search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை கூட்டம்"

    • கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
    • காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.

    கவுண்டம்பாளையம்:

    கோவையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.

    பகல் நேரங்களில் அனல் காற்று வீசுகிறது. சில நாட்களாக கோவையில் 100 டிகிரி செல்சியசை தாண்டி வெப்பநிலை பதிவாகி வருகிறது.

    கோவையில் நிலவும் கடும் வெயில் காரணமாக வனப்பகுதிகளிலும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் வனத்தில் உள்ள விலங்குகள், தண்ணீருக்காக வனத்தை விட்டு வெளியேறி வருகின்றன.

    வனத்தையொட்டிய கிராம பகுதிகளுக்குள் புகுந்து வரும் யானைகள், வீட்டின் முன்பு வைக்கப்பட்டுள்ள டிரம்களில் உள்ள தண்ணீரையும், அங்குள்ள உணவு பொருட்களை எடுத்து சாப்பிட்டு வருகிறது.

    வனவிலங்குகளின் தாகத்தை போக்குவதற்காக வனத்துறை சார்பில் வனத்தில் ஆங்காங்கே உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீரும் நிரப்பப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் தடாகம் வீரபாண்டிபுதூரை அடுத்த மூலக்காடு என்ற மலைகிராமத்தில் வசிக்கும் மக்கள் ஊரின் எல்லையில் வனவிலங்குகள் தாகத்திற்காக தண்ணீர் தொட்டி கட்டி வைத்துள்ளனர்.

    அந்த தொட்டிகளில் எப்போதும் தண்ணீரை ஊர் பொதுமக்கள் நிரப்பி வைத்துள்ளனர். வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகள் அந்த தொட்டியில் தண்ணீரை குடித்து விட்டு சென்று வருகின்றன.

    நேற்று மாலை குட்டிகளுடன் 10க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் வனத்தை விட்டு வெளியேறி மூலக்காடு கிராமத்திற்குள் புகுந்தன.

    அந்த யானைகள் ஊர் எல்லையில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியை பார்த்ததும் ஆனந்தத்துடன் அதனை நோக்கி ஓடி வந்தன. பின்னர் யானைகள் தண்ணீரை குடித்ததுடன், துதிக்கையால் தனது உடல் முழுவதும் பீய்ச்சி அடித்து கொண்டது.

    இந்த காட்சியை அந்த வழியாக சென்ற வாலிபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து, அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • காலை, மாலை என இரு நேரங்களிலும் யானைகள் கூட்டம் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன.
    • யானைகள் நடமாட்டத்தை காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் வனப்பகுதி தமிழக கர்நாடக வனப்பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது.

    கோடை காலங்களில் தண்ணீர், உணவு தேடி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அவ்வப்போது யானைகள் வருவது வழக்கம்.

    தற்போது கர்நாடக மாநில வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் அங்கு உள்ள யானைகள் கூட்டம் கூட்டமாக உணவு, தண்ணீரை தேடி கர்நாடக தமிழக எல்லைப் பகுதியான தேன்கனிக்கோட்டை, ஓசூர், சானமாவு பகுதியில் சுற்றித் திரிகின்றன.

    இந்த யானைகள் அந்த பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை தின்றும் கால்களால் மிதித்தும் அட்டகாசம் செய்து வந்தன.

    இந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் போக்கு காட்டி விட்டு யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து சுற்றி திரிகின்றன. இதில் 20க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதியில் நுழைந்தது. தற்போது இந்த யானை கூட்டம் ஒகேனக்கல் ஆலம்பாடிவனப்பகுதியில் முகாமிட்டுள்ளன.

    காலை, மாலை என இரு நேரங்களிலும் யானைகள் கூட்டம் ஒகேனக்கல்-அஞ்செட்டி சாலையை கடந்து செல்கின்றன.

