search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பி.ஏ.பி."

    • கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை.
    • வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

    திருப்பூர் :

    திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான குறைதீா்க்கும் முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு சப்-கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் தலைமை வகித்தாா்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றியச் செயலாளா் வை.பழனிசாமி அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- திருப்பூா் மாவட்டம் பல்லடம் வட்டம் பூமலூா் கிராமத்தில் பிஏபி. பாசனத் திட்டத்துக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு தற்போது வரை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை. ஆகவே பூமலூா் கிராமத்தில் பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்கால்களுக்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு சந்தை மதிப்பீட்டில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாமளாபுரம் கிராம நீரினைப் பயன்படுத்துவோா் சங்கத்தின் சாா்பில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:- பிஏபி., வாய்க்கால்களிலும், கிளை வாய்க்கால்களிலும் ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. அதிலும் ஒரு சில இடங்களில் கிளை வாய்க்கால்களையும் சோ்த்து கம்பிவேலி போடுகின்றனா். மேலும் கிளை வாய்க்கால்களில் மண்ணை அப்புறப்படுத்துவதால் கரைகளில் உடைப்பும் ஏற்படுகிறது. ஆகவே, பிஏபி., வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், வாய்க்கால்களை உடைக்கும் நபா்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.

    • இடைவெளியின்றி மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது.
    • பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப் படும் என்றனர்.

    உடுமலை :

    பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று       வருகின்ற ன. நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் 3ம் மண்டல பாசனத்திற்கு கடந்த டிசம்பர் 28ந் தேதி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது.

    இதன் வாயிலாக இரு மாவட்டங்களில் உள்ள 94 ஆயிரத்து 362 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, வருகிற ஏப்ரல் 27-ந்தேதி வரை 120 நாட்களுக்குள், உரிய இடைவெளி விட்டு 4 சுற்றுக்களில் 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப் பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில் மூன்றாம் மண்டலம் முதல் சுற்று முடிந்து 7நாட்கள் இடைவெளி விட்டு இரண்டாம் சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டது. இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து இடைவெளியின்றி மூன்றாம் சுற்றுக்கு நீர் வழங்கப்படுகிறது.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் மூன்றாம் சுற்றுக்கு இடைவெளியின்றி திருமூர்த்தி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 21 நாட்கள் நீர் வழங்கப்படும். பாசன காலத்தை விரைந்து முடிந்து காண்டூர் கால்வாய் மற்றும் பிரதான கால்வாய் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றனர்.

    • வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான்.
    • காங்கயம் போலீசார் ‘சிசிடிவி’ பதிவுகளை பார்வையிட்டு தேடினர்

    திருப்பூர் :

    திருப்பூர் அடுத்த காங்கயத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி மஞ்சுளா . இவர்களுக்கு ரிதன் என்ற 3½ வயது மகன் உள்ளார்.கடந்த 2ந்தேதி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுவன் மாயமானான். புகாரின் பேரில் காங்கயம் போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் அப்பகுதியினர் தேடி வருகின்றனர்.சிறுவனை கடத்தி சென்றார்களா என்ற கோணத்திலும் அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை பார்வையிட்டு தேடினர். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை.

    இந்தநிலையில் வீட்டுக்கு அருகே பி.ஏ.பி., வாய்க்கால் செல்லும் காரணத்தால், சிறுவன் அங்கு ஏதாவது சென்றானா என்ற சந்தேகத்தின் பேரில் தேட ஆரம்பித்தனர்.சிறுவனை தேடும் பணிக்காக வாய்க்காலில் ஆங்காங்கே மதகுகள் அடைக்கப்பட்டு தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இப்பணியில், 20க்கும் மேற்பட்ட போலீசார், மற்றும் தீயணைப்பு படை வீரர்கள், பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். சிறுவன் மாயமாகி 7 நாட்கள் ஆகியும் எந்த ஒரு தகவலும் கிடைக்காததால் பெற்றோர் மற்றும் அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சோகத்தில் உள்ளனர்.

