search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Central Committee"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மத்திய குழு, தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் கண்துடைப்புதான் என்று தினகரன் குற்றம்சாட்டியுள்ளார். #GajaCyclone #TTVDhinakaran #EdappadiPalaniswami
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் மச்சுவாடி பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களால் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் மக்களை சந்திக்க வரவில்லை. மக்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். இதனால்தான் புயல் பாதித்த பகுதி மக்களை சந்திக்க முதல் -அமைச்சர் வந்துள்ளார்.

    தற்போது முதல்- அமைச்சர் நாகை, திருவாரூர் பகுதியில் ஆய்வு மேற்கொள்வது, மத்திய குழுவும், தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கையும் கண்துடைப்புதான். மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து முதற்கட்டமாக ரூ.5 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்கியிருக்க வேண்டும்.

    மத்திய குழு ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து அவர்கள் நிவாரண தொகை அறிவிப்பதற்குள் மக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாவார்கள். தமிழக அரசு இடைத்தேர்தலை நடத்த மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் கட்டாயமாக 8 இடங்களில் வெற்றி பெறவேண்டும். அப்படி வெற்றி பெறவில்லை என்றால் ஆட்சி போய் விடும் என்ற பயத்தில் தேர்தலை நடத்த மாட்டார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுடன் வைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அந்தத் தேர்தலிலும் தேர்தலை நடத்த தமிழக அரசு தயாராக இல்லை. மக்கள் அனைத்தையும் பார்த்து கொண்டுதான் உள்ளனர். மேகதாதுவாக இருக்கட்டும், ஸ்டெர்லைட் ஆலையாக இருக்கட்டும் தமிழக அரசு கோட்டை விடும்.

    வேதாந்தா நிறுவனத்திற்கு மத்திய அரசு ஆதரவாக இருக்கும் பொழுது முதல் -அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எப்படி எதிர்ப்பார். பல்வேறு வி‌ஷயங்களுக்கு கருத்து தெரிவிக்கும் மோடி, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கும், கஜா புயல் தாக்கத்திற்கு ட்விட்டரில் கூட எந்த ஒரு வருத்தமும் தெரிவிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் பரணி கார்த்திகேயன், அறந்தாங்கி எம்.எல்.ஏ. ரத்தினசபாபதி, திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான் உள்பட பலர் உடனிருந்தனர். முன்னதாக தஞ்சையில் இருந்து புதுக்கோட்டை வந்த டி.டி.வி தினகரன் இச்சடியில் ராணிரமாதேவியை சந்தித்து ஆசிபெற்றார்.

    இதேபோல் டி.டி.வி.தினகரன் கறம்பக்குடி, ஆலங்குடி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார். #GajaCyclone #TTVDhinakaran #EdappadiPalaniswami
    கஜா புயல் சேதம் குறித்த அறிக்கையை மத்திய குழு தாக்கல் செய்த ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. #GajaCyclone #CentralCommitte #MaduraiHighcourt
    மதுரை:

    கஜா புயல் நிவாரணம் தொடர்பான வழக்கு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வருகிறது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது நீதிபதி, கஜா புயல் பாதிப்புகளில் ஏற்பட்டுள்ள சேதம் குறித்த ஆய்வு முடித்த இரண்டு நாட்களில் மத்திய குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும் என கஜா புயல் பாதிப்பு பகுதிக்ளில் ஆய்வு செய்யும் மத்திய குழுவுக்கு உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மத்திய குழு அறிக்கையை தாக்கல் செய்த ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்.

    புயல் பாதித்த பகுதிகளில் மின்சாரம் 100 சதவீதம் வழங்கப்பட்டு விட்டதா என்பதை டிசம்பர் 6-ம் தேதி அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

    மீட்பு நடவடிக்கைகள் குறித்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #CentralCommitte #MaduraiHighcourt
    முத்துப்பேட்டை அருகே கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழுவினர் பார்வையிடாததை கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். #gajacyclone #stormdamage #centralcommittee

    முத்துப்பேட்டை:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்ட மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். குடிநீர், மின்சாரம் இல்லாததால் ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    தொடர்ந்து 11 நாட்களாகியும் அதிகாரிகள் வந்து சேதங்களை பார்வையிடவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றனர்.

    இந்த நிலையில் மத்திய குழுவினர் திருவாரூர் மாவட்டத்தில் புயல் சேத விவரங்களை பார்வையிட்டனர்.

    திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை அருகே உள்ள ஜாம்புவானோடை, தொண்டியக்காடு பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்கள், வீடுகளை பார்வையிட்ட மத்திய குழுவினர் கற்பகநாதர்குளம் கிராமத்திற்கு சென்றனர்.

    அப்போது புயலால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள், மத்திய குழுவினர் வருவதை அறிந்து சாலையை நோக்கி வேகமாக வந்தனர். ஆனால் அதற்குள் மத்திய குழுவினர் சென்ற வாகனங்கள் மக்களை கடந்து சென்றது.

    இதனால் ஆவேசம் அடைந்து திடீரென மக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மக்களின் கோரிக்கை நிறைவேற நடவடிக்கை எடுப்பதாக போலீசார் கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.

    திருவாரூர் மாவட்டம் நாகூர் அருகே உள்ள சன்னமங்களம் கிராமத்தில் கடந்த 10 நாட்களாக மின்சாரம் இல்லை. இதனால் குடிநீர் வினியோகம் இல்லாமல், இயல்பு வாழ்க்கை அடியோடு பாதிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கிராமத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்கு அதிகாரிகளும் வராததால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் நாகூர்-திட்டச்சேரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சன்னமங்களம் காலனி தெரு உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு அடிப்படை தேவைகளான குடிநீர், மின்சாரம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண்டும் என கோ‌ஷம் எழுப்பினர்.

    மேலும் அதிகாரிகள் புயல் பாதிப்புகளை பார்வையிட்டு, உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கிராம மக்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை தாசில்தார் இளங்கோவன், நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன் ஆகியோர் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு குடிநீர், மின்சாரம் வழங்குவதாக உறுதி அளித்தனர். அதன்பேரில் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

    திருமருகல் ஒன்றியம் மற்றும் திட்டச்சேரி பேரூராட்சி பகுதியில் கஜா புயலால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. மேலும், வீடுகள் சேதமடைந்தன. அதை தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள 209 கிராமங்களில் கடந்த 11 நாட்களாக இருளில் மூழ்கி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

    இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அந்தந்த பகுதியில் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு சில இடங்களில் மட்டும் மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் திருமருகல் ஒன்றியம் கணபதிபுரம். ஏர்வாடி, கோட்டப்பாடி, கிடாமங்கலம், இடையாத்தங்குடி, சே‌ஷமூலை, நம்பிகுடி,பரமநல்லூர், விச்சூர், குரும்பூர், மருதாவூர் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எந்த அதிகாரியும் வரவில்லை என்றும், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் கணபதிபுரம் கடைத்தெருவில் கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    இதேபோல் திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் புயல் பாதித்த இடங்களுக்கு மின்சாரம் உடனே வழங்க கோரி நடுரோட்டில் பொதுமக்கள் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.

    இதையடுத்து போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இன்னும் 2 நாட்களில் மின்சாரம் வரும் என்று உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர். #gajacyclone #stormdamage #centralcommittee

    டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் சேத பாதிப்பு அதிகமாகவே உள்ளது என்று மத்தியக்குழு தலைவர் டேனியல் தெரிவித்துள்ளார். #CentralCommittee #gajacyclone #stormdamage

    நாகப்பட்டினம்:

    டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட கஜா புயல் சேத பாதிப்புகளை மத்திய குழு தலைவர் டேனியல் தலைமையிலான குழுவினர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளில் ஆய்வு செய்தனர். நேற்று தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு செய்தனர்.

    அப்போது தென்னை விவசாயிகள், வீடுகளை இழந்த மக்கள் மத்திய குழுவினரிடம் கண்ணீர் மல்க வேதனையை தெரிவித்தனர்.

    இன்று 3-வது நாளாக நாகை மாவட்டத்தில் மத்திய குழுவினர் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    நாகை, வேட்டைகாரனிருப்பு, கோடியக்கரை, புஷ்பவனம், கோவில்பத்து ஆகிய பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது புஷ்பவனம் கிராமத்தில் கடல்நீர் உட்புகுந்தால் அந்த கிராமமே சேறும் சகதியுமாக இருப்பதை பார்த்து மத்திய குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமாரிடம், சேறும் சகதியை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர்.

