search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருவள்ளூர்"

    • பாராளுமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை.
    • 40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி கூட்டணியில் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்

    "திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் அவர் கேட்டிருந்தார்.

    ஆனால் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சிக்கு எந்த தொகுதியையும் அதிமுக ஒதுக்கவில்லை. இதனையடுத்து அதிமுக - புரட்சி பாரதம் கூட்டணி முறியும் என எதிர்பார்க்கப்பட்டது.

    இந்நிலையில், அதிமுக கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி தொடரும் என அக்கட்சியின் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அதிமுக கூட்டணியில் எங்களுக்கு சீட் வழங்காததால் வருத்தத்தில் இருந்தோம். அடுத்த தேர்தலில் பார்த்துக் கொள்ளலாம் என அதிமுக தலைவர்கள் எங்களை சமாதானம் செய்தனர். பெரும்பாலான தொண்டர்கள் அதிமுகவுடன் தொடரலாம் என கூறியதால் அதில் தொடர முடிவு செய்யப்பட்டது என்றார்.

    40 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி திட்டவட்டமாக கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.
    • தமிழ் படிக்கத் தெரியாதவர்களை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வேட்பாளர்களை அறிவித்து இருந்தார்.

    இந்நிலையில், திருவள்ளூர் மக்களவைத் தொகுதி நாதக வேட்பாளர் ஜெகதீஸ் சுந்தர் இன்று வேட்புமனுத் தாக்கலின்போது, தமிழில் எழுதி இருந்த உறுதிமொழிப் பத்திரத்தை படிக்கத் தெரியாமல் திக்கி நின்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    பின்னர், தேர்தல் நடத்தும் அதிகாரி பிரபு சங்கர் வாசிக்க, ஜெகதீஸ் சுந்தர் அதனை திரும்ப சொல்லி உறுதிமொழி எடுத்துக் கொண்டார். முகப்பேரில் உள்ள பள்ளியில் ரோபோட்டிக் பயிற்சி ஆசிரியராக இவர் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

    பதட்டமாக இருந்ததால் உறுதிமொழியை படிக்க சிரமப்பட்டேன் என்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஸ் சந்தர் தெரிவித்துள்ளார்.

    இதற்கு முன்னதாக, விருதுநகர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் கௌசிக் நேற்று வேட்புமனு தாக்கல் செய்வதற்காக தேர்தல் நடத்தும் அலுவலகம் சென்றார் அப்போது உறுதிமொழி வாசிக்க அறிவுறுத்தப்பட்டது.

    இந்நிலையில் வேட்பாளர் கௌசிக்கிற்கு தமிழ் படிக்கத் தெரியாததால் உறுதிமொழி முழுவதையும் விருதுநகர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயசீலன் படிக்க, தொடர்ந்து படித்தார் நாம் தமிழர் வேட்பாளர் கௌசிக்.

    இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறுகையில், வேட்பாளர் கௌசிக் ஓமன் நாட்டில் படித்ததால் தமிழ் படிக்கத் தெரியாது என விளக்கம் அளித்துள்ளார்..

    ஆனால், தமிழ் படிக்கத் தெரியாதவர்களை வேட்பாளராக்கி, தற்போது அதனை நாம் தமிழர் கட்சி சமாளிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    • ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்
    • இவர்களுக்கு அண்மையில் 8 மாத குறை பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது

    திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த விஜயநல்லூர் அருகே வசித்து வரும் ரமேஷ்(25) என்பவர் சத்யா(22) என்பவரை இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 3 நாளிலேயே காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இந்நிலையில், இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. 8 மாதத்திலேயே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை, மருத்துவமனையில் இருந்து சில நாட்களுக்கு முன்புதான் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, நேற்று தன்னுடைய குழந்தையை காணவில்லை தாய் சத்யா கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் தேடியபோது அருகில் உள்ள கிணற்றில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    இதனையடுத்து சோழவரம் காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது, அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, தாய் சத்யாவே குழந்தையை மறைத்து எடுத்துச்சென்று கிணற்றில் வீசியது தெரியவந்தது. இதனையடுத்து சத்யாவிடம் சோழவரம் போலீசார் தீவிர விசாரணை செய்ததில், "குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை குறைந்த எடையில் இருக்கிறது.

