search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    10 மசோதாக்களில் கையெழுத்திடுவது குறித்து சட்ட நிபுணர்களிடம் கவர்னர் கருத்து கேட்பு
    X

    10 மசோதாக்களில் கையெழுத்திடுவது குறித்து சட்ட நிபுணர்களிடம் கவர்னர் கருத்து கேட்பு

    • சனிக்கிழமை டெல்லி சென்றிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று உலக மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி சென்றுவிட்டார்.
    • சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி 10 மசோதாக்களிலும் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிலுவையில் வைத்திருந்ததால் தமிழக அரசு அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தது.

    இந்த நிலையில் அந்த 10 மசோதாக்களையும் காரணம் இன்றி அவர் தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி இருந்தார்.

    இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 18-ந்தேதி சட்டமன்ற கூட்டத்தை கூட்டி அந்த 10 மசோதாவையும் எவ்வித திருத்தமும் செய்யாமல் அப்படியே நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

    இந்த 10 சட்ட மசோதாக்கள் மீது கவர்னர் இன்னும் முடிவெடுக்காத நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி ஆஜராகி கவர்னர் தரப்பில் வழங்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்தார்.

    இதன் மீது நடைபெற்ற விவாதத்தில் தலைமை நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். அதற்கு தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல்கள் அபிஷேக் மனு சிங்வி மற்றும் பி.வில்சன் ஆகியோர் ஆஜராகி கவர்னர் அரசியல் சட்டத்தை மீறி வருவதாக குற்றம் சாட்டினர்.

    தமிழக அரசின் மசோதாக்களுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதால் அரசின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    அப்போது மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கட்ரமணி மாநில பல்கலைக் கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை பறிக்கும் வகையில் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதால் இதில் ஆழ்ந்து பரிசீலித்து முடிவெடுக்க கவர்னருக்கு அவகாசம் தேவை என வாதிட்டார்.

    இதை பதிவு செய்து கொண்ட சுப்ரீம் கோர்ட் கவர்னர் முடிவு எடுக்க அவகாசம் அளிக்கும் வகையில் வழக்கு விசாரணையை டிசம்பர் 1-ந் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.

    இந்த நிலையில் சனிக்கிழமை டெல்லி சென்றிருந்த கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று சென்னை திரும்பிய நிலையில் இன்று உலக மீனவர் தின நிகழ்ச்சியில் பங்கேற்க தூத்துக்குடி சென்றுவிட்டார். இன்று மாலையில்தான் சென்னை திரும்புகிறார்.

    தமிழக சட்டசபையில் 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ள 10 மசோதாக்களில் கவர்னர் கையெழுத்து போடுவாரா? இல்லையா? என்பது பற்றி கவர்னர் மாளிகையில் இருந்து அறிவிப்பு ஏதும் வெளியிடப்படாமல் உள்ளது.

    இதுகுறித்து விசாரித்ததில் 10 சட்டமசோதாக்களிலும் கவர்னர் ஒப்புதல் வழங்கலாமா? வேண்டாமா? என்பது பற்றி சட்ட நிபுணர்களின் கருத்தை கவர்னர் கேட்டு உள்ளதாகவும் அதன் அடிப்படையில்தான் அவர் செயல்படுவார் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஒவ்வொரு மாநிலத்திலும் இது தொடர்பான மசோதாக்களுக்கு கவர்னர்கள் என்னென்ன நிலைப்பாட்டை எடுத்துள்ளனர் என்ற விவரங்கள் திரட்டப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் இது தொடர்பாக என்ன நிலைப்பாட்டை மேற்கொள்ளலாம் என்றும் கவர்னர் சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளதால் 2 நாளில் இது தொடர்பான முடிவு என்ன என்பது தெரிந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் வில்சன் எம்.பி. கருத்து தெரிவிக்கையில், சுப்ரீம் கோர்ட்டு எழுப்பிய பல்வேறு கேள்விகளின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவி இந்த 10 மசோதாக்களிலும் கையெழுத்திட்டுதான் ஆக வேண்டும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.

    Next Story
    ×