என் மலர்
நீங்கள் தேடியது "ulagalantha perumal temple"
- ஆழ்வார்கள் திகைத்தனர்.
- கோவிலினுள்ளேயே துர்க்கையம்மன் சந்நிதி ஒன்று உள்ளது.
ஆதி திருவரங்கத்துக்கு ஆன்மீக யாத்திரை செல்பவர்கள் அவசியம் திருகோவிலூர் கோவிலுக்கும் செல்ல வேண்டும். கோவில்களில் சிறந்தது திருக்கோவிலூர் என்று சொல்லும்படி சொல்லலொண்ணா சிறப்புகள் பெற்ற தலம் இது. மாபலியை வெல்ல வாமனர் திருவிக்கிரமனாக மூவுலகும் ஈரடியால் தாவியளந்த தலம்.
மூலவர்: திருவிக்ரம பெருமாள் வலக்கையில் சங்கும், இடக்கையில் சக்கரமும் தாங்கி தனது வலக்காலை உயரத்தூக்கி விண்ணை அளந்தபடி கிழக்கு. நோக்கி நிற்கிறார். உற்சவ மூர்த்திக்கு ஆயனர் என்றும் கோபாலன் என்றும் பெயர். தாயார்: பூங்கோல் நாச்சியார்.
தல தீர்த்தங்கள்: பெண்ணையாறு, கிருஷ்ண தீர்த்தம், சக்கர தீர்த்தம்,
விமானம்: ஸ்ரீகர விமானம். கிருஷ்ணரின் நித்திய சாந்நித்தியம் பெற்ற பஞ்ச கிருஷ்ணாரண்ய சேத்திரங்களில் இதுவும் ஒன்று. இத்தலத்து பெருமாளை பொய்கையாழ்வாரும், பூதத்தாழ்வாரும் ஸ்ரீமணவாள மாமுனிகளும் மங்களா சாசனம் செய்துள்ளனர். பேயார், பொய்கையார், பூதத்தார் என்னும் முதலாழ்வார்கள் மூவரும் ஒருவரை ஒருவர் அறியாமல் தனித்தனியே பல தலங்களுக்கும் சென்று இறைவனை பாடி பணிந்து வந்தனர். பெருமாள் அவர்களை ஒன்று சேர்த்து வைக்க நினைத்தார். தற்செயலாக ஆழ்வார்கள் மூவரும் இவ்வூருக்கு வர நேரிட்டது. நல்ல இருட்டு நேரம். மழை வேறு. முதலில் வந்த ஆழ்வார் ஒரு வீட்டில் தங்க இடம் கேட்டார். ஒற்றை அறை கொண்ட அவ்வீட்டின் முன்புறம் ஒரு தாழ்வாரம் இருந்தது. மிக குறுகலான இடம். ஒருவர் படுக்கலாம். இருவர் இருக்கலாம். மூவர் வந்து விட்டால்...? மூன்று பேரும் நிற்கத்தான் வேண்டும்.
வீட்டுக்குடையவன் முதலில் வந்தவருக்கு இடம் கொடுத்தான். அவர் படுக்கப்போகும் சமயம் இரண்டாமவர் வந்தார். நாராயணா நாராயணா என்றழைத்துக் கொண்டு...! இருவரும் அமர்ந்த சற்று நேரத்திற்கெல்லாம் மூன்றாமவர் வந்துவிட்டார். மூவரும் எழுந்து நின்றனர். தாராளமாக நிற்கலாம். இருட்டு வேளையில் இவர்களுக்கிடையே இன்னொருவரும் புகுந்துகொண்டு நெருக்கத் தொடங்கி விட்டார்.
ஆழ்வார்கள் திகைத்தனர். யார் அது? யார் அது? பெருமாள் பிராட்டியுடன் காட்சியளித்தார். ஆழ்வார்கள் மூவரும் மெய்மறந்து ஆளுக்கொரு அந்தாதி பாடி அரங்கனை பணிந்தனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொன்டு ஒன்றாக சிறிதுகாலம் தலயாத்திரை செய்தனர். இப்படி ஆழ்வார்களை ஒன்று சேர்த்து வைத்த பெருமாள் இவரே.
ஸ்ரீவேதாந்த தேசிகன் தேகாளீஸ்துதியை இந்த கோவிலில்தான் இயற்றினார். எம்பெருமானார், ஜூயர் பரம்பரைக்குட்பட்ட தலம் இது. இக்கோவிலினுள்ளேயே துர்க்கையம்மன் சந்நிதி ஒன்று உள்ளது. இது தேவேந்திரமாக கருதப்படவில்லை. இத்தலத்திற்கு விழுப்புரத்தில் இருந்து அடிக்கடி பஸ்கள் செல்கின்றன. கடலூரில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் கூட பஸ்கள் செல்கின்றன. வேலூர் மார்க்கமாக செல்லும் திருச்சி- சித்தூர் பஸ்களும் இத்தலத்தின் வழியாக செல்கின்றன. விழுப்புரம், காட்பாடி ரெயில் பாதையில் உள்ள திருக்கோவிலூர் ரெயில் நிலையத்தில் இறங்கியும் இரண்டு மைல் தொலைவிலுள்ள ஊரை சென்றடையலாம். சகல வசதிகளும் உள்ள ஊர்.
