search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை மரணம்
    X

    மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட காட்டு யானை மரணம்

    • யானை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் புகுந்து வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது.
    • யானை இறந்திருப்பது அனைவரின் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் வயநாடு மானந்தவாடி பகுதியில் காட்டு யானை ஒன்று புகுந்தது. குடியிருப்பு பகுதிகளில் அந்த யானை சாலையில் பிளிறியவாறு ஓடியது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் மானந்தவாடி பகுதிக்கு விரைந்தனர். அவர்கள் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் அந்த யானை அங்கேயே முகாமிட்டு ஊருக்குள் சுற்றிச்சுற்றி வந்தபடி இருந்தது.

    இதனால் அந்த யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி வெகுநேர போராட்டத்துக்கு பிறகு யானை மீது மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முதல் டோஸ் செலுத்திய பிறகும் யானை மயக்கமடைய வில்லை.

    இதனால் மற்றொரு டோஸ் செலுத்தப்பட்டது. அதன்பிறகே யானை மயக்கநிலைக்கு வந்தது. கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த வனத்துறையினர், போலீசார் மற்றும் அதிகாரிகள் ஏராளமானோரின் கூட்டு முயற்சியால் ஊருக்குள் புகுந்த காட்டு யானை 18 மணி நேர போராட்டத்துக்கு பிறகு பிடிக்கப்பட்டது.

    அந்த யானை கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலம் ஹாசன் பகுதியில் புகுந்து வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. அதன்பிறகு அந்த யானை அங்குள்ள பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டது. அங்கிருந்து கேரள மாநிலம் மானந்த வாடிக்கு வந்திருக்கிறது.


    இதனால் அந்த யானையை கர்நாடக மாநிலம் பந்திப்பூர் வனப்பகுதியிலேயே விட முடிவெடுக்கப்பட்டது. யானையை கொண்டு செல்வதற்காக பிரத்யேக வாகனம் வரவழைக்கப்பட்டது. அந்த வாகனத்தில் 3 கும்கி யானைகளின் உதவியுடன் காட்டுயானை ஏற்றப்பட்டது.

    இரவு 10.15 மணிக்கு வாகனத்தில் ஏற்றப்பட்ட யானை கர்நாடகா மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் அந்த யானை பந்திப்பூர் வனப்பகுதியில் விடப்பட்டிருக்கிறது. வனப்பகுதிக்கு செல்ல விட்டாலும், அந்த யானையை வனத்துறையினர் கண்காணித்தபடி இருந்தனர்.

    இந்த நிலையில் அந்த யானை இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தது. வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்ட போது, யானை ஒரு முறை மயங்கி விழுந்ததாக வனத் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

    அந்த யானைக்கு உடல் நலம் பாதித்திருந்ததால் இறந்ததா? அல்லது அளவுக்கு அதிமாக மயக்க மருந்து செலுத்தியதால் இறந்துவிட்டதா? என்பது தெரியவில்லை. அது தொடர்பாக மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

    மானந்தவாடியில் ஊருக்குள் புகுந்தபோது அந்த யானை அங்கும் இங்கும் ஓடியபடியே இருந்திருக்கிறது. ஆனால் எந்த பொருளையும் அது சேதப்படுத்தவில்லை, யாரையும் தாக்கவும் முயற்சிக்கவில்லை என்று அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறினர்.

    இந்நிலையில் அந்த யானை இறந்திருப்பது அனைவரின் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×