search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெருமாள் கோவில்"

    • ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
    • திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.

    தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.

    இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.

    ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.

    சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.

    திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.

    அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    கன்னியாகுமரி :

    பெருமாளுக்கு உகந்த தமிழ் மாதமாக புரட்டாசி மாதம் கருதப்படுகிறது. அதிலும் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பெருமாளுக்கு விரதம் இருப்பதற்கு ஏற்ற நாளாகவும் கூறப்படுகிறது.

    அதனால் புரட்டாசி மாதம் பெரும்பாலானோர் விரதம் இருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது வழக்க மாக இருந்து வருகிறது. இதனால் புரட்டாசி மாதங்களில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாதம் நேற்று பிறந்தது. இதனை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி விவேகா னந்தபுரம் விவேகா னந்த கேந்திர கடற்கரை வளா கத்தில் அமைந்துள்ள திருமலை திருப்பதி தேவஸ் தான வெங்கடாஜலபதி கோவிலில் காலை 6 மணிக்கு சுப்ரபாத தரிசன மும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும், தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல நாகர்கோவில் வடிவீஸ்வரத்தில் உள்ள இடர்தீர்த்த பெரு மாள் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு 5 மணிக்கு நிர்மால்ய பூஜை யும், 9 மணி உற்சவ மூர்த்திக்கு அபிஷேகமும், தீபாராதனையும், மதியம் அலங்கார தீபாராதனையும் நடந்தது. மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடக்கி றது.

    மேலும் குமரி மாவட் டத்தில் உள்ள புகழ்பெற்ற பெருமாள் கோவில்களான திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோவில், பறக்கை மதுசூதன பெருமாள் கோவில், சுசீந்திரம் துவா ரகை கிருஷ்ணன் கோவில், ஆஸ்ராமம் திருவேங்கட விண்ணகப்பெருமாள் கோவில், மகாதானபுரம் நவநீத சந்தான கோபால கிருஷ்ணசாமி கோவில், கன்னியாகுமரி பால கிருஷ்ணசாமி கோவில், சுசீந்திரம் இரட்டைத்தெரு குலசேகர பெருமாள் கோவில், நாகர்கோவில் கிருஷ்ணன்கோவிலில் உள்ள கிருஷ்ணசாமி கோ வில், வடசேரி பால கிருஷ்ணன் சுவாமி கோ வில், கோட்டார் வாகையடி ஏழகரம்பெருமாள் கோவில், வட்டவிளை தென் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில், பார்த்திபபுரம் பார்த்தசாரதி கோவில் உள்பட அனைத்து பெருமாள் கோவில்களிலும் புரட்டாசி மாதப்பிறப்பை யொட்டி சிறப்பு வழிபாடு கள், விசேஷ பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷே கங்கள் அலங்கார தீபாரா தனை போன்றவை நடைபெற்றன. இதனால் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

    • தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • தேரோட்டம் 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

    மதுரை

    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி பெருந்திருவிழா இன்று தொடங்கியது. இதை யொட்டி காலை 8.15 மணி யளவில் கொடியேற்றம் நடந்தது. ஸ்ரீதேவி- பூதேவி யுடன் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். சுவாமி- அம்பாளுக்கு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இன்று இரவு பெருமாள் அன்ன வாகனத்தில் எழுந்தருளு கிறார்.

    நாளை (18-ந்தேதி) காலை கிருஷ்ணாவதாரம், இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளல், 19-ந்தேதி காலை ராமாவதாரம், இரவு அனுமார் வாகனத்தில் எழுந்தருளல், 20-ந்தேதி காலை கஜேந்திர மோட்சம், இரவு கருட வாகனத்தில் எழுந்தருளல், 21-ந்தேதி காலை ராஜாங்கசேவை, இரவு சேஷ வாகனத்தில் எழுந்தருளல், 22-ந்தேதி காலை காளிங்கநர்த்தனம், மாலை மோகன அவதார நிகழ்ச்சி, இரவு யானை வாகனத்தில் எழுந்தருளல், 23-ந்தேதி காலை சேஷ சயனம், இரவு புஷ்ப விமானத்தில் எழுந்தருளல், 24-ந்தேதி காலை வெண்ணை தாழி, இரவு குதிரை வாகனத்தில் எழுந்தருளல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 25-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் நடைபெறுகிறது. அன்று இரவு பெருமாள் பூப்பல் லக்கில் எழுந்தருளுவார். 26-ந்தேதி காலை திருமுக்குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். அன்று இரவு பெருமாள் பூச்சப்பரத்தில் எழுந்தருளு கிறார். 27-ந்தேதி காலை, மாலை தெப்ப உற்சவம் நடைபெறும். 28-ந்தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறும்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    • ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது
    • அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர்

    திருவட்டார் :

    திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணப்பண்டிகை நாளில் கேரளா முறைப்படி ஓணவில் பெருமாளுக்கு சமர்ப்பிப்பது வழக்கம். இந்த ஆண்டு இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. ஓண வில்கள் சுவாமி முன்பு சமர்பிக்கப்பட்டது. பின்னர் அர்ச்சகர்கள் ஓணவில்களை ஏந்தி ஸ்ரீபலி விக்கிரகங்கள் அருகில் சென்றனர். இதையடுத்து ஸ்ரீ பலி விக்கிரகங்களுடன் மேள தாளம் முழங்க ஓணவில்களுடன் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்தனர்.