    இதையடுத்து மத்திய குழுத்தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலால் டெல்டா மாவட்டங்களில் மிக அதிகமாக சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஏராளமான தென்னை மரங்கள் விழுந்துள்ளன. விவசாயிகள் வேதனையை கேட்டு அறிந்து கொண்டோம். ஏராளமான மக்கள் வீடுகளை இழந்துள்ளனர்.

    கஜா புயல் சேத பாதிப்புகள் குறித்து கணக்கெடுத்து உள்ளோம். இதை மத்திய அரசிடம் சமர்ப்பித்து கூடுதல் நிவாரணம் வழங்க வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #CentralCommittee #gajacyclone #stormdamage

    நாகை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை மத்தியக்குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். #GajaCyclone #CentralCommittee

    நாகப்பட்டினம்:

    புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் பாதிப்புகள் குறித்து அறிவதற்காக மத்தியக் குழுவினர் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் வந்துள்ளனர்.

    இந்தக்குழுவில் மத்திய நிதித்துறை(செலவினங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின்(ஐதராபாத்) இயக்குனர்(பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத் சவா, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் உள்ளனர்.

    இந்த குழுவினர் நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் அங்கிருந்து காரில் புறப்பட்டு தஞ்சை வந்தனர்.

    தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உளூர், நெய்மேலி, புலவன் காடு, மல்லிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் சென்று புயல் பாதிப்புகளை பார்வையிட்டார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர்.

    இதைத் தொடர்ந்து நேற்று இரவு திருவாரூரில் இருந்து புறப்பட்ட மத்தியக் குழுவினர் நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று தங்கினர். பின்னர் இன்று காலை ஓட்டலில் அதிகாரிகளுடன் மத்தியக் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.

    பின்னர் 8.45 மணிக்கு ஓட்டலில் இருந்து காரில் புறப்பட்டு வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்றனர். அவர்களுடன் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், தங்கமணி, சரோஜா, சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் சென்றனர்.

    முதலாவதாக வேட்டைகாரனிருப்பு பகுதிக்கு சென்று மத்தியக்குழுவினர் பார்வையிட்டனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தனர். பின்னர் அங்கு இந்திராணி என்பவர் குடிசை வீட்டின் மீது தென்னை மரம் விழுந்து சேதமாகி உள்ளது அதனை பார்வையிட்டு அவர்களிடம் பாதிப்பு குறித்து கேட்டனர்.


    பின்னர் புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதைத் தொடர்ந்து சீரமைக்கப்பட்டு வரும் துணைமின் நிலையத்தை பார்வையிட்டனர்.

    அப்போது அங்கே கூடி நின்றவர்கள் மத்தியக் குழுவினரிடம் புயல் பாதிப்பில் இருந்து விரைவில் மீளமுடியாத நிலைமைக்கு நாங்கள் உள்ளோம். எங்கள் தொழில் அனைத்தும் முடங்கி உள்ளது. பல வருடங்களாக பார்த்து பார்த்து வளர்த்த தென்னை மரங்கள் அடியோடு சாய்ந்து விட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். அரசு தான் இதை கவனத்தில் கொண்டு எங்களுக்கு கூடுதல் நிவாரணம் உடனே கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

    அவர்களுக்கு ஆறுதல் கூறி அங்கிருந்து சென்ற குழுவினர் வேட்டைகாரனிருப்பு பகுதியில் புயலால் பாதிக்கப்பட்டு சேவை மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டனர். அவர்களிடம் உணவு சரியாக வழங்கப்படுகிறதா? சாப்பாடு தரமாக உள்ளதா? என்று கேட்டனர்.இதையடுத்து முகாம்களில் தங்கியுள்ள மக்களுக்கு வழங்கப்படும் உணவுகளை மத்தியக் குழுவினர் சாப்பிட்டு ருசி பார்த்தனர்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மரங்கள் சாய்ந்து கிடக்கும் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது பெண்கள் சிலர் அவர்களை சூழ்ந்து கொண்டு எங்கள் வாழ்வாதாரம் அழிந்து விட்டது என்று கண்ணீர் மல்க கூறினர்.

