எந்த அடிப்படையில் அவர்கள் கூறுகிறார்கள் என்று தெரியவில்லை.

    எங்களை பொறுத்தவரை பா.ஜ.க. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவதில்லை. அதனால் இந்து சமய அறநிலையத் துறையை அவர்கள் எடுக்கப் போவதுமில்லை. அவர்கள் போற போக்கில் எதை வேண்டுமானாலும் பேசுவதற்கு பா.ஜ.க.விற்கு உரிமை உண்டு. தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போவது இல்லை என்பதால் என்ன வேண்டுமானாலும் அவர்கள் கூறலாம். சுதந்திர நாட்டில் கருத்து சொல்ல உரிமை உண்டு.

    அண்ணாமலை தன்னை பற்றி பிறர் பேச வேண்டும் என்பதற்காக விமர்சனங்களை அவர் முன் வைக்கின்றார். தன்னை பிரபலப்படுத்தி கொள்ள வேண்டும் என்பதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை தவிர வேறு ஏதும் இல்லை.

    ஒருத்தர் மீது பழியை சொல்லிவிட்டு போனால் அவர்கள் அதற்கு பதில் கூறுவார்கள் அதன் மூலம் தனக்கு விளம்பரம் கிடைக்கும் தன்னுடைய எஜமானர்களை திருப்திபடுத்த முடியும் என்று அண்ணாமலை எண்ணுகிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது.
    • ‘ரம்மி’ விளையாட்டை திறன் விளையாட்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது.

    சென்னை:

    சென்னை தலைமைச்செயலகத்தில் பத்திரிகையாளர்களுக்கு அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி வருமாறு:-

    ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான வழக்கு தற்போது சென்னை ஐகோர்ட்டில் விசாரிக்கப்படுகிறது. இந்த வழக்கு விசாரணையின்போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வாதிட்டுள்ளது. இதற்கு முன்பு இதே சட்டத்தை முந்தைய அ.தி.மு.க. அரசு இயற்றியபோதும் அதுபற்றி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அது ஒரு திருத்தச் சட்டம் என்று கூறி ஐகோர்ட்டு அந்த சட்டத்தை ரத்து செய்தது.

    ஐகோர்ட்டு கூறியுள்ள கருத்துகளையும் சேர்த்து சட்டம் இயற்றுவதில் ஆட்சேபனை இல்லை என்று அந்தத் தீர்ப்பில் ஐகோர்ட்டு தெரிவித்து இருந்தது. ஆனால் சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று கூறி அந்த வழக்கில் மத்திய அரசு அப்போது முறையீடு செய்யவில்லை.

    ஆனால் இப்போது, தமிழக அரசுக்கு இந்த சட்டத்தை இயற்ற அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு வக்கீல் வாதிட்டு, இதே விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் இயற்றி இருப்பதாகவும் கூறியுள்ளார். ஆனால் தகவல் தொடர்பு தொழில்நுட்ப சட்டத்தில் மத்திய அரசு சில விதிகளைத்தான் கொண்டு வந்துள்ளதே தவிர இதற்கென்று தனி சட்டத்தை மத்திய அரசு இயற்றவில்லை.

    அந்த விதியும், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு உரிமையாளர்களை பாதுகாக்கும் விதமாகத்தான் அமைந்துள்ளது. அதோடு மத்திய அரசுக்கு வருவாயை ஏற்படுத்தும் வகையில் அது உள்ளது. அது மக்களுக்கு பாதுகாப்பான விதிகளாக இல்லை. சூதாட்டம் ஒரு கொடிய நோய் என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.

    இதனால் 40-க்கும் மேற்பட்ட தற்கொலைகள் நடந்த பின்னரும் அதை கருத்தில் கொள்ளாமல் ஆன்லைன் விளையாட்டு மூலம் வருவாய் ஏற்படும் வகையில் விதிகளை திருத்திவிட்டு, சட்டம் கொண்டு வந்துவிட்டதாக மத்திய அரசு கூறுகிறது. இதில் மத்திய அரசு சட்டம் கொண்டு வரவில்லை. இது கண்டிக்கத்தக்கது. நோயை தடுக்காமல் அதை பரப்புகின்றனர்.