    தொடர்ந்து ஓணவில்கள் கிருஷ்ணசாமி சன்னதியிலும், ஆதிகேசவப்பெருமாள் சன்னதியிலும் வைக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. இந்த பூஜையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் செய்திருந்தார்.

    • காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது.
    • மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது.

    கடலூர்:

    பண்ருட்டி,திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும்ஆடி மாதம் பவித்ர உற்சவம் நடப்பது வழக்கம். அதேபோல இந்தாண்டு பவித்ர உற்சவம் கடந்த 11-ந் தேதி(வெள்ளிக்கிழமை) முதல் தொடங்கி நடந்து வந்தது. நேற்று முன்தினம் 2-ம் நாள் உற்சவமும் நேற்று 3-ம் நாள் உற்சவமும் நடந்தது. இதனை முன்னிட்டு காலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னர் மூலவர் மற்றும் உற்சவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு பவித்ரம் சாற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாலை உற்சவர் சரநாராயண பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராக விசேஷ அலங்காரத்தில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சரநாராயண பெருமாளை தரிசனம் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • வருகிற 10-ந்தேதி நடக்கிறது
    • ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல் மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும்

    கன்னியாகுமரி :

    நாட்டில் வேளாண் பணிகள் மேம்பாடு அடையவும், நெற்கதிர் அறுவடை செழித்தோங்கவும் கோவில்களில் நிறை புத்தரிசி பூஜை நடைபெறும். பூஜையில் வைக்கப்படும் நெற்கதிர்களை பக்தர்கள் தங்களது வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் கட்டித் தொங்க விடுவார்கள். இதன் மூலம் அந்த ஆண்டு முழுவதும் செல்வச்செழிப்பும், நெல்மணிகளை வயலில் தூவினால் விளைச்சல் செழித்தோங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் நிறை புத்தரிசி பூஜை குமரி மாவட்டம் மற்றும் கேரளாவில் உள்ள கோவில்களில் நடைபெறும். திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் வருகிற 10-ந்தேதி நிறைபுத்தரிசி பூஜை நடைபெறுகிறது. அன்று காலை 5 மணி அளவில் திருவட்டார் பஸ் நிலையம் அருகில் உள்ள முனிக்கல் மடம் நந்தவனத்தில் நெற்கதிர்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஆதிகேசவ பெருமாள் கோவிலுக்கு கொண்டு வரப்படுகிறது.

    தொடர்ந்து 5.45 முதல் 6.15-க்குள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளும் ஆதிகேசவபெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி விக்கிரகங்கள் முன்பு அவை படைக்கப்பட்டு பூஜை செய்யப்படும். பூஜைகளுக்கு பின்னர் சந்தன பிரசாதத்துடன் நெற்கதிர்கள் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன் குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • இந்த ஆலயத்தில் தாயாருக்கே முதல் மரியாதை.
    • இங்குள்ள பலிபீடம் சிறப்புக்குரியதாக உள்ளது.

    திருச்சி மாவட்டத்தில் உள்ள திருவெள்ளறை என்ற இடத்தில் அமைந்த புண்டரீகாட்ச பெருமாள் ஆலயத்தைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    மூலவர்: புண்டரீகாட்சன் (செந்தாமரைக் கண்ணன்)

    தாயார்: செண்பகவல்லி

    உற்சவர்: பங்கஜவல்லி

    தல விருட்சம்: வில்வம்

    தீர்த்தம்: மணிகர்ணிகா, சக்ர தீர்த்தம், புஷ்கல தீர்த்தம், வராக தீர்த்தம், கந்த தீர்த்தம், பத்ம தீர்த்தம்.

    * இந்த ஆலயத்தில் தாயாருக்கே முதல் மரியாதை. விழாக்காலங்களில் கூட தாயார் முன் செல்ல, பெருமாள் அவரைப் பின்தொடர்வார். மூலவருக்கு செய்யப்படும் அனைத்து பூஜைகளும், பங்கஜவல்லி தாயாருக்கும் உண்டு.

    * தனிச் சன்னிதியில் செங்கமலவல்லி தாயார் அருள்பாலிக்கிறார். வருடத்தில் ஒரு நாள், அதாவது பங்குனி மாதம் அவிட்ட நட்சத்திரம் அன்று செங்கமலவல்லி தாயார், பெருமாள், பங்கஜவல்லி தாயார் மூவரும் ஒரே சிம்மாசனத்தில் எழுந்தருள்வார்கள்.

    * திருவெள்ளறையில் வாழ்ந்த புண்டரீகன் என்ற யோகி, தான் வைத்த நந்தவனத்தில் வளர்ந்த துளசியைக் கொண்டு பெருமாளையும் தாயாரையும் பூஜித்து வந்தார். அவருக்கு காட்சி கொடுத்த இறைவன் என்பதால் இத்தல இறைவனுக்கு 'புண்டரீகாட்ச பெருமாள்' என்று பெயர்.

    * இங்குள்ள பலிபீடம் சிறப்புக்குரியதாக உள்ளது. இந்த பலிபீடத்தின் முன் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் பலிபீட திருமஞ்சனம் செய்து, பொங்கல் படைத்து வழிபடுகிறார்கள்.

    * இந்த ஆலயத்தில் 'உத்தராயன வாசல்', 'தட்சிணாயன வாசல்' என்று இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி மாதம் வரை உத்தராயன வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி மாதம் வரை தட்சிணாயன வாசல் வழியாகவும் பெருமாளை பக்தர்கள் தரிசிக்கலாம்.

