search icon
என் மலர்tooltip icon

    திருவள்ளூர்

    • மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.
    • தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அதிமுகதான்.

    திருவள்ளூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக கூட்டணி என்பது மக்களுக்கு நன்மை செய்யும் கூட்டணி. பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாநில கட்சிகளை புறக்கணிக்கின்றனர்.

    திமுக எம்.பி.க்கள் தமிழக மக்களுக்காக என்ன செய்தனர்? முதல்வர் திட்டங்களை கூறி வாக்கு கேட்காமல், எங்களை விமர்சிக்கிறார்.

    இரட்டை வேடம் போடும் கட்சி திமுக. அதிமுகவையும், என்னையும் விமர்சிப்பதுதான் முதல்வர் ஸ்டாலினின் தேர்தல் பரப்புரையாக இருக்கிறது.

    திமுக மற்றும் கூட்டணியில் உள்ள 38 எம்பிக்கள் தமிழகத்திற்கு எதுவும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரஸூடன் கூட்டணியில் இருந்த திமுக 14 ஆண்டுகள் தமிழகத்திற்கு என்ன செய்தீர்கள் ?

    மத்தியிலும், மாநிலத்திலும் கொள்ளையடிக்க வேண்டும் என்பதே திமுகவின் நிலைப்பாடு.

    தமிழகத்திற்கு பாதிப்பு ஏற்படும்போது கடுமையாக எதிர்க்கும் கட்சி அதிமுகதான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கோடை காலைத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை ஓலை விசிறி தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஒரு ஜோடி விசிறியின் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை, திருத்தணி உள்ளிட்ட பல இடங்களில் வெயிலின் தாக்கம் 100 டிகிரிக்கு மேல் பதிவாகி வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, கிர்ணி உள்ளிட்ட பழங்கள், குளிர்பானத்தை தேடி மக்கள் செல்கிறார்கள். இதனால் சாலையோரங்களில் ஏராளமான திடீர் குளிர்பான கடைகள் முளைத்து உள்ளன.

    திருத்தணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் மலைகள் சூழ்ந்து உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பகலில் வெயில் கொளுத்துவதால் வெப்பத்தினால் மக்கள் தவித்து வருகிறார்கள். வீட்டில் உள்ள மின் விசிறிகளில் இருந்து அனல் காற்று வீசுவதால் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் பனை ஓலை விசிறிகளை தேடி மக்கள் திரும்பி உள்ளனர். வெயிலுக்கு இதமான குளிர்ந்த காற்று தரும் பனை ஓலை விசிறிகளை திருத்தணி ஒன்றியம் சிறுகுமி ஊராட்சிக்கு உட்பட்ட வி.சி.ஆர். கண்டிகை கிராமத்தில் அதிக அளவில் செய்யப்பட்டு வருகின்றன.

    கோடை காலைத்தை முன்னிட்டு 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பனை ஓலை விசிறி தயாரித்து விற்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு ஜோடி ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

    இதுகுறித்து பனை ஓலை விசிறி செய்யும் பெண் ஒருவர் கூறும்போது, விசிறி செய்வதற்கு கோடைகாலம் தொடங்குவதற்கு சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னரே பனை ஓலைகளை மரங்களில் இருந்து வெட்டி எடுத்து வந்து உலறவைப்போம்.

    தற்போது அதிகரித்து வரும் வெயிலினால் ஏற்படும் புழுக்கத்தில் இருந்தும், அனல் காற்றில் இருந்தும் பொதுமக்கள் தப்பிக்க இந்த பனை ஓலை விசிறிகளை விரும்பி வாங்கி செல்கின்றனர். ஒரு ஜோடி விசிறியின் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பகுதியில் தயாரிக்கப்படும் விசிறிகள் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், வாலாஜா, ஆற்காடு, ஆரணி, திருவண்ணாமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சில்லரை விற்பனையாகவும், மொத்த விற்பனையாகவும் அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதால் பனை ஓலை விசிறி விற்பனை அதிகளவு இருக்கும் என்று நம்புகிறோம் என்றார்.

    • மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.
    • திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல்களை கட்டி உள்ள நிலையில் போட்டியிடும் வேட்பாளர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு பணத்தை வாரி வழங்கி வருகிறார்கள்.

    இந்த பணத்தை வைத்தே கட்சி நிர்வாகிகள் தங்களுடன் வருபவர்களுக்கு செலவு செய்கிறார்கள். மாவட்ட அளவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர்களிடம் இது போன்ற பணம் மொத்தமாக வழங்கப்பட்டு பின்னர் பிரித்து கொடுக்கப்படுகிறது.

    ஒவ்வொரு கட்சியிலும் பொறுப்பில் இருப்பவர்கள் லட்சக்கணக்கில் பணத்தை வாங்கி அதனை கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு கொடுத்து செலவு செய்ய சொல்லி வருகிறார்கள் .

    கூட்டத்துக்கு ஆட்களை சேர்ப்பது பிரசாரத்துக்கு வருபவர்களுக்கு சாப்பாடு வாங்கி கொடுப்பது என அத்தனை செலவுகளும் இந்த பணத்தை வைத்தே செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் தனக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக கூட்டணி கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகி ஒருவரிடம் ரூ.4 லட்சத்து 73 ஆயிரம் பணத்தை கொடுத்துள்ளார்.

    வேட்பாளரிடம் சென்று 500 ரூபாய் கட்டுகளாக பணத்தை வாங்கிய அந்த மாவட்ட நிர்வாகி கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளுக்கு பணத்தை பிரித்துக் கொடுக்காமல் ஓட்டம் பிடித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குறிப்பிட்ட கட்சியின் ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் இது பற்றி கட்சியின் மாவட்ட தலைமைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

    இந்த தகவலை தங்களது பகுதியில் உள்ள வாட்ஸ்அப் குழுக்களிலும் பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

    கட்சியின் பெயர் மாவட்ட செயலாளர் ஆகியோரது பெயரையும் படத்தையும் வெளியிட்டு வேட்பாளரிடம் பணத்தை வாங்கிக் கொண்டு சென்றவர் தலைமறைவாகி விட்டார். கட்சி நிர்வாகிகள் யாருக்கும் அவர் பணத்தை பிரித்து கொடுக்க வில்லை என்று குற்றம் சாட்டி இருக்கிறார்கள்.

    தங்களது கட்சியின் பெயரை குறிப்பிட்டு நாங்கள் பணத்திற்காக வேலை செய்பவர்கள் இல்லை இருப்பினும் மாவட்ட நிர்வாகி பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதால் செலவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

    இதற்கு மேல் பணம் கொடுப்பதாக இருந்தால் அவரிடம் கொடுக்க வேண்டாம் என்றும் தங்களிடம் தனித்தனியாக பணத்தை கொடுத்து விடுங்கள் என்றும் கூறியிருக்கிறார்கள்.

    இந்த விவகாரம் திருவள்ளூர் தொகுதி முழுவதும் பரபரப்பான பேச்சாக மாறியிருக்கிறது. தேர்தல் செலவுக்காக கொடுத்த பணத்தை கட்சி நிர்வாகி சுருட்டிக்கொண்டு ஓட்டம் பிடித்து இருக்கும் சம்பவத்தை பார்த்து திருவள்ளூர் தொகுதி வாக்காளர்கள் கை கொட்டி சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    சம்பந்தப்பட்ட கட்சி நிர்வாகிகளும் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறார்கள்.

    • பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை.
    • பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பண பட்டுவாடாவை தடுப்பதற்காக தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிரசோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் பூந்தமல்லி அருகே கோளப்பன்சேரி சோதனை சாவடியில் நேற்று இரவு தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஏ.டி.எம். மையத்திற்கு பணம் எடுத்து செல்லப்படும் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.அதில் கட்டுகட்டாக ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரம் பணம் இருந்தது. ஆனால் இந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லை. ஆவணம் இல்லாமல் பணம் எடுத்து செல்லப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ.2 கோடியே 29 லட்சத்து 31 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த பணம் பூந்தமல்லியில் உள்ள அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் காண்பித்த பிறகு பணம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஏற்கனவே மாலை 6 மணிக்கு மேல் ஏ.டி.எம். மையங்களுக்கு பணம் நிரப்ப வாகனங்களில் பணம் எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தி இருந்த நிலையில் இரவில் உரிய ஆவணங்களை இல்லாமல் பணத்தை கொண்டு சென்றது ஏன் என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள். தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஜேசிபி வாகனம் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
    • சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக ஜேசிபி வாகனத்தில் இருந்து கீழே குதித்தார்.

