

பொள்ளாச்சி:
பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. இங்கு புலி, மான், வரையாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெயில் வாட்டி வதைப்பதால், ஆழியார் அணையில் நீர்மட்டம் வறண்டு பாறைகள் தென்படுகின்றன.
இதனால் நீலகிரி வனத்தில் உள்ள காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக தற்போது வனத்தில் இருந்து வெளியேறி, ஆழியாரின் வறண்ட அணைப்பகுதியில் சுற்றிதிரிகின்றன.
ஆழியார்-வால்பாறை சாலையில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் முகாமிட்டு உள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக பொதுமக்களை காட்டு யானைகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. மேலும் ஆழியார் பகுதியில் உலா வரும் யானைகள் கூட்டத்தை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.
இதற்கிடையே வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
காட்டு யானைகள் கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும். வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம். மேலும் வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்கவோ, வனவிலங்குகளை கண்டதும் சாலையில் வாகனங்களை நிறுத்தவோ கூடாது. மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.