    கருவறை தெய்வங்கள்

    * கருவறையில் பெருமாளின் மேற்புறம் வலது பக்கம் சூரியனும், இடது பக்கம் சந்திரனும் இருந்து சாமரம் வீசுகின்றனர்.

    * பெருமாளின் இரு பக்கமும் கருடனும், ஆதிசேஷனும் மனித வடிவில் நின்றபடி இருக்கிறார்கள்.

    * நடுநாயகமாக மூலவர் பெரிய உருவத்துடன் காட்சியளிக்கிறார். மூலவருக்கு முன்பாக ஒரே சிம்மாசனத்தில் உற்சவரான செந்தாமரைக் கண்ணனும், பங்கஜவல்லி தாயாரும் உள்ளனர்.

    * பெருமாளின் காலடியில் இடது பக்கம் பூமாதேவியும், வலது பக்கம் மார்க்கண்டேயரும் அமர்ந்து தவம் புரிகின்றனர்.

    படி தத்துவம்

    * இத்தல பெருமாளை தரிசிக்க முதலில் 18 படிகளை கடக்க வேண்டும். அது பகவத் கீதையின் 18 அத்தியாயங்களை குறிக்கிறது.

    * அதன்பிறகு 4 படிகள் வரும். அது நான்கு வேதங்களை குறிக்கிறதாம்.

    * அதைத் தொடர்ந்து 5 படிகள் வரும். அது பஞ்சபூதங்களை குறிப்பதாகும்.

    * பின்வரும் 8 படிகள், 'ஓம் நமோ நாராயணா' என்ற அஷ்டாட்சர மந்திரத்தை குறிக்கும்.

    * அதன்பிறகான 24 படிகள், காயத்ரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை குறிப்பதாகும்.

    * மேற்கண்ட படிகளைக் கடந்த பிறகே பெருமாளை தரிசிக்க முடியும்.

    * திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் இத்தல இறைவனை மங்களாசாசனம் செய்துள்ளனர். மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில், இது 4-வது தலம்.

    * 50 அடி உயரத்தில் வெண்மையான பாறைகளால் ஆன குன்றின் மீது இத்தலம் அமைந்துள்ளது. எனவே இதற்கு 'வெள்ளறை' என்று பெயர்.

    * திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 28 கிலோமீட்டர் தொலைவிலும், திருவரங்கத்தில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் தொலைவிலும் திருவெள்ளறை திருத்தலம் உள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூவரும் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு.
    • வேதநாராயணரின் திருமேனியானது முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது என்று கூறப்படுகிறது.

    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுக்குன்றம் வட்டத்தில் அமைந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சிற்றூர் ஆனூர். இங்கு மிகப்பழமையான சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வேதநாராயணப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. பல்லவ மன்னன் கம்பவர்மன், பார்த்திவேந்திர வர்மன் , முதலாம் ராஜராஜசோழன், முதலாம் குலோத்துங்கச் சோழன், இரண்டாம் ராஜராஜன் முதலான மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளனர். இத்தலமானது கல்வெட்டுக் களஞ்சியமாக காட்சி தருகிறது. கருவறையைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுக்கள் காணப்படுகின்றன.

    சோழர் காலக் கல்வெட்டுக்களின் மூலம் இவ்வூரானது ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில், களத்தூர் கோட்டத்தில், களத்தூர் நாட்டில் அமைந்திருந்தது என்பதையும், முதலாம் குலோத்துங்கச் சோழனது கல்வெட்டின் மூலம் இவ்வூர் 'ஆதியூரான சத்யாசிரிய குலகால சதுர்வேதிமங்கலம்' என்று அழைக்கப்பட்டுள்ளதை அறியமுடிகிறது. ஆனியூர், ஆதியூர் எனும் பல பெயர்களில் இவ்வூரின் பெயர்கள் கல்வெட்டுக்களில் குறிக்கப்பட்டுள்ளன. பதிமூன்றாம் நூற்றாண்டில் இத்தலம் 'சித்திரமேழி விண்ணகரம்' என்று அழைக்கப்பட்டிருக்கிறது.

    மது, கைடபர் எனும் இரண்டு அசுரர்கள் பிரம்மாவிடம் இருந்து வேதங்களை பறித்துக் கொண்டு சென்றார்கள். பிரம்மா மகாவிஷ்ணுவிடம் முறையிட, அவர் இரண்டு அசுரர்களையும் வதம் செய்து வேதங்களை மீட்டெடுத்து மீண்டும் பிரம்மாவிடம் ஒப்படைத்தார். அதுவரையில் பிரம்மா ஒற்றை முகத்துடன் ஆனூரில் யாகம் வளர்த்துக் கொண்டிருந்ததாகவும், மகாவிஷ்ணு இத்தலத்தில் பிரம்மனுக்கு காட்சி கொடுத்து வேதங்களை அவரிடத்தில் ஒப்படைத்து இத்திருத்தலத்தில் வேதநாராயணராக எழுந்தருளியதாகவும் தலவரலாறு கூறுகிறது.

    கிழக்கு திசை நோக்கி அமைந்த திருத்தலம். கோவிலுக்கு வெளிப்புறத்தில் ஒரு பழமையான விளக்குத்தூண் காட்சி தருகிறது. சிதிலமடைந்த மதில்சுவர். ராஜகோபுரம் இன்றி காட்சி தரும் நுழைவு வாசல். கோவிலுக்குள் நுழைந்தால் பலிபீடம். அடுத்தபடியாக ஒரு சன்னிதியில் பெரியதிருவடியான கருடன் காட்சி தருகிறார்.

