search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதலமைச்சர் பழனிசாமி"

    கஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக 353 கோடி ரூபாய் நிவாரண நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneRelief
    புதுடெல்லி:

    கஜா புயல் நாகை அருகே வேதாரண்யத்தில் கரையை கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்தன. பாதிப்படைந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

    இதையடுத்து, கஜா புயல் பாதிப்படைந்த பகுதிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.

    அதன்பின்னர், டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமரை சந்தித்து முதல்கட்ட அறிக்கை அளித்தார்.
    கஜா புயல் நிவாரணமாக 15000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும், புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை விரைந்து அனுப்புமாறு கோரினார்.

    அதைத்தொடர்ந்து, சென்னை வந்த மத்திய குழுவினர் கஜா புயல் பாதித்த பகுதிகளில் மூன்று நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர். முதல் கட்ட ஆய்வறிக்கை மத்திய அரசிடம் அளித்துள்ளனர்.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பிற்காக தமிழகத்திற்கு இரண்டாவது கட்டமாக ரூ.353 கோடி நிதியை ஒதுக்க மத்திய உள்துறை அமைச்சகம் இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்த நிவாரண தொகையை மாநில பேரிடர் நிதியிலிருந்து ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அளித்துள்ள இடைக்கால அறிக்கையின் படியும், மத்திய குழுவின் ஆய்வறிக்கையின் படியும் இந்த நிதியை ஒதுக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #GajaCyclone #GajaCycloneRelief
    கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயில்களில் கொண்டு செல்லப்படும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. #GajaCyclone #GajaCycloneReliefMaterials #EdappadiPalaniswami #RailwayMinistry
    புதுடெல்லி:

    தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் கஜா புயல் பாதிப்பில் இருந்து இன்னும் மீளவில்லை. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

    நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள்  மூலம் நிவாரணப் பொருட்கள் வந்தவண்ணம் உள்ளன. சிலர் நேரடியாக நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்கின்றனர். சிலர் அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்புகின்றனர்.

    இதற்கிடையே, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயலுக்கு கடிதம் அனுப்பினார்.  அதில், தமிழகத்திற்கு ரெயில் மூலம் அனுப்பப்படும் புயல் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 



    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயிலில் அனுப்பும் நிவாரணப் பொருட்களுக்கு சரக்கு கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 10-ம் தேதி வரை கஜா புயல் பாதிப்பு பகுதிகளுக்கு ரெயில்களில் தமிழகத்திற்குள்ளும் பிற மாநிலங்களிலிருந்தும் கொண்டு வரப்படும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளது. #GajaCyclone #GajaCycloneReliefMaterials #EdappadiPalaniswami #RailwayMinistry
    மேகதாதுவில் முதல்கட்ட ஆய்வு நடத்த அனுமதி அளித்த மத்திய சுற்றுச்சூழல் துறையின் அனுமதியை திரும்ப பெறக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார். #MekedatuDam #EdappadiPalaniswamy #PMModi
    சென்னை:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால், மேகதாதுவில் அணை கட்ட தமிழக  அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இதற்கிடையே, மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முதல் கட்டமாக ஆய்வு நடத்த மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்துள்ளது.

    மத்திய அரசு ஆய்வு நடத்த ஒப்புதல் அளித்த நிலையில், இறுதி அறிக்கைக்கு ஒப்புதல் பெறுவதைத் தடுக்க தமிழக அரசு நீதிமன்றம் செல்லவுள்ளது.

    இந்நிலையில், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளார்.



    அந்த கடிதத்தில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதல் கட்ட ஆய்வு நடத்த மத்திய சுற்றுச்சூழல் அனுமதி அளித்ததை திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கை காவிரி வழக்கு தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறும் செயலாகும்.

    மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் லட்சக்கணக்கான தமிழர்கள் பாதிக்கப்படுவார்கள்  என அதில் தெரிவித்துள்ளார்.

    மேகதாதுவில் அணை கட்ட வழங்கப்படவுள்ள பூர்வாங்க அனுமதியை எதிர்த்து தமிழக அரசு வழக்கு தொடர முடிவு செய்த நிலையில் பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. #MekedatuDam #EdappadiPalaniswamy #PMModi
    கஜா புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழகத்தில் கடந்த வாரம் கஜா புயல் கரையை கடந்தது. இந்த புயலால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக சேதமடைந்தன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

    மேலும், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் மோடியிடம் நேரில் தெரிவித்தார்.

