என் மலர்tooltip icon

    செய்திகள்

    • 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.
    • ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை பஸ் நிலையம் அருகில் தங்கம் உருக்கும் தொழில் கூடம் உள்ளது. இதனை மகாராஷ்டிராவை சேர்ந்த சுஹாஷ் என்பவர் கடந்த 30 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். இவரிடம் அதே மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்ற 17 வயது சிறுவன் கடந்த வாரம் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

    இந்த நிலையில், சுஹாஷ் மற்றும் ஓம்கார் மட்டும் நேற்று கடையில் இருந்துள்ளனர். அப்போது சுமார் 1½ கிலோ தங்க நகைகளை உருக்கி, அதனை தங்க கட்டியாக மாற்றிய சுஹாஷ், அதனை எடை போட்டு எடுத்து வருமாறு சிறுவன் ஓம்காரிடம் கொடுத்துள்ளார். அதனை எடுத்துக்கொண்டு கடையின் முகப்பு பகுதிக்கு வந்த ஓம்கார், திடீரென மனம் மாறி தங்க கட்டியை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஓடி தலைமறைவானார். இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.

    உடனடியாக இதுகுறித்து மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.தொடர்ந்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு நேரில் விரைந்து விசாரணை மேற்கொண்டார். தொடர்ந்து, 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சிறுவனை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, ரெயில் நிலையம் அருகில் சிறுவன் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சிறுவனை லாவகமாக மடக்கி கைது செய்தனர்.

    மேலும், அவரிடம் இருந்த 1½ கிலோ தங்க கட்டியையும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, அவரை மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் கூர்நோக்கு இல்லத்துக்கு அனுப்பி வைத்தனர்.

    • யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
    • அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குள் நாட்டு வெடி குண்டை விழுங்கியதால், இரண்டு வயது பெண் யானை குட்டி பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள குத்தியாலத்தூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றபோது, இறந்து கிடந்த யானை குட்டியின் உடலைக் கண்டெடுத்தனர்.

    வனத்துறை கால்நடை மருத்துவர் நடத்திய முதற்கட்ட சோதனையில், யானை குட்டியின் வாய் மற்றும் தும்பிக்கைப் பகுதியில் பலத்த இரத்தக் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

    யானை குட்டியின் பிரேத பரிசோதனையில், அது சக்தி வாய்த்த நாட்டு வெடிகுண்டை விழுங்கியதால் வாய் சிதைந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

    காட்டுப்பன்றிகள் அல்லது யானைகள் விளைநிலங்களுக்குள் வருவதைத் தடுக்க விவசாயிகள் இது போன்ற வெடிகுண்டுகளைப் பயன்படுத்துவது வழக்கம்.

    இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்திய வனத்துறையினர், அந்தப் பகுதியைச் சேர்ந்த காளிமுத்து (43) என்ற விவசாயியைக் கைது செய்தனர்.

    அவர் தனது விளைநிலத்தைப் பாதுகாக்க இந்த வெடிகுண்டை பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இது குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    உயிரிழந்த யானை குட்டியின் உடல், வனத்துறை விதிகளின்படி அதே இடத்தில் புதைக்கப்பட்டது.  

    • ‘ஜன நாயகன்’ பட விவகாரத்தில் மத்திய அரசு விஜய்க்கு அரசியல் அழுத்தம் தருவதாக தி.மு.க.வும், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
    • ‘ஜன நாயகன்’ படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்.

    'ஜன நாயகன்' படத்திற்கு தணிக்கை சான்று வழங்காததால் அறிவித்த தேதியில் படம் வெளியாகாமல் போனது. மேலும் இவ்விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரிக்க உள்ளது.

    இதனிடையே, 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் மத்திய அரசு விஜய்க்கு அரசியல் அழுத்தம் தருவதாக தி.மு.க.வும், தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், 'ஜன நாயகன்' பட விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    'ஜன நாயகன்' படத்தைத் தடுக்க தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மேற்கொண்ட முயற்சி தமிழ் கலாச்சாரத்தின் மீதான தாக்குதலாகும்.

    தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் நீங்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டீர்கள் Mr.மோடி என்று கூறியுள்ளார். 



    • காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.
    • எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

    மும்பை மாநகராட்சி தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமையின் அறிவுறுத்தலின்படி காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்து வரும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், நேற்று மும்பை தெட்சணமாற நாடார் சங்கம் கிளை சேர்மன் காசிலிங்கம் தலைமையில் பொருளாளர் பொன்ராஜ், நிர்வாகிகள் ஜஸ்டின், ஆல்பர்ட் உட்பட பலர் சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தனர்.

     

    கடந்த 2 நாட்களாக தாராவி பகுதியில் வாக்குகள் சேகரிப்பில் ஈடுபட்ட எம்.பி. விஜய்வசந்த் நேற்று வார்டு 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலு அவர்களை ஆதரித்து கை சின்னத்தில் வாக்குகள் சேகரித்தார்.

    சாலிமார் வாடு பகுதியில் 174ல் காங்கிரஸ் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஈஸ்வரி ஆர்.வேலுவை ஆதரித்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு கை சின்னத்திற்கு வாக்குகள் கேட்டு பிரசாரம் செய்தார். நிறைவாக எம்.பி. விஜய் வசந்துக்கு நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து ஆளுயர மாலை அணிவித்து கவுரவித்தனர்.

     

    இந்த பொதுக்கூட்டத்தில் ஹோலிவாட காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • பல மொழி படங்களில் நடித்தாலும் கரகாட்டகாரன் படம்தான் அவரது தனி அடையாள சின்னமாக இருந்து வருகிறது.
    • தாயார் தேவிகா திடீர் இறப்பு அவரை நிலைகுலைய செய்தது.

    கரகாட்டகாரன் படத்தில் ராமராஜனுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கனகா. படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியுடன் அதிசயபிறவி மற்றும் தங்கமான ராசா, பெரிய வீட்டுபண்ணைக்காரன், கும்பக்கரை தங்கய்யா, தாலாட்டு கேக்குதம்மா, சரத்குமாருடன் சாமுண்டி என அடுக்கடுக்காக படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

    குறுகிய காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்தாலும் கரகாட்டகாரன் படம்தான் அவரது தனி அடையாள சின்னமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தாயார் தேவிகா திடீர் இறப்பு அவரை நிலைகுலைய செய்தது.

    இதைத் தொடர்ந்து அடையாரில் உள்ள அவரது வீட்டில் தனிமையில் வசித்து வந்தார். வீட்டோடு தனிமையில் வாழ்ந்து வந்த கனகாவை நடிகை குட்டி பத்மினி திடீரென சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. புகைப்படத்தில் அவர் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறி இருந்தார்.

    இந்நிலையில் நடிகர் ராமராஜனை கனகா திடீரென தற்போது நேரில் சந்தித்து பேசி உள்ளார். ராமராஜன் வீட்டில் மதிய உணவும் சாப்பிட்டுள்ளார். பல வருடங்களுக்கு பிறகு கரகாட்டகாரன் ஜோடியின் திடீர் சந்திப்பு சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.

    • இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.
    • பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    அமெரிக்கக் கடற்படையின் ரகசியங்களைச் சீனாவிற்கு விற்ற 25 வயது முன்னாள் கடற்படை வீரர் ஜின்ச்சாவ் வெய் என்பவருக்கு அமெரிக்க மத்திய நீதிமன்றம் 200 மாதங்கள் (சுமார் 17 ஆண்டுகள்) சிறை தண்டனை விதித்துள்ளது.

    சான் டியாகோவில் உள்ள USS Essex என்ற போர்க்கப்பலில் பணியாற்றி வந்த வெய், 2022-ஆம் ஆண்டு முதல் சீன உளவுத்துறை அதிகாரியுடன் தொடர்பில் இருந்துள்ளார்.