    முன் மண்டபத்தின் இடது புறத்தில் சீதா தேவி சமேத கோதண்டராம சுவாமி வீற்றிருக்கிறார். வலதுபுறத்தில் லட்சுமிநாராயணப் பெருமாள், விஷ்வக்சேனர், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், பிரபையோடு ஒரு பக்த ஆஞ்சநேயர் மற்றும் பிரபையின்றி மற்றொரு பக்த ஆஞ்சநேயர் முதலானோர் அருளுகிறார்கள்.

    கருவறையில் வேதநாராயணப் பெருமாள் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூவரும் அமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளியிருப்பது சிறப்பு. வேதநாராயணர் தனது இடது திருப்பாதத்தை மடித்து பீடத்தில் வைத்து வலது திருப்பாதத்தை தாமரைப் பீடத்தின் மீது தொங்கவிட்டபடி எழுந்தருளி சேவை சாதிக்கிறார். மேல் இரு திருக்கரங்களில் சங்கு, சக்கரம் தாங்கியும், கீழ் வலது திருக்கரத்தை அபய ஹஸ்தத்தில் வைத்தும், இடது திருக்கரத்தை ஆஹீவான ஹஸ்தத்தில் வைத்தபடியும் பெருமாள் தரிசனம் தருகிறார். வேதநாராயணரின் திருமேனியானது முழுவதும் சாளக்கிராமத்தினால் ஆனது என்று கூறப்படுகிறது. அவரது மார்பின் வலதுபுறத்தில் ஸ்ரீவத்சம் அமைந்துள்ளது. உற்சவரான ஸ்ரீதேவி-பூதேவி சமேத ஸ்ரீவேதநாராயணப் பெருமாள் முன் மண்டபத்தில் காட்சி தருகிறார்.

    ஒருசமயம் பாலாற்றுக்குள் மூலவரைப் போலவே ஒரு வேதநாராயணர் சிலை கிடைத்துள்ளது. சற்றே பின்னமடைந்த இச்சிலை கோவிலில் முன் மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதுபோலவே கருடாழ்வார் சன்னிதிக்கு அருகில் மிகப்பழமையான ஒரு விநாயகர் சிலை காட்சி தருகிறது.

    'ஷீரநதி' என அழைக்கப்பட்ட பாலாறு, வேகவதியாறு, செய்யாறு ஆகிய மூன்று ஆறுகளும் சங்கமிக்கும் இடம் திருமுக்கூடல். இந்த நதிகள் தெற்கிலிருந்து வடக்காகப் பாயும் இடம் படாளம். இந்த இடத்திற்கு அருகில் ஆனூர் அமைந்திருப்பதால் இது தட்சிணப் பிரயாகைக்கு நிகராகப் போற்றப்படுகிறது. இத்தலத்தில் அமைந்துள்ள வேத மங்கள தீர்த்தம் எனும் கிணற்றின் புனித நீரை அருந்துவதன் மூலம் பித்ருக்களின் தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.

    வேத முழக்கங்கள் எந்நேரமும் இத்தலத்துப் பெருமாளைச் சுற்றிலும் ஒலித்துக் கொண்டிருப்பதாக ஐதீகம். வேதநாராயணப் பெருமாளை தரிசித்தால் வேதங்களின் சக்தியால் நமது வாழ்வில் துன்பங்கள் யாவும் விலகி, கர்ம வினைகள் அழிந்து வாழ்வு சிறக்கும் என்பது நம்பிக்கை. ஆனூருக்கு மிக அருகில் இருக்கும் திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள நான்கு மலைகளும் நான்கு வேதங்களைக் குறிப்பதாக ஐதீகம். இம்மலைகள் வேதகிரி என்று அழைக்கப்படுகின்றன.

    ஆனூர் தலத்தில் வருடப்பிறப்பு, புரட்டாசி ஐந்து சனிக்கிழமைகளில் விசேஷ வழிபாடு மற்றும் வைகுண்ட ஏகாதசி முதலான விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

    காலை 9 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக இந்த ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டிற்கு அருகில் பொன்விளைந்த களத்தூர் செல்லும் வழியில் ஆனூர் அமைந்துள்ளது. செங்கல்பட்டில் இருந்து அரசு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

    -ஆர்.வி.பதி, செங்கல்பட்டு.

    • ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
    • ஜூலை மாதம் நேற்று வரை 11 ஆயிரத்து 893 பேரும் தரிசனம் செய்துள்ளனர்

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி விவேகானந்தபுரத்தில் உள்ள விவேகானந்த கேந்திர கடற்கரை வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கிறார்கள். இது வரை 25 லட்சம் பக்தர்கள் திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் தரிசனம் செய்துள்ளனர்.

    இந்த திருப்பதி வெங்க டாஜலபதி கோவில் திறக்கப்பட்ட 2019-2020-ம் ஆண்டில் 9 லட்சத்து 78 ஆயிரத்து 465 பேரும், 2020-2021-ம் ஆண்டில் 2 லட்சத்து 29 ஆயிரத்து 805 பேரும், 2021-2022-ம் ஆண்டில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 352 பேரும், 2022-2023-ம் ஆண்டில் 7 லட்சத்து 53 ஆயிரத்து 548 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

    இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 77 ஆயிரத்து 684 பேரும், மே மாதம் 1 லட்சத்து 9 ஆயிரத்து 865 பேரும், ஜூன் மாதம் 64 ஆயிரத்து 651 பேரும் தரிசனம் செய்துள்ளனர்.