    இதனையடுத்து சத்யாவை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், "வருங்காலத்தில் ஊனமாக மாறிவிடுமோ என்ற பயம் இருந்தது. மேலும், தாய்ப்பாலும் சுரக்கவில்லை. இவை அனைத்தையும் தாண்டி, கணவர் என்னை விட குழந்தையிடம் பாசத்தை காட்ட தொடங்கிவிட்டார். இதனால்தான் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்தேன்" என்று அதிர்ச்சிகர தகவலை அவர் கூறியுள்ளார்

    வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடர்வதாக புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    "திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் தொகுதிகளை விருப்பப் பட்டியலாக அளித்து, அதில் ஒரு தொகுதியை ஒதுக்க வேண்டும் என அதிமுகவிடம் கேட்டுள்ளோம்" என்று அவர் கூறியுள்ளார்.

    இன்னமும் அதிமுக எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. ஆனாலும் திருவள்ளூர் எங்களது சொந்த தொகுதி என்பதால் அதை நிச்சயம் கேட்டு வெற்றி பெறுவோம் என்று பூவை ஜெகன்மூர்த்தி தெரிவித்துள்ளார்.

    அரசியலமைப்பு சட்டத்தை வெளிப்படையாக மீறி ராமர் கோயிலை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். ஒரு மதத்தை மட்டுமே வைத்து அவர் வெளிப்படையாகவே அரசியல் செய்கிறார். ஹிந்து மத்தை வைத்து பாஜக அரசியல் செய்கிறது. நான் கூட ஹிந்து தான் ஆனால் பாஜகவின் மத அரசியலை நான் ஆதரிக்கவில்லை என்று பூவை ஜெகன் மூர்த்தி பேசியுள்ளார்.

    மேலும் "திமுக வெல்லக் கூடாது என்பதுதான் பாஜகவின் ஒரே எண்ணமாக உள்ளது. பாஜக ஜெயிக்காது என பிரதமர் மோடிக்கே தெரியும். அதனால்தான், அதிமுக ஜெயித்தால்கூட பரவாயில்லை என அக்கட்சித் தலைவர்களை புகழ்ந்து பேசியுள்ளார் என்று பூவை ஜெகன்மூர்த்தி கூறியுள்ளார்.

    • 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
    • ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.

    சென்னையில் இருந்து அரக்கோணம், திருத்தணிக்கு செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் மற்றும் காட்பாடி, திருப்பதி, மும்பை, பெங்களூர் விரைவு ரெயில்கள் என தினந்தோறும் சுமார் 200-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திருவள்ளூர் ரெயில் நிலையத்தில் நின்று செல்கின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய நகரமாக உள்ள திருவள்ளூரில் சிறப்பு பெற்ற வீரராகவப் பெருமாள் கோவில், விஸ்வரூப பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில், கலெக்டர் அலுவலகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் உள்ளன. இதனால் பள்ளி, கல்லூரிக்குச் செல்லும் மாணவ மாணவிகள், அரசு அலுவலர்கள், வியாபாரிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள், ஆண்கள் என ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் திருவள்ளூர் ரெயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரெயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரெயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து அதிநவீன ரெயில் நிலையங்களாக மாற்ற தெற்கு ரெயில்வே திட்டமிட்டு உள்ளது.

    இதில்முதல் கட்டமாக 15 ரெயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் ரெயில் நிலையங்களின் உள்கட்டமைப்பு நவீன படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் கோட்டத்தில் திருவள்ளூர் ரெயில் நிலையம் ரூ.28.82 கோடியில் மறு சீரமைப்பு பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

    இதில் புதிய ரெயில் நிலையக் கட்டிடம், நடை மேடைகளின் தரை மற்றும் கூரை சீரமைப்பு, ரெயில் நிலையம் அருகே இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் சீரமைக்கப்படும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. பணிகள் அனைத்தையும் இந்த நிதியாண்டின் இறுதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டு மற்றும் லிப்ட் வசதி, 12 மீட்டர் அகலம்கொண்ட பயணிகள் நடைமேம்பாலம் வருகிறது. மேலும் நடைமேடைகளிலும் பயணிகள் நடமாடும் இடங்களிலும் பயனுள்ள தகவல் அளிக்க திரைகள், கண்காணிப்பு கேமரா அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே நிர்வாகம் மேற்கொள்ள உள்ளது.

