search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arun Jaitley"

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது என நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்தார். #ArunJaitley #RafaleDeal
    புதுடெல்லி:

    பிரான்ஸ் நாட்டில் இருந்து 36 ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அரசு செய்து கொண்ட ஒப்பந்தத்தில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த முறைகேடு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.

    ஆனால் ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடக்கவில்லை என கடந்த வாரம் தீர்ப்பளித்தது. இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

    எனினும் இந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரசார் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் அவர்கள் போராடி வருவதால் இரு அவைகளும் முடங்கி வருகிறது.

    ஆனால் ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது என நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக தனது ‘டுவிட்டர்’ தளத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது:-

    ரபேல் ஒப்பந்தத்தை போபர்ஸ் ஒப்பந்தத்துடன் ஒழுக்கக்கேடாக ஒப்பிடும் முயற்சியில் ராகுல் காந்தி ஈடுபட்டு உள்ளார். ஆனால் ரபேல் ஒப்பந்தத்தில் இடைத்தரகர் இல்லை, லஞ்சம் இல்லை, ஒட்டாவியோ குவாத்ரோச்சி இல்லை.

    ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் அரசுக்கு எதிராக கூறப்பட்ட அனைத்து வார்த்தைகளும் பொய் என நிரூபிக்கப்பட்டு இருக்கிறது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக கூறப்பட்ட பொய்கள் அனைத்தும் வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை சுப்ரீம் கோர்ட்டு தெளிவுபடுத்தி இருக்கிறது.

    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக சுதந்திரமான, பாரபட்சமற்ற விசாரணையை நீதித்துறை நடத்தி இருக்கிறது. இதில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அது சட்டப்பூர்வமாகி விட்டது. கோர்ட்டு தீர்ப்புதான் இறுதியானது. இதை கோர்ட்டு மட்டுமின்றி வேறு யாராலும் மறு ஆய்வு செய்ய முடியாது.

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு மாறாக, ஒரு அரசியல் அமைப்பு (நாடாளுமன்ற கூட்டுக்குழு) எதையும் ஒருபோதும் கண்டு பிடிக்க முடியாது. எனவே ரபேல் விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைக்க முடியாது.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறியுள்ளார். #ArunJaitley #RafaleDeal 
    ரிசர்வ் வங்கியில் உள்ள இருப்பு தொகையை மத்திய அரசின் பயன்பாட்டுக்கு கேட்டதாக நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. #SCdismissesPIL #ArunJaitley
    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கியிடம் இருக்கும் உபரி நிதியான 9 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 3.5 லட்சம் கோடி ரூபாயை கேட்டு ரிசர்வ் வங்கி கவர்னருக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மத்திய அரசு மறுத்துள்ளது.

    இதே குற்றச்சாட்டை மையப்படுத்தி மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லிக்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி எஸ்.கே.கவுல் ஆகியோரை கொண்ட அமர்வின் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது.

    எம்.எல்.சர்மா

    இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதற்கான எந்தவொரு முகாந்திரமோ, காரணமோ இல்லை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் மனுதாரரான எம்.எல்.சர்மாவுக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.

    அபராத தொகையை செலுத்தும்வரை அவர் தாக்கல் செய்யும் எந்த மனுக்களையும் அனுமதிக்க வேண்டாம் என்று சுப்ரீம் கோர்ட் பதிவாளரை நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். #SCdismissesPIL #ArunJaitley
    ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசுக்கு உதவுவதாக இருக்கவேண்டும் என்றும் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது எனவும் நிதி மந்திரி அருண்ஜெட்லி கூறினார். #RBI #ArunJaitley
    புதுடெல்லி:

    மத்திய அரசுக்கும், நாட்டின் முதன்மை வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீபகாலமாக மோதல் போக்கு காணப்படுகிறது. சில திட்டங்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கவேண்டும் என்றும், தன்னிடம் இருக்கும் நிதியை சற்று குறைத்துக் கொள்ளவேண்டும் எனவும் மத்திய அரசு ரிசர்வ் வங்கியை வற்புறுத்தி வருகிறது.