    அதைத் தொடர்ந்து கோவில்பத்து கிராமத்திற்கு சென்று அங்கு சேதமாகி உள்ள செல்போன் கோபுரங்கள், தமிழ்நாடு நுகர்பொருள் கழக சேமிப்பு கிடங்கு ஆகியவை பார்வையிட்டனர். அந்த பகுதியில் சேதங்கள் குறித்து அப்பகுதி மக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

    அங்கிருந்த புறப்பட்ட குழுவினர் கோடியக்கரை பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் வீடுகளை பார்வையிட்டனர். அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம்களை பார்வையிட்டும் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அப்போது மீனவர்கள் எங்களுக்கு கூடுதல் நிவாரணம் ஒதுக்க வேண்டும். அதிகாரிகள் இந்த பகுதியை வந்துபார்வையிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதைத் தொடர்ந்து பெரிய குத்தகை, புஷ்பவனம், நாலுவேதபதி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று புயல் பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர்.

    பின்னர் அங்கிருந்து விழுந்த மாவடி சென்ற குழுவினர் அங்கு சேதமடைந்த படகுகள், வலைகளை பார்வையிட்டனர். அப்போது கூடுதல் நிவாரணம் இருந்தால் மட்டுமே எங்கள் வாழ்க்கை தொடர முடியும். மேலும் புதிய படகுகள் அரசு வழங்க வேண்டும் என்று கூறினர். #GajaCyclone #CentralCommittee

    தஞ்சை மாவட்டத்தில் நாங்கள் எதிர்பார்த்ததை விட புயல் சேதம் அதிகமாக உள்ளது என்று மத்தியக்குழு தலைவர் கூறியுள்ளார். #GajaCyclone #CentralCommittee

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் மத்திய குழு ஆய்வு செய்தனர். அங்கு புயலால் பாதிக்கப்பட்ட படகுகளையும், பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தனர். அப்போது அப்பகுதி மக்கள் மத்திய குழுவிடம் ஒரு கோரிக்கை வைத்தனர்.

    எங்கள் பகுதியில் விசைபடகுகள், நாட்டுப்படகுகள், அதிக அளவில் சேதமாகி உள்ளது. இதனால் மல்லிப்பட்டினம், வேதுபாவச்சத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் உள்ள மீனர்வர்களின் 246 விசைப்படகுகளும், 832 நாட்டுப்படகுகளும், 47 கட்டுமரங்களும், ஆயிரத்து 428 வலைகள், ஆயிரத்து 440 மோட்டார் என்ஜின்கள் என பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ரூ.72 கோடியே 44 லட்சத்து 50 ஆயிரம் வரை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


    எனவே பாதிக்கப்பட்ட இந்த பகுதிகளை தேசிய பேரிடர் பகுதியாக அறிவிக்க வேண்டும். மேலும் சேதமடைந்த படகுகளுக்கு பதில் புதிய படகுகள் அரசுதர வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்றனர்.

    பின்னர் இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள இடங்களை இன்று காலை முதல் ஆய்வு செய்தோம். பார்வையிட்ட இடங்களில் எல்லாம் மக்கள் கூடுதல் நிவாரணம் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். புயல் சேதம் நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. புயல் சேத விவரங்கள் குறித்து மத்திய அரசிடம் அறிக்கையை சமர்பிப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #CentralCommittee

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு கூறினார். #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வு முடிந்ததும் மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டம் உண்மையிலேயே கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்களையும், நடந்து வரும் மீட்பு ப ணிகள் பற்றிய விவரங்களையும் மாவட்ட நிர்வாகம் முழுமையாக எடுத்து கூறி உள்ளது. நாங்களும் புயலால் சேதம் அடைந்துள்ள பகுதிகளை பார்வையிட்டு உள்ளோம்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை இப்போது உடனடியாக கூற முடியாது. இன்னும் சில இடங்களை நாங்கள் ஆய்வு செய்ய வேண்டியது உள்ளது. எல்லா இடத்திலும் ஆய்வு பணிகள் முழுமையாக முடிவடைந்த பின்னர் தான் மொத்த சேத மதிப்பு எவ்வளவு என்ற விவரத்தை மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்வோம் என்றார்.

    புதுக்கோட்டை வடகாடு வடக்கிப்பட்டியில் ஆய்வு செய்ய சென்ற மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு அங்குள்ள தோட்டத்தில் தென்னை மரங்கள் சாய்ந்து கிடந்ததை பார்த்து அதனை பார்வையிட தோட்டத்திற்குள் நடந்து சென்றார்.