    இதற்கிடையே, கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட மத்திய குழு தமிழகம் வரவுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கஜா புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.



    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

    கஜா புயலால் கூரைகள் பாதிக்கப்பட்ட வீடுகளில் தற்காலிகமாக தார்ப்பாய் ஷீட்டுகள் மூலம் கூரை அமைக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    தார்ப்பாய் அளித்தால் உதவிகரமாக இருக்கும் என்ற மக்களின் கோரிக்கைகளை ஏற்று இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் தார்ப்பாய் வாங்கி உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளேன் என தெரிவித்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami
    அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்குவர் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami #GajaCycloneRelief
    புதுடெல்லி:

    தமிழகத்தில் ஏற்பட்ட கஜா புயல் தாக்கத்தால் பல்வேறு மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளன. அந்தந்த மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்கிடையே, கஜா புயல் பாதித்த இடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று ஹெலிகாப்டரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வு தொடர்பாக முதல் கட்ட அறிக்கையை தயாரித்துக் கொண்டு இன்று காலை டெல்லி சென்றார்.

    அங்கு அவர் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்தார். அப்போது கஜா புயல் பாதிப்புகள் குறித்து விளக்கினார். 
    கஜா புயல் நிவாரணமாக 15,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-



    கஜா புயல் பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக மத்திய குழு நாளை மாலை தமிழகம் வருகிறது. நாளை தமிழகம் வரும் மத்தியக்குழுவினர் புயல் பாதித்த பகுதிகளில் 3 நாட்கள் ஆய்வு செய்கின்றனர்

    புயல் பாதித்த பகுதிகளின் புகைப்படங்களை பிரதமரிடம் காண்பித்து நிதி கோரப்பட்டுள்ளது. தமிழக அரசு கோரியுள்ள நிதியை மத்திய அரசு வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    அதிமுக எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை கஜா புயல் நிவாரணத்திற்காக வழங்குவார்கள் என தெரிவித்தார். #GajaCycloneRelief #AIADMK #EdappadiPalanisamy
    கஜா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக கேட்டறிந்தார். #GajaCyclone #Modi
    புதுடெல்லி: 

    பிரதமர் நரேந்திர மோடி இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கஜா புயலால ஏற்பட்டுள்ள பாதிப்பு நிலவரங்கள் குறித்து கேட்டறிந்தார். 


    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்கும். புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதற்காக முதலமைச்சருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.



    கஜா புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், காயம் அடைந்தவர்கள் விரைவில் நலம் பெற இறைவனிடம் பிரார்த்திப்பதாகவும் பதிவிட்டுள்ளார். #GajaCyclone ##Modi
    கஜா புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார். #GajaCyclone #EdappadiPalanisamy
    சென்னை:

    கஜா புயல் இன்று அதிகாலை வேதாரண்யம் அருகே கரையை கடந்தது. திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் மாவட்டங்களை கஜா புயல் மோசமாக தாக்கியது. தற்போது மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசு மேற்கொண்ட துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. 

    இந்த புயல் குறித்து எச்சரிக்கை விட்டிருந்த தமிழக அரசு போர்க்கால முறையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. 

    புயல் தொடர்பாக தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், கஜா புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்; அதில் அவர் கூறியிருப்பதாவது:

    புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 185 மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. மேலும், புயல் பாதித்த பகுதிகளில் மக்களை அவர்களின் இருப்பிடத்துக்கே சென்று பரிசோதிக்க 216 நடமாடும் மருத்துவக் குழுக்கள் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

    முதற்கட்ட அறிக்கைப்படி சுமார் 13,000 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. பழுதான மின்கம்பங்களை மாற்றுவதற்காக ஏற்கனவே 7,000 மின்கம்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

    சுமார் 5,000 மரங்கள் சாலைகளில் விழுந்துள்ளன. சாலையில் விழுந்துள்ள மரங்களை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    புயலுக்கு முன்னர் 81,948 பேர் வெளியேற்றப்பட்டு 471 முகாம்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதுடன், உணவு, பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகின்றன. தேவைக்கேற்ப கூடுதல் மருத்துவ முகாம்கள் அமைக்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

