என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "perumal temple"

    • ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார்.
    • சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.

    திருச்சி அருகே திருநாராயணபுரம் எனும் ஊரில் வேதநாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் வேதநாராயணப் பெருமாள் எனும் திருநாமத்துடன் வேதநாயகி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.

    ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார். அப்போது அவர், தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு பெருமாள், இத்தலத்தில் வேதங்களை உபதேசித்து, பின்பு இங்கேயே பள்ளிக்கொண்டார். அதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு 'வேதநாராயணர்' என்ற பெயர் ஏற்பட்டது.

    பிற்காலத்தில் இங்குள்ள சுவாமியின் சிலை மண்ணால் மூடப்பட்டது. ஒரு சமயம், இவ்வூருக்கு வந்த வானவராயர் என்ற மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ''தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதாக'' உணர்த்தி உள்ளார். இதையடுத்து அந்த சிலையை கண்டெடுத்த மன்னர், கோவிலும் கட்டினார்.

    இரணியனை அழித்தபோது உக்கிரமாக காட்சி அளித்த நரசிம்மர், பிரகலாதனுக்கு இத்தலத்தில் சாந்த ரூபமாக காட்சி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.

    ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்கிறார்கள். மூலவர் விமானம் வேதவிமானம் எனப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், மணவாளமாமுனிவர், பிள்ளை லோகாச்சாரியார் ஆகியோர் உள்ளனர்.

    காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலின் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதி மக்களிடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாராவது பொய் சொன்னாலோ, ஏமாற்றினாலோ இங்குள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் முன்பு சத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.

    திருமணத் தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்குள்ள இறைவனுக்கு துளசி மாலை அணிவித்து, 27 அகல் விளக்கு ஏற்றி ஜாதகத்தை பெருமாள் திருவடியில் வைத்து வழிபட்டு செல்கின்றனர். தோஷம் உள்ளவர்கள், தங்களின் ஜென்ம நட்சத்திரமன்று இந்த வழிபாட்டை செய்வது விசேஷமாகும்.

    திருச்சி - முசிறி சாலையில் திருச்சியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் தொட்டியத்திற்கு அருகில் உள்ள திருநாராயணபுரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

    • தீர்த்தத்தை மூன்று முறை அருந்தி, பின் அதனை தங்கள் தலையில் தெளித்துக் கொள்வது வழக்கம்.
    • பெரும்பாலும் துளசி இலைகளுடன் இந்த தீர்த்தம் வழங்கப்படும்.

    பெருமாளின் திருமேனியில் அபிஷேகம் செய்யப்பட்ட நீரால் இந்த தீர்த்தம் புனிதமாகிறது. இந்த புனித தீர்த்தத்தை அருந்துவதன் மூலம் பாவங்கள் நீங்கும் என்றும் நம்பப்படுகிறது. பெருமாளின் ஆசியையும், அருளையும் பெறுவதற்காக தீர்த்தம் வழங்கப்படும்.

    பெரும்பாலும் துளசி இலைகளுடன் இந்த தீர்த்தம் வழங்கப்படும். துளசி இலைகளுக்கே மகத்துவம் உண்டு, அது பெருமாளின் பிரசாதமாக இருக்கும் போது இன்னும் மகத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    தீர்த்தத்தை பெறும் முறை

    முதலில் தீர்த்தத்தை வாங்குவதற்கு முன், பக்தர் சடாரி அல்லது சடகோபம் மீது தலையை வைத்து இறைவனின் பாதங்களை வணங்க வேண்டும். இறை தரிசனத்திற்குப் பிறகு, பக்தரின் தலையில் சடாரி (பெருமாளின் திருவடியாக பாவிக்கப்பட்டது) வைக்கப்படும்.

    பின்னர் தீர்த்தப் பிரசாதம் வழங்கப்படும். பெண்கள் தங்களின் இடது கையில் புடவையின் முந்தானையை பிடித்து, வலது கையை அதற்கு மேல் வைத்து தீர்த்தத்தை வாங்க வேண்டும். தீர்த்தத்தை மூன்று முறை அருந்தி, பின் அதனை தங்கள் தலையில் தெளித்துக் கொள்வது வழக்கம்.

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை பக்தியுடன் கண்டு வணங்கினர்.
    • தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணி அளவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    திருச்சி கே.கே.நகர் இந்திராநகர் ஸ்ரீ ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் இன்று (வியாழக்கிழமை) காலை கோலாகலமாக நடைபெற்றது. இதற்கான யாக சாலை பூஜைகள் கடந்த 8-ந்தேதி தொடங்கின. அன்று மாலை ஆசார்யாள், அர்சகாள் (யஜமானாள்) அழைப்பு, பகவத் ப்ரார்த்தனை. மஹா ஸங்கல்பம், அனுக்ஞை, விஷ்வக்ஸேன ஆராதனம், க்ரஹப்ரீதி, ஆசார்ய வர்ணம், - ம்ருத்ஸங்கி ரஹணம், வாஸ்து சாந்தி, - அங்குரார்பணம், வேதப்ர பந்த பாராயணம் தொடக்கம் நடைபெற்றது. இரவு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.

    மறுநாள் காலையில் 1-ம் கால் பூஜை, தீர்த்த - ஸங்க்ரஹணம் ரக்ஷா பந்தனம். சத்தி - யாகர்ஷணம், க்ருஹப்ரீதி, - யாத்ராதானம் மஹா கும்பம் (பெருமாள்உத்ஸவர்) ப்ரவேசம், துவாரபூஜை அக்னி மதனம், அக்னி யாகசாலை ப்ரதிஷ்டை, நித்யஹோமம் ஆகியவை நடைபெற்றன. மதியம் பூர்ணாஹுதி சாற்றுமுறை கோஷ்டியும் நடந்தன. 2-ம் காலம் மாலையில் துவாரபூஜை, கும்ப, மண்டல, பிம்ப பூஜைகள், நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்). இரவு பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி நடந்தது.