    அப்போது போதிய வெளிச்சம் இல்லை. இதனால் சற்றுமேடான பகுதியில் ஏற முயன்றபோது திடீரென அவர் கால் இடறி கீழே விழப்பார்த்தார். உடன் சென்ற அதிகாரிகள் அவரை கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டனர். #GajaCyclone #CentralCommittee

    கஜா புயலால் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பான அறிக்கை மத்திய அரசிடம் 27-ந்தேதி மத்திய குழுவினர் தாக்கல் செய்கின்றனர். #GajaCyclone #CentralCommittee
    திருச்சி:

    புயல் சேதத்தை ஆய்வு செய்வதற்காக விமானம் மூலம் திருச்சிக்கு வந்த மத்திய குழுவின் தலைவர் டேனியல் ரிச்சர்டு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட சேத விவரங்கள் குறித்து பிரதமர் மோடியிடம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்திருக்கிறார். மாநில அரசு சார்பில் புயல் நிவாரணமாக ஒரு குறிப்பிட்ட தொகை கேட்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்தந்த மாவட்ட கலெக்டர் தலைமையிலான குழுவினர் ‘கஜா’ புயல் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து ஒரு சேத விவரப்பட்டியல் தயார் செய்துள்ளனர். தற்போது எனது தலைமையிலான குழுவினர் அதில் உள்ளபடி, என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பதை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாக சென்று ஆய்வு செய்ய இருக்கிறோம். அதன் பிறகே ஒட்டு மொத்தமான ஒரு மதிப்பீடு கிடைக்கும்.

    புயல் சேத பகுதிகளை 3 நாட்கள் ஆய்வு செய்துவிட்டு டெல்லி திரும்பு முன்பு மத்திய குழுவினர் நாளை மாலையோ அல்லது செவ்வாய்க்கிழமை காலையோ சென்னை திரும்புகின்றனர். அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரை மீண்டும் அவர்கள் சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர்.

    இதைத்தொடர்ந்து இக் குழுவினர் கஜா புயலால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சேத விவரங்கள் தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வருகிற 27-ந்தேதி தாக்கல் செய்கின்றனர். #GajaCyclone #CentralCommittee
     
    கஜா புயல் தாக்கிய பகுதிகளில் மத்திய குழுவினர் நேற்று மாலை ஆய்வு செய்தனர். முன்னதாக அவர்கள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி யுடன் ஆலோசனை மேற்கொண்டனர். #gajacyclone #CentralCommittee #cycloneeffected
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 16-ந் தேதி டெல்டா பகுதியில் உள்ள 12 மாவட்டங்களில் ‘கஜா’ புயல் கோரத்தாண்டவமாடியது. இதில் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தையே புரட்டி போட்டது.

    புயலின் தாக்குதலால் பல லட்சம் தென்னை மரங்கள், பலா மரங்கள் மற்றும் பழமையான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாழை, கரும்பு, நெல் உள்ளிட்ட பயிர்களும் நாசமானது. ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்தன. மேலும் மின்மாற்றிகள், துணை மின் நிலையங்களிலும் பெரும் சேதம் ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடு மற்றும் உடைமைகளை இழந்து முகாம்களில் பரிதவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புயல் நிவாரண நிதியாக ரூ.15 ஆயிரம் கோடி கேட்டார். அதைத் தொடர்ந்து மத்திய குழு சேதப்பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டது.

    அதன்படி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர் (நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையிலான 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் நேற்று முன்தினமே சென்னை வந்தனர். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தனர்.

    இந்த நிலையில், முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதற்காக சென்னை தலைமைச் செயலகத்துக்கு மத்திய குழுவினர் நேற்று காலை 10.30 மணிக்கு வந்தனர். இதையடுத்து காலை 10.50 மணிக்கு முதல்-அமைச்சர் அறையில் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. 45 நிமிடங்கள் இந்த கூட்டம் நடந்தது.

    இதில் மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா உள்பட அனைத்து துறை உயர் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

    அதைத் தொடர்ந்து மத்திய குழுவினர் 7 பேரும் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனை சந்தித்து பேசினர். காலை 11.40 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் 12.20 மணிக்கு முடிந்தது.

    பின்னர் வருவாய் நிர்வாக ஆணையர் சத்தியகோபால் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதல்-அமைச்சர் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள சேதம் குறித்து விரிவாக பட்டியலிடப்பட்டது. ஒவ்வொரு துறை வாரியாகவும் ஏற்பட்ட சேதம் குறித்து மத்திய குழுவினருக்கு முதல்- அமைச்சர் தெளிவாக விளக்கினார். மக்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள், குறிப்பாக விவசாயம் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கிறது, எந்த அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது என்பது குறித்தும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் என்ன உதவிகள் தேவை என்பது பற்றியும் விளக்கி கூறினார்.

