search icon
என் மலர்tooltip icon
    • பினாமி பெயர்களில் பல இடங்களில் சொத்துக்களையும் வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தது.
    • சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    ஸ்ரீவில்லிபுத்தூர் வன்னியம்பட்டி தாய்நகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 55). இவர் கடந்த 2023 ஜனவரி முதல் அக்டோர் வரை 10 மாதங்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணி புரிந்தார்.

    அவர் பணிபுரிந்த காலங்களில் பத்திரப்பதிவு செய்யவருபவர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பத்திரம் பதிவு செய்து வந்ததாக புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து அவர் செங்கல்பட்டுக்கு பணி மாறுதல் செய்யப்பட்டு அங்கு பணிபுரிந்து வருகிறார்.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் பணி புரிந்த காலகட்டங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், பினாமி பெயர்களில் பல இடங்களில் சொத்துக்களையும் வாங்கி குவித்ததாகவும் புகார்கள் எழுந்தது.

    இந்த நிலையில் நேற்று விருதுநகர் லஞ்ச ஒழிப்பு போலீசார் தாய் நகரில் கட்டப்பட்டுள்ள அவரது பிரமாண்டமான சொகுசு பங்களாவில் காலை 11 மணி முதல் மாலை 4 வரை சோதனை நடத்தினர்.

    மேலும் பொதுப் பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பொறியாளர் பரமசிவம் தலைமையிலான குழுவினர் சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவை மதிப்பீடு செய்ததாக கூறப்படுகிறது.

    5 மணி நேரம் சார்பதிவாளர் கட்டியுள்ள சொகுசு பங்களாவில் நடைபெற்ற சோதனையால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்பட்டது.

    • பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை காமராஜர் காலனியை சேர்ந்தவர் சிவசண்முகம். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகின்றார். இவருடைய மனைவி கெஜலட்சுமி. இவர் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஹரிகரசுதன் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    ஹரிகரசுதன் அயோத்தி யாப்பட்டணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இதற்கிடையே ஹரிகரசுதனுக்கு பள்ளிக்கு போக விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் தினமும் மகனுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி பள்ளிக்கு அனுப்பி வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் ஹரிகரசுதன் தனது பெற்றோரிடம் பள்ளிக்கு போகமாட்டேன் என கூறி அடம்பிடித்ததாக கூறப்படுகிறது. பெற்றோர் அவருக்கு அறிவுரை கூறி காலையில் பள்ளி வாகனத்தில் அனுப்பி வைத்தனர். இதனால் மனமுடைந்த ஹரிகரசுதன் மாலையில் வகுப்பு முடிந்து வீட்டிற்கு வந்ததும் வீட்டிற்குள் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் கல்லூரியில் பயிலும் அவரது சகோதரி மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தனது தம்பி தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி உடனே தனது பெற்றோருக்கு தெரிவித்தார். அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.
    • முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

    திண்டுக்கல்:

    குஜிலியம்பாறை அருகே கரிக்காலி கோமுட்டிபட்டியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது51). இவர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு கண்ணன் என்ற ஆண் குழந்தை பிறந்தது. கண்ணன் நீண்ட நாட்களாக வாய் பேச முடியாமல் இருந்துள்ளார்.

    இதற்காக வழிபாடு நடத்திய குப்புசாமி கரூர் தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலுக்கு நேர்த்திக்கடனாக பசு மாட்டை வளர்த்து வந்தார். ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் கோவிலுக்கு குடும்பத்துடன் பசுமாட்டை அழைத்து சென்று வழிபாடு செய்துள்ளார்.

    இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு கண்ணன் வாய் பேச தொடங்கி உள்ளார். இதனால் குப்புசாமி குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மேலும் அப்பகுதி கிராம மக்கள் பசுமாட்டை கோவில் மாடாக நினைத்து வணங்கி வந்தனர். இந்த நிலையில் அந்த பசு திடீரென உயிரிழந்தது கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    குப்புசாமி வீட்டு முன்பு ஏராளமான மக்கள் ஒன்று திரண்டு பசுமாட்டை குளிப்பாட்டி அலங்காரம் செய்து பூமாலையிட்டு இறுதிச்சடங்குகள் செய்தனர்.