    நேற்று(புதன்கிழமை) காலை 8 மணிக்கு 3-ம் காலம் புண்யாஹ வாசனம் துவாரபூஜை, கும்ப மண்டல பிம்பபூஜை, நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்.) மதியம் பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி ஆகியவை நடைபெற்றன. மாலை 4 மணிக்கு புண்யாஹவாசனம், மூலவர், உத்ஸவர் விமானங்கள், ப்ராயச்சித்த ஸ்நபன கலச திருமஞ்சனம், பஞ்சகவ்ய அபிஷேகம். 6 மணிக்கு கோதோஹணம், பசுமாடு யாக சாலைக்கு கொண்டு வந்து பால் கறந்து ஹோமம் செய்தல் நடைபெற்றது..

    மாலை 6.30 மணிக்கு 4-ம் காலம் துவார பூஜை. கும்ப மண்டல பிம்ப பூஜை, நித்ய ஹோமம் (சதுஸ்தான ஆராதனம்) ஷோடச, தத்வ, ந்யாஸ, ஹோமங்கள், சாந்தி ஹோமம். இரவு 8.30மணிக்கு பூர்ணாஹுதி, சாற்றுமுறை கோஷ்டி, இரவு 9 மணிக்கு சயனாதி வாசம் நடைபெற்றது. இன்று (வியாழக் கிழமை) காலை 5.30 மணிக்கு 5-ம் காலம் விஸ்வரூபம், புண்யா ஹவாசனம், துவார பூஜை, கும்ப மண்டல பிம்ப பூஜை, நித்ய ஹோமங்கள், (சதுஸ்தான ஆராதனம்). மஹா பூர்ணாஹுதி, அந்தர்பலி, பஹீர்பலி யாத்ராதானம், க்ரஹப்ரீதி, தசதானங்கள், கும்ப உத்தாபனம், பெருமாளு டன் கடம் புறப்பாடும் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க விமானங்கள் ஸ்ரீராஜகோபுர, மூலவர், உத்ஸவர், பரிவாரங்கள் மஹா ஸம்ப்ரோஷ்ணம், விசேஷ ஆராதனம், ஆசீர்வாதம் வேத ப்ரபந்த சாற்றுமுறை, தீர்த்த குடங்கள் ஊர்வலமாக புறப்பட்டு காலை 8 மணி அளவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா கோவிந்தா கோஷத்துடன் கும்பாபிஷேகத்தை பக்தியுடன் கண்டு வணங்கினர். இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

    நிகழ்ச்சியில் தேவர் மலை கேசவன் மற்றும் திருச்சி சி.காளிதாஸ் குழுவினரின் நாதஸ்வர நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தி.மு.க. கலைஞர் நகர் பகுதி செயலாளர் மணிவேல், மாமன்ற உறுப்பினர் பொற்கொடி, அ.ம.மு.க. மாநகர அவைத் தலைவர் சாத்தனூர் ராமலிங்கம் ஏர்போர்ட் பகுதி செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.
    • இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது.

    கர்நாடகா மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ளது, பேளூர் என்ற இடம். இது ஹோய்சாலப் பேரரசின் ஆட்சி காலத்தில் தலைநகராக இருந்த ஊர் ஆகும். இங்கு சென்னகேசவர் கோவில் இருக்கிறது. இந்த ஆலயம் முன் காலத்தில் 'விஜயநாராயணர் கோவில்' என்று அழைக்கப்பட்டு வந்துள்ளது. திருமாலை முக்கிய கடவுளாகக் கொண்டிருக்கும் இந்த ஆலயம், வைணவர்களின் வழிபாட்டு யாத்திரையில் சிறப்பிடம் பெறுகிறது.

    இந்த ஆலயம் ஹோய்சால அரசர்களில் ஒருவரான விஷ்ணுவர்த்தனன் என்பவரால், கி.பி. 1117-ம் ஆண்டு கட்டப்பட்டது. இந்தக் கோவிலின் மூலவரான கேசவநாராயணர், கல்லால் ஆன பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டவர். சென்னகேசவப் பெருமாள், பெண் உருவில் இத்தலத்தில் காட்சியளிக்கிறார்.

    இந்த ஆலயம் மூன்று வாசல்களைக் கொண்டுள்ளது. இந்த ஆலயம் அதன் சிற்ப வேலைப்பாடுகளினால் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இந்த ஆலயம் இரண்டு கர்பக்கிரகத்துடன் விளங்குகிறது. இரண்டாவது கர்பக்கிரகம் பின்னாளில் இணைக்கப்பட்டுள்ளது. இதிலும் கேசவநாராயணரே மூலவராக இருக்கிறார். இதனை, விஷ்ணுவர்த்தனனின் அரசியாகிய சாந்தலாதேவி கட்டியிருக்கிறார்.