    திருத்தணி:

    திருத்தணி ரெயில் நிலையத்தில் இருந்து, திருப்பதி, ரேணிகுண்டா , அரக்கோணம், திருவள்ளூர், சென்னை சென்ட்ரல், சென்னை கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு தினமும் மின்சார ரெயில் மற்றும் விரைவு ரெயில்கள் மூலம் 5,000 த்திற்கும் மேற்பட்ட பயணிகள் சென்று வருகின்றனர்.


    இந்நிலையில் திருத்தணி ரெயில் நிலையத்தில் இருக்கும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஜேசிபி வாகனம் மூலம் இடிக்க முயன்ற போது திடீரென மேல்நிலை நீர்தேக்க தொட்டி ஜேசிபி வாகனம் மீது சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

    சுதாரித்துக் கொண்ட ஓட்டுநர் உடனடியாக ஜேசிபி வாகனத்தில் இருந்து கீழே குதித்தார்.

    இச்சம்பவம் திருத்தணி ரெயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.
    • பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அருகே உள்ளது வேப்பம்பட்டு ரெயில் நிலையம். இந்த ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடந்து செல்ல உயர்மட்ட மேம்பாலம், சுரங்கநடைபாதை வசதிகள் இல்லை. இதனால் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் நடைமேடைகளுக்கு செல்ல தண்டவாளத்தை கடந்து செல்லும் நிலை உள்ளது. இதனால் ரெயில் நிலையத்தில் அடிக்கடி ரெயில்மோதி அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகிறார்கள்.

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள்கள் பலியானார்கள்.

    இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வேப்பம்பட்டு ரெயில் நிலையத்தில் ஆய்வு செய்தார். அப்போது கடந்த 10 ஆண்டுகளாக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள ரெயில்வே மேம்பால பணிகள் மற்றும் சுரங்கப் பாதை பணிகளை மீண்டும் தொடங்கி உடனடியாக முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் மேம்பால பணிகள் மற்றும் ரெயில் நிலையத்தில் பணிகள் முடிவடையும் வரை தண்டவாளத்தை கடக்கும் பயணிகளுக்கு முன்எச்சரிக்கை செய்வதற்கு 24 மணி நேரமும் ஒலிபெருக்கி மற்றும் காவலர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

    இதையடுத்து ரெயில்வே மேம்பாலம் பணிக்கு நிலம் எடுப்புக்கான தடை நீக்கப்பட்டது.


    இந்த பணியை அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க கூடுதலாக ரூ.24 கோடி 18 லட்சத்து 83 ஆயிரத்து 895 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனால் ரெயில்வே மேம்பால கட்டுமான பணி மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது.

    ஆனால் அங்கு பாதியில் நிறுத்தப்பட்டு இருந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணி மீண்டும் தொடங்கப்படவில்லை. கட்டி முடிக்காமல் பாதியில் நிற்கும் ரெயில்வே சுரங்கப்பாதை முழுவதும் புதர் மண்டியும், கழிவுநீரால் சூழப்பட்டும் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு ரெயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிக்கு ரெயில்வே ரூ.1.54 கோடி ஒதுக்கீடு செய்து. இதுவரை ரூ.38 லட்சம் செலவிடப்பட்டு பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளன. இந்த பணியை முழுமையாக செய்வதற்கும், நில எடுப்பு தொடர்பாகவும் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் அறிவுரைகள் வழங்கிய நிலையில் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

