search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Elephant"

    • காட்டு யானைகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை முறித்து சேதம் விளைவித்துள்ளது.
    • யானை கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் கடும் வரட்சி நிலவுவதால் வனவிலங்குகள் உணவு, தண்ணீர் தேடி கிராமத்துக்குள் புகுவது தொடர் கதையாகி வருகிறது.

    அதிலும் சமீப காலமாக யானைக் கூட்டங்கள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து பயிர்களை சேதம் செய்வது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் ஜீரகள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட கிருஷ்ணாபுரம் கிராமத்தில் சோமசுந்தரம் (வயது 40) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவில் புகுந்த 3 காட்டு யானைகள் சுமார் 300-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள், 50-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை முறித்து சேதம் விளைவித்துள்ளது.

    இதனால் விவசாயிக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து யானை கூட்டம் விளைநிலங்களை சேதப்படுத்தி வருவதால் அப்பகுதி விவசாயிகள் கடும் அதிர்ச்சியிலும், அச்சத்திலும் உள்ளனர்.

    சேதமடைந்த வாழை மரங்களுக்கும், பாக்கு மரங்களுக்கும் வனத்துறையினர் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும், யானைகள் விவசாய நிலங்களில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • குட்டி யானைக்கு பால் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர்.
    • 2 காட்டு யானைகள் திடீரென வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு வந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி வனப்பகுதியில் உள்ள சாலையில் சர்வ சாதரணமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட சத்தியமங்கலம் வனச்சரகம், பண்ணாரி கோவில் அருகே நேற்று இரவு குட்டியுடன் தாய் யானை ஒன்று வந்துள்ளது. அப்போது அந்த தாய் யானை திடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தது.

    இதைப் பார்த்த குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமாக பிளறியது. யானை சத்தம் கேட்டு அருகில் உள்ள மக்கள் ஓடி வந்து பார்த்தனர். பின்னர் இதுகுறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர் சதாசிவம் தலைமையிலான குழுவினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    40 வயது மதிக்கத்தக்க தாய் யானைக்கு குளுக்கோஸ் மற்றும் குடிப்பதற்கு தண்ணீர், உண்பதற்கு இலைகள் போன்றவற்றை வனத்து றையினர் அளித்து வருகின்றனர். இருந்தாலும் தாய் யானையால் எழுந்து நிற்க முடியவில்லை.

    சம்பவ இடத்திலேயே உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறது. 2 மாதமே ஆன குட்டி யானை தாய் யானையை சுற்றி சுற்றி வந்து சத்தமிட்டு வருகிறது. பண்ணாரி-பவானிசாகர் சாலையின் அருகிலேயே யானை படுத்திருப்பதால், குட்டி யானை சாலைக்கு சென்று வாகனங்களில் அடிப்பட்டு விடக்கூடாது என்பதற்காக வனத்துறையினர் 5 அடி ஆழத்தில் ஒரு குழியை தோண்டி அந்தக் குழிக்குள் குட்டி யானையை வைத்து பராமரித்து வருகின்றனர்.

    குட்டி யானைக்கு பால் மற்றும் தண்ணீர் வழங்கி வருகின்றனர். தாயை விட்டு பிரிய முடியாமல் இருக்கும் 2 மாத குட்டி யானையின் பாச போராட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது. தொடர்ந்து வனத்துறையினர் தாய் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து 2 காட்டு யானைகள் திடீரென வெளியேறி உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் பெண் யானை அருகே சத்தமிட்டவாறு வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் உடனடியாக பட்டாசுகளை வெடித்து அந்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

    • ஒற்றை யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது.
    • ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் கடந்த சில நாட்களாக ஒற்றை ஆண் யானை ஒன்று உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைந்துள்ளது. இந்த யானை காலை நேரங்களில் வனப் பகுதிக்குள் செல்வதும், இரவில் கிராமப்புறங்களில் நுழைந்து விவசாய பயிர்களை அழிப்பதுமாக இருந்து வந்துள்ளது.

    இதனை கடந்த 3 நாட்களாக பாலக்கோடு-காரிமங்கலம் இடையில் உள்ள ஆராதஹள்ளி கூட்ரோடு பகுதியில் உள்ள மலைப் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு காரிமங்கலம் பகுதியை நோக்கி யானை சென்றுள்ளது. அப்பொழுது சவுளுக்கொட்டாய் பகுதிகளில் விவசாய நிலங்களில் நுழைந்துள்ளது. இரவு நேரம் என்பதால், வனத்துறையினரால் யானையினை கண்காணித்து வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் யானை சென்ற திசை தெரியாமல் வனத்துறையினர் அதே பகுதியில் சுற்றி தேடி வந்தனர்.

