search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Governor RN Ravi"

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.
    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை.

    ஜெயங்கொண்டம்:

    சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அங்கிருந்து கார் மூலம் ஸ்ரீரங்கம் புறப்பட்டு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர், தூய்மை பணியிலும் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து அவர் கார் மூலம் மயிலாடுதுறை புறப்பட்டு சென்றார்.

    ஜெயங்கொண்டம் வழியாக மயிலாடுதுறை மாவட்டம் சென்ற தமிழக கவர்னர் ஆர்.என்.ரவிக்கு, அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கருப்பு கொடி காட்டுவதற்கு விடுதலை சிறுத்தைகள் திட்டமிட்டிருந்தனர்.

    இதற்காக அவர்கள் ஜெயங்கொண்டம் குறுக்குரோடு சந்திப்பில் திரண்டனர். விடுதலை சிறுத்தை கட்சியினர் மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் கருப்பு கொடி காட்ட திரண்டிருப்பது, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து அங்கு வந்த போலீசார் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனை தொடர்ந்து போலீசார், அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது.
    • தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார்.

    திருச்சி:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் இணை ஆணையர் மாரியப்பன், சுந்தர் பட்டர் தலைமையில் பூரண கும்ப மரியாதை அளித்தனர்.

    அதனைத் தொடர்ந்து கவர்னர் ரெங்கநாதர் சந்நிதி, தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார்.

    அதன் பின்னர் தாயார் சன்னதி அருகே உள்ள ஸ்ரீமேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன் நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார்.


    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும்.

    அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளது. காலணியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோவில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமல்ல பக்தர்களுக்கும் பெரும்பங்கு உண்டு.

    தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோவில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதை தொடர்ந்து கவர்னர் ஆர்,என்.ரவி கார் மூலமாக மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.

    • கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.
    • பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கும்.

    சென்னை:

    நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையானது கோலாகலமாக கொண்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், முக்கிய பிரபலங்களும் தங்களது வாழ்த்து செய்தியை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

    பொங்கல், மகரசங்கராந்தி, உத்தராயன், பௌஷ்பர்வ, லோரி ஆகிய விசேஷமான தினங்களில் உலகெங்கிலும் உள்ள நமது சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாடு முழுவதும் ஒற்றுமையாக கொண்டாடப்படும் இந்த அறுவடை திருவிழா, நமது வளமான ஆன்மிக மற்றும் பெருமைக்குரிய பாரம்பரியத்தின் வாழும் சாட்சியாகும். மேலும், கலாசார ஒருமைப்பாடு மற்றும் பாரதத்தை ஒரே தேசமாக இவை வரையறுக்கின்றன.

    இந்த பண்டிகைகள் நமக்கு வளத்தையும் நல்ல ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்து அமைதி, நல்லிணக்கம் மற்றும் உலகளாவிய சகோதரத்துவத்தை வளர்க்கட்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • சுவாமி விவேகானந்தர் உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார்.
    • காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள்.

    சென்னை :

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    "இந்திய தேசியவாதத்தின் உச்சபட்ச அடையாளமாகவும், இளைஞர்களுக்கு தேசத்தை கட்டியெழுப்புவதற்கான மிகப்பெரிய உத்வேகமாகவும் விளங்கும் சுவாமி விவேகானந்தர், உலக நன்மைக்காக பாரதத்தை அதன் இலக்கை நோக்கி தொடர்ந்து வழிநடத்துவார்.

    அவருடனான தொடர்பை எந்தளவுக்கு அதிகமாக கொள்கிறீர்களோ அந்தளவுக்கு, சுயத்துக்கும் சமூகத்துக்கும் செய்ய வேண்டிய பணிகள் மூலம் தேசத்துக்கான கடமைகளை ஆற்றுவதில் நீங்கள் அதிக உற்சாகம் பெறுவீர்கள்.

    காலனித்துவ மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்குள் உண்மையான பெருமிதத்தையும் தேசிய விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பாரதத் தாயின் மகனுக்கு எனது பணிவான மரியாதைகள்" என கூறியுள்ளார்.

    • தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர்.
    • பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் கவர்னர் வரும் பாதைகளில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பூட்டர் பவுண்டேசன் என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கப்பட்டது.

    இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில் துணை வேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதில் தொடர்புடைய பல்கலைக்கழக பதிவாளர் தங்கவேல் மற்றும் 2 பேராசிரியர்கள் தலைமறைவாக உள்ளனர். போலீசார் தொடர்ந்து அவர்களை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு இன்று கவர்னர் ஆர்.என்.ரவி வந்தார். அங்கு நடைபெற்ற அலுவலர் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொள்கிறார். தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் கலந்துரையாடுகிறார்.

    இதற்காக இன்று சென்னையில் இருந்து தனி விமானத்தில் சேலம் வந்தார். பின்னர் சேலத்தில் இருந்து காரில் கோவை செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி அங்கிருந்து விமானத்தில் சென்னை செல்கிறார்.