    வெய் சுமார் 50-க்கும் மேற்பட்ட ரகசிய ஆவணங்கள் மற்றும் தொழில்நுட்ப கையேடுகளைச் சீனாவிற்கு வழங்கியுள்ளார்.

    இதில் போர்க்கப்பல்களின் ஆயுத அமைப்புகள், ரேடார் தொழில்நுட்பம் மற்றும் முக்கிய ராணுவப் பயிற்சிகளின் வரைபடங்கள் அடங்கும்.

    அமெரிக்கக் கடற்படையின் தாக்குதல் திறன்கள் குறித்த ரகசியத் தகவல்களை அவர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களாக எடுத்து அனுப்பியுள்ளார். இதற்காக பல லட்சம் ரூபாய் லஞ்சமாக வெய் பெற்றுள்ளார்.

    பணத்திற்காக தான் இதை செய்ததாக வெய், நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, "வெய் தனது தனிப்பட்ட ஆதாயத்திற்காகத் தனது சக வீரர்களின் உயிரையும், நாட்டின் பாதுகாப்பையும் பணயம் வைத்துள்ளார். இது மன்னிக்க முடியாத குற்றம்" என்று கூறி 200 மாதங்கள் சிறை தண்டனை விதித்தனர். 

    சீன வம்சாவளியை சேர்ந்த வெய்-க்கு 2022-ஆம் ஆண்டு அவர் அமெரிக்க கடற்படையில் சேர்ந்தபோதுதான் அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்பட்டது.

    குடியுரிமை விண்ணப்பம் பரிசீலனையில் இருந்தபோதே அவர் ராணுவ ரசிகசியங்களை கசிய விட்டுள்ளார். வெய் போலவே  ஜாவோ என்ற மற்றொரு அமெரிக்க கடற்படை வீரரும் சீனாவுக்கு உளவு பார்த்த வழக்கில் சிறை தண்டனை பெற்றிருந்தார். இந்த தொடர் சம்பவங்கள் அமெரிக்க ராணுவத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாடாக கருதப்படுகிறது.  

    • 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.
    • 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்!

    சென்னை:

    தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சாதி பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடெங்கும் பொங்கட்டும்!

    கழகத்தினர் பொங்கல் விழாக்கள், விளையாட்டுப் போட்டிகள், கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்திப் பரிசுகள் வழங்கிடுங்கள்.

    நாளை சென்னை சங்கமம் 2026 கலைவிழாவைச் சென்னையில் தொடங்கி வைக்கிறேன். 17-ஆம் நாள் மதுரை அலங்காநல்லூர் சென்று கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளைத் தொடங்கி வைக்கவுள்ளேன்.

    2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாகப் பொங்கட்டும்! என்று கூறியுள்ளார். 



    • சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.
    • தை அமாவாசை.

    13-ந் தேதி (செவ்வாய்)

    * மதுரை செல்லத்தம்மன் சிம்மாசனத்தில் பவனி.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

    * சுவாமிமலை முருகனுக்கு ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * குரங்கணி முத்துமாலை அம்மன் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந் தேதி (புதன்)

    * சர்வ ஏகாதசி.

    * போகிப் பண்டிகை.

    * சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு அலங்கார திருமஞ்சனம்.

    * மதுரை கூடலழகர், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் புறப்பாடு.

    * சமநோக்கு நாள்.

    15-ந் தேதி (வியாழன்)

    * தைப் பொங்கல்.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் விழா தொடக்கம்.

    * மதுரை செல்லத்தம்மன் காலை சப்பரத்திலும், இரவு குதிரை வாகனத்திலும் பவனி.

    * திருவில்லிபுத்தூர் ஆண்டாள் நின்ற திருக்கோலம், மாலை தங்கப் பல்லக்கில் ஊஞ்சல் சேவை.

    * சமநோக்கு நாள்.

    16-ந் தேதி (வெள்ளி)

    * மாட்டுப் பொங்கல்.

