search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arun Jaitley"

    அருண் ஜெட்லி-விஜய் மல்லையா இடையே ஏற்பட்ட பேரத்தால், விஜய் மல்லையா தப்பி ஓட அனுமதிக்கப்பட்டார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். #RahulGandhi #ArunJaitley #VijayMallya
    கர்னூல்:

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று ஆந்திர மாநிலத்துக்கு சென்றார். அங்குள்ள கர்னூலில் நடைபெற்ற பொ துக்கூட்டத்தில் அவர் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

    பொதுத்துறை வங்கிகளின் ரூ.9 ஆயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்த விஜய் மல்லையா ஒரு திருடன் என்று ஒட்டுமொத்த நாட்டுக்கும் தெரியும். ஆனால், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு தெரிந்தே அவர் தப்பி ஓடினார். ஏதோ ஒரு பிரதிபலனுக்காக அவர் தப்பிக்க அருண் ஜெட்லி அனுமதித்தார். அதற்காக அருண் ஜெட்லி-விஜய் மல்லையா இடையே ஒரு பேரம் உண்டானது.



    அருண் ஜெட்லிக்கு தெரிந்தே விஜய் மல்லையா தப்பி ஓடியும், பிரதமர் நரேந்திர மோடி மவுனம் சாதிக்கிறார். அதைப்பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. அருண் ஜெட்லியை அவர் நீக்க வேண்டும்.

    பிரதமர் மோடி, தன்னை நாட்டின் காவலாளி என்று கூறிக் கொள்கிறார். ஆனால், இரவு நேரத்தில் திருடர்களுக்கு கதவு திறந்து விடும் காவலாளியாக அவர் இருக்கிறார்.

    முந்தைய காங்கிரஸ் அரசு, தலா ரூ.526 கோடி மதிப்பில் ‘ரபேல்’ போர் விமானங்களை வாங்க திட்டமிட்டது. ஆனால், அந்த விலையை மோடி அரசு தலா ரூ.1,600 கோடியாக உயர்த்தி உள்ளது. மேலும், அதை இந்தியாவில் தயாரிக்கும் உரிமத்தை எந்த முன்அனுபவமும் இல்லாத அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு அளித்துள்ளது.

    பிரதமர் எப்போதும் மேலே பார்க்கிறார். கீழே குனிந்து வலது புறமும், இடது புறமும் பார்க்கிறார். ஆனால், என் கண்களைப் பார்க்க மறுக்கிறார்.

    மன்மோகன் சிங் அரசு, ஆந்திராவுக்கு 5 ஆண்டுகளுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க முன்வந்தது. ஆனால், அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜனதா, 10 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்று வலியுறுத்தியது. ஆனால், மோடி ஆட்சிக்கு வந்தவுடன், அந்த வாக்குறுதியை மீறி விட்டார்.

    சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததுடன், ஆந்திர தலைவர்களை அவமரியாதை செய்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும். மேலும், விவசாய கடன்களை ரத்து செய்யும்.

    இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

    கர்னூலில், மறைந்த முன்னாள் முதல்-மந்திரி தாமோதரம் சஞ்சீவய்யா இல்லத்துக்கு ராகுல் காந்தி சென்றார். மற்றொரு முன்னாள் முதல்-மந்திரி கோட்லா விஜயபாஸ்கர ரெட்டி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

    மேலும், கர்னூலில், கல்லூரி மாணவர்களுடனான ராகுல் காந்தி சந்திப்பு நிகழ்ச்சியும் நடந்தது. அதில், ஜி.எஸ்.டி., ரபேல் போர் விமான விவகாரம், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து உள்பட பல்வேறு கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதில் அளித்தார். 
    நாடு முழுவதும் உள்ள 25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 50 சதவீத சம்பள உயர்வை நிதிமந்திரி அருண்ஜெட்லி அறிவித்தார். #AnganwatiWorkers #ArunJaitley
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் 25 லட்சம் அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளனர். தேசிய ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் பள்ளிகளில் பணியாற்றி வரும் இந்த ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்மையில் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார்.