    எனவே கழிவு நீர் சூழ்ந்து காணப்படும் சுரங்கப்பாதை பணியை விரைந்து முடித்து அதனை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறும்போதும், இதுகுறித்து வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி விஸ்வநாதன் கூறும்போது"வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணி நிறுத்தப்பட்ட பின்னர் தற்போது 10 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தொடங்கி உள்ளது. ஆனால் வேப்பம்பட்டு ரெயில் நிலைய சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போட்டு உள்ளனர். இதனால் ரெயில்நிலையத்திற்கு வரும் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் பொதுமக்கள், ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய சூழல் உள்ளது. இதனால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. எனவே சுரங்கப்பாதை சுரங்கப்பாதை பணியை விரைவில் தொடங்கி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

    • வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.
    • காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

    இதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 20ஆம் தேதி தொடங்கி இன்று மதியம் 3 மணியுடன் முடிவடைகிறது.

    இதனையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

    இதில் திருவள்ளூர் பாராளுமன்ற தனி தொகுதியில் போட்டியிடும் தேமுதிக, நாம் தமிழர் கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


    இந்நிலையில் கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்ய திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் தெருக்கூத்து, மேளதாளத்துடன் ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வேட்பு மனு தாக்கலின்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது.

    இந்நிலையில் வேட்பாளர் உடன் முன்னாள் அமைச்சர் ஆவடி சா.முநாசர், திமுக எம்எல்ஏக்கள் வி. ஜி ராஜேந்திரன், மாதவரம் சுதர்சனம் கும்மிடிப்பூண்டி கோவிந்தராஜன், பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை சந்திரசேகர் உள்பட 5 பேர் வந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான த.பிரபுசங்கரிடம் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

    பின்னர் சுதாரித்துக் கொண்ட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் தேர்தல் விதிகளை மீறி 6 பேர் இருப்பதால் ஒருவர் வெளியேற வேண்டும் என எச்சரித்தார்.

    இதையடுத்து மாவட்ட காங்கிரஸ் தலைவரும் பொன்னேரி எம்எல்ஏவுமான துரை சந்திரசேகர் வேட்பு மனு தாக்கல் அறையில் இருந்து ஓட்டம் பிடித்தார்.

    • திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.
    • கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அருகே தமிழக-ஆந்திர எல்லைப் பகுதியான எளாவூரில் நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உள்ளது. இங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் திடீரென்று ஆய்வு செய்தார்.

    அப்போது ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்கள் தொடர்பான போலீசாரின் சோதனை எவ்வாறு உள்ளது? அங்கு பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்பதை அவர் நேரில் ஆய்வு செய்து போலீசாருக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

    பின்னர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருவள்ளூர் மாவட்டத்தில் 5 இடங்களில் நிரந்தரமாகவும், 5 இடங்களில் தற்காலிகமாகவும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் முக்கியமான சோதனைச்சாவடி இந்த எளாவூர் சோதனைச்சாவடி ஆகும். மாவட்டம் முழுவதும் உள்ள 10 சோதனைச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. குறிப்பாக இந்த எளாவூர் சோதனைச்சாவடி என்பது, ஆந்திர மாநிலம் இருந்து விஜயவாடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரும் வாகனங்களுக்கான முக்கியமான நுழைவு வாயில் ஆகும். அதனால் இங்கு எல்லா வாகனங்களும் 24 மணி நேரமும் முழுமையாக சோதனை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் 5 போலீசார் பணியில் உள்ளனர்.

    கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள புறகாவல் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். சோதனைச்சாவடி இன்றி சுற்றி உள்ள பிற வழிகளில் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் வாகனங்களை சோதனை செய்வதற்கு ஆந்திர போலீசாருடன் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆய்வின்போது கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி, இன்ஸ்பெக்டர் டில்லி பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்
    • இவர்களுக்கு அண்மையில் 8 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே வசித்து வரும் ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நேற்று தன்னுடைய குழந்தையை காணவில்லை தாய் சத்யா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், "குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.

    இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்" என்று அதிர்ச்சிகர தகவலை அவர் கூறியுள்ளார்

    • தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
    • லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அம்பத்தூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் 19-ந்தேதி நடைபெற உள்ளது. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லும் பணம், நகை, உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று நள்ளிரவு பாடி மேம்பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அரியானா மாநிலம் பதிவு எண்கொண்ட கண்டெய்னர் லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.

