என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teachers day"

    • மாணவர் சமுதாயத்திடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
    • சமூக அநீதியை எதிர்த்து தான் தமிழக அரசு தனி கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது.

    சென்னை:

    தமிழக கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் இன்று கொண்டாடப்பட்டது.

    பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார். 210 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

    விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    ஆசிரியர் தின விழாவில் கடந்த ஆண்டும் கலந்து கொண்டேன். அப்போது சில கோரிக்கைகள் ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்டது. அதில் பல கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். மீதி கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றி காட்டுவார்.

    திராவிட இயக்கத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. பெரியார் பகுத்தறிவு, சுய மரியாதைக்கான ஆசிரியர், அதனால் தான் அவருக்கு லண்டனில் உருவப்படத்தை திறந்து வைத்து பெரியார் உலகிற்கே சொந்தமானவர் என்பதை முதலமைச்சர் காட்டி இருக்கிறார்.

    கலைஞர் மாணவராக இருந்தபோதே பத்திரிகை ஆசிரியராக இருந்து அதன் பிறகும் வாழ்நாள் முழுவதும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.

    அந்த தலைவர்கள் வழியில் தான் முதலமைச்சர் திராவிட மாடல் வளர்வதற்கு ஆசிரியராக பணியாற்றுகிறார். கிராமங்களுக்கு செல்லும் போது இது தான் வாத்தியார் வீடு என அடையாளம் காட்டுவார்கள். அப்படிபட்ட வாத்தியார்களால் தான் டாக்டர்கள், என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் என பலரும் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

    சமூக மாற்றத்தை கல்வி மூலம் தான் கொண்டு வர முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு புரட்சியாளர் தான். மாணவர்களிடம் பகுத்தறிவு சிந்தனைகளை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். மாணவர்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும்.

    மாணவர் சமுதாயத்திடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். சமூக அநீதியை எதிர்த்து தான் தமிழக அரசு தனி கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது.

    இரு மொழிக்கொள்கையே போதும் என்று அறிவித்துள்ளது. ஆசிரியர்களின் உழைப்பால் தான் 75 சதவீதம் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்கிறார்கள். இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். பள்ளிகளில் விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி கணிதம், அறிவியல் பாடங்களை நடத்தாதீர்கள், விளையாடும் நேரங்களில் மாணவர்களை விளையாட அனுமதியுங்கள், அது தான் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும்.

    ஆசிரியர் தின விழாவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் சிலை அமைக்கப்படுகிறது, விரைவில் அந்த சிலையை முதலமைச்சர் திறந்து வைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு , சென்னை மேயர் பிரியா, பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, கல்வித்துறை செயலாளர் சந்திரமோகன், இயக்குனர் கண்ணப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;
    • காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள் என்றார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

    அறிவு தீபம் ஏற்றி, அறியாமை இருளை நீக்குபவர்கள்;

    அனைத்துக் குழந்தைகளுமே வெல்ல வேண்டும் என நினைப்பவர்கள்;

    அனைத்துச் சமுதாய மக்களையும் சமமாக பாவித்து, அர்ப்பணிப்பு உணர்வோடு சமத்துவ சமுதாயம் படைக்கப் பாடுபடுபவர்கள்;

    இவர்கள்தாம் கல்விக் கண் திறந்த எம் கொள்கைத் தலைவர் காமராசர் அவர்களின் கனவுகளை மெய்ப்பித்து வருபவர்கள்;

    ஆம், இவர்கள்தாம் நம் ஆசிரியப் பெருமக்கள். இவர்கள் அனைவருக்கும் எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை இந்த ஆசிரியர் தினத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஏற்றமிகு தலைமுறையை உருவாக்கி வரும் நம் ஆசிரியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை, கொடுத்த வாக்குறுதியின்படி நிறைவேற்றி, அவர்கள் வாழ்விலும் ஏற்றம் காண வழிவகை செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

    • பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்!
    • பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள்...

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசிரியர் தின வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    பெற்றோர்கள் ஆசிரியர்களை நம்பிப் பிள்ளைகளை ஒப்படைக்கிறார்கள்! பிள்ளைகள் பெற்றோரை விட ஆசிரியர்கள் சொல்வதையே அதிகம் நம்புகிறார்கள்...

    அந்த மாணவர்களுக்குத் தமிழை, அறத்தை, அரசியலை, அறிவியலை என அனைத்தையும் கற்பித்து அவர்களின் உயர்வுக்காகப் பாடுபடும் நல்லாசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்! என தெரிவித்துள்ளார். 