    • 4 வயது குழந்தை காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் பரவியது.
    • காங்கயம் காவல் துறையினா் கழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் பகுதி பரம்பிக்குளம் - ஆழியாறு பாசன வாய்க்காலில் பாசனத்துக்காக தண்ணீா் திறக்கப்பட்டு, கடந்த சில வாரங்களாக வாய்க்காலில் அதிக அளவு தண்ணீா் சென்று கொண்டுள்ளது. இந்நிலையில், சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவில் தோ்த் திருவிழாவுக்கு வந்திருந்த ஒரு குடும்பத்தைச் சோ்ந்த 4 வயது குழந்தை காங்கயம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதாகத் தகவல் பரவியது. இது குறித்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, நீா்வளத் துறை மூலம் பிஏபி., வாய்க்காலில் தற்காலிகமாக தண்ணீா் நிறுத்தப்பட்டுள்ளது.

    வெள்ளக்கோவில் , காங்கயம் காவல் துறையினா் கழந்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும் குழந்தை வாய்க்காலில் தவறி விழுந்தது உறுதிப்படுத்தபடாததால், வேறு கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறுகிறது.
    • அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துரு பெற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து நான்கு மண்டல பாசனத்தில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. அதில் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இன்றுடன் பாசன காலம் நிறைவு பெறுகிறது.

    தொடர்ந்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் எப்போது திறக்கப்படும் என பி.ஏ.பி., விவசாயிகளிடம் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் திருமூர்த்தி நீர் தேக்க முன்னாள் திட்டக்குழு தலைவர் பரமசிவம் மற்றும் முன்னாள் பகிர்மான குழு தலைவர்கள், பாசன சபை தலைவர்கள், பி.ஏ.பி., கண்காணிப்பு பொறியாளர் தேவராஜனை சந்தித்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தினர். தொடர்ந்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

    இது குறித்து திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறியதாவது:-

    திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறுகிறது. இதையடுத்து மூன்றாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினோம்.

    வருகிற 28ந் தேதி தண்ணீர் திறந்து நான்கு சுற்றுகளாக தண்ணீர் வினியோகிக்க வேண்டும். மொத்தம் 7,600 மில்லியன் கனஅடி நீர் வினியோகிக்க வேண்டும். இதன் வாயிலாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் 94,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும். அரசுக்கு பரிந்துரை செய்து கருத்துரு பெற்று நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது.
    • 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    உடுமலை :

    பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில் உடுமலை கால்வாய் வாயிலாக 14,612 ஏக்கர், பாசன வசதி பெற்று வருகிறது. ஆயக்கட்டு பகுதியில், மக்காச்சோளம் பிரதானமாக சாகுபடி செய்யப்பட்டுள்ளது.திருமூர்த்தி அணை அருகே பிரதான கால்வாயில் இருந்து பிரிந்து 38 கி.மீ., தொலைவுக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.

    தற்போது இரண்டாம் மண்டலம், மூன்றாம் சுற்றுக்கு தண்ணீர் இக்கால்வாயில் சென்று வருகிறது. இந்நிலையில், வழியோரத்தில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.

    பருவமழை பெய்யாத பகுதிகளில் நிலைப்பயிராக உள்ள மக்காச்சோளத்துக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. எனவே அனைத்து மடைகளுக்கும் போதுமான தண்ணீர் கிடைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தண்ணீர் திருட்டை தடுக்க இரவு நேரங்களில் போலீஸ், பொதுப்பணித்துறையினர் உள்ளடக்கிய கண்காணிப்பு குழுவினர் ரோந்து சென்று தண்ணீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • இந்நிலங்களுக்கு 4 மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது.
    • 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில், நீர்நிர்வாகத்தை மாற்ற வேண்டும்.