    இந்த ஆலயத்தில் 42 அடி உயரம் கொண்ட தூண் நிறுவப்பட்டுள்ளது. இதனை 'மகாஸ்தம்பம்' என்றும், 'கார்த்திகை தீபோற்சவ ஸ்தம்பம்' என்றும் அழைக்கிறார்கள். சென்னகேசவப் பெருமாள் கோவிலில் பக்தர்களை கவர்ந்திருக்கும் சிறப்பம்சம் கொண்டதாக இந்த தூண் விளங்குகிறது. ஏனெனில் இந்த தூணுக்கு அடித்தளம் இல்லை. ஒரே கல்லால் செய்யப்பட்ட மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்தத் துண், அதன் அடிப்பாக மேடையை தொடாமல் உள்ளது. இதனை இடையில் ஒரு தாளையோ, துணியையோ விட்டால், மறு மூலையில் அதனை எடுக்க முடியும். இந்த ஸ்தம்பம், பீடத்தோடு ஒட்டாமல் நிற்பது புரியாத புதிராகவே இருக்கிறது.

    • பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.
    • புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள சத்தியமூர்த்தி பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெருமாள் கோவில்கள் பலவற்றில் மூலவர் நின்ற கோலத்திலோ அல்லது சயன கோலத்திலோ காணப்படுவது உண்டு. ஆனால் இந்த ஆலயத்தில் நின்ற கோலத்திலும், அனந்த சயனத்திலும் பெருமாள் எழுந்தருளி காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும்.

    தல வரலாறு

    முற்காலத்தில் திருமயம் மூங்கில் காடாக இருந்துள்ளது. பூலோகத்தை அசுரர்கள் ஆக்கிரமித்த போது, ரிஷிகள் எல்லாம் பயந்து மலைகள், குகைகளில் மறைந்து கொண்டனர். இதனால் உலகத்தில் யாகம் முதலான நல்ல காரியங்கள் நடைபெறவில்லை. தேவர்கள் கலக்கம் அடைந்தனர். சத்திய தேவதையும், தர்ம தேவதையும் வறுமையால் மிகுந்த துன்பமுற்றன. அந்த நேரத்தில் தர்ம தேவதை, காளையின் உருவம் கொண்டு அழகர் கோவிலை அடைந்து சித்திபெற்றது.

    சத்திய தேவதையோ மானாக மாறி, மூங்கில் காடான திருமயத்தை அடைந்தது. இங்குள்ள அழகிய மெய்யனை, சத்தியமூர்த்தியை வணங்கி வழிபட்டது. மேலும் உலகில் சத்தியம் நிலைக்க வேண்டும். வாய்மை வெல்ல வேண்டும் என்ற உயர்ந்த குறிக்கோளுடன், இங்குள்ள சத்திய தீர்த்தக்கரையில் தவம் செய்து சித்தி அடைந்தது.

    ஆலய அமைப்பு

    இந்தக் கோவிலின் உள்ளே நுழைந்து, கொடிமரத்தை தாண்டி செல்லும் போது, பள்ளி கொண்ட திருமெய்யன் சன்னிதியை காணலாம். அதற்கு அடுத்ததாக சத்தியமூர்த்தி பெருமாள் நின்ற கோலத்தில் காணப்படும் சன்னிதி உள்ளது. இதில் பள்ளி கொண்ட பெருமாள் சன்னிதி கருவறை, மலையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி கொண்ட நிலையில் பெருமாள் சேவை அளிக்கும் கருவறையில், வைகுண்டத்தை காட்சிப்படுத்தும் வகையில் சிலைகள் செதுக்கப்பட்டுள்ளன. 5 தலைகளை உடைய ஆதிசேஷன் மீது அனந்த சயனத்தில் இருக்கிறார் பெருமாள். அவரது காலடியில் பூதேவி, இதய கமலத்தில் ஸ்ரீதேவி, இடமிருந்து வலமாக கருடன், எம தர்மராஜன், சித்திரகுப்தன், சந்திரன், சூரியன், ராகு, பிரம்மா, தேவர்கள், ரிஷிகள், வலது கடைக்கோடியில் அசுரர்கள் உள்ளனர். பள்ளி கொண்ட பெருமாள் அனந்த சயனத்தில், 30 அடி நீளத்தில் திருமேனியுடன் சேவை அளிக்கிறார்.

    கோவிலின் சத்திய புஷ்கரணி தீர்த்த குளம், தாமரை மலர் தோற்றத்தில் எண் கோண வடிவில் 8 படித்துறைகளுடன் அமைந்துள்ளது. இங்கு இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்கு பாலகர்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகின்றனர். இந்த தீர்த்த குளத்தில் தண்ணீரை தொட்டாலோ அல்லது சத்திய தீர்த்தம் என வாயினால் சொன்னாலோ போதும் பாவங்கள் விலகிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த தீர்த்தகுளத்தில் தண்ணீர் எப்போதும் வற்றாத நிலையில் காணப்படும்.

    இந்தக் கோவிலில் வைகாசி விசாக திருவிழா, வைகுண்ட ஏகாதசி திருவிழா, ஆடிப்பூர திருவிழா, ஆவணி மாதத்தில் பவித்ர உற்சவம், சித்ரா பவுர்ணமி விழா ஆகியவை விமரிசையாக நடை பெறும்.

    திருமணம் மற்றும் குழந்தைப்பேறு வேண்டி வரும் பக்தர்கள் சத்தியமூா்த்தி பெருமாள் மற்றும் தாயாரை மனதால் வேண்டினால், அவர்கள் கேட்ட வரம் கிடைக்கும்.

    புதுக்கோட்டையிலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது.

    • இந்த திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று.
    • தாயாரின் திருப்பெயர் பரிமள ரங்கநாயகி நாச்சியார் ஆகும்.