மேலும் நடுநாட்டு திருப்பதி என்றும் இந்த கோவிலை அழைப்பாளர்கள். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் பெருமாள் சன்னதி அருகிலேயே விஷ்ணு துர்க்கை அருள்பாலிக்கிறார். இவர்கள் இருவரையம் ஒரே இடத்தில் நின்று தரிசனம் செய்யலாம்.
இவ்வாறு பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் மூலவர் சன்னிதிக்கு திருப்பணிகள் நடைபெற்று ஏற்கனவே கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கோவில் ராஜகோபுரம், லட்சுமி நாராயணர், லட்சுமி வராஹர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள் நாச்சியார், சேனை முதலிகள், வீரஆஞ்சநேயர் ஆகிய சன்னிதிகளில் திருப்பணிகள் நடைபெற்று, நேற்று கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
அதன்படி, விழா கடந்த 7-ந்தேதி மாலை அங்குரார்ப்பணம், பூர்ணாகுதியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 8-ந்தேதி காலையில் கும்ப ஆராதனம், சுதர்சன யாகமும், மாலையில் பூர்ணாகுதி, சாற்றுமுறையும் நடந்தது. பின்னர் 9-ந்தேதி காலையில் வாஸ்து ஆராதனம், யாகசாலை அலங்காரம், கும்ப ஸ்தாபனமும், மாலையில் கும்ப அலங்காரம், பூர்ணாகுதி, சாற்றுமுறையும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலையில் மகாசாந்தி ஹோமம், திருமஞ்சனம், சாற்றுமுறையும் நடைபெற்றது.
தொடர்ந்து நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 5 மணிக்கு விஸ்வரூபம், அக்னி ஆராதனம், கும்ப ஆராதனம், ததுத்த யாகமும் நடந்தது. அதை தொடர்ந்து 7 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட புனித நீர் அடங்கிய கும்பங்கள் புறப்பாடு நடைபெற்றது.
9.10 மணிக்கு ஜீயர் சுவாமிகள் முன்னிலையில் கிழக்கு ராஜகோபுர கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் கோவிந்தா...! கோவிந்தா...! என்கிற பக்தி கோஷங்களை விண்ணை முட்டும் அளவில் எழுப்பி பெருமாளை வழிபட்டனர். இதை தொடர்ந்து கோபுரத்துக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் கோவிலிலும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் 10.10 மணிக்கு லட்சுமி நாராயணர், லட்சுமி வராஹர், லட்சுமி நரசிம்மர், ஆண்டாள் நாச்சியார், சேனை முதலிகள், வீரஆஞ்சநேயர் ஆகிய சன்னதிகளில் உள்ள கோபுர கலசங்களுக்கும் கும்பாபிஷேகம் நடந்து, மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.
10.30 மணிக்கு மேல் 12 மணிவரை அட்சத ஆசிர்வாதமும், தீர்த்த பிரசாதங்கள் வழங்கும் நிகழ்ச்சியும், 1 மணிக்கு சர்வ தரிசனமும் நடைபெற்றது. இரவு ஸ்ரீஆண்டாள்நாச்சியார் சமேச ஸ்ரீதேகளச பெருமாள் பெரிய சேஷ வாகனத்தில் வீதி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து கலந்து கொண்டனர். முன்னதாக பக்தர்களின் வசதிக்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
மேலும் அரசு துறை அதிகாரிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை கோவில் மடாதிபதி உ.வே.தி.ஸ்ரீநிவாசராமானுஜாச்சாரியார் மேற்பார்வையில் விழாக்குழுவினர்கள் முன்னின்று செய்திருந்தனர்.
மேலும் கும்பாபிஷேகத்தை காணவந்த பக்தர்களுக்கு நகரில் ஆங்காங்கே பல்வேறு அமைப்பினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் குடிநீர், மோர் ஆகியனவும் வழங்கினர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் செயல் அலுவலர் ஜெயராமன் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் வசதி, மற்றும் சுகாதார வசதிகளை செய்திருந்தனர். பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்ததால், ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களை அமைத்து, போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
கும்பாபிஷேகம் முடிவடைந்தவுடன் பக்தர்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்வதற்காக ஒருவருக்கொருவர் முண்டியடித்து உள்ளே சென்றனர். இதனால் கூட்ட நெரிசலும் ஏற்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் நெரிசலை சரி செய்து, பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர்.