    இதற்கிடையே சீரமைப்பு பணிகாரணமாக ரெயில் நிலைய முகப்பு வழியாக பயணிகளை அனுமதிக்க வில்லை. சுரங்கப்பாதை வழியாக சென்று வருகிறார்கள். மேலும் பயணச் சீட்டு வழங்கும் இடம் நடை மேடை 1-ல் உள்ளது. அங்கும் பணிகள் நடை பெற்று வருவதால் பயண சீட்டை வாங்க பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே ரெயில்நிலைய சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டது.
    • பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    சென்னை:

    தமிழகத்தில் அரசின் சேவைகள் மற்றும் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையவும், அவை பொதுமக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? என்பதை உறுதி செய்யவும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த நிலையில் மக்களை நாடி, மக்கள் குறைகேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு எந்திரம் களத்திற்கே வரும் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த நவம்பர் மாதம் அறிவித்தார்.

    (4-வது புதன்கிழமைகளில்) ஒருநாள் வட்ட அளவில் தங்கி ஆய்வில் ஈடுபட்டு அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து மக்களின் குறைகளை கேட்க வேண்டும். மேலும் அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தடையின்றி மக்களை சென்றடை வதை உறுதி செய்ய வேண்டும்.

    ஆய்வு செய்யப்படும் வட்டத்தில் கலெக்டர்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை தங்கி இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அதன்படி "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற புதிய திட்டம் தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கப்பட்டது.

    சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களும் ஒவ்வொரு வட்டத்தை தேர்வு செய்து இன்று காலை 9 மணி முதல் கிராமங்களில் அதிகாரிகளுடன் முகாமிட்டனர். அவர்கள் அங்குள்ள அரசு ஆஸ்பத்திரி, பள்ளிகள், அரசு விடுதிகள், பூங்கா, சமூக நல மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், போக்குவரத்து சேவை, குடிநீர் வசதி, அரசு அலுவலகங்களில் ஆய்வு செய்து திட்டப்பணிகள், பொது மக்களின் குறைகள் குறித்து கேட்டறிந்து மனுக்கள் பெற்றனர்.

    காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி மாவட்ட கலெக்டர்கள் காஞ்சிபுரம், திருப்போரூர், ஊத்துக்கோட்டை வட்டங்களில் முகாமிட்டு உள்ளனர்.

    காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் காலை 9 மணியளவில் வந்தார். பின்னர் அவர் அதிகாரிகளுடன் புதிய திட்டம் குறித்தும் அதனை செயல்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

    இதைத் தொடர்ந்து இ-சேவை மையம், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேசன் கடைகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், சத்துணவு மையங்கள், நேரடி நெல் கொள்முதல் நிலையம், நகர்ப்புற கூட்டுறவு கடன் சங்கங்கள், விவசாய கிடங்கு, பள்ளிகளை பார்வையிட்டார்.

    பின்னர் வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம், ஊராட்சி அலுவலகம், மாநகராட்சி அலுவலகங்களில் கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார். அப்போது அலுவலகங்களில் இருந்த பொதுமக்களிடம் குறைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

    மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பொதுமக்களுடன் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெறுகிறார்.

    பின்னர் அரசு விடுதிகள், பூங்கா, அறிவுசார் மையம், சமூக நலத்துறையின் மூலம் பதிவு செய்யப்பட்ட மையங்கள், பஸ் நிலையம், பொது கழிப்பிடம், பஸ் போக்கு வரத்து, அரசு ஆஸ்பத்திரிகளில் ஆய்வு செய்து இரவு தங்குகிறார்.

    நாளை காலை 6 மணி முதல் காலை 8.30 மணி வரை மீண்டும் ஆய்வுப் பணி நடக்கிறது. திடக்கழிவு மேலாண்மை, சுகாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், குடிநீர் வசதி, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் ஆகியவற்றை கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.

    திருவள்ளூர் மாவட்டத்தில் ஊத்துக்கோட்டை வட்டத்தில் கலெக்டர் பிரபு சங்கர் தங்கி ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். காலை 9 மணி முதல் கச்சூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், அம்மம்பாக்கம் கிராமம், மதுரா சீத்தஞ்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, அங்கன்வாடி மையம், பெருஞ்சேரியில் உள்ள ரேசன் கடை, எல்லாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம், பெரியபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ஊத்துக்கோட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

    இதைத் தொடர்ந்து மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை அரசு அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்களின் மீது ஆய்வு கூட்டம் கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடை பெற்றது. பின்னர் பொது மக்களிடம் கலந்துரையாடி பொதுமக்களிடம் கோரிக்கை மனு பெறப்பட்டது.