     உடுமலை:

    பி.ஏ.பி., பாசன திட்டம் 2 மாவட்ட விவசாயிகளின் வரப்பிரசாதமாக உள்ளது. இதற்காக சோலையார், பரம்பிக்குளம் ஆகிய தொகுப்பு அணைகளிலிருந்து தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.சர்க்கார்பதி துணை மின்நிலையத்தில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. பின்னர் அங்கிருந்து இத்தண்ணீர் காண்டூர் கால்வாய் வழியாக திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையில் சேகரிக்கப்படுகிறது.இத்திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலங்களுக்கு 4 மண்டலங்களாக பிரித்து சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்படுகிறது.

    பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்குட்பட்ட 94 ஆயிரத்து, 201 ஏக்கர் நிலங்களுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து, கடந்த ஆகஸ்டு 26-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.வருகிற டிசம்பர் 24ந்தேதி வரை 120 நாட்களுக்குள் உரிய இடைவெளி விட்டு 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.வழக்கமாக 21 நாட்கள் திறப்பு, 7 நாட்கள் நிறுத்தம் என்ற அடிப்படையில் சுற்றுக்களுக்கு நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    இரண்டாம் மண்டலம் முதல் சுற்று செப்டம்பர் 15-ந்தேதி நிறைவடைந்த நிலையில் பி.ஏ.பி., திட்ட தொகுப்பு அணைகளில் நீர் இருப்பு திருப்தி மற்றும் விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், இரண்டாம் சுற்றுக்கு இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் இரண்டாம் சுற்று நிறைவடைந்த நிலையில் ஒரு வாரம் இடைவெளி விட்டு 3-ம் சுற்றுக்கு நீர் வழங்கப்பட உள்ளது.

    இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    2 சுற்றுக்களுக்கு தொடர்ந்து நீர் வழங்கப்பட்ட நிலையில் தொகுப்பு அணைகளில் பராமரிப்பு பணி மற்றும் விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில் 3-ம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி வழங்கப்படுகிறது.

    தற்போது திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. பூசாரிபட்டி உள்ளிட்ட நிலுவையிலுள்ள கால்வாய்களுக்கு நீர் வழங்கப்பட்டு, இன்று இரவு நிறைவு செய்யப்படுகிறது. பின்னர் ஒரு வாரம் இடைவெளி விட்டு 3-ம் சுற்றுக்கு நீர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    புதுப்பாளையம் கிளை கால்வாயில், பாசன பரப்பை மூன்றாக பிரித்து 3 மண்டலங்களில் தண்ணீர் வழங்க வேண்டும் என பொதுப்பணித்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து ஏ.நாகூர் கிராம நீரினை பயன்படுத்துவோர் சங்கம் அனுப்பியுள்ள மனுவில், இக்கிளைக்கால்வாயில், 2ம் மண்டலத்தில் 7,200 ஏக்கர்,4ம் மண்டலத்தில் 7,360 ஏக்கர் பாசனம் பெறுகிறது. பி.ஏ.பி., பாசன திட்ட நிலங்கள் 4 மண்டலமாக பிரிக்கப்பட்டு திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படுகிறது. இந்த மண்டலங்களை மூன்றாக மாற்ற வேண்டும்.

    3 மண்டலத்திலும், புதுப்பாளையம் கிளைக்கால்வாயில், 5 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும் வகையில், நீர்நிர்வாகத்தை மாற்ற வேண்டும். ஒரு மடை விட்டு ஒரு மடை பாசனம் ஆயிரம் ஏக்கர் என்பதை 400 ஏக்கராக மாற்ற வேண்டும்.மேலும், 400 ஏக்கருக்கு மேல் உள்ள ஒவ்வொரு பகிர்மான கால்வாயிலும், இப்பாசனத்தை அமல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • இரண்டாம் மண்டல பாசனத்திற்கு அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
    • நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    உடுமலை :

    பி.ஏ.பி., கிளை கால்வாய்களில் இரண்டாம் மண்டல பாசனத்திற்கு இரண்டாம் அணையிலிருந்து தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. நிலைப்பயிராக மக்காச்சோளம் உள்ளிட்ட சாகுபடிகள் உள்ளன.

