search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "China"

    • 2011ல் சுனாமி தாக்குதலால்புகுஷிமா அணு உலை நிலையத்தில் கடல்நீர் புகுந்தது
    • ஜப்பானை மையமாக கொண்ட SK-II, சீனாவில் விற்பனை செய்து வருகிறது

    2020 கோவிட் பெருந்தொற்று காலத்தில் மந்தமடைய தொடங்கிய உலக பொருளாதாரம், சில வருடங்கள் சீரடைந்து, மீண்டும் நலிவடைய தொடங்கி விட்டது.

    உலக வர்த்தகத்தில் பெரும் பங்கு வகிக்கும் சீன பொருளாதாரமும் இதற்கு தப்பவில்லை. விலைவாசி அதிகரிப்பால் அந்நாட்டில் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்வதையும், தம்பதிகள் குழந்தைகள் பெற்று கொள்வதையும் தள்ளி போடுகினறனர் எனும் தகவல்கள் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    2011ல் பெரும் சுனாமி தாக்குதலால் ஜப்பானில் புகுஷிமா அணு உலை நிலையம் பாதிப்புக்குள்ளானது.

    இதனையடுத்து அங்கிருந்து கதிரியக்க பாதிப்பிற்கு உள்ளான நீரை, கடலில் வெளியேற்ற ஜப்பான் முடிவு செய்தது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஐ.நா. சபையின் பாதுகாப்பு வழிகாட்டுதலின்படி நீரை வெளியேற்றுவதாக ஜப்பான் கூறியது.


    2023 ஆகஸ்ட் மாதம், சீனாவின் எதிர்ப்பை புறக்கணித்து ஜப்பான் நீரை கடலில் வெளியேற்றியது.

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சீனா, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கடல் உணவு வகைகளுக்கு தடை விதித்தது.

    ஜப்பானிலிருந்து இறக்குமதியாகும் பல பொருட்களை சீன மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பயன்படுத்த மறுக்கின்றனர்.

    உலகின் முன்னணி பன்னாட்டு நுகர்வோர் பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனம் அமெரிக்காவின் பிராக்டர் அண்ட் கேம்பிள் (Procter & Gamble).

    ஜப்பானை மையமாக கொண்டு இயங்கும், அதன் துணை நிறுவனம், எஸ்கே-II (SK-II).

    எஸ்கே-II, சீனா உட்பட பல உலக நாடுகளில், உயர்ரக தோல் பராமரிப்பு பொருட்கள் உற்பத்தி மற்றும் விற்பனை செய்கிறது.

    இந்நிலையில், சீனாவில் இதன் விற்பனை கடுமையாக சரிந்து விட்டது தெரிய வந்துள்ளது.

    கடந்த 2023 அக்டோபர் மாதத்திலிருந்து டிசம்பர் வரையிலான விற்பனை 34 சதவீதம் சரிந்து விட்டது.

    பிராக்டர் அண்ட் கேம்பிள் நிறுவனத்தின் வரும் ஆண்டிற்கான நிகர லாபம் குறைவாகவே இருக்கும் என தெரிகின்றது.

    வரும் மாதங்களில் "ஜப்பான் புறக்கணிப்பு" தொடர்ந்தால், உலக பொருளாதாரம் மேலும் மந்தமடையலாம் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

    • பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
    • 12,426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    சீனா மற்றும் கிர்கிஸ்தான் எல்லை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது. சீனாவின் ஜின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் பூமியில் இருந்து 13 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டது.

    இந்த நிலநடுக்கத்தால் அங்கு பல வீடுகள் சேதமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமுற்றனர். நிலநடுக்கம் காரணமாக 12 ஆயிரத்து 426 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

    முன்னதாக கசகஸ்தான் சுகாதார துறை வெளியிட்ட தகவல்களில் பலத்த காயமுற்ற 44 பேர் உதவி கோரியதாக தெரிவித்தது. இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள், வீடியோக்களில் மக்கள் அச்சத்தில் அலறிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

    நிலநடுக்கம் காரணமாக சீனாவில் 47 கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மேலும் 78 கட்டடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. கட்டடங்கள் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளும் துரிதமாக நடைபெற்று வருகிறது.

    • தைவானின் சுதந்திர உரிமையையும், தன்னாட்சியையும் சீனா ஏற்க மறுக்கிறது
    • தைவான் மக்கள் ஜனநாயகத்தை நம்புவதை உறுதி படுத்தினர் என அமெரிக்கா பாராட்டியது

    கிழக்கு ஆசியாவில், வடமேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள தீவு நாடு, தைவான் (Taiwan). இதன் தலைநகரம் தைபே (Taipei).