    இந்நிலையில் அதிகாலை காரிமங்கலம் அருகே உள்ள சவுளுக்கொட்டாய் பகுதியில் பெருமாள் என்பவரின் மனைவி ஜெயஸ்ரீ என்பவர், அதிகாலை 5.30 மணிக்கு இயற்கை உபாதை கழிப்பதற்காக வயல் வழி பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது எதிர்பாராத விதமாக திடீரென வந்த யானை ஜெயஸ்ரீயை தாக்கியுள்ளது. இதில் படுகாயம் அடைந்து சுயநினைவின்றி அதே இடத்தில் அவர் விழுந்து கிடந்துள்ளார்.

    இதனைத் தொடர்ந்து இயற்கை உபாதை கழிக்க சென்ற ஜெயஸ்ரீ நீண்ட நேரமாக வராததால், வீட்டில் இருந்தவர்கள் அக்கம்பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். அப்பொழுது சுய நினைவின்றி படுகாயத்துடன் கிடந்துள்ளார். அதன் அருகில் கரும்பு தோட்டத்தில் ஒற்றை யானை இருந்தது தெரிய வந்தது.

    இதனைக் கண்டு அதிர்ச்சடைந்த ஜெயஸ்ரீயின் குடும்பத்தினர், ஜெயஸ்ரீயை உடனடியாக அந்த இடத்தில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். அப்பொழுது மருத்துவமனையில் பரிசோதனை செய்தபோது நுரையீரல் பகுதியில் யானை பலமாக தாக்கி இருந்தது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து ஜெயஸ்ரீ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மேலும் ஜெயஸ்ரீயை தாக்கிய அந்த ஒற்றைக் காட்டு யானை அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் முகாமிட்டு உள்ளது. இதனை பாலக்கோடு வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் பெருமாள் ஜெயஸ்ரீ தம்பதியினருக்கு மூன்று மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்த நிலையில் ஒற்றை ஆண் யானை தாக்கியதில், படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஜெயஸ்ரீ சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    • திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன.
    • ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பாபவிநாசம், ஸ்ரீகந்தம் வனத்தில் திடீரென 10 யானைகள் வனப்பகுதியில் இருந்து வந்தன.

    வனத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு வேலியையும், சந்தன மரங்களையும் பிடுங்கி எரிந்து யானைகள் நாசம் செய்தன.

    ஸ்ரீகண்டம் வனப்பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள் மற்றும் வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஏராளமான வனத்துறையினர் வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அப்போது அங்குள்ள குளத்தில் யானைகள் தண்ணீர் குடித்தன.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் யானைகள் தண்ணீருக்காக அருகில் உள்ள ஸ்ரீகண்டம்வனம் மற்றும் பார்வேட் மண்டப பகுதிகளுக்குள் புகுந்தன. ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது. கடந்த ஆண்டு முதல் யானைகள் ஒன்றாக சாலையை கடந்து பக்தர்களை பயமுறுத்தியது.

    சமீபத்தில், கோடை காலம் தொடங்கும் முன், திருப்பதி மலை வனப்பகுதியில் யானைகள் கூட்டம், ஸ்ரீகண்டம் வனத்துக்குள் புகுந்து வேலியை நாசம் செய்ததால், வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.
    • சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    ஒகேனக்கல்:

    கோடை காலத்திற்கு முன்பே வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதால் யானைகள் கூட்டம் கூட்டமாக கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் சுற்றி திரிகின்றன. கோடை காலம் துவங்குவதற்கு முன்பே ஏற்பட்டுள்ள வறட்சியின் காரணமாக வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமப் பகுதிகளில் யானைகள் அவ்வப்போது யானைகள் நுழைந்து விவசாய பயிர்களை நாசம் செய்வது வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக இடம்பெயர்ந்துள்ளன. ஒகேனக்கல் சுற்றுலா தளம் பென்னாகரம் பகுதியில் இருந்து 11 கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் செல்ல வேண்டிய நிலை உள்ளதால் இடம்பெயர்ந்துள்ள யானைகள் பென்னாகரம், ஒகேனக்கல் செல்லும் சாலையின் ஓரங்களில் உள்ள மரங்களை உடைத்தும், தண்ணீருக்காக கணவாய் பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டம் சிறிய தொட்டிகளில் தண்ணீர் குடிக்க பென்னாகரம் ஒகேனக்கல் செல்லும் சாலைக்கு பகல் நேரங்களிலும் இரவு நேரங்களில் வந்து செல்கிறது.