    அரசியல் அமைப்பு சாசனத்தில் பொதுப்பட்டியல், மத்திய அரசு பட்டியல் மற்றும் மாநில அரசுப் பட்டியல் இடம்பெற்றுள்ளன. மாநில அரசுப் பட்டியலில் சூதாட்ட விளையாட்டு இடம் பெற்றுள்ளதால்தான் மாநில அரசு தனது உரிமையுடன் அதில் சட்டம் இயற்றியுள்ளது.

    'ரம்மி' விளையாட்டை திறன் விளையாட்டு என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியுள்ளது. ஆனால் அது மக்கள் நேரடியாக உட்கார்ந்து ஆடும் ரம்மி விளையாட்டு ஆகும். தமிழக அரசு இயற்றிய சட்டம், ஆன்லைன் ரம்மி விளையாட்டு பற்றியது.

    ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 2 பேர் ரம்மி விளையாடினால், 3-வதாக 'புரோகிராமர்' என்ற மற்றொருவர் புகுந்து அந்த விளையாட்டை எப்படி வேண்டுமானாலும் மாற்றிவிட முடியும். ஆன்லைன் ரம்மி விளையாட்டில் என்னதான் திறமையுடன் விளையாடினாலும், இறுதியில் புரோகிராமர் புகுத்தி வைத்துள்ள முடிவுதான் ஜெயிக்கும்.

    இதனால்தான் பலரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோற்று பணத்தை இழக்கின்றனர். எனவே 2 வகை ரம்மி விளையாட்டிலும் உள்ள வித்தியாசத்தை புரிந்துகொள்ள வேண்டும். இதை உணர்ந்து மத்திய அரசு உரிய திருத்தங்களை கொண்டுவர வேண்டும்.

    ஆன்லைன் விளையாட்டுக்கு 28 சதவீதம் ஜி.எஸ்.டி.யை மத்திய அரசு போடுகிறது. ஆனால் அப்படிப்பட்ட விளையாட்டே வேண்டாம், பாவப்பட்ட பணம் தேவையில்லை என்பதுதான் எங்கள் கருத்து. தெலுங்கானா உள்பட 2 மாநிலங்களில் ஏற்கனவே ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களிலும் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்று நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி கூறுகிறார். ஆனால் மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று கோர்ட்டில் மத்திய அரசு வக்கீல் வாதிடுகிறார். மத்திய அரசு என்பது மாறுபட்ட கருத்துகளின் ஒட்டுமொத்த வடிவமாக உள்ளது.

    அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சிலருக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு சார்பில் தமிழக கவர்னருக்கு எழுதிய பதில் கடிதம் அப்படியே இருக்கிறது. அவரிடம் இருந்து பதில் இன்னும் வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ள போலீசார் சூதாட்ட செயலிகளை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.
    • சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் விரிவான ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ஈடுபட்டு பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே சென்றன.

    இளைஞர்கள், இளம்பெண்கள், குடும்ப தலைவிகள், மாணவ-மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்து மனஉளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இப்படி ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி 40-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    இதையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதாவை சட்டசபையில் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்தது.

    ஆனால் அதற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் திருப்பி அனுப்பினார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக கவர்னர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் தமிழக சட்டசபையில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மீண்டும் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா மீண்டும் கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்த முறை கவர்னர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். இதை தொடர்ந்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

    இந்த சட்டம் குறித்த விரிவான தகவல்கள் அரசிதழிலும் வெளியிடப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் போலீஸ் கமிஷனர்கள், ஐ.ஜி.க்கள், போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்டோர் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கு ஆரம்ப கட்ட பணிகளை தொடங்கி உள்ளனர்.

