search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சியில் கட்டப்பட்ட பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்
    X

    திருச்சியில் கட்டப்பட்ட பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

    • புதிய பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து பார்வையிட்டார்.
    • இரு பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 38-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசினார். இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் பல்கலைக்கழக துணைவேந்தர் ம.செல்வம், பதிவாளர் (பொறுப்பு) லெ.கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    இதன்பிறகு திருச்சி விமான நிலையத்துக்கு வந்த பிரதமர் மோடி, அங்கு நடைபெற்ற பிரமாண்ட விழாவில் பங்கேற்றார்.விழாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கவர்னர் ஆர்.என்.ரவி முன்னிலை வகித்தனர்.

    விழாவில் ரூ.1200 கோடியில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் புதிய பன்னாட்டு விமான முனையத்தை பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். பின்னர் புதிய பன்னாட்டு விமான முனையத்தை பார்வையிட்டார். பின்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.


    தொடர்ந்து நடைபெறும் விழாவில் ரூ.20 ஆயிரத்து 140 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

    இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கலை நயத்துடன் கட்டப்பட்டுள்ள புதிய முனையம் 60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டதாக அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு ஒரே நேரத்தில் 4 ஆயிரம் சர்வதேச பயணிகளையும், 1,500 உள்நாட்டு பயணிகளையும் கையாள முடியும்.

    பிரதமர் மோடி திருச்சி வருகையையொட்டி விமான நிலையம் மற்றும் பாரதிதாசன் பல்கலைக் கழகத்துக்கு இன்று 6 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.


    விமான நிலையத்திற்கு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைகளுக்கு பின்பு உள்ளே அனுமதிக்கப்பட்டது மேலும் பயணிகள் வரும்போது அவர்களிடம் பயணச்சீட்டு உள்ளதை உறுதி செய்யப்பட்ட பின்பு விமான நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்.

    மேலும் பயணிகளின் வாகனங்கள் வாகனம் நிறுத்தும் இடம் தவிர மற்ற பகுதிகளில் நிறுத்துவதற்கு அனுமதிக்கப்படவில்லை. பயணிகளை வழியனுப்ப வந்தவர்களும் அழைத்து செல்ல வந்தவர்களும் குழுவாக நிற்பதை தவிர்க்கும் வகையில் அறிவுறுத்தப்ப்பட்டது.

    டி.வி.எஸ். டோல்கேட் முதல் புதுக்கோட்டை வரை சாலையில் இரு பகுதிகளிலும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் பிரதமர் வரும்பாதையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படாத வண்ணம் சாலையின் இரு பகுதிகளிலும் தடுப்பு கட்டைகள் அமைக்கப்பட்டு இருந்தது. திருச்சி விமான நிலையத்தில் புதிய முனைய நுழைவுப் பகுதியில் சுமார் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இவர்கள் விழா நடைபெறும் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தையும் முழு சோதனை செய்யப்பட்ட பின்பு அனுமதித்தனர்.


    வாகனங்களில் செல்பவர்கள் அதற்கான வழங்கப்பட்ட அடையாள அட்டை மற்றும் தனிநபர் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பிரதமர் வரும் நேரத்திற்கு சுமார் ஒரு மணி நேரம் முன்பாக வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

    மேலும் நிகழ்ச்சிகளை அனைவரும் பார்க்கும் வண்ணம் விழா நடைபெறும் பகுதியில் எல். இடி.டி.வி பொருத்தப்பட்டு நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. நிகழ்ச்சியில் சுமார் 10,000 பேர் கலந்து கொள்ளும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டு விழாவிற்கு வந்தவர்கள் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

    விமான நிலையத்தின் உட்புறங்களில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பிரதமர் மோடி மற்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் தலைவர்களை வரவேற்க பா.ஜ.க. மற்றும் தி.மு.க.வினர் தங்கள் கட்சிக் கொடி, தோரணங்களை வழிநெடுக கட்டியிருந்தனர். அத்துடன் பிரம்மாண்ட வளைவுகள், கட் அவுட்கள் வைக்கப்பட்டிருந்தன.

    Next Story
    ×