    தன்னை முழு சுதந்திர நாடாக தைவான் பிரகடனப்படுத்தி கொண்டாலும், சீனா அதனை ஏற்க மறுத்து, தனது ஆதிக்கத்திற்கு உட்பட்ட நாடாகவே கருதி அந்நாட்டை ஆக்கிரமிக்க வான்வழியாகவும், கடல் வழியாகவும் பல ராணுவ அத்துமீறல் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    தைவானின் தன்னாட்சி உரிமைக்கு அமெரிக்கா ஆதரவாக உள்ளது. ஆனால், அமெரிக்காவின் தைவான் ஆதரவு நிலைப்பாட்டை சீனா விரும்பவில்லை.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையே சச்சரவு நிலவி வருகிறது.

    இது குறித்து அமெரிக்காவில் சில நாட்களுக்கு முன் அமெரிக்க-சீன ராணுவ உயர் அதிகாரிகளின் பேச்சு வார்த்தையின் போது, "தைவான் விஷயத்தில் சமரசமே இல்லை" என சீனா திட்டவட்டமாக தெரிவித்தது.

    இந்நிலையில், 2024 ஜனவரி 13 அன்று அந்நாட்டிற்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.

    தேர்தல் முடிவுகளில், ஜனநாயக வளர்ச்சி கட்சியை (PDP) சேர்ந்த லாய் சிங்-டெ (Lai Ching-te), குவோமின்டாங் (Kuomintang) கட்சியை சேர்ந்த ஹவ் யூ-ஹி (Hou Yu-ih) பெற்ற வாக்குகளை விட 9,00,000 வாக்குகள் அதிகம் பெற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    லாய் வெற்றி பெற்றதற்கு தைவான் மக்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா நேற்று அறிக்கை வெளியிட்டது.

    இதில், "தங்கள் நாட்டின் வலிமையான ஜனநாயகத்தின் மீதும், தேர்தல் வழிமுறைகளின் மீதும் தைவான் நாட்டு மக்கள் வைத்திருந்த அபாரமான நம்பிக்கையை மீண்டும் அவர்கள் வெளிப்படுத்தி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது" என தெரிவித்தது.

    ஆனால், இதனை விரும்பாத சீனா கண்டனம் வெளியிட்டுள்ளது.

    இது குறித்து சீன செய்தி தொடர்பாளர், "தைவானின் சுதந்திரம் எனும் பெயரில் அங்கு போராடும் பிரிவினை அமைப்புகளுக்கு அமெரிக்காவின் பாராட்டு, தவறான செய்தியை அளிக்கும். சீனா இதனை வன்மையாக கண்டிப்பதுடன், எதிர்க்கவும் செய்கிறது. அமெரிக்க தரப்பிற்கு எங்கள் எதிர்ப்பு குறித்து தெரிவித்து விட்டோம். வாஷிங்டனின் இந்த அறிக்கை, ஒரே சீனா எனும் எங்களின் கோட்பாட்டிற்கு எதிரானது. அதிகாரபூர்வமாக தைவானுடன் அமெரிக்கா உறவு கொண்டாடுவதை நிறுத்துமாறு சீனா வலியுறுத்துகிறது" என கூறினார்.

    • சுரங்கத்தில் மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
    • 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்.

    மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 6 பேர் மாயமாகியுள்ளனர்.

    நிலக்கரி மற்றும் எரிவாயு வெடித்ததால் விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்து நேற்று பிற்பகல் 2.55 மணியளவில் நிகழ்ந்துள்ளது. 

    விபத்து நடந்தபோது மொத்தம் 425 பேர் நிலத்தடியில் வேலை செய்து கொண்டிருந்தனர். அவர்களில் 380 பேர் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் சின்ஹுவா தெரிவித்துள்ளது.

    இன்னும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், நிலக்கரி சுரங்கத்திற்கு பொறுப்பானவர்கள் பொது பாதுகாப்பு அதிகாரிகளால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

    சீனாவில் சுரங்க விபத்துகள் சகஜம் என்றாலும், சமீப ஆண்டுகளில் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது.

    • மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார்.
    • சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ள மாலத்தீவு, சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    பீஜிங்:

    மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ், சீனாவுக்கு 5 நாள் பயணமாக சென்று உள்ளார். அவர் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

    இதில் சீனா-மாலத்தீவு இடையே சுற்றுலா, பேரிடர் மேலாண்மை, கடல்சார் பொருளாதாரம், வர்த்தக வழித்தடம் உள்பட பல்வேறு துறைகளில் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

    இது தொடர்பாக மாலத்தீவு அதிபர் அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் மாலத்தீவு அரசுக்கும், சீன அரசுக்கும் இடையே 20 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இப்போது இரு நாட்டு அதிபர் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தானது என்று தெரிவித்துள்ளது.

    மாலத்தீவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற முகமது மூயிஸ் சீன ஆதரவாளராக கருதப்படுகிறார். அவர் பதவி ஏற்றதும் மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    இதற்கிடையே இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவுக்கு சென்றதை மாலத்தீவு மந்திரிகள் 3 பேர் விமர்சனம் செய்தனர். இதையடுத்து அவர்களை சஸ்பெண்டு செய்து மாலத்தீவு அரசு உத்தரவிட்டது.

    இவ்விவகாரத்தால் இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில் மாலத்தீவு அதிபர் சீனாவுக்கு சென்று அந்த நாட்டுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளார். மேலும் மாலத்தீவுக்கு சீனாவில் இருந்து சுற்றுலாவாக அதிகம் பேர் வர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

    சுற்றுலாவை பெரிதும் நம்பி உள்ள மாலத்தீவு, சீனாவின் பக்கம் சாய்ந்து வருவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

    மாலத்தீவு சுற்றுலா செல்வதில் இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். தற்போது பிரதமர் மோடியை விமர்சித்ததால் மாலத்தீவு பயணத்தை இந்தியர்கள் பலர் ரத்து செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரதமருக்கு எதிரான கருத்துக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு.
    • மந்திரிகள் மூவரை இடைநீக்கம் செய்வதாக மாலத்தீவு தெரிவித்தது.

    பிரதமர் மோடிக்கு எதிராக மாலத்தீவு மந்திரிகள் அவதூறு கருத்துக்களை தெரிவித்த சம்பவம் இந்தியா மற்றும் மாலத்தீவு இடையிலான உறவில் கசப்பான பக்கங்களாக பதிவாகி உள்ளன. பிரதமர் மோடிக்கு எதிரான கருத்துக்கு இந்தியா முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த மாலத்தீவு மந்திரிகள் மூவரை இடைநீக்கம் செய்வதாக மாலத்தீவு தெரிவித்தது.

    இதனிடையே மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஐந்து நாட்கள் பயணமாக சீனாவுக்கு சென்றிருக்கிறார். இந்த பயணத்தின் போது, மாலத்தீவு மற்றும் சீனா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுப்பயணத்தின் இரண்டாவது நாளில் அதிபர் முய்சு சீனாவின் ஃபுஜியான் மாகாணத்தில் உள்ள மாலத்தீவு வர்த்தக மன்றத்தில் உரையாற்றினார்.

     


    அப்போது பேசிய அவர், "மாலத்தீவுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகளை அனுப்ப சீனா முயற்சி எடுக்க வேண்டும். மாலத்தீவின் வளர்ச்சியில் மிக நெருங்கிய நட்பு நாடாக சீனா விளங்குகிறது."

    "மாலத்தீவு வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு திட்டங்களை சீனா தொடங்கியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்கு முன் எங்களின் முதன்மை வணிக மையமாக சீனா இருந்தது. இதே நிலை மீண்டும் உருவாக வேண்டும் என விரும்புகிறேன்," என்று தெரிவித்தார். 

    • இந்திய திரை மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் விடுமுறையை கழிக்க அங்கு சென்றனர்
    • சீன பயணத்தில் பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது

    தெற்கு ஆசியாவில், இந்திய கடலில் உள்ள தீவு நாடு, மாலத்தீவு (Maldives). சொகுசு ஓட்டல்களும் சுற்றுலா விடுதிகளும் நிறைந்த சுமார் 1,192 சிறு தீவுகள் இங்குள்ளன. இந்நாட்டின் வருவாயில் பெரும்பகுதி இந்திய சுற்றுலா பயணிகளால் கிடைக்கிறது.

    இந்திய கிரிக்கெட் மற்றும் திரை பிரபலங்கள் விடுமுறையை கழிக்க, அங்கு சென்று இயற்கை காட்சிகளை படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிடுவது வழக்கம்.

    உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து சுற்றுலா பயணிகளும், தேனிலவு கொண்டாடுவோர்களும் மாலத்தீவிற்கு குவிகின்றனர்.

    அரசியல் ரீதியாக இந்திய-மாலத்தீவு உறவு நீண்ட காலமாக சுமூகமாக இருந்தது.

    கடந்த 2023ல், அங்கு நடந்த தேர்தலில் அப்போதய அதிபர் இப்ராஹிம் மொஹமத் தோல்வியடைந்து, எதிர்கட்சியை சேர்ந்த முகமத் முய்சு அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    தற்போது 45 வயதாகும் முய்சு, சீன நட்புறவை விரும்புபவர். பதவியேற்றதும் மாலத்தீவில் நிலைநிறுத்தப்பட்டிருந்த இந்திய ராணுவத்தின் சிறு குழுவை அங்கிருந்து வெளியேற உத்தரவிட்டார்.

    சில தினங்களுக்கு முன், இந்திய பிரதமர் நரேந்திர மோடி லட்சத்தீவிற்கு சென்று அங்குள்ள இயற்கை காட்சிகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு அங்கு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் கருத்து வெளியிட்டார். இப்பதிவுகளுக்கு எதிராக மாலத்தீவின் 3 அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய விமர்சனங்களை எழுப்பியிருந்தனர்.

    இந்தியா முழுவதும் இதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தொடர்ந்து அந்த மூவரையும் முய்சு இடைநீக்கம் செய்ய வேண்டி வந்தது.

    இந்நிலையில் நேற்று, அதிபர் முய்சு, தனது மனைவி சஜிதா மொஹமத் உடன் சீனாவிற்கு 5-நாள் அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது.

    இந்திய உறவிலிருந்து விலக்கி, மாலத்தீவை தனது மறைமுக கட்டுப்பாட்டில் வைத்து கொள்ள விரும்பும் சீனாவின் முயற்சியாக இவையனத்தும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.

    • ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.
    • புத்தாண்டடை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை.

    உலகிலேயே முதலில் பசிபிக் கடலில் உள்ள கிறிஸ்துமஸ் தீவு என்ற கிரிபேட்டியில் இந்திய நேரப்படி இன்று மதியம் 3.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    கிரிபேட்டியை தொடர்ந்து முதலாவது நாடாக நியூசிலாந்தில் 2024வது ஆண்டில் ஆங்கில புத்தாண்டு இந்திய நேரப்படி சரியாக 4.30 மணிக்கு பிறந்தது.

    கிரிபேட்டி, நியூசிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    வாண வேடிக்கையுடன் ஆஸ்திரேலிய மக்கள் புத்தாண்டை வரவேற்று, பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடினர்.

    இந்நிலையில், சீனா, வட மற்றும தென் கொரியாவில் இந்திய நேரப்படி சரியாக 8.30 மணிக்கு புத்தாண்டு பிறந்தது.

    புத்தாண்டடை முன்னிட்டு சீன அதிபர் ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை நிகழ்த்தினார்.

    ஜி ஜின் பிங் தனது உரையில், " பிரதமர் தைவானுடன் மீண்டும் ஒன்றிணைவது தவிர்க்க முடியாதது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த ஏப்ரல் மாதம் 142.86 கோடி மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா முதலிடம் பிடித்தது.
    • சீனா 142.57 கோடி என்ற எண்ணிக்கையுடன் 2-வது இடத்தையும் பிடித்தது.

    உலக நாடுகளின் மக்கள் தொகை குறித்து ஐ.நா.சபை அவ்வப்போது ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிடும். மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதலிடம் பிடித்திருப்பதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது.


    கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா உலக மக்கள்தொகை எண்ணிக்கையில் சீனாவை தாண்டி முதலிடம் பிடித்தது. அதாவது, 142.86 கோடி மக்கள்தொகை கொண்டு இந்தியா இதில் முதலிடமும், சீனா 142.57 கோடி என்ற எண்ணிக்கையுடன் 2-வது இடத்தையும் பிடித்தன.

    • இந்தியாவில் நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என அறிவிப்பு.
    • சுகாதாரத் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவிறுத்தியுள்ளது.

    சீனாவில் சில வாரங்களாக குழந்தைகள் இடையே சுவாச பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் எதிரொலியால் மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த ஞாயிற்று கிழமை அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியது.