    • காரைக்கால் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு
    • ஆசிரியர் தினத்தன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என முடிவு எடுத்துள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் காரைக்கால் சங்க தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வின் போது காரைக்கால் பகுதியை ஏ.பி. என பிரிக்காமல் ஒரே பகுதியாக கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கலந்தாய்வின்போது காரைக்கால் பகுதியில் பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

    கருப்பு பேட்ஜ் அணிந்து...

    காரைக்கால் பகுதி தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமனம் செய்ய வேண்டும்.பணி நிரவல் என்ற பெயரில் காரைக்கால் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை குறைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட நிலையில் கோரிக்கை கடிதம், போராட்டங்கள் நடத்தியும் கல்வித்துறை செவிசாய்க்க வில்லை.

    எனவே ஆசிரியர் தினத்தன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என முடிவு எடுத்துள்ளோம்.

    அதேபோல் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து கலந் தாய்வை புறக் கணித்தும், காரைக்கால் ஆசிரியர் கூட்டமைப்புடன் இணைந்து காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவ லகத்தை முற்றுகை யிடவும் முடிவு எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.
    • சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

    ராணிப்பேட்டை:

    முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். இவரது பிறந்தநாள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் 1888-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி பிறந்தார்.

    அப்போது தமிழகத்தின் முதல் நகராட்சியான வாலாஜாவில் அரசு பள்ளி தரம் வாய்ந்ததாக இருந்தது.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் வாலாஜா அரசு பள்ளியில் சேர்ந்தார். இதற்காக அவர் வாலாஜாவில் உள்ள தனது மாமா வீட்டில் தங்கி இருந்து பள்ளி படிப்பை முடித்தார்.

    டாக்டர் ராதாகிருஷ்ணன் படித்த வாலாஜா அரசு பள்ளி தற்போது ஆண்கள் மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்துள்ளது.

    இந்த பள்ளி 120 ஆண்டுகளை கடந்தும் திறமைமிக்க மாணவர்களை உருவாக்கி வருகிறது .

    இந்த பள்ளியில் மு.வரதராசனார் முன்னாள் தலைமைச் செயலர் பத்மநாபன், முன்னாள் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சம்பத் உள்ளிட்ட சாதனையாளர்கள் படித்துள்ளனர்.

    இந்த அரசு பள்ளி 1867-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நகராட்சி நிர்வாகத்தால் அந்த காலத்திலேயே மிகத் தரம் வாய்ந்த பர்மா தேக்குகளால் மேற்தளம் மாடிபடிக் கட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன .

    மிகப் பெரிய வாணிப நகரமாக விளங்கிய வாலாஜாவில் பல வியாபாரிகளின் பிள்ளைகள் இந்த பள்ளிக்கூடத்தில் கல்வி கற்பதை மிகவும் பெருமையாக கருதுகின்றனர்.

    கடந்த 1920-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் திவான் பகதூராகவும் கவுன்சில் உறுப்பினராகவும் இருந்த ராஜகோபாலாச்சாரியார் முயற்சியினால் எச். வடிவில் பெரிய அளவில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

    சுதந்திரத்திற்கு பிறகு 1949-ம் ஆண்டு தேசிய கொடி ஏற்றுவதற்காக தூண் அமைக்கப்பட்டு தேசிய கொடி ஏற்றியுள்ளனர்.

    தற்போது பழமை வாய்ந்த இந்த பள்ளியில் உள்ள கட்டிடங்கள் சிதிலமடைந்து உள்ளன. சில கட்டிடங்கள் இடித்து விழும் நிலையில் உள்ளன.

    ஓடுகள் சரிந்தும், சுவர்கள் சேதமடைந்து காணப்படுகிறது.

    நாளை இந்த பள்ளியில் ஆசிரியர் தின விழா கோலாகலமாக கொண்டாடவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

    இடியும் நிலையில் உள்ள பள்ளி கட்டிடங்களை இடித்துவிட்டு புதிய கட்டிடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

    • தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

    காஞ்சிபுரம்:

    முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5-ந்தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. மத்திய, மாநில அரசுகள் சார்பில் அன்றைய தினம் நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது.

    தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வழங்கப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்னும் நல்லாசிரியர் விருதாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 18ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குரிய விருது தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சென்னையில் நாளை நடைபெறும் விழாவில் வழங்கப்படும்.

    அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் மாநில நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் விவரம் வருமாறு:-

    புழுதிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் க.சங்கர், மாமல்லபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் தி.வி.லதா, அத்திவாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சு.மீனாட்சி, பாப்பாநல்லூர் ஆர்.சி. தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆர். சுகந்தி, மெல்ரோசாபுரம் சி.எஸ்.ஐ. மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கிரேஸ் பெட்ரீ ஷியா மாலினி,

    செங்கல்பட்டு புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ம.சச்சி தானந்தம், காரணை புதுச்சேரி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.இரா. சூரியகலா, மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ச.நாகராஜி, ஊரப்பாக்கம் ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி முதல்வர் ந.புவனேஸ்வரி ஆகியோருக்கு மாநில நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம், வல்லக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் அ.ஷேக் தலைமை அகமது, வாலாஜாபாத் ஒன்றியம் பூதேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் சி. சுந்தர ராசன்,

    குன்றத்தூர் ஒன்றியம், சிக்கராயபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கீதா, கீழ்க்கதிர்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சி.மழலை நாதன், வாலாஜாபாத் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா. சொர்ணலட்சுமி,

    குன்றத்தூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ச.ஆ.வசந்தி, ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் எஸ்.பி.சோமசுந்தரம், காஞ்சிபுரம் மானாம்பதி அரசு மேல்நிலைப்பள்ளி தொழில் கல்வி ஆசிரியர் அ.சுந்தரராஜன், குன்றத்தூர் லிட்டில் பிளவர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியை நூருல் குதாயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள்.
    • கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்.

    சென்னை :

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-

    செப்டம்பர் 5 ஆசிரியர் தினம்! தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

    • தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்கள்.
    • திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

    சென்னை:

    தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆசிரியர் தினத்தையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் 'பாரதம்' என்று குறிப்பிட்டு உள்ளார். அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    தேசிய ஆசிரியர் தினத்தில் அனைத்து ஆசிரியர்களுக்கும் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நமது இளம் மனங்களின் திறனையும் குணநலன்களையும் வடிவமைத்து வலிமை மற்றும் திறன்மிகு பாரதத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் ஆசிரியர்களுக்கு நமது நன்றியை தெரிவிப்போம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர்.

    திசையன்விளை:

    வி.எஸ்.ஆர். இண்டர்நேஷனல் பள்ளியில் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் வி .எஸ்.ஆர். ஜெகதீஸ், இயக்குநர் சவுமியா ஜெகதீஸ், முதல்வர் பாத்திமா எலிசபெத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து ஆசிரியர்கள் கேக் வெட்டி ஒருவருக்கொருவர் ஆசிரியர் தின வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

    9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் ஆசிரியர்களுக்கு பாடவாரியாக பொது அறிவு வினாக்களைக் கேட்டனர். அதற்கு ஆசிரியர்களும் தகுந்த விடைகளை அளித்தனர். மேலும் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர்களுக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் பள்ளியின் தாளாளர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஸ் நன்றி கூறினார். 

    • பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்!
    • நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்!

    சென்னை:

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில்,

    பாடப்புத்தகங்களைக் கடந்து மாணவர்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவர்கள் ஆசிரியப் பெருமக்கள்! நல்ல ஆசிரியர்கள் வாய்க்கப்பெற்ற மாணவர்கள், நல்லதொரு நாளையை உருவாக்கும் திறம்பெற்றவர்கள்!

    அறிவும் பண்பும் ஊட்டி, மாணவர்களுக்குத் திசைகாட்டியாக விளங்கும் நல்லாசிரியர்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துகள்! என்று தெரிவித்துள்ளார்.

    • விஜய் வசந்த் ஆசிரியர் தின வாழ்த்து.
    • எதிர்காலத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி.

    கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தனது பேஸ்புக் பக்கத்தில் `வாழ்க்கையையும், எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி' என்று ஆசிரியர் தின வாழ்த்து கூறியுள்ளார்.

    • மத்திய அரசு மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குகிறது.
    • பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.

    சென்னை கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்ச்சியில் கவர்னர் ஆர்.என்.ரவி கூறியதாவது:

    * மத்திய அரசு மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து நிதி வழங்குகிறது.

    * பிஎம்ஸ்ரீ திட்டத்தை முன்னர் ஏற்றுக்கொண்டு தற்போது தமிழக அரசு மறுக்கிறது.

    * பிஎம்ஸ்ரீ திட்டத்தின் கீழ் அரசுகளுக்கு கூடுதல் நிதி வழங்கப்படும்.

    * இந்தியா முழுவதும் 14,500 பள்ளிகளை கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

    * தமிழக பள்ளிகளின் தரத்தை உட்கட்டமைப்பு, கற்றல் திறனை மேம்படுத்த பிஎம்ஸ்ரீ பள்ளிகள் மிகவும் அவசியம் என்று அவர் கூறினார்.

    ×