    இதைத்தொடர்ந்து அண்மையில் மும்பையில் நடந்த ரிசர்வ் வங்கியின் இயக்குனர்கள் குழு கூட்டத்தில் மத்திய அரசின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்க நிபுணர் குழுவை நியமிக்கவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வங்கிக் கடன்கள் வழங்குவதை எளிமையாக்கிடவும் ரிசர்வ் வங்கி ஒப்புக்கொண்டது.

    இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    ரிசர்வ் வங்கி எடுக்கும் முடிவுகள் மத்திய அரசின் கொள்கைகளுக்கு உதவி செய்யும் விதமாக அமைந்திடவேண்டும். மத்திய அரசுடன் மோதல் போக்கை ஏற்படுத்துவதாக அமையக் கூடாது. ஏனெனில் சில துறைகளுக்கு நிதி அதிகமாக தேவைப்படுகிறது. எனவேதான் அனைத்து வித ஆலோசனைகளின் வாயிலாகவும் இதை உறுதி செய்து ரிசர்வ் வங்கியின் கவர்னரை செயலாற்றுவதற்கு தூண்டிவிட்டு வருகிறோம்.



    ரிசர்வ் வங்கி தன்னிடம் வைத்துள்ள நிதியின் ஒரு பகுதியை மத்திய அரசுக்கு ஒதுக்கி நாட்டின் வறுமையை ஒழிப்பதற்கு உதவிடவேண்டும். எனவே தன்னிடம் எவ்வளவு நிதி இருப்பை கைவசம் வைத்துக் கொள்ளலாம் என்பதை ரிசர்வ் வங்கி நிர்ணயிக்கவேண்டிய தருணம் இதுவாகும்.

    தன்னிடம் எப்போதுமே கையில் அதிக நிதி இருக்கவேண்டும் என்று ரிசர்வ் வங்கி கருதுவது தவறானது. மக்கள் கஷ்டப்படும் இக்கட்டான நேரங்களில் நீங்கள் (ரிசர்வ் வங்கி) கையில் அதிகமாக பணம் வைத்திருக்கவேண்டும் என்று கருதுகிறீர்கள்.

    ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி அதிகாரத்தில் மத்திய அரசு ஒரு போதும் அதன் விதிகளை மீறியதில்லை. வரம்பை தாண்டிச் செல்வதும் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார். #RBI #ArunJaitley
    10 நாளில் விவசாய கடன்களை ரத்துசெய்வதாக ராகுல் காந்தி கூறுவது மலிவான விளம்பரம் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley #RahulGandhi #PollPromise #FarmerLoan
    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார். அதற்கு மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பதில் அளித்தார்.

    அவர் கூறியதாவது:- ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க மாட்டோம் என்ற தைரியத்தில் இப்படிப்பட்ட வாக்குறுதிகளை ராகுல் கூறுகிறார். பகுதி அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால்கூட வளர்ச்சி பணிகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படும். ஒரு விஷயம் குறித்த ஞானம் இல்லாதவர்கள்தான், இதுபோன்ற மலிவான விளம்பரம் தேடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ArunJaitley #RahulGandhi #PollPromise #FarmerLoan
    ஜிஎஸ்டி வரியால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜனுக்கு அருண் ஜேட்லி பதில் அளித்துள்ளார். #gst #arunjaitley #RaghuramRajan

    புதுடெல்லி:

    ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம்ராஜன் அளித்த பேட்டியில், ஜி.எஸ்.டி. வரி மற்றும் பணம் மதிப்பு இழப்பு திட்டத்தால் இந்தியாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    உலக பொருளாதாரம் வளர்ந்து வரும் நிலையிலும் இந்தியா பின்னடைவை சந்தித்து வருகிறது என்று கூறினார்.

    இதற்கு பதில் அளிக்கும் வகையில் மத்திய நிதி மந்திரி அருண்ஜேட்லி கருத்து வெளியிட்டுள்ளார். டெல்லியில் யூனியன் வங்கியின் 100- வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அருண்ஜேட்லி பேசியதாவது:-

    குறை சொல்பவர்கள் எப்போதும் குறை சொல்லிக்கொண்டுதான் இருப்பார்கள்.

    ஜி.எஸ்.டி.வரி என்பது இந்தியாவில் கொண்டு வரப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க சீர் திருத்தமாகும். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மிக பெரிய சீர்திருத்தமாக இதை கொண்டு வந்துள்ளோம்.


