search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏ.சி., பெரிய டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் - அருண் ஜெட்லி
    X

    ஏ.சி., பெரிய டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் - அருண் ஜெட்லி

    வரி வருவாய் அதிகரித்து இருப்பதால், சிமெண்ட், ஏ.சி., பெரிய திரை டி.வி. மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்படும் என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி :

    மத்திய மந்திரி அருண் ஜெட்லி, தனது ‘பேஸ்புக்’ பக்கத்தில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    17 உள்ளூர் வரிகளுக்கு மாற்றாக, கடந்த ஆண்டு ஜூலை 1-ந் தேதி, ஜி.எஸ்.டி. (சரக்கு, சேவை வரி) அமல்படுத்தப்பட்டது. அதையடுத்து, ஓராண்டில், 384 பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. குறைக்கப்பட்டுள்ளது. 68 வகையான சேவைகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது.

    அதிகபட்ச வரியான 28 சதவீத வரி, இன்று படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. அந்த வரிவரம்பில், சொகுசு பொருட்களும், புகையிலை, சிகரெட், பான் மசாலா போன்ற பாவ பொருட்களுமே பெரும் பாலும் இருக்கின்றன. அதை தவிர்த்து பார்த்தால், சிமெண்ட், ஏ.சி., பெரிய திரை டி.வி. உள்ளிட்ட ஒருசில பொருட்கள்தான் இருக்கின்றன.

    இந்த பொருட்களால் வரி வருவாய் அதிகரித்து இருப்பதால், இவற்றின் மீதான ஜி.எஸ்.டி.யும் கூடிய விரைவில், 28 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படும். அதன்பிறகு, சொகுசு பொருட்களும், பாவ பொருட்களும் மட்டுமே 28 சதவீத ஜி.எஸ்.டி. வளையத்துக்குள் இருக்கும். அதன்மூலம், ‘காங்கிரசின் பரம்பரை வரி’க்கு முடிவுரை எழுதப்படும்.



    ஏனென்றால், ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதற்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பெரும்பாலான வீட்டு உபயோக பொருட்களுக்கு 31 சதவீத வரி விதிக்கப்பட்டு வந்தது.

    கட்டுமான பொருட்களில், சிமெண்டைத் தவிர மற்ற பொருட்கள் அனைத்துக்கும் வரி குறைக்கப்பட்டு விட்டது. அனைத்து வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. 28 சதவீதத்தில் இருந்து 18 மற்றும் 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர் களுக்கு செலவு குறைவதுடன், அவர்களின் வாங்கும் சக்தி அதிகரித்துள்ளது. பொருட்களை கொள்முதல் செய்ய இதுவே சிறந்த தருணம் ஆகும்.

    ஜி.எஸ்.டி. குறைப்பால், அரசுக்கு ரூ.70 ஆயிரம் கோடி நிகர வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. முதல் 5 ஆண்டுகளுக்கு வருவாய் இழப்பை ஈடு செய்வதாக மாநில அரசுகளுக்கு உறுதி அளித்துள்ளோம். எனவே, இந்த சுமையை மத்திய அரசே முழுமையாக ஏற்றுக்கொள்ளும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். 
    Next Story
    ×