    மாலை 6.30 மணிக்கு ஊத்துக்கோட்டையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாணவர்கள் விடுதி, பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு நடைபெறுகிறது. பின்னர் இரவு அம்மம் பாக்கம் கிராமத்தில் கலெக்டர் பிரபுசங்கர் தங்குகிறார். நாளை (1-ந்தேதி) மீண்டும் ஆய்வு பணியை தொடங்கும் கலெக்டர் பிரபுசங்கர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஊத்துக்கோட்டை பேரூராட்சி சிட்ரப்பாக்கத்தில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் தூய்மை பணிகள், குடிநீர் வினியோகம், கச்சூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்கிறார்.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெற்றது. மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்று உள்ள கலெக்டர் அருண்ராஜ் காலை 9 மணி அளவில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் அவர் அனைத்து துறை அதிகாரிகளுடன் திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், அரசு மருத்துவமனை, அரசு பள்ளிகள், சத்துணவு கூடங்களில் ஆய்வு செய்தார்.

    இதைதொடர்ந்து கேளம்பாக்கம், அருங்குன்றம், ஒரகடம், ஆமூர், கீழூர் ஆகிய கிராமங்களில் வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற் கொண்டு கிராமமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கோவளம், கே.ஆர்.குப்பம் ஊராட்சிகளில் ஊராட்சி பதிவேடுகளை ஆய்வு செய்தார். நெம்மேலியில் செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டப் பணிகளை பார்வையிட்டார்.

    ஆலத்தூர் கிராமத்தில் பயனாளிகளுக்கு பட்டாக்களை கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார். பின்னர் மதியம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதையடுத்து மக்களின் குறைகளை கேட்டு மனுக்களை பெற்றார்.

    இன்று மாலை தண்டலம் மயிலை, நாவலூர், கீழூர், ஆமூர் ஊராட்சிக்குட்பட்ட பல கிராமங்களில் தெரு விளக்குகளின் செயல்பாடுகள் மற்றும் பூங்காக்கள், பேருந்து நிலையங்களில் ஆய்வு மேற்கொள்கிறார். இரவு திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் கலெக்டர் அருண்ராஜ் தங்குகிறார்.

    நாளை காலை செம்பாக்கம், நெல்லிக்குப்பம், கொட்டமேடு, முட்டுக்காடு, கோவளம் வடநெம்மேலி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் குடிநீர் விநியோகம், தூய்மை பணிகள், திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து கலெக்டர் அருண் ராஜ் ஆய்வு மேற்கொள்கிறார். பின்னர் ஆலத்தூர், பையனூர், தண்டலம், மடையத்தூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

    உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தை பொது மக்கள் வரவேற்று உள்ளனர். மாவட்ட கலெக்டர் முதல் அதிகாரிகள் அனைவரும் பொதுமக்கள் இருக்கும் இடத்திற்கே வந்து குறைகளை கேட்டறிந்து நடவடிக்கை எடுப்பதால் இந்த திட்டத்தால் நல்ல பலன் கிடைக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

    • சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை.
    • காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை விடுமுறை.

    மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது.

    பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் எல்லா இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. தற்போது மழை ஓய்ந்துள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    கனமழை காரணமாக திங்கள், செவ்வாய், புதன் ஆகிய 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.

    தொடர்ந்து, கனமழை, வெள்ள பாதிப்பு காரணமாக சென்னையில் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டது.

    புயல், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், மாணவர்களின் நலன் கருதி நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் அறிவித்துள்ளார்.

    இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாக்களிலும் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் 6 தாலுகாக்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
    • தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மிச்சாங் புயல் எதிரொலியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    அதன்படி, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதன் எதிரொலியால் சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.

    குறிப்பாக, சென்னை எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி, மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், எழும்பூர் மற்றும் புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர், அஸ்தினாபுரம், சிட்லபாக்கம், சேலையூர், செம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது.

    • புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.
    • கனமழை எச்சரிக்கை காரணமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சமீபத்தில் உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுப்பெற்று வருகிறது.