    * பிரதோஷம்.

    * மதுரை கூடலழகர் பெருமாள் கணு உற்சவ விழா தொடக்கம்.

    * திருவரங்கம் நம்பெருமாள், மன்னார்குடி ராஜ கோபால சுவாமி, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தலங்களில் பாரி வேட்டைக்கு எழுந்தருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந் தேதி (சனி)

    * உழவர் திருநாள்.

    * மதுரை செல்லத்தம்மன் விருட்சப சேவை.

    * திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் காலை கருட வாகனத்திலும், இரவு அனுமன் வாகனத்திலும் பவனி.

    * கல்லிடைக்குறிச்சி, திருவாவடுதுறை தலங்களில் சிவபெருமான் பவனி.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந் தேதி (ஞாயிறு)

    * தை அமாவாசை.

    * தென்காசி விசுவநாதர், சங்கரன்கோவில் சங்கர நாராயணன் தலங்களில் லட்சதீபம்.

    * மதுரை மீனாட்சி அம்மனுக்கு வைரக்கிரீடம் சாற்றியருளல்.

    * கீழ்நோக்கு நாள்.

    19-ந் தேதி (திங்கள்)

    * மதுரை செல்லத்தம்மன் ரத உற்சவம்.

    * திருமாலிருஞ்சோலை கள்ளழகர் தைலக்காப்பு.

    * திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் விழா தொடக்கம்.

    * மேல்நோக்கு நாள்.

    • திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
    • மாநகர முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர்:

    இந்திய துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், நாளை தனது சொந்த ஊரான திருப்பூருக்கு வருகிறார். டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வருகை தரும் அவர், நாளை மாலை காரில் திருப்பூர் பிச்சம்பாளையத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வருகிறார். பின்னர் இரவு அங்கு தங்குகிறார். நாளைமறுநாள் (வியாழக்கிழமை) காலை திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவில் உள்ள தனது உறவினர் வீட்டு புதுமனை புகுவிழா மற்றும் பொங்கல் விழாவில் பங்கேற்கிறார்.

    அதன்பின்னர் மதியம் 2 மணி அளவில் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு, கோவை கொடிசியாவில் நடக்கும் நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார். இதைத்தொடர்ந்து அன்று மாலை விமானம் மூலம் டெல்லி புறப்படுகிறார்.

    துணை ஜனாதிபதி திருப்பூர் வருகையையொட்டி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் நேரடி மேற்பார்வையில் இரண்டு துணை கமிஷனர்கள், 4 உதவி கமிஷனர்கள், 10 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பூர் மாநகரில் உள்ள லாட்ஜுகள், தங்கும் விடுதிகளில் நேற்று இரவு முதல் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அங்கு யாராவது சந்தேகப்படும்படியாக தங்கி உள்ளார்களா? என விசாரணை நடத்தினர். மேலும் சந்தேகப்படும்படியாக யாராவது தங்கி இருந்தால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கவும் லாட்ஜ் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் மாநகர முழுவதும் போலீசார் தீவிர வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்கிடையே துணை ஜனாதிபதி தங்கியிருக்கும் இடம், நிகழ்ச்சி நடைபெறும் இடம், அவர் செல்லும் வழித்தடம் ஆகியவற்றில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி டிரோன்கள் பறக்க விடும் நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே தெரிவித்துள்ளார். 

    • போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.
    • சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    ஈரானில் பொருளாதார நெருக்கடி மற்றும் விலை வாசி உயர்வு ஆகியவற்றால் அரசு மற்றும் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகிறது.

    அங்கு 2 வாரங்களுக்கு மேலாக போராட்டங்கள் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதனால் ஈரானில் பல இடங்களில் வன்முறை ஏற்பட்டது. போராட்டங்கள் பரவுவதை தடுக்க செல்போன், இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    ஆனாலும் போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. இதற்கிடையே போராட்டம்-வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 646-ஆக உயர்ந்துள்ளது.