    இந்த ஜூலை மாதம் நேற்று வரை 11 ஆயிரத்து 893 பேரும் தரிசனம் செய்துள்ளனர். இந்த தகவலை கன்னியாகுமரி திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேஸ்வர பெருமாள் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • சுவாமி கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.
    • 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இது விளங்குகிறது.

    மதுரை நகரில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தப்படியாக மிகவும் பழமை வாய்ந்தது கூடலழகர் பெருமாள் கோவில். முன்னொரு காலத்தில் மதுரையில் ஒருமுறை தொடர்ந்து மழை பெய்ததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். மழையில் இருந்து தங்களை காக்கும் படி பெருமாளை வேண்டினர். பக்தர்களின் வேண்டுதலை ஏற்ற பெருமாள் நான்கு மேகங்களை ஏவினார். அவை மதுரையைச் சுற்றி 4 மாடங்களாக ஒன்று கூடி மழையில் இருந்து மக்களை காத்தது. இவ்வாறு 4 மேகங்கள் ஒன்று கூடியதால் இந்த கோவில் நான்மாடக்கூடல் என்றும் கூடல் மாநகர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆதலால் சுவாமியும் கூடல் அழகர் என்று அழைக்கப்படுகிறார்.

    பெருமாளின் 108 திவ்ய தேசங்களில் 47-வது கோவிலாக இது விளங்குகிறது. பெரியாழ்வார் பல்லாண்டு, பல்லாண்டு என்று பாடல் பாடிய திருத்தலம் ஆகும். மேலும் தமிழகத்தில் மதுரை கூடலழகர் கோவிலிலும், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் பெருமாள் கோவில் மட்டுமே அஷ்டாங்க விமானத்தில் சுவாமி காட்சி தருகிறார். 8 பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் 'ஓம் நமோ நாராயணா' என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

    மேலும் கோவிலில் உள்ள அஷ்டாங்க விமானத்தின் கீழ் தளத்தில் கூடலழகர் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். 2-வது நிலையில் சூரிய நாராயணர் தேவியருடன் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இங்கு பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய முப்பெரும் தெய்வங்களும், அஷ்டபாலகர்களும் ஓவிய வடிவில் அருள்பாலிக்கின்றனர். இதனால் இந்த சன்னதியை 'ஓவிய மண்டபம்' என்று அழைக்கிறார்கள்.

    3-வது நிலையில் பாற்கடல் நாதர், பள்ளி கொண்ட கோலத்தில் தாயார்களுடன் அருளுகிறார். இவ்வாறு பெருமாள் இந்த தலத்தில் நின்ற, அமர்ந்த, சயன என 3 கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவநாதர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். 125 அடி உயரம் கொண்ட இந்த விமானத்தில் 10 அடியில் கலசம் உள்ளது. மேலும் இந்த விமானத்தின் நிழல் தரையில் விழாது என்பது சிறப்பம்சமாகும்.

    மலைக்கோவில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் வருவது போல் இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருகிறார்கள். இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என அழைக்கப்படுகிறார். எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன்பு சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால் இந்த பெயரில் அழைக்கப்படுகிறார். இந்த பகுதியை ஆண்ட மன்னர்கள் போருக்குச் செல்லும்போது இவரை வேண்டி வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனால் கூடலழகருக்கு இந்த பெயர் ஏற்பட்டது எனவும் கூறுகிறார்கள்.

    பஞ்சபூத தத்துவம்

    இந்த கோவில் பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் 5 கலசத்துடன் கூடிய 5 நிலை ராஜகோபுரம், 8 எழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் 8 பிரகாரங்களுடன் அமைந்த கோவில் இதுவாகும். ஆண்டாள் சக்கரத்தாழ்வார், நவக்கிரகம், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், மணவாள மாமுனிகள், விஸ்வஷேனர், ராமர், கிருஷ்ணன், லட்சுமி நாராயணன், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. சூரிய மண்டலத்தில் சூரியன் அஷ்டாங்க விமானத்துடன் கூடிய ரதத்தில் வலம் வருவார். இந்த ரதத்தின் மாதிரி சிற்பம் கோவிலின் சுற்றுச் சுவரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    மண்டல தரிசனம்

    மாங்கல்ய பாக்கியம் மதுரை கூடலழகர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கிறார்கள். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள். கூடலழகர் கோவில் வேண்டுதல் ஸ்தலமாக திகழ்கிறது. கோவிலை 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.

    தினமும் 6 கால பூஜை

    மதுரை கூடலழகர் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை. காலை 8 மணிக்கு கால சந்தி பூஜை. 10 மணிக்கு சுற்று கோவில் பூஜை. 12 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 7 மணிக்கு சுற்று கோவில் பூஜை. இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை.

    • இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார்.
    • கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்புவில் வரலாற்று சிறப்பு மிக்க சவுந்தரராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. விஜயநகர பேரரசர்களான அச்சுத தேவராயர் மற்றும் ராமதேவராயர் ஆகிய மன்னர்களால் கலைச்சிற்ப நுணுக்கத்துடன் இந்த கோவில் அமைக்கப்பட்டது. இக்கோவிலில் உள்ள பெருமாள் பக்தர்களால் அழகர் என்று அன்போடு அழைக்கப்பட்டு, வணங்கப்பட்டு வருகிறார்.