    இன்று (சனிக்கிழமை) காலை அந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அது மாறி இருக்கிறது. இது புயலாக மாறுவதற்கு முந்தைய நிலையாகும்.

    இன்று பிற்பகல் இந்த புயல் சின்னம் மேலும் சென்னையை நோக்கி அருகில் நகர்ந்து வரும். அதன் பிறகு அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    வட மாவட்டங்கள் அருகே புயல் நாளை நெருங்குவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும். குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு அலார்ட் (பலத்த மழை) எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    இதன் எதிரொலியால், சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 4ம் தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

    இதேபோல், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வரும் திங்கள் அன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    • ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
    • சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு.

    திருவள்ளூர் அடுத்த கொப்பூர் (திருகாபூர்) கிராமத்தில் இருக்கும் இடமெல்லாம் சிவலிங்கம். இந்த கிராமத்தைச் சுற்றி களத்துமேட்டில், வரப்பு, மாந்தோப்பில், குளக்கரை, முட்புதரில் மற்றும் பல்வேறு பகுதிகளில் சில காலங்களுக்கு முன் 108 சிவ லிங்கங்களும், நந்தியும், குட்டையும் கிராமத்தைச் சுற்றி இருந்ததாகக் கூறுகிறார்கள்.

    இந்த கொப்பூர் கிராமத்தின் மூத்தவரான திருவேங்கட நாயகர், தன் பதினைந்தாவது வயதில் மாடு மேய்க்கும்போது 65 சிவலிங்கங்கள் வரை பார்த்திருப்பதாகக் கூறுகிறார்.

    மேலும் முனிவர்களும் சித்தர்களும் 108 சிவலிங்கம் நந்தி குட்டைகளை அமைத்து பூஜைகள் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த சிவலிங்கம் எல்லாம் கவனிப்பாரற்றுப் பூமிக்குள் புதையுண்டு போய் கொண்டிருக்கின்றன. சிவமயமான கிராமத்தில் தற்போது மக்கள் வழிபடுவது வைணவக் கடவுள்.

    தற்போது இந்த கிராமத்தில் 8 சிவலிங்கங்கள் பூமிக்குள் இருந்து எடுத்து பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    ஆனால் கடந்த சில ஆண்டில் வெளியே இருந்த சிலலிங்கங்கள், மண்ணில் புதைந்தும் முட்புதர்களால் மூடியும் காணாமல் போனதாக பார்க்க முடிந்தது.

     

    ஆனால் இந்த கொப்பூர் கிராமத்தில் தோண்டுகின்ற இடமெல்லாம் விநாயகர், சிவலிங்கமும், நந்தியும். அம்பாள், சூரிய பகவான் பல்வேறு கடவுள் சிலைகளும் கிடைக்கும் கிராமமாக விளங்குகிறது.

    இந்த கிராமம் சென்னையில் இருந்து 38 கி.மீ. தூரத்தில் சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை அரண்வாயில் குப்பம் பகுதியில் இருந்து ஸ்ரீபெருமந்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    இந்த கிராமத்தைச் சேர்ந்த முன்னோர்கள் வழிவழியாக பெரியோர்கள் "தங்களது தாத்தா காலத்தில் 108 சிவலிங்கமும், நந்தியும், குட்டையும் இருந்ததாகக் கூறியிருக்கிறார்.

    என் அப்பா காலத்தில் இது இன்னமும் குறைந்து தற்போது 8 லிங்கங்கள் தான் பார்வைக்குத் தெரிகின்றன. எங்கள் ஊருக்கு மேற்கே 'சிவலிங்கமேடு' என்ற பகுதி உண்டு. இப்பகுதியில்தான் ஏராளமான சிவலிங்கங்கள் இருந்தன.

    இந்த கிராமம் ஆரம்பத்துல சிவ மதம்தான் இருந்தது. இந்த ஊரைச் சுற்றி சித்தர்களும் மா முனிவர்களும் வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

    பின்னர் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூரில் பிறந்த ராமானுஜர் காலத்தில வைணவத்துக்கு மாறியிருக்கணும். (ராமானுஜர் காலம் கி.பி. 10-ம் நூற்றாண்டு). அதுக்கு முன்னாடி இங்க சைவ மதம் தழைத்திருந்திருக்க வேண்டும்.