    இதற்கிடையே ஈரானில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களுக்கு அந்நாட்டு அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    போராட்டத்தில் பங்கேற்கும் எவரும் கடவுளின் எதிரி என்று கருதப்படுவார்கள். அது மரண தண்டனைக்குரிய குற்றம் என்று தெரிவித்தது.

    இந்த நிலையில் போராட்டத்தில் பங்கேற்ற வாலிபர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    தலைநகர் தெஹ்ரானின் புறநகர்ப் பகுதியான பர்திசை சேர்ந்த சுல்தானி(வயது 26) என்பவர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கடந்த 8-ந்தேதி கைது செய்யப்பட்டார்.

    அவருக்கு கடந்த 11-ந்தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் சுல்தானியை குடும்பத்தினர் 10 நிமிடங்கள் மட்டுமே சந்திக்க அனுமதிக்கப்பட்டனர்.

    சுல்தானிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை நாளை நிறைவேற்றப்பட உள்ளதாக ஒரு மனித உரிமை அமைப்பு தெரிவித்தது. போராட்டத்தில் பங்கேற்றதாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முதல் நபரும் இவரே ஆவார். 

    • ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.
    • மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது.

    அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தபடி உள்ளனர். மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் தொடக்கத்தில் இருந்தே பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருக்கிறது.

    இந்தநிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் சபரிமலையில் நாளை (14-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று புறப்பட்டது.

    திருவாபரண ஊர்வலம் நேற்று இரவு ஆயரூர் புதியகாவு தேவி கோவிலில் தங்கியது. பின்னர் இன்று காலை அங்கிருந்து புறப்பட்டது. திருவாபரணங்கள் அடங்கிய பெட்டியை அதற்காக விரதமிருந்த பக்தர்கள் தூக்கி வந்தனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் பக்தர்கள் திரண்டு நின்று திருவாபரணத்தை வரவேற்று வழிபட்டனர்.

    திருவாபரண ஊர்வலம் இன்று இரவு தேதிலாகா வனத்துறை சத்திரத்தில் தங்குகிறது. பின்பு நாளை காலை அங்கிருந்து புறப்பட்டு, மதியம் பம்பை கணபதி கோவிலிக்கு வந்து சேருகிறது. அங்கிருந்து புறப்பட்டு, சன்னிதானத்திற்கு மாலை 6 மணியளவில் திருவாபரணங்கள் வந்து சேரும்.

    மகரவிளக்கு பூஜை நடக்கும் நாளைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்பு 2:45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு பிற்பகல் 3:08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது.

    அதன் தொடர்ச்சியாக மாலை 6:30 மணியளவில் திருவாபரணங்கள் சன்னிதானத்தை வந்தடைகிறது. அவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும். அப்போது பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மகரஜோதி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களாகவே சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஆங்காங்கே பல இடங்களில் குடில் அமைத்து தங்க தொடங்கினர். பெரியானை வட்டத்தில் அமைக்கப்பட்டிருக்கும் விரிகளில் ஆயிரக்கணக்கானோர் தங்கியிருக்கின்றனர்.

    அது மட்டுமின்றி பம்பை மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் டெண்ட் அமைத்து தங்கி வருகின்றனர். இன்று வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும் சாமி சரிதனத்துக்கு பின் ஆங்காங்கே தங்கியிருக்கின்றனர். இதனால் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்களாகவே காணப்படுகின்றனர்.

    • மூன்று விதமாக கைதிகள் பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது.
    • இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.

    தவறு செய்து தண்டனை அனுபவிக்கக்கூடியவர்களை அடைக்கக்கூடிய இடமாக இருக்கும் சிறைச் சாலை, தொடக்க காலத்தில் மிகவும் கடினமான இடமாக இருந்தது. காலப்போக்கில் பல வசதிகளை கொண்ட இடமாக சிறைச்சாலைகள் மாறிவிட்டன.