    ஜி.எஸ்.டி. வரி திட்டம் உருவாக்கப்பட்டு 2017 ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வந்தது. அதன் பின்னர் முதல் 2 காலாண்டுகளில் மட்டும் வளர்ச்சியில் சில பாதிப்புகள் ஏற்பட்டன.

    அதன் பிறகு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. அடுத்த காலாண்டுகளில் 7 சதவீதமும், 7.7 சதவீதமும் வளர்ச்சியை கண்டுள்ளன. கடைசி காலாண்டில் 8.2 சதவீதம் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

    2012-2014-ம் ஆண்டுகளில் இந்திய வளர்ச்சி விகிதம் 5-ல் இருந்து 6 சதவீதம் என்ற வகையிலேயே இருந்தது. அதை விட சிறப்பான வளர்ச்சியை இப்போது பெற்று வருகிறோம்.

    வங்கிகளை பொறுத்த வரை செயல்படாத சொத்துக்கள், கணக்குகளை குறைத்தால் வங்கிகளின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    மேலும் இதில் உறுதியான திட்டங்களை உருவாக்க வேண்டும். அதற்கு பல வழிகள் உள்ளன. அதை செய்தால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.

    வங்கிகளை வலுப்படுத்துவதன் மூலம் அதன் பணப்புழக்கம் வளர்ச்சி அடைந்து மார்க்கெட்டில் நிலையான தன்மையை அடைய முடியும்.

    இவ்வாறு அருண்ஜேட்லி பேசினார். #gst #arunjaitley #RaghuramRajan

    வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியிடம் அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். #ArunJaitley #ArunJaitleyDaughter #MehulChoksi #RahulGandhi
    புதுடெல்லி:

    வங்கி மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்சியிடம் அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். எனவே, அருண் ஜெட்லி பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    பிரபல வைர வியாபாரிகள் நிரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு, வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர். இந்நிலையில், மெகுல் சோக்சியிடம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியின் மகள் ஊதியம் பெற்றதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டி உள்ளார்.



    தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அவர் கூறி இருப்பதாவது:- திருடர் மெகுல் சோக்சியிடம் சம்பளம் பெறுவோர் பட்டியலில் அருண் ஜெட்லியின் மகள் இருந்துள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கில் இருந்து அவரது பெயருக்கு பணம் மாற்றப்பட்டுள்ளது. (வங்கிக்கணக்கு எண்ணையும் வெளியிட்டுள்ளார்).

    ஆனால், அவருடைய தந்தையான நிதி மந்திரி அருண் ஜெட்லி, மெகுல் சோக்சியின் கோப்புகள் மீது முடிவு எடுக்காமல் தாமதம் செய்தார். அதன்மூலம் மெகுல் சோக்சியை தப்பி ஓட அனுமதித்தார்.

    எனவே, அருண் ஜெட்லி ராஜினாமா செய்ய வேண்டும். இந்த விவகாரத்தை ஊடகங்கள் மூடி மறைத்து விட்டன. ஆனால், நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.

    இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார். #ArunJaitley #ArunJaitleyDaughter #MehulChoksi #RahulGandhi 
    பெட்ரோல், டீசல் விலையில் பொது மக்களுக்கு இனி ஊக்கத்தொகை (விலை குறைப்பு) எதுவும் வழங்கப்படாது என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார். #PetrolDieselPrice #ArunJaitley
    புதுடெல்லி:

    பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மக்கள் பெரும சிரமத்துக்கு ஆளானார்கள். எனவே, இவற்றின் விலையை குறைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது. இதையடுத்து மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு தலா ரூ. 2.50 குறைத்து அறிவிப்பு வெளியிட்டது.

    இவ்வாறு விலை குறைக்கப்பட்டதால் எண்ணெய் நிறுவனங்களுக்கு வரக்கூடிய லாபத்தில் பெரும் பகுதி குறைந்தது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்களின் பங்குச்சந்தை விலையில் சரிவு ஏற்பட்டது. இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கடந்த வியாழக்கிழமை 10 சதவீதம் சரிவு ஏற்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை 16 சதவீதம் சரிவு ஏற்பட்டது.

    இந்துஸ்தான் பெட்ரோல் நிறுவனத்தில் 25 சதவீதமும், பாரத் பெட்ரோல் நிறுவனத்தில் 21 சதவீதமும் சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக எண்ணெய் நிறுவனங்கள் இழப்பை சந்தித்தன.