    இதற்கிடையே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் உள்ள துணைவேந்தரை கவர்னர் சந்திக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி ஆசிரியர்கள் சங்கம், பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கம், தி.மு.க. மாணவர் அணி, திராவிட மாணவர் கழகம் உள்பட 14 மாணவர் சங்கங்கள் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டுவோம் என்று அறிவித்திருந்தனர்.

    அதன்படி தி.மு.க. உள்பட 14 மாணவர் அமைப்பினர் பெரியார் பல்கலைக்கழகம் எதிரே கருப்பு கொடியுடன் திரண்டனர். பின்னர் அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர்.

    இதற்கிடையே கவர்னர் வரவுள்ள நிலையில் பெரியார் பல்கலைக்கழகத்தில் போலீசார் இன்று காலை 10 மணி முதல் மீண்டும் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். துணை வேந்தர் அலுவலகம், பதிவாளர் அலுவலகம், பூட்டர் பவுண்டேசன், அறிவியல் துறை உள்ளிட்ட 6 இடங்களில் சூரமங்கலம் துணை கமிஷனர் நிலவழகன் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் தனித்தனியாக பிரிந்து இந்த சோதனை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே தமிழக அரசின் நிதித்துறை கூடுதல் செயலாளர் அருண்சுந்தர் தயாள் பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து வருகிறார். அவர் கணக்கு வழக்குகளை சரிபார்த்து வருகிறார். கவர்னர் பல்கலைக்கழகத்திற்கு வரும் நேரத்தில் போலீசார் ஒருபுறம் சோதனை நடத்தி வருவதும், நிதித்துறை கூடுதல் செயலாளர் ஆய்வு செய்து வருவதாலும் பல்கலைக் கழக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கவர்னர் வருகையையொட்டி பல்கலைக் கழக வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • துணை வேந்தர் ஜெகநாதனை ஆளுநர் சந்திப்பதற்கு திமுக மாணவரணியினர் கடும் கண்டனம்
    • திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.

    பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக இருக்கும் ஜெகநாதன், போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களிடம் புரிந்துணர்வு மேற்கொண்டதாகப் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

    இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கருப்பூர் காவல்துறையினரால் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி கைது செய்யப்பட்டார். சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, கூட்டுச்சதி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதை தொடர்ந்து, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது ஜெகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். ஜெகநாதனுக்கு உடந்தையாக இருந்ததாக துணைவேந்தரின் தனிச் செயலாளர், பொறுப்பு பதிவாளர், கண்காணிப்பாளர் உட்பட 5 பேரிடமும் சேலம் கருப்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    இந்நிலையில், முறைகேடு புகாரில் சிக்கிய துணைவேந்தர் ஜெகநாதனை, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளார். சேலம் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற உள்ள விழாவில் பங்கேற்கச் செல்லும் ஆளுநர் ரவி, ஜெகநாதனை சந்திக்க உள்ளதற்கு திமுக மாணவரணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆளுநரை கண்டித்து திமுக மாணவரணி சார்பில் நாளை சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன் அறிவித்துள்ளார்.

    மேலும், ஆளுநரை கண்டித்து நாளை சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொள்வார்கள் எனவும் தெரிவித்தார்

    • புதிய பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
    • இரு பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) லெ.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


     இதன்பிறகு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பங்கேற்றார்.விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ரூ.1200 கோடியில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் புதிய பன்னாட்டு விமான முனையத்தை பார்வையிட்டார். பின்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.


    தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.20 ஆயிரத்து 140 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும்.

    பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு இன்று 6 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


    விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைகளுக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டது மேலும் பயணிகள் வரும்போது அவர்களிடம் பயணச்சீட்டு உள்ளதை உறுதி செய்யப்பட்ட பின்பு விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் பயணிகளின் வாகனங்கள் வாகனம் நிறுத்தும் இடம் தவிர மற்ற பகுதிகளில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் அழைத்து செல்ல வந்தவர்களும் குழுவாக நிற்பதை தவிர்க்கும் வகையில் அறிவுறுத்தப்ப்பட்டது.

    டி.வி.எஸ். டோல்கேட் முதல் புதுக்கோட்டை வரை சாலையில் இரு பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் பிரதமர் வரும்பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் சாலையின் இரு பகுதிகளிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய நுழைவுப் பகுதியில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் விழா நடைபெறும் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் முழு சோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதித்தனர்.


    வாகனங்களில் செல்பவர்கள் அதற்கான வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் தனிநபர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் வரும் நேரத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மேலும் நிகழ்ச்சிகளை அனைவரும் பார்க்கும் வண்ணம் விழா நடைபெறும் பகுதியில் எல். இடி.டி.வி பொருத்தப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு விழாவிற்கு வந்தவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

    விமான நிலையத்தின் உட்புறங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தலைவர்களை வரவேற்க பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் தங்கள் கட்சிக் கொடி, தோரணங்களை வழிநெடுக கட்டியிருந்தனர். அத்துடன் பிரம்மாண்ட வளைவுகள், கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

    • இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன்.
    • பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடைகிறது.