    போதிய மழை இல்லாத காரணத்தால் பயிர்களுக்கு கூடுதலாக தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது. இந்நிலையில் உடுமலை கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களில் தண்ணீர் திருட்டு காரணமாக கடைமடை பகுதிக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது.குறித்த நேரத்தில் தண்ணீர் நீரிட விலையெனில் பயிர்கள் கருகி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தண்ணீர் திருட்டை தடுக்க பொதுப்பணித்துறையினர் போலீஸ் உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைத்து ரோந்து செல்ல வேண்டும் தண்ணீர் திருட்டை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மல்லிகா அடித்து செல்லப்பட்டார்.
    • கல்லுக்குட்டை மேடு என்ற இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

    வெள்ளகோவில் :

    காங்கேயம், திருப்பூர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மல்லிகா (வயது 59). இவர் நேற்று அப்பகுதியில் செல்லும் பிஏபி. கிளை வாய்க்காலில் துணி துவைக்க சென்றுள்ளார், அப்போது வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.

    இந்தநிலையில் மல்லிகா வெள்ளகோவில் அருகே உள்ள கல்லுக்குட்டை மேடு என்ற இடத்தில் பிணமாக மீட்கப்பட்டார். வெள்ளகோவில் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • 3 லட்சத்து 77 ஆயிரத்து ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது.
    • 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    உடுமலை :

    பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களை சேர்ந்த 3 லட்சத்து 77 ஆயிரத்து ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றது. இந்த பாசனப்பகுதிகள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு 6 மாதங்களுக்கு ஒரு மண்டலம் வீதம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி 2 வது மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திருமூர்த்தி அணையிலிருந்து கடந்த மாதம் ஆகஸ்டு 26 ந் தேதி திறந்துவிடப்பட்டது. இதன் மூலம் திருப்பூர் மாவட்டங்களில் 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இந்த தண்ணீர் உடுமலை கால்வாயிலும் சென்று கொண்டுள்ளது. இந்த கால்வாயில் ஆங்காங்கு படிக்கட்டுகள் உள்ளன. அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அந்த படிக்கட்டுக்குள் பகுதியில் குளிப்பார்கள். அத்துடன் துணிகளை கொண்டு வந்து துவைப்பார்கள்.

    இந்நிலையில் இந்த கால்வாயில் அரசு கல்லூரிக்கு அருகே எஸ்.வி.புரம் மற்றும் பல இடங்களில் படிக்கட்டுகள் மற்றும் கான்கிரீட் கரை பகுதிகள் தெரியாத அளவுக்கு தண்ணீர் நிரம்பி செல்கிறது. கரைப்பகுதியை மூழ்கடித்து வெளியேறுகிறது. இதனால் கடைமடை பகுதிக்கு செல்ல வேண்டிய தண்ணீர் அளவு குறையகூடும் .தண்ணீர் விரயமாவதைத்த தவிர்க்கும் வகையில் பி. ஏ. பி. உடுமலை கால்வாயில் கரைக்கு உள் பகுதியில் மட்டும் தண்ணீர் செல்வதற்கான நடவடிக்கைகளை பி.ஏ.பி அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

    • பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது.
    • வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

    பல்லடம் :

    பி.ஏ.பி. வாய்க்காலில் வரும் 26 ந்தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதனையொட்டி பாசன தண்ணீர் கடை மடை வரை சென்றடைய வேண்டும் என்பதற்காக பல்லடம் பகுதியில் 20 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலில் உள்ள முட்புதர்களை அகற்றும் பணி அந்தந்த பாசன சபைகள் மூலம் நடைபெற்று வருகிறது.