    மேலும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் நிறுவனங்களில் மத்திய அரசு நிறுவனமான ஓ.என்.ஜி.சி. அதிக அளவில் பங்குகளை வாங்கி இருந்தது. அந்த நிறுவனத்துக்கும் இழப்பு ஏற்பட்டது. பங்குச்சந்தை வீழ்ச்சி எண்ணெய் நிறுவனங்களை பெரும் கவலை அடைய செய்தது.

    இதையடுத்து மத்திய நிதி மந்திரி அருண் ஜேட்லி இது சம்பந்தமாக சில தகவல்களை வெளியிட்டார். அவர் கூறியதாவது:-


    எண்ணெய் நிறுவனங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை இனியும் தளர்த்த மாட்டோம். பெட்ரோல், டீசல் விலையில் பொது மக்களுக்கு இனி ஊக்கத்தொகை எதுவும் வழங்கப்படாது. அதாவது ஊக்கத்தொகை ரீதியாக இனி விலையை குறைக்க முடியாது. மத்திய அரசுக்கு இணையாக மாநில அரசுகளும் தங்கள் பங்குக்கு வரியை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

    பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் அதை ஏற்று வரியை குறைத்து இருக்கிறார்கள். ஆனால், பல மாநிலங்கள் வரியை குறைக்கவில்லை. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் குறைக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், கூட்டணி தலைவர்களும் பெட்ரோல்- டீசல் விலை உயர்ந்துவிட்டது, பண வீக்கம் அதிகமாகிவிட்டது என்று கூக்குரல் விடுகிறார்கள். ஆனால், அவர்கள் ஆளும் மாநிலங்களில் ஏன் இவற்றின் விலையை குறைத்து மக்களுக்கு பயனடைய செய்யக்கூடாது.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏற்கனவே மாநிலங்களுக்கு கூடுதல் வரி வருவாய் கிடைத்து வருகிறது. அதை ஏன் மக்களுக்கு விட்டு தரக்கூடாது. சராசரியாக மாநிலங்களில் பெட்ரோல், டீசல் வாட் வரி 29 சதவீதமாக உள்ளது. நாங்கள் பெட்ரோ, டீசல் மூலம் பெறுகிற வரியில் 42 சதவீதம் வரை மாநிலங்களுக்குதான் பகிர்ந்து கொடுக்கிறோம். அப்படி இருக்கும் போது, மாநில அரசுகளும் தனது பங்குக்கு வரியை குறைத்து இருக்க வேண்டும்.

    மத்திய அரசு ஆரோக்கியமான முறையில் வரிகளை வசூலித்து வருகிறது. அதே நேரத்தில் மக்கள் பயனடைய வேண்டும் என்பதற்காக பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகிறோம்.

    ஜி.எஸ்.டி.யில் 334 பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டதன் மூலம் ரூ.80 ஆயிரம் கோடிக்கு மக்களுக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. வருமான வரியில் ரூ.97 ஆயிரம் கோடி வரை குறைக்கப்பட்டு வரி செலுத்துவோருக்கு சலுகை அளித்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.  #PetrolDieselPrice #ArunJaitley
    மெகா கூட்டணி என்பது தோல்வியடைந்த ஒன்று, அது கொள்கைகளை கொலை செய்யவும், அரசுகளின் ஆயுளை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #ArunJaitley
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு (2019) நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு எதிராக மெகா கூட்டணி அமைக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு உள்ளன. இதற்கான முயற்சிகளில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக இறங்கி உள்ளன.

    ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டணி குழப்பம் நிறைந்தது என நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார். டெல்லியில் நேற்று நடந்த இந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் பங்கேற்ற அவர், இது தொடர்பாக கூறியதாவது:–

    இந்தியாவில் மெகா கூட்டணிக்கு நீண்ட வரலாறு உண்டு. சந்திரசேகர், வி.பி.சிங், சரண் சிங், ஐ.கே.குஜ்ரால், தேவேகவுடா ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் இதற்காக முயற்சி நடந்தது. இது, கொள்கைகளை கொலை செய்யவும், அரசுகளின் ஆயுட்காலத்தை குறைக்கவும் மேற்கொள்ளப்படும் பரிசோதனை ஆகும்.