    திருச்சி :

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பட்டமளிப்பு விழாவில் மாணவர்களுக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்களை பிரதமர் மோடி வழங்கினார்.

    இதன்பின்னர் "வணக்கம், எனது மாணவ குடும்பமே" என தமிழில் கூறி பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    * இந்த ஆண்டின் முதல் அரசு நிகழ்ச்சியாக தமிழகத்திற்கு வந்துள்ளேன்.

    * பாரதிதாசன் பல்கலை கழக பட்டமளிப்பு விழா எனக்கு மிகவும் சிறப்பானது.

    * பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு வருகை தந்த முதல் பிரதமர் என்பதில் பெருமை கொள்கிறேன்.

    * 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், காந்தி, அண்ணாமலை செட்டியார் பல்கலை கழகங்களை தொடங்கினர்.

    * பண்டைய காலத்திலேயே காஞ்சி, மதுரை நகர்கள் கல்வியில் சிறந்து விளங்கின.

    * பல்கலை கழகங்கள் எப்போதெல்லாம் சிறந்து விளங்குகிறதோ அப்போதெல்லாம் நாடு வளர்ச்சி அடைகிறது.

    * கல்வி என்பதுஅறிவோடு சகோதரத்துவத்தையும் வளர்க்க வேண்டும்.

    * மொழியையும், வரலாற்றையும் படிக்கும் போது கலாச்சாரம் வலுப்படும்.

    * புதியதோர் உலகு செய்வோம் என்ற பாரதிதாசன் கூற்றுப்படி, 2047-ஐ நோக்கி பயணிப்போம்.

    * இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவின் திறமையை நமது இளைஞர்கள் உரகுக்கு பறைசாற்றுகிறார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.
    • இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்.

    திருச்சி :

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். பட்டமளிப்பு விழாவில் 33 மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்குகிறார்.

    விழாவில் பங்கேற்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி.

    * பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி.

    * இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழகம்.

    * திராவிட கொள்கையை தமிழ் நிலத்தில் முழங்கியவர் பாரதிதாசன்.

    * மாணவர்களை ஊக்குவிக்க, பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

    * நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 29 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர்.

    * பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்.

    * புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 3.5 லட்சம் மாணவிகள் பயன்பெற்றுள்ளனர்.

    * இந்தியாவுக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேருங்கள் என மாணவர்களுக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

    • பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
    • திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். அவருடன் கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

    பட்டமளிப்பு விழாவில் 33 மாணவர்களுக்கு பட்டங்களை பிரதமர் மோடி வழங்குகிறார். பின்னர் "எதிர்கால திட்டங்கள் தயாரா?" என தலைப்பில் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார்.

    பல்கலைக்கழக துணை வேந்தர் பிரதமர் மோடிக்கு நினைவு பரிசு வழங்கினார்.

    பட்டம் பெறும் மாணவர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி அவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார். பட்டம் பெறும் மாணவர்கள் கடும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். சுமார் 250 மாணவ, மாணவிகள் மட்டுமே விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

    பட்டமளிப்பு விழாவை முடித்துக்கொண்டு பகல் 12 மணிக்கு திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர் மோடி, புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.

    பிரதமரின் வருகையையொட்டி, திருச்சி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு இடங்களும் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும், திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமான நிலையம் முதல் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வரை பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    • ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.
    • திருச்சிக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    திருச்சி:

    இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலைநயத்துடன் கட்டப்பட்டுள்ள திருச்சி புதிய விமான முனைய திறப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொண்டு, புதிய முனையத்தை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். மேலும் ரூ.19 ஆயிரத்து 850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கியும் வைக்கிறார்.

    இதற்காக தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு திருச்சி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்தார். அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    இதனை அடுத்து, பிரதமர் மோடி, கார் மூலம் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு சென்று பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.

    திருச்சிக்கு பிரதமர் மோடி வருவதையொட்டி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    • அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை நெஞ்சார வரவேற்கிறோம்.
    • மாநிலத்தின் நலன் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி.

    சென்னை:

    கவர்னர் மாளிகை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    புனித பூமியான திருச்சிராப்பள்ளிக்கு வருகை தரும் நமது அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடியை நெஞ்சார வரவேற்கிறோம். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறார். விமானம், ரெயில், சாலைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு, துறைமுகம் போன்ற பல முடிக்கப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்களை அவர் துவக்கி வைப்பார்.

    தமிழ்நாட்டில் ரூ.19,850 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார். திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனைய கட்டடத்தையும், கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட விரைவு எரிபொருள் மறுசுழற்சி ஆலையையும் (டிஎஃப்ஆர்பி) அவர் தொடங்கி வைக்கிறார்.

    தமிழ்நாட்டு மக்கள் மீதான அபரிமிதமான அன்பு மற்றும் பாசத்துக்காகவும், மாநிலத்தின் நலன் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கான அர்ப்பணிப்புக்காகவும் பிரதமர் மோடிக்கு நன்றி என கூறப்பட்டுள்ளது.

    ×