    இறைவன்: பரிமள ரங்கநாதர்

    இறைவி: பரிமள ரங்கநாயகி நாச்சியார்

    தீர்த்தம்: சந்திர புஷ்கரணி தீர்த்தம்

    மங்களாசாசனம்: திருமங்கையாழ்வார்

    கோவிலின் சிறப்புகள்:

    மங்களா சாசனம் பெற்ற திருத்தலங்களில் இது 26வது திருத்தலம். காவிரியின் வடகரையில் மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள திருஇந்தளூர் திருத்தலம் பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஒன்று. பஞ்சரங்க தலங்களில் பஞ்சரங்கம் மற்றும் அந்தரங்கம் என்று சொல்லப்படுகிறது. வேதசக்ர விமானத்தின் கீழ் பரிமளரங்கநாதர் சதுர் புஜங்களுடன் ஆதிசேஷன் மீது கிழக்கு முகமாக வீரசயன திருக்கோலத்தில் அருள்புரிகிறார்.

    பெருமாள் சந்நிதியின் கால்மாட்டில் ஸ்ரீதேவி கங்கையாகவும், தலைமாட்டில் பூதேவி காவிரியாகவும் காட்சியளிப்பது இத்தலத்தின் சிறப்பாகும். மயிலாடுதுறையில் கங்கையை விட காவிரி புனிதமான நதி. பரிமளரங்கநாதர் திருவடிகளில் யமதர்மராஜரும், அம்பரீஷ சக்ரவர்த்தியும் அமர்ந்து இரவும், பகலும் பூஜித்துக் கொண்டிருக்கிறார்கள். தாயாரின் திருப்பெயர் பரிமளரங்கநாயகி ஆகும். சந்திரன், சந்திர புஷ்கரிணி தீர்த்தத்தில் நீராடித் தன் சாபம் நீங்கப்பெற்றமையால் இவ்வூர் திருஇந்தளூர் எனப் பெயர் பெற்றது.

    அம்பரீஷன் என்ற மன்னன் தன்னுடைய 100வது ஏகாதசி விரதத்தை இத்தலத்தில் முடிக்க விரும்பினான். மக்கள் மகிழ்ச்சியோடு இருந்தார்கள். ஆனால் தேவர்கள் இவன் 100வது விரதத்தை முடித்தால் தேவலோக பதவி பெற்று விடுவான் என்று பயந்து துர்வாசரிடம் முறையிட அவரும் விரதத்தை தடுத்துவிடுவதாக கூறி இங்கு வருகிறார்.

    ஆனால் மன்னன் ஏகாதசி விரதத்தை முடித்து விடுகிறான். ஏகாதசி விரதம் முடித்து விட்டாலும் துவாதசி நேரத்துக்குள் உணவருந்தினதால்தான் முழு பயன் கிடைக்கும். துவாதசி நேரம் துவங்கியதும் மன்னன் உணவருந்த தயார் ஆனான். அப்போது அங்கு வந்த துர்வாசரை அவரது உள்நோக்கம் அறியாமல் அவரையும் தன்னுடன் உணவருந்த அழைத்தான். அவரும் நதியில் நீராடி வந்து விடுகிறேன், பின்பு உணவருந்தலாம் என்று கூறி நீராட செல்கிறார்.

    தாமதமாக சென்றால் மன்னன் விரதம் முடிக்க முடியாது என்று நினைத்து தாமதம் செய்கிறான். மன்னன் தான் மட்டும் விரதம் முடித்தால் சாபம் இடுவார் என்று கலங்கி வேதியர்களிடம் ஆலோசனை கேட்டார். அவர்கள் ஆலோசனை படி பெருமாளை வேண்டி உள்ளங்கையில் முழு அளவு தீர்த்தம் மூன்று முறை அருந்தி விரதத்தை முடித்தான்.. இதை உணர்ந்த துர்வாசர் கோபம் அடைந்து ஒரு பூதத்தை ஏவி மன்னனை கொல்ல ஆணையிட்டார். மன்னன் இறைவன் திருவடியில் சரணடைய பூதத்தை பெருமாள் விரட்டினார். மன்னிப்பு கேட்ட துர்வாசரை மன்னித்தார். மன்னனின் வேண்டுகோளுக்கு இணங்கி இத்தலத்தில் அருள் புரிகிறார். ஏகாதசி விரதம் இருக்க சிறந்த தலம்.

    இந்த ஊரில் கொண்டப்படும் கடைமுழுக்கு மிகவும் சிறப்பானது, ஐப்பசி மாதம் கடைசி நாளில் மயிலாடுதுறையில் உள்ள சிவாவிஷ்ணு கோவில் தெய்வங்கள் காவிரி ஆற்றங்கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறும். பல்லாயிரக்கணக்கான மக்கள் காவேரியில் நீராடுவர்.

    இருப்பிடம் மற்றும் போக்குவரத்து:

    மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து மாப்படுகை சாலையில் 2 கி.மீ. தொலைவில் இவ்வாலயம் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன.

    கோவில் திறந்திருக்கும் நேரம்:

    காலை 6.00 – 11.30 மற்றும் மாலை 5.00 – 8.30

    கோவிலின் முகவரி:

    அருள்மிகு பரிமள ரங்கநாதர் திருக்கோவில்,

    திருஇந்தளூர்,

    மயிலாடுதுறை 609003.

    • இங்கு வில்வம் தல விருட்சமாகும்.
    • சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.