    அப்போது இந்த மண்ணில் மாமன்னரும், சிற்றரசரும் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நடைபெறும் திருவிழாநாளில் அரசர் இந்த 108 சிவலிங்கத்தையும் வழிபடுவார்கள்.

    3- ம் நூற்றாண்டில் இருந்து 5- ம் நூற்றாண்டுவரை தமிழகச்சரித்திரத்தின் இருண்டகாலமாகக் கருதப்படுகிறது. ஏறத்தாழ அந்த காலகட்டத்துக்குப் பின்புதான் இக்கிராமம் சைவ மதத்தை தழுவி இருந்திருக்க வேண்டும்.

    ராமானுஜரின் காலத்துக்குப் பிறகு வைணவ மதத்துக்கு மாறிய இந்த ஊர் மக்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீனிவாசப் பெருமாளின் ஐம்பொன் சிலை பூமிக்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

    நவாபுகள் வருகையால் ஐம்பொன் சிலைக்கு ஆபத்து வருமோ என்று அஞ்சி, சிலைகளைப் பூமியில் புதைத்து வைத்தார்கள். அதில் ஒரு சிலை, 1983-ம் ஆண்டு வீடுகட்டுவதற்கு அஸ்திவாரம் தோண்டும் போது கிடைத்தது.

    லட்சுமி நரசிம்ம பெருமாள் சிலை. 600-700 ஆண்டுகளுக்கு முந்தைய சிலையென்றும் 83-ம் ஆண்டு அரசுத்தரப்பில் கூறினார்கள்.

    கொப்பூர் கிராமம் அருகே முகலாயர்கள் தண்டல் வசூலித்த இடம் தற்போது தண்டலம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் இந்த கொப்பூர் கிராமத்தில் ஒரு கட்டத்தில் ஊரே பாழாகி (வீடு, மாடு, கன்றெல்லாம் பறிபோனதை அப்படிச் சொல்கிறார்கள்) எல்லாரும் ஊரை விட்டு வேறிடங்களுக்குப் போய் விட்டார்கள். பிறகு மூன்று குடும்பத்தார் மீண்டும் குடியேறி இப்போது 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களாகப் பெருகியிருக்கிறது.

    இந்த கிராமத்தில் பூமியில் தோண்டியெடுக்கப்பட்ட ஐம்பொன்சிலைகளைத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அரசாங்கம் வழக்கு தொடர்ந்தது. 'இது எங்கள் புராதனச் சொத்து தரமுடியாது' என்று கொப்பூர் ஊரில் இருக்கும் ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவிலேயே அவற்றை வைத்திருக்கிறார்கள்.

    மேலும் இந்த ஊரில் உள்ள சிவலிங்கத்தை பாதுகாக்க வேண்டியது ஊர் மக்களின் பொறுப்பு. அதற்காக கோவில் கட்டிச் செழுமைப்படுத்துவதிலும் ஆண்டுதோறும் விழா நடத்துவதும் ஊர் மக்களின் கடமை.

    இந்த ஊர் எல்லையில் பூமிக்கு அடியில் கிடைத்த சிவலிங்கம், நந்தீஸ்வரர், விநாயகர், அம்பாள் உள்ளிட்ட கடவுள் சிலைகள் சாய்ந்த நிலையில் உள்ளதால் பக்தர்கள் வேண்டுதலை செவி கொடுத்து கேட்டு அருள் அளிப்பதாக ஊர் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகின்றனர்.

    • சிவன் கோவில் கருவறையில் உள்ள கிரீவகோஷ்டத்தில் யோக நரசிம்மர் சிற்பம் உள்ளது.
    • கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் அழகிய சிங்கரின் சன்னதி உள்ளது.

    திருவள்ளூர் நகரில் வீரராகவப் பெருமான் என்ற பிரம்மாண்டமான கோவில் உள்ளது. இக்கோவிலின் தென் மேற்குப் பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மரின் சன்னதி உள்ளது.

    சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் பூந்தமல்லிக்கு அருகில் திருமழிசை என்ற புராதனமான ஊர் உள்ளது.

    திருமழிசை ஆழ்வார் பிறந்த இவ்வூரில் ஜகநாதர் என்ற விஷ்ணுகோவில் உள்ளது. இக்கோவிலின் வடக்குப் பிரகாரத்தில் அழகிய சிங்கரின் சன்னதி உள்ளது. பெயருக்கேற்ப எழிலுடன் இப்பெருமான் உள்ளார்.