    இதனை பொள்ளாச்சி பி.ஏ.பி. தலைமை செயற்பொறியாளர் ரவி நேரில் பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது அம்மாபாளையம் பிரிவில் உள்ள அரசங்காடு பகுதியில் உள்ள அமுக்குபாலம் இறங்கி இருப்பதால் அதனை சீரமைக்கும் பணியை உடனே மேற்கொள்ள வேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது பல்லடம் உதவி செயற்பொறியாளர் ஆனந்தபாலதண்டபாணி, உதவி பொறியாளர் சியாமளா, பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, பாசன திட்ட உதவியாளர்கள் உதயகுமார், ராஜ்குமார், ரமேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது.
    • காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும்.

    உடுமலை :

    உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறித்து ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பி.ஏ.பி., அலுவலகத்தில் நடந்தது.

    இதில் பாசன சபை தலைவர்கள் பேசுகையில், பருவமழையால் அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருப்பு உள்ளது. வரும் 26ந் தேதி முதல் இரண்டாம் மண்டல பாசனத்துக்கு நீர் வழங்க வேண்டும்.வெள்ளக்கோவில், காங்கயம் பகுதிகளில் வறட்சி நீடிப்பதால் கூடுதலாக தண்ணீர் வழங்க வேண்டும். சுற்று எண்ணிக்கையை குறைத்தால் நாட்கள் எண்ணிக்கையை அதிகரித்து கூடுதல் தண்ணீர் வழங்க சாத்தியம் உள்ளதா என ஆலோசிக்க வேண்டும்.இரண்டாம் மண்டல பாசனத்துக்கு சுற்று எண்ணிக்கை குறைக்க காண்டூர் கால்வாய் பணிகள் தான் காரணமா அல்லது உபரியாக நீர் வீணாக சென்றதால் குறைத்து வழங்கப்படுகிறதா என விளக்கமளிக்க வேண்டும்.கடந்தாண்டை போன்று எத்தனை சுற்று தண்ணீர் வழங்கலாம். இவ்வளவு எடுக்கிறோம், எத்தனை நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்படும் உள்ளிட்ட விபரங்கள் முறையாக தெரிவிக்க வேண்டும். சமமான நீர் பங்கீடு வழங்க வேண்டும். நீர் வழங்குவது குறித்து அட்டவணை அனைவருக்கும் வழங்க வேண்டும்.

    கண்காணிப்பு பொறியாளர் தேவராஜன் கூறுகையில்,காண்டூர் கால்வாய் பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளதால் 5 சுற்றுக்கு பதிலாக 4 சுற்று தண்ணீர் வழங்கலாம். அதன் பின் உரிய இடைவெளி கிடைப்பதால் பணிகள் தாமதமின்றி மேற்கொள்ள முடியும்.திருமூர்த்தி அணையில் இருந்து விவசாயிகள் கோரிக்கையின் படி, வரும் 26ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.காண்டூர் கால்வாய் பணிகள் தாமதமின்றி முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுற்று எண்ணிக்கை குறைக்க கேட்டோம். வாட்டர் பட்ஜெட் போட்டதும் எவ்வளவு மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட விபரங்கள் தெரிவிக்கப்படும்.

    திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு முன்னாள் தலைவர் பரமசிவம் கூறுகையில், வரும் 26ந் தேதி தண்ணீர் திறக்க பாசன சபை தலைவர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். இரண்டாம் மற்றும் மூன்றாம் மண்டல பாசனங்களுக்கு ஒரு சுற்று குறைத்து தலா 4 சுற்று வீதம் தண்ணீர் வழங்க கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    அதிகாரிகள் பேசுகையில், மொத்தம் 72 கோடி ரூபாய் செலவில் காண்டூர் கால்வாய் பணிகளை முடிக்க, 2 ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்தால் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர்.அதற்கு பாசன சபை தலைவர்கள், நல்லாறு பகுதியில் மேற்கொண்ட பணிகள் முடிவடைந்த நிலையில், மீதம் உள்ள பணிகளை, ஒரு ஆண்டுக்குள் முடிக்க திட்டமிட்டால் பாசனம் பாதிக்காது. இது குறித்து அதிகாரிகள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றனர்.

    ×