    அந்த வகையில் மெகா கூட்டணி ஏற்கனவே முயற்சி செய்யப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு, தோல்வியடைந்த திட்டம் ஆகும். மிகப்பெரிய கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய கருவும், அதைச்சுற்றி சிறிய குழுக்களும் இருக்க வேண்டும். ஆனால் உங்களிடம் அவை இல்லை. தகுதியில்லாத தலைவர்கள் அல்லது குற்ற வழக்குகளில் இருந்து தப்புவதற்காக கூட்டணி சேர முயலும் தலைவர்களை கொண்டு கூட்டணி அமைக்க முடியாது.

    அப்படி இது போன்ற ஒரு கூட்டத்தை நீங்கள் அமைத்தால், வலுவான தலைவரை கொண்ட ஒரு நிலையான அரசுக்கும், முழுவதும் குழப்ப நிலையை கொண்டிருக்கும் ஒரு கூட்டணிக்கும் இடையிலான போட்டியாகவே 2019 தேர்தல் இருக்கும். இதில் பா.ஜ.க நிச்சயம் வெற்றி பெறும்.

    சர்வதேச தேக்கநிலை உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இருந்த போதும், இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் தேவைப்படும் நேரங்களில் இணக்கம், நிர்வாகம் மற்றும் கொள்கைகள் தேவைப்படுகிறது. இதற்கு குழப்பவாத கூட்டணிகள் உதவாது.

    வாராக்கடன்கள் அதிகரிப்பதற்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார். இந்த வி‌ஷயத்தில் சிலர் வளர வேண்டும் என நான் நினைக்கிறேன். கடந்த 2007–08 ஆண்டில் பொதுத்துறை வங்கிகள் மூலம் ரூ.18 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. சர்வதேச தேக்க நிலை நிலவியதை தொடர்ந்து படிப்படியாக அதிகரித்து 2014–ல் இது ரூ.55 லட்சம் கோடியாக உயர்ந்தது.

    முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வங்கிகள் கடன் வழங்கும் இலக்கை ஆண்டுதோறும் 31 சதவீதம் அதிகரித்தது. இதனால் திறனற்ற மற்றும் நிலையற்ற திட்டங்களுக்கு அதிக கடன் வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் இருந்துதான் வங்கி கொள்ளை தொடங்கி இருக்கிறது. எனவே இந்த உண்மையை காங்கிரஸ் தலைவர் புரிந்து கொள்ள வேண்டும்.

    ஆதார் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. இதன் மூலம் ஆதார் மீதான அரசின் சட்டப்பூர்வ நோக்கத்தை கோர்ட்டு ஏற்றுக்கொண்டு உள்ளது. இதில் செல்போன் எண் மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை என உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனால், நாடாளுமன்றத்தில் சட்டமியற்றுவதன் மூலம் இதை மீண்டும் கொண்டுவர முடியும்.

    ஓரினச்சேர்க்கை விவகாரத்தை அடிப்படை உரிமையாகவும், கருத்து சுதந்திரமாகவும் மாற்றியமைத்தால் பள்ளி விடுதி, சிறை, ராணுவ முகாம்களில் இந்த பாலியல் நடவடிக்கைகளை எவ்வாறு கட்டுப்படுத்த முடியும்?

    சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தை பொறுத்தவரை, குறிப்பிட்ட நடைமுறைகளில் இந்த உத்தரவை செயல்படுத்த முடியாது. ஏனெனில் இந்தியா போன்ற ஒரு பன்மைத்தன்மை கொண்ட ஒரு நாட்டில், இதன்மூலம் பல சமூக விளைவுகள் நேரிடக்கூடும். அப்படி இந்த உத்தரவில் உறுதியாக இருந்தால் அரசியல் சட்டம் 14 மற்றும் 21–ம் பிரிவுகளை அனைத்து மதங்களுக்கும் பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.
    ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அருண் ஜெட்லியின் விளக்கத்திற்கு முன்னாள் மந்திரி ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார். #RafealDeal #ArunJaitley #PChidambaram
    புதுடெல்லி:

    ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. ஆனால், விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனமோ, தங்களுக்கு தேவையான நிறுவனத்தை தாங்களே தேர்வு செய்து கொள்ளலாம் என விளக்கம் அளித்திருந்தது.