    அது மட்டுமின்றி தவறு செய்து தண்டனை அனுபவிப்பவர்கள், தண்டனை காலத்தில் திருந்துவதற்கான ஒரு இடமாகவும் மாறியிருக்கிறது. அதற்காக அந்தந்த மாநில அரசுகள், தங்களது மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கு பல்வேறு தொழில்களை கற்றுக்கொடுப்பது மட்டுமின்றி, அந்த தொழிலில் ஈடுபடுவதற்கு ஊதியத்தையும் கொடுக்கிறது.

    இதனால் பல கைதிகள் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகி வெளியே செல்லும் போது, ஒரு பெருந்தொகையை வாங்கிச் செல்கிறார்கள். அது மட்டுமின்றி ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளியே சென்றபிறகு, ஜெயிலில் பார்த்த தொழிலை தொடர்ந்து பார்த்து வாழ்க்கையை நடத்தும் வகையில் பல கைதிகள் வடிவமைக்கப்படுகிறார்கள்.

    இந்தநிலையில் கேரள மாநிலத்தில் ஜெயில்களில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளுக்கான ஊதியத்தை அம்மாநில அரசு பல மடங்கு உயர்த்தி உள்ளது. கேரள மாநிலத்தில் திருவனந்தபுரம், திருச்சூர், மலப்புரம், கண்ணூர் ஆகிய இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் இருக்கின்றன. கொல்லம் உள்ளிட்ட பல இடங்களில் மாவட்ட மற்றும் கிளை சிறைகளும் இருக்கின்றன.

    இங்கு அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை பயன்படுத்தி துணி, தோல் மற்றும் அலுமினிய பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. அது மட்டுமின்றி பல்வேறு வேலைகளும் கைதிகளுக்கு வழங்கப்படுகின்றன. அவ்வாறு ஈடுபடும் கைதிகளுக்கு தகுதியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படுகிறது.

    திறமையாக வேலை செய்பவர்கள், பாதியளவு திறமையாக வேலை செய்பவர்கள், திறமையற்ற முறையில் வேலை செய்பவர்கள் என மூன்று விதமாக கைதிகள் பிரிக்கப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. கைதிகளுக்கான ஊதியம் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிகரிக்கப்படும். அதன்படி இறுதியாக கடந்த 2018-ம் ஆண்டு கைதிகளுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டது.

    இந்தநிலையில் தற்போது கைதிகளுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதுவும் ஊதியம் பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. திறமையான வேலையில் ஈடுபடுபவர்களின் ஊதியம் ரூ.152 ஆக இருந்தது. அது தற்போது 620 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

    அதேபோல் பாதியளவு திறமையான வேலை செய்பவர்களுக்கான ஊதியம் 127 ரூபாயில் இருந்து 560 ரூபாயாகவும், திறமையில்லாத வேலை பார்ப்பவர்களுக்கான ஊதியம் ரூ.63-ல் இருந்து ரூ.530 ஆகவும் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

    கேரள மாநிலத்தில் கைதிகளுக்கான சம்பளம் இவ்வளவு அதிகமாக உயர்த்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இந்த ஊதிய உயர்வு மூலமாக கேரள ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் பயன்பெறுவார்கள்.

    ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தாலும் கைதிகள் தங்களின் வாழ்வில் தன்னிறைவு பெற வேண்டும் என்ற நோக்கத்திலே கைதிகளின் ஊதியம் உயர்த்தப்பட்டு இருப்பதாக சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமன்றி தமிழ்நாடு, டெல்லி போன்ற மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கையில், கேரளாவில் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஊதியம் குறைவாக இருந்ததால், தற்போது அதிகளவில் உயர்த்தப்பட்டு இருப்பதாகவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    வழக்குகளில் தண்டனை பெற்று வந்தாலும் தங்குமிடம், அசைவ உணவு வகைகள் என்று பல வசதிகள் இலவசமாக கிடைத்து வந்தநிலையில், தற்போது சம்பளமும் பல மடங்கு உயர்த்தியிருப்பது கைதிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

    ×