    முன்னதாக தாந்தோன்றி மலை பெருமாள் கோவிலில் இருந்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பல்வேறு அர்ச்சனைக்கு பின்னர் தோட்டத்து நிலத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறந்த பசுமாடு இதுவரை 10 கன்றுகளை ஈன்றுள்ளது. இந்த பசுமாட்டு பாலை குப்புசாமி குடும்பத்தினர் விற்பனை செய்ததில்லை.

    கன்று குட்டிகளுக்கே கொடுத்து விடுவார். மேலும் அப்பகுதியில் உள்ள குழந்தைகளுக்கு பசுமாட்டு பாலை இலவசமாக கொடுத்து வந்துள்ளார். முதலாவதாக பிறந்த கன்று குட்டியையும் பெருமாள் கோவிலுக்கு கொடுத்து விட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான பசுமாடு இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

    • பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
    • போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்பூர் காங்கயம் ரோடு நல்லூர் சர்ச் அருகே 36 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குடிபோதையில் சுற்றி திரிந்தார். அப்போது அங்கு பாராளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படையை சேர்ந்த துணை மாநில வரி அலுவலர் குணசேகர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவர்களிடம் அருகில் இருந்த கடைக்காரர்கள், சுற்றி திரியும் பெண் அதிக பணம் வைத்திருப்பது குறித்து தெரிவித்துள்ளனர்.

    உடனே அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். பின்னர் அவர் சேலையில் சுற்றி வைத்திருந்த பொருள் என்னவென்று பார்த்த போது அதில் ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் இருந்தது தெரிய வந்தது. தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் பணத்துக்கு உரிய ஆவணங்களை இல்லாததால் அதனை பறிமுதல் செய்த பறக்கும் படையினர் திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார் கிரியப்பனவரிடம் ஒப்படைத்தனர்.

    மேலும் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியதில் திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி மணிமேகலை (வயது 36) என்பதும் கடந்த 5 நாட்களுக்கு முன் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு சென்று பிச்சை எடுத்து வைத்திருந்த பணம் என தெரியவந்தது.

    பறிமுதல் செய்த பணத்தை உதவி ஆணையாளர் (கணக்கு) தங்கவேல் ராஜன் கருவூலத்திற்கு அனுப்பி வைத்தார். போதையில் இருந்த அந்த பெண்ணை ஆலங்காட்டில் உள்ள ஒரு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    • 9-ந்தேதி-சேலம், 10-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 11-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-பொள்ளாச்சியில் நாஞ்சில் சம்பத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
    • 1-ந்தேதி-சேலம், 2-ந்தேதி-நாமக்கல், 3-ந்தேதி-பெரம்பலூர், 4-ந்தேதி-திருச்சி, 5-ந்தேதி-கோவையில் நடிகர் போஸ் வெங்கட் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.

    தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நாஞ்சில் சம்பத், நடிகர்கள் கருணாஸ், போஸ் வெங்கட், வாசு விக்ரம் ஆகியோர் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளனர். அவர்களது சுற்றுப்பயண விவரத்தை தி.மு.க. தலைமை கழகம் அறிவித்துள்ளது.

    நாஞ்சில் சம்பத் சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    3-ந்தேதி திருநெல்வேலி, 4-ந்தேதி-விருதுநகர், 5-ந்தேதி-தென்காசி, 6-ந் தேதி-தூத்துக்குடி, 7-ந் தேதி-ராமநாதபுரம், 8-ந் தேதி-மதுரை, 9-ந்தேதி-சேலம், 10-ந்தேதி-கள்ளக்குறிச்சி, 11-ந்தேதி-கடலூர், 12-ந்தேதி-பொள்ளாச்சி, 13-ந்தேதி-திருப்பூர், 14-ந் தேதி-கோவை, 15-ந்தேதி-நீலகிரி.