    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார். ரபேல் ஒப்பந்தத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாகவும், இது பற்றி பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறார். ஆனால், ராகுல் காந்தி மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது என்றும் ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும் என்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.

    இந்நிலையில், ரபேல் ஒப்பந்த விவகாரம் தொடர்பாக நிதி மந்திரிக்கு முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

    ‘உண்மைக்கு இரண்டு முகங்கள் இருக்க முடியாது என்கிறார் நிதி அமைச்சர் ஜெட்லி. முற்றிலும் சரி. எந்த முகம் உண்மை முகம் என்று எப்படி கண்டு பிடிப்பது? இரண்டு வழிகள் தாம் இருக்கின்றன. ஒன்று, விசாரணைக்கு உத்தரவிடுவது. இரண்டு, நாணயத்தைச் சுண்டி பூவா, தலையா என்று பார்ப்பது. நிதி அமைச்சர் இரண்டாவது வழியை விரும்புகிறாரோ?. ரபேல் விமான உடன்பாட்டில் தவறு நடந்திருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டு பிடிப்பதற்கு விசாரணையைத் தவிர வேறு வழியில்லை’ என ப.சிதம்பரம் கூறியுள்ளார். #RafealDeal #ArunJaitley #PChidambaram
    பிரதமரின் நேரடி தலையீட்டுல் செய்யப்பட்ட ரபேல் போர் விமான ஒப்பந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை என இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா வலியுறுத்தியுள்ளார். #Rafaledeal #DRaja
    சென்னை:

    சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இ.கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா கூறியதாவது:-

    ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் பிரதமர் மோடி நேரடியாகவே தலையிட்டு இருந்தார். இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தை நுழைத்த அதே வேளையில் இந்திய அரசுக்கு சொந்தமான ஹெச்.ஏ.எல். நிறுவனம் நிராகரிக்கப்பட்டது ஏன்? என்பது தான் இவ்விவகாரத்தில் எழும் அடிப்படை கேள்வியாக உள்ளது.

    இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலை அறிய மக்கள் விரும்புகிறார்கள். நிதி மந்திரி அருண் ஜெட்லி, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு பதிலாக இதில் நேரடி தொடர்புள்ள மோடிதான் விளக்கம் அளிக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ஆனால், இந்த அரசு எதையோ மறைக்கிறது என்பதைதான் பிரதமர் சாதித்து வரும் மவுனம் உறுதிப்படுத்துகிறது. எனவே, ரபேல் ஊழலில் மறைந்திருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rafaledeal #DRaja
    ரபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், “ஒப்பந்தத்தை ரத்து செய்ய மாட்டோம்” என நிதி மந்திரி அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். #Rafale #RahulGandhi #ArunJaitley
    புதுடெல்லி:-

    ரபேல் விமான பேரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை இணைக்க மத்திய அரசு வற்புறுத்தியதாக பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே சமீபத்தில் பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி இந்திய அரசியலில் புயலை கிளப்பியது. விமானத்தை தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், “எங்களுக்கு தேவையான நிறுவனத்தை நாங்களே தேர்வு செய்து கொள்ளலாம்” என விளக்கம் அளித்திருந்தது.

    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில், நிதி மந்திரி அருண் ஜெட்லி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ளார். அதில் கூறியதாவது:-

    ராகுல் காந்தி மத்திய அரசு மீது கூறி வரும் குற்றச்சாட்டுகளுக்கும், பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, ரபேல் விமானம் குறித்து அளித்த பேட்டிக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. 30-ம் தேதி ராகுல் ட்விட்டரில் ஒரு கருத்து தெரிவிக்கிறார். அடுத்த சில வாரங்களில் ஹாலண்டே சர்ச்சை கருத்தை வெளியிடுகிறார். இந்த இரண்டு கருத்துக்களும் நன்கு திட்டமிட்டு வெளியிடப்பட்டவை போல தோன்றுகிறது. இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறது. இரண்டும் ஒரே அலைவரிசையில் காணப்படுகின்றன. 