    தாடிக்கொம்பு அருகே வடக்கு நோக்கி செல்லும் குடகனாறு ஆற்றங்கரையில் அமர்ந்து மண்டூக முனிவர் என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருந்தார். அவரது தவத்திற்கு இடையூறு செய்யும் விதமாக தாளாசூரன் என்ற அரக்கன் பல்வேறு இடையூறுகளை செய்து வந்தான். இதனால் மதுரையை அடுத்த அழகர்மலையில் உள்ள திருமாலிருஞ்சோலை கள்ளழகரை நோக்கி தனது தவத்திற்கு உதவி செய்ய வேண்டி கடும் தவம் புரிந்தார். இவரது தவத்தால் ஈர்க்கப்பட்ட திருமாலிருஞ்சோலை அழகர், மண்டூக முனிவருக்கு இடையூறு செய்த தாளாசூரன் என்ற அரக்கனை வதம் செய்து முனிவரின் தவத்தை தொடர உதவி செய்தார். பின்னர் முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அவரும் கள்ளழகர் இப்பகுதியில் வாசம் செய்து இப்பகுதியில் வாழும் மக்களை காக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். முனிவரின் வேண்டுதலை ஏற்று தாடிக்கொம்பு பகுதியிலேயே கள்ளழகர் என்ற சவுந்தரராஜ பெருமாள் எழுந்தருளி, வீற்றிருப்பதாக புராண வரலாறு கூறுகிறது.

    இந்த கோவிலில் சவுந்தரராஜ பெருமாள், சவுந்தரவல்லி தாயார் மற்றும் ஆண்டாளுடன் நின்றகோலத்தில் எழுந்தருளி உள்ள மூல சன்னதியும், சவுந்தரவல்லி தாயாருக்கு என தனி சன்னதியும், ஆண்டாளுக்கென்று ஒரு தனி சன்னதியும் அமையப்பெற்றுள்ளது. இதுதவிர பரிவார மூர்த்திகளான நம்மாழ்வார், இரட்டை விநாயகர், ஹயக்ரீவர், தன்வந்திரி பெருமாள், லட்சுமி நரசிம்ம பெருமாள், வேணுகோபால சுவாமி, ராம பக்த ஆஞ்சநேயர், சொர்ண ஆகர்ஷண பைரவர், விஸ்வக்சேனர் ஆகிய தெய்வங்களுக்கும் சன்னதிகள் உள்ளன. மேலும் கோவிலுக்கு வெளியே தென்புறத்தில் சக்கரத்தாழ்வார் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    கல்விக்கு ஹயக்ரீவர், உடல்நலத்திற்கு தன்வந்திரி பெருமாள், கடன்களில் இருந்து மீள லட்சுமி நரசிம்மர், திருமண தடை நீங்க ஆண்டாள், ரதி, மன்மதன், குழந்தை பாக்கியம் கிடைக்க வேணுகோபால சுவாமி, பொருளாதார சிக்கல்கள் நீங்க சொர்ண ஆகர்ஷண பைரவரை பக்தர்கள் வணங்கினால் தங்களது வேண்டுதல் நிறைவேறும். அனைத்தும் நிறைவேற திருவோண நட்சத்திரத்தன்று நடைபெறும் சிறப்பு பூஜையில் சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். இவ்வாறு சகல வரங்களையும் அளிக்கும் ஒரே தலமாக இக்கோவில் விளங்குகிறது.

    புகழ்பெற்ற இசை தூண்கள்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் மூலஸ்தானத்தின் பின்புறம் தனி சன்னதியில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார், சவுந்தரவல்லி தாயார். சவுந்தரராஜ பெருமாளை தரிசனம் செய்வதற்கு முன்பு தனது வேண்டுதல்களை சவுந்தரவல்லி தாயாரிடம் சமர்ப்பித்தால் அவர் மூலமாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் சவுந்தரவல்லி தாயார் சன்னதியில் 14 தனித்தனி தூண்களும், 2 இசை தூண்களும் உள்ளன. இந்த தூண்கள் யாவும் சிறந்த சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இந்த தூண்கள் ஒரே கல்லினால் ஆனவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூண்களில் சக்கரத்தாழ்வார், வைகுண்டநாதர், ராமர், ஊர்த்தவ தாண்டவர், இரண்ய யுத்தம், மன்மதன், உலகளந்த பெருமாள், கார்த்தவீரிய அர்ச்சுனன், மகாவிஷ்ணு, அகோர வீரபத்திரர், தில்லை காளி, இரண்ய சம்ஹாரம், ரதி ஸ்ரீ வேணுகோபாலன் உள்ளிட்ட தெய்வங்களின் சிற்பங்கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. இதுதவிர நின்ற நிலையில் விநாயகரும் எழுந்தருளியுள்ளார். இதுதவிர புகழ்பெற்ற 2 இசை தூண்களிலும் தட்டினால் ஏழு ஸ்வரங்கள் எதிரொலிக்கிறது.

    பொக்கிஷ காவலர் சொர்ண ஆகர்ஷண பைரவர்

    சிவப்பெருமானின் ஒரு அவதாரமாக இருப்பவர் பைரவர். பெரும்பாலும் வைணவ திருத்தலங்களில் பைரவர் எழுந்தருள்வது கிடையாது. ஆனால் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் வடகிழக்கு மூலையில் பெருமாளின் பொக்கிஷ காவலராகவும், சேத்திர பாலகராகவும் சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி தினத்திலும், ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலையில் ராகு கால நேரத்தில் நடைபெறும் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு வழிபடுவதன் மூலம் வராக்கடன்கள் வரப்பெறுவதுடன், இழந்த சொத்துகள் மீளபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி தினத்தில் நடைபெறும் பூஜையில் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் திரளாக வந்து சொர்ண ஆகர்ஷண பைரவருக்கு பால், இளநீர், தேன் மற்றும் அரளிப்பூ உள்ளிட்ட பூஜை பொருட்களை காணிக்கையாக அளித்து வழிபாடு செய்கின்றனர்.