    இந்த நிலையில் அங்கன்வாடி பணியாளர்களுக்கு சம்பள உயர்வை நிதிமந்திரி அருண்ஜெட்லி நேற்று அறிவித்தார். அதன்படி அங்கன்வாடி பணியாளர்களின் மாதச் சம்பளம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.4 ஆயிரத்து 500 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. சிறிய அங்கன்வாடிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் ரூ.2,250-ல் இருந்து ரூ.3,500 ஆக அதிகரிக்கப்பட்டது. அங்கன்வாடிகளில் உதவியாளர்களாக வேலை பார்ப்போருக்கு மாதச் சம்பளம் ரூ.1,500-ல் இருந்து ரூ.2,250 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த இருவித அங்கன்வாடிகளிலும் சிறப்பாக பணியாற்றுவோர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.500 மற்றும் ரூ.250 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

    இதுபற்றி அருண்ஜெட்லி கூறும்போது, “நாடு முழுவதும் அங்கன்வாடிகளில் பணியாற்றும் 25 லட்சம்பேர் பயன்அடைவார்கள். அவர்களுடைய குறைகள் களையப் படும் விதமாக இந்த சம்பள உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. மத்திய பட்ஜெட்டில் நெருக்கடி உள்ளபோதிலும் அதை கருத்தில் கொள்ளாமல் இந்த 50 சதவீத சம்பள உயர்வு வழங்கப்பட்டு இருக்கிறது” என்றார். #AnganwatiWorkers #ArunJaitley 
    வில்லுக்குறியில் மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    இரணியல்:

    இரணியலை அடுத்த வில்லுக்குறி சந்திப்பில் நேற்று குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    வங்கி கடன் மோசடியில் சிக்கி உள்ள தொழில் அதிபர் விஜய்மல்லையா வெளிநாடு தப்பிச் செல்ல உதவிய மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி பதவி விலக கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் கிறைஸ்ட் ஜெனித் முன்னிலை வகித்தார். 

    விஜய், அருள்ராஜ், ஆஸ்கர் பிரடி, வின்ஸ் எல்ஜின், ஜெரால்டு கென்னடி, ஆல்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. அனுமதியின்றி போராட்டம் நடை பெற்றதால் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர். இளைஞர் காங்கிரஸ் தலைவர் நரேந்திர தேவ் உள்பட 40 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    மல்லையா தப்பி சென்ற விவகாரத்தில் லுக்அவுட் நோட்டீசை திருத்தி தவறாக கணித்து விட்டோம் என்று சிபிஐ போலீஸ் விளக்கம் அளித்துள்ளது. #vijaymallya #cbi #lookoutnotice

    புதுடெல்லி:

    பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா பொதுத்துறை வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் கடந்த 2016-ம் ஆண்டு லண்டனுக்கு தப்பி சென்று விட்டார். அவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிக்கு உடனடியாக வெற்றி கிடைக்கவில்லை. இது தொடர்பான வழக்கு விசாரணை லண்டன் கோர்ட்டில் உள்ளது.

    டிசம்பர் மாதம் 10-ந்தேதி இது தொடர்பாக வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்க உள்ளது. அப்போது தான் மல்லையா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா? என்பது தெரியவரும்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோர்ட்டுக்கு வந்த விஜய் மல்லையா நிருபர்களிடம் பேசுகையில் புதிய பூகம்பம் ஒன்றை கிளப்பினார். அவர் கூறுகையில், “நான் லண்டனுக்கு வருவதற்கு ஒருநாளைக்கு முன்பு நிதி மந்திரியை சந்தித்து பேசி விட்டுதான் வந்தேன்” என்று கூறினார்.

    இதையடுத்து மல்லையா தப்பி செல்ல நிதி மந்திரி அருண்ஜெட்லி உடந்தையாக இருந்ததாக காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். மல்லையா தப்பி செல்ல உதவியதால் அருண்ஜெட்லி மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவரிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.


    ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் இந்த குற்றச்சாட்டை மறுத்து ராகுல் மீது பரபரப்பு புகார்களை கூறி வருகிறார்கள். மல்லையாவின் விமான நிறுவனத்திற்கு சாதகமான இருந்தது முந்தைய காங்கிரஸ் அரசு தான் என்று பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா பதிலடி கொடுத்துள்ளார்.