    இந்த நிலையில் நேற்று மாலை 20-க்கும் மேற்பட்ட யானைகள் 5 குட்டிகளுடன் சாலையை கடந்தது. பின்னர் சாலையை கடந்து காவிரி ஆற்றின் கரைக்குச் சென்றது. பின்னர் குட்டிகளுடன் யானைகள் தண்ணீர் குடித்து உற்சாகமாக குளியல் போட்டது. அதன் பின்னர் யானைகள் கூட்டமாக மீண்டும் வனப்பகுதிக்கு திரும்பியது. இதனால் அஞ்செட்டி-ஒகேனக்கல் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    யானைகள் நடமாட்டத்தை காலை, மாலை நேரங்களில் வனத்துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். யானைகள் ஊருக்குள் மற்றும் விவசாய நிலங்களில் புகுவதை தடுக்க வனப் பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.

    யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என்றனர்.

    • திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன.
    • ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பாபவிநாசம், ஸ்ரீகந்தம் வனத்தில் திடீரென 10 யானைகள் வனப்பகுதியில் இருந்து வந்தன.

    வனத்தை பாதுகாக்க அமைக்கப்பட்ட தடுப்பு வேலியையும், சந்தன மரங்களையும் பிடுங்கி எரிந்து யானைகள் நாசம் செய்தன.

    ஸ்ரீகண்டம் வனப்பகுதியில் ஏற்கனவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருப்பதி தேவஸ்தான பாதுகாவலர்கள் மற்றும் வனத்துறையினர் உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஏராளமான வனத்துறையினர் வந்து யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். அப்போது அங்குள்ள குளத்தில் யானைகள் தண்ணீர் குடித்தன.

    திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் யானைகள் உலா வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் யானைகள் தண்ணீருக்காக அருகில் உள்ள ஸ்ரீகண்டம்வனம் மற்றும் பார்வேட் மண்டப பகுதிகளுக்குள் புகுந்தன. ஸ்ரீவாரி படால பாதை மற்றும் தர்மகிரி வேதப்பள்ளி பகுதியில் யானை நடமாட்டம் உள்ளது. கடந்த ஆண்டு முதல் யானைகள் ஒன்றாக சாலையை கடந்து பக்தர்களை பயமுறுத்தியது.

    சமீபத்தில், கோடை காலம் தொடங்கும் முன், திருப்பதி மலை வனப்பகுதியில் யானைகள் கூட்டம், ஸ்ரீகண்டம் வனத்துக்குள் புகுந்து வேலியை நாசம் செய்ததால், வனத்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர்.

    மேலும் அந்த பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது.
    • மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றது. யானைகள் சில சமயம் வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தற்போது வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுவதால் உணவு, தண்ணீர் தேடி யானைகள் கூட்டம் கூட்டமாக வனச்சாலையில் உலா வருகிறது. இந்நிலையில் ஆசனூர் அடுத்த மாவள்ளம் பிரிவு அருகே இன்று காலை அரசு பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கூட்டம் திடீரென பஸ்சை வழிமறித்து சாலையில் நடுவில் நின்றது.

    இதனால் பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சுமார் 15 நிமிடம் சாலையில் நின்ற யானைகள் கூட்டம் பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னர் அரசு பஸ் அங்கிருந்து கிளம்பி சென்றது. யானை கூட்டத்தை பஸ்சில் இருந்த பயணிகள் தங்களது செல்போனில் படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

    • யானைகள் தேயிலை தோட்டங்களில் உலா வந்து கொண்டிருந்தது.
    • கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலுார் பகுதியையொட்டி வனப்பகுதிகளில் வனவிலங்குகள் அதிகமாக வாழ்ந்து வருகின்றன.

    இந்த வனவிலங்குகள் அவ்வப்போது வனத்தை விட்டு வெளியேறி, ஊருக்குள் புகுந்து பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. சில நேரங்களில் வீடுகளை சேதப்படுத்துவதுடன், மனிதர்களை தாக்குவதையும் வாடிக்கையாக வைத்துள்ளது. இந்நிலையில் நாடு காணி, பொன்னுார் மற்றும் பொன்வயல் பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளன.

