search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடியிருப்பு அருகே முகாமிட்ட யானை கூட்டம்- சாலையில் விளையாடி மகிழ்ந்த குட்டி யானைகள்
    X

    குடியிருப்பு அருகே முகாமிட்ட யானை கூட்டம்- சாலையில் விளையாடி மகிழ்ந்த குட்டி யானைகள்

    • மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.
    • குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன.

    வடவள்ளி:

    கோவை மாவட்டம் ஆனைகட்டி, தடாகம், மாங்கரை, பெரியநாயக்கன் பாளையம், மருதமலை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக யானைகள் கூட்டம் கூட்டமாக நடமாடி வருகிறது.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐஓபி காலனியை சேர்ந்த குமார் என்பவர் யானை தாக்கி பலியானார்.

    யானைகள் நடமாட்டம் அதிகரித்ததால், பக்தர்கள் மருதமலைக்கு செல்லும் மலைப் பாதையில் நடந்து செல்ல மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லை.

    மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் நபர்களுக்கு காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டும் தான் அனுமதி அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் யானை நடமாடும் பகுதிகளுக்கு சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று, கோவை மருதமலை சாலையில் உள்ள ஐ.ஓ.பி காலனி பகுதியில் உள்ள சாலையோரம் குட்டிகளுடன் யானைகள் கூட்டமாக நின்றிருந்தது.

    அப்போது குட்டி யானைகள் சாலையின் நடுவே நின்று ஒன்றுக்கொன்று துதிக்கையால் தழுவி விளையாடி கொண்டிருந்தன. இதனை அந்த பகுதிகளில் உள்ளவர்கள் வீட்டில் இருந்தபடி செல்போனில் வீடியோ எடுத்தனர்.

    தற்போது இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×