    முக்குலத்தோர் புலிப்படை தலைவர், நடிகர் கருணாஸ் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    2-ந்தேதி-சிவகங்கை, 3 மற்றும் 4-ந்தேதி-ராமநாதபுரம், 5-ந்தேதி-திருநெல்வேலி, 6-ந்தேதி-தென்காசி, 7-ந்தேதி-விருதுநகர், 11 மற்றும் 12-ந்தேதி-தேனி, 13-ந் தேதி-மதுரை, 14-ந்தேதி-திண்டுக்கல்.

    நடிகர் போஸ் வெங்கட் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

    1-ந்தேதி-சேலம், 2-ந்தேதி-நாமக்கல், 3-ந்தேதி-பெரம்பலூர், 4-ந்தேதி-திருச்சி, 5-ந்தேதி-கோவை.

    நடிகர் வாசு விக்ரம் தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரம்:-

    3-ந்தேதி-திருவள்ளூர், 4-ந்தேதி-அரக்கோணம், 5-ந்தேதி-வேலூர், 6-ந் தேதி-கிருஷ்ணகிரி, 7-ந்தேதி-திருவண்ணாமலை, 8-ந்தேதி-ஆரணி, 9-ந்தேதி-காஞ்சிபுரம், 10-ந்தேதி ஸ்ரீபெரும்புதூர், 11-ந்தேதி-தென்சென்னை, 12-ந்தேதி-மத்திய சென்னை.

    • திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.
    • நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது மத்திய பாதுகாப்பு படை வீரர் உடையில் ஒருவர் வந்து அமர்ந்து மற்றவர்களுடன் சகஜகமாக பேசிக் கொண்டிருந்தார். திடீரென வேட்பாளர் ஒருவரை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தார்.

    பின்னர் வேட்பாளர்கள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளும் மைக் முன்பு வந்து நின்று நான் 3-வது முறையாக போட்டியிடுகிறேன். இது காலத்தின் கட்டாயம். எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டால் யாரையும் ஓட்டு போட விடமாட்டேன் என கூறி ரகளை செய்தார். உடனே போலீசார் விரைந்து வந்து அவரை சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தனர். அப்போதும் அந்த நபர் கலெக்டர் அலுவலகத்தில் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டார்.

    இதுகுறித்து போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், அந்த நபர் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் என்பதும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரிய வந்தது. மேலும் அந்த நபர் வேட்பு மனுவும் தாக்கல் செய்யவில்லை.

    தொடர்ந்து அந்த நபரை போலீசார் வெளியேற்றினர்.

    இந்த சம்பவம் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.
    • 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    திருவனந்தபுரம்:

    சென்னையில் இருந்து கேரள மாநிலம் மங்களூருவுக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது. நேற்று இந்த ரெயில் மங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலில் பயணித்த 2 பயணிகள், அதே ரெயிலில் சிக்கி இறந்துவிட்டனர்.

    ஜார்க்கண்ட் மாநில எல்லையில் உள்ள ஜாஷ்பூரை சேரந்தவர் சுஷாந்த் சாஹூ(வயது41). இவர் கேரள மாநிலம் மங்களூருவில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். நேற்று இவர் மங்களூருவில் இருந்து சென்னை சென்ற ரெயிலில் பயணித்துள்ளார்.

    அந்த ரெயில் காசர்கோடு ரெயில் நிலையத்துக்கு வந்தபோது தண்ணீர் பாட்டில் வாங்குவதற்காக ரெயிலில் இருந்து சுஷாந்த் சாஹூ இறங்கியுள்ளார். அப்போது ரெயில் புறப்பட்டுவிட்டது. இதனால் ஓடும் ரெயிலில் அவர் ஏற முயன்றார். அப்போது சுஷாந்த் சாஹூ தவறி விழுந்து ரெயிலுக்கும், பிளாட்பாரத்துக்கும் இடையே சிக்கினார்.