    மூலவர் - சேவுகப் பெருமாள்

    தல விருட்சம் - வில்வம்

    தீர்த்தம் - புஷ்கரணி, விரிசிலை ஆற்று நீர், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீர்

    பழமை - 500 வருடங்களுக்கு முன்

    பல்லாண்டுகளுக்கு முன்பு, வில்வ வனமாக இருந்த இப்பகுதிக்கு வேட்டையாட வந்த வேடுவர் ஒருவர், மானைக்கண்டு அதன்மீது அம்பு எய்தார். தப்பிய மான் இங்கிருந்த மரப்பொந்து ஒன்றுக்குள் புகுந்து மறைந்தது. அதனை பிடிக்க வேடுவர் முயன்றபோது, புதருக்குள் ஒரு அய்யனார் சிலை இருந்தது. வியப்படைந்த வேடுவன், "சேவுகபெருமாளே. மானைத் தேடிப் போன நான் இன்று முதல் உனக்கு சேவகம் செய்யும் பாக்கியம் பெற்றேன்" என்றதுடன், "பெருமாளே" என்று சொல்லியும் வணங்கினான். அன்று முதல் இவர்,"சேவுகப்பெருமாள் அய்யனார்" என்ற பெயரில் காவல்தெய்வமாக அருளுகிறார்.

    சாஸ்தா என்றும் ஐயப்பன் என்றும் போற்றப்படும் தெய்வங்களின் அம்சமான அய்யனார் காவல் தெய்வமாகப் பல தலங்களில் அருள்பாலிக்கிறார். இத்தல சேவுகப் பெருமாள் அய்யனார் மிகவும் சக்தி வாய்ந்தவர். சிவனுக்குரிய வில்வ இலையைக் கொண்டு இங்கு பூஜை செய்யப்படுகிறது. மேலும் பெருமாளின் திருநாமம் பெற்றுள்ளார். சிவவிஷ்ணுவின் கூட்டணியில் பிறந்ததால், இத்தகைய சிறப்பு இவருக்கு தரப்பட்டுள்ளது.

    தேவர்களின் அரசன் இந்திரன் சாஸ்தாவை வளர்த்து வந்தார். அவரால் வளர்க்க இயலாத சூழ்நிலையில் பூலோகத்தில் உள்ள வேடுவ இனத்தவரிடம் ஒப்படைத்து வளர்க்கக் கூறினார். அவர்கள் அவரை அய்யனாராக பாவித்து காட்டில் மிருகங்களிடம் இருந்து பாதுகாப்பு தர வேண்டி வணங்கினர். காலப்போக்கில் காடுகள் குறைந்து ஊர்கள் பெருகவே ஊரின் எல்லையில் காவல் தெய்வமாக இருக்க வேண்டினர். இவ்வாறு, சாஸ்தாவின் அம்சமான அய்யனார் வழிபாடு உருவாயிற்று.

    அய்யனாரைப் போல அய்யப்பனும் இராகு, மாந்தி போன்ற கோள்களின் தீமையை நீக்கும் கடவுளாகத் திகழ்கிறார். ஐ என்ற முதல் நிலையோடு அப்பன் என்ற தந்தையை உணர்த்தும் சொல் இணைந்து அய்யப்பன் என்ற சொல் விளங்குகிறது. அய்யனார், அய்யப்பன் இரண்டும் ஒருவரையே குறிப்பிடக்ககூடிய சொற்கள். அய்யனார் என்பதில் அன், ஆர் என்பன சேர்ந்திருக்க அய்யப்பனில் அப்பன் சேர்ந்திருக்கிறது. சொல்லில் சேரும் சேர்க்கைகள் தான் வேறாகின்றன. உணர்த்தும் பொருளும் சொற்களின் பொருளும் ஒன்றே. சேரநாட்டு அய்யப்பனும் காடுகளுக்கு இடையே மேடான இடத்தில் தான் வீற்றிருக்கிறான். சபரிமலை அய்யப்பன் வழிபாடும் தமிழகத்தின் அய்யனார் வழிபாடும் ஒன்றுபோல விளங்குகின்றன. இரண்டும் அந்தந்த சூழலுக்கு ஏற்ப வளர்ச்சி பெற்று இன்று புகழ் பெற்று விளங்குகின்றன.

    முழுமுதற்கடவுள் மூவருள்ளும் தலைமை பெற்றவர்கள் அரியும் அரனும். இருவரும் ஈன்ற மகனே அரிகரன். அதனால் தான் இந்தப் பகுதியில் (சிவகங்கை மாவட்டத்தில்) சிவன்ராத்திரி அன்று அய்யனார் கோவில்களில் பெரும் சிறப்புடன் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. அய்யப்பன் வரலாறு சேரநாட்டுக்குத் தக்கவாறு மன்னன் மகனாகப் பந்தளநாட்டு இளவரசனாக ஐயப்பன் விளங்குவதை எடுத்துரைக்கிறது. அவன் வாழ்வில் சாதிக்க முடியாதவற்றைச் சாதித்து அவன் மிகச் சிறந்த தலைவனாக காட்சி தருகிறான். சபரிமலை அய்யப்பன் திருவுருவத்திற்கும் அய்யனார் திருவுருவத்திற்கும் பெரும் வேறுபாடு இல்லை. அய்யனைப் போல அய்யனாரும் வீராசனமாகவே வீற்றிருக்கிறார். இரண்டு கைகளை அபயவரதமாக அல்ல செண்டாயுதத்தைப் பற்றிக் கொண்டு அய்யனார் வீற்றிருப்பார். யோகப்பட்டை அணிந்திருப்பார். தலையில் மகுடம் உண்டு. அய்யானாருக்கும் அய்யப்பனுக்கும் உருவ அமைப்பில் பெரும் வேற்றுமை இல்லை.