    புயலால் ஏற்பட்ட சேதங்களை உடனடியாக ஆய்வு செய்து கணக்கிடு செய்யுமாறு ஆட்சித் தலைவர்கள் மற்றும் வருவாய் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளேன் என அதில் தெரிவித்துள்ளது. #GajaCyclone #EdappadiPalanisamy
    கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கு முதல் துரோகி தினகரன்தான் என தெரிவித்தார். #EdappadiPalanisamy #ADMK #TTVDhinakaran
    கோவை:

    கோவை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை இன்று சந்தித்த முதல்வர் பழனிசாமி கூறியதாவது; 

    தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் 18 தொகுதிகளில் மட்டுமல்ல, 234 தொகுதிகளிலும் வளர்ச்சி பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அதிமுகவிற்கு எதிராக சதித்திட்டம் தீட்டியவர் தினகரன்தான்.

    சமீபத்தில் ஸ்டாலின் சந்திரபாபுவை சந்தித்து பேசியுள்ளார். ஆனால் நாட்டின் நலன் கருதி பாலாற்றில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக கேட்டாரா? தமிழகத்திற்கு ஆந்திரா தரவேண்டிய தண்ணீர் குறித்து ஸ்டாலின் கேட்டாரா? நாங்கள் கொள்கை உணர்வுடன் தான் யாருடனும் கூட்டணி வைப்போம். ஆனால், திமுக சந்தர்ப்பவாத கூட்டணி வைத்து கொள்ளும். 



    வயதான கமலுக்கு திரைஉலகில் ஓய்வு வழங்கப்பட்டு விட்டது. தற்போது அவர் அரசியலில் நடிக்க துவங்கியுள்ளார். அரசியலில் கமலின் நடிப்பை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தனது படத்திற்கு பிரச்சினை வந்தபோது நாட்டை விட்டு வெளியேறுவேன் என கூறிய கமல், எப்படி மக்கள் பிரச்சினையை தீர்த்து வைப்பார்?

    விலையில்லா திட்டத்தை சமீபத்திய திரைப்படம் ஒன்றில் அவமதிக்கிறார்கள். இதனை யாரும் ஏற்று கொள்ள மாட்டார்கள். திரைப்பட இயக்குநர் முருகதாஸ் உறவினர்கள் கூட விலையில்லா திட்டத்தால் பயன் பெற்றிருப்பார்கள். ஊடகங்களும் இதனை தெளிவுபடுத்த வேண்டும்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது, இதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் தேவை. காய்ச்சல் வந்ததும் அரசு மருத்துவமனையை அணுகினால், நிச்சயம் டெங்குவை கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தார். #EdappadiPalanisamy #ADMK #TTVDhinakaran
    மூன்று நாள் பயணமாக சென்னை வந்துள்ள குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    சென்னை:

    சென்னை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா மற்றும் எத்திராஜ் கல்லூரியின் பிளாட்டினம் ஜூப்ளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சென்னை வந்துள்ளார்.

    இதற்காக சென்னை விமான நிலையம் வந்தடைந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    துணை ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு சென்னை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #Venkaiahnaidu #Edappadipalaniswami #BanwarilalPurohit
    சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் பேசிய முதலமைச்சர் பழனிசாமி, கல்லாதவர்களே இல்லை எனும் நிலையை அதிமுக அரசு உருவாக்கி வருகிறது என தெரிவித்தார். #TeachersDay #EdappadiPalaniswami #ADMK
    சென்னை:

    சென்னை கலைவாணர் அரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    அப்போது பேசிய முதலமைச்சர் பழனிசாமி , கருவறை, ஆசிரியர் உள்ள வகுப்பறை இரண்டும் முக்கியமானது. மாணவர்களுக்கு தற்காப்பு பயிற்சி அளிக்க நிதி ஒதுக்கப்படும். ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    புதிய பாடத்திட்டங்களை சிறப்பாக கற்பிக்கும் வகையில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது .

    ஆசிரியர்கள் பாடம் நடத்துபவராக மட்டும் இருக்கக் கூடாது. அதையும் தாண்டி மாணவர்களுக்காக உழைக்க வேண்டும். பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். கல்லாதவர்களே இல்லை என்னும் நிலையை அதிமுக தலைமையிலான அரசு உருவாக்கி வருகிறது என தெரிவித்தார்.

    மேலும், விழாவில் பேசிய துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், இந்தியாவிலேயே தமிழகம் தான் கல்வியில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. கூடாநட்பை உதறி தள்ள வேண்டும். என்றார். 

    இந்த விழாவில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், அக்டோபர் இறுதிக்குள் 3,000 பள்ளிகளில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும் எனதெரிவித்தார்.  #TeachersDay #EdappadiPalaniswami #ADMK
    மறைந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ஏ.கே.போஸின் உடலுக்கு முதலமைச்சர் பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் இன்று மதியம் நேரில் அஞ்சலி செலுத்தவிருக்கின்றனர். #ADMK #MLA #AKBose
    மதுரை:

    மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ.வான ஏ.கே.போஸ் (69) மாரடைப்பால் காலமானார். மதுரை ஜெய்ஹிந்துபுரம், ஜீவாநகரில் வசித்து வந்த இவருக்கு நேற்று நள்ளிரவு தூக்கத்தில் மாரடைப்பு ஏற்பட்டது. 

    இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது, வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    மறைந்த போஸின் உடலுக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரம், ஜீவா நகரில் இன்று மாலை இறுதிச்சடங்கு நடக்கிறது. அதற்கு முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிற்பகல் 1 மணியளவில் போஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவிருக்கிறார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்களும், போஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்தவிருக்கின்றனர்.



    திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்வானவர் என்பது குறிப்பிடத்க்கது. கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.சீனிவேலு வெற்றி பெற்றார். ஆனால் தேர்தல் முடிவு வெளியாவதற்கு முன்பே அவர் உடல்நலக்குறைவால் காலமானார். பின்னர் நடைபெற்ற இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக களமிறங்கிய ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. #ADMK #MLA #AKBose

    மின்சாரம் தாக்கி மற்றும் பாம்பு கடித்து பலியான 23 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திண்டுக்கல் மாவட்டம், சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ். நாகப்பட்டினம் மாவட்டம், ஆச்சாள்புரம் கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன். புதுக்கோட்டை மாவட்டம், குரும்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னக்காளை.

    தஞ்சாவூர் மாவட்டம், தேனாம்படுகை கிராமத்தைச் சேர்ந்த பாக்கியராஜ். பெரம்பலூர் மாவட்டம், திருவாளந்துறை கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்.

    நாகப்பட்டினம் மாவட்டம், கிடாமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார். ஆறுபாதி கிராமத்தைச் சேர்ந்த அமிர்தகணேஷ். மதுரை மாவட்டம், செங்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாண்டி. மதுரை மாவட்டம், மேலக் குயில்குடி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால்.

    வேலூர் மாவட்டம், நம்பரை கிராமத்தைச் சேர்ந்த பிச்சாண்டி, நடராஜ் மனைவி மீனா. நாகப்பட்டினம் மாவட்டம், வண்டுவாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜன்.

    விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வேலு மனைவி சாந்தி. காஞ்சிபுரம் மாவட்டம், ஜமீன் எண்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம். திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவக்குமார்.

    நரசிங்கமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மனைவி சகுந்தலா. சேலையூரைச் சேர்ந்த சங்கர் மகன் கிஷோர் மற்றும் சிவானந்தம் மகள் சௌமியா.

    திருவண்ணாமலை மாவட்டம், இளங்காடு மதுரா கயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த துரை. கோயம்புத்தூர் மாவட்டம், கலிக்கநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பாபு ஆகியோர் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

    விருதுநகர் மாவட்டம், கான்சாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பரமசிவம், புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் நாயக்கர்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரகுபதி, புதுக்கோட்டை மாவட்டம், சங்கம்விடுதி கிராமத்தைச் சேர்ந்த விஜயராஜ் மகள் ரம்யா ஆகியோர் பாம்பு கடித்ததில் உயிரிழந்தனர்.

    இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த மேற்கண்ட 23 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 23 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalaniswami

    ×