    மேலும் மல்லையாவின் விமான நிறுவனத்தில் ராகுல் காந்திக்கு பங்கு இருந்த தாகவும் பா.ஜ.க.வினர் குற்றம் சுமத்தி உள்ளனர். இப்படி மல்லையா விவகாரத்தில் பாரதீய ஜனதா கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் ஒருவர் மீது ஒருவர் புகார் பட்டியலை வாசித்தப்படி உள்ளனர்.

    இதற்கிடையே விஜய் மல்லையா தப்பி செல்வதற்கு சி.பி.ஐ. மெத்தனமாக இருந்ததும் ஒரு காரணமாகும் என்று பொதுவான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மல்லையா கடன்களை திருப்பி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16-ந்தேதி ஒரு முதல் “லுக்அவுட்” நோட்டீசை சி.பி.ஐ. வெளியிட்டது.

    அதில், “மல்லையா வெளி நாட்டுக்கு செல்ல இருந்தால் பிடிக்க வேண்டும்“ என்று உத்தரவிடப்பட்டு இருந்தது. அந்த லுக்அவுட் நோட்டீஸ் 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் 25-ந்தேதி திருத்தம் செய்யப்பட்டது.

    அந்த திருத்தத்தில் விஜய் மல்லையா வெளிநாடுகளுக்கு சென்று வரும் தகவல்களை கண்காணித்து தகவல் தெரிவித்தால் போதும் என்று கூறப்பட்டு இருந்தது. இதன் மூலம் மல்லையாவை வெளிநாட்டுக்கு தப்பி செல்ல விடாமல் தடுக்கும் நடவடிக்கைகள் நீர்த்து போய் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுக்கு சி.பி.ஐ. பதில் அளித்துள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் கூறியதாவது:-

    மல்லையாவை கண்காணிக்கவே நாங்கள் அறிவுறுத்தப்பட்டோம். எனவே அவரை கைது செய்ய வேண்டிய அவசியம் எழவில்லை.

    விஜய் மல்லையா மீது வங்கி கடன்களை திருப்பி கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு 2015-ம் ஆண்டு தீவிரமான போது அவர் வெளிநாட்டுக்கு அடிக்கடி போவதும் வருவமாகவும் இருந்தார். 3 தடவை அவர் விசாரணைக்கு ஆஜர் ஆனார். அதன்பிறகும் கூட அவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தார்.

    விசாரணைக்கு அவர் முழு ஒத்துழைப்பு கொடுத்து வருவதால் அவரை கைது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. மேலும் அவர் பாராளுமன்ற எம்.பி.யாகவும் இருந்தார். அதன் காரணமாகவே அவரை கைது செய்ய நாங்கள் யாருக்கும் லுக்அவுட் நோட்டீசை வழங்கவில்லை.

    மல்லையா வி‌ஷயத்தில் நாங்கள் எடுத்த முடிவுகள் தவறானவையாகும். அவர் 2015-ம் ஆண்டு இறுதியில் மிக சகஜமாகவே வெளிநாடுகளுக்கு சென்று வந்தார். மேலும் அவரை கைது செய்யும் எந்த வாரண்டும் பிறப்பிக்கப்படவில்லை. இந்த நிலையில் நாங்கள் எப்படி கைது செய்ய முடியும்?

    இதுதவிர விஜய் மல்லையா வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றி விட்டதாக எங்களுக்கு அதிகாரப்பூர்வமாக எந்த புகாரும் வரவில்லை. 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந்தேதி மல்லையாவின் மோசடி குறித்து வெளியான தகவல்களின் அடிப்படையில் நாங்களாகவே வழக்குப்பதிவு செய்து இருந்தோம்.

    எந்த வங்கியும் எங்களை அணுகவில்லை. இந்த நிலையில் அவர் தப்பி சென்றதற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க இயலாது.

    மல்லையா தப்பி சென்ற விவகாரத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை கூறி வரும் நிலையில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களின் ஒருவரான சுப்பிரமணியன்சாமி சி.பி.ஐ. அமைப்பை கடுமையாக குறை கூறி உள்ளார்.