    அதில் சுமார் 100-க்கும் மேற்பட்ட அட்டை பெட்டிகள் இருந்தன. லாரியில் இருந்த 4 பேரும் முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதையடுத்து அந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் நிறுத்தினர். இன்று காலை ஏராளமான தேர்தல் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்கள் கண்டெய்னர் பெட்டியை திறந்து சோதனை செய்த போது முதலில் இருந்த சில மூட்டைகளில் பா.ஜனதா கட்சியின் கொடி, தொப்பிகள் இருந்தன. பின்னர் இருந்த அட்டை பெட்டிகளை அதிகாரிகள் சோதனை செய்யாமல் கண்டெய்னர் பெட்டியை பூட்டினர்.

    மேலும் பாதுகாப்புக்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டனர். இதனால் கண்டெய்னர் லாரியில் பெட்டி, பெட்டியாக பணம் பிடிபட்டு இருப்பதாக தகவல் பரவி பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கண்டெய்னர் லாரி நிறுத்தப்பட்ட இடத்திற்கு ஏராளமானோர் வரத் தொடங்கினர்.

    இதைத்தொடர்ந்து இன்று மதியம் கண்டெய்னர் லாரியை பலத்த பாதுகாப்புடன் பள்ளி மைதானத்தில் இருந்து வேறு இடத்திற்கு கொண்டு சென்றனர். அமைந்தகரை பகுதியில் உள்ள ஒரு இடத்தில் வைத்து சோதனை செய்யப்போவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் கண்டெய்னர் லாரியில் சோதனை செய்த போது அதில் இருந்த பொருட்கள் பற்றிய விபரங்களை தேர்தல் அதிகாரிகள் சொல்ல மறுத்து விட்டனர். இதனால் கண்டெய்னர் லாரி பற்றிய பரபரப்பு நீடித்து வருகிறது.

    இதுகுறித்து கண்டெய்னர் லாரியை சோதனை செய்த தேர்தல் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கண்டெய்னர் லாரியில் என்ன இருக்கிறது என்று தெரியவில்லை. சோதனைக்கு பிறகே தெரிய வரும் என்றார். இதற்கிடையே லாரியில் வந்த 4 பேரிடமும் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.
    • தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது.

    அம்பத்தூர்:

    அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்களின் பேராதரவு உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் பேராதரவை கொடுக்க காத்திருக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கை உள்ளது.

    சிதம்பரம் தொகுதியில் வருகிற 25-ந் தேதி முதல் பிரசாரத்தை தொடங்க உள்ளேன். 27-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கிறேன். முதலமைச்சர்களை கைது செய்யும் புதிய நடைமுறையை அரசியலில் பா. ஜனதா கையாண்டு வருகிறது. பழிவாங்கும் வெறியோடு பா.ஜ.க. செயல்படுகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். பா.ஜனதா தோல்வி பயத்தில் இது போன்று செய்து வருகிறது.

    தி.மு.க.கூட்டணிக்கு எதிராக பரப்பப்படும் எந்த அவதூறும் எடுபடாது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெறும். இந்த முறை 40-க்கு 40தையும் வெல்வோம். தேர்தல் முடிவுகள் வரத் தான் போகிறது. அப்போது மக்கள் பா.ஜனதாவிற்கு எவ்வளவு மதிப்பெண் போட போகிறார்கள் என்பது தெரியவரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பேராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • கைதிகள் நல உணவகத்தை மீண்டும் திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

    சென்னை அருகே புழல் சிறையில் வளாகத்தில் விசாரணைக் கைதி சிறை செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் நேற்று காலை 6 மணியளவில் தங்களது அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்போது, சிறையின் இரண்டாவது பிளாக் பகுதியில் இருக்கும் கைதிகள் சுமார் 40 பேர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பேராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆனால் கைதிகள், சிறை வளாகத்தில் செயல்பட்டு வந்த கைதிகள் நல உணவகத்தை மீண்டும் திறக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட கைதிகளிடம் சிறை அதிகாரிகள் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பிற்பகலில் கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

    ×