    ‘பவர் பாய்ண்ட்’ மூலமாக துறைவாரியான விவரங்களையும் காட்சிகளோடு பட்டியலிட்டு அதிகாரிகளுக்கு விளக்கி கூறினோம். இதிலிருந்து எந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை மத்திய குழுவினர் புரிந்து கொண்டிருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு மத்திய குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி விமான நிலையத்திற்கு மாலை 3.40 மணிக்கு சென்றனர்.

    அங்கு அவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர்கள் கணேஷ் (புதுக்கோட்டை), ராஜாமணி (திருச்சி) மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.

    பின்னர் திருச்சி விமான நிலையத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழுவினர் காரில் புறப்பட்டு சென்றனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் முதல் இடமாக குளத்தூர் அருந்ததியர் காலனிக்கு அக்குழுவினர் சென்றனர். அங்கு புயல் தாக்கியதில் 15-க்கும் மேற்பட்ட குடிசைகள் இடிந்து கிடப்பதை ஆய்வு செய்தனர்.

    அவர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர், நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கலெக்டர் கணேஷ் ஆகியோர் புயல் பாதிப்பை விளக்கி கூறினர்.

    அப்போது மத்திய குழுவினரை கண்டதும், அங்கு வீடுகளை இழந்த பெண்கள் காலில் விழுந்து கதறி அழத்தொடங்கினர்.

    “அய்யா...புயலால் எங்கள் வாழ்க்கையே போச்சு. இனி என்ன செய்யப்போகிறோம் என்றே தெரியவில்லை. குடிசைகளை இழந்து தவிக்கும் எங்களுக்கு நீங்கள்தான் வழி சொல்லவேண்டும். கடந்த 9 நாட்களாக மின்சாரம், குடிநீர் இன்றி தவித்து வருகிறோம்” என கண்ணீர் விட்டனர்.

    அவர்களுக்கு ஆறுதல் கூறி தோளில் தட்டிவிட்டு தேற்றிய மத்திய குழுவினர், “உங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளையும், பாதிப்புகளையும் நேரில் கண்டறிவதற்காகத்தான் வந்திருக்கிறோம். யாரும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு நியாயமாக செய்ய வேண்டியதை நிச்சயமாக செய்வோம்” என உறுதி அளித்தனர்.

    அப்போது, உடன் வந்த அமைச்சர், கலெக்டர் ஆகியோரும் ஆறுதல் கூறினர்.

    தொடர்ந்து வடகாடு பரம்மன்நகர், மாங்காடு, கந்தர்வகோட்டை பகுதியில் முதுகுளம் புதுநகர் உள்ளிட்ட இடங்களில் சேதப்பகுதிகளை பார்வையிட்டனர்.

    இறுதியாக கந்தர்வகோட்டை புதுப்பட்டிக்கு சென்று அங்குள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அதிகாரிகளுடன் மத்திய குழுவினர் ஆய்வு நடத்தி, மாவட்ட முழுவதும் உள்ள சேத விவரங்களையும், என்னென்ன பாதிக்கப்பட்டுள்ளது என்ற விவரத்தையும் அறிக்கையாக தயார் செய்தனர்.

    இரவு தஞ்சாவூர் புறப்பட்டு சென்ற குழுவினர் அங்குள்ள சங்கம் ஓட்டலில் ஓய்வெடுத்தனர்.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மத்திய குழுவினர் தஞ்சாவூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு விட்டு மதியம் 1 மணிக்கு மீண்டும் தஞ்சாவூர் திரும்புகிறார்கள். பிற்பகல் 2 மணிக்கு திருவாரூர் செல்கின்றனர்.

    அங்கு மாலை 3.30 மணி முதல் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுகிறார்கள். அன்று இரவு நாகப்பட்டினம் சென்று, ஓய்வெடுக்கின்றனர்.

    நாளை (26-ந் தேதி) காலை 7.30 மணிக்கு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். மதியம் 1 மணிக்கு நாகப்பட்டினத்தில் சிறிது ஓய்வு எடுக்கிறார்கள். பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்து விட்டு, இரவு புதுச்சேரி செல்கின்றனர். #gajacyclone #CentralCommittee #cycloneeffected
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு இன்று மாலை பார்வையிட்டது. #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
     
    கடந்த 10 நாட்கள் ஆகியும் மீளாத்துயரில் தவித்து வரும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    இதற்கிடையே, புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அப்போது புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவியை கோரினார்.



    இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. அவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை சென்றனர்.

    புதுக்கோட்டையில் குளத்தூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது. 

    அப்போது துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், கண்காணிப்பு அலுவலர்கள் சுனில் பாலிவால், சம்பு கல்லோலிகர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர். #GajaCyclone #CentralCommittee
    மக்களின் நிலையை நேரில் பார்க்க புயல் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் மத்திய குழு செல்ல வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். #Gajacyclone #GKVasan #CentralCommittee
    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட தமிழகம் வந்துள்ள மத்திய குழுவினர் அனைத்து கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களின் நிலையை நேரில் பார்க்க வேண்டும். பொதுமக்களிடம் நேரடியாக பேச தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்.

    கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவானது சரியாக ஆய்வு செய்யாமல் முறையான அறிக்கையை சமர்ப்பிக்காததால், தமிழகத்துக்கான நிவாரண நிதி முழுமையாக கிடைக்கவில்லை.


    எனவே கடந்த காலத்தை போல் இல்லாமல் புயல் பாதித்த பகுதிகளுக்கு மத்திய குழுவுடன் தமிழக அதிகாரிகள் உடன் செல்லும் போது அனைத்து பகுதிகளுக்கும் அழைத்து சென்று பார்வையிட வைக்க வேண்டும்.

    சேதம் அடைந்த வீடுகள், தென்னை மரங்கள், நெற்பயிர்கள், விவசாய நிலங்கள், வாழை மரங்கள், இரால் பண்ணைகள், உப்பளங்கள், மீன்பிடி படகுகள், வலைகள் போன்றவற்றை முழுமையாக பார்வையிட்டு மக்களின் நிலையை நேரில் கண்டறிந்து அதற்கேற்ப அறிக்கை தயாரிக்க வேண்டும். அப்போதுதான் அனைத்து மக்களுக்கும், முழுமையான நிவாரணம் கிடைக்க வழிவகை ஏற்படும் என்பது மக்களின் எதிர் பார்ப்பாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Gajacyclone #GKVasan #CentralCommittee
    புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை இன்று மாலை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு பார்வையிட உள்ளது. #GajaCyclone #CentralCommittee
    புதுக்கோட்டை:

    கடந்த 16-ந்தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

    கடந்த 10 நாட்கள் ஆகியும் மீளாத்துயரில் தவித்து வரும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

    இந்தநிலையில் புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அப்போது புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவியை கோரினார்.

    இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. அவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

    பள்ளத்திவிடுத்தியில் கஜா புயலால் முற்றிலும் சேதமடைந்த வீட்டின் முன்பு சோகத்துடன் நிற்கும் தம்பதி.

    புதுக்கோட்டையில் இன்று மாலை 4 மணியளவில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு பார்வையிட உள்ளது. இதற்காக அந்த குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை செல்கிறார்கள்.

    இந்த குழுவில் உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், நிதித்துறை ஆலோசகர் ஆர்.பி.கபூல், மத்திய எரிசக்தி முதன்மை பொறியாளர் வந்தனா சிங்கால், ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் மாணிக் சந்திரா, சாலை மற்றும் போக்குவரத்து துறை கண்காணிப்பு பொறியாளர் ஆர். இளவரசன் உள்ளிட்ட குழுவினர் இன்று ஆய்வு செய்கின்றனர்.

    முதலாவதாக புதுக்கோட்டையில் ஆய்வு செய்ய உள்ள மத்திய குழுவினர் கந்தர்வகோட்டை பகுதியில் அருந்ததியர் காலனி, சோழகம்பட்டி, பழைய கந்தர்வகோட்டை, புதுநகர், முதுகுளம், உரியம்பட்டி, நெற்புகை, வீரடிபட்டி உள்ளிட்ட 8 இடங்களை பார்வையிடுகின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை மீட்பு குழு அதிகாரி சுனில் பாலிவால், ஒருங்கிணைப்பு குழு தலைவர் சம்பு கலோ லிகர், கலெக்டர் கணேஷ் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர். குழுவினருடன் அமைச்சர்கள் டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், பால கிருஷ்ணரெட்டி, கே.சி.கருப்பணன், பாஸ்கரன் உள்ளிட்டோர் உடன் செல்கின்றனர். #GajaCyclone #CentralCommittee
    ×