    ஞானசக்தி அருளும் ஹயக்ரீவர்

    கல்வியின் கடவுள் சரசுவதி. அந்த சரசுவதிக்கு ஆசானாக திகழ்ந்தவர் ஹயக்ரீவர். இவர் தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் பரிவார மூர்த்திகளில் முதலாவதாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவரை திருவோண நட்சத்திரம் மற்றும் புதன்கிழமைகளில் ஏலக்காய் மாலை சாத்தி, தேன் மற்றும் துளசியுடன் பிரார்த்தனை செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு ஞானசக்தி ஏற்படுவதுடன் அவர்களின் கல்வி வளர்ச்சிகளும் மேன்மை அடையும்.

    தும்பிக்கை ஆழ்வார்

    தாடிக்கொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோவிலில், ராஜகோபுரத்தில் உள் நுழைந்த உடன் தெற்கு நோக்கி எழுந்தருளி உள்ள விஸ்வக் சேனரை வணங்கி ஆலயத்துக்குள் பிரவேசம் செய்ய வேண்டும்.

    அதைத்தொடர்ந்து பரிவார சன்னதிகளில் தென்பகுதியில் முதலாவதாக நம்மாழ்வார் எழுந்தருளி உள்ளார். இவரை அடுத்து தும்பிக்கை ஆழ்வார் என்று வைணவத்தில் அழைக்கப்படும் விநாயகர் சன்னதி அமைந்துள்ளது.

    • அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர்.
    • அனந்த சயன கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு அருகே இருக்கிறது, திருமால்பாடி என்ற கிராமம். இங்கு அரங்கநாதப் பெருமாளாக, திருமால் காட்சி தரும் திருக்கோவில் அமைந்திருக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் சிலை வடிவமாக அருள்புரிந்து வரும் திருமால், இந்த திருமால்பாடியில் குளிர்ந்த ஏரிக்கரையின் மீது அமைந்த குன்று ஒன்றில், அனந்த சயன கோலத்தில், அடியாளர்களுக்கும், தன்னை நாடி வரும் பக்தர்களுக்கும் அருள்பாலித்து வருகிறார்.

    பல்வேறு புராணங்களை எழுதியவரும், வேதங்களை தொகுத்து வழங்கியவருமான வேதவியாசரின் மகன் சுகபிரம்ம ரிஷி. இவர் கிளி முகம் கொண்டவர். அந்த புராண காலத்தில் இப்பகுதி விரஜாபுரி என்று அழைக்கப்பட்டது. வைகுண்டத்தில் பிரவாகம் கொண்டு பாயும் புண்ணிய நதியின் பெயர் விரஜை. இதன் பெயரில் அமைந்த இடம்தான் விரஜாபுரி. இங்குள்ள குன்றின் மீது சுகபிரம்ம மகரிஷி, திருமாலை நோக்கி தவம் இயற்றினாா். பல ஆண்டுகளாக அவர் இருந்த தவத்தின் பயனாக, இந்த திருத்தலத்தில் தேவர்களுடன் கூடிய அரங்கநாதனாக, சுகப்பிரம்ம ரிஷிக்கு திருமால் தரிசனம் தந்தார்.

    மேலும் வேண்டிய வரம் கேட்கும்படியும் கூறினார். அப்போது தனக்கு 'முக்திப்பேறு வேண்டும்' என்று கேட்டார் சுகப்பிரம்ம ரிஷி. அதற்கு அரங்கநாதர், "இத்தலத்திற்கு அருகில் உள்ள தீர்க்காசலம் என்னும் நெடுமலையில் தவம் புரிந்து வா. என்னுடைய ராம அவதாரத்தின் போது, லட்சுமணன், அன்னை சீதாபிராட்டி, அனுமன் புடைசூழ காட்சி தந்து, முக்திப்பேறு அருள்வேன்" என்று கூறி மறைந்தார். இக்குன்றில் தவத்தை முடித்து, அரங்கநாதரின் கட்டளைப்படி நெடுமலையை அடைந்து, அங்கு மீண்டும் திருமாலைக் குறித்து தவமிருந்தார். பின்னர் ராமச்சந்திர பிரபுவைக் கண்டு, வணங்கி, முக்தி நிலையை எய்தினார் சுகப்பிரம்ம ரிஷி.

    இந்த புராண பின்னணியை மனதில் கொண்டு, கி.பி.1136-ம் ஆண்டு பராந்தக சோழனின் மகன் விக்கிரம சோழனால், இக்குன்றில் அரங்கநாதருக்கு ஆலயம் எழுப்பப்பட்டது. அது முதல் அடியார்களின் குறைகளை நீக்கி அற்புதமாக அருள்பாலித்து வருகின்றார் அரங்கநாயகி உடனாய அரங்கநாத பெருமாள்.

    குளிர்ந்த ஏரி நீரில் பட்டு வீசும் தென்றலும், பூஞ்சோலைகளும் பசுமையான வயல்வெளிகளும் சூழ, அற்புதமான சிறு குன்றின் மீது கோவில் கொண்டுள்ளார் அரங்கநாதர். 108 திவ்ய தேசங்களை நினைவூட்டும் 108 படிகளைக் கடந்து இந்த குன்றின் மேல் உள்ள இறைவனைக் காணச் செல்ல வேண்டும். படிகளைக் கடந்து மேலே சென்றதும், மேற்குப்புறமாக வசந்த மண்டபம் காணப்படுகின்றது. அடுத்ததாக, மூன்று நிலைகளும் ஏழு கலசங்களும் கொண்ட ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. முன் மண்டபத்தின் இருபுறமும் கருங்கல் திண்ணைகள். உள்ளே மகா மண்டபத்தில் நேராக தென்திசையை பார்த்தபடி வீர ஆஞ்சநேயர் தரிசனம் அளிக்கின்றார்.