    அதில், இந்தியாவில் நிலைமை ஆபத்து ஏற்படும் வகையில் இல்லை என்றும் நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றும் மத்திய அரசு தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில், இந்தியாவிலும் பல்வேறு காரணங்களால் சுவாச கோளாறுகள் அதிகரித்து வருவதால், ராஜஸ்தான், கர்நாடகா, குஜராத், உத்தரகாண்ட், அரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநில அரசுகள், சுவாசக் கோளாறு பாதிப்பால் வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் சுகாதாரத் துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும், பருவகால காய்ச்சல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும், பருவகால காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் ஆபத்து காரணிகளை பட்டியலிட்டு, ஆலோசனையில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவற்றையும் குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதில், இருமல் அல்லது தும்மலின்போது வாய் மற்றும் மூக்கை மூடுவது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், முகத்தைத் தொடுவதைத் தவிர்ப்பது மற்றும் நெரிசலான இடங்களில் முகமூடிகளைப் பயன்படுத்துவது ஆகியவை அடங்கும்.

    • இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது.
    • 5 ஐரோப்பிய நாடுகள், மலேசியாவைச் சேர்ந்தவர்கள் விசா இல்லாமல் நுழைய சீனா அனுமதி அளித்தது.

    பீஜிங்:

    சீனாவில் இருந்து 2019-ம் ஆண்டு பரவிய கொரோனா வைரஸ் அடுத்த சில ஆண்டுகள் உலக நாடுகளையும் அவற்றின் பொருளாதாரத்தையும் ஆட்டம் காண வைத்தது. இதனால் சுற்றுலாவை நம்பியுள்ள நாடுகளின் பொருளாதாரம் பெரிய அளவில் சரிவை சந்தித்தது.

    இதற்கிடையே சுற்றுலாவை மேம்படுத்தவும், சுற்றுலா பயணிகளைக் கவரவும் சீனா பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது.

    இந்நிலையில் வரும் டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், மலேசியா ஆகிய நாட்டு மக்கள் விசா இல்லாமல் சீனாவிற்குள் நுழைய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே இலங்கை உள்பட சில நாடுகள் விசா இல்லாமல் குறிப்பிட்ட நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரலாம் என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    • அரசு அனுமதி பெற்றுத்தான் கிராஃபைட் ஏற்றுமதி இனி நடைபெற முடியும்
    • 65 சதவீத கிராஃபைட் சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது

    செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கு அவசிய தேவையான செமிகண்டக்டர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு அமெரிக்கா பலவித கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இத்துறையில் சீனா நுழைவதை தடுக்கும் விதமாக இத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதனையடுத்து, மின்சார வாகனங்கள், மொபைல் போன்கள் உள்ளிட்ட பொருட்களின் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருளான 'கிராஃபைட்', தன் நாட்டிலிருந்து அமெரிக்காவிற்கு செல்வதை தடுக்கும் விதமாக, சீனா, அதன் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

    "தேசிய பாதுகாப்பு மற்றும் தேச நலனுக்காக 2 வகையான கிராஃபைட்களை ஏற்றுமதி செய்ய சீன ஏற்றுமதியாளர்கள் இனி அரசாங்கத்திடம் அனுமதி பெற வேண்டும். இந்த கொள்கை மாற்றம் எந்த குறிப்பிட்ட தேசத்தையும் குறி வைத்து கொண்டு வரப்படவில்லை" என சீனாவின் வர்த்தக துறை அறிவித்துள்ளது.

    அரசு அனுமதியை கோரும் போது எந்த நாடுகளுக்கு அவை செல்கின்றன என்பதை சீனா தீவிரமாக கண்காணிக்க முடியும்.

    வாகன தயாரிப்பு நிறுவனங்கள் மின்சார வாகன உற்பத்தியை அதிகரித்து வருகின்றன. அவற்றில் உள்ள பேட்டரிகளுக்கு தேவைப்படும் முக்கிய மூலப்பொருளான கிராஃபைட்டின் உற்பத்தி தன் வசம் உள்ளதால் சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. உலகிற்கு தேவைப்படும் கிராஃபைட் உற்பத்தியில் 65 சதவீதத்திற்கும் அதிகமான பங்கு சீனாவிலிருந்துதான் கிடைக்கிறது.

    வேறு நாடுகளில் கிராஃபைட் கிடைக்கும் வரை சீனாவின் இந்த நடவடிக்கை கண்டிப்பாக மாற்று எரிசக்தி துறையில் அந்நாட்டின் ஆதிக்கம் அதிகரிக்கவே வழி செய்யும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

    ×