    இதில் படுகாயமடைந்த அவர் உடல் துண்டிக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மங்களூரு-சென்னை ரெயில் நிறுத்தப்பட்டது. சுஷாந்த் சாஹூவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக காசர்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து அந்த ரெயில் புறப்பட்டது. காசர்கோடு-கும்ப்ளா ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்றபோது அந்த ரெயிலில் இருந்து ஒரு வாலிபர் விழுந்தார். இதனை அந்த பெட்டியில் பயணித்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் போலீசார் ரெயில்வே தண்டவாளத்தில் சோதனை செய்தனர். அப்போது காசர்கோடு ரெயில் நிலையம் அருகே அந்த வாலிபர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கண்ணூர் குத்து பரம்பு பகுதியை சேரந்த ரபி என்பவரிரன் மகன் ரனீம்(18) என்பது தெரிய வந்தது.

    அவர் மங்களூருவில் உள்ள என்நிஜூயரிங் கல்லுரியில் படித்து வந்திருக்கிறார். விடுமுறைக்கு ஊருக்கு வந்தபோது ஓடும் ரெயிலில் இருந்து விழுந்து இறந்துவிட்டார். அடுத்தடுத்து 2 பயணிகள் ரெயிலில் சிக்கி இறந்த சம்பவம காசர்கோட்டில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.

    • போலீசார் அங்கிருந்த சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.
    • மதுபானங்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே அமைந்துள்ளது குமரப்ப குடிப்பட்டி கிராமம். அடர்ந்த வனப்பகுதியை ஒட்டிய இங்கு தியாகராஜன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் போலி மதுபான ஆலை இயங்குவதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாவட்ட மதுவிலக்கு பிரிவு கூடுதல் துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையிலான போலீசார் அந்த வனப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு மதுபான ஆலை செயல்பட்டு வந்தது உறுதி செய்யப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மதுபானம் தயாரித்து, பாட்டில்களை அடைத்து விற்பனைக்கு கொண்டு சென்றதும் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்த சுமார் 3 ஆயிரத்து 500 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

    மேலும் மதுபானங்கள் தயாரிப்பதற்காக வைத்திருந்த மூலப்பொருட்களையும் கைப்பற்றிய போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் இதுதொடர்பாக போலியான மதுபான ஆலை நடத்தி வந்த சிங்கம்புணரியை சேர்ந்த ராமசாமி மனைவி மங்களம் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    • சிப்காட் விவகாரம், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.அரசு நடவடிக்கை எடுத்தது.
    • தி.மு.க.வின் சாதனை 33 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.50ஆயிரம் கோடிக்கு உயர்த்தி உள்ளது.

    ஸ்ரீபெரும்புதூர்:

    ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி கட்சியான த.மா.கா. வேட்பாளர் வேணுகோபாலை ஆதரித்து பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே அவர் பிரசாரத்தில் ஈடுபட்ட போது பேசியதாவது:-

    எனது தேர்தல் பிரசாரத்தை ஆன்மிக மகான் ஸ்ரீ ராமானுஜர் பிறந்த ஊரான ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தொடங்குகிறேன். மோடி ஆட்சியில் 40 லட்சம் கோடி தாய்மார்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது.

    பொருளாதாரத்தில் இந்தியா 11-வது இடத்தில் இருந்து 5-வது இடத்திற்கு உயர்ந்திருக்கிறது. பொருளாதாரத்தில் ஒரு நாடு உயர்ந்தால் தன் மக்கள் உயரமுடியும். அது மோடியால் மட்டும் தான் முடியும். இதுதான் பா.ஜனதா அரசின் சாதனை.

    ஆனால் தி.மு.க. ஆட்சியில் அவர்களது பொருளாதாரம் மட்டுமே உயர்த்து உள்ளது. டிஆர்.பாலு மற்றும் அவரது குடும்ப சொத்து மதிப்பு 350 மடங்கு உயர்த்து உள்ளது.

    சொத்துவரி உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவையே தி.மு.க. செய்த சாதனை. சிப்காட் விவகாரம், விவசாய நிலத்தை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் தி.மு.க.அரசு நடவடிக்கை எடுத்தது.

    பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என்ற வாக்குறுதியை தி.மு.க. நிறைவேற்றவில்லை. ஆனால் எந்தவித அறிவிப்பும் இன்றி பெட்ரோல், டீசல் விலையை பிரதமர் மோடி குறைத்து விட்டார்.