    அப்போது இரவு நேரங்களில் ஒகேனக்கல் வரும் சுற்றுலாப் பயணிகள், யானையைக் கண்டதும் அச்சத்தில் வாகனங்களை நிறுத்துவது, வாகன ஒலி, ஒளி எழுப்புவது போன்ற செயல்களின் ஈடுபடுகின்றனர். இதனால் யானைகள் மிரண்டு தாக்கும் அபாய நிலை உள்ளது.

    ஒகேனக்கல் வனப்பகு தியில் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்துறையினரின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு பலகைகளை வாகன ஒளியில் யானைகள் மிரண்டு உடைத்திருப்பதால் யானைகள் கடக்கும் பகுதிகளை அறியாமல் சுற்றுலாப் பயணிகள் சில நேரங்களில் சாலையோரத்தில் நிற்கும் யானைகளின் அருகிலேயே வாகனத்தை நிறுத்துகின்றனர்.

    வறட்சி நிலவும் காலங்களில் ஆண்டுதோறும் யானைகள் ஒகேனக்கல் பகுதிக்கு இடம் பெயரும் சூழல் தொடர்ந்து நிகழ்வதால் பென்னாகரம் மற்றும் ஒகேனக்கல் வனத்து றையினர் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டும், மடம் சோதனைச் சாவடி பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். 

    • யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது.
    • யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.

    இதனால் இரவு நேரங்களில் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திக்கு உட்பட்ட சேஷன் நகர் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (வயது 45) என்பவர் ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிர் செய்துள்ளார்.

    நேற்று இரவு வனப்பகுதியிலிருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை சதீஷ் தோட்டத்துக்குள் புகுந்து தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த சதீஷ் மற்ற விவசாயிகளை ஒன்று திரட்டி காட்டு யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு காட்டு யானையை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    யானை தக்காளி செடிகளை மிதித்து சேதப்படுத்தியதில் சுமார் அரை ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தக்காளிகள் அனைத்தும் வீணானது. இதற்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என சதீஷ் கோரிக்கை விடுத்துள்ளார். இதே போல் யானை மீண்டும் கிராமத்துக்குள் புகாத வண்ணம் வனப்பகுதியை ஒட்டி அகழி அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
    • பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று குருவாயூர் கிருஷ்ணன் கோவில். இந்த கோவிலுக்கு சொந்தமாக 30-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. அவை அனைத்தும் கோவில் அருகிலேயே பாகன்களல் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

    கிருஷ்ணன் கோவிலில் தினமும் இரவு சீவேலி என்று அழைக்கப்படும் சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம். அப்போது யானை மீது சுவாமி விக்ரகம் வைக்கப்பட்டு வீதிஉலா நடத்தப்படும். சீவேலி நிகழ்ச்சியில் பங்கேற்கும் யானைகள் தனியாக ஒரு இடத்தில் பராமரிக்கப்படுகின்றன.

    அதில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய யானையும் அடங்கும். இந்நிலையில் சீவேலியில் பங்கேற்கும் ஜெயலலிதா வழங்கிய யானை உள்பட 2 யானைகளை, அதன் பாகங்கள் பிரம்பால் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

    யானைகள் வலி தாங்க முடியாமல் பிளிறிய போதும், பாகன்கள் பிரம்பால் தொடர்ந்து தாக்குவது போன்று இடம்பெற்றிருந்த அந்த வீடியோவை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். யானைகளை பாகன்கள் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அதன் பாகன்களை குருவாயூர் தேவசம்போர்டு சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது.

    • வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
    • யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம் மலையடி வாரத்தில் கடந்த 3 மாதமாக ஒற்றை யானை முகாமிட்டு, விவசாய பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன.