    சி.பி.ஐ. தனது லுக்அவுட் நோட்டீசை திருத்தியதின் மூலம் அது நீர்த்து போய்விட்டது. இதனால்தான் மல்லையா எளிதில் தப்பி சென்று விட்டார் சுப்பிரமணியன்சாமி குற்றம் சுமத்தி உள்ளார்.


    மேலும் சுப்பிரமணியன்சாமி கூறுகையில், “மல்லையா தப்பி செல்லும் முன்பு அருண்ஜெட்லியிடம் நெருக்கமாக அமர்ந்து பேசியது உண்மைதான். அருண்ஜெட்லியிடம் சொல்லிவிட்டு தான் மல்லையா லண்டனுக்கு தப்பி சென்றுள்ளார்.

    2016-ம் ஆண்டு மார்ச் 1-ந்தேதி அவர்கள் இருவரும் சந்தித்து பேசினார்கள். மார்ச் 2-ந்தேதி மல்லையா தப்பி உள்ளார். இதிலிருந்து அருண்ஜெட்லிக்கு தொடர்பு இருப்பது உறுதியாகி உள்ளது” என்று சுப்பிரமணியன்சாமி தெரிவித்துள்ளார். #vijaymallya #cbi #lookoutnotice

    நாட்டை விட்டு செல்வதற்கு சில நாட்களுக்கு முன்னர் மல்லையாவும், அருண் ஜெட்லியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். சிசிடிவி கேமராவை பரிசோதித்து பார்க்கலாம் என காங்கிரஸ் எம்.பி புனியா கூறியுள்ளார். #VijayMallya #ArunJaitley
    புதுடெல்லி:

    பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனை செலுத்தாமல் லண்டனில் தஞ்சமடைந்தார். அவரை நாடு கடத்தக்கோரி இந்தியா தொடர்ந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது.

    நேற்று கோர்ட்டில் ஆஜரான விஜய் மல்லையா, தான் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன் அருண் ஜெட்லியை சந்தித்ததாக கூறினார். ஆனால், அருண் ஜெட்லி இதனை மறுத்திருந்தார். மல்லையாவின் கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி கருத்து பதிவிட்டதால் இந்த விவகாரம் பரபரப்பு அடைந்தது.

    இதனால், அருண் ஜெட்லியை மந்திரி பதவியிலிருந்து நீக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. இந்நிலையில், நாட்டை விட்டு மல்லையா வெளியேறுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பாராளுமன்ற மத்திய ஹாலில் அருண் ஜெட்லியும், மல்லையாவும் 15-20 நிமிடங்கள் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்ததாக காங்கிரஸ் எம்.பி புனியா இன்று தெரிவித்துள்ளார்.

    சிசிடிவி கேமரா பதிவுகளை சோதனை செய்தால் அது உண்மை என தெரியவரும் எனவும் புனியா கூறியுள்ளார். 
    நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன் என விஜய் மல்லையா கூறியதற்கு அருண் ஜெட்லி மறுப்பு தெரிவித்துள்ளார். #VijayMallaya #ArunJaitley
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. இந்த வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான விஜய் மல்லையா “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறியிருந்தார்.

    இந்நிலையில், விஜய் மல்லையா கூற்று தொடர்பாக அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    என்னை சந்தித்தாக மல்லையா கூறியது உண்மைக்கு புறம்பானது. 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை மல்லையாவை சந்திக்க நான் எந்த அனுமதியும் வழங்கவில்லை. தனிப்பட்ட முறையில் அவரை சந்திக்கவே இல்லை. அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்ததால், பாராளுமன்றத்தில் அவரை சந்தித்ததுண்டு. 

    பிரச்னைக்கு தீர்வு காண தனக்கு உதவுமாறு பாராளுமன்ற வளாகத்தில் என்னிடம் ஒருமுறை உதவிகோரினார். தன்னை அணுகுவதை விட வங்கியை அணுகுமாறு அவருக்கு அறிவுறித்தினேன். எம்.பி., பதவியை மல்லையா தவறாக பயன்படுத்தியுள்ளார். 

    இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
    வங்கி மோசடி விவகாரத்தில் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் டிசம்பர் 10-ம் தேதி லண்டன் கோர்ட் தீர்ப்பு வழங்க உள்ளது. #VijayMallaya
    லண்டன்:

    பெங்களூருவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, 13 பொதுத்துறை வங்கிகளில் ரூ. 9,000 கோடி கடன் பெற்று திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்று லண்டனில் தஞ்சம் புகுந்துள்ளார். மல்லையா மீதான நிதி மோசடி வழக்குகளை சிபிஐ விசாரித்து வருகிறது. 

    லண்டனில் உள்ள அவரை இந்தியா கொண்டுவர , லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் கோர்ட்டில் இந்தியா சார்பில் வழக்கு நடந்து வருகிறது. அவர் விரைவில் இந்தியா கொண்டுவரப்படுவார் எனத் தெரிகிறது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்த போது மும்பை ஆர்தர் சாலை சிறையின் வீடியோவை லண்டன் கோர்ட் நீதிபதி கேட்டதன் பேரில், இந்தியா தாக்கல் செய்தது.

    இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், விஜய் மல்லையா ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், “நாட்டை விட்டு வெளியேறும் முன் நிதி மந்திரி அருண் ஜெட்லியை பல முறை சந்தித்து, நிலைமையை சரிசெய்ய முயற்சித்தேன்” என கூறினார்.

    “என் மீதான குற்றச்சாட்டுகளை நான் மறுக்கிறேன். எனினும், கோர்ட் எல்லாவற்றையும் தீர்மானிக்கும்” எனவும் மல்லையா குறிப்பிட்டார்.

    முன்னதாக, வழக்கு விசாரணையின் போது, “சிபிஐ கொடுத்த நிர்பந்தம் காரணமாகவே மல்லையா மீது வங்கிகள் புகார் அளித்தது” என மல்லையா சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார்.  

    வழக்கு விசாரணை முடிந்த பின்னர், நாடு கடத்தக்கோரும் வழக்கின் மீதான தீர்ப்பு டிசம்பர் 10-ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்தார். 
    ரூபாய் நோட்டுகள் மூலம் பரவும் தொற்று நோயை தடுக்க வலியுறுத்தி மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு வர்த்தகர் கூட்டமைப்பு கடிதம் அனுப்பி உள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லிக்கு அனைத்து இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (சி.ஏ.ஐ.டி.) ஒரு கடிதம் அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    ரூபாய் நோட்டுக்கள் மூலமாக நோய் தொற்று பரவுவதாக ஆய்வறிக்கைகள் மற்றும் ஊடக செய்திகளில் கூறப்பட்டுள்ளது. சிறுநீர் குழாய் நோய் தொற்று, மூச்சு குழாய் நோய் தொற்று, தோல் பாதிப்புகள், வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள், செப்கிஸ் போன்ற நோய் பரப்பக்கூடிய கிருமிகள் ரூபாய் நோட்டுகளில் இருப்பதாக பல செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

    எனவே ரூபாய் நோட்டுகளால் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக கூறப்படுவது குறித்து ஆராயும் வகையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

    இதுகுறித்து இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பிரவீண் கந்தல்வால் கூறும்போது, “ரூபாய் நோட்டுகளால் பரவும் நோய்க்கிருமிகள் குறித்து ஆண்டுதோறும் விஞ்ஞானிகள் எச்சரித்து வந்தாலும், அது தொடர்பாக எந்த கவனமும் செலுத்தாதது வருந்தத்தக்க வி‌ஷயம்.