    இதே ஸ்ரீபெரும்புதூரில் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அந்த குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்ட பிறகு அவர்களிடம் தி.மு.க. புகைப்படம் எடுத்து கொண்டது. இது அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்கிறது.சமூக நீதி என்பது தி.மு.க.வில் பேச்சளவில் தான் உள்ளது.

    இந்தியாவில் வங்கி கடனை வாங்கிவிட்டு பலர் ஓடிவிட்டனர். மோடி ஆட்சிக்கு வந்த உடன் எல்லோரையும் சுளுக்கு எடுக்க ஆரம்பித்தோம். யார் எல்லாம் கடன் வாங்கினார்கள்? யார் எல்லாம் திருப்பி செலுத்தவில்லை? என கணக்கெடுத்து வரா கடனில் இருந்து ஒரு லட்சத்து 27 ஆயிரம் கோடி வசூல் செய்யப்பட்டு உள்ளது.

    இந்த 10ஆண்டில் மத்திய பா.ஜ.க. அரசு மூலம் தமிழகத்துக்கு ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதியாக வந்து உள்ளது. ஆனால் தி.மு.க.வின் சாதனை 33 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ.50ஆயிரம் கோடிக்கு உயர்த்தி உள்ளது.

    தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினருக்கு 1 சதவீதம் கூட வாக்களிக்க உங்களுக்கு மனம் வராது என்பது எனக்கு நன்றாக தெரிகிறது. சென்னை-பெங்களூரு அதிவிரைவு சாலைக்கு ரூ.11ஆயிரத்து 930கோடி ஒதுக்கீடு செய்து இந்த பகுதி பொருளாதார வளர்ச்சிக்கு வழிசெய்யப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.
    • காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    ஆலங்குளம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    இந்த தேர்தலில் வெற்றி என்பது ஒரு சாதாரண நிகழ்வல்ல. உங்கள் பிள்ளைகள் எங்களின் வெற்றி என்பது வரலாற்றிலே மாபெரும் புரட்சி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு நீங்கள் இந்த தேர்தலில் எங்களுக்கு வாக்கு செலுத்த வேண்டும்.

    ஒன்றிய அரசு மாநிலத்தின் மொத்த வருமானத்தையும் தன்னகத்தே வைத்துக் கொண்டு, மாநிலங்கள் மீது அதிகாரத்தை செலுத்த முயலுகின்றது. அதிகாரம் பரவலாக வேண்டும் என்பது தான் நம்முடைய நோக்கம்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தின் தன்னாட்சி என்பதுதான் நம்முடைய இலக்கு. இந்தியாவிற்கென தனிக்கட்சி தேவையில்லை. மாநிலக் கட்சிகளே போதும்.

    அப்படியென்றால் இந்தியாவை யார் ஆள்வது என்ற கேள்வி எழுகிறது. வெற்றி பெறும் மாநிலக் கட்சிகள் சுழற்சி முறையில் இந்தியாவை ஆள வேண்டும். அதுதான் மிகச்சிறந்த ஜனநாயகமாக இருக்க முடியும்.

    பேரிடர் காலங்களில் ஆடு, மாடு போன்றவற்றை இழந்து நிற்கும் நேரங்களில் நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது.

    இது மற்றவர்களுக்கு தேர்தல் களம், நமக்கு போர்க்களம். இந்த போர்க்களத்தில் அண்ணன், தம்பி, சித்தப்பா, பெரியப்பா, மாமன் என வேறுபாடு பார்க்க கூடாது. உடலோடு ஒட்டிப்பிறந்த அண்ணன், தம்பியாக இருந்தால் கூட லட்சியத்திற்காக வென்றால் வெட்டி வீசுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். பெற்ற தாய் தந்தையரே வந்தால் கூட எதிரிகள் தான்.

    காமராஜர், முத்துராமலிங்கத்தேவர், கக்கன், வ.உ.சி ஆகியோர் வழியில் வந்த நாம் தூய அரசியலை உருவாக்க நாம் தமிழருக்கு ஆதரவளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குளிச்சிபட்டியைச் சேர்ந்தவர் ராமுத்தாய் (வயது 72). இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். முதல் மகன் நடராஜன். கப்பலில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு மதுரை ஆத்திகுளம் குறிஞ்சி நகரில் உள்ளது.