    ஏதோ ஒரு விதமான பழிவாங்கும் எண்ணத்தில் ராகுல் இருக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது. இந்த மொத்த குற்றச்சாட்டுகளுமே திட்டமிட்ட ஒன்றாக இருந்தாலும் நான் ஆச்சரியப்பட மாட்டேன். இரு நாடுகளின் எதிர்க்கட்சி தலைவர்களும் ஒரே அலைவரிசையில் பேசுகின்றனர். 

    பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டே, தான் முன்பு கூறியதை உடனே மறுக்கிறார். அவர் இரண்டாவதாக அளித்த பேட்டியில், “ ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என பிரான்சின் டசால்ட் நிறுவனத்துக்கு இந்திய அரசு அழுத்தம் கொடுத்ததா என்பது எனக்கு தெரியாது. இது குறித்து டசால்ட் நிறுவனம் தான் பதில் கூற வேண்டும்” என, குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த இரண்டு பேட்டிகளும் ஒன்றுக்கு ஒன்று முரண்பாடாக உள்ளன.

    ராகுல் காந்தி மற்றும் சில கட்சிகள் குற்றம் சாட்டுவதால் ஒப்பந்தத்ததை ரத்து செய்ய முடியாது. ரபேல் விமானங்கள் இந்தியா வந்தடையும்

    என அருண் ஜெட்லி பேசினார்.
    ரபேல் போர் விமான விவகாரத்தில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வரும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒரு கோமாளி இளவரசர் என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி விமர்சித்துள்ளார். #ArunJaitley #RahulGandhi
    புதுடெல்லி :

    பிரான்சிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்குவதற்காக மத்திய அரசு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இவ்விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் - பா.ஜனதா இடையே நீண்ட வாக்குவாதம் நீடித்து வருகிறது.

    சமீபத்தில் ஊடகங்களிடம் பேசிய மத்திய ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன், ரபேல் போர் விமானத்தை தயாரிக்கிற தகுதித்திறனை இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் பெற்றிருக்கவில்லை என தெரிவித்திருந்தார்.

    அவரது இந்த கருத்துக்கு மறுப்பு தெரிவித்த இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் முன்னாள் தலைவரான டி.எஸ். ராஜூ, ரபேல் போர் விமானத்தை இந்தியாவிலேயே மத்திய அரசுக்கு சொந்தமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்க முடியும். அதற்கான தகுதித்திறன், எங்களுக்கு இருந்தது என கூறினார்.

    இதன் பின்னர் நிர்மலா சீதாராமன் மீண்டும் ராகுல் தாக்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், ‘ஊழலை பாதுகாக்கும் பொறுப்பில் அமர்த்தப்பட்டுள்ள ரபேல் மந்திரி (நிர்மலா சீதாராமன்) பொய் சொல்லி இப்போது சிக்கிக்கொண்டார்.

    ரபேல் போர் விமானத்தை தயாரிக்கிற திறன் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு கிடையாது என்ற அவருடைய கூற்றை  அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் டி.எஸ். ராஜூ மறுத்துள்ளார். எனவே அவரது நிலை ஏற்கத்தக்கது அல்ல. அவர் பதவி விலக வேண்டும்’ என்றார்.



    இந்நிலையில், ரபேல் ஒப்பந்தம் மற்றும் தொழிலதிபர்களுக்கு கடன் தள்ளுபடி தொடர்பாக ராகுல் காந்தி தொடர்ந்து பொய் சொல்வதாகவும், அவர் ஒரு கோமாளி இளவரசர் என்றும் நிதி மந்திரி அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் குறிப்பிட்டுள்ளதாவது :-
     
    ரபேல் ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி கூறியது அனைத்தும் முதல் பொய்யாகும். 15 தொழில் அதிபர்களுக்கு மத்திய அரசு ரூ.2.5 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்ததாக கூறுவது 2 வது பொய்யாகும். முதிர்ச்சியடைந்த ஜனநாயகத்தில் இப்படிப்பட்ட பொய்களை கூறிவரும் ஒருவர் பொதுவாழ்வுக்கு தகுதியற்றவர் என கருதப்படுவார்.

    பொய்களை கூறி சூழலை மாசுபடுத்தும் ஒரு கோமாளி இளவரசரை பொது சொற்பொழிவுகள் ஆற்ற அனுமதிக்கலாமா? என்பது குறித்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். #ArunJaitley #RahulGandhi
    ×