    இந்த யானைகள் அங்கிருந்து, பாண்டியார் டான்டீ குடியிருப்பு அருகே உள்ள தேயிலை தோட்டங்களில் நேற்று உலா வந்து கொண்டிருந்தது. யானைகள் உலா வருவதை பார்த்த சுற்றுலா பயணிகள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து பொது மக்கள் கூறும்போது, கடந்த சில நாட்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் நடமாட்டத்தால் வெளியில் வரவே அச்சமாக உள்ளது. எனவே இங்கு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு யானைகள் ஊருக்குள் வராதவாறு கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • ஒற்றை யானை மட்டும் கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து உள்ளது.
    • யானை கூட்டத்தை விரட்டுவதில் வனத்துறையினர் மெத்தனம் காட்டுகின்றனர்

    வடவள்ளி,

    கோவை நவாவூர் - சோமையம்பாளையம் செல்லும் வழியில் சுல்தானியபுரம் ரேஷன் கடை உள்ளது.

    வனப்பகுதியை ஒட்டி இருக்கும் இந்த கடைக்கு இன்று அதிகாலை 5 யானைகள் வந்தன. கடையில் இருந்த அரிசியால் ஈர்க்கப்பட்ட அந்த யானைகள் கடையின் ஷட்டரை பலமாக தாக்கி உடைத்தன. இதில் ஷட்டர் உடைந்தது.

    பின்னர் உள்ளே சென்ற யானைகள் அங்கிருந்த 10 மூட்டை அரிசியை சிதறடித்து தின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதே கடையில் யானைகள் புகுந்து அரிசியை ருசித்து சென்றிருந்தது. ருசி கண்ட பூனை போல் மீண்டும் யானைகள் அதே கடைக்கு வந்து அரிசியை தின்றுள்ளது.

    கடந்து 10 நாட்களாக ஐ.ஓ.பி காலனி மருதமலை அடிவாரம் கல்வீரம்பாளையம், பாரதியார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதியில் யானைக்கூட்டம் இரவு நேரங்களில் சுற்றி திரிந்து வருகிறது. இதில் ஒற்றை யானை மட்டும் கூட்டத்தில் இருந்து தனியாக பிரிந்து உள்ளது.

    இன்று அதிகாலை அந்த யானை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மாணவர்கள் தங்கும் விடுதியை உடைத்து அங்கே ஸ்டோர் ரூமில் இருந்த உளுந்தம் பருப்பை ருசித்து சாப்பிட்டது. பின்னர் அங்கிருந்து நடையை கட்டியது. யானை கூட்டத்தை விரட்டுவதில் வனத்துறையினர் மெத்தனம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் கூறி உள்ளனர். யானைகள் செய்து வரும் அட்டகாசத்தால் பொது மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    • 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் ‘செல்பி’ எடுத்து கொண்டிருந்தனர்.
    • அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன.

    உத்தர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் கெரி மாவட்டத்தில் துத்வா புலிகள் சரணாலய பகுதி வழியாக 3 பேர் சென்றுள்ளனர். நேபாளத்திற்கு செல்லும் வழி பாதையான இப்பகுதி வழியாக வன விலங்குகள் கூட்டமாக செல்வது வழக்கம். இந்நிலையில் இவ்வழியாக சென்ற 3 பேர் சாலையோரம் நின்று தங்களது செல்போனில் 'செல்பி' எடுத்து கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக கூட்டமாக சென்ற யானைகள் 3 பேரையும் விரட்டி உள்ளன. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் 3 பேர் தலை தெறிக்க ஓடி உள்ளனர். இதை அந்த வழியாக சென்ற ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்த பகுதியில் யானைகள் கூட்டமாக செல்லும் போது அவைகளுக்கு இடையூறு விளைவிக்க கூடாது என்று வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து இணைய பயனர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    • மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.
    • குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஓபி காலனியை சேர்ந்த குமார் என்பவர் யானை தாக்கி பலியானார்.

    யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால், பக்தர்கள் மருதமலைக்கு செல்லும் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை.

    மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று, கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.

    அப்போது குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன. இதனை அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை.
    • வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு வந்து செல்கிறது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது வரட்டுபள்ளம் அணை. இந்த அணையில் மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு வனவிலங்குகளுக்கு கோடை காலத்தில் தாகம் தீர்க்கவும், விவசாய நிலங்களின் பாசனத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    தற்போது அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் முடிந்தும் ஈரோடு மாவட்டத்தில் வெயில் பொதுமக்களை மட்டும்இன்றி வனவிலங்குகளையும் வாட்டி வதைத்து வருகிறது.

    தற்போது கோடை மழை பெய்து ஒரு சில இடங்களில் வனப்பகுதிகளில் உள்ள குட்டைகளில் தண்ணீர் தேங்கி நின்றாலும் வன விலங்குகளுக்கு தேவையான தண்ணீர் இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது.

    இதனால் வனவிலங்குகள் தண்ணீரைத் தேடி வனப்பகுதியை ஒட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தோட்டங்களுக்கு வந்து செல்கிறது. இதேபோல் அந்தியூர் அடுத்த வரட்டுபள்ளம் அணையில் உள்ள தண்ணீரை குடிக்க அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள், மான்கள், செந்நாய், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் கூட்டம் கூட்டமாக வந்து தண்ணீரை குடித்து செல்கின்றது.

    இந்த நிலையில் நேற்று மாலை வரட்டுபள்ளம் அணையில் தண்ணீர் தேடி வந்த யானை கூட்டம் தண்ணீரை குடித்துவிட்டு அந்தியூர் அடுத்த பர்கூர்-மைசூர் நெடுஞ்சாலையின் குறுக்கே கூட்டமாக வந்தது. அதனை அந்தப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும். கார்களில் வருபவர்களும் வாகனத்தை ஓரமாக நிறுத்தி யானையை செல்போனில் படம் பிடித்து மகிழ்ந்தனர். யானை கூட்டம் யாரையும் தொந்தரவு செய்யாமல் அப்படியே சாலையை கடந்து அடர்ந்த வனப் பகுதிக்குள் சென்றது.

    • நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வலியுறுத்தல்
    • மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்

    குடியாத்தம்:

    குடியாத்தம், அடுத்த வி.டி.பாளையம், டி.பி. பாளையம் கிராமங்கள் ஆந்திர மாநில வனப்பகுதியை ஒட்டியபடி உள்ளது.கடந்த சில நாட்களாக யானைகள் விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை தொடர்ந்து சேதப்படுத்தி வந்தது.

    இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 5 யானைகள் கொண்ட கூட்டம் வி.டி.பாளையம் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே முகாமிட்டு பிளிறியபடி இருந்தது.

    இதனால் அச்சமடைந்த விவசாயிகள் வெளியில் வர பயந்து கொண்டு வீடுகளுக்குள்ளேயே தஞ்சம் அடைந்தனர்.அந்த யானைகள் பயிர்களை சேதப்படுத்தியது.

    விவசாயி பாபுவின் ஏராளமான மாமரங்கள், விவசாயி கோவிந்தசாமியின் கேழ்வரகு பயிர்களை நாசம் செய்தது.

    பல ஆயிரம் மதிப்பிலான பயிர்கள் சேதம் அடைந்தன. இது குறித்து உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த வனத்துறையினர் கிராம மக்கள் விவசாயிகள் துணையுடன் யானைகளை பட்டாசுகள் வெடித்தும் மேளங்கள் அடித்தும் அடர்ந்த ஆந்திர காட்டுப் பகுதிக்குள் விரட்டி விட்டனர்.