    இந்த வீட்டில்தான் ராமுத்தாய் தங்கி இருந்தார். நடராஜன் அனுப்பிய ரூ.15 கோடியே 62 லட்சத்து 35 ஆயிரத்து 236 பணம் ராமுத்தாயின் சகோதரி மகன் பாலமுருகனின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டது. அதன் மூலம் மதுரை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சொத்துக்கள் வாங்கப்பட்டது.

    இந்த சொத்துக்களுக்கு பாலமுருகன் காப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்தார். மேலும் ராமுத்தாய் வசம் இருந்த நகை மற்றும் சொத்துக்களை பாலமுருகன் மற்றும் அவரது மனைவி சேர்ந்து வெற்றுத்தாளில் கையெழுத்து போடுமாறு மிரட்டி வந்துள்ளனர். இதனால் ராமுத்தாய் சொத்து ஆவணங்கள் அனைத்தையும் மதுரையில் உள்ள முகவரிக்கு மாற்றியுள்ளார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுரைக்கு வந்த பாலமுருகன் மற்றும் அவரது மனைவி ஜெயலட்சுமி ஆகியோர் ராமுத்தாயிடம் துப்பாக்கி முனையில் மிரட்டி கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் ரூ.1000 பவுன் தங்கம், வைர நகைகளை பறித்துக் கொண்டு ஓடி விட்டனர்.

    இது குறித்து ராமுத்தாய் தல்லாக்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் நிலக்கோட்டை போலீஸ் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இந்த வழக்கு மதுரை மாவட்ட குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டது. போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட பாலமுருகன் என்ற வைகை பாலன் ஓ.பி.எஸ். அணியின் திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள இவரது மனைவியை தேடி வருகின்றனர்.

    • மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள மாரனேரி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட அம்மாபட்டியைச் சேர்ந்தவர் பாலமுருகன், கட்டிட தொழிலாளி. இவரது மனைவி பாப்புக்குட்டி (வயது 41), பட்டாசு ஆலையில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர்களுக்கு ஐஸ்வர்யா (19), இந்துமதி (13) என்ற 2 மகள்களும், அருண்குமார் (10) என்ற மகனும் உள்ளனர். இதில் இந்துமதி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த சில நாட்களாக அவர் பள்ளிக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று பாலமுருகன் வேலைக்கு சென்று விட ஐஸ்வர்யா, அருண் குமாரும் வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டனர்.

    பள்ளிக்கு செல்லாமல் இந்துமதி மட்டும் வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பாப்புக்குட்டி கண்டித்துள்ளார். இதனால் இந்துமதி விரக்தி அடைந்துள்ளார்.

    சிறிது நேரத்திற்கு பின் பாப்புக்குட்டி வெளியே சென்று விட்டார். அப்போது வாழ்க்கையில் வெறுப்படைந்த இந்துமதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வெளியே சென்று விட்டு வீட்டுக்கு வந்த பாப்பு குட்டி மகள் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தான் கண்டித்ததால் மகள் விபரீத முடிவை எடுத்து விட்டதாக நினைத்து பாப்புக்குட்டி கலங்கினார். மகள் சாவுக்கு காரணமாகி விட்டோமே என நினைத்து மனம் வருந்திய பாப்புக்குட்டி தனது கணவருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது நான் இனிமேல் உயிருடன் இருக்க மாட்டேன் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்தார்.

    பின்னர் மகள் அருகிலேயே பாப்புக்குட்டியும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே மனைவி கூறியதை கேட்டு பதட்டம் அடைந்தார். மேலும் அக்கம்பக்கத்தில் வசிப்பவர்களுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்து மனைவியை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவர்கள் யாரும் செல்போனை எடுக்காததால் பாலமுருகன் அவசரம், அவசரமாக வீட்டிற்கு வந்தார்.

    அப்போது மகளும், மனைவியும் தூக்கு போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து மாரனேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தாய், மகளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் மகளும், தாயும் அடுத்தடுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×