    இத்திருகோவில் அமைந்த இடம் வில்வவனமானபடியால், இங்கு வில்வம் தல விருட்சமாகும். பரிவாரத் தேவதைகள் உட்பட இங்குள்ள அனைத்துத் தெய்வங்களும் வில்வ இலைகளினாலேயே அர்ச்சிக்கப் பெறுகின்றன.

    இத்திருக்கோவிலின் தல தீர்த்தம் (புஷ்கரணி) விரிசிலை ஆற்று நீரும், ஆலய உட்பிரகாரத்திலுள்ள வற்றாக்கிணற்று நீரும் ஆகும். பிரகாரத்தில் கன்னிமூல கணபதி, வள்ளி தெய்வானை உடனாய முருகன், பரிவார தேவதைகள், கருப்பண்ணசாமி, கருப்பர், சப்தகன்னியர், நவக்கிரகங்கள், சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர். இத்தலத்து அய்யனார் வீராசனத்தில், தலையில் மகுடம், யோகப்பட்டை அணிந்து, பூரணை, புஷ்கலையுடன் அருள்பாலிக்கிறார். அய்யனாருக்கு வலதுபுறம் காவல் தெய்வமான பிடாரியம்மன், இடதுபுறம் சுயம்பிரகாசேஸ்வரர் என்னும் பூவைவல்லி உடனாய தான்தோன்றீஸ்வரர் தனித்தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளனர்.

    திருவிழா:

    வைகாசியில் தேர்த்திருவிழா. தேர்நிலைக்கு வரும்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் நேர்த்திக்கடனாக தேங்காய்களை அருகிலுள்ள சுவரில் அடித்து உடைப்பர்.

    கோரிக்கைகள்:

    கேட்டதை கொடுப்பதில் வல்லவரான அய்யனார், ஊரைக்காப்பவராகவும், நெல் விளைச்சலைப் பெருக்குபவராகவும், கால்நடைகளைக் காப்பாற்றுபவராகவும் போற்றப் பெறுகிறார். சனி தோஷம், இராகுதோஷம் நீங்கவும் இவரை வழிபடலாம்.

    நேர்த்திக்கடன்:

    பிரார்த்தனை நிறைவேறியதும் கன்றுகள் நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகிறது. சுவாமி அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

    காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

    அருள்மிகு சேவுகப் பெருமாள் திருக்கோவில்,

    சிங்கம்புணரி,

    திருப்புத்தூர் தாலுகா,

    சிவகங்கை மாவட்டம்.

    • பெருமாள் கோவிலில் வருடாபிஷேகம் நடந்தது
    • சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது

    புதுக்கோட்டை

    கந்தர்வகோட்டை பெருமாள் கோவிலில் வருடாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டு சென்றனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை யாதவர் தெருவில் அமைந்துள்ள கோதண்ட ராமர் சீதாலட்சுமி திருக்கோவில் ஐந்தாவது ஆண்டு வருடம் அபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு சிறப்பு ஹோமங்களும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த அபிஷேக விழாவை முன்னிட்டு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பெருமாளை வழிபட்டு சென்றனர். விழா குழு சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது.
    • பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.

    மூலவர் -காளமேகப் பெருமாள்

    தாயார் -மோகன வல்லி

    தலவிருட்சம் -வில்வம்

    தீர்த்தம் -தாள தாமரை புஷ்கரிணி ,பாற்கடல் தீர்த்தம்

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 94 வது திவ்ய தேசம்.

    தல வரலாறு:

    தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்து எடுத்த அமுதத்தை பங்கிட்டுக் கொள்வதில் சர்ச்சை உண்டானது .தேவர்கள் தங்களுக்கு உதவும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர் .பெருமாள் அவர்களின் வேண்டுதலை ஏற்று ,மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில் தேவர்களுக்கு அமுதத்தை பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள் அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பின் புலஸ்தியர் எனும் முனிவர் மகாவிஷ்ணுவின் மோகினி அவதாரத்தை தரிசிக்க வேண்டும் என விரும்பினார். எனவே சுவாமி அவருக்கு அதே வடிவில் காட்சி கொடுத்தார். அவரது வேண்டுகோளின்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே காட்சி தந்து அருளுகிறார்.

    இத்தலத்தில் மிகப்பழமையான சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. இவருக்கான உற்சவர் சிலை 154 மந்திரங்களும் ,மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய ளை 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் காட்சி தரும் இவர் அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். ராகு கேது தோஷம் நீங்குவதற்கு பிரகாரத்திலுள்ள விநாயகர் சன்னதியில் ராகு காலத்தில் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள்.

    மோகன வல்லி தாயார் சன்னதியை விட்டு வெளியே வருவதில்லை. இவளுக்கென விழாவும் கிடையாது இவளது சன்னதியில் சடாரி சேவை ,தீர்த்த பிரசாதமும் தரப்படுவதில்லை .நவராத்திரியின் போது மட்டும் விசேஷ பூஜை செய்யப்படுகிறது .பங்குனி உத்திரத்தன்று சுவாமி, தாயார் சன்னதிக்கு வந்து இருவரும் சேர்ந்து மூன்று மணி நேரம் மட்டுமே காட்சி கொடுக்கிறார்கள்.எனவே சுவாமியுடன் ஆண்டாளே பிரதானமாக புறப்படுகிறாள்.

