என் மலர்
வழிபாடு

வேண்டிய வரம் தரும் நீலமேகப்பெருமாள்
- இந்த கோவிலுக்கு வரும்முன் காவிரியில் நீராடிவிட்டு, இங்குள்ள சுவாமியை வழிபடுவது வழக்கம்.
- உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது ஆண்டாளை தரிசிக்கலாம்.
கரூர் மாவட்டம் குளித்தலையில் பிரசித்தி பெற்ற நீலமேகப்பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சுமார் 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இக்கோவிலில் நீலமேகப்பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி தாயாருடன் காட்சி அளிக்கிறார். பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியன், மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்ம பல்லவன், முதலாம் பராந்தகச் சோழன் ஆகிய மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இந்த ஆலயம் திருவரங்கம் கோவிலை போல ஏழு மதில் சுவர்களை கொண்டுள்ளது.
கோவில் நுழைவுவாசலை கடந்து சென்றதும் கொடிமரம் காணப்படுகிறது. அதன் அருகே, கண்களுக்கு விருந்து படைப்பதாய் நந்தவனம் பூத்துக்குலுங்குகிறது. அதற்கு எதிரே வைகுண்ட ஏகாதசி மண்டபம் உள்ளது. அதன் உள்ளே நுழைந்ததும் நீலமேகப் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கல்யாண கோலத்தில் காட்சி தருகிறார். அவர் அருகில் கமலநாயகி தாயார் அமர்ந்த கோலத்தில் தனிச் சன்னிதியில் வீற்றிருக்கிறார். உள்பிரகாரத்தை சுற்றி வரும்போது ஆண்டாளை தரிசிக்கலாம்.
இந்த கோவிலுக்கு வரும்முன் காவிரியில் நீராடிவிட்டு, இங்குள்ள சுவாமியை வழிபடுவது வழக்கம். அதன்படி கோவிலுக்கு செல்லும்முன் காவிரியில் நீராடி விட்டு, இங்குள்ள நீலமேகப் பெருமாளை மனதார வேண்டி வழிபாடு செய்தால் மனதில் வேண்டிய காரியங்கள் நிறைவேறும், வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என்பது நம்பிக்கை. திருமணத் தடை உள்ளவர்களும் இங்குள்ள இறைவனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி போன்ற விழாக்கள் சிறப்பாக நடைபெறும். கோவில் காலை 7.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 43 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குளித்தலையில் நீலமேகப் பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது.