    பணத்தை மிக அதிக அளவில் வர்த்தகர்களே கையாளுகின்றனர். இந்த நிலையில் ரூபாய் நோடடுகள் மூலம் நோய் கிருமிகள் பரவுவது உண்மையென்றால் வர்த்தகர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்” என்றார்.  #CurrencyNotes
    பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் இந்தியாவின் பொருளாதாரம் உயர்ந்துள்ளதாக மத்திய மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
    புதுடெல்லி:

    2016-ம் ஆண்டு பாஜக அரசால் அறிவிக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கை இன்று வரை சர்ச்சைக்கும், விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த அறிவிப்பு என கூறப்பட்டபோதிலும், தற்போது சுமார் 93% மதிப்பிழப்பு செய்யப்பட்ட பணம் ரிசர்வ் வங்கிக்கு திரும்ப பெறப்பட்டது என்ற தகவல் மூலம் மீண்டும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

    இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, பண மதிப்பிழப்பு நடவடிக்கை இந்திய பொருளாதாரத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தார்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மத்திய மந்திரி அருண் ஜெட்லி, கருப்பு பணத்தை தடுப்பது, வருமான வரி தாக்கலை அதிகரிப்பதே பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளதாகவும், வரி தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 6.86 கோடியாக உயர்ந்துள்ளதே அதற்கு சாட்சி எனவும் அவர் தெரிவித்துள்ளார். #ArunJaitley #Demonetisation #BJP #PMModi
    ரபேல் போர் விமான பேரத்தில், ராகுல் காந்தி பொய் தகவல்களை கூறி, தேச நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சாடினார். #ArunJaitley #RahulGandhi #RafaleDeal
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான பேரத்தில், ராகுல் காந்தி பொய் தகவல்களை கூறி, தேச நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறார் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி சாடினார்.

    ரபேல் போர் விமான கொள்முதலில் பெரும் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வருகிறார். மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டபோதும் இந்தப் பிரச்சினையை ராகுல்காந்தி எழுப்பினார்.

    இந்தநிலையில் ராகுல் காந்திக்கு பதில் அளிக்கும் விதத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் எழுதி உள்ளார். அதில் ராகுல் காந்திக்கு அவர் 15 கேள்விகள் எழுப்பி இருக்கிறார்.

    36 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு 2015-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 15-ந் தேதி செய்தது. இது 2007-ம் ஆண்டு, அப்போதைய காங்கிரஸ் கூட்டணி அரசு ஒப்புக்கொண்ட பேரத்தை விட சிறந்த பேரம்தான் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.



    மேலும் அவர் எழுதி இருப்பதாவது:-

    ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான தவறான பிரசாரம், இரு அரசுகளுக்கு இடையேயான ஒப்பந்தத்தில் பொய்யான தகவல்களை பரப்புவதின் அடிப்படையில் தொடங்கியது. இது தேச நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது ஆகும்.

    ரபேல் போர் விமான சர்ச்சை, முழுக்க முழுக்க தவறான தகவல்கள் அடிப்படையிலானது.

    தேசிய அரசியல் கட்சிகளிடமும், அவற்றின் பொறுப்பு வாய்ந்த தலைவர்களிடமும் பொதுவெளியில் ராணுவ பரிமாற்றங்கள் பற்றி பேசுவதற்கு முன்பாக இதுபற்றிய உண்மைத்தகவல்கள் வெளிவரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

    ராகுல்காந்தியும், காங்கிரஸ் கட்சியும் 3 அம்சங்களில் குற்றவாளிகள் ஆகின்றனர்.

    10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பேரத்தை தாமதப்படுத்தியதின்மூலம் தேசப்பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தினர். விலை மற்றும் நடைமுறையில் பொய்யான தகவல்கள் கூறுகின்றனர். இந்த விவகாரங்களை எழுப்பி, ராணுவ கொள்முதலை மேலும் தாமதப்படுத்துகின்றனர்.

    ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ள ரகசியம் காக்க வேண்டும் என்ற விதிமுறை என்னை கட்டுப்படுத்துகிறது. நான் என்ன கேட்டாலும் அல்லது பதில் அளித்தாலும் அது அந்த வரம்புக்கு உட்பட்டது ஆகிறது.

    ராகுல் காந்தி ஜெய்ப்பூரில் கூறும்போது ஒரு விமானத்தின் விலை ரூ.520 கோடி என்றும் ரூ.540 கோடி என்றும் மாற்றி மாற்றிக் கூறினார். டெல்லியிலும், கர்நாடகத்திலும், ஏப்ரல், மே மாதம் பேசும்போது ஒரு விமானத்தின் விலை ரூ.700 கோடி என்று சொன்னார். ஆனால் நாடாளுமன்ற மக்களவையில் பேசும்போது விலையை ரூ.520 கோடி என குறைத்தார்.