    காட்டு பத்து, மேலகாடு விளைநிலங்களில் பயிர் செய்யப்பட்டுள்ள வாழை, நெல், தென்னை, பனை மரங்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகளுக்கு பெருமளவில் இழப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் நேற்று மாலையில் ஒற்றை யானை மீண்டும் விளைநிலங்களுக்குள் புகுந்தது. வாழைகளை நோக்கி வந்த யானையை பார்த்த விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். எனினும் சுதாரித்து கொண்டு விவசாயிகள் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

    இதைக்கண்ட யானையும் சற்று பின்வாங்கியது. உடனடியாக விவசாயிகள் உயிரை பணயம் வைத்து பட்டாசுகள் வெடித்தும், சத்தங்கள் எழுப்பியும் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதனைதொடர்ந்து யானை அங்கிருந்து சென்றது.

    இதுபற்றி விவசாயிகள் கூறுகையில், ஒற்றை யானை தினசரி விளைநிலங்களில் நுழைகிறது. எங்கள் பயிரை காப்பாற்ற உயிரை பணயம் வைத்துள்ளோம். யானை தொடர்ந்து அட்டகாசம் செய்து வருவதால் விவசாயிகளின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. யானையிடமிருந்து பயிர்களையும், உடமைகளையும் காப்பாற்ற முடியாமல் திணறி வருகிறோம்.எனவே அச்சுறுத்தி வரும் ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது.
    • காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் யானை, சிறுத்தை, புலி, காட்டெருமை, கரடி உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதில் யானை கூட்டங்கள் அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருவது தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் கடந்த சில நாட்களாக வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் கூட்டம் சாலையில் உலா வருவதும், வாகனங்களை வழி மறிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. குறிப்பாக சரக்கு வாகனங்களை வழிமறித்து சாப்பிட உணவு உள்ளதா என்று தேடி பார்த்து வருகிறது. இந்த பகுதி வழியாக நூற்றுக்கணக்கான கரும்பு லோடுகளை ஏற்றி செல்லும் வாகனங்களை வழிமறித்து கரும்புகளையும் சாப்பிட்டு வருகிறது.

    யானைகள் உணவு, தண்ணீர் தேடி வனச்சாலையை கடந்து செல்வது வழக்கமான ஒன்று. இந்த நிலையில் ஆசனூரில் இருந்து கேர்மாளம் செல்லும் வனச்சாலையில் வனப்பகுதியை விட்டு வெளியேறிய 3 யானைகள் வனச்சாலையில் உலா வந்தது. அவ்வழியாக சென்ற அனைத்து வாகனங்களையும் வழிமறித்து உணவு உள்ளதா என்று தேடி பார்த்தது.

    இதைகண்ட வாகன ஓட்டிகள் வாகனங்களை பின்னோக்கி ஓட்டினர். சிறிது நேரம் சாலையில் உலா வந்த யானைகள் பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது தாளவாடி வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் கூட்டம் வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையில் உலா வருகிறது. கடந்த 10 நாட்களில் மட்டும் ஏராளமான காட்டு யானைகள் சாலையில் உலா வந்து சரக்கு வாகனங்களை வழிமறித்து உணவு இருக்கிறதா என்று தேடி பார்க்கிறது.

    எனவே வாகன ஓட்டிகள் இந்த பகுதியில் செல்லும் போது கவனத்துடன் செல்ல வேண்டும். சிலர் ஆர்வம் மிகுதியால் தங்களது வாகனத்தை விட்டு கீழே இறங்கி யானைகளை செல்போனில் படம் எடுக்கின்றனர். இது பெரும் ஆபத்தில் முடியும். வாகன ஓட்டிகள் வாகனங்களை வனப்பகுதியில் நிறுத்த வேண்டாம். மீறி செயல்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • யானை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் புகுந்து வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
    • யானை இறந்திருப்பது அனைவரின் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. குடியிருப்பு பகுதிகளில் அந்த யானை சாலையில் பிளிறியவாறு ஓடியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானந்தவாடி பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானை அங்கேயே முகாமிட்டு ஊருக்குள் சுற்றிச்சுற்றி வந்தபடி இருந்தது.

    இதனால் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி வெகுநேர போராட்டத்துக்கு பிறகு யானை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்திய பிறகும் யானை மயக்கமடைய வில்லை.

    இதனால் மற்றொரு டோஸ் செலுத்தப்பட்டது. அதன்பிறகே யானை மயக்கநிலைக்கு வந்தது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த வனத்துறையினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோரின் கூட்டு முயற்சியால் ஊருக்குள் புகுந்த காட்டு யானை 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடிக்கப்பட்டது.

    அந்த யானை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் புகுந்து வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த யானை அங்குள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து கேரள மாநிலம் மானந்த வாடிக்கு வந்திருக்கிறது.


