என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேதநாராயண பெருமாள் கோவில்"

    • ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார்.
    • சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.

    திருச்சி அருகே திருநாராயணபுரம் எனும் ஊரில் வேதநாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இத்தல இறைவன் வேதநாராயணப் பெருமாள் எனும் திருநாமத்துடன் வேதநாயகி தாயாருடன் அருள்பாலிக்கிறார்.

    ஒருமுறை பிரம்ம தேவர், தன் பதவியை இழந்து மீண்டும் படைக்கும் பொறுப்பேற்றார். அப்போது அவர், தனக்கு வேதங்களை உபதேசிக்கும்படி பெருமாளை வேண்டினார். அவருக்கு பெருமாள், இத்தலத்தில் வேதங்களை உபதேசித்து, பின்பு இங்கேயே பள்ளிக்கொண்டார். அதன் காரணமாகவே இத்தல இறைவனுக்கு 'வேதநாராயணர்' என்ற பெயர் ஏற்பட்டது.

    பிற்காலத்தில் இங்குள்ள சுவாமியின் சிலை மண்ணால் மூடப்பட்டது. ஒரு சமயம், இவ்வூருக்கு வந்த வானவராயர் என்ற மன்னனின் கனவில் தோன்றிய பெருமாள், ''தனது சிலை மண்ணில் புதைந்திருப்பதாக'' உணர்த்தி உள்ளார். இதையடுத்து அந்த சிலையை கண்டெடுத்த மன்னர், கோவிலும் கட்டினார்.

    இரணியனை அழித்தபோது உக்கிரமாக காட்சி அளித்த நரசிம்மர், பிரகலாதனுக்கு இத்தலத்தில் சாந்த ரூபமாக காட்சி தந்ததாக கூறப்படுகிறது. இதனால் இங்குள்ள சுவாமியின் பாதம் அருகில் மூன்று வயது குழந்தையாக பிரகலாதன் காட்சி அளிக்கிறார்.

    ஆலயத்தில் அருள்பாலிக்கும் பெருமாள், நான்கு வேதங்களையும் தலையணையாகக் கொண்டு, ஆதிசேஷன்மீது பள்ளிக் கொண்டபடி, நாபிக்கமலத்தில் இருக்கும் பிரம்மதேவருக்கு வேத உபதேசம் செய்கிறார். பெருமாளின் திருவடியில் ஸ்ரீதேவியும் பூதேவியும் இருக்கிறார்கள். மூலவர் விமானம் வேதவிமானம் எனப்படுகிறது. கோவில் பிரகாரத்தில் ஆண்டாள், ராமானுஜர், நம்மாழ்வார், மணவாளமாமுனிவர், பிள்ளை லோகாச்சாரியார் ஆகியோர் உள்ளனர்.

    காவிரியின் வடகரையில் அமைந்துள்ள இக்கோவிலின் முகப்பில் உள்ள தீப ஸ்தம்பத்தில் கம்பத்தடி ஆஞ்சநேயர் இருக்கிறார். இப்பகுதி மக்களிடையே ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், இவர் முன்பாக பேசி தீர்த்துக் கொள்கிறார்கள். யாராவது பொய் சொன்னாலோ, ஏமாற்றினாலோ இங்குள்ள கம்பத்தடி ஆஞ்சநேயர் முன்பு சத்தியம் செய்யும் வழக்கம் உள்ளது.

    திருமணத் தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை அடைய விரும்புபவர்கள் இங்குள்ள இறைவனுக்கு துளசி மாலை அணிவித்து, 27 அகல் விளக்கு ஏற்றி ஜாதகத்தை பெருமாள் திருவடியில் வைத்து வழிபட்டு செல்கின்றனர். தோஷம் உள்ளவர்கள், தங்களின் ஜென்ம நட்சத்திரமன்று இந்த வழிபாட்டை செய்வது விசேஷமாகும்.

    திருச்சி - முசிறி சாலையில் திருச்சியில் இருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் தொட்டியத்திற்கு அருகில் உள்ள திருநாராயணபுரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

    தொட்டியம் அருகே திருநாராயணபுரம் வேதநாராயண பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்தனர்.
    திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே உள்ள திருநாராயணபுரத்தில் சிறப்பு வாய்ந்த வேதநாராயண பெருமாள் சமேத வேதநாயகித் தாயார் கோவில் உள்ளது. வைணவத் தலங்களில் ஆதிரங்கம் என்றழைக்கப்படும் இக்கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில் ஆகும். இங்கு பெருமாள் 4 வேதங்களை தலையணையாக கொண்டு பிரம்மாவிற்கு வேத உபதேசம் செய்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிக்கிறார்.

    இதனால், தன்னை வணங்க வரும் மாணவ-மாணவிகளுக்கு கல்வி செல்வத்தை அள்ளித் தருகிறார். மேலும் பிரகலாத ஷேத்திரம், அரயருக்கு மோட்சம் தந்த தலம் என பல சிறப்புகளை பெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் திருவோண நட்சத்திரத்தில் வைகாசித்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி, இந்த ஆண்டு வைகாசித்திருவிழா கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கியது. அதைத் தொடர்ந்து பெருமாள், துவஜா ரோஹனம், ஹம்ச வாகனம், சிம்மம், கருடன், ஹனுமந்த வாகனம், யானை, குதிரை, நம்பிரான் ஆகிய வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனைத்தொடர்ந்து சூர்ணாபிஷேகம், நெல் அளவு கண்டருளுதல், உபநாச்சியாருடன் திருக்கல்யாண உற்சவம் ஆகியவை நடைபெற்றன.


    ஸ்ரீதேவி, பூதேவியுடன் தேரில் எழுந்தருளிய வேதநாராயண பெருமாள்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக காலை வேதநாராயணப்பெருமாள் மற்றும் உபநாச்சியார்களுக்கு மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் மற்றும் பழ வகைகளால் 12 வகையான அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு ஸ்ரீரங்கத்தில் இருந்து உபயதாரர் வாங்கி வந்த கிளி மாலை அணிவிக்கப்பட்டு, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பெருமான் தேரில் எழுந்தருளினார்.

    காலை 10 மணிக்கு பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு வீதிகள் வழியாக கோவிலை வலம் வந்த தேர், 12 மணிக்கு நிலையை வந்தடைந்ததும் பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது.

    தேரோட்டத்தில் நாமக்கல், எருமபட்டி, முசிறி, தொட்டியம், காட்டுப்புத்தூர், பாலசமுத்திரம், மணமேடு, மோகனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் பணியாளர்களும், கிராம மக்களும் செய்திருந்தனர். 
    ×