    அடிக்கடி இப்பகுதிக்குள் மாலை நேரங்களில் யானைகள் கூட்டமாக வருவதால் கிராம மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். மாலை நேரத்திலேயே கிராம மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கியுள்ளனர்.

    விவசாயிகள் கூறுகையில் பல மாதங்களாக யானைகள் தொல்லை இல்லாமல் இருந்தது. ஆந்திர மாநில வனப்பகுதியில் யானைகள் கூட்டம் முகாமிட்டு இரவு நேரங்களில் வனப்பகுதியை ஒட்டியபடி உள்ள தமிழக பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து தொடர்ந்து சேதத்தை ஏற்படுத்துகிறது.

    யானைகள் மீண்டும் விளை நிலங்களுக்குள் புகுந்த சம்பவங்களால் விவசாயிகள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    யானைகளை அடர்ந்த ஆந்திர வனப்பகுதிக்குள் விரட்டப்படாவிட்டால் இப்பகுதி விவசாயிகள் அரசியல் கட்சிகள் துணையுடன் போராட்டத்தில் ஈடுபடவும், உயர் அதிகாரிகளிடம் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன.
    • தேயிலை தோட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் யானை, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் இங்கு சுற்றி திரிகின்றன.

    கல்லிடைக்குறிச்சி:

    கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி உள்ளிட்ட தேயிலை தோட்ட பகுதிகள் உள்ளன. நெல்லை மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா தலமாக இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    மேலும் இந்த தேயிலை தோட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் உள்ளதால் யானை, கரடி, மிளா உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் அவ்வப்போது இங்கு சுற்றி திரிகின்றன.

    இந்த நிலையில் குட்டியுடன் கூடிய சுமார் 10-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாக மாஞ்சோலை, ஊத்து எஸ்டேட் தேயிலை தோட்ட பகுதியில் சுற்றி திரிந்துள்ளன. இதனை அந்த வழியாக சென்றவர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.
    • யானைக் கூட்டத்தை அங்கிருந்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    தேன்கனிக்கோட்டை, 

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் வனப்பகுதியில் 10-க்கு மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன. இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் கொத்தூர், நொகனூர், லக்க சந்திரம், மாரசந்திரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நுழைந்து விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்வது வாடிக்கையாக உள்ளது.

    கடந்த 3 நாட்களுக்கு முன்பு மரக்கட்டா கிராமத்தில் யானை தாக்கியதில் விவசாயி வெங்கடேஷ் என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்று கொத்தூர் கிராமத்துக்குள் 5 யானைகள் புகுந்தன. அதனைக் கண்டு காலைக்கடன் கழிப்பதற்காக வனப்பகுதி பக்கமாக சென்றவர்கள் யானை கூட்டத்தை பார்த்து ஓட்டம் பிடித்தனர்.

    ஆனால் யானைகள் குடியிருப்பு பகுதியில் ஒய்யாரமாக நடந்து சென்றன . இதனால் கிராம மக்கள் அலறியடுத்து ஓட்டம் பிடித்து வீடுகளில் முடங்கினர். அப்போது சில இளைஞர்கள் ஒன்றிணைந்து யானைகளை சுற்றி வளைத்து அங்குள்ள தைல தோப்பில் சிறை பிடித்தனர்.

    இது குறித்து தகவல் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை வனசரகர் முருகேசன் மற்றும் வனவர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் பட்டாசு வெடித்தும், தாரை, தப்பட்டை அடித்தும் யானைக் கூட்டத்தை அங்கிருந்து நொகனூர் வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

    பகல் நேரத்தில் காட்டுயானைகள் கூட்டம் ஊருக்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுள்ளது. இந்த யானைகளை ஜவளகிரி வன பகுதிக்கு விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனால் வனத்துறை ஊழியர்கள் அப்பகுதியில் முகாமிட்டு அந்த யானைகளை ஜவளகிரி வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×