    இதனால் அந்த யானையை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியிலேயே விட முடிவெடுக்கப்பட்டது. யானையை கொண்டு செல்வதற்காக பிரத்யேக வாகனம் வரவழைக்கப்பட்டது. அந்த வாகனத்தில் 3 கும்கி யானைகளின் உதவியுடன் காட்டுயானை ஏற்றப்பட்டது.

    இரவு 10.15 மணிக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட யானை கர்நாடகா மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த யானை பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டிருக்கிறது. வனப்பகுதிக்கு செல்ல விட்டாலும், அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்தபடி இருந்தனர்.

    இந்த நிலையில் அந்த யானை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது, யானை ஒரு முறை மயங்கி விழுந்ததாக வனத் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

    அந்த யானைக்கு உடல் நலம் பாதித்திருந்ததால் இறந்ததா? அல்லது அளவுக்கு அதிமாக மயக்க மருந்து செலுத்தியதால் இறந்துவிட்டதா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மானந்தவாடியில் ஊருக்குள் புகுந்தபோது அந்த யானை அங்கும் இங்கும் ஓடியபடியே இருந்திருக்கிறது. ஆனால் எந்த பொருளையும் அது சேதப்படுத்தவில்லை, யாரையும் தாக்கவும் முயற்சிக்கவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினர்.

    இந்நிலையில் அந்த யானை இறந்திருப்பது அனைவரின் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
    • மிகப் பெரிய துலாபார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    பெங்களூர்:

    கர்நாடக மாநிலம் ஹுப்ளி மாவட்டம் ஷிரஹட்டியில் உள்ள பாவைக்யதா சன்ஸ்தான் மஹா பீடமானது பக்கீர் சித்தராமன் மாஹஸ்தசாமியின் 75-வது பிறந்தநாளை முன்னிட்டும், யானை சம்பிகாவின் 60-வது வருட மடத்திற்கு சேவையாற்றுவதையும் குறிக்கும் வகையிலும் ஒரே நேரத்தில் துலாபார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்த நிகழ்ச்சி அங்குள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது.

    இங்கு மிகப்பெரிய தராசு கட்டி தொங்கவிடப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு அதில் மடத்து யானை நிறுத்தப்பட்டது. பின்னர் யானையின் முதுகில் தங்க முலாம் பூசப்பட்ட பக்கீர் சித்தராமன் மாஹஸ்தசாமி சிலை வைக்கப்பட்டது.

    இதையடுத்து பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட எடை தராசின் ஒரு பக்கத்தில் யானை சம்பிகாவும் மறுபக்கத்தில் 5,555 கிலோ 10 ரூபாய் நாணயங்களுடன் அவற்றின் கூட்டு எடைக்கு சமமாக வைக்கப்பட்டது. ரிசர்வ் வங்கியிடமிருந்து 376 பைகளில் வாங்கப்பட்ட ரூ.73,40,000 மதிப்புள்ள நாணயங்கள் துலாபாரத்திற்கு பயன்படுத்தப்பட்டன.


    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பிரகலாத் ஜோஷி, மாநில அமைச்சர்கள் எச்.கே.பாட்டீல், எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் காந்த்ரே, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரிகள் பசவராஜ் பொம்மை, ஜெகதீஷ் ஷெட்டர், கர்நாடக சட்டப் பேரவை தலைவர் பசவராஜ் ஹோரட்டி, பா.ஜ.க. மாநில தலைவர் பி.ஒய். விஜயேந்திரா மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

    44 அடி நீளம், 30 அடி உயரம், 20 அடி அகலம் கொண்ட தராசு ரூ. 20 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடையது. இந்த தராசு நிரந்தரமாக மடத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என ஏற்பாட்டு் குழு உறுப்பினர் சந்திரசேகர் கோகாக் தெரிவித்தார்.

    கர்நாடக மாநிலத்தில் நடந்த இந்த மிகப் பெரிய துலாபார நிகழ்ச்சி மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது.
    • மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது. யானைகள் சில சமயம் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வனச்சாலையில் உலா வருகிறது. இந்நிலையில் ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் திடீரென பஸ்சை வழிமறித்து சாலையில் நடுவில் நின்றது.

    இதனால் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சுமார் 15 நிமிடம் சாலையில் நின்ற யானைகள் கூட்டம் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து கிளம்பி சென்றது. யானை கூட்டத்தை பஸ்சில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    ×