    பங்குனி உத்திரம் அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத் திருவிழா மற்றும் மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன் ஆண்டாளை தரிசிக்கலாம். கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கும். சிவ பூஜைக்கு உகந்த வில்வம் அவருக்கான தலங்களில் பிரதான விருட்சமாக இருக்கும். ஆனால் பெருமாள் தலமான இங்கு வில்வம் தல விருட்சமாக உள்ளது.

    இத்தலத்துப் மோகனவல்லிக்கும் வில்வ இலை அர்ச்சனை செய்யப்படுகிறது. பித்ருக்களுக்கு திதி தர்ப்பணம் செய்பவர்கள் ,செய்ய மறந்தவர்கள் காளமேகப் பெருமாளை வேண்டி அரிசி மாவில் செய்த தீபத்தில் நெய் விட்டு தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இதை மோட்ச தீபம் என்பர் 3, 5 அல்லது 9 என்ற எண்ணிக்கையில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது.

    பெருமாள் சன்னதியில் தரும் தீர்த்தத்தை பெற்று சென்று உயிர் பிரியும் நிலையில் இருப்பவர்களுக்கு புகட்டு கிறார்கள் ,அவர்கள் அமைதியான மரணத்தை சந்திப்பர் என்பதுடன் மோட்சமும் பெறுவர் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் மகாவிஷ்ணு மக்களுக்கு வேண்டும் வரத்தை அருள் மழையாக தருகிறார் .எனவே இவர் காளமேகப்பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள உற்சவர் "ஆப்தன்' என்று அழைக்கப்படுகிறார். "நண்பன்' என்பது இதன் பொருள். தன்னை வேண்டுபவர்களுக்கு உற்ற நண்பனாகவும் ,அவர்களது இறுதி காலத்திற்கு பிறகு வழித்துணையாக அருளுவதால் இவருக்கு இப்பெயர் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது.

    அழகில்லாத காரணத்தால் திருமணம் தடை படுபவர்கள், கோயில் முன்மண்டபத்தில் எதிரெதிரே உள்ள மன்மதன் ,ரதி சிற்பங்கள் தூண்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆண்கள் மன்மதனுக்கும் ,பெண்கள் ரதிக்கும் சந்தனம் பூசி நெய் தீபம் ஏற்றி கல்கண்டு படைத்து வழிபட்டால் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

    திறக்கும் நேரம் -காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரை மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை சனிக்கிழமைகளில் மட்டும் காலை 5 30 மணி முதல் திறக்கப்படும்.

    • வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல்பத்து பாசுரங்கள் உற்சவம்தொடங்கியது.
    • சொர்க்கவாசல் திறப்பு வருகிற ஜனவரி மாதம் 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு நடக்கிறது.

    உடுமலை :

    உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவையொட்டி பகல்பத்து பாசுரங்கள் உற்சவம்தொடங்கியது. அடுத்தமாதம் (ஜனவரி) 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு விழா நடக்கிறது. பகல் பத்து உற்சவம் முதல்நாளில் கோவில்வளாகத்தில் பெரியாழ்வார் திருமொழி 200 பாசுரங்கள் பாடப்பட்டன.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வேங்கடேச பெருமாள் முத்தங்கி சேவை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதேபோன்று தினசரி காலை 6.30 மணிமுதல் 8.30 மணிவரை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்ச்சியாக திருப்பாவை, நாச்சியார் திருமொழி, பெருமாள் திருமொழி, திருச்சந்தவிருத்தம், திருமாலை,திருப்பள்ளியெழுச்சி, அமலனாதிபிரான், கண்ணிணுள் சிறுத்தாம்பு, பெரியதிருமொழி, திருநெடுந்தாண்டகப்பாசுரங்கள் பாடப்படுகிறது.

    பகல்பத்து உற்சவம் நிகழ்ச்சி ஜனவரி 1-ந்தேதி வரை நடக்கிறது. சொர்க்கவாசல் திறப்பு வருகிற ஜனவரி மாதம் 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணிக்கு நடக்கிறது. 2-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை இராப்பத்து உற்சவம் நிகழ்ச்சி நடக்கிறது.

    இதில் தினசரி மாலை5.30 மணிமுதல் 7 மணிவரை திருவாய்மொழி பாசுரங்கள் பாடப்படுகிறது. 12-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 7 மணி முதல் 8 மணிவரை நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சியும், காலை 9 மணி முதல் மாலை 3 மணிவரை இயற்பா, தேசிக பிரபந்தம் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீபாலாஜி சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன், அறங்காவலர்கள் மற்றும் திருப்பணிக்குழுவினர் செய்து வருகின்றனர்.

    • இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.
    • ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம்.

    உற்சவர் - கல்யாண ஜெகந்நாதர்

    அம்மன் - கல்யாணவல்லி, பத்மாசனி

    தல விருட்சம் - அரசமரம்

    தீர்த்தம் - ஹேம, சக்ர, ரத்னாகர தீர்த்தம்

    முன்னொரு காலத்தில் புல்லவர், காலவர், கண்ணவர் ஆகிய மூன்று மகரிஷிகளும் தர்ப்பை புல் நிரம்பிய, தற்போது கோவில் அமைந்துள்ள இடமான திருப்புல்லாணி காட்டில் பெருமாளைவேண்டி கடும் தவம் செய்து வந்தனர். 3 மகரிஷிகள் உலக நன்மைக்காக தவம் இயற்றும் பொழுது அரக்கர்களால் துன்புறுத்தப் பெற்றனர். மகரிஷிகளின் வேண்டுகோளுக்கு இணங்க எம்பெருமான் மகாவிஷ்ணு முதலில் அரசமர ரூபமாய் அவர்களை காப்பாற்றி பின் ஸ்வரூபமாய் அதாவது சங்குசக்ர தரியாய் அபய முத்திரையுடன் ஆதிஜெகநாத பெருமாளாக காட்சியளித்தார். அந்த திருத்தலமே தற்போது திருப்புல்லாணியில் உள்ள இத்திருத்தலம். பிற்காலத்தில் தாயார் பத்மாசனிக்கு தனியாக சன்னதி எழுப்பப்பட்டது. "தசரதன் இங்குள்ள பெருமாளின் புத்திர பாக்கிய மூலமந்திர உபதேசத்தை பெற்று, ஸ்ரீ ராம பிரானை மகனாகப் பெற்றெடுத்தார்".

    பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் ஆதி ஜெகநாதர் கோவிலும் ஒன்றாகும். ராமர் சயன நிலையில் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சம். திருமங்கையாழ்வார் தன்னை பெண்ணாகப் பாவித்து, இத்தலத்து பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். தவிர, ஆண்டாள், திருமழிசையாழ்வார், குலசேகராழ்வார் ஆகியோர் இங்குள்ளசேது பாலம் பற்றி பாடியுள்ளனர். பஞ்ச தரிசனம்பூரி தலத்தில் பாதியளவே (சிலையின் அளவு) காட்சிதரும் ஜெகந்நாதர், இங்கு முழுமையாக காட்சியளிக்கிறார். இதனால் இத்தலம் தட்சிண ஜெகந்நாதம் என்று அழைக்கப்படுகிறது. புல்லாரண்யம், தர்பசயனம் என்று பலபேராலும் புகழ் பெற்றதாகும்.

    ஆதிஜெகந்நாதர் (அமர்ந்த கோலம்), சயனராமர் (கிடந்த கோலம்), பட்டாபிராமர் (நின்ற கோலம்), அரசமர பெருமாள், பட்டாபிராமர் என இத்தலத்தில் மகாவிஷ்ணுவின் ஐந்து வடிவங்களையும், மூன்று கோலங்களையும் தரிசிக்கலாம்.

    பொதுவாகப் பெருமாள் தலங்களில் சுவாமி, குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் தாயாருடன் இணைந்து (சேர்த்தி) காட்சி தருவார். ஆனால், இங்கு சுவாமி வெள்ளிதோறும் தாயாருடன் சேர்ந்து காட்சி தருகிறார். அன்று ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.

    சீதையை மீட்க இலங்கை சென்ற ராமர், கடலில் பாலம் அமைப்பதற்காக சமுத்திரராஜனிடம் அனுமதிகேட்டு மூன்று நாட்கள் காத்திருந்தார். அப்போது, தர்ப்பைப்புல்லின் மீது சயனம் கொண்டார். இதன் அடிப்படையில் இங்கு ராமர், ஆதிசேஷன் மீது தர்ப்பை விரித்து, அதில் சயனிக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது. சீதையை மீட்கச் செல்லும் முன் தங்கிய தலமென்பதால் சீதை இல்லை. லட்சுமணனின் வடிவமாக ஆதிசேஷன் இருப்பதால், லட்சுமணரும் இல்லை. ஆஞ்சநேயர் மட்டும் உள்ளார். மூலஸ்தான சுவரில் பாலம் அமைக்க ஆலோசனை செய்த சூரியன், சந்திரன், தேவர்கள் இருக்கின்றனர்.

    பிள்ளை வரம் கேட்டல்தான் இத்தலத்தின் மிகச் சிறப்பு பெற்ற பிரார்த்தனை. சேது தீர்த்தத்தில் நீராடினால் நமது முன்ஜென்ம பாவங்கள் விலகும். மேலும் இத்தலத்தில் வழிபட்டால் கிரக தோஷங்கள் நீங்கும். திருமணத்தடை உள்ளவர்கள் உற்சவர் கல்யாண ஜெகந்நாதரிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.

    தாயாருக்குப் புடவை சாத்துதல், தவிர பெருமாளுக்குத் துளசி மாலை அணிவித்தல், அபிஷேக ஆராதனைகள் ஆகியவற்றை செய்யலாம். மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். பிரசாதம் செய்து பெருமாளுக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம்.

    கோவில் திறக்கும் நேரம்: காலை 7:30 மணி முதல் 12:15 மணி வரை, மாலை 3:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மாறுதலுக்குட்பட்டது.

    • சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
    • ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    சோழவந்தான்

    சோழவந்தான் ஜெனகை நாராயணபெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை உலக நன்மைக்காக ஹோமம் நடந்தது. இதைத் தொடர்ந்து நம்மாழ்வார் வரவேற்க சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.வாசலுக்கு முன்பு கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா நாராயணா, என்று கோஷமிட்டனர்.

    ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஜெனகை நாராயண பெருமாள் சர்வ அலங்காரத்துடன் சொர்க்கவாசல் வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவிலை வலம் வந்து தீவட்டி ஊர்வலத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. அதிகாலை என்பதால் பக்தர்களுக்கு சுவாமி உருவம் கூட தெரியவில்லை. உபயதாரர் சிவஞானம்பிள்ளை குடும்பத்தினர் பிரசாதம் வழங்கினர். நவநீத கிருஷ்ணானந்த கொண்டல்ரவ்த் பாண்டுரங்க பஜனை குழுவினர், சந்தான கோபால கிருஷ்ணன் கோவில் பஜனைக் குழுவினர் பக்திப் பாடல்கள் பாடி வலம் வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி வீதி உலா நடக்கிறது.

    ×