    மதுராந்தகம் கோதண்டராமர் கோயில் என்ற ஏரி காத்த ராமர் கோயில் புகழ்மிக்க கோயிலாகும். இக்கோயிலின் உள்பிரகாரத்தில் லட்சுமி நரசிம்மருக்குத் தனியாக சன்னதி உள்ளது.

    நெல்லை மாவட்டம் சங்கரன்கோயில் அருகே புளியங்குடி என்ற தொன்மையான ஊர் உள்ளது.

    இவ்வூரில் சிவன் கோயில், விஷ்ணு கோயிலுடன் திருவாவடுதிறை ஆதீனத்தின் கிளை மடமும் உள்ளது. அஷ்டாங்க விமானத்துடன் கூடிய விஷ்ணு கோயிலில் லட்சுமி நரசிம்மர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    பழைய சீவரம் போன்று செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் உள்ள ஆத்தூரில் முக்தீஸ்வரர் என்ற சிவன் கோயிலும் கல்யாண விரதவிண்ணகரம் என்ற விஷ்ணு கோயிலும் உள்ளன.

    சிவன் கோயில் கருவறையில் உள்ள கிரீவகோஷ்டத்தில் யோக நரசிம்மர் சிற்பம் உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் நரசிங்கமங்கலம் என்னும் புராதனமான ஊர் உள்ளது. இவ்வூரில் நரசிம்மர் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் சோழர்கால கல்வெட்டுகளும் விஜயநகரப் பேரரசர் காலக் கல்வெட்டுகளும் உள்ளனர்.

    செங்கல்பட்டு-காஞ்சிபுரம் நெடுஞ்சாலையில் பழைய சீவரம் என்ற பழைய ஊர் உள்ளது. ஊர்ப் பெயரிலேயே பழைய என்ற முன்னொட்டு உள்ளது.

    இவ்வூர் மலை மேல் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. மேற்கு நோக்கிய வாயில். ராஜேந்திர சோழன் பெயரில் ராஜேந்திர சோழ விண்ணகர் என இக்கோவில் முதலில் வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சை வல்லத்தில் உள்ள நரசிம்மர் தலத்துக்குரிய தலபுரணாம் கி.பி.1799-ல் இயற்றப்பட்டது. இத்தல புராணத்தில் கவுதம முனிவர் தம்பெயரில் தீர்த்தம் ஒன்று ஏற்படுத்திக் கொண்டு நாள்தோறும் நீராடி நரசிம்மப் பெருமானை வழிபட்டு வர நரசிம்மரும் அவருக்குக் காட்சி தந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

    • காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது.
    • காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த காக்களூர் தொழிற்பேட்டையில் 350-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த தொழிற்பேட்டையில் பல்வேறு உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள்.

    எலக்ட்ரிகல்ஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன, இங்குள்ள தொழிற்சாலை நிறுவளங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு காக்களூரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக தொழிற்சாலைக்குச் செல்லும் மின்மாற்றி பழுதடைத்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் மாலை முதல் காக்களூர் தொழிற்பேட்டைக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் தொழிற்சாலையில் உற்பத்தி முடங்கி உள்ளன. இதனால் தொழிற்சாலை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    பழுதடைந்த மின்மாற்றியை சரி செய்ய குறைந்தது 3 முதல் 5 நாட்கள் ஆகும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் தொழிற்சாலைகளில் மேலும் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி உள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது காக்களூர் மற்றும் ஈக்காடு, செவ்வாப்பேட்டை, காக்களூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளுக்கு வழங்கப்படும் இணைப்பை துண்டித்து அதனை காக்களூர் தொழிற்பேட்டைக்கு பகல் நேரத்தில் மட்டும் வழங்க இருப்பதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    அடுத்த நசரத் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். நேற்று இரவும் மின்தடை ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் திருவள்ளூர்- செங்குன்றம் நெடுஞ்சாலையில் ரோட்டில் மரங்களை வெட்டிபோட்டு 100-க்கும் மேற்பட்டோர் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.

    இதனால் செங்குன்றம்-திருவள்ளூர் சாலையில் இரு மார்க்கத்திலும் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இது குறித்து தகவல் அறிந்ததும் வெங்கல் சப்-இன்ஸ்பெக்டர் வினோத்குமார் தலைமையில் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து கிரா மமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    கிராமமக்களின் திடீர் மறியல் போராட்டத்தால் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

    ×