    பின்னர் ராய்ப்பூரில் பேசும்போது, ரூ.540 கோடி என்றார். ஐதராபாத்தில் கூறும்போதோ ரூ.526 கோடி என்ற புதிய விலையை கூறினார். உண்மை என்றால் ஒரே மாதிரிதான் இருக்கும். தவறு என்கிறபோதுதான் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி இருக்கிறது.

    ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுகள், உண்மையுடன் எந்த ஒரு பரிச்சயமும் இல்லாமல் கூறப்படுகின்றனவா?

    ராகுல் காந்தியின் தவறான போக்கு, தேச நலன்களை பாதிக்கும் என்பதால்தான் நான் இந்தக் கேள்விகளை கேட்கிறேன். உடனடியாக ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் பதில் அளிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.

    இவ்வாறு அதில் அருண் ஜெட்லி கூறி உள்ளார்.  #ArunJaitley #RahulGandhi #RafaleDeal

    மத்திய மந்திரி அருண் ஜெட்லிக்கு மீண்டும் நிதித்துறை பொறுப்பை வழங்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். #ArunJaitley
    புதுடெல்லி:

    உடல்நலம் சரியானதையடுத்து மீண்டும் மத்திய நிதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார் அருண் ஜெட்லி.

    மத்திய நிதி மந்திரியாக இருந்த அருண் ஜெட்லி உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனால் தற்காலிகமாக சில மாதங்கள் ஓய்வெடுத்தார். எனவே, அருண் ஜெட்லி வசம் இருந்த நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை கூடுதல் பொறுப்பாக மத்திய மந்திரி பியூஸ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தற்போது சிகிச்சை முடிந்து அருண் ஜெட்லி உடல்நலம் தேறியதை அடுத்து,  நிதித்துறை மற்றும் கம்பெனிகள் விவகாரத்துறை மீண்டும் அருண் ஜெட்லியிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.



    2000-ல் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ள அருண் ஜெட்லி, இந்த ஆண்டு மார்ச் மாதம் உத்தரப் பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலங்களவை பா.ஜ.க. தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. #ArunJaitley
    வரி வருவாய் அதிகரித்து இருப்பதால், சிமெண்ட், ஏ.சி., பெரிய திரை டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    17 உள்ளூர் வரிகளுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து, ஓராண்டில், 384 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. 68 வகையான சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்ச வரியான 28 சதவீத வரி, இன்று படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. அந்த வரிவரம்பில், சொகுசு பொருட்களும், புகையிலை, சிகரெட், பான் மசாலா போன்ற பாவ பொருட்களுமே பெரும் பாலும் இருக்கின்றன. அதை தவிர்த்து பார்த்தால், சிமெண்ட், ஏ.சி., பெரிய திரை டி.வி. உள்ளிட்ட ஒருசில பொருட்கள்தான் இருக்கின்றன.

    இந்த பொருட்களால் வரி வருவாய் அதிகரித்து இருப்பதால், இவற்றின் மீதான ஜி.எஸ்.டி.யும் கூடிய விரைவில், 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படும். அதன்பிறகு, சொகுசு பொருட்களும், பாவ பொருட்களும் மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி. வளையத்துக்குள் இருக்கும். அதன்மூலம், ‘காங்கிரசின் பரம்பரை வரி’க்கு முடிவுரை எழுதப்படும்.



    ஏனென்றால், ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்களுக்கு 31 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது.

    கட்டுமான பொருட்களில், சிமெண்டைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்துக்கும் வரி குறைக்கப்பட்டு விட்டது. அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் களுக்கு செலவு குறைவதுடன், அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. பொருட்களை கொள்முதல் செய்ய இதுவே சிறந்த தருணம் ஆகும்.

    ஜி.எஸ்.டி. குறைப்பால், அரசுக்கு ரூ.70 ஆயிரம் கோடி நிகர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல் 5 ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்வதாக மாநில அரசுகளுக்கு உறுதி அளித்துள்ளோம். எனவே, இந்த சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். 
    ×