    சற்று இடதுபுறம் திரும்பினால், தாயார் அரங்கநாயகியின் சன்னிதியை தரிசிக்கலாம். இந்த தாயார் அலங்கார ரூபத்தில், சர்வ மங்களங்களையும் அருளும் சக்தியாக திருவருள் பொழிகின்றாள். அவருக்கு அருகில் நரசிம்மரது தரிசனத்தைக் காணலாம். மகாமண்டபம் கடந்து, பெரிய அந்தராளத்தை அடைந்தால், கருவறையில் ஒய்யாரமாக சயனித்திருக்கும் அரங்கநாதப் பெருமாளை கண்குளிரக் கண்டு தரிசிக்கலாம். 15 அடி நீளமுள்ள ஐந்து தலைகள் கொண்ட ஆதிசேஷன் மீது, மரக்காலை தலைக்கு வைத்தபடி, அனந்த சயனத்தில் பெருமாள் படுத்திருக்கிறார். அவரது தலையின் பக்கத்தில் ஸ்ரீதேவியும், கால் அருகில் பூதேவியும் அமர்ந்துள்ளனர்.

    அரங்கநாதரின் திருப்பாதங்களின் அருகே பிரகலாதனும், சுகபிரம்ம ரிஷியும் தவக்கோலத்தில் உள்ளனர். பரந்தாமனின் திருமுகமோ பக்தர்களை பார்த்தபடி இருப்பது சிறப்பு. தலைக்கு கீழே இரண்டு விரல்களையும் உள்ளே மடக்கி, மூன்று விரல்களை வெளியில் காட்டியபடி, 'நான் மூவுலகங்களையும் அளந்தவன்' என்று உரைக்கும் தொனியில் காட்சி தருகிறார், அரங்கநாதர். பக்தர்களை பார்த்தபடி இருக்கும் இவரது திருமுகம், பக்தர்களின் மனக் குறைகளை அகற்றி அருள்பாலிக்கும் திறனை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. சிலை வடிவில் உள்ள இந்த அரங்கநாதரின் முன்பாக, உற்சவ மூர்த்தங்களாக ஸ்ரீதேவி, பூதேவி உடனான சங்கு - சக்கரம் ஏந்திய திருமால் சேவை சாதிக்கின்றார்.

    அரங்கனின் தரிசனத்தை முடித்ததும், ஆலய பிரகாரத்தை வலம் வருகையில் ஆண்டாளை தரிசனம் செய்யலாம். சன்னிதிக்கு வெளியே தனிச் சன்னிதியில் அரங்கநாதரைப் பார்த்து இருகரங்களையும் கூப்பி தரிசித்த நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெரிய திருவடி என்று அழைக்கப்படும் கருடாழ்வார் இருக்கிறார்.

    ஆலயத்தின் வடக்குப்புறம் சிறு வாசல் ஒன்று உள்ளது. அதில் சில படிகள் வழியாக கீழே இறங்கினால் சுனை வடிவில் உள்ள தல தீர்த்தத்தை காணலாம். இந்த தீர்த்தமானது, 'நாரத தீர்த்தம்' என்று அழைக்கப்படுகிறது. பாறை மீது நின்றபடி கீழே உள்ள ஏரியையும், சுற்றியுள்ள இயற்கை அழகையும் கண்டு ரசிப்பது பெருமகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் தரும். வானர கூட்டங்கள் இங்கு பெருமளவில் உள்ளன. இந்த அரங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசலும் அமைந்துள்ளது.

    இங்கு சோழர் காலக் கல்வெட்டுகள் பெருமளவில் காணப்படுகின்றன. கி.பி.1140-ல் முதலாம் குலோத்துங்கன், கி.பி. 1135-ல் சகலலோகச் சக்கரவர்த்தி ராஜநாராயண சம்புவராயர், கி.பி. 1529-ல் வீரசிங்கதேவரின் மகனான அச்சுத தேவமகாராயர் ஆகியோரால், இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

    இந்தக் கோவிலில் வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட அநேக வைணவ நிகழ்வுகளும் வெகு விமரிசையாக நடைபெற்று வருகின்றன. இத்தல மூலவரான அரங்கநாதரையும், தாயார் அரங்கநாயகியையும் வழிபாடு செய்து வருபவர்களுக்கு திருமண பாக்கியம் , குழந்தைப்பேறு விரைவில் உண்டாகும் என்பது நம்பிக்கை. அப்படி தங்களின் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், மூலவருக்கு திருமஞ்சனம் செய்வித்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். இது தவிர அரசு வேலை, வேலையில் இடமாற்றம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்றவற்றிற்காகவும் இந்த அரங்கநாதரை வழிபடுபவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    செஞ்சியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் சாலையில் உள்ளது வளத்தி என்ற ஊர். இங்கிருந்து தேசூர் செல்லும் சாலையில் சென்றால் அருந்தோடு என்ற கிராமம் வரும். இந்த கிராமத்தின் அருகில்தான் திருமால்பாடி திருத்தலம் உள்ளது.

    -பழங்காமூர் மோ.கணேஷ்.

    ×