    முதல் கட்டமாக தடை செய்யப்பட்ட பட்டியலில் உள்ள ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் தொடர்பாக ஆய்வு நடத்தி உள்ள போலீசார் சூதாட்ட செயலிகளை கணக்கெடுக்கும் பணிகளை தொடங்கி உள்ளனர்.

    சென்னையில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பான விரிவான ஆலோசனை கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்துள்ளனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட இணையதள நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    இதன் மூலம் அடுத்த கட்டமாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள், அதனை விளம்பரப்படுத்துபவர்கள் உள்ளிட்டோரின் மீது உரிய சட்ட நடவடிக்கை பாய உள்ளது. ஆன்லைன் விளையாட்டு தடை சட்டத்தின் படி இனி ஆன்லைன் ரம்மி விளையாட்டை யாராவது விளையாடினால் அது சட்ட விரோதமாக கருதப்படும். இதனால் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடும் நபர் குற்றவாளியாக கருதப்படுவார். அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    தடை செய்யப்பட்டு உள்ள ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக தனிப்பட்ட நபர்களோ அல்லது நிறுவனங்களோ விளம்பரம் செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதுபோன்ற விளம்பரங்களை செய்பவர்களும் குற்றவாளிகளின் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அதே நேரத்தில் 2 தண்டனையையும் சேர்த்து வழங்குவதற்கும் சட்டத்தில் இடம் உள்ளது.

    ஆன்லைன் விளையாட்டுகளை உருவாக்கி அதனை இணையதளங்களில் வெளியிடுவோருக்கு கடுமையான தண்டனை கிடைக்கும். ஆன்லைன் தடை சட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். இந்த 2 தண்டனையையும் சேர்த்து வழங்கவும் சட்டத்தில் இடம் உள்ளது. விளம்பரம் செய்யும் நபர்கள் ஒருமுறை பிடிபட்டு மீண்டும் சிக்கினால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

    ஆன்லைன் தடை சட்டத்தின்படி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளனர். அவர்களே கைது நடவடிக்கைகளையும் மேற்கொள்வார்கள்.

    இந்த சைபர்கிரைம் போலீஸ் பிரிவு அனைத்து மாநகரங்கள், மாவட்டங்களிலும் தனிப்பிரிவாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வந்துள்ளதை அடுத்து இனி அது தொடர்பான தற்கொலை சம்பவங்கள் குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    பொதுமக்களும் தங்களது சேமிப்பு பணத்தை தேவையில்லாமல் ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக இழந்து தவிப்பதும் தவிர்க்கப்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கி உள்ளது.
    • தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியலை காவல்துறை தயார் செய்து வருகிறது.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது.

    இதையடுத்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து ஆன்லைன் ரம்மி தடை அமலுக்கு வந்தது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடைச்சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டதை அடுத்து, சட்டத்தை அமல்படுத்துவதற்கான பணிகளை காவல்துறை தொடங்கி உள்ளது.

    தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் கேம் பட்டியலை காவல்துறை தயார் செய்து வருகிறது. ஆன்லைன் சூதாட்டம் விளையாடுபவர்களை கண்டறிய காவல்துறை திட்டம் வகுக்கிறது.

    முதற்கட்டமாக சென்னை சைபர் க்ரைம் காவல்துறை ஆன்லைன் சூதாட்ட செயலி மற்றும் இணையதளங்களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியது.

    ஆன்லைன் கேம் பட்டியல்களை தயாரித்து சம்பந்தப்பட்ட, செயலி மற்றும் இணையதள நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது.
    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சென்னை:

    ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களால் தமிழ்நாட்டில் பலர் பணத்தை பறிகொடுத்த நிலையில் தற்கொலைக்கு தள்ளப்படும் நிலை அதிகரித்து வந்தது.

    இதனால் இந்த சூதாட்டத்துக்கு தடை விதிக்க தமிழக அரசு சார்பில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந்தேதி முதன் முறையாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் போது அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

    இதைத் தொடர்ந்து 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதிக்க கூடிய சட்ட மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.

    இதை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

    2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு உரிய முறைப்படுத்தும் விதிகள் இல்லாமல் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டு மொத்தமாக தடை விதிக்க மறுத்து சட்டத்தை ரத்து செய்து விட்டது.

    இதன் பிறகு தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை முழுமையாக கொண்டு வரும் வகையில் 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 6-ந்தேதி ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழுவை அமைத்தார்.

    இந்த குழு 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ந்தேதி தனது அறிக்கையை அரசிடம் தாக்கல் செய்தது. இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு செப்டம்பர் 26-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

    இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு அக்டோபர் 1-ந்தேதி கவர்னர் ஆர்.என்.ரவி இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார்.

    அதன்பிறகு இதை நிரந்தர சட்டமாக்க 2022-ம் ஆண்டு அக்டோபர் 19-ந்தேதி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டு, கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

    ஆனால் கவர்னர் இந்த மசோதாவுக்கு உடனே ஒப்புதல் வழங்காமல் முதலில் சில விளக்கங்கள் கேட்டார். அந்த விளக்கங்களுக்கு உரிய பதிலை தமிழக அரசு தெரிவித்த பிறகும் மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் அதை திருப்பி அனுப்பி வைத்தார்.

    இதனால் கடந்த மாதம் 9-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் சட்டசபையில் நிறைவேற்றி கவர்னரின் ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டு மார்ச் 23-ந்தேதி சட்டசபையிலும் மீண்டும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

    மறுநாளே (மார்ச் 24) இந்த மசோதாவை கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் இவ்வளவு நாள் இழுபறிக்கு பிறகு நேற்று கவர்னர் ஆர்.என்.ரவி இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா அரசிதழில் இன்று வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த சட்டம் நடைமுறைக்கு வந்ததை தொடர்ந்து இதை மீறி யாரேனும் ரம்மி, போக்கர் விளையாடினால் அவர்களுக்கு தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்பு உள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.
    • அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

    ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்த தகவல் ஆளுநர் அலுவலகத்தில் இருந்து சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு அனுப்பப்பட்டது.

    இந்நிலையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அந்த சட்டம் இன்று அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

    இச்சட்டத்தால் விதிக்கப்படும் தண்டனைகள் விவரம் வருமாறு:-

    ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள், பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுபவருக்கு 3 மாதங்கள் சிறை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது அபராதத்துடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும். இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அபராதம் அல்லது 2-ம் சேர்த்து விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளிப்போருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்படும்.

    இந்த விளையாட்டுகள் தொடர்பாக விளம்பரம் செய்து தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் தவறு செய்தால், ஒரு ஆண்டுக்கு மேல் 3 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும். ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் அல்லது பணம் அல்லது வேறு வெகுமதிகளை வெல்லக்கூடிய வாய்ப்புள்ள அனைத்து ஆன்லைன் விளையாட்டுகளை அளித்தவர் ஒரு முறை தண்டிக்கப்பட்டு மீண்டும் தவறிழைத்தால், அந்த தண்டனை 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையாகவும், அபராதம் ரூ.20 லட்சமாகவும் நீட்டிக்கப்படும்.

    • ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு சற்றுமுன் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.
    • தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் விளையாடினால் அல்லது சூதாட்டம் நடத்தினால் 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை.

    சென்னை:

    தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார். சில விளக்கங்களையும் கேட்டிருந்தார். இதையடுத்து ஆளுநர் கேட்ட விளக்கங்களுடன் மசோதா மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    2-வது முறையாக அனுப்பப்பட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது. இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு சற்றுமுன் ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

    தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபடும் நபர்களுக்கு  5 ஆயிரம் ரூபாய் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டுமே  தண்டனையாக விதிக்க தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் இன்று அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×