என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தாளவாடி அருகே வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து யானை கூட்டங்கள் அட்டகாசம்
- வாழைக் கன்றுகளையும் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது.
- தோட்டத்துக்குள் புகுந்த யானைகளால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன.
தாளவாடி:
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. குறிப்பாக தாளவாடி, ஆசனூர், பர்கூர் போன்ற வனப்பகுதிகளில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.
சமீப காலமாக உணவு, தண்ணீரை தேடி யானை கூட்டங்கள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது. இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் சாமிநான் (வயது 41) என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் நேற்று இரவு 12 மணியளவில் புகுந்த காட்டு 2 யானைகள் வாழைகளை நாசம் செய்தது.
இதைப்போல் வாழைக் கன்றுகளையும் தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதையடுத்து விவசாயி ராமசாமி மற்ற விவசாயிகள் உதவியுடன் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் போராடி பட்டாசுகளை வெடித்து யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.
எனினும் ராமசாமி தோட்டத்துக்குள் புகுந்த யானைகளால் 200-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதம் அடைந்துள்ளன. இதே போல் கடந்த வாரம் தோட்டத்தில் புகுந்த யானை வாழையை சேதாரம் செய்தது. தொடர்ந்து வாழையை யானைகள் தோட்டத்திற்குள் புகுந்து சேதாரம் செய்து வருவதால் விவசாயி வேதனை அடைந்துள்ளனர்.
சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